இளைஞர் கேட்கின்றனர்
என் வாழ்க்கையை எப்படி நான் சரிசெய்து கொள்ளமுடியும்?
“உள்ளே செல்ல எனக்கு மனம் வரவேயில்லை,” என்று ஜான் சொன்னான். யெகோவாவின் சாட்சிகளின் இராஜ்ய மன்றத்துக்கு வெளியே அவன் நின்றுகொண்டிருந்தான். பருவவயதினனான அவன் கிறிஸ்தவத்தைப் புறக்கணித்து விட்டு குற்றச்செயல், போதை மருந்துகள், பாலுறவு ஒழுக்கக்கேடு ஆகியவை நிரம்பிய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். அவ்வாறு பல ஆண்டுகள் வாழ்ந்த பின்னும், பைபிளை அவனால் மறக்க முடியவில்லை, ஆகையால் அவன் இராஜ்ய மன்றத்துக்குச் சென்றான்—ஆனால் உள்ளே செல்வதற்கு அதிகம் பயந்தான். உள்ளே செல்லும்படி அவனை உற்சாகப்படுத்தியவரிடம், “உங்களால் புரிந்துகொள்ள முடியாது,” என்று அவன் சொன்னான். “நான் அளவுக்கு மீறி பாவம் செய்துள்ளேன். நான் செய்தவற்றையெல்லாம் யெகோவா மன்னிப்பதற்கு எந்த ஒரு வழியும் இருப்பதாக நினைக்கவில்லை.”
எண்ணற்ற இளைஞர் தங்கள் பெற்றோரின் கட்டளைகள், மதம், ஒழுக்கம் ஆகியவற்றுக்கு எதிராக கலகம் செய்கின்றனர். விசேஷமாக தேவ-பயமுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இவ்விதம் செய்வது பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. அநேக இளைஞர் அப்போக்கை மேற்கொண்டிருந்த போதிலும், நாளடைவில், சிலர் நச்சரிக்கும் வெறுமையான உணர்ச்சியை உணர ஆரம்பிக்கின்றனர். இதை வரம்புமீறிய வாழ்க்கைப் பாணியால்கூட மறைக்க முடியாது. (நீதிமொழிகள் 14:13) கலகத்தனமான வாழ்க்கைமுறையை பின்பற்றினதன் காரணமாக இப்பொல்லாத உலகத்தினால் துன்புற்ற சில இளைஞர் தங்கள் வாழ்க்கையை சரிசெய்துகொண்டு, அவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபோது கற்ற பைபிள் சத்தியங்களுக்குத் திரும்பிவர விரும்புகின்றனர். ஆனால் அவ்விதம் செய்வது உண்மையிலேயே கூடியகாரியமா?
ஒரு கலகக்கார மகன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான்
லூக்கா 15:11-32 வரை காணப்படும் கெட்ட அல்லது ஊதாரியான குமாரனைப் பற்றிய இயேசுவின் உவமை, இவ்விஷயத்தில் அதிக உட்பார்வையை அளிக்கிறது. அப்பதிவு வாசிக்கிறது: ‘ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போனான்.’
இந்த இளைஞன் இவ்விதமான கலகத்தனமான போக்கை மேற்கொண்டது அவனுடைய தகப்பன் கொடூரமானவராக, துர்ப்பிரயோகம் செய்பவராக அல்லது அளவுக்குமீறி கண்டிப்பானவராக இருந்ததனால் அல்ல! மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின்படி, ஒரு மகன் தன் தகப்பனின் சொத்தில் கணிசமான பங்கைப் பெற உரிமை இருந்தது, ஆனால் இது சாதாரணமாக தகப்பனின் மரணத்துக்குப் பின்பே கிடைக்கும். (உபாகமம் 21:15-17) அவன் தன் பங்கை முன்கூட்டியே கேட்டது, எவ்வளவு உணர்ச்சியற்றத் தன்மையைக் காட்டியது! இருப்பினும், அவனுடைய தகப்பன் அன்பாக அதற்கு இணங்கினார். (ஆதியாகமம் 25:5, 6-ஐ ஒப்பிடவும்.) அப்படியென்றால் தெளிவாகவே—தகப்பனுடைய மனநிலை அல்ல—அவனுடைய மனநிலையே தவறாக இருந்தது. வல்லுநரான ஆல்ஃபிரட் எடர்ஷிம் சொன்னபடி, ஒருவேளை அவன் ‘தன் வீட்டிலிருந்த ஒழுங்கையும் சிட்சையையும்’ வெறுத்திருக்கலாம் மேலும் “சுயாதீனம், சிற்றின்பம் போன்றவற்றை அனுபவிப்பதற்கு சுயநலமான ஆசை” கொண்டிருந்தான்.
