இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா?
வேறெந்த சந்ததியும் உலக முடிவைப்பற்றி அவ்வளவு அதிகமானப் பேச்சைக் கேட்கவில்லை. உலகம் ஓர் அணு ஆற்றல் பேரழிவில் முடிவடையும் என்று அநேகர் பயப்படுகின்றனர். தூய்மைக்கேடு உலகத்தை அழிக்கக்கூடும் என்று மற்றவர்கள் நினைக்கின்றனர். பொருளாதாரப் பெருங்குழப்பம் பெருந்திரளான மனிதவர்க்கத்தை ஒருவருக்கொருவர் விரோதமாக வைக்கும் என்று இன்னும் மற்றவர்கள் கவலை கொள்கின்றனர்.
இந்த உலகம் உண்மையில் முடிவடையுமா? அது முடிவடைந்தால், அது எதை அர்த்தப்படுத்தும்? முன்பு எப்பொழுதாவது ஓர் உலகம் முடிவடைந்திருக்கிறதா?
ஓர் உலகம் முடிகிறது—மற்றொன்று அதை மாற்றீடுசெய்கிறது
ஆம், ஓர் உலகம் முடிவடைந்தது. நோவாவின் நாட்களில் மிகவும் துன்மார்க்கமாக ஆகியிருந்த உலகத்தைக் கவனியுங்கள். பைபிள் விளக்குகிறது: “அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினால் அழிந்த[து].” மேலும் பைபிள் சொல்லுகிறது: “[கடவுள்] பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுபேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி”னார்.—2 பேதுரு 2:5; 3:6.
அந்த உலக முடிவு எதை அர்த்தப்படுத்தியது, எதை அர்த்தப்படுத்தவில்லை என்பதைக் கவனியுங்கள். அது மனிதவர்க்கத்தின் முடிவை அர்த்தப்படுத்தவில்லை. நோவாவும் அவருடைய குடும்பமும் பூகோள ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தனர். அவ்வாறே கிரக பூமியும் அழகிய விண்மீன்களாலான வானங்களும் தப்பிப்பிழைத்தன. “அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகம்,” பொல்லாத காரிய ஒழுங்குமுறையே அழிந்தது.
கடைசியாக, நோவாவின் சந்ததியார் பெருகியபோது, வேறொரு உலகம் வளர்ந்தது. அந்த இரண்டாவது உலகம், அல்லது காரிய ஒழுங்குமுறை, நம்முடைய நாள் வரையாக நிலைத்திருக்கிறது. அதன் சரித்திரம் போர், குற்றச்செயல், வன்முறை ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. இந்த உலகத்திற்கு என்ன நேரிடும்? அது தப்பிப்பிழைக்குமா?
இந்த உலகின் எதிர்காலம்
நோவாவின் நாளில் இருந்த உலகம் அழிவை அனுபவித்தது என்று சொல்லிய பிறகு, பைபிள் விவரம் தொடருகிறது: “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்”டிருக்கின்றன. (2 பேதுரு 3:7) உண்மையில், மற்றொரு பைபிள் எழுத்தாளர் விளக்குகிறபடி: ‘உலகம் [இன்றிருப்பது] ஒழிந்துபோகிறது.’—1 யோவான் 2:17.
சொல்லர்த்தமான பூமி அல்லது விண்மீன்களாலான வானங்கள் ஒழிந்துபோகும் என்பதை பைபிள் அர்த்தப்படுத்தவில்லை, இவை நோவாவின் நாளில் அழிந்து போகாதிருந்தது போன்று. (சங்கீதம் 104:5) மாறாக, இந்த உலகம், அதன் “வானங்கள்” அல்லது சாத்தானின் செல்வாக்கின்கீழுள்ள அரசாங்க ஆட்சியாளர்களோடும், அதன் “பூமி” அல்லது மனித சமுதாயத்தோடும் அக்கினியினால் அழிக்கப்படுவதுபோல அழிக்கப்படும். (யோவான் 14:30; 2 கொரிந்தியர் 4:4) ஜலப்பிரளயத்திற்கு முன்னான உலகம் அழிந்ததுபோல, இந்த உலகம், அல்லது காரிய ஒழுங்குமுறை நிச்சயமாக அழியும். இந்த உலகத்தின் முடிவுக்குச் சற்று முன்பாக என்ன சம்பவிக்கும் என்பதற்கு உதாரணமாக, “நோவாவின் நாளில்” இருந்த நிலைமையைப்பற்றி இயேசு கிறிஸ்துவுங்கூடப் பேசினார்.—மத்தேயு 24:37-39.
