அதிகாரம் 24
எதுவுமே ‘கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது’
1. உண்மைக் கிறிஸ்தவர்கள் சிலர் உட்பட, அநேகரை வாட்டும் எண்ணம் என்ன?
யெகோவா தேவன் உங்கள் மீது அன்பு காட்டுகிறாரா? யோவான் 3:16 சொல்கிறபடி கடவுள் பொதுப்படையில் மனிதவர்க்கத்தின்மீது அன்பு காட்டுகிறார் என்பதை சிலர் ஆமோதிக்கிறார்கள். ஆனால், ‘என்னை கடவுள் ஒருபோதும் நேசிக்க மாட்டார்’ என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும்கூட இது சம்பந்தமாக அவ்வப்பொழுது சந்தேகங்கள் எழலாம். ஊக்கமிழந்த ஒருவர் இவ்வாறு கூறினார்: “கடவுளுக்கு என்மீது அக்கறை இருக்கிறது என்பதை என்னால் துளிகூட நம்ப முடியவில்லை.” சிலசமயங்களில் இப்படிப்பட்ட சந்தேகங்கள் உங்களையும் வாட்டுகின்றனவா?
2, 3. யெகோவாவின் பார்வையில் லாயக்கற்றவர்கள் அல்லது அன்பைப் பெற தகுதியற்றவர்கள் என நம்மை நினைக்க வைக்க விரும்புவது யார், அந்த எண்ணத்தை நாம் எவ்வாறு முறியடிக்கலாம்?
2 யெகோவா தேவன் நம்மை நேசிப்பதுமில்லை, உயர்வாக மதிப்பதுமில்லை என நம்மை நினைக்க வைக்கவே சாத்தான் ஆர்வமாக முயலுகிறான். மக்கள் தங்களைக் குறித்து பெருமைப்படும்படி செய்வதன் மூலம் சாத்தான் பெரும்பாலும் அவர்களை மோசம் போக்குகிறான் என்பது உண்மைதான். (2 கொரிந்தியர் 11:3) ஆனால் பலவீனமானவர்களுடைய சுயமரியாதையை சுக்குநூறாக்குவதிலும் அவன் இன்பம் கொள்கிறான். (யோவான் 7:47-49; 8:13, 44) முக்கியமாக படுமோசமான இந்தக் “கடைசி நாட்களில்” அவன் இப்படி செய்கிறான். இன்று அநேகர் “பந்தபாசம் இல்லாத” குடும்பங்களில் வளர்ந்து வருகிறார்கள். மற்றவர்களோ கொடூரமானவர்களையே சுயநலமும் தலைக்கனமும் பிடித்தவர்களையே சதா எதிர்ப்படுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5) அவர்கள் கொடுமைக்கோ இனவெறிக்கோ பகைமைக்கோ வருடக்கணக்காக ஆளாகியிருக்கலாம்; இதன் காரணமாக தாங்கள் லாயக்கற்றவர்கள் அல்லது அன்பைப் பெற தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.
3 இத்தகைய சோர்வூட்டும் உணர்ச்சிகள் உங்களுக்கு ஏற்பட்டால், நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நம்மில் பலர் நம்மையே அவ்வப்பொழுது கண்டனம் செய்துகொள்கிறோம். ஆனால், கடவுளுடைய வார்த்தை “காரியங்களைச் சரிசெய்வதற்கும்” ‘ஆழமாக வேரூன்றியவற்றைத் தகர்த்தெறிவதற்கும்’ உதவும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். (2 தீமோத்தேயு 3:16; 2 கொரிந்தியர் 10:4) பைபிள் இவ்வாறு கூறுகிறது: “எந்தக் காரணத்துக்காவது நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யும்போது, கடவுள் நம்மைக் கண்டனம் செய்வதில்லை என்று நம் இதயத்துக்கு உறுதி அளித்துக்கொள்ளலாம். ஏனென்றால், கடவுள் நம் இதயத்தைவிட உயர்ந்தவராக இருக்கிறார், எல்லாவற்றையும் தெரிந்தவராகவும் இருக்கிறார்.” (1 யோவான் 3:19, 20) யெகோவாவின் அன்பு நமக்கு இருக்கிறது என ‘நம் இதயத்துக்கு உறுதி அளித்துக்கொள்வதற்கு’ பைபிள் நான்கு வழிகளில் நமக்கு உதவுகிறது. அவற்றை இப்போது ஆராயலாம்.
