இளைஞர் கேட்கின்றனர்
தற்கொலைதான் பரிகாரமா?
“ஒவ்வொரு நாள் காலையிலும் நான் விழித்தெழும்புவதில் சோர்வடைந்துவிடுகிறேன். என்ன செய்வதென்று தெரியாதவனாய் இருக்கிறேன். கோபமாக இருக்கிறேன். என்னுடைய இருதயம் உறுத்துகிறது. . . . எனவே சாவதைப்பற்றி யோசிக்கிறேன். . . . நான் சாக விரும்பவில்லை, ஆனால் சாகவேண்டும் என்று உணருகிறேன். . . . எதிர்காலத்தை நோக்குகிறேன், நம்பிக்கையின்மையையும் வேதனையையுமே காண்கிறேன்.” —21 வயதுடைய பீட்டரிடமிருந்து வந்த தற்கொலைக் குறிப்பு.a
ஐக்கிய மாகாணங்களிலுள்ள 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர் தற்கொலை செய்ய முயற்சிசெய்திருக்கின்றனர் என்று வல்லுநர்கள் உறுதியாகச் சொல்லுகின்றனர். துக்ககரமாக, ஆண்டொன்றிற்கு சுமார் 5,000 பேர் வெற்றியடைகின்றனர். ஆனால் இளைஞர் மத்தியில் தற்கொலையானது ஐக்கிய மாகாணங்களுக்கு மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்ததாக இல்லை. 1990-ல் இந்தியாவில் சுமார் 30,000 இளைஞர் தற்கொலை செய்துகொண்டனர். இஸ்ரேல், கனடா, தாய்லாந்து, நியூ ஜீலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், பின்லாந்து, ஸ்பெய்ன், ஸ்விட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இளைஞர் மத்தியில் தற்கொலை வீதங்கள் பெருவாரியாக அதிகரித்திருக்கின்றன.
எவராவது சோகத்தால் மூழ்கடிக்கப்பட்டவராய் உணர்ந்தாராகில்—அல்லது துயர் என்னும் வலையில் சிக்குண்டு, தப்புவதற்கான எந்த வழியையும் காணமுடியாமல் இருந்தால், அப்பொழுது என்ன? தற்கொலையானது தூண்டுவிப்பதாய் தோன்றலாம், ஆனால் உண்மையில் அது துக்ககரமான வீண்செயலைவிட வேறொன்றுமில்லை. அதன் பின்விளைவு, நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பரிதாபத்தையும் வேதனையையும் தவிர வேறொன்றையும் விட்டுச்செல்வதில்லை. எதிர்காலம் இருளடைந்ததுபோல் தோன்றினாலும், தொந்தரவுகள் ஏராளமானதுபோல் தோன்றினாலும், ஒருவர் தற்கொலை செய்துகொள்வதுதானே பரிகாரம் அல்ல.
ஏன் சிலர் இவ்வாறு உணருகின்றனர்
நீதியுள்ள மனிதனாகிய யோபு மனமுறிவு என்பதன் உட்பொருளை அறிந்திருந்தார். அவருடைய குடும்பம், அவருடைய உடைமைகள், அவருடைய சுகநலம் ஆகியவற்றை இழந்தப் பிறகு, அவர் சொன்னார்: “என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது.” (யோபு 7:15) சில இளைஞரும்கூட இன்று அதைப்போலவே உணர்ந்திருக்கின்றனர். எழுத்தாளர் ஒருவர் அதை இவ்வாறு சொன்னார்: “மன இறுக்கம் . . . வேதனைக்கு (புண்பட்டவுணர்ச்சிகளுக்கும் பயவுணர்ச்சிகளுக்கும்) வழிநடத்துகிறது [அது] தற்காப்புக்கு (வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிகள்) வழிநடத்துகிறது.” இவ்வாறாக தற்கொலையானது, சகிக்கமுடியாததாகத் தோன்றுகிற வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்குத் தவறாக வழிநடத்தப்பட்ட முயற்சியாகும்.
