பைபிளின் கருத்து
கடவுள் பார்வையில் நீங்கள் மிக அருமையானவர்கள்!
“நான் எதுக்குமே உதவாதவள் என்கிற எண்ணம்தான் எப்பவுமே என் மனசை அரிக்கும். யெகோவா தேவன் மேல நான் எவ்வளவுதான் அன்பு வச்சிருந்தாலும்சரி அல்லது அவருக்கு எவ்வளவுதான் ஊழியம் செஞ்சாலும்சரி, அப்படி ஒண்ணும் பெரிசா எதுவும் செய்யலேன்னுதான் எப்பவுமே நெனப்பேன்” என்று திருமணமான ஒரு கிறிஸ்தவப் பெண் எழுதினார்.
தான் ஒன்றுக்குமே உதவாதவர் அல்லது தகுதியில்லாதவர் என்ற எண்ணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் எவரையாவது உங்களுக்கு தெரியுமா? அல்லது நீங்களே அவ்விதமாக எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கடவுளுடைய உண்மையுள்ள வணக்கத்தாரும் இப்படிப்பட்ட உணர்ச்சிகளால் அல்லாடுவது சகஜமே. ‘கொடிய காலங்களில்’ வாழ்வதனுடைய விளைவுகளால் பாதிக்கப்படாதவர் எவருமே இல்லை. “கடைசிநாட்களில்” பரவலாக இருக்கும் பண்புகளால்—‘இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும்’ இருக்கும் ஆட்களால்—அநேகர் புறக்கணிக்கப்பட்டும் மோசம்போக்கப்பட்டும் இருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1-5) உணர்ச்சி ரீதியான தழும்புகளையும் எதற்குமே தகுதியில்லை என்ற எண்ணத்தையும்தான் இப்படிப்பட்ட வேதனைமிக்க அனுபவங்கள் வளர்க்கின்றன.
சிலர் எட்டாத பழத்திற்கு கொட்டாவி விடுபவர்களாக மலை போன்ற இலக்குகளை வைத்திருக்கின்றனர். இதை அடைய முடியாததே அவர்களின் நம்பிக்கையற்ற மனநிலைக்கு காரணம். அதனால், எப்பொழுதும் எதிலுமே தாங்கள் தோல்வியைத்தான் தழுவுவோம் என்ற எண்ணம்தான் அவர்களுக்குள் வலுப்படுகிறது. காரணம் எதுவாயிருந்தாலும்சரி, இப்படிப்பட்ட உணர்ச்சி போராட்டத்தில் இருப்பவர்களால் கடவுள் அல்லது யாருமே தங்கள்மேல் அன்புகாட்டுவதை ஏற்றுக்கொள்வது கடினமாய் இருக்கிறது. தங்கள் மேல் யாராலுமே அன்பு காட்ட முடியாது என்பதாக அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால், யெகோவா தேவனோ அப்படி நினைப்பதில்லையே! யெகோவா, தம்முடைய வார்த்தையில், அவருடைய எதிரி, பிசாசாகிய சாத்தானுடைய “வஞ்சகமான தந்திரங்களைக்” குறித்து ஜாக்கிரதையாய் இருக்கும்படி எச்சரிக்கிறார். (எபேசியர் 6:11, ஜூயிஷ் நியூ டெஸ்டமண்ட்) நம்முடைய கடவுளை வணங்குவதில் இருந்து நம்மை தடுக்க, சாத்தான் தன்னுடைய வஞ்சகமான தந்திரங்களை பயன்படுத்துகிறான். அதற்கு ஒரு வழி, நாம் எதற்கும் உதவாதவர்கள் என்றும் யெகோவா ஒருபோதும் நம்மை நேசிக்கமாட்டார் என்ற எண்ணத்தையும் தூண்டிவிடுவதே. ஆனால், சாத்தான் “ஒரு பொய்யன்”—உண்மையில், அவன் “பொய்க்குப் பிதா.” (யோவான் 8:44) எனவே, நாம் சாத்தானுடைய வஞ்சகமான தந்திரங்களில் விழுந்துவிடக்கூடாது. கடவுளுடைய பார்வையில் நாம் மதிப்புவாய்ந்தவர்கள் என்ற உறுதியை பைபிளில் யெகோவாவே நமக்குக் கொடுக்கிறார்.
