இளைஞர் கேட்கின்றனர்
புகைபிடித்தலின் அழுத்தத்தை நான் எவ்விதம் எதிர்த்து நிற்கலாம்?
“அது எனக்கு ஓய்வுணர்வை அளிக்கிறது, எனக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது.”
“அது ஒரு வகையான பொழுதுபோக்கு.”
“உங்களுக்குப் பாதுகாப்பான ஓர் உணர்வைத் தருகிறது.”
‘என் கைகளுக்கு ஏதோ வேலை கொடுக்கிறது.’
“தாங்கள் ஏன் புகைக்கின்றனர் என்று கேட்டபோது, சில இளைஞர் கொடுத்த பதில்கள் இவை. (பருவ வயது பேசுகிறது, ஆங்கிலம்) ஆம், நுரையீரல் புற்றுநோய், சீழ்க்கட்டி, மற்றும் இருதய நோய் குறித்த எச்சரிப்புகள் இருந்தபோதிலும், புகைபிடித்தல் சில இளைஞருக்கு எதிர்த்துப்போராட முடியாத ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை நீங்கள்கூட அவ்விதம் புகைப்பதற்கான சோதனையை எதிர்ப்பட்டிருக்கலாம்.
செய்தி விளம்பர மூலங்கள் எப்பொழுதுமே புகைத்துக்கொண்டிருக்கும் கவர்ச்சியான, நன்றாக உடுத்திய ஆண்களின் மற்றும் பெண்களின் உருவங்களைக் கொண்டிருக்கின்றன. அவர்களில் எவருமே புற்றுநோயாளிகளாகக் காணப்படுவதில்லை. ஒரு முறை புகைத்துப் பார்ப்பதற்கான சகாக்களின் அழுத்தங்களை உணரலாம். பள்ளிகளில் உங்களை: ‘நீ ஒரு கோழை’ என்று சொல்லி தொல்லைப்படுத்தக்கூடும். ‘நவீன பாணியை விரும்பும் எவரும் புகைக்கின்றனர்.’ புகைபிடிக்கும் இளைஞர் கும்பலிலிருக்கும்போது உங்கள் கையில் சிகரெட் இல்லாதிருந்தால், நீங்கள் தனித்துவிடப்பட்டதாக உணரக்கூடும்.
புகைப்பதற்கான அழுத்தம் வீட்டிலும் ஏற்படக்கூடும். பெற்றோரில் ஒருவர் புகைப்பதிலிருந்து விலகியிருந்து, மற்றவர் புகைபிடிப்பதைத் தெரிந்துகொண்டால் இது அதிக குழப்பமாயிருக்கக்கூடும். பெற்றோரில் இருவருமே புகைப்பாரானால், அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருக்கும். ‘என் பெற்றோர் ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் புகைப்பதால், சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் சிகரெட்டுகள்தான்,’ என்கிறாள் 14 வயது ரெபேக்கா. அவ்விதமான பெற்றோர் நீங்கள் புகைக்கக் கூடாது என்று சொல்வது மாய்மாலத்தின் உச்சக்கட்டமாகத் தோன்றும்! ஆலிசன் என்ற இளம் பெண் இப்படியான முறையிடுகிறாள்: “அவர்களுடைய உடல்நலம் குறித்து நாங்கள் அக்கறையாயிருக்கிறோம் என்று பெற்றோரிடம் சொன்னால், அவர்கள் கேட்பதில்லை. அப்படியிருக்க, அவர்களுக்கு நாங்கள் செவிகொடுக்கவேண்டும் என்று அவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?”—அமெரிக்க இளைஞனின் தனி வாழ்க்கை, ஆங்கிலம்.
அவர்களுடைய காரணங்கள் என்னவாயிருந்தாலும், அநேக இளைஞர் புகைபிடித்துப்பார்க்க தீர்மானித்து, வாழ்க்கை முழுவதும் அதற்கு அடிமையாகிவிடுகின்றனர்.a உங்களுக்காக மேம்பட்ட ஏதோவொன்றை விரும்ப எதிர்பார்க்கக்கூடும். புகைபிடித்தலின் மோசமான விளைவுகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அதை நீங்கள் அனுபவித்துப்பார்க்கக் காரணம் காணாதிருக்கிறீர்கள். இருந்தும், புகைப்பதற்கான பலமான அழுத்தத்தை நீங்கள் எவ்வாறு எதிர்த்து நிற்கலாம் என்று யோசிக்கக்கூடும்.
