உடலின் எச்சரிப்புகளுக்குக் கவனம் செலுத்துதல்
அயர்லாந்திலுள்ள விழித்தெழு! நிருபர்
யூனாவுக்கும் அவருடைய கணவர் ரானுக்கும் அந்த அனுபவம் அச்சுறுத்துவதாயிருந்தது. ஜனவரி மாதத்தில் ஒரு குளிரான இரவின்போது யூனா மயக்கமுற்றாள். ரான் மருத்துவருக்கு ஆள் அனுப்பினார். சுரப்பிகளின் சமநிலையற்ற தன்மை அவளுடைய கருப்பையைப் பாதித்திருக்கக்கூடும் என்று எண்ணிய அவர் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி உத்தரவிடுகிறார். அதிக இரத்தத்தை இழந்துகொண்டிருக்கும், மேலும் பயங்கர வேதனையிலிருக்கும் தன் மனைவியை கரடுமுரடான இருண்ட மலைப் பகுதியின் சாலைகளில் 80 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள மருத்துவமனைக்கு ரான் ஓட்டிச்சென்றார்.
என்றபோதிலும், அந்த மருத்துவமனை பிரச்னையைக் கையாள முடியவில்லை. எனவே அருகாமையில் மிகப்பெரியதும் அதிக நவீனமானதுமாயிருந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். அங்கு அவளுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நன்கு குணமடைந்தாள்.
யூனாவின் உயிரைக் காப்பாற்றிய அவர்களுடைய திறமைக்காகவும் கவனிப்புக்காகவும் யூனாவும் ரானும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றியுள்ளவர்களாயிருந்தனர். அறுவைசிகிச்சைக்கு மயக்கமருந்து கொடுப்பவரிடமாக இவ்விதமாய்ப் போற்றுதலைத் தெரிவித்துக்கொண்டிருக்கும்போது, காரியங்கள் சாதகமாக அமைந்தமைக்காக தான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தார் என்பதாக அவர் கூறினார். பின்னர் அவர் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு குறிப்பைக் கூறினார்: “வெகு சில மகளிர் நோய் இயல் கோளாறுகளே திடீரென்று எழும்புகின்றன. அவற்றில் பெரும்பாலும் முன் அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றன.” அவர் அர்த்தப்படுத்தியது என்ன?
எச்சரிக்கை தரும் முன் அறிகுறிகள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனக்குப் பிரச்னை இருந்ததாக யூனா விளக்குகிறாள். மாதவிடாயின்போது அவளுக்கு இரத்தப்போக்கு அதிகமாகவும் ஏதாகிலும் கடினமான வேலை செய்தால்மட்டுமே பெரும்பாலும் இரத்தக் கட்டிகளாகவும் இருந்தது. அவள் கூறுகிறாள்: “நான் மருத்துவ ஆலோசனையைப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அநேகமாய் விரைவில் மாதவிடாய் நிற்கும் சமயத்தை நான் நெருங்குவதாக நினைத்தேன். ஆனால் பிறகு ஜனவரி மாதத்தில் என் மாதவிடாய் இரண்டு நாட்கள் கழித்து நின்றது. மேலும் மூன்று நாட்கள் கழித்து அது மறுபடியும் மிக அதிகப்படியான போக்காகவும் பெரிய அளவு இரத்தக் கட்டிகளாகவும் ஆரம்பித்தது. நான் உண்மையிலேயே கவலைப்படவில்லை. ஆனால் இரண்டாவது நாள், நான் அதிக பலவீனத்துக்குள்ளானதால் நான் படுக்கைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். ஆனாலும் இன்னும் நாங்கள் மருத்துவரை அழைக்கவில்லை. மருத்துவமனைக்கு நான் விரைந்து கொண்டு செல்லப்படும் இரவாக அது இருந்தது.”
உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும் ஓர் அவசர சிகிச்சை நிலையை அடையாதிருக்கும்படி அவளுடைய அனுபவத்தைத் தவிர்த்திருக்கலாமா? என்ன நோய்க்குறிகளை கவனிக்க வேண்டும், என்பதை அறிந்திருந்தாலும், சரியான சமயத்தில் செயல்பட்டிருந்தாலும் தவிர்த்திருக்கலாம் என்பதாக யூனா கருதுகிறாள். எதிர்பாராத காரியம் என்னவெனில், “மற்ற எந்தப் பெண்களைப் போலவே, மாதவிடாய் சம்பந்தமான எந்த ஒரு காரியத்தையும் நான் எப்பொழுதுமே அசட்டை செய்தேன், அதற்கு அதிகக் கவனம் செலுத்தவில்லை” என்கிறாள். என்றபோதிலும், உண்மை என்னவெனில், யூனாவின் நோய் கருப்பை சார்ந்த நோய்க்குறிகளை உடையதாய் இருந்தது, அது உடனடியான கவனத்தைத் தேவைப்படுத்தியது.
பிள்ளைப்பேற்று வயதிலிருக்கும் பெண்கள் மாதந்தோறும் பொதுவான உடல்நலத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு குறியீட்டைக் கொண்டிருக்கின்றனர்: அதுவே மாதவிடாயின் இயல்பான செயல்முறை. ஒழுங்கற்ற முறைக்கான குறிப்பிடத்தக்க விதத்தில் ஏதாகிலும் பாதிப்பு ஏற்பட்டால் அது எச்சரிப்பின் அறிகுறியாகும். சிலர் விஷயங்களில் எச்சரிப்புக்குத் தாமதமாகக் கவனம் செலுத்துவது பொதுவாக கிரமமாக செய்யப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையிலிருந்து வித்தியாசத்தை அர்த்தப்படுத்தக்கூடும்.
பின்னர் ஏன் இந்த அறிகுறிகள் அசட்டை செய்யப்படுகிறது அல்லது மட்டுப்படுத்தப்படுகிறது. அநேக குடும்பங்களில் மனைவிதானே குடும்பத்தின் உணவைத் திட்டமிடுகிறாள். மருந்து மாத்திரையைக் கையாளுகிறாள். குடும்ப சுகாதாரத்தைக் கவனிப்பவளாய் இருக்கிறாள். இவற்றைச் செய்வதனால் தன்னுடைய சொந்த பிரச்னைகளை அவள் அலட்சியம் செய்யக்கூடும். அநேகமாக யூனாவின் விஷயத்திலும் அவளுடைய அறிகுறிகளின் அர்த்தத்தைக் குறித்ததில் அவள் நிச்சயமற்றவளாக இருந்திருப்பாள், அல்லது சுகநலனைப் பேணுவதற்கான பணவசதி வரம்புக்குட்பட்டிருக்கலாம். மேலும் அவள் தன் பிள்ளைகளுக்கு அல்லது தன் கணவனுக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பவளாக, தன்னுடைய சொந்த பிரச்னை எப்படியும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கலாம். மருத்துவமனைக்குச் செல்வது அழுத்தமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்பதாகத் தானே கற்பனை செய்துகொள்ளுவதால் அவள் பயப்படலாம். அவள் ஒரு வேலை செய்யும் தாயாக, தன்னுடைய சொந்த நலனுக்காக ஓய்வெடுக்க முடியாதவளாக அல்லது விருப்பமில்லாதவளாக இருக்கலாம்.
அநேக சமயங்களில் மனைவியானவள் தன் உடல்நலப் பிரச்னைகளின் சம்பந்தமாக வேதனையில் தனித்து விடப்படுகிறாள் என்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அவளின் கணவன் “பெண்களின்” பிரச்னைகளின்பேரில் ஒருவேளை அதிக அக்கறையற்றவனாக இருக்கக்கூடும் என்றபோதிலும், தங்கள் மனைவிகளை நேசிக்கும் கணவன்மார்கள் இப்படிப்பட்டக் காரியங்களைக் குறித்து தாங்கள் அறிந்தவர்களாக இருந்தால், தங்கள் மனைவிகளின் சுகநலனை கண்காணிப்பவர்களாக இருக்க முடியும். பைபிள் கணவரை இவ்வாறு துரிதப்படுத்துகிறது: “உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவது போல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்.” (எபேசியர் 5:28, 33) இதனால் கணவன்மார்கள் மேலும் பெற்றோர் இப்படிப்பட்ட தேவையற்ற அவசர நிலையைத் தவிக்க எவ்விதம் தங்களின் மனைவிமார் மற்றும் மகள்களுக்கு உதவி செய்யக்கூடும்?
