எமது வாசகரிடமிருந்து
தகவல் கவலை “தகவல் கவலை—உங்களை எவ்வாறு பாதிக்கிறது?” (ஜனவரி 8, 1998) என்ற தொடர் கட்டுரைக்காக நன்றி தெரிவிக்கவே இதை எழுதுகிறேன். வாசிப்பது என்றாலே எனக்கு கொள்ளைப் பிரியம். ஆனால், உலகம் முழுவதிலுமுள்ள தகவல்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று தவியாய்த் தவித்திருக்கிறேன் என்று இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது. ஒரு சமநிலையான நோக்குநிலையைக் காத்துக்கொள்ள இந்தக் கட்டுரைகள் எனக்கு உதவின.
எம். ஈ., இத்தாலி
இப்படிப்பட்ட கஷ்டமான கட்டுரைகளுக்காக உங்களைப் பாராட்ட விரும்புகிறேன். எங்களது எஜுகேஷனல் அண்ட் மீடியா டெக்னாலஜி அஸோசியேஷனின் செய்திமடல் ஒன்றில் பிரசுரிப்பதற்காக அந்த ஆரம்பக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய அனுமதி அளித்தால் நான் மிகவும் நன்றி தெரிவிப்பேன். தகவல் நெடுஞ்சாலை என அழைக்கப்படுபவை நிரம்பி வழிவதால், இப்படிப்பட்ட கட்டுரைகளின் மூலமாகவே ஒருவருக்கு நேர்மையான தகவல் கிடைக்க முடியும். அதன் மூலமாகவே இத்தகவல் சகாப்தத்தை சமாளிக்கவும் முடியும்.
ஜீ. டி., கானா
இந்தக் கட்டுரையை மறுபதிப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.—ED.
கடவுளுக்குப் பயப்படுவதா? “பைபிளின் கருத்து: அன்பான கடவுளுக்கு நீங்கள் எவ்விதம் பயப்பட முடியும்?” (ஜனவரி 8, 1998) என்ற கட்டுரை எத்தனை இனிமையாய் இருந்தது என்பதைக் கட்டாயமாய் தெரிவித்தே ஆகவேண்டும் என்று உணருகிறேன். அதே கேள்வியை கொஞ்ச நாட்களாக நான் எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு இருந்தேன். கடவுளுக்குப் பயப்படுவது என்பது, அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஓர் ஆரோக்கியமான பயத்தையுடையவராய் இருப்பதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். இருந்தாலும், இந்த விஷயத்தை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன். பிறகு அந்தக் கட்டுரையை வாசித்தேன். பார்த்தால், கடவுளுக்குப் பயப்படுவது என்றால் என்ன அர்த்தம் என்பது திருப்திகரமாக விளக்கப்பட்டிருந்தது!
எம். ஜே. டி., ஐக்கிய மாகாணங்கள்
அநீதி திருத்தப்பட்டது “ஐரோப்பிய நீதிமன்றம் திருத்திய தீர்ப்பு” (ஜனவரி 8, 1998) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. இராணுவ சேவை செய்ய வற்புறுத்தப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்துக்கு நம் சகோதரர்கள் செல்வதைப் பற்றி வாசித்தபோது, நம் சகோதரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு வீடு பிரசங்கிக்கும் உரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்ற நினைவே எனக்கு வந்தது. இந்த நல்வாய்ப்பை ஏனோதானோவென்று செய்யாதபடி இக்கட்டுரைகள் எனக்கு உதவின.
எஸ். வி., ஐக்கிய மாகாணங்கள்
இன்காக்கள் “இன்காக்கள் பொன்னா(லா)ன பேரரசை எப்படி இழந்தனர்” (ஜனவரி 8, 1998) என்ற கட்டுரையை வாசித்தேன். அழகிய படங்களுடன் விளக்கப்பட்டிருந்த, இதயத்தை உருக்கும் இப்படிப்பட்ட கதைக்காக என் மனமார்ந்த போற்றுதலை தெரிவித்தே ஆகவேண்டும். இன்காக்களின் பரம்பரையினருக்கு ஆறுதலளிக்கும் செய்தியை வெளியிட சாட்சிகளாகிய நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நிச்சயமாகவே பலனுண்டு; அவர்களுக்கு மிகுந்த ஆறுதலை அவை கொடுக்கும். உண்மையைப் பேசுவதற்காக விழித்தெழு!-விற்கு நன்றி.
எஸ். பி., நைஜீரியா
எனக்குப் பத்து வயது. இந்தக் கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்காக்கள் அமைத்த மைல்கணக்கான நீண்ட சாலையைப் பற்றி வாசித்து வாயடைத்துப் போனேன். அவர்கள் செய்தி அனுப்பிய விதமும் எனக்குப் பிடித்திருந்தது.
எஃப். கே., ஐக்கிய மாகாணங்கள்
கூட்டை விட்டு குஞ்சு பறத்தல் “கூட்டை விட்டு குஞ்சு பறக்கையில்” (ஜனவரி 22, 1998) என்ற தொடர் கட்டுரைக்காக உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என் அருமையான பிள்ளைகளுக்கு ‘குட்-பை’ சொல்வது எனக்கு வேதனையாய் இருந்திருக்கிறது; அதை நான் ஏற்றுக்கொள்வதற்கு அதிக நாட்கள் எடுக்கலாம். என்றாலும் நீங்கள் சொல்வதுதான் சரி. அதாவது, பிள்ளைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்துசென்ற வீட்டில் வசிப்பது, அந்நிலையைப் பற்றி சரியாக புரிந்துகொள்வதன் மூலமும், காலப்போக்கிலும் பழகிப்போகும். இதன் மூலம் பெற்றோராகிய நாங்கள் எங்கள் மணத்துணைகளோடு விவாக பந்தத்தை புதுப்பித்துக் கொள்ள முடியும்.
ஏ. ஈ., கனடா
என் ஜெபங்களுக்குக் கிடைத்த பதில்தான் இந்தக் கட்டுரைகள். வீட்டைவிட்டு பிள்ளைகள் செல்வது மனக்கசப்பையும் மனப்போராட்டத்தையும் உண்டாக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த நல்ல ஆலோசனையின்படி, அமைதியும் அன்பும் வெற்றிவாகை சூட முடியும்.
பி. என்., பிரான்ஸ்
இந்தக் கட்டுரைகள் எனக்கென்றே எழுதப்பட்டதாக நான் உணர்ந்தேன். சமீபத்தில் முழுநேர ஊழியருக்கான தேவை அதிகமாய் இருந்த பிராந்தியத்தில் சேவை செய்வதற்காக நான் வீட்டைவிட்டுச் சென்றேன். என் பெற்றோர் எப்படி உணருகிறார்கள் என்றும் அவர்களை விட்டுச் சென்றதால் எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வை மேற்கொள்வது எப்படி என்றும் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகள் எனக்கு உதவின. கூடுதலாக, “வளர்ந்த பிள்ளைகளுக்கு ஒரு ஆலோசனை—பிரிந்து செல்வதை எளிதாக்க பெற்றோருக்கு உதவுங்கள்” என்ற பகுதியில் கொடுக்கப்பட்டிருந்த ஆலோசனையையும் நான் பின்பற்றுவேன். நான் வெகுதொலைவில் இருந்தபோதிலும், என் பெற்றோருடன் நெருக்கமாக இருப்பதாகவே என்னால் உணர முடியும். தக்க சமயத்தில் கிடைக்கும் இப்படிப்பட்ட கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி.
ஜி. யு., இத்தாலி