யெகோவா உங்களை உயர்வாக மதிக்கிறார்
4, 5. யெகோவாவின் பார்வையில் நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதை சிட்டுக்குருவிகளைப் பற்றிய இயேசுவின் உதாரணம் எவ்வாறு காட்டுகிறது?
4 முதலாவதாக, கடவுள் தம்முடைய ஊழியர்கள் ஒவ்வொருவரையும் மதிப்புமிக்கவர்களாக கருதுகிறார் என பைபிள் நேரடியாக சொல்கிறது. உதாரணமாக, இயேசு இவ்வாறு கூறினார்: “குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள்தானே? ஆனால், அவற்றில் ஒன்றுகூட உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியாமல் தரையில் விழுவதில்லை. உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. அதனால், பயப்படாதீர்கள்; சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்.” (மத்தேயு 10:29-31) முதல் நூற்றாண்டில் இயேசுவின் போதனைகளை செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்தியது என்பதை கவனியுங்கள்.
5 சிட்டுக்குருவியைப் போய் யார் வாங்குவார் என நாம் யோசிக்கலாம். ஆனால் இயேசுவின் காலத்தில், சிட்டுக்குருவியே உணவுக்காக விற்கப்பட்ட பறவைகளில் மிகவும் விலை குறைவானது. சொற்ப மதிப்புள்ள ஒரு காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்கப்பட்டதைக் கவனியுங்கள். ஆனால் ஒருவர் இரண்டு காசுக்கு வாங்கினால், நான்கு அல்ல, ஐந்து சிட்டுக்குருவிகள் அவருக்கு கிடைத்தது என இயேசு குறிப்பிட்டார். அந்த ஐந்தாவது குருவி, ஏதோ மதிப்பே இல்லாததுபோல சேர்த்துக் கொடுக்கப்பட்டது. ஒருவேளை மனிதருடைய பார்வையில் இப்படிப்பட்ட உயிரினங்கள் அற்பமாக இருந்திருக்கலாம், ஆனால் படைப்பாளர் அவற்றை எவ்வாறு கருதினார்? “அவற்றில் ஒன்றைக்கூட [சேர்த்துக் கொடுக்கப்பட்ட ஒன்றைக்கூட] கடவுள் மறப்பதில்லை” என்று இயேசு கூறினார். (லூக்கா 12:6, 7) இப்பொழுது இயேசுவின் குறிப்பு நமக்கு நன்றாக புரியலாம். ஒரேவொரு சிட்டுக்குருவி மீது யெகோவா இவ்வளவு மதிப்பு வைத்தால், ஒரு மனிதன்மீது எவ்வளவு மதிப்பு வைத்திருப்பார்! இயேசு விளக்கியபடி, நம்மைப் பற்றிய எல்லா விவரங்களும் யெகோவாவுக்குத் தெரியும். ஏன், நம்முடைய தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறதே!
6. நம் தலைமுடி எண்ணப்பட்டிருப்பது எதார்த்தமா?
6 நம்முடைய தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது என்று இயேசு சொன்னதில் எதார்த்தம் இல்லை என சிலர் நினைக்கலாம். ஆனால் உயிர்த்தெழுதலை பற்றி எண்ணிப் பாருங்கள். நம்மை மீண்டும் படைப்பதற்கு யெகோவா எந்தளவுக்கு நம்மைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்! அவர் நம்மை உயர்வாக மதிப்பதால், நம்முடைய மரபியல் தொகுப்பு, நம் நினைவுகள், அனுபவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்.a இதை வைத்துப் பார்க்கும்போது சராசரி மனிதனுடைய தலை முடியை, அதாவது சுமார் 1,00,000 தலை முடியை, எண்ணுவது அவருக்கு சர்வசாதாரணம்.
