புயற்காற்று ஆண்ட்ரு அழிக்க முடியாத காரியங்கள்
புயற்காற்றுகள், சில புயற்காற்றுகள் மற்ற புயற்காற்றுகளைக் காட்டிலும் நாசகரமானதாய் இருக்கின்றன.a சில பலத்த காற்றுகளாகவே இருக்கின்றன, அடைமழையைக் கொண்டுவந்து மரங்களை வேரோடே சாய்த்துவிடுகின்றன. புயற்காற்று ஆண்ட்ரு தென் ஃப்ளாரிடாவிலும் (ஆகஸ்ட் 24, 1992), லூயிஸியானாவிலும் (ஆகஸ்ட் 26, 1992), புயற்காற்று இனிக்கீ கெளவாயிலும் ஹவாயிலும் (செப்டம்பர் 12, 1992), கடும்புயல் ஓமர் குவாமிலும் (ஆகஸ்ட் 28, 1992) இருந்தது.
இத்தகைய புயற்காற்றுகள் கோடிக்கணக்கான டாலர்கள் செலவுபிடித்த நாசத்தை உண்டாக்கின. ஃப்ளாரிடாவில் மக்கள் டஜன் கணக்கில் மாண்டனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தனர். காப்பீடு பிரதிநிதிகள் வீட்டுச் சொந்தக்காரர்களைத் தேடி ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்ட ஈடு கட்டணத்தைச் காசோலையில் எழுதிக்கொடுக்க நாசமடைந்த வீடுகளுக்கு விரைந்தோடினர்.
அந்தப் பிராந்தியத்திலுள்ள 1,033 யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகளில் 518 வீடுகள் பழுதுபார்க்கப்படலாம் என்று ஃபோர்ட் லாடர்டேலிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய இடருதவிக் குழு அறிக்கை விடுத்தது. இந்த விகிதம் அங்கு இருக்கக்கூடிய எல்லாருடைய வீடுகளுக்குப் பொருத்திப் பார்த்தால், ஆண்ட்ரு அடித்த பாதையிலிருந்த அனைத்து வீடுகளில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் நாசமாக்கப்பட்டன. பிற்பாடு, குடியிருக்கத்தக்க வீடுகளைக்கொண்டிருந்த வாய்ப்புப்பெற்ற ஆட்கள் தங்களுடைய தட்டுமுட்டுப் பொருட்களையும் துணிமணிகளையும் உலரவைத்தனர். பெருமழைக்கு ஆட்பட்ட ஒழுகலான கூரைகளின் வழியாக மேல்தளங்களிலிருந்து பெயர்த்துகொண்டுவரும் வெள்ளைக் களிம்பைத் துப்புரவாக்கினர். தங்கள் வீடுகளின் பாழ்க்கடிக்கப்பட்ட நிலையைப் பார்ப்பது அநேகருக்குக் கஷ்டமாயிருந்தது. ஸ்திரமற்ற வீடுகளில் அல்லது டிரெய்லர் வீடுகளில் வசித்தவர்களே பெரும்பாலும் மிகவும் கஷ்டப்பட்டனர்.
புயற்காற்று ஆண்ட்ரு ஒருவரையும் விட்டுவைக்கவில்லை
அப்படிப்பட்ட தம்பதிகளில் ஒருவர்தான் லெனர்டும் டெரி கீஃப்பரும். ஃப்ளாரிடா நகரிலுள்ள தங்களது டிரெய்லர் வீடு இருக்குமிடத்தைத் திரும்பவும் விஜயம் செய்ய அவர்கள் சென்றிருந்தபோது, அந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு அவர்கள் இராணுவ தணிக்கைச் சாவடியில் தங்களை யாரென்று அடையாளங்காட்டவேண்டியிருந்தது. ஒரு டிரெய்லர் வீடு இருக்குமிடம் எந்தவொரு நிலக்குழிகளும் ஏற்படாமல் நூற்றுக்கணக்கான ஆற்றல்வாய்ந்த வெடிகுண்டுகளால் சேதப்படுத்தப்பட்டதைப்போல் காட்சியளித்ததையே அவர்கள் பார்த்தனர். மரங்கள் வேரோடே விழுந்து கிடந்தன. முன்பு டிரெய்லர் வீடுகளின் சுவர்களையும் கூரைகளையும் உண்டாக்கின வெட்டப்பட்ட அலுமினிய தகடுகள், ஏதோவிதமான விநோத கொண்டாட்ட அலங்கரிப்புகளைப் போல மரங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டும் கிளைகளிலிருந்து தொங்கிக்கொண்டும் இருந்தன. எங்குப்பார்த்தாலும் மின்சார கம்பிகள் கீழே விழுந்து கிடந்தன. அதன் மர கம்பங்கள் வத்திக்குச்சிகளைப் போல ஒடிந்து கிடந்தன. கார்கள் தலைகீழாக நொறுங்கிக்கிடந்தன.
குடியிருக்கப்படமுடியாத வீடு என்று சொல்லப்பட்ட பாப் வான் டிக் என்பவரின் புதிய வீட்டின் காட்சியை அவர் இப்படியாக விவரிக்கிறார்: “மேல்தளம் இடிந்துவந்து, நொறுக்குபவற்றை நொறுக்கிப்போட்டு, வளைக்கக்கூடியவற்றை வளைத்துப்போட்டு பயப்படும் எங்களைப் பயமடையச் செய்தது.”