சமுதாயத்தில் சங்கடமான நிலை
புகைபிடிப்பதற்கு இளைஞர் கொடுக்கும் சில காரணங்களை முதற்கண் கவனிப்போம். ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட இளைஞரைப் போன்று, ஒரு சிகரெட்டைப் பிடித்திருப்பதுதானே அவர்களை அதிக நிதானமானவர்களாகவும் “பெரியவர்கள் என்னும் நினைப்புடையவர்களாகவும்” காணப்படச் செய்கிறது. ஓரன் என்ற இளைஞன் தன்னுடைய விஷயத்தில் இது உண்மையாக இருந்ததாகக் குறிப்பிடுகிறான். சமுதாயத்தில் சங்கடமான நிலைக்குள்ளாவதை அவர் நினைவிற்குக் கொண்டுவருகிறார்: “நான் மிகவும் அசெளகரியமாக உணர்ந்தேன், விசேஷமாக விருந்துகளில். எப்படி நடந்துகொள்வது அல்லது என்ன பேசுவது என்று தெரியவில்லை. என் பிரச்னைக்குப் புகைபிடிப்பதே பதிலாகத் தெரிந்தது.”
என்றபோதிலும், நச்சுத்தன்மை வாய்ந்த புகையை உள்ளிழுப்பதும், வெளிவிடுவதும் உண்மையில் ஒருவரை முட்டாள்தனமானவனாக, பாதுகாப்பற்றவனாக, கரிசனையற்றவனாகத் தென்படச் செய்கிறது. ஏராளமான இளைஞர் இதை இவ்விதம் காண ஆரம்பிக்கின்றனர். ஜேன் ரின்ஸ்லர் செய்த ஒரு சுற்றாய்வின்படி, 63 சதவீதம் பெண்பிள்ளைகளும், 73 சதவீதம் பையன்களும் புகைபிடிப்பதை அங்கீகரிக்கவில்லை! 16 வயது சிறுமி ஒருத்தி சொன்னாள்: “தங்களை முக்கியமானவர்களாகக் காட்டுவதாக ஆட்கள் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் அவ்விதம் காணப்பட மிஞ்சிய அளவில் முயலுவதாகத் தெரிகிறது.” புகைப்பது ஒருவரை அவ்விதம் “முக்கியமானவர்களாக . . . காணப்படச்” செய்தாலும், தன்னை அழிக்கக்கூடியதும் அடிமைப்படுத்தக்கூடியதுமான ஒரு பழக்கத்தை ஏற்பதை நியாயமாக்குமா?
என்றபோதிலும், அக்கறைக்குரியவிதத்தில் மாரிஸ் ஃபாக், குழந்தை உளநூல் பேராசிரியர் குறிப்பிடுவதாவது: “சமுதாயச் சூழலில் என்ன செய்வது என்பதை அறிந்திருக்கும் இளைஞர் அதிக சங்கடத்துக்குள்ளாவதாக உணருவதில்லை. . . . [அவர்கள்] புகைபிடிக்கும் சாத்தியம் குறைவே.” இது யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலுள்ள அநேக இளைஞரின் விஷயத்தில் உண்மையாக நிரூபித்திருக்கிறது. தாங்கள் செய்யும் பிரசங்க வேலையில் எல்லா வயதினரிடமும் பேசுவதன் மூலம் அவர்கள் நிதானத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்கின்றனர். ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கிறிஸ்தவ கூட்டங்களில் அளிக்கப்படும் கல்வித் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், அவர்கள் திறமையோடு, அதே சமயத்தில் சபையாரின் முன்னிலையில் அடக்கத்தோடு பேசுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். இது ஒரு சமுதாய ஊன்றுகோலுக்கான தேவையை எடுத்துப்போடுகிறது.