யெகோவா நம்மிலுள்ள எதை மதிக்கிறார்?
7, 8. (அ) மனித உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கையில் யெகோவா பார்த்து சந்தோஷப்படுகிற சில குணங்கள் யாவை? (ஆ) யெகோவா உயர்வாக மதிக்கிற செயல்கள் சில யாவை?
7 இரண்டாவதாக, யெகோவா நம்முடைய நல்ல குணங்களையும், நாம் எடுக்கும் முயற்சிகளையும் பார்த்து மகிழ்கிறார். “யெகோவா எல்லாருடைய இதயத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார். மனதில் இருக்கிற ஒவ்வொரு யோசனையையும் நோக்கத்தையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்” என்று தாவீது ராஜா தன் மகன் சாலொமோனிடம் கூறினார். (1 நாளாகமம் 28:9) வன்முறையும் பகைமையும் நிறைந்த இந்த உலகில் கோடிக்கணக்கான மனித உள்ளங்களை கடவுள் ஆராய்கையில், சமாதானத்தையும் சத்தியத்தையும் நீதியையும் நேசிக்கும் உள்ளத்தை அவர் காணும்போது எவ்வளவு சந்தோஷப்படுவார்! தம்மீது அன்பு பொங்கி வழியும் உள்ளத்தை, தம்மைப் பற்றிய அறிவை நாடி அந்த அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள துடிக்கிற உள்ளத்தை கடவுள் பார்க்கையில் என்ன செய்கிறார்? தம்மைப் பற்றி மற்றவர்களிடம் பேசுகிறவர்களைக் கவனிப்பதாக யெகோவா கூறுகிறார். தனக்கு ‘பயந்து நடந்து, தன்னுடைய பெயரை எப்போதும் நினைக்கிறவர்களுக்காக ஒரு நினைவுப் புத்தகத்தையும்’ அவர் வைத்திருக்கிறார். (மல்கியா 3:16) இப்படிப்பட்ட குணங்கள் அவருக்கு அருமையானவை.
8 யெகோவா உயர்வாக மதிக்கிற நல்ல செயல்கள் சில யாவை? இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளை மதிக்கிறார். (1 பேதுரு 2:21) பிரசங்க வேலையையும் கடவுள் உயர்வாக மதிக்கிறார். ரோமர் 10:15-ல் இவ்வாறு வாசிக்கிறோம்: “நல்ல விஷயங்களை நல்ல செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!” பொதுவாக, நம் பாதங்கள் ‘அழகானவை’ என நினைக்காதிருக்கலாம். ஆனால் இங்கே அவை, நல்ல செய்தியை அறிவிப்பதற்கு யெகோவாவின் ஊழியர்கள் எடுக்கும் முயற்சிகளைக் குறிக்கின்றன. இத்தகைய முயற்சிகள் அவருடைய பார்வையில் அழகானவை, மதிப்புமிக்கவை.—மத்தேயு 24:14; 28:19, 20.
9, 10. (அ) நம்முடைய சகிப்புத்தன்மையை யெகோவா உயர்வாக மதிக்கிறாரா? விளக்கவும். (ஆ) தம் ஊழியர்களை யெகோவா எவ்வாறு தவறாக எடைபோடுவதில்லை?