தனிப்பட்ட உடைமைகள், விளையாட்டுப் பொருட்கள், துணிமணிகள், போட்டோக்கள், புத்தகங்கள் ஆகியவை ஒரு முந்திய வாழ்க்கைப் பாணியின் விசனகரமான நினைப்பூட்டுதல்களாகச் சுற்றிலும் கிடந்தன. கட்டிடத்தின் இடிகுவியலினூடே தனியாக இருந்த ஒரு கறுப்பு பூனை மட்டும் வெறுமனே அலைந்து திரிந்துகொண்டிருந்தது. கீஃப்பர்களை அந்தப் பூனை வினவுவது போல் உற்றுப்பார்த்தது. முன்பு யாரோ ஒருவருடைய அருமையான உடைமைகளாக இருந்தவற்றின்மேல் சிறிய பல்லிகள் ஓடிக்கொண்டிருந்தன. உடைந்த குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்து சிந்திக் கிடந்த கெட்டுப்போன சாப்பாட்டின் நாற்றம் எங்கும் பரவியிருந்தது. எங்குப் பார்த்தாலும் ஒரு கொடுமையான, சேதமயமான காட்சித்தான் இருந்தது—ஒரு மணிநேரத்திற்கு 260 கிலோமீட்டருக்கும் மேற்பட்டு அடித்த காற்றுகளாலும், பலமான காற்றுகளாலுமே இவையெல்லாம் ஏற்பட்டன.
இது இந்த வீட்டுச் சொந்தக்காரர்களுக்கும் அவற்றில் குடியிருந்தவர்களுக்கும் நெஞ்சைப் பிளப்பதாயிருந்தது. அநேக வருடங்களாக, ஒரு குடும்பத்தையே வளர்த்து தங்களுடைய சொந்த விசேஷ வீடுகளில் கூடிவாழ்ந்துவந்த பிறகு, அதன் சொந்தக்காரர்களும் அதில் குடியிருந்தவர்களும் புயலுக்குப் பின் வந்துபார்க்கையில் எல்லாம் தூளாக உடைந்து சிதறிக் கிடந்தன. இந்தக் கீஃப்பர்கள் முன்பு வந்திருந்தபோது தங்களுடைய ஒருசில உடைமைகள் சேதமாகாதபடி வைத்துவிட்டுச் சென்றனர். ஆனால் வீட்டு இடிமானங்களில் கிடந்தவற்றைப் பொறுக்கி எடுப்பது அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. என்றாலும், உயிரோடிருந்து, கடவுளை இன்னும் சேவிக்க முடிவதைக்குறித்து அவர்கள் போற்றுதலோடு இருந்தனர்.
புயற்காற்று ஆண்ட்ரு எதையுமே விட்டுவைக்கவில்லை. நடைபாதையிலிருந்த கடைகள், தொழிற்சாலைகள், பண்டகசாலைகள்—இவையெல்லாமே இயற்கையின் தாக்குதலுக்கு இலக்காயின. அற்ப மனிதனின் கட்டிட நியதிகள் நாசத்தைத் தடுத்துநிறுத்த முடியவில்லை.
மனித இயல்பில் மிகச் சிறந்ததும் மிக மோசமானதும்
வித்தியாசப்பட்ட இடருதவி நிலையங்கள் அமைக்கப்பட, நாடு முழுவதிலுமிருந்து ஃப்ளாரிடாவிற்கு அதிக உதவி கிடைக்கத் தொடங்கியது. புரூக்லின், நியூ யார்க்கிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாகக் குழு உடனடியாக பிரதிபலித்து ஃபோர்ட் லாடர்டேலிலுள்ள அசெம்பிளி மன்றத்தில் ஓர் இடருதவிக் குழு இயங்குவதற்கு நியமித்தனர். பொருட்களையும் உணவையும் அவசரப்பண்டங்களையும் வாங்குவதற்கு, ஒரு கணிசமான பணத்தொகையையும் அவர்கள் கொடுத்தனர். இதன் விளைவாக, சாட்சிகளே முதலில் பிரதிபலித்து தொண்டர்களை அழைக்கத் தொடங்கினர். உண்மையில், அநேகர் அழைக்கப்படாமலேயே வந்தனர்.
சாட்சி வேலையாட்கள் கலிபோர்னியா, வடக்கு கரோலினா, ஓரிகோன், வாஷிங்டன் நகரம், பென்சில்வேனியா, மிஸ்ஸெளரி, மேலும் மற்ற பல இடங்களிலிருந்து வந்தனர். எப்போதும் ராஜ்ய மன்றங்களைக் கட்டும் வர்ஜீனியா மண்டல கட்டிட குழு ஒன்று கூரைகளைப் பழுதுபார்ப்பதற்கு 18 சாட்சிகளடங்கிய ஒரு தொகுதியை அனுப்பியது. அவர்கள் வர்ஜீனியாவிலிருந்து ஃப்ளாரிடாவிற்கு வாகனத்தில் வந்துசேர 18 மணிநேரம் ஆனது. இடருதவி வேலையாட்கள் இக்கட்டான நிலைமையில் இருக்கிற தங்கள் உடன் சாட்சிகளிடம் சென்றடைய வேலைக்குச் செல்லாமல் விடுப்புப்பெற்றோ விடுமுறை எடுத்துக்கொண்டோ நாட்டின் குறுக்கே வாகனத்தில் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான கிலோமீட்டருங்கூட வந்திருக்கின்றனர்.
தென் கரோலினாவிலுள்ள சார்ல்ஸ்டன் பகுதியிலிருந்து வந்த தொகுதி அதிக உதவியாக இருந்தது. அந்தச் சாட்சிகள் 1989-ல் அடித்தப் புயற்காற்று ஹுகோவின் காரணமாக அனுபவப்பட்டிருந்தனர். அவர்கள் எதை எதிர்பார்க்கவேண்டும் என்று அறிந்திருந்ததினால், மின் ஆக்கிகள், கட்டுமான பொருட்கள் உட்பட இடருதவிக்குத் தேவையான பொருட்களை விரைவில் ஒழுங்கமைத்தனர். இரண்டே வாரங்களில், இந்தத் தொண்டர் தொகுதிகள் சுமார் 800 வீடுகளில் இருந்த நீரை வெளியே எடுத்து, பெரும்பான்மையான கூரைகளைப் பழுதுபார்த்து முடித்தனர்.
