எமது வாசகரிடமிருந்து
அறிவியலை நம்பலாமா? “அறிவியலை எந்தளவுக்கு நம்பலாம்?” (மார்ச் 8, 1998) என்ற தொடர்கட்டுரை தந்த எச்சரிக்கை காலத்திற்கு ஏற்றது. விஞ்ஞான சாதனைகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் குறித்து சரியான நோக்குநிலையை எனக்கு கற்றுத்தந்தது. இக்கண்டுபிடிப்புகளில் அநேகம் மனிதனுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன என்றும் அறிந்துகொண்டேன். ஆனால் அதே சமயம், அத்தொடர் கட்டுரைகள், பைபிள் ஒன்றே முழுவதும் நம்பத் தகுந்ததென வாசகர்களின் கவனத்தை அழகாக அதனிடம் திருப்பிவிட்டது.
ஏ. ஐ. பி., பிரேஸில்
அப்பாச்சி இந்தியப் பழங்குடிகளின் சரித்திரத்தை தெரிந்துகொள்வதில் நாங்கள் அதிக ஆர்வமுடையவர்களாய் இருந்தோம். இதுவரை அவர்களைப் பற்றி நிறைய புத்தகங்களையும் படித்திருக்கிறோம். “அப்பாச்சி—அவர்களுக்கு என்னவெல்லாம் நேர்ந்தது?” (மார்ச் 8, 1998) கட்டுரைக்காக எங்களது உளங்கனிந்த பாராட்டுக்கள். அக்கட்டுரை மிக தெளிவாகவும் நம்பத்தக்க சான்றுகளோடும் தயாரித்து அளிக்கப்பட்டிருந்தது.
ஜி. ஸி. மற்றும் ஆர். எஸ்., இத்தாலி
ஜாதிகள் எனக்கு வயது 12. என்னுடைய பெற்றோரில் ஒருவர் இந்தியன். நேற்றுதான் ஸ்கூலில் என்னை ஜாதிகள் பற்றி கட்டுரை எழுதி வரும்படி சொன்னார்கள். அதற்கேற்றாற்போல், “கிறிஸ்தவர்களும் ஜாதியும்” (மார்ச் 8, 1998) என்ற உங்கள் கட்டுரையை நான் இன்று பெற்றேன். நீங்கள் முழுமையாக விளக்கியதுபோல் என்னுடைய ஸ்கூல் புக்ஸும்கூட இதைப் பற்றி விளக்கம் தரவில்லை.
எஸ். எஸ். என்., ஐக்கிய மாகாணங்கள்
கவலையை சமாளித்தல் களைப்பு, கடும் சோர்வு, நரம்பு தளர்ச்சி ஆகியவற்றை சமாளிப்பதை பற்றி பிரபலமான பத்திரிகைகளில் வரும் நிறைய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஆனால், அக்கட்டுரைகள் என்னை மேலும் மேலும் குழப்பியிருக்கின்றனவே தவிர தெளிவுபடுத்தவில்லை. உண்மையிலேயே நான் ஆரோக்கியமாய் இருக்கிறேனா என்ற சந்தேகத்தைத்தான் கிளப்பிவிட்டன! கவலைகளை சமாளிக்க நீங்கள் கொடுத்திருந்த 15 ஆலோசனைகளோ எனக்கு மிகச் சிறந்த மருந்தாக இருந்தது. முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து கடைப்பிடிப்பதையே உங்கள் ஆலோசனைகள் வலியுறுத்தின. (“கவலையை சமாளிக்க முடியும்!,” மார்ச் 22, 1998) கவலையில் ஒரேயடியாக மூழ்கிவிடாமல் அதை எப்படி குறைக்கலாம் என்பதை அக்கட்டுரைகள் எளிமையாக விவரித்தன.
ஜே. பி., பொலிவியா
இந்த கட்டுரைகள் சரியான நேரத்தில் வந்தன. ஏனெனில், நான் கவலைகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நான் முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறேன். அதனால், எனக்கு இப்படிப்பட்ட பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த கட்டுரைகளை படித்தபோதோ என்னையும் அறியாமல் நான் அழுதுவிட்டேன். யெகோவா தம்முடைய ஊழியர்கள்மீது கனிவான அன்பும் அக்கறையும் உடையவர் என்பதையும் நாம் அனுபவிக்கும் துன்பங்களை புரிந்து கொள்கிறவர் என்பதையும் அறிந்து நெகிழ்ந்துபோனேன்.
டி. எம்., இத்தாலி
இப்படிப்பட்ட கட்டுரையைத்தான் நான் எதிர்பார்த்து இருந்தேன்; ஏனென்றால், நான் தடிப்புத் தோல் அழற்சியால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். யெகோவா என்னை வெறுத்து ஒதுக்கிவிட்டாரோ என்று நினைத்து குழம்பிக் கொண்டிருந்த சமயத்தில் இக்கட்டுரைகள் எனக்கு புதுத்தெம்பை அளித்தன. யெகோவா, உண்மையிலேயே என்மீது அதிக பரிவுகாட்டுகிறார் என்பதை இக்கட்டுரைகள் தத்ரூபமாக சித்தரித்துவிட்டன. கவலையை பற்றி நான் அறிய விரும்பிய எல்லா தகவல்களையும் அவர் இக்கட்டுரைகள் வாயிலாக எனக்கு தந்துவிட்டார்.
எஸ். எஸ்., பிரேஸில்
“PTSD—அசம்பாவிதமாக ஏற்பட்ட அனுபவத்தை இயல்பாய் கையாளுதல்” என்று தலைப்பிடப்பட்ட பெட்டியிலுள்ள அருமையான தகவல்களுக்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். என் குழந்தை பருவம் வேதனை நிறைந்தது. பழைய நினைவுகள் இன்னும் என் மனதிலிருந்து நீங்காமல் இருக்கிற போதிலும், அக்கட்டுரைகள் எனக்கு ஆறுதலைத் தந்தன.
ஆர். என்., ஐக்கிய மாகாணங்கள்
கவலை பற்றிய கட்டுரைகள் மிகவும் அறிவூட்டுபவையாக உணர்ந்தேன். சாத்தானிடமிருந்து வரும் தொல்லைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போவதால், விசுவாசம் என்னும் நங்கூரத்தை பலப்படுத்த இப்படிப்பட்ட தகவல்கள் மிகவும் அவசியம். எங்களுடைய பிரச்சினைகளுக்கு நீங்கள் இந்தளவு கவனம் செலுத்துவது என்னை மகிழ்ச்சியின் சிகரத்திற்கு தூக்கி சென்றது. கவலைகளை சமாளிக்கும் உத்திகளை கொடுத்து உங்களுடைய மெய்யான அன்பை நிரூபித்துவிட்டீர்கள்.
வி. டி., ஃபிஜி