புதிய உலகம் எப்போது வரும்
இந்தத் தற்போதைய உலகம் ஒழிந்துபோகும்போது கடவுளுடைய புதிய உலகம் வரும். ஆனால் ‘இந்த உலகம் முடிவுக்கு வரும் என்று உண்மையிலேயே நாம் நம்பமுடியுமா?’ என்று நீங்கள் கேட்கலாம். இதற்குமுன் எப்போதாவது ஓர் உலகம் முடிவுக்கு வந்திருக்கிறதா? கவனியுங்கள்.
ஆம், திட்டவட்டமான அத்தாட்சியின்படி, ஒருகாலத்தில் ஓர் உலகம் முடிவுக்கு வந்திருக்கிறது. ‘அப்பொழுது [நோவாவின் காலத்தில்] இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்தது’ என்று பைபிள் சொல்கிறது. கடவுள் “பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி”னார்.—2 பேதுரு 2:5; 3:6.
அழிந்து போனது ‘அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகம்’ அல்லது ஒரு பொல்லாத காரிய ஒழுங்குமுறை என்பதைக் கவனியுங்கள். முடிவுற்றது பூமியாகிய கோளமோ விண்மீன்கள் நிறைந்த வானங்களோ அல்லது மனித குடும்பமோ அல்ல. ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தவர்கள் எண்ணிக்கையில் பெருகினபோது, மற்றொரு உலகம் (நம்முடைய தற்கால உலகம்) உருவானது. அதற்கு என்ன சம்பவிக்கும்?
நோவாவின் காலத்து உலகம் அழிந்தது என்று சொன்ன பிறகு, “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்”பட்டிருக்கிறது என்று பைபிள் தொடர்ந்து கூறுகிறது. (2 பேதுரு 3:7) அக்கினி உலகத்திற்கு அழிவைக் குறித்துக் காட்டுகிறது. உண்மையிலேயே, ‘[இன்று இருக்கும்] உலகம் ஒழிந்துபோம்.’ (1 யோவான் 2:17) ஆனால் எப்போது?
இயேசுவின் சீஷர்கள் அறிந்துகொள்ள விரும்பினர். ஆகவே அவர்கள் கேட்டனர்: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும்.” (மத்தேயு 24:3) அதற்குப் பதில் கொடுக்கும்வண்ணம், அதன் நிறைவேற்ற காலத்தில் வாழும் ஜனங்கள் ஓர் உலகம் விரைவில் முடிவடையப்போகிறது; ஒரு புதிய உலகம் அதன் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளப்போகிறது என்று அறிந்துகொள்ள உதவக்கூடிய ஓர் அடையாளத்தை இயேசு கொடுத்தார். அந்த அடையாளம்தான் என்ன?
அந்த அடையாளம்
அந்த அடையாளம் பல பாகங்களை உள்ளடக்கியிருந்தது. ஆம், பல சம்பவங்கள் முன்னறிவிக்கப்பட்டன. அந்த அடையாளம் நிறைவேற்றப்பட, இந்த எல்லா சம்பவங்களும் ஒரு கவனிக்கத்தக்க வகையில் முக்கியமாக ஒரே சமயத்தில், ஒரு தலைமுறையின்போது, நிகழவேண்டியிருக்கின்றன. (மத்தேயு 24:34) இந்தச் சம்பவங்கள் யாவை?
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்.” “அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்,” போன்றவை இயேசு சொன்னவற்றில் சிலவாக இருந்தன.—லூக்கா 21:10, 11; மத்தேயு 24:7-9, 12.
அப்போஸ்தலனாகிய பவுல் இந்த உலகத்தின் ‘கடைசி நாட்களை’ குறிக்கும் மற்ற நிலைமைகளை விவரித்தார். அவர் எழுதினார்: ‘கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும். எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.’—2 தீமோத்தேயு 3:1-5.