சாட்சியாயிராத மணத்துணைவர்களும் அயலவரும் பழுதுபார்க்கும் சாட்சிகளடங்கிய குழுக்கள் செய்த உதவியிலிருந்து பயனடைந்தனர். மேற்கு ஹோம்ஸ்டெட்-லுள்ள ரான் கிளார்க் அறிக்கை செய்தார்: “அவிசுவாசியான மணத்துணைவர்கள் இவை யாவற்றையும் கண்டு உண்மையிலேயே கிளர்ச்சியடைந்தனர். ஏற்கெனவே சாட்சிகள் தங்களுக்குச் செய்த காரியங்களைக் கண்டு திகைப்படைந்தவர்களாக, அவர்கள் கண்ணீர் வடித்தனர்.” சாட்சி ஒருவருடைய அவிசுவாசியான கணவரைக் குறித்து அவர் மேலும் சொன்னார்: “கணவர் வெறுமனே பெருமகிழ்ச்சியடைந்திருக்கிறார்—அவருக்கு இப்போது அவருடைய கூரையை அமைப்பதில் சாட்சிகள் அங்கு இருக்கின்றனர்.”
மற்றொரு சாட்சி, தான் ஒவ்வொரு இரவிலும் சென்று சந்தித்தச் சாட்சியாயிராத அயலவரைக் குறித்து சொன்னார். அவர்கள் நன்றாயிருக்கின்றனர் என்று சொன்னார்கள். ஐந்தாம் நாள் மனைவி தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கமுடியாமல் அழுதாள். “குழந்தைக்குவேண்டிய அணையாடைகள் எங்களிடம் இல்லை. குழந்தைக்குக் கொடுக்க ஆகாரம் இல்லை. போதிய உணவும் தண்ணீரும் எங்களிடம் இல்லை.” கணவருக்கு 20 லிட்டர் கல்லெண்ணெய் தேவையாயிருந்தது ஆனால் எங்குமே அது கிடைக்கவில்லை. அதே நாளில், சாட்சி ராஜ்ய மன்ற இடருதவிக் கிடங்கிலிருந்து அவர்களுக்குவேண்டிய எல்லாவற்றையும் கொண்டுவந்து கொடுத்தார். மனைவி நன்றி தெரிவித்து கண்ணீர்விட்டாள். கணவர் இடருதவி வேலைக்கு நன்கொடை அளித்தார்.
சேதமான பகுதியிலிருந்த மறுபடியும் ஸ்தாபிக்கப்பட்ட வித்தியாசப்பட்ட ராஜ்ய மன்றங்களில் ஒன்றுசேர்ந்து இடருதவியை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த சபை மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ஓர் இன்றியமையா பங்கை வகித்தனர். எல்லா சாட்சிகளையும் கண்டுபிடித்து அவர்களுடைய தேவைகள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு அவர்கள் அயராது உழைத்தனர். மாறாக, விமானப்படை அலுவலர் ஒருவர் மற்றொரு பகுதியில் செய்யப்பட்டுவந்த இடருதவி வேலையைக்குறித்து கூறியது எடுத்துச்சொல்லப்பட்டது: “வேலையை ஒழுங்குப்படுத்தும் அதிகார நிலையிலுள்ளவர்கள் கட்டளைகளைக் கொடுக்கவே விரும்புகின்றனர், ஆனால் ஊக்கமாக உழைத்து, வேலையைச் சமாளிக்கவும் துப்புரவுப்படுத்தி மறுகட்டும் பணியில் ஈடுபடவும் யாரும் விரும்புவதில்லை.”
சேதங்கள் மக்களிலுள்ள நற்பண்புகளையும் மோசமான பண்புகளையும் எடுத்துக்காட்டக்கூடும். மோசமான பண்புக்கு உதாரணம், பொருட்களைக் கொள்ளையிடுவதாகும். ஒரு சாட்சி குடும்பம், உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் உள்ள இடருதவி மையத்தில் உபயோகிக்கத் தங்களுடைய குளிர்சாதனப்பெட்டியையும் சலவை இயந்திரத்தையையுமாவது எடுத்துவைப்பதற்குத் தீர்மானித்தனர். அவர்கள் பாரவண்டியைக் கொண்டுவர மன்றத்துக்குச் சென்றனர். திரும்பி வருவதற்குள் கொள்ளைக்காரர்கள் இவ்விரண்டு பொருட்களையும் கொள்ளையடித்தனர்!
இதை நேரில் பார்த்த சாட்சி அறிக்கை செய்தார்: “சேதமடைந்த தெருக்களினூடே நாங்கள் பயணஞ்செய்கையில், கொள்ளைக்காரர்களை எச்சரித்து வீடுகளில் அறிவிப்பு பலகைகளை நாங்கள் பார்த்தோம். ஒருசில அறிவிப்பு பலகைகள், ‘கொள்ளைக்காரர்கள் சாகவேவேண்டும்,’ ‘கொள்ளைக்காரர்கள் சுடப்படுவர்,’ என்று கூறின. மற்றொன்று, ‘இரண்டு கொள்ளைக்காரர்கள் சுடப்பட்டனர். ஒருவர் இறந்துவிட்டார்,’ என்று சொன்னது. பண்டகசாலைகளும் நடைபாதையிலுள்ள கடைகளும் சூறையாடப்பட்டன.” எண்பத்திரண்டாவது விமானப் பிரிவின் தலைவர் சொல்கிற பிரகாரம் குறைந்தபட்சம் ஒரு கொள்ளைக்காரராவது பிடிக்கப்பட்டு மக்களால் விசாரணையின்றி அடித்துக் கொல்லப்பட்டார்.