நம் தகுதி பற்றிய சமநிலையான கருத்து
சோர்வு, தீமையான விளைவுகளை உடையது. இதைக் குறித்துத்தான் பைபிளும் எச்சரிக்கிறது. “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்று நீதிமொழிகள் 24:10 குறிப்பிடுகிறது. தொடர்ந்து நம்பிக்கையற்ற மனநிலையை வளர்த்தால், நம்முடைய பலத்தையெல்லாம் அது உறிஞ்சிவிடும். பின்பு நம்மை பலவீனமாக்கி ஆபத்துக்குள்ளாக்கிவிடும். இதை சாத்தான் நன்கு அறிந்து வைத்திருக்கிறான் என்பது உறுதி. முதலாவதாக, நான் எதற்குமே பிரயோஜனமில்லாதவன்(ள்) என்ற உணர்வுகள் நம் இருதயத்தில் இருந்தால் அதை சமாளிப்பதே கடினம். இதோடு சேர்ந்து, இந்த எண்ணங்களை சாத்தான் தனக்கு சாதகமாக்கிக்கொள்ள முயற்சிக்கும்போது, அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
எனவே, நம்முடைய தகுதியைப் பற்றி நல்லவிதமான, சமநிலையான கருத்தை உடையவர்களாய் இருப்பது முக்கியம். ‘உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்’ என அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுறுத்துகிறார். (ரோமர் 12:3) இந்த வார்த்தைகளை மற்றொரு மொழிபெயர்ப்பு பின்வருமாறு குறிப்பிடுகிறது: “அவனவன் தன்னுடைய உண்மையான மதிப்புக்கும் மிஞ்சி எண்ணாமல், தன்னைக் குறித்து மட்டாக எண்ணும்படி உங்கள் ஒவ்வொருவனுக்கும் நான் சொல்கிறேன்.” (சார்ல்ஸ் பி. வில்லியம்ஸ்) எனவே, நம்மைப் பற்றி சமநிலையான எண்ணத்தைக் கொண்டிருக்கும்படி பைபிள் உற்சாகப்படுத்துகிறது. ஒரு பக்கத்தில் அகம்பாவத்திற்கு எதிராக நம்மைக் காத்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் மறுபக்கத்தில், மிகவும் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் படுகுழியில் விழாமல் இருக்கவும் முயற்சி செய்யவேண்டும். ஒருவர் தெளிந்த எண்ணம் உடையவராய் இருக்கவேண்டுமென்றால் தன்னைப் பற்றி கொஞ்சமாவது மதிப்புடையவராய் இருப்பது அவசியம் என்று பவுல் இங்கு அர்த்தப்படுத்துகிறார். ஆம், நாம் ஒவ்வொருவரும் யெகோவாவின் பார்வையில் மதிப்புவாய்ந்தவர்களாக இருக்கிறோம் என்பதை பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதிய பவுலின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.
சமநிலையான, சுயமதிப்பு உடையவர்களாய் இருக்கவேண்டும். இதைத்தான், “உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்ற இயேசுவின் வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றன. (மத்தேயு 22:39) ஓரளவு சுயமதிப்பு அல்லது சுயமரியாதை உடையவர்களாய் நாம் இருக்கவேண்டும் என்பதையே “உன்னிடத்தில் . . . போல் ” என்ற வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றன. நம்மிடத்தில் குற்றங்குறைகள் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால், நம்முடைய குற்றங்களுக்காக வருந்தி, கடவுளிடம் மன்னிப்புக்காக நாடி, அவருக்குப் பிரியமாய் நடக்க கடும்முயற்சி எடுக்கும்போது, நாம் ஓரளவு சுயமதிப்பு உடையவர்களாய் இருக்கலாம். குறைகாணும் நம்முடைய இருதயங்கள் இதற்கு எதிர்மாறாக நம்மைக் குற்றவாளிகளாகக் குத்திக்காட்டினாலும், “தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராய்” இருக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். (1 யோவான் 3:20) இன்னொரு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், நாம் நம்மைப் பார்க்கும் கோணத்தில் இருந்து முற்றிலும் வித்தியாசமான விதத்தில் யெகோவா நம்மைப் பார்க்கிறார்.