இப்படிப்பட்ட வேதனையை எது ஏற்படுத்துகிறது? ஒருவருடைய பெற்றோருடன், காதலனுடன், அல்லது காதலியுடன் கடுஞ்சீற்றமான வாக்குவாதம் போன்ற ஒரு சம்பவத்தால் அது தூண்டுவிக்கப்படலாம். தன்னுடைய காதலியின் கூட்டுறவை முறித்துக்கொண்ட பிறகு, 16 வயதுடைய பிரேட் மனமுறிவுக்குள் வீழ்ந்துபோனான். இருந்தபோதிலும், அவன் தன்னுடைய உணர்ச்சிகளைப்பற்றி ஒருபோதும் பேசவில்லை. தானே தூக்குப்போட்டுக்கொள்வதன்மூலம் வெறுமனே வாழ்க்கையை முடித்துக்கொண்டான்.
பத்தொன்பது வயதுடைய சுனீடா தன்னுடைய காதலனுடன் ஒழுக்கக்கேடான விதத்தில் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தது அவளுடைய பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்டபோது மனச்சோர்வுக்குள்ளானாள். அவள் நினைவுகூருகிறாள், “நான் இதுவரை வாழ்ந்துவந்த விதமாக தொடர்ந்து வாழ விரும்பவில்லை என்பதை அறிந்திருந்தேன். ஆகவே ஒருநாள் இரவு வீட்டிற்கு வந்து, ஆஸ்பிரின் மாத்திரைகளை விழுங்கத் தொடங்கினேன். அடுத்த நாள் காலையில் நான் இரத்தம் கக்கிக்கொண்டிருந்தேன். என்னுடைய உயிரை அல்ல, ஆனால் என்னுடைய வாழ்க்கைப் போக்கையே நான் முடித்துக்கொள்ள விரும்பினேன்.”
பள்ளியும்கூட தீவிர அழுத்தத்திற்கு காரணமாய் இருக்கலாம். டாக்டராக வேண்டும் என்று தன்னுடைய பெற்றோரால் (பெற்றோர்தானே டாக்டராக இருந்தனர்) உந்துவிக்கப்பட்டு, இளைஞனாகிய ஆஷீஷ் தூக்கமின்மையை வளர்த்துக்கொண்டான்; மற்றவர்களிலிருந்து ஒதுங்கவும் ஆரம்பித்தான். தன்னுடைய பெற்றோரின் கல்விசம்பந்தமான எதிர்பார்ப்புகளைத் திருப்திசெய்ய முடியாமல், ஆஷீஷ் தூக்க மாத்திரைகளை அளவுக்கதிகமாக எடுத்துக்கொண்டான். இது பைபிளிலுள்ள நீதிமொழிகள் 15:13-ல் உள்ளதை நினைவுபடுத்துகிறது: “மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.”
குடும்பத் துயரம்
சில இளைஞருடைய தற்கொலையில் குடும்பக் கலவரம்—பெற்றோருடைய மணவிலக்கு அல்லது பிரிவு, குடும்ப அங்கத்தினர் ஒருவரின் மரணம் அல்லது ஒரு புதிய இடத்திற்கு மாறிச்செல்லுதல் போன்றவை—மற்றொரு காரணியாக இருக்கிறது. உதாரணமாக, மேற்குறிப்பிடப்பட்ட பிரேட், ஒரு கார் விபத்தில் நெருங்கிய நண்பர்கள் இருவரையும் உறவினர் ஒருவரையும் இழந்துவிட்டான். பின்பு அவனுடைய குடும்பம் பொருளாதார கஷ்டங்களை அனுபவிக்கத் தொடங்கியது. பிரேட் வெறுமனே உணர்ச்சியில் ஆழ்ந்துவிட்டான். இவ்வாறாக புலம்பின சங்கீதக்காரனைப் போல அவன் உணர்ந்திருக்கலாம்: “என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. . . . அவை ஒரே சமயத்தில் . . . என்னை வளைத்துக்கொண்டன.”—சங்கீதம் 88:3, 17, NW.