அநேகர் சிறையில் அடைக்கப்பட்டனர். எந்த ஒரு சேதம் ஏற்பட்டாலும் குற்ற நோக்கோடு உள்ள ஒரு தொகுதி, பெருங்கழுகுகளைப் போல துரிதமாகப் பொருட்களைச் சூறையாட ஆயத்தமாக இருப்பதுபோல தோன்றுகிறது. மேலும் சாதாரணமாக, குற்றவாளிகளாக இராத மக்களுங்கூட கொள்ளையடிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எந்தவொரு செலவுமில்லாமல் ஏதோவொன்றைப் பெறும் முயற்சியில், மதம், நெறிமுறைகள், ஒழுக்க விதிகள் ஆகியவை ஒதுக்கிவிடப்படுகின்றன.
ஆயுதந்தரிந்த கொள்ளைக்காரர்கள், துவக்கத்தில் ஒருசில இராணுவ வீரர்கள் வைத்திருந்த குண்டில்லா துப்பாக்கிகளையுங்கூட பறிமுதல் செய்தனர் என்று விழித்தெழு!-வுக்கு கூறப்பட்டது. இந்த ஆட்கள் ராஜ்ய மன்ற இடருதவி மையத்தைப் பாலைவனச்சோலையாகக் கருதினர் “ஏனென்றால்” அவர்கள் கூறியதுபோல, “சாட்சிகளாகிய நீங்கள் துப்பாக்கிகளை எடுத்துச்செல்வதில்லை.”
“வெறுமனே உட்கார்ந்துகொண்டு எதையும் செய்யாமல் இருந்துவிடாதீர்கள்”
இயற்கை சேத அனுபவங்களிலிருந்து யெகோவாவின் சாட்சிகள் எதைக் கற்றுக்கொண்டனர்? கூடிய சீக்கிரத்தில் ஆவிக்குரிய நடவடிக்கைகளில் திரும்பவும் இறங்குங்கள். ஒரே கட்டிடத்தில் இருந்த இரண்டு ராஜ்ய மன்றங்கள் திங்கட்கிழமை நடந்த புயற்காற்றை அடுத்துவந்த புதன்கிழமையன்று கூட்டங்களை நடத்த ஆயத்தமாக இருந்தது என ஹோம்ஸ்டெட்-லுள்ள ஒரு கண்காணி, எட் ரம்சி விழித்தெழு!-வுக்கு கூறினார். கூரையின் ஒருசில பகுதிகள் இல்லாமற்போயின, கூரையின் மேல்தளங்கள் விழுந்து கிடந்தது, நீர் புகுந்துவிட்டிருந்தது. தொண்டர்கள் கூட்டங்களை நடத்துவதற்கும் தங்களுடைய சேதமான பிராந்தியத்தில் இடருதவி வேலையை நிர்வகிக்க அவற்றை உதவி புரிவதற்கு ஆள் அனுப்பும் மையமாக உபயோகிக்கவும் ராஜ்ய மன்றங்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வெகு விறுவிறுப்பாக வேலைசெய்தனர். சேதத்திற்குட்பட்ட ஆட்களுக்கும் இடருதவி வேலையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் உணவளிக்க சமையலறைகள் ஸ்தாபிக்கப்பட்டன.
பிரின்ஸ்டன் ஸ்பானிஷ் சபையின் மூப்பர், ஃபெர்மின் பாஸ்டிரானா என்பவர் 80 சாட்சிகளடங்கிய தன்னுடைய சபையில் ஏழு குடும்பங்கள் தங்கள் வீடுகளை முற்றிலும் இழந்தனர் என்று அறிக்கை செய்தார். தன்னுடைய உடன் சாட்சிகளுக்கு என்ன பரிகாரத்தை அவர் அளித்தார்? “விசனப்படவேண்டும் என்று நினைத்தால் விசனப்படுங்கள். ஆனால் வெறுமனே உட்கார்ந்துகொண்டு எதையும் செய்யாமல் இருந்துவிடாதீர்கள். மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் ஊக்கமாக ஈடுபடுங்கள், முடிந்தவரை, வெளி ஊழியத்திற்குச் செல்லுங்கள். நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்களைத் தவறவிடாதீர்கள். தீர்க்கப்படக்கூடிய பிரச்னைகளைத் தீர்த்துவைக்கப் பாருங்கள், ஆனால் தீர்க்கமுடியாததை எண்ணி கவலைப்படாதீர்கள்.” இதன் விளைவாக, விரைவில் சாட்சிகள் பிரசங்கிக்கத் துவங்கி, இடருதவிப் பெட்டிகளையும் வீடுவீடாக எடுத்துச் சென்றனர். புயற்காற்று ஆண்ட்ரு அவர்களுடைய வைராக்கியத்தை அடித்துச்செல்லவில்லை.
‘அடுத்த முறை நாங்கள் கட்டாயமாகக் காலிசெய்வோம்!’
கட்லர் ரிஜ் என்ற இடத்திலிருந்துவரும் 37 வயதுள்ள பெண், ஷேரன் காஸ்ட்ரோ என்பவர் தன்னுடைய கதையை விழித்தெழு!-வுக்கு சொன்னார்: “என்னுடைய தகப்பன் காலிசெய்யவேண்டாமென்று தீர்மானித்தார். கடந்த முறை வந்த புயற்காற்று ஃப்ளாரிடா கரையைத் தாக்காது சென்றதால், ஆண்ட்ருவும் அப்படியே தாக்காது செல்லும் என்று அவர் நினைத்தார். ஜன்னல்களுக்குப் பலகையிடவுங்கூட மறுத்தார். நல்லவேளையாக, என்னுடைய இளைய சகோதரர் வந்திருந்தார், அவர் ஜன்னல்களை ஒட்டுமரமிட்டு மூடும்படியாக வற்புறுத்தினார். சந்தேகமில்லாமல் அவருடைய செயல் எங்கள் உயிர்களைத் தப்பவைத்தது. எங்களுடைய ஜன்னல்கள் தூளாக உடைந்து சிதறி, எங்களைத் துண்டு துண்டாக அறுத்துவிட்டிருக்கும்.