குறிப்பிடத்தக்க விதமாக, நோவாவின் நாட்களைப்பற்றி இயேசு பேசியபோது, அது அவருடைய அப்போஸ்தலர்களின் கேள்விக்கு பதிலாக இருந்தது: “உம்முடைய வருகைக்கும், இந்த உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” (மத்தேயு 24:3) இந்த உலகம் முடிவடையும் என்று இயேசுவைப் பின்பற்றியவர்கள் அறிந்திருந்தனர். இந்த எதிர்பார்ப்பு அவர்களை அச்சுறுத்தியதா?
மாறாக, உலக முடிவிற்கு முன்பாக நிகழப்போகிறச் சம்பவங்களை இயேசு விவரித்தபோது, ‘அவர்களுடைய மீட்பு சமீபமாயிருப்பதால்’ களிகூரும்படியாக அவர்களை அவர் உற்சாகப்படுத்தினார். (லூக்கா 21:28) ஆம், சாத்தான் மற்றும் அவனுடைய பொல்லாத காரிய ஒழுங்குமுறையிலிருந்து ஒரு சமாதானமான புதிய உலகிற்குள் மீட்பு!—2 பேதுரு 3:13.
ஆனால் எப்பொழுது இந்த உலகம் முடிவடையும்? இயேசு தம்முடைய “வருகைக்கும் இந்த உலகத்தின் முடிவுக்கும்” என்ன “அடையாள”த்தைக் கொடுத்தார்?
“அந்த அடையாளம்”
இங்கு மொழிபெயர்க்கப்பட்ட “வருகை” என்ற கிரேக்க வார்த்தை பரோசியா (pa·rou·siʹa), அது “வந்திருத்தல்” என்று அர்த்தப்படுத்துகிறது, அதாவது, உண்மையில் ஆஜராயிருத்தலைக் குறிக்கிறது. ஆகவே “அந்த அடையாளம்” காணப்படுகையில், கிறிஸ்து சீக்கிரமாக வரவிருக்கிறார் என்பதையல்ல, ஆனால் அவர் ஏற்கெனவே திரும்பிவந்துவிட்டார் என்றும் ஆஜராயிருந்தார் என்றும் அர்த்தப்படுத்தும். ஒரு பரலோக ராஜாவாக அவர் காணக்கூடாத விதத்தில் ஆட்சிசெய்ய ஆரம்பித்தார் என்பதையும் அவருடைய சத்துருக்களுக்குச் சீக்கிரத்தில் அவர் முடிவைக் கொண்டுவருவார் என்பதையும் அது அர்த்தப்படுத்தும்.—வெளிப்படுத்துதல் 12:7-12; சங்கீதம் 110:1, 2.
இயேசு வெறுமனே ஒரு சம்பவத்தை “அந்த அடையாள”மாகக் கொடுக்கவில்லை. அநேக உலக சம்பவங்களையும் நிலைமைகளையும் அவர் விவரித்தார். இவையனைத்தும் “கடைசி நாட்கள்” என்று பைபிள் எழுத்தாளர்கள் அழைத்த அந்தக் காலப்பகுதியில் நடக்கும். (2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:3, 4) இயேசு முன்னறிவித்த அந்தக் “கடைசி நாட்க”ளைக் குறிக்கும் சில காரியங்களைக் கவனியுங்கள்.
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (மத்தேயு 24:7) எக்காலத்திலும் இருந்ததைவிட நவீன காலங்களில் போர் பேரளவானப் பரிமாணத்தைக் கொண்டிருந்திருக்கிறது. ஒரு சரித்திராசிரியர் குறிப்பிட்டார்: “[1914-ல் ஆரம்பமான] முதல் உலகப் போர் ‘அனைத்தையும்’ ஈடுபடுத்திய போர்களில் முதலாவதாக இருந்தது.” என்றபோதிலும், இரண்டாம் உலகப் போர் மிக அதிகமாக அழிவுண்டாக்கக்கூடியதாய் இருந்தது. மேலும், போர் தொடர்ந்து பூமியைப் பாழ்ப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆம், இயேசுவின் வார்த்தைகள் உயிர்த்துடிப்புள்ள முறையில் நிறைவேறியிருக்கின்றன!