நொறுங்குண்ட இருதயங்களும் நருங்குண்ட ஆவியும்
“நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் [“யெகோவா,” NW] சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” என சங்கீதக்காரனாகிய தாவீது எழுதினார். (சங்கீதம் 34:18) இந்த வசனத்தைப் பற்றி விளக்குகையில், முழு பைபிளின்பேரில் மாத்யூ ஹென்றியின் விளக்கவுரை என்ற ஆங்கில நூல் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது: “நீதிமானின் குணம் . . . நொறுங்குண்ட இருதயமும் நருங்குண்ட ஆவியும், அதாவது, பாவத்திற்காக வருந்தும் மனமும் சுய-மதிப்பற்ற எண்ணமுமே; தங்களைப் பற்றியே தாழ்வாகவும் தங்களுடைய தகுதியிலேயே நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றனர்.”
“நொறுங்குண்ட இருதயம்” அல்லது “நறுங்குண்ட ஆவி” உடையவர்கள், யெகோவா தங்களைவிட்டு வெகு தூரத்தில் இருப்பதாக ஒருவேளை நினைக்கலாம். யெகோவா அக்கறை காண்பிக்குமளவுக்கு தாங்கள் ஒன்றும் அந்தளவு முக்கியமானவர்களல்ல, வெகு அற்பமானவர்கள் என்றும் நினைக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. “தங்களைப் பற்றியே தாழ்வாக எண்ணுபவர்களை” யெகோவா கைவிடுவதில்லை என்று தாவீதின் வார்த்தைகள் நமக்கு உறுதியளிக்கின்றன. அப்படிப்பட்ட சமயங்களில்தான் எப்போதையும்விட அதிகமாக அவருடைய அன்பு நமக்கு தேவை என்பதை நம்முடைய இரக்கமுள்ள கடவுள் அறிந்திருக்கிறார். அவர் நம் அருகில் இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் நடந்த ஓர் உதாரணத்தை கவனியுங்கள். ஒரு தாய், கடும் இருமலோடுகூடிய காற்றுக்குழல் அழற்சியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தன்னுடைய இரண்டு வயது மகனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார். அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவனை அட்மிட் பண்ணவேண்டும் என்றார்கள். அதனால், அன்று இரவு ஆஸ்பத்திரியில் மகனோடு தங்க வேண்டியதாயிற்று. அந்த இரவை எப்படிக் கழித்தார்? அவருடைய மகனின் படுக்கைக்கு பக்கத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே. ஆம், வியாதியாய் இருந்த மகனைக் கண்மணியைப் போல் கருத்தாய் கவனித்துக் கொண்டு அவனுக்கருகிலேயே அவரும் இருந்தார். கடவுளுடைய சாயலிலேயே படைக்கப்பட்டிருக்கிற நாம் இதைவிட அதிகத்தை நம்முடைய அன்பான பரலோகத் தகப்பனிடம் இருந்து நிச்சயமாகவே எதிர்பார்க்கலாம்! (ஆதியாகமம் 1:26; ஏசாயா 49:15) நாம் “நொறுங்குண்ட இருதயத்தோடு” இருக்கும்போது, அன்புள்ள தகப்பனாக, யெகோவா “சமீபமாய்” இருந்து—நம்மை கருத்தாய் கவனித்து, உதவ தயாராய் இருக்கிறார் என சங்கீதம் 34:18-ன் உருக்கமான வார்த்தைகள் நமக்கு உறுதியளிக்கின்றன.—சங்கீதம் 147:1, 3.