ஆட்கள் மத்தியில் நீங்கள் மகிழ்ச்சியாக உணரவில்லை என்றால், அல்லது கூச்ச உணர்வுடையவர்களாக அல்லது சங்கடமான நிலையில் இருப்பதாக உணருவீர்களானால், உண்மை கிறிஸ்தவர்களுடைய ஒரு சபையோடு நெருங்கிய கூட்டுறவைக் கொண்டிருக்க முயலுங்கள். நீங்கள் மற்றவர்களோடு சுறுசுறுப்பாக உட்படுத்திக்கொள்கிறவர்களாக இருந்தால், கூச்ச சுபாவம் அதிக நாட்களுக்கு நீடித்திருப்பது அரிது. உங்களுடைய கவலைகளை உங்கள் பெற்றோருடனும் கலந்து பேசலாம். என்றாலும், இதை ஞாபகத்தில் வைத்திருங்கள்: நீங்கள் மற்றவர்களுடைய மதிப்பைப் பெறுவது உங்கள் உதடுகளுக்கு இடையே ஒரு சிகரெட்டை அசைத்துக்கொண்டிருப்பதில் அல்ல, ஆனால் பைபிள் அறிவுறுத்துவது போல், “வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் . . . மாதிரியாய்” இருப்பதிலேயே அடங்கியிருக்கிறது.—1 தீமோத்தேயு 4:12.
“அது எனக்கு ஓய்வுணர்வை அளிக்கிறது”
புகைபிடித்தல் ஓர் இன்பமான அனுபவம் என்ற சிலருடைய உரிமைப்பாராட்டலைப் பற்றியது என்ன? “ஒரு சிகரெட் இல்லாமல் தாங்கள் ஓய்வாக உணருவதில்லை, என்று புகைப்பவர்கள் சிலர் கூறுகின்றனர்” என்கிறார் எழுத்தாளர் ஆல்வின் ரோசன்பாம், “புகைபிடித்தல் அழுத்தம், கவலை, மற்றும் கோபத்திற்கு நிவாரணம் அளிக்கிறது.” என்றபோதிலும், ஓய்வுணர்வை அளிப்பதற்குப் பதிலாக “நிக்கோட்டின் கிளர்ச்சியூட்டுகிறது,” என்கிறார் ரோசன்பாம்.
புகைபிடிப்பவரின் அந்த ஓய்வுணர்வுக்குக் காரணம் என்ன? உண்மையில், அடிமைப்பட்டிருத்தலை திருப்திப்படுத்துவதில் கிடைக்கும் நிவாரண உணர்வைத்தான் புகைப்பவர் கொண்டிருக்கிறார்! ஆம், புகையிலையில் இருக்கும் நிக்கோட்டினுக்கு மக்கள் அடிமையாகிவிடுகின்றனர். இந்த அடிமைப்படுதல் ஹெராய்ன் அல்லது கொக்கேனுக்கு அடிமைப்படுவதுபோன்று இருக்கிறது, அது மேற்கொள்வதற்குக் கடினமாயிருக்கிறது என்றும் சிலர் சொல்லுகின்றனர்.
புகைபிடிப்பவரின் உடலில் நிக்கோட்டின் குறைந்துவிடும்போது, அதற்காக அது ஏங்குகிறது. அடுத்த நிக்கோட்டின் “ஊட்டம்” கிடைக்கும்வரை, அவன் நரம்புகள் தளர்ச்சியடைகிறது, இறுக்கம்பெறுகிறது, எரிச்சலடைகிறான். அவன் தற்காலிகமாக ஓய்வுணர்வுடையவனாக இருக்கிறான்—அவனுடைய உடல் மறுபடியும் நிக்கோட்டின் பெறும்வரையாக. இப்படியாக புகைபிடித்தல் ஓய்வுணர்வைப் பெற்றிடுவதற்கான ஒரு முட்டாள்தனமான வழியாகவே இருக்கிறது. மென்மையான இசையைக் கேட்பதும், வாசிப்பதும், ஓய்வாக நடந்து செல்வதும் மிகப் பாதுகாப்பான வழிகளாகும்.