“காலை 4:30 மணிக்கு மின்சாரம் இல்லை. வெளியே சத்தங்கள் திகிலூட்டின. அது ஒரு பெரிய ரெயில் வண்டியின் சத்தத்தைப் போலிருந்தது. மரங்கள் முறிந்து கட்டிடங்கள் இடிந்து உடைந்து விழுந்தபோது நொறுங்குகிற சத்தம் கேட்டது. பயத்தைக் கிளப்பிய கீச்சென்ற ஒலி, எங்களுடைய கூரையிலுள்ள பெரிய ஆணிகள் மெதுவாக கழன்று வரும் சத்தமாக இருந்தது என்று நாங்கள் பின்னர் கண்டுபிடித்தோம். உப்பரிகை அடித்துச்சென்றது, கூரையின் மூன்றிலொரு பகுதி விழுந்தது. இறுதியில் என்னுடைய அருமையான அம்மாவும் 90 வயதுள்ள என்னுடைய பாட்டியும் உட்பட நாங்கள் 12 பேரும், ஜன்னல்களேயில்லாத நடு அறையில் இருந்தோம். நிச்சயமாக நாங்கள் அங்கே இறந்துவிடுவோம் என்று நினைத்தோம்.”
அந்தப் பெண் அந்த அனுபவத்திலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டார்? “அடுத்த முறை அவர்கள் எங்களைக் காலிசெய்ய சொன்னால்,—கீழ்ப்படிதலோடு காரணம் கேட்காமல்—நாங்கள் கட்டாயமாகக் காலிசெய்வோம். நாங்கள் எச்சரிப்புகளுக்குச் செவிசாய்ப்போம். கொஞ்சத்தை வைத்து பகிர்ந்தளித்து வாழவும் நான் கற்றுக்கொண்டேன். மேலும் கண்ணீர்விட்டு, விசனப்பட்டு, பின்னர் உண்மைநிலையின் சவாலை ஏற்றுக்கொள்வது சரியென நான் தெரிந்துகொண்டேன்.”
செய்திமூலங்களின் பிரதிபலிப்புகள்
சாட்சிகள் எவ்வளவு நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதைச் செய்திமூலங்களுங்கூட குறிப்பிட்டன. சவானா ஈவ்னிங் பிரஸ், “யெகோவாவின் சாட்சிகள் தெற்கு ஃப்ளாரிடா தங்களை வரவேற்பதைக் காண்கின்றனர்” என்ற தலையங்கத்தைக் கொண்டிருந்தது, “சாட்சிகள் தங்களுடைய உடன் சாட்சிகளையும் சாட்சிகளாயிராதவர்களையும் கவனித்துக்கொள்கின்றனர்,” என்று தி மியாமி ஹெரல்டு அறிவித்தது. அது கூறியது: “இந்த வாரம் ஹோம்ஸ்டெட்-ல் எவருமே வீட்டுக் கதவிருந்தபோதிலும் யெகோவாவின் சாட்சிகள் சென்றால் கதவை அடைப்பது கிடையாது. நாட்டின் மறுபக்கத்திலிருந்து சுமார் 3,000 சாட்சி தொண்டர்கள் தங்களுடைய உடன் சாட்சிகளையும் மற்ற ஆட்களையும் உதவிசெய்ய சேதமடைந்த பிராந்தியத்திற்கு வந்து குவிந்திருக்கின்றனர். . . . எந்தவொரு இராணுவ அமைப்பும் சாட்சிகளுடைய துல்லியமான தன்மை, ஒழுங்கு, திறமை ஆகியவற்றைக் கண்டு பொறாமைப்படுவர்.”
சாட்சிகள் தங்களுடைய அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் பெருமளவான காரியங்களை ஒழுங்கமைப்பதில் பழக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், ராஜ்ய மன்றங்களையும் பெரிய அசெம்பிளி மன்றங்களையும் கட்டுவதற்கு உலகமுழுவதும் அவர்கள் நூற்றுக்கணக்கான மண்டல கட்டிட குழுக்களை அமைத்திருக்கின்றனர். ஒருசில மணிநேர அறிவிப்புக்குள் உடனடியாகப் பிரதிபலிக்க அவர்கள் ஆட்களைப் பயிற்றுவித்திருக்கின்றனர்.
என்றாலும், இன்னொரு அம்சமிருக்கிறது—அவர்களுடைய மனநிலை. அதே அறிக்கை தொடர்ந்து சொன்னது: “அதிகாரவர்க்கம் இல்லை. உயர்வாகக் கருதும் மனப்பான்மையினால் எழும்பும் சண்டைகள் எதுவும் கிடையாது. மாறாக, வேலையாட்கள் எவ்வளவு கோபமாகவும் கடுகடுப்பாகவும் களைப்படைந்தவர்களாகவும் இருந்தாலும் அவர்கள் உற்சாகமாகவும் ஒத்துழைக்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.” இது எவ்வாறு விளக்கப்பட்டது? ஒரு சாட்சி பதிலளித்தார்: “இது மற்றவர்களிடம் எங்களுடைய அன்பைக் காட்ட தூண்டுவிக்கும் கடவுளோடுக் கொண்டுள்ள ஓர் உறவின் காரணமாகவே வருகிறது.” சாட்சிகள் கொண்டிருந்த கிறிஸ்தவ அன்பு, ஆண்ட்ரு அடித்துச்செல்லமுடியாத மற்றொரு காரியம்.—யோவான் 13:34, 35.