இத்தொடரில் முந்திய கட்டுரை ஒன்று ஒத்துக்கொண்டபடி, எல்லா பெற்றோருமே தயவாயும் சிந்தித்தும் செயல்படுவதில்லை. a பெற்றவர் கடூரமாகவோ நியாயமற்றவராகவோ இருந்தாலும், கலகத்தனம் அதற்கு ஒரு விடையல்ல; இறுதியில் கலகத்தனம் சுய-அழிவைக் கொண்டு வருகிறது. இயேசுவின் உவமையை மறுபடியும் சிந்தியுங்கள். வீட்டிலிருந்து வெகு தூரம் பயணப்பட்டு சென்ற பின்பு, “அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கினான்.” இதுவும்கூட அவனுக்குப் புத்தி புகட்டவில்லை. இன்னும் தன்னம்பிக்கையுள்ளவனாய், அவன் “அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.”
“ ‘பன்றிகளை மேய்ப்பது’ என்று இயேசு சொன்ன வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த யூதர்கள் திடுக்கிட்டிருப்பார்கள், ஏனென்றால் ஒரு யூதனுக்கு இதை விட இழிவான நிலை வேறு எதுவும் இல்லை,” என்று பைபிள் வல்லுநர் ஹெர்பர்ட் லாக்யர் சொல்கிறார். அதே போல் இன்று, பைபிள் சத்தியங்களைப் புறக்கணிப்பவர்கள் பெரும்பாலும் தங்களைக் கடினமான அல்லது இழிவுபடுத்தும் நிலைமைகளிலும்கூட இருப்பதாகக் காண்கின்றனர். வீட்டை விட்டு ஓடிப்போன ஒரு கிறிஸ்தவப் பெண் ஒப்புக்கொள்கிறாள்: “என் பணம் எல்லாம் போதை மருந்துகளில் செலவாகி விட்டது, வேறு எதற்கும் என்னிடம் பணம் இல்லை. ஆகையால் போதை மருந்துகளை வாங்குவதற்குக் கடைகளில் கிடைத்த எதையும் திருட ஆரம்பித்தேன்.”
“அவனுக்குப் புத்தி தெளிந்த போது”
கெட்ட குமாரன் தன் சொந்த திக்கற்ற நிலைமைக்கு எவ்வாறு பிரதிபலித்தான்? அவனுக்கு இறுதியில் ‘புத்தி தெளிந்தது’ என்று இயேசு சொன்னார். மூல கிரேக்க மொழியில் “அவனுக்குள் அவன் வந்தான்” என்று இந்த வார்த்தைகள் பொருள்படுகின்றன. வேறு வார்த்தைகளில், அவன் “தன்னை விட்டு” மதிகெட்ட கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருந்து, தன்னுடைய நிலை எவ்வளவு நம்பிக்கையற்றதாய் இருந்தது என்பதைக் காணாதவனாய் இருந்தான்.—2 தீமோத்தேயு 2:24-26-ஐ ஒப்பிடவும்.
சில கலகத்தனமான இளைஞர் இன்று மெய்ம்மையை உணர்ந்துகொள்ளும்படி உலுக்கப்பட்டிருக்கின்றனர். கட்டுப்பாடற்ற வாழ்க்கையின் இருண்ட விளைவுகளை—சிறை, படுகாயம், பாலுறவுகளினால் கடத்தப்படும் நோய்கள் ஆகியவற்றை—அனுபவித்தல் உண்மையிலேயே சிந்திக்க வைக்கக்கூடும். நீதிமொழிகள் 1:32-ன் வார்த்தைகள் உண்மையென வேதனையோடு உணரப்படுகின்றன: “மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.”
தன் பெற்றோரை விட்டு போதை மருந்து பழக்கத்தில் சிக்கிக்கொண்ட இளம் எலிசபெத்தை சிந்தித்துப் பாருங்கள். “நான் யெகோவாவை மறந்துவிட்டேன்,” என்று அவள் சொல்கிறாள். என்றபோதிலும், நியூ யார்க் நகருக்குச் சென்றிருந்த போது, யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்தைக் கடந்து செல்ல நேரிட்டது. அதன் விளைவு? “என் மனதிலும் இருதயத்திலும் வேதனையுற்றேன்,” என்று அவள் நினைவுகூருகிறாள். “நான் என்ன செய்து விட்டேன்? என் வாழ்க்கை அழிவை நோக்கி இத்தனை வேகமாக செல்லும்படி எப்படி விட்டுவிட்டேன்?”