சகாக்களின் அழுத்தத்தை எதிர்த்து நிற்பது
பதினான்கு வயது ஜார்ஜ் பின்வருமாறு கூறுகிறார்: “எத்தனையோபேர் எனக்கு சிகரெட்டுகள் கொடுக்கிறார்கள், நான் அவற்றை அசட்டை செய்திட வேண்டும்.” பல இளைஞர் புகைக்கத் தொடங்குவதற்கு சகாக்களின் அழுத்தம் முக்கிய காரணமாகத் தென்படுகிறது. பருவ வயதினர் சம்பந்தப்பட்ட ஓர் ஆய்வு தெரிவித்தது என்னவென்றால், ‘தங்கள் நண்பர்களில் எவரும் புகைக்கவில்லை என்றால், 1 சதவீதத்துக்கும் குறைவாகவே புகைத்தனர், தங்களுடைய நண்பர்கள் எல்லாருமே புகைத்தால் 73 சதவீதத்தினர் புகைத்தார்கள்.’ நீங்கள் உங்கள் சகாக்களால் அழுத்தப்படுகிறீர்களென்றால், நீங்கள் பின்வருமாறு கேட்கலாம்: ‘மற்றவர்கள் என்னைத் தொல்லைப்படுத்தாமல் இருப்பதற்காக நான் ஒரு முறை புகையை இழுத்துவிட்டால் என்ன?’
கிறிஸ்தவ குடும்பங்களில் வளர்ந்த சில இளைஞர் அது அவ்வளவு பெரிய தவறல்ல என்று நியாயங்காட்டி தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுத்திருக்கின்றனர்.b ஒரு சிகரெட்டைத் தங்கள் கைகளில் பிடித்ததாகவும் அல்லது ஒன்றை தங்கள் வாயில் வைத்ததாகவும் சிலர் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்—வெறுமென ‘மற்றவர்களைப் போல இருப்பதற்காக’ அவ்விதம் செய்திருக்கின்றனர். என்றபோதிலும் பைபிள் சொல்லுகிறதாவது: “என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.” (நீதிமொழிகள் 1:10) போற்றுதலுக்குரிய வகையில், கிறிஸ்தவ குடும்பங்களில் வளர்ந்திருக்கும் பெரும்பாலான இளைஞர் இந்த வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கிறார்கள். உதாரணமாக, பதிநான்கு வயது மெரிபெல்லுக்கு அவளுடைய கூட்டாளிகள் ஒரு சிகரெட் கொடுத்தார்கள், அவள் அதை மறுத்தாள். “அவர்கள் என்னிடமிருந்து விலகிப்போக ஆரம்பித்தார்கள்,” என்கிறாள், “அவர்கள் என்னை கேலி செய்தார்கள்.” ‘உலகத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதைவிட, கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதே மேன்மையானது’ என்பதை அவள் நினைவுகூர்ந்து, அழுத்தத்திற்கு இடங்கொடுக்கவில்லை!
உண்மையில், ஒரு நச்சுப்பொருளை உள்ளிழுப்பதற்கு எப்படிப்பட்ட நண்பர்கள் உங்களைத் துரிதப்படுத்துவார்கள்? “மூடருக்குத் தோழனோ நாசமடைவான்,” என்று நீதிமொழிகள் 13:20 எச்சரிக்கிறது. அவசியப்பட்டால், சில புதிய நண்பர்களைத் தெரிந்துகொள்ளுங்கள். ஏன், புகைப்பவர்கள் மத்தியில் இருப்பதே ஆரோக்கியக்கேடு! பதினைந்து வயது பிரென்டா சொல்லுகிறாள்: “என்னுடைய சிநேகிதிகளில் எவருமே புகைப்பதில்லை. எனவே சகாக்களின் அழுத்தம் குறித்த எந்தப் பிரச்னையும் எனக்கு இல்லை.”