சாட்சிகள் மரங்களிலிருந்து கற்றுக்கொண்டது ஓர் ஆர்வமூட்டும் ஒப்புமையாகத் தோன்றுகிறது. நேரில் பார்த்த ஒரு சாட்சி இந்த விதத்தில் அதைச் சொன்னார்: “நான் சுற்றிவருகையில், நூற்றுக்கணக்கான பெரிய மரங்கள் வேரோடே பிடுங்கப்பட்டுக் கீழே விழுந்து கிடப்பதைப் பார்க்கவேண்டியிருந்தது. ஏன் அவை அவ்வாறு விழுந்து கிடந்தன? அதன் பருமன் காரணமாக அவை மிக அதிகமாகக் காற்றை எதிர்த்து நின்றன, மேலும் அவற்றிற்கு பரவலான ஆனால் ஆழமற்ற வேர்கள் இருந்தன. மறுபட்சத்தில், பெரும்பான்மையான மெல்லிய பனை மரங்கள் நிலைத்து நின்றன. அவை காற்று அடிக்கும் பக்கமாகச் சாய்ந்தன, சில அவற்றின் ஓலைகளை இழந்தன, ஆனால் பெரும்பான்மையான மரங்கள் நிலத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தன.”
சாட்சிகள் கடவுளுடைய வார்த்தையின்பேரில் உள்ள விசுவாசத்தின் ஆழமான வேர்களைக் கொண்டிருந்தனர், தங்களுடைய பிரதிபலிப்புகளில் வளைந்துகொடுக்கும் தன்மையையுடையவர்களாயிருந்தனர். அவர்களுக்குச் சொத்துக்களும் வீடுகளும் மிக முக்கியமான மதிப்புவாய்ந்த காரியங்களாக இல்லை. உயிரோடே வாழ்ந்து, இன்னலின் மத்தியிலும் தொடர்ந்து யெகோவாவைச் சேவிக்கவாவது அவர்களால் முடிந்தது. உயிர், ஆண்ட்ரு அவர்களிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாத ஒன்று.
இது எப்படிச் செய்யமுடிகிறது?
அன்ஹுசர் புஷ் என்ற வடிப்பாலை வியாபார நிறுவனம் ஒரு பாரவண்டி நிறைய குடிநீரை மனமுவந்து அளித்தது. மியாமி பகுதிக்கு வந்தவுடன், வண்டி ஓட்டுநர் தண்ணீரை எங்கு நிரப்பவேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டார். ஓரளவு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிற ஆட்கள் சாட்சிகள் மட்டுமே என்று அவரிடம் சொல்லப்பட்டது. உண்மையில், ஆண்ட்ரு அடித்து ஒரு வாரத்துக்குள், ஃபோர்ட் லாடர்டேலின் யெகோவாவின் சாட்சிகளுடைய அசெம்பிளி மன்றத்திற்குத் தேவையான பொருட்கள் 70 பாரவண்டிகளில் வந்தடைந்தன.
அங்குள்ள ஒரு தொண்டர் அறிக்கை செய்கிறார்: “ஆகவே சாட்சிகளாகிய எங்களுக்குக் குடிநீர் ஒரு பாரவண்டி நிறைய கிடைத்தது. உடனே நாங்கள் இதை ராஜ்ய மன்றங்களில் உள்ள விநியோக நிலையங்களுக்கு அனுப்பவேண்டிய மற்ற உணவுப்பொருட்களோடு சேர்த்து அனுப்பினோம். அது அந்தப் பகுதியில் தேவையிலிருந்த சகோதரர்களோடும் அயலவரோடும் பகிர்ந்தளிக்கப்பட்டது.” வாஷிங்டன் நகரிலுள்ள ஒரு காகித நிறுவனம் 2,50,000 காகித தட்டுகளை இனாமாக அளித்தது.
துவக்கத்தில், நகர அதிகாரிகள் சாட்சிகளாயிராத தொண்டர்களை, ‘சாட்சிகள் மட்டுமே நன்றாய் ஒழுங்கமைப்பட்டிருக்கின்றனர்,’ என்று சொல்லி அவர்களை ராஜ்ய மன்றங்களுக்கு அனுப்பினர். முடிவில் இராணுவம் வந்து உணவு, தண்ணீருக்கான இடருதவி மையங்களையும் கூடார வீடுகளையும் ஸ்தாபிக்கத் துவங்கியது.
சாட்சிகளுடைய தேவைப்பொருட்களை விநியோகம் செய்யும் மையம் ஆரம்பத்தில் இடருதவிக் குழுவினால் ஃபோர்ட் லாடர்டேலிலுள்ள அசெம்பிளி மன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டது, இது ஹோம்ஸ்டெட்-ஐ சுற்றியிருந்த அதிக சேதமடைந்த பிராந்தியத்திற்கு வடக்காகச் சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. வேலையழுத்தத்தை ஓரளவு குறைக்க, சேதமடைந்த பிராந்தியத்தின் வடமேற்கு பகுதிக்குச் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில், ஒர்லான்டோ-வுக்கு அருகாமையிலிருந்த பிளான்ட் சிட்டி அசெம்பிளி மன்றத்தில் ஒரு பிரதான விநியோகம் செய்யும் மையம் ஸ்தாபிக்கப்பட்டது. அநேக இடருதவிப் பொருட்கள் பிரித்து, அடைத்து அனுப்புவதற்கு அங்கு அனுப்பப்பட்டன. பிளான்ட் சிட்டியினிடமிருந்து தினந்தோறும் அதன் தேவைகளை அந்தக் குழு கேட்டனுப்பியது, ஃபோர்ட் லாடர்டேலைச் சென்றடைய வண்டியில் ஐந்து மணிநேரம் எடுத்தது. இதற்குப் பெரிய பாரவண்டிகள் உபயோகிக்கப்பட்டன.