திடுக்கிடவைக்கும் எண்ணிக்கையை உடைய இளைஞர் மற்றொரு விதமான மன இறுக்கத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்: சரீர, உணர்ச்சி மற்றும் பாலுறவு சம்பந்தமான துர்ப்பிரயோகம். இந்தியாவிலுள்ள கேரள மாநிலம், இளைஞர் தற்கொலையில் அத்தேசத்திலேயே மிக உயர்ந்த வீதத்தைக் கொண்டிருக்கிறது. தங்களுடைய தகப்பன்மார்களினால் தகாத விதமாக நடத்தப்படுவதன் காரணமாக, அங்குள்ள எண்ணற்ற பருவவயது பெண்கள் தங்களையே மாய்த்துக்கொள்வதற்கு முயற்சிசெய்திருக்கின்றனர். பலவிதமான பிள்ளைத் துர்ப்பிரயோகம் உலகமுழுவதும் பெருவாரியான விகிதங்களில் உயர்ந்திருக்கிறது, அதற்கு அப்பாவித்தனமாக பலியாகியிருக்கிற ஆட்களுக்கு துயரம் கடுமையானதாய் இருக்கக்கூடும்.
துயரத்திற்கான மற்ற காரணங்கள்
ஆனால் தற்கொலை சம்பந்தமான உணர்ச்சிகள் அனைத்தும் வெளிப்புற காரணிகளால் ஏற்படுத்தப்படுவதில்லை. திருமணமாகாத பருவவயதிலுள்ளவர்களைப் பற்றி ஓர் ஆய்வறிக்கை இவ்வாறு சொல்கிறது: “பாலுறவிலும் மதுபானத்தை உட்கொள்வதிலும் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் அவற்றிற்கு விலகியிருந்தவர்களைவிட [தற்கொலை செய்துகொள்ளும்] அதிகளவான ஆபத்தில் இருந்தனர்.” சுனீடாவின் வரையறையற்ற பாலுறவு கருத்தரிப்பில் விளைவடைந்தது—அதைக் கருக்கலைப்பினால் அவள் அழித்துவிட்டாள். (ஒப்பிடவும் 1 கொரிந்தியர் 6:18.) குற்றவுணர்ச்சியால் உறுத்தப்பட்டதால், அவள் மரிக்க விரும்பினாள். அதைப்போலவே, பிரேட் தன்னுடைய 14 வயது முதற்கொண்டு மதுபானத்தைப் பழக்கப்படுத்திக்கொண்டிருந்தான். குடிவெறியாட்டங்களில் தவறாமல் பங்குகொண்டுவந்தான். ஆம், தகாத விதத்தில் பயன்படுத்தும்போது, மதுபானம் “பாம்பைப்போல் கடிக்கும்.”—நீதிமொழிகள் 23:32.
தற்கொலை உணர்ச்சிகள் ஓர் ஆளுடைய சொந்த ‘அமைதலற்ற எண்ணங்களிலிருந்து’கூட தோன்றலாம். (சங்கீதம் 94:19, NW) சிலசமயங்களில் மனச்சோர்வான சிந்தனை பலவிதமான உயிரியல் சம்பந்தமான காரணிகளிலிருந்து விளைவடையலாம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். உதாரணமாக, ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பீட்டர், அவனுடைய தற்கொலைக்கு முன்பாக தன்னுடைய மூளையில் வேதியியல் சார்ந்த சமநிலையின்மையைக் கொண்டிருந்ததாக பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தான். கவனிக்கப்படாமல் விடப்படுகிற மனச்சோர்வுணர்ச்சிகள் தீவிரமாகலாம்; தற்கொலையே தெரிவுசெய்யக்கூடிய ஒன்று என்பதுபோல தோன்ற ஆரம்பிக்கலாம்.
உதவியை பெறுதல்
இருப்பினும், தற்கொலையை தெரிவுசெய்யக்கூடிய ஒன்றாக கருதக் கூடாது. நாம் அதை உணர்ந்தாலும்சரி உணராவிட்டாலும்சரி, மனநல சிகிச்சையளிப்போராகிய ஆலன் L. பெர்மனும் டேவிட் A. ஜோப்ஸும் ‘மன இறுக்கத்தையும் சச்சரவுகளையும் வெற்றிகரமாக சமாளிப்பதற்காக உட்புற மற்றும் வெளிப்புற வழிமுறைகள்’ என்று அழைப்பவற்றை நாம் அனைவருமே கொண்டிருக்கிறோம். ஒரு வழிமுறை, குடும்பத்தினராகவும் நண்பர்களாகவும் இருக்கலாம். நீதிமொழிகள் 12:25 சொல்கிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” ஆம், புரிந்துகொள்கிற நபரிடமிருந்து வருகிற ஒரு நல்வார்த்தை நிலைமையை குறிப்பிடத்தக்க விதமாக மாற்றலாம்!