அறிகுறிகளுக்குக் கவனமாயிருங்கள்
வழக்கத்திற்கு மாறான சம்பவங்களுக்கு எச்சரிப்பாய் இருங்கள். அவை எச்சரிப்பின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். உதாரணமாக, ஒழுங்கற்ற இரத்தப்போக்கு, வெளியேற்றம், வேதனையுடன் கூடியதாயிராவிட்டாலும் பரிசோதிக்கப்பட வேண்டும்.a அவ்வாறே வழக்கத்திற்கு மாறான சோர்வு, அதிகப்படியான இரத்த இழப்பு, சிறுநீர் கழித்தலில் பிரச்னைகளும் பரிசோதிக்கப்பட வேண்டும். இவை கருப்பைப்பருக்களின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். ஆரம்பக் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால், இவை எளிதில் கையாளப்படலாம்.
தொடர்ச்சியான முதுகுவலி, கருப்பை வாய்க்குழாயில் அழுத்தம் போன்ற ஓர் உணர்வு, அல்லது கடின வேலையின்போது சிறுநீர் இழப்பு போன்றவை அசட்டை செய்யப்படக்கூடாதவைகளாகும். இவைகள் ஏதோ ஒரு நிலைமையை முன்னறிவிக்கிறது. ஆரம்பக் காலத்திலேயே முயற்சி செய்தால் சரி செய்யப்படலாம். காலம் கடந்தால் அறுவை சிகிச்சையைத் தேவைப்படுத்தலாம்.b
அப்படிப்பட்ட அறிகுறிகளுக்குப் பிரதிபலிப்பதோடுகூட 25 வயதுக்கு மேற்பட்டப் பெண்கள் குறிப்பாக மார்பகங்கள், அடிவயிறு மேலும் இடுப்பு உறுப்புகளை ஒழுங்கான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது. ஒரு பெண்ணின் குடும்பம் மற்றும் தனிப்பட்ட உடல்நிலைப் பரிசோதனை அறிக்கை சுட்டிக்காட்டுவதற்கு ஏற்ப இரு வருடங்களுக்கு ஒரு முறை அல்லது அடிக்கடியுங்கூட இது செய்யப்படலாம்.
அந்த விசேஷ சமயங்களில்
அவளை நேசிப்பவர்களாய் இருப்பவர்கள் பெண்ணின் வாழ்க்கையில் உள்ள மூன்று படி நிலைகளை நினைவில் கொண்டவர்களாய் அவளுக்கு விசேஷ கவனம் கொடுக்க வேண்டும். மாதவிடாய் (மாதவிடாய்க்குரிய காலத்தை ஒரு பெண் ஆரம்பிக்கும் சமயம்); பிள்ளைப்பேறு (பிள்ளைகளைப் பிறப்பிக்கும் வழிமுறை); மேலும் இறுதி மாதவிடாய் (மாதவிடாய் முடிவுறும்போது). இந்த ஒவ்வொரு படிநிலைகளின்போதும் நெருக்கடி சூழ்நிலைகள் தோன்றலாம், உடனடியான மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை மூலம் ஓர் அவசர நிலையை முன்னுணர்ந்து தடுக்கக்கூடும்.