“குருவிகள் பலவற்றினும் நீங்கள் மேலானவர்கள்”
இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது, யெகோவாவின் அநேக எண்ணங்களையும் சிந்தனைகளையும் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தினார். குறிப்பாக, அவருடைய பூமிக்குரிய ஊழியர்களைப் பற்றி யெகோவா எப்படி கருதுகிறார் என்பதை இயேசு வெளிப்படுத்தினார். யெகோவாவின் பார்வையில் தம்முடைய சீஷர்கள் அருமையானவர்கள் என்பதை இயேசு பலமுறை உறுதிப்படுத்தினார்.—மத்தேயு 6:26; 12:12.
உதாரணமாக, சீஷர்கள் ஒவ்வொருவருமே அருமையானவர்கள் என்பதை விளக்க, இயேசு பின்வருமாறு கூறினார்: “[ஒரு] காசுக்கு இரண்டு குருவி விற்பதில்லையா? எனினும், அவற்றில் ஒன்றுகூட உங்கள் தந்தையால் அன்றி, நிலத்தில் விழாது. உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது. எனவே, அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றினும் நீங்கள் மேலானவர்கள்.” (மத்தேயு 10:29-31, தமிழ் கத்தோலிக்க பைபிள்) இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்களுக்கு அவை எந்தளவு புத்துணர்வு அளித்திருக்கும் என்பதை சிந்தியுங்கள்.
உணவுக்காக பயன்படுத்தப்பட்ட பறவைகளிலேயே குருவிதான் மிகமிக மலிவானது. இந்த சிறு பறவைகளின் இறகுகள் பறிக்கப்பட்டு, மரக்குச்சிகளில் சொருகி, கபாப் போல வறுக்கப்பட்டன. சந்தைக்கு வரும் ஏழைப் பெண்கள், எத்தனை குருவிகள் வாங்க முடியுமென தங்களிடம் இருக்கும் காசை எண்ணிப்பார்த்துக் கொண்டிருப்பதை இயேசு நிச்சயம் கவனித்திருந்திருப்பார். அந்தப் பறவைகள் அற்பமாக கருதப்பட்டன. மிகக் குறைந்த மதிப்புடைய ஒரு காசுக்கு (ஒரு அசாரியன் காசின் மதிப்பு ஐந்து சென்டுகளுக்கும் குறைவானது) ஒருவர் இரண்டு குருவிகள் வாங்க முடியும்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இயேசு மறுபடியும் இதே உதாரணத்தை சொல்லுகிறார், இப்பொழுதோ கொஞ்சம் வித்தியாசமாக. லூக்கா 12:6-ன்படி, “இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?” என இயேசு கேட்டார். இதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மிகக் குறைந்த மதிப்புடைய ஒரு காசுக்கு இரண்டு குருவிகளை ஒருவர் வாங்கினார். ஆனால், இரண்டு காசுகள் அவரிடம் இருந்தால், அவர் நான்கல்ல ஐந்து குருவிகளை வாங்கமுடியும். இந்த பேரத்தில், ஐந்தாவது பறவைக்கு கொஞ்சமும் மதிப்பே இல்லாமல் இலவசமாக கொடுக்கப்பட்டதுபோல் இருந்தது. ஆனாலும், “அவற்றில் ஒன்றும் [அந்த பேரத்தில் மதிப்பே இல்லாமல் கொடுக்கப்பட்ட அந்த குருவியையும் சேர்த்து] கடவுள் முன்னிலையில் மறக்கப்படுவதில்லையே!” என்று இயேசு சொன்னார். அந்த உதாரணத்தின் அர்த்தத்தை விளக்கும்வகையில், “குருவிகள் பலவற்றினும் நீங்கள் மேலானவர்கள்” என்று சொல்லி இயேசு முடித்தார். (லூக்கா 12:7) இதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த வார்த்தைகள் எவ்வளவு உற்சாகத்தை அளித்திருக்கும்!