நிச்சயமாக, நீங்கள் இந்த எல்லா காரியங்களையும்—முந்திய யுத்தங்களை முழங்கச்செய்த சர்வதேசிய முரண்பாடுகள், மாபெரும் பூமியதிர்ச்சிகள், பரவலான கொள்ளைநோய்களும் உணவு பற்றாக்குறைகளும் வெறுப்புணர்ச்சியும் கிறிஸ்துவின் சீஷர்களைத் துன்புறுத்தலும், அக்கிரமத்தின் அதிகரிப்பு, ஒருக்காலும் விஞ்ச முடியாதளவு கொடிய காலங்கள்—பார்த்தோ கேள்விப்பட்டோ இருக்கிறீர்கள். இவை எல்லாவற்றையும்விட, கடவுள் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்,’ என்று பைபிள் முன்னறிவிக்கிறது. (வெளிப்படுத்துதல் 11:18) இப்பொழுதே மனிதர்கள் பூமியைக் கெடுத்துக்கொண்டிருக்கின்றனர்!
நவம்பர் 1992-ல், “பூமியின் அழிவைப்பற்றி முன்னணி விஞ்ஞானிகள் எச்சரிக்கை,” போன்ற தலைப்புச் செய்திகளைச் செய்தித்தாள்கள் தாங்கிவந்தன. நோபெல் பரிசு பெற்றவரும், அக்கறையுள்ள விஞ்ஞானிகள் சங்கத்தின் தலைவருமான டாக்டர் ஹென்றி கெண்டல் சொன்னார்: “இந்த எச்சரிக்கை ஒன்றும் மிகைப்படுத்தப்பட்டதல்ல, வீணாக பீதியுண்டாக்குகிறதுமில்லை.” செய்தித்தாள் கட்டுரை ஒன்று இவ்வாறு தெரிவித்தது: “அந்த எச்சரிக்கையைத் தயாரித்த 1,575 விஞ்ஞானிகளின் பட்டியல், சர்வதேசிய அறிவியல் சமுதாயத்தில் அவர்கள் யார் எவர் (Who’s Who) என்பதைப்போல் வாசிக்கிறது.” நம்முடைய பூமியின் முழு அழிவைப்பற்றிய அவர்களுடைய எச்சரிக்கையை அசட்டை செய்யக்கூடாது!
அதைப்பற்றி சந்தேகமே இருக்கமுடியாது. அந்த அடையாளம் அதன் எல்லா பாகங்களிலும் நிறைவேற்றமடைகிறது. இது இயேசுவின் இந்த முக்கிய முன்னுரைத்தலையும் உட்படுத்துகிறது: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்,” ஆம், இந்த உலகத்தின் முடிவுதான். (மத்தேயு 24:14) கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்பட்டிருக்கும்போது அது வரும் என்று இயேசு கூறினார். இப்போது அந்தப் பிரசங்க வேலை முன்னுரைக்கப்பட்ட அதே அளவில் யெகோவாவின் சாட்சிகளால் செய்யப்பட்டுவருகிறது!
நீங்கள் செய்யவேண்டியது
ஆதலால், எல்லா அத்தாட்சியும் கடவுளுடைய புதிய உலகம் மிகவும் அண்மையிலிருக்கிறது என்ற உண்மையைக் குறித்துக் காட்டுகிறது. இருப்பினும், இந்த உலகத்தின் முடிவை நீங்கள் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால், புதிய உலகத்தில் வாழ்க்கையை மகிழ்ந்தனுபவிக்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு காரியம் செய்யவேண்டிய தேவை இருக்கிறது. ‘உலகம் ஒழிந்துபோம்,’ என்று சொன்ன பிறகு “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்,” என்று விவரிப்பதன் மூலம் உங்களிடத்திலிருந்து தேவைப்படுகிறது என்ன என்பதை பைபிள் காண்பிக்கிறது.—1 யோவான் 2:17.
எனவே நீங்கள் கடவுளுடைய சித்தத்தைக் கற்றுக்கொண்டு அதைச் செய்யவேண்டும். இதைச் செய்வதில் உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். அப்படி செய்தால் கடவுளுடைய புதிய உலகின் ஆசீர்வாதங்களை என்றென்றுமாக மகிழ்ந்தனுபவிக்க நீங்கள் இந்த உலகத்தின் முடிவைத் தப்பிப்பிழைக்க முடியும். (g93 10/22)
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
NASA photo
[பக்கம் 10-ன் படம்]
புதிய உலகத்திற்குச் சற்றுமுன் மகா துன்பத்தின் ஒரு காலம் வரும்