மாதவிடாயின் ஆரம்பம்: மாதவிடாயின் தொடக்கத்தைக் குறித்த மறைபொருளை நீக்கி, மேலும் தங்கள் உடலின் செயல்முறைக் குறித்தும் இளம் பெண்கள் புரிந்து கொள்ள உதவியாக அவர்களுக்கு உடல் நலம் சார்ந்த கல்வித்திட்டம் தேவை. பெற்றோர் விசேஷமாக தாய்மார்கள் மகள்களிடம் ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையான சம்பாஷணைகளைக் கொண்டிருக்க வேண்டும். பிரச்னை ஏதாகிலும் இருந்தால் என்ன தவறு நேர்ந்து விட்டதோ, அல்லது அவர்கள் மிக அதிகப்படியான மாதவிடாயைச் சகித்தே ஆக வேண்டுமோ, அல்லது அந்த மாதத்தின் போது கடுமையான உபாதை இருக்குமோ என்று யோசித்து பெண்கள் வெட்கத்தினால் விட்டுவிடப்படக்கூடாது. அவர்களின் பெற்றோர் உதவி செய்ய முடியாதவர்களாய் இருந்தால் ஒருவேளை சில முதிர்ந்த பெண் நண்பர் பொருத்தமான மருத்துவ ஆலோசனை சம்பந்தமான வழிநடத்துதலைக் கொடுக்கக்கூடும்.
இளம் பெண் ஒருத்தி தன்னுடைய மாதவிடாய் இயல்பாகத்தான் உள்ளது என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்? அந்தத் தனிப்பட்ட ஆளில்தானே அவை முற்றிலும் மாறுபடக்கூடும். மாதவிடாய் ஆரம்பத்துக்குப் பின் மேலும் சாதாரணமாக சிறிதளவான சுரப்பிகளின் மாற்றங்களின் காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய், முதல் 6 மாதத்திலிருந்து 1 வருடம்வரை (அல்லது சிலரின் காரியங்களில் 2 வருடங்களுக்கும்) பொதுவானது. ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு மாதவிடாய்க் கால அளவில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் அல்லது இரத்தப்போக்கின் தன்மை இயல்பானவையாக கருதப்படுகிறது. இதற்கும் அப்பாற்பட்டவை மருத்துவ பரிசோதனைக்குரிய ஓர் எச்சரிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
உடல்நல கல்வியின் பங்கில் திட்ட உணவும் இடம்பெற வேண்டும். ஊட்டச் சத்தைக் காட்டிலும் சத்துக்குறைவுள்ள உணவுகள், மேலும் எடையைக் குறித்த அதிகப்படியான கவனம், அதிக ஊட்டச் சத்தை, முக்கியமாக சுண்ணாம்பு, இரும்புச் சத்தைப் பெறுவதிலிருந்து இளம் பெண்களைத் தடை செய்கிறது. ஒழுங்கான கருப்பை சுழற்சியை அடையாத இளம் பெண்கள் மாதவிடாய் சமயத்தில் அடிக்கடி வழக்கத்திற்கும் அதிகப்படியான இரத்த இழப்பைக் கொண்டிருக்கிறார்கள். இது இரும்புச் சத்தின் தேவையை அதிகரிக்கிறது. எனவே ஏராளமான உயர்தர உணவு வகைகளைத் தவிர்த்து நல்ல சமநிலையான உணவு பழக்கத்தைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். சில நேரங்களில் இரும்புச் சத்துள்ளவை சிபாரிசு செய்யப்படலாம்.
பிள்ளைப்பேறு: கர்ப்பவதிகளுக்குப் பிள்ளைப்பேற்றுக்கு முன் மருத்துவ பரிசோதனையை மகப்பேறு மருத்துவர் பரிந்துரைக்கிறார். அவர்கள் இரும்பு அல்லது அமில சேர்க்கை தேவைப்படுமா என்று காண இரத்தப்பரிசோதனை செய்யலாம். ஒரு பெண் கர்ப்பவதியாக இருப்பதால் இரத்தப் போக்கைக் குறித்த எச்சரிப்பின் அறிகுறிகளை இன்னும் அதிமுக்கியமாக கருதுவது அவசியம்.