சேதமான பகுதியின் மத்தியில் பழுதுபார்த்து முடிந்த மூன்று ராஜ்ய மன்றங்களுக்கு உணவு, பொருட்கள், தண்ணீர், மின் ஆக்கிகள், மேலும் மற்ற தேவையான பொருட்களை இந்த விநியோக நிலையம் வழங்கியது. அங்கே கவனம் தேவையாயிருக்கும் நூற்றுக்கணக்கான வீடுகளைச் சென்று விஜயம் செய்ய, கட்டிட மற்றும் துப்புரவு தொகுதிகளைத் திறமைவாய்ந்த சாட்சிகள் ஒழுங்கமைத்தனர். ராஜ்ய மன்றம் இருக்கும் இடங்களில் சமையலறைகளும் உணவு வரிசைகளும் செயற்பட துவங்கின. தேவையிலிருப்போர் எவரும் வரவேற்கப்பட்டனர். ஒருசில இராணுவ வீரர்களுங்கூட உணவருந்திவிட்டு, பின்னர் நன்கொடை பெட்டிகளில் நன்கொடை அளித்தது கவனிக்கப்பட்டது.
ஆண்கள் வீடுகளைக் கட்டுவதில் அதிக வேலையாயிருந்தபோது, ஒருசில பெண்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருந்தனர். மற்றவர்கள், இயற்கை சேதங்கள் பற்றிய பைபிள் விளக்கத்தை எவரிடமாவது பகிர்ந்துகொள்ள அவர்களைச் சென்று சந்திப்பதில் ஈடுபட்டிருந்தனர். மேலும் தேவையிலிருப்போருக்கு இடருதவிப் பெட்டிகளைக் கொடுத்துக்கொண்டும் வந்தனர். இத்தகைய ஆட்களில் ஒருவர் டெரிசா பெரிடா. இவருடைய வீடு நாசமடைந்தது. அவருடைய கார் ஜன்னல்கள் நொறுக்கப்பட்டிருந்தன—என்றாலும் தன்னுடைய அயலவருக்கு இடருதவிப் பெட்டிகள் காரில் எப்போதும் வைக்கப்பட்டிருந்தன. அவருடைய கணவர், லசேரோ ராஜ்ய மன்றம் ஒன்றில் மும்முரமாக வேலைசெய்வதில் ஈடுபட்டிருந்தார்.—பிரசங்கி 9:11; லூக்கா 21:11, 25.
வீடு இழந்த அநேகருக்கு, ஆண்ட்ருவினால் பாதிக்கப்படாத சாட்சிகளுடைய வீடுகளில் தங்குவதற்கு இடங்கள் பார்க்கப்பட்டன. மற்றவர்கள் கடனாக வாங்கப்பட்ட அல்லது அதற்கென்று இலவசமாக அளிக்கப்பட்ட டிரெய்லர் வீடுகளில் தங்கினர். சிலர் இராணுவத்தினர் ஸ்தாபித்த கூடார வீடுகளுக்குச் சென்று தங்கினர். மற்றவர்கள் தங்கள் வீடுகளை, இழக்கப்பட்டது என்று எழுத்துமூலம் எழுதிக்கொடுத்து, நாட்டின் மற்ற பாகங்களில் உள்ள தங்களுடைய நண்பர்களிடமோ உறவினர்களிடமோ சென்று தங்கிக்கொண்டனர். அவர்களுக்கு வீடுகளும் இல்லை, வேலைகளும் இல்லை. மின்சாரம் கிடையாது, தண்ணீர் கிடையாது, போதிய கழிநீர் வசதி இல்லை—அவரவர் தங்களுக்குச் சிறந்ததாக இருந்த தீர்மானத்தை எடுத்தனர்.
அனைவரும் கற்றுக்கொண்ட ஒரு பாடத்தை ஸ்பானிய மொழி பேசும் சாட்சி ஒருவர் மிக நன்றாகச் சொன்னார்: “வாழ்க்கையில் வைக்கவேண்டிய எங்களுடைய இலக்குகளைக் குறித்துக் கற்றுக்கொண்ட பாடத்திற்கு நாங்கள் அதிக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்கள் வீட்டைக் கட்ட 15 அல்லது 20 வருடங்கள் உழைத்து, பொருளாதார காரியங்களைச் சேர்த்து வைத்தப் பின்னர் அவையெல்லாம் ஒரு மணிநேரத்திலேயே அழிந்துபோகும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இது ஆவிக்குரிய ரீதியில் உள்ள நம்முடைய இலக்குகள் என்ன என்று பார்க்கவும் வாழ்க்கையை எளிமையாக ஆக்கிக்கொள்ளவும் யெகோவாவைச் சேவிப்பதைக் குறித்து உண்மையிலேயே சிந்திக்கவும் நமக்கு உதவுகிறது.”
அப்போஸ்தலன் பவுல் சொன்னதற்கு வெகு பொருத்தமாக இருக்கிறது: “எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு . . . அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.”—பிலிப்பியர் 3:7, 8, 9அ, 11.