கெட்ட குமாரன் இறுதியில் உண்மையை எதிர்ப்பட்ட போது, தன் வீட்டுக்குச் சென்று வாழ்க்கையை சரி செய்துகொள்ள வேண்டும் என்ற தைரியமான தீர்மானத்தை எடுத்தான்! ஆனால் புண்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட அவனுடைய தகப்பன் எப்படி பிரதிபலிப்பார்? “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்,” என பதிவு பதிலளிக்கிறது. ஆம், அவன் கவனமாக முன் ஒத்திகைப் பார்த்திருந்த குற்ற அறிக்கையை அந்த இளைஞன் செய்யும் முன்பே, அவனுடைய தகப்பன் அன்பையும் மன்னிப்பையும் காண்பிக்க முன்முயற்சி எடுத்தார்!
கடவுளோடு விஷயங்களை சீராக்கிக்கொள்ளுதல்
இருப்பினும், கெட்ட குமாரன் தன் தகப்பனிடம் இவ்வாறு சொன்னான்: “பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.” இதன் பாடம்? கடவுளுடைய வழியை விட்டு விலகிச்சென்ற இளைஞர் கடவுளோடுதானே ‘விஷயங்களை சீராக்கிக்’ கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையை சீராக்கிக்கொள்ள முடியாது! (ஏசாயா 1:18, NW) இத்தகைய ஒப்புரவாகுதலை யெகோவா தேவன் கூடியகாரியமாகும்படி செய்வதற்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். இயேசுவின் உவமையில் இருக்கும் தகப்பன் யெகோவா தேவனுக்கு அடையாளமாக இருக்கிறார். மனந்திரும்பிய பாவிகளிடம் இவ்வாறு சொல்வதன் மூலம் கடவுள் இதே மன்னிக்கும் மனப்பான்மையைக் காண்பிக்கிறார்: “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்.” (மல்கியா 3:7; சங்கீதம் 103:13, 14-ஐ ஒப்பிடவும்.) பைபிள் காலங்களிலிருந்த தவறிழைத்த யூதர்களைப் போல இத்தகையவர்கள் பின்வருமாறு தீர்மானம் செய்ய வேண்டும்: “நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.”—புலம்பல் 3:40.
ஒருவர் தன்னுடைய பாவமுள்ள நடத்தையைக் கவனமாய் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று இது பொருள்படும். தவறிழைக்கும் ஒரு இளைஞன் இதை செய்தால், யெகோவா தேவனிடம் தன் பாவங்களை அறிக்கையிடும்படியாக அவன் தூண்டப்படுவான். சங்கீதக்காரன் சொன்னார்: “நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. . . . நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; . . . தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.”—சங்கீதம் 32:3-5.
அதிக வினைமையான தவறுகளில்—கருக்கலைப்பு, பாலுறவு ஒழுக்கக்கேடு, போதை மருந்து துர்ப்பிரயோகம் அல்லது குற்றச்செயல்கள் போன்றவற்றில்—ஈடுபட்டிருந்தால் என்ன செய்வது? அந்நிலையில் உள்ள ஒருவர் மன்னிப்பைப் பெற தகுதியற்றவராக உணருவார் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஜான் அவ்வாறு உணர்ந்தான். அதன் காரணமாகத் தான் அவன் இராஜ்ய மன்றத்துக்கு வெளியே அசைவற்று நின்று கொண்டிருந்தான். அப்போது ஒரு தயவுள்ள கிறிஸ்தவ மூப்பர் அவனை அணுகி, பண்டைய இஸ்ரவேலின் அரசனாகிய மனாசேவும்கூட கொலை உட்பட பல வினைமையான குற்றங்களைச் செய்திருந்த போதிலும் யெகோவா அவனை மன்னித்தார் என்று குறிப்பிட்டுக் காட்டினார். (2 நாளாகமம் 33:1-13) “அந்த மூப்பர் என் உயிரைக் காப்பாற்றினார்,” என்று ஜான் சொல்கிறான். மன்னிப்பு சாத்தியம் என்பதை அறிந்தவனாய் ஜான் இராஜ்ய மன்றத்துக்குள் சென்று உதவியைக் கேட்கும் தைரியத்தைப் பெற்றான். b
இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் உள்ள பெரும்பாலான இளைஞருக்குக் கடவுளோடு தங்கள் வாழ்க்கையை சரிசெய்து கொள்வதற்கு இதே போன்று உதவி தேவைப்படுகிறது. உள்ளூர் சபை மூப்பர்கள் இவ்விஷயத்தில் அதிக நன்மையைச் செய்யலாம். ஒரு இளைஞன் ‘வெளிப்படையாக தன் பாவங்களை அறிக்கையிடும் போது’ அவர்கள் ஒத்துணர்வோடும் புரிந்துகொள்ளுதலோடும் செவிகொடுத்துக் கேட்கக்கூடும். அவர்கள் சிட்சையையும் நடைமுறையான உதவியையும்கூட அளிக்கக்கூடும். உதாரணமாக, யாராவது ஒருவர் தேவனுடைய வாக்கியங்களின் ‘மூல உபதேசங்களை அவனுக்கு’ ஒரு வீட்டு பைபிள் படிப்பின் மூலம் ‘கற்பிக்கும்படி’ அவர்கள் ஏற்பாடு செய்யக்கூடும். தவறிழைத்தவருக்கு ஜெபம் பண்ணுவதில் பிரச்சினை இருந்தால், ஒரு மூப்பர் அவன் அல்லது அவள் சார்பாக ஜெபிக்கலாம். “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்,” என்று பைபிள் உறுதியளிக்கிறது.—யாக்கோபு 5:14-16; எபிரெயர் 5:12.
உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள்
கடவுளோடு காரியங்களைச் சரிசெய்து கொள்வது வெறுமனே ஒரு ஆரம்பமே. கெட்ட குமாரன் தன் தகப்பனிடம் மன்னிப்பு கேட்டது போல, தவறிழைத்த இளைஞர் தங்கள் பெற்றோரோடு சமரசம் செய்ய முயல வேண்டும். உண்மையான மன்னிப்புக் கோருதல், அவர்கள் அனுபவித்த வேதனையில் சிலவற்றைத் தணிக்கவும், அவர்களது ஆதரவைத் திரும்பப் பெறவும் அதிகமாய் உதவக்கூடும். வீட்டை விட்டு ஓடி பின்பு முறைகேடாகப் பிறந்த ஒரு குழந்தையுடன் திரும்பி வந்த ஒரு இளம் பெண் சொல்கிறாள்: “அம்மாவும் அப்பாவும் அபரிமிதமான அன்பை என்னிடம் காண்பித்தனர்.”
கடவுளைப் பிரியப்படுத்த விரும்பும் ஒரு இளைஞன் தொடர்ந்து ‘தன் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்த வேண்டும்.’ (எபிரெயர் 12:13) இது அவருடைய வாழ்க்கைப் பாணி, பழக்கங்கள், தோழர்கள் ஆகியவற்றை மாற்ற வேண்டியதை உட்படுத்தலாம். (சங்கீதம் 25:9; நீதிமொழிகள் 9:6) தனிப்பட்ட படிப்பை ஒழுங்காகக் கொண்டிருப்பதும் முக்கியம். முன்பு கலகக்காரியாக இருந்த ஒரு பெண் சொல்கிறாள்: “நான் தினந்தோறும் பைபிளையும் யெகோவாவின் சாட்சிகள் பிரசுரிக்கும் பைபிளை-அடிப்படையாகக் கொண்ட பிரசுரங்கள் அனைத்தையும் வாசிக்கிறேன். இரண்டாவது வாய்ப்பை எனக்குத் தந்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.”
ஜான் விஷயங்களை நன்கு தொகுத்துரைக்கிறான்: “நான் வீணாக்கிய காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கிறேன். விஷயங்கள் எப்படி இருந்திருக்கக்கூடும் என்பதைப் பற்றி நான் யோசிக்கிறேன், ஆனால் நடந்ததை மாற்றுவதற்கு வேறு எந்த வழியும் இல்லை.” தம்மை விட்டுச் சென்று பின்பு திரும்பி வரும் நபர்களை அன்போடு வரவேற்கும் இரக்கமுள்ள கடவுளை வணங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவருடைய அழைப்பை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?
a டிசம்பர் 22, 1994, ஆங்கில இதழில் உள்ள “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் என் பெற்றோருக்குக் கீழ்ப்படியவேண்டும்?” என்பதைப் பார்க்கவும்.
b ஒரு கிறிஸ்தவனாக நீங்கள் வளர்க்கப்படாவிட்டாலும், உங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் கண்டால், யெகோவாவின் சாட்சிகளுடைய இராஜ்ய மன்றத்துக்குப் போவது ஒரு நல்ல ஆரம்பப் படியாகும். ஒரு இலவச வீட்டு பைபிள் படிப்புக்காக கேளுங்கள். இவ்விதமாக நீங்கள் உங்கள் வாழ்க்கையை சரிசெய்துகொள்வதில் தனிப்பட்ட உதவியைப் பெறலாம்.
[பக்கம் 20-ன் படம்]
உங்கள் வாழ்க்கையை சரிசெய்துகொள்ள முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்கள் உங்களுக்கு உதவக்கூடும்