ஆகவே, எவராவது மனச்சோர்வடைந்தவராய் அல்லது கவலையடைந்தவராய் உணருவாராகில், அவர் தனிமையிலேயே துன்பப்படக்கூடாது என்பது பரிந்துரை செய்யத்தக்கதாகும். (நீதிமொழிகள் 18:1) துன்புறுகிறவர் தன்னுடைய இருதயத்திலுள்ளவற்றை தான் நம்புகிற நபரிடம் தாராளமாக வெளிப்படுத்திக் கூறலாம். எவரிடத்திலாவது பேசுவது ஒருவருடைய உணர்ச்சிகளின் தீவிரத்தைக் குறைக்க உதவிசெய்யும். பிரச்னைகளின்பேரில் ஒரு புதுத்தெளிவையும் அது ஒருவருக்கு கொடுக்கும். மரித்துவிட்ட ஒரு நண்பன் அல்லது ஓர் அன்பானவரின் இழப்பைக்குறித்து எவராவது மனமுறிவடைந்தவராய் இருந்தால், அப்படிப்பட்டவர் நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் அதைக்குறித்து பேசவேண்டும். இப்படிப்பட்ட இழப்புகளைக் குறித்த வேதனை அறிந்து வருத்தம் உணரப்படும்போது, ஒரு நபர் ஆறுதலளிக்கப்படுகிறார். (பிரசங்கி 7:1-3) தற்கொலை தூண்டுதல்கள் மீண்டும்வந்தால், நம்பிக்கைக்குரியவரை தொடர்புகொள்ளும்படி உறுதியளிப்பது அந்த நபருக்கு உதவியாய் இருக்கலாம்.
உண்மைதான், ஒருவரை நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் உயிரே ஆபத்திலிருப்பதால், துணிந்து செயல்படுவது தகுதியானதல்லவா? காரியங்களை மனந்திறந்து பேசினால், தனக்கே தீங்கிழைத்துக்கொள்ளும் தூண்டுதல் ஒருவேளை போய்விடலாம். ‘யாரிடம்?’ என்று சிலர் கேட்கலாம். ஒருவருடைய பெற்றோர் கடவுள் பயமுள்ளவர்களாக இருந்தால், அவர்களிடம் ‘ஒருவருடைய இருதயத்தைத் தர’ ஏன் முயற்சிசெய்யக்கூடாது? (நீதிமொழிகள் 23:26) அநேகர் நினைப்பதைவிட அவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டு உதவிசெய்யக்கூடியவர்களாய் இருக்கலாம். மருத்துவருடைய பரிசோதனை போன்ற கூடுதலான உதவி தேவை என்று தோன்றுமானால், அதற்காக அவர்கள் ஏற்பாடு செய்யலாம்.
கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்கள் உதவிக்கான மற்றொரு ஊற்றுமூலமாக இருக்கிறார்கள். சபையிலுள்ள ஆவிக்குரிய மூப்பர்கள் மனச்சோர்வடைந்தோருக்கு ஆதரவளித்து உதவிசெய்யலாம். (ஏசாயா 32:1, 2, கத்.பை.; யாக்கோபு 5:14, 15) சுனீடாவினுடைய தற்கொலை முயற்சிக்குப் பிறகு, முழுநேர சுவிசேஷகரிடமிருந்து (பயனியர்) அவள் உதவியைப் பெற்றாள். சுனீடா சொல்கிறாள்: “எல்லா சூழ்நிலைமையிலும் பற்றுறுதியுடன் அவர்கள் நிலைத்திருந்தார்கள். அவர்கள் அவ்வாறு இல்லாமலிருந்தால், நான் சொல்லர்த்தமாகவே பைத்தியம் பிடித்தவளாகியிருப்பேன்.”