இயேசுவின் புத்துணர்வளிக்கும் இந்த உதாரணத்தின் பொருளை புரிந்துகொண்டீர்களா? மிக மலிவான சிறு பறவைகளைக்கூட யெகோவா மதிப்புடையதாக கருதுகிறாரென்றால், அவருடைய பூமிக்குரிய ஊழியர்கள் அவருக்கு எந்தளவு அருமையானவர்கள்! யெகோவாவைப் பொறுத்தமட்டில், நாம் யாருமே கடலில் கரைத்த பெருங்காயம் போன்றவர்களல்ல. நாம் ஒவ்வொருவருமே யெகோவாவின் பார்வையில் அருமையானவர்கள். நம்மைப் பற்றி மிகச்சிறிய தகவலையும் அவர் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். நம் தலைமயிர் ஒவ்வொன்றும் எண்ணப்பட்டிருக்கிறது.
யெகோவாவின் சேவையில் இருந்து நம்மை தடுக்க, சாத்தான், தன்னுடைய “வஞ்சகமான தந்திரங்களை”—எதற்கும் உதவாதவர் என்ற எண்ணங்களை தூண்டிவிடுவது போன்ற உபாயங்களை—தொடர்ந்து பயன்படுத்துவான். ஆனால், சாத்தான் ஜெயிக்க இடங்கொடுத்து விடாதீர்கள்! இக்கட்டுரையில் குறிப்பிட்ட கிறிஸ்தவப் பெண்ணின் உதாரணத்தை நினைவில் வையுங்கள். காவற்கோபுர பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை அவருக்கு மிகவும் உதவியது. நம்முடைய உணர்ச்சிகள a தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயலும் சாத்தானின் தந்திரங்களைக் குறித்து அந்தக் கட்டுரை எச்சரித்தது. “என்னுடைய உணர்ச்சிகளாலேயே நான் சோர்வடைய எனக்கு எதிராக சாத்தான் முயற்சி செய்கிறான் என்பதை நான் புரிந்துகொள்ளாமல் இருந்தேன். ஆனால், இதை தெரிந்துகொண்டதுதான், இப்படிப்பட்ட உணர்ச்சிகளை எதிர்த்துப் போராட எனக்கு ஊக்கமளித்திருக்கிறது. இப்பொழுது நான் சாத்தானின் தாக்குதல்களை நம்பிக்கையோடு தைரியமாக எதிர்த்து போராட முடியும்” என அவர் கூறுகிறார்.
யெகோவா “சகலத்தையும் அறிந்திருக்கிறார்.” (1 யோவான் 3:20) ஆம், நாம் இப்பொழுது என்னவெல்லாம் சகித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நம்முடைய சுயமதிப்பை குலைத்த கடந்தகால நிகழ்ச்சிகளையும் அவர் அறிந்திருக்கிறார். ஆனால் நினைவில் வைக்கவேண்டியது: நம்மைப் பற்றி யெகோவாவின் கருத்தைத்தான் கணக்கில் எடுக்கவேண்டும்! அன்புக்கு அருகதையற்றவர்கள் அல்லது எதற்குமே உதவாதவர்கள் என்று நாம் நினைத்தாலும், யெகோவாவுடைய ஊழியர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு அருமையானவர்கள் என்று உறுதியளிக்கிறார். நாம் யெகோவாவை முழுமையாக நம்பலாம். ஏனென்றால், அவர் சாத்தானை போன்றவரல்ல. கடவுள் “பொய்யுரையாதவர்.”—தீத்து 1:3.
[அடிக்குறிப்புகள்]
a ஏப்ரல் 1, 1995 காவற்கோபுர இதழில் பக்கங்கள் 10-15-ல் உள்ள “கடவுளின் பார்வையில் நீங்கள் அருமையானவர்கள்!” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
இருதயத்தில் நொறுங்குண்டவர்களுக்கு, அன்பான தகப்பனைப் போல யெகோவா அருகில் இருக்கிறார்
[பக்கம் 13-ன் படம்]
சின்னஞ்சிறு குருவியையே மறக்காத யெகோவா, உங்களை மறப்பாரா?
[படத்திற்கான நன்றி]
Lydekker
Illustrated Natural History