நம்முடைய தற்போதைய உலகில் இயற்கை சேதங்கள் வாழ்க்கையின் பாகமாக இருக்கிறது. அதிகாரிகள் கொடுக்கும் எச்சரிக்கைகளுக்கு நாம் செவிசாய்ப்போமேயானால், நாம் நம்முடைய உயிரையாவது காப்பாற்றிக்கொள்வோம். ஒரு கிறிஸ்தவன் வீடுகளையும் சொத்துக்களையும் இழக்க நேரிடும், ஆனால் அவர் “ஆறுதலின் தேவ”னோடு வைத்திருக்கும் உறவைப் பலப்படுத்தவேண்டும். சிலர் ஒருவேளை சேதத்தினால் மாண்டபோதிலுங்கூட, நிலைநாட்டப்பட்ட ஒரு பூமியில், கடவுளுடைய புதிய உலகில் இயேசு அவர்களுக்கு உயிர்த்தெழுதலை வாக்குக்கொடுத்திருக்கிறார்—இயற்கை சேதங்களினால் ஏற்படக்கூடிய துன்பத்தையோ இறப்பையோ ஒருக்காலும் காணாத ஒரு பூமியாயிருக்கும்.—2 கொரிந்தியர் 1:3, 4; ஏசாயா 11:9; யோவான் 5:28, 29; வெளிப்படுத்துதல் 21:3, 4. (g93 1/8)
[அடிக்குறிப்புகள்]
a புயற்காற்று என்பது “காற்றுகள் ஒரு மணிநேரத்திற்கு 75 மைல் (ஒரு மணிநேரத்திற்கு 121 கிலோமீட்டர்) என்ற வேகங்களுக்கு மேலாக அடைகிற வட அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான வெப்பமண்டல சுழல்காற்று.” (தி கன்சைஸ் கொலம்பியா என்ஸைக்ளோபீடியா) கடும்புயல் என்பது “மேற்கு பசிபிக்கிலோ சீனக் கடலிலோ உருவாகும் புயற்காற்று.”—தி அமெரிக்கன் ஹெரிடெஜ் டிக்ஷனரி ஆஃப் தி இங்கிலிஷ் லாங்குவெஜ்.
[பக்கம் 20-ன் பெட்டி]
முற்றிலும் பிரமிப்படைந்தார்
இடருதவி வேலைக்கு உதவிகொடுக்கப் ஃப்ளாரிடாவிலுள்ள டாம்பா என்ற இடத்திலிருந்து வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த 11 சாட்சிகளடங்கிய ஒரு தொகுதி சென்றது. அவர்கள் தேவைப்பொருட்களைப் பெற்று கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒரு சாட்சியின் வீட்டுக் கூரையைப் பழுதுபார்க்கத் துவங்கினர். சாட்சியாயிராத ஒன்றுவிட்ட மகன் அங்கே வந்து இதைப் பார்த்தபோது திகைப்படைந்தார்—தனக்கு முன்பாக தன்னுடைய மாமாவின் வீட்டை வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த சாட்சிகளின் ஒரு தொகுதி திரும்பவும் புதுப்பித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து அவர் முற்றிலும் பிரமிப்படைந்தார். தானும் சேர்ந்து அவர்களோடு கட்டும் வேலையில் ஈடுபடும் அளவுக்கு அவர் மிகவும் கிளர்ச்சியடைந்தார்.
அடுத்த முறை அவருடைய வீட்டிற்குச் சாட்சிகள் யாராகிலும் சென்றால், ஒரு பைபிள் படிப்பைத் தன்னோடு கொண்டிருக்கும்படி கேட்பதாக அவர் சொன்னார். அவர் அந்த டாம்பா தொகுதியினரிடம் சம்பாஷித்துக்கொண்டிருக்கும்போது, தானும் அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்துதான் வருகிறார் என்பது தெரியவந்தது. உடனே அந்தத் தொகுதியிலிருந்த ஒரு மூப்பர் அடுத்த வாரமே ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்தார்! ஒரு சாட்சி கூறியதுபோல, சாட்சிக்கொடுப்பதற்கு வீடுகளைத்தான் தட்டவேண்டும் என்று அல்ல—நீங்கள் கூரைகளையுங்கூட தட்டலாம்—என்பதை இது நிரூபிக்கிறது!
[பக்கம் 15-ன் படங்கள்]
புயற்காற்று ஆண்ட்ரு எதையும் விட்டுவைக்கவில்லை, ஒருசில கட்டிடங்களே நிலைத்திருக்க முடிந்தது
கிஃப்பர்களுடைய ஸ்திரமற்ற வீடு —அதில் என்ன விட்டுவைக்கப்பட்டிருக்கிறது
[பக்கம் 16-ன் படங்கள்]
ரெபெக்கா பேரிஸ்-ம் அவருடைய மகள்களும் மற்ற 11 பேரும் இந்தச் சிறிய இடத்தில் தப்பித்தனர்
கொள்ளையைத் தவிர்க்க இராணுவம் தலையிட்டது (மேலே வலப்பக்கத்தில்); கொள்ளையிடப்பட்ட கடைகள் (வலப்பக்கத்தில்)
புயற்காற்று கூரைகளைக் கிழித்துக்கொண்டுபோனது, வாகனங்கள் அங்குமிங்கும் நீரில் மிதந்தன
[பக்கம் 17-ன் படங்கள்]
இடருதவி ராஜ்ய மன்றங்களில் அமைக்கப்பட்டது
ஸ்திரமற்ற வீடுகளை மரங்கள் சுற்றி வளைத்துக்கொண்டிருந்தன; ஒரு குழந்தையுடைய விளையாட்டுப்பொருட்கள் மெத்தையின்மீது விளையாட ஆளில்லாமல் கிடந்தன; பைபிள் பிரசுரங்கள் இடிபொருள் குவியலுக்குள் கிடக்கிறது; டெரிசா பெரிடா போன்ற சாட்சிகள் தங்களுடைய அயலவரிடத்தில் தேவைப்பொருட்களை அளித்துக்கொண்டிருந்தனர்
இனாமாகக் கொடுக்கப்பட்ட கட்டுமானப் பொருட்கள். துணிமணிகளைப் பிரித்தெடுப்பது
[பக்கம் 18-ன் படங்கள்]
ஐக்கிய மாகாணங்களிலிருக்கிற எல்லா இடங்களிலுமிருந்து தொண்டர்கள் வந்து இடருதவி வேலையில் உதவிசெய்தனர்