சமாளித்தல்
உட்புற வழிமுறைகளிலிருந்தும்கூட உதவியைப் பெறலாம். உதாரணமாக, குற்றவுணர்ச்சிகளைக் குறித்து துன்பப்படுவது ஏதாவது தவறினிமித்தமாகவா? (ஒப்பிடவும் சங்கீதம் 31:10.) அப்படிப்பட்ட உணர்ச்சிகள் வளரும்படி அனுமதிப்பதற்குப் பதிலாக, காரியங்களை செம்மைப்படுத்துவதற்கு ஒருவர் உழைக்க வேண்டும். (ஏசாயா 1:18, NW; ஒப்பிடவும் 2 கொரிந்தியர் 7:11, NW) ஒருவருடைய பெற்றோரிடத்தில் குற்றத்தை சொல்வது ஆக்கப்பூர்வமான படியாக இருக்கும். முதலில் அவர்கள் நிலைகுலைந்து போய்விடுவார்கள் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கதே. ஆனால் அவர்கள் உதவியளிப்பதன்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தக்கூடும். உண்மையாக மனந்திரும்புகிறவர்களுக்கு யெகோவா ‘பெரியளவில் மன்னிக்கிறார்’ என்றுகூட நாம் உறுதியளிக்கப்படுகிறோம். (ஏசாயா 55:7, NW) மனந்திரும்புகிறவர்களின் பாவத்தை இயேசுவின் கிரய பலி மூடுகிறது.—ரோமர் 3:23, 24.
கிறிஸ்தவர்கள் விசுவாசத்திலிருந்தும் வேதவசனங்களைப்பற்றிய அறிவிலிருந்தும் யெகோவா தேவனோடு அவர்கள் வைத்திருக்கும் உறவுமுறையிலிருந்தும் உதவியை நாடலாம். பல்வேறுபட்ட சமயங்களில் சங்கீதக்காரனாகிய தாவீது ஆழ்ந்த துயரப்பட்டார், அவர் சொன்னார்: ‘சத்துரு என் பிராணனைத் தரையோடே நசுக்கினான்.’ அவர் மனமுறிவிற்கு இணங்கிவிடவில்லை. அவர் எழுதினார்: “நான் சத்தமிட்டு, உதவிக்காக யெகோவாவை நோக்கிக் கூப்பிட ஆரம்பித்தேன்; நான் சத்தமிட்டு, ஆதரவுக்காக யெகோவாவை நோக்கிக் கூக்குரலிட ஆரம்பித்தேன்.” “உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.”—சங்கீதம் 142:1, NW; 143:3-5.
தனக்கே தீங்கிழைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை பலமாகினால், ஜெபத்தில் யெகோவாவை நோக்கி ஒருவர் கூப்பிடவேண்டும். அவர் வேதனையைப் புரிந்துகொள்கிறார், துன்புறுகிறவர் வாழும்படியும் விரும்புகிறார்! (சங்கீதம் 56:8) வேதனையை சமாளிக்க உதவிசெய்யும்படி ‘மகத்துவமுள்ள வல்லமையை’ அவர் வழங்கமுடியும். (2 கொரிந்தியர் 4:7) சுயமாகவே இழைத்துக்கொண்ட மரணம் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, மேலும் யெகோவாவுக்குதானே கொண்டுவரும் வேதனையையும்கூட ஒருவர் நினைத்துப்பார்க்க வேண்டும். அத்தகைய காரியங்களின்மீது கவனம்செலுத்துவது தொடர்ந்து உயிர் வாழ ஒரு நபருக்கு மிக நன்றாக உதவிசெய்யலாம்.
சிலருக்கு அந்தத் தீங்கு ஒருபோதும் நீங்காததுபோல் தோன்றுகிறபோதிலும், அதே விதமான வேதனையை அனுபவித்து வெற்றிகரமாக வாழ்ந்திருக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்பதில் அவர்கள் உறுதியாயிருக்கலாம். காரியங்கள் மாறலாம், நிச்சயமாக மாறும் என்று அனுபவத்திலிருந்து அவர்கள் சொல்லமுடியும். அப்படிப்பட்ட வேதனைமிக்க சமயத்திலிருந்து குணப்படுவதற்கு மற்றவர்கள் உதவியளிக்கலாம். மனச்சோர்வடைந்தோர் தங்களுக்கு பொருத்தமாய் காண்கிற தேவைப்பட்ட உதவியை நாடவேண்டும்—தொடர்ந்து வாழவும்வேண்டும்!
[அடிக்குறிப்புகள்]
a சிலருடைய பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 24-ன் படம்]
வேதனைமிக்க உணர்ச்சிகளை யாரிடமாவது மனந்திறந்து பேசுவது நல்லது