“உணவுப் பற்றாக்குறைகள் இருக்கும்.” (மத்தேயு 24:7, NW) முதல் உலகப் போரைத் தொடர்ந்து சரித்திரத்திலேயே மிகப்பெரிதானப் பஞ்சம் வந்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பயங்கரமானப் பஞ்சமும் ஏற்பட்டது. ஊட்டச்சத்தின்மை என்ற ஒரு கொள்ளைநோய் பூமியின் ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பாகத்தினர் வரையாக பாதித்து, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 140 லட்சம் குழந்தைகளைக் கொன்றது. உண்மையில், “உணவுப் பற்றாக்குறைகள்” இருந்திருக்கின்றன!
“மகா பூமியதிர்ச்சிகள் இருக்கும்.” (லூக்கா 21:11, NW) முந்திய நூற்றாண்டுகளை ஒப்பிடுகையில், 1914 முதற்கொண்டு சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய பத்து மடங்கானோர் பூமியதிர்ச்சிகளினால் மரித்திருக்கின்றனர். பெரிய பூமியதிர்ச்சிகளில் ஒருசிலவற்றை மட்டும் கவனியுங்கள்: 1920-ல், சீனாவில் 2,00,000 பேர் கொல்லப்பட்டனர்; 1923-ல், ஜப்பானில் 99,300 பேர் மரித்தனர்; 1939-ல், துருக்கியில் 32,700 உயிர்ச்சேதங்கள்; 1970-ல், பெரு-வில் 66,800 பேர் கொல்லப்பட்டனர்; மற்றும் 1976-ல், சீனாவில் ஏறக்குறைய 2,40,000 (அல்லது, சில செய்திமூலங்களின்படி, 8,00,000) பேர் மரித்தனர். நிச்சயமாகவே, “மகா பூமியதிர்ச்சிகள்”!
“ஓர் இடத்தைத் தொடர்ந்து மற்றொரு இடத்தில் கொள்ளைநோய்கள்.” (லூக்கா 21:11, NW) முதல் உலகப் போருக்குப் பிறகு, சுமார் 210 லட்சம் மக்கள் ஸ்பானிய விஷ ஜுரம் மரித்தனர். சயன்ஸ் டைஜஸ்ட் அறிக்கையிட்டது: “சரித்திரத்திலேயே அப்படிப்பட்ட கடுமையானதும் விரைவானதுமான மரண சந்திப்பு இருந்ததில்லை.” அது முதற்கொண்டு, இருதய நோய், புற்றுநோய், எய்ட்ஸ், மற்றும் மற்ற அநேக தொற்றுநோய்களும் கோடிக்கணக்கானோரைக் கொன்றிருக்கின்றன.
‘அக்கிரமம் மிகுதியாதல்.’ (மத்தேயு 24:12) நம்முடைய உலகம் 1914 முதற்கொண்டு குற்றச்செயலுக்கும் வன்முறைக்குமுரிய ஒன்றாக அறியப்பட்டிருக்கிறது. அநேக இடங்களில் பகல்வேளையிலுங்கூட வீதிகளில் ஒருவரும் பாதுகாப்பாக உணருவதில்லை. வெளியில் செல்ல பயந்து, இரவில் மக்கள் தங்களுடைய வீடுகளில் பூட்டப்பட்டு அரணிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் தங்கியிருக்கின்றனர்.
கடைசி நாட்களின்போது நிகழ்வதற்கு மற்ற அநேகக் காரியங்கள் முன்னறிவிக்கப்பட்டிருந்தன, மேலும் இவையனைத்தும் நிறைவேற்றமடைந்துவருகின்றன. உலக முடிவு அருகாமையில் இருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. ஆனால், மகிழ்ச்சிகரமாக, தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள். ‘உலகம் ஒழிந்துபோகிறது’ என்று சொன்ன பிறகு, பைபிள் வாக்களிக்கிறது: “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.”—1 யோவான் 2:17.
ஆகவே நாம் கடவுளுடைய சித்தத்தைக் கற்றுக்கொண்டு, அதைச் செய்வது அவசியம். அப்பொழுது கடவுளுடைய புதிய உலகின் ஆசீர்வாதங்களை நித்தியத்துக்குமாக மகிழ்ந்து அனுபவிப்பதற்கு, நாம் இந்த உலக முடிவைத் தப்பிப்பிழைக்கலாம். பைபிள் வாக்களிக்கிறது, அந்தச் சமயத்தில்: “[மக்களின்] கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
மற்றபடி குறிப்பிட்டிருந்தால் தவிர, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிள் பயன்படுத்தப்படுகிறது. NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்.
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
படத்திற்கான நன்றி: Airplane: USAF photo. Child: WHO photo by W. Cutting. Earth quake: Y. Ishiyama, Hokkaido University, Japan.