பிரசவக்காலத்தில் சிறிதளவே இரத்தப்போக்கு இருந்தாலும் மருத்துவ ரீதிக்குக் கொண்டு செல்லப்படலாம். இந்த நேரத்தில் மேலுமாக தோன்றும் அபாய அறிகுறிகள் இடுப்பு வலி, சிறுநீரில் இரத்தம் கலந்திருப்பதற்கான அறிகுறி, சிறுநீர் கழிப்பதில் உபாதை. ஆனால் ஏதேனும் ஒழுங்கற்ற முறை அல்லது அறிகுறிகளிருந்தால், மகப்பேறு மருத்துவருக்கு ஆரம்பக் காலத்திலேயே அறிவிக்கப்பட வேண்டும். பணவசதி குறைவுபடும்போது அவளோடு “ஒரே மாம்ச”மாக ஆகியிருக்கும் ஒரு கணவன், அவளின் சுகநலன் மேலும் உயிரைக் குறித்த விசேஷ உத்தரவாதத்தை உடையவனாய் அவளை அபாயத்திற்குள்ளாக்கிவிடக்கூடாது.—மத்தேயு 19:5, 6; எபேசியர் 5:24, 25.
இறுதி மாதவிடாய்: இது இயல்பான மாதவிடாய் சுழற்சியின் முழு முடிவுக்குரிய மருத்துவ சொல்லாகும். இந்தக் காலப்பகுதி உச்சக்கட்டமாகவும், அல்லது வாழ்க்கையின் ஒரு மாற்றமாகவும், பெண்களின் வாழ்க்கையில் ஓர் இயற்கைப்படி நிலையாகவும் உள்ளது. விரிவான நோக்கில், இயற்கை நிகழ்ச்சிக்குச் சில மாதங்கள் அல்லது வருடங்கள் முன்னும் பின்னும் வரலாம் என்று இது அர்த்தப்படுத்துகிறது. அநேக பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் எரிச்சல் போன்ற அசெளகரியமான சரீர அறிகுறிகளை இந்தச் சமயங்களில் அனுபவிக்கிறார்கள். ஆனால் இவை முடிவில் நின்றுவிடும். ஒருவேளை நீடித்த அல்லது அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படுகிறது அல்லது முக நரம்பு நாளங்களில் இரத்தப்பெருக்கு ஏற்பட்டு முகம் சிவக்கிறது. இறுதி என்று தோன்றியப் பிறகும் மாதவிடாய் இரத்தப்போக்கு நீடித்தால் அல்லது அதிகரித்தால், ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், ஒரு மருத்துவரை உடனடியாகப் பார்ப்பது அவசியம்.
உண்மையில் எல்லா அவசர நிலைகளும் எதிர்பார்க்கப்படுவன அல்ல. “சமயமும் எதிர்பாரத நிகழ்ச்சியும்” நம் எல்லாருக்கும் நேரிடும். (பிரசங்கி 9:11) ஆனால் மயக்க மருந்து கொடுப்பவர் யூனாவிடம் கூறியது போல இருக்கிறது: “வெகு சில மகளிர் நோய் இயல் கோளாறுகளே திடீரென்று எழும்புகின்றன.” அவசரத்தன்மையில் இருந்து பாதுகாக்கக்கூடும். நெருக்கடி நிலையைச் சந்திக்கும்வரை எச்சரிப்புகளை அசட்டை செய்வதற்கு மாறாக அவசர நிலையை முன் உணர்ந்து தடுப்பது நலமாகும். எனவே மனைவிகள் மற்றும் கணவன்மார்கள் உடலின் எச்சரிக்கையின் அறிகுறிகளுக்குக் கவனம் செலுத்துங்கள்! (g91 10/8)
[அடிக்குறிப்புகள்]
a எல்லாருடைய விஷயத்திலும் இல்லாதிருந்தாலும், சிலருடைய விஷயத்தில் இவை கழுத்தைச் சார்ந்த புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம், இது ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் பெரும்பான்மையினருடைய விஷயத்தில் குணப்படுத்தமுடியும்.
b கருப்பைக்குழாய் நெகிழ்ச்சி, அல்லது கருப்பை விழுவது.
[பக்கம் 25-ன் படம்]
கரிசனையுள்ள ஒரு கணவன் தன் மனைவியுடைய உடலின் எச்சரிப்புகளுக்குக் கவனம் செலுத்தும்படி அவளுக்கு உதவலாம்