என்றபோதிலும், கிறிஸ்தவர்களல்லாத இளைஞரை முழுவதுமாய்த் தவிர்ப்பது கூடாத காரியம். உங்களுடைய நம்பிக்கையைத் தற்காக்கவும் புகைபிடிப்பதை ஒருமனதாய் மறுக்கவும் வேண்டியிருக்கும்! புகைபிடிப்பதன் தீமைகள் பேரில் அவர்களுக்கு ஒரு பிரசங்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. எழுத்தாளர் ஷாரன் ஸ்காட் குறிப்பிடுவதாவது, வெறுமென “வேண்டாம் மன்னிக்கவும்” என்பது போதுமானது. இதுவும் தவறினால், “வேண்டாம் என்றேன்!” என்று பலமான சொற்களில் மறுப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்கிறாள்.
மற்ற முறைகள், அந்த இடத்தை விட்டுச் செல்வது, அளிப்பை கவனியாதிருப்பது, அல்லது பேச்சையே மாற்றிவிடுவது. புகைப்பதற்கான அழுத்தத்தை நீங்கள் எவ்விதம் மறுத்திடுவீர்கள் என்பதை நீங்கள் முன்னதாகவே ஒத்திகை பார்ப்பதை முயன்றுபாருங்கள். விளக்கம் கேட்கப்பட்டால், நீங்கள் அதைக் கொடுக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். பைபிள் சொல்லுகிறது: “உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் . . . உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.”—1 பேதுரு 3:15.c
யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்தில் அளிக்கப்படும் பைபிள் கல்வி புகைபிடிப்பதை நிறுத்திட அநேகருக்கு உதவியிருக்கிறது. ஆரன் நினைவிற்குக் கொண்டுவருகிறார்: “சுத்திகரிக்கப்பட்ட ஒரு பரதீஸான பூமியில் பரிபூரண ஆரோக்கியத்துடன் வாழ்வது குறித்து மற்றவர்களிடம் பேசுவதற்கான ஆசைதானே புகைப்பதை நிறுத்த எனக்குத் தூண்டுதலாக இருந்தது.” புகைக்க ஆரம்பிக்காமல் இருப்பதே ஞானமான செயல்!—கொலோசெயர் 4:5. (g91 8/22)
[அடிக்குறிப்புகள்]
a ஐக்கிய மாகாணங்களில் புகைபிடிப்பவர்களில் முக்கால் பாகம் 21 வயதுக்கு முன் புகைக்க ஆரம்பித்தனர். ஓர் ஆய்வில், பருவவயதில் இருக்கும் புகைப்பவர் தொகுதியில் பாதிபேர் தொடக்கப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள்ளாகவே தங்கள் முதல் சிகரெட்டைப் புகைத்திருக்கின்றனர்.
b நீங்கள் புகையிலையை இரகசியமாகப் பயன்படுத்தியிருப்பீர்களானால், உங்கள் பிரச்னையைப் பெற்றோரிடம் தெரியப்படுத்துவதன் மூலம் தயவுசெய்து அவர்களுடைய உதவியை நாடுங்கள். (நீதிமொழிகள் 28:13) உங்களுடைய பிரச்னையை அறியவரும்போது, அவர்கள் கோபப்படலாம். ஆனால் அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தால், அவர்களுடைய ஆரம்ப கோபம் தணிந்த பிறகு, தவறை மீண்டும் செய்வதைத் தவிர்ப்பதற்கு உதவிசெய்வதில் கவனம் செலுத்துவார்கள். யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் சபையின் கண்காணிகளுங்கூட இந்தக் காரியத்தில் உங்களுக்கு அதிக உதவியாக இருக்கமுடியும்.—யாக்கோபு 5:14, 15.
c புகைபிடித்தலின் ஆபத்துகள் பற்றிய தகவலுக்கு ஆகஸ்ட் 8, 1992 விழித்தெழு! பத்திரிகையைப் பாருங்கள்.
[பக்கம் 21-ன் படம்]
ஒருவரை முதிர்ச்சியுள்ளவராகக் காணப்படச் செய்வதற்கு மாறாக, புகைபிடித்தல் ஒருவருடைய பாதுகாப்பின்மையை வஞ்சித்திடக்கூடும்