9 யெகோவா நமது சகிப்புத்தன்மையையும் உயர்வாக மதிக்கிறார். (மத்தேயு 24:13) நீங்கள் யெகோவாவை புறக்கணிக்க வேண்டும் என்றே சாத்தான் விரும்புகிறான். யெகோவாவுக்கு நீங்கள் உண்மையோடு நிலைத்து நிற்கும் ஒவ்வொரு நாளும், சாத்தானுடைய பழிப்பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்கிறீர்கள். (நீதிமொழிகள் 27:11) சிலசமயங்களில் சகிப்புத்தன்மையோடு இருப்பது எளிய காரியம் அல்ல. உடல்நலப் பிரச்சினை, பண நெருக்கடி, உணர்ச்சிப்பூர்வ வேதனை, பிற தடைகள் போன்றவை ஒவ்வொரு நாளையும் சோதனைமிக்க நாளாக்கலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போகையிலும் மனம் சோர்வடையலாம். (நீதிமொழிகள் 13:12) இவற்றின் மத்தியிலும் சகிப்புத்தன்மையோடு இருப்பது யெகோவாவுக்கு அதிக அருமையானது. அதனால்தான் தன்னுடைய கண்ணீரை “தோல் பையில்” பாதுகாத்து வைக்கும்படி யெகோவாவிடம் தாவீது ராஜா கேட்டார்; “நீங்கள் அவற்றையெல்லாம் எண்ணி உங்களுடைய புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறீர்களே!” என்றும் கூறினார். (சங்கீதம் 56:8) ஆம், நாம் யெகோவாவுக்கு எப்போதும் பற்றுமாறாமல் இருக்கும்போது நாம் சகிக்கும் எல்லா வேதனையையும் கண்ணீரையும் யெகோவா பொக்கிஷமாக கருதுகிறார், அவற்றை நினைவுகூருகிறார். இவையும் அவருடைய பார்வையில் அருமையானவையே.
சோதனைகள் மத்தியிலும் சகிப்புத் தன்மையோடு இருப்பதை யெகோவா உயர்வாக மதிக்கிறார்
10 நம் இதயமே நம்மை கண்டனம் செய்து, கடவுளுடைய பார்வையில் நாம் உயர்வாக மதிக்கப்படுகிறோம் என்ற அத்தாட்சியை மறுக்கலாம். ‘என்னைவிட நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க பக்கத்துல என்னை வச்சுப் பாக்கும்போது யெகோவாவுக்கு எவ்வளவு ஏமாற்றமா இருக்கும்!’ என நம் இதயம் ஓயாமல் புலம்பலாம். ஆனால் யெகோவா யாரையும் யாருடனும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை; அவர் மிகக் கறாரான, கண்டிப்பான விதத்தில் நம்மை எடை போடுவதில்லை. (கலாத்தியர் 6:4) நம் இதயத்தை நுணுக்கமாக ஆராய்கிறார், நன்மையானவற்றை—அவை மிகச் சிறியவையாக இருந்தாலும்கூட—உயர்வாக மதிக்கிறார்.
யெகோவா தீமையிலிருந்து நன்மையை சலித்தெடுக்கிறார்
11. அபியாவின் விஷயத்தில் யெகோவா நடந்துகொண்ட விதத்திலிருந்து அவரைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 மூன்றாவதாக, யெகோவா நம்மை ஆராய்கையில், நன்மையானவற்றை கவனமாக சலித்தெடுக்கிறார். ராஜாவாகிய யெரொபெயாமின் விசுவாசதுரோக வம்சத்தார் அனைவரையும் அழிக்க யெகோவா ஆணையிட்டபோது, அந்த ராஜாவுடைய மகன்களில் ஒருவனாகிய அபியாவை நல்லடக்கம் செய்யும்படி கட்டளையிட்டார். ‘அவனிடம் யெகோவா ஏதோவொரு நல்ல காரியத்தைப் பார்த்தார்.’ (1 ராஜாக்கள் 14:1, 10-13) அந்த இளம் மனிதனுடைய இதயத்தை யெகோவா சலித்துப் பார்த்து, ‘நல்ல காரியம்’ இருப்பதைக் கண்டார். அந்த நல்ல காரியம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், யெகோவா அதை மதிப்புமிக்கதாக கருதி பைபிளில் பதிவு செய்து வைத்தார். அவனுக்கு சரியான அளவு இரக்கம் காட்டுவதன் மூலம் அவனிடம் கண்ட நல்ல காரியத்துக்கு பலன் தந்தார்.
12, 13. (அ) நாம் பாவம் செய்கிறபோதிலும் நம்மிடத்திலுள்ள நல்ல குணங்களையே யெகோவா பார்க்கிறார் என்பதை ராஜாவாகிய யோசபாத்தின் விஷயம் எப்படி காட்டுகிறது? (ஆ) நம்முடைய நல்ல செயல்கள், நல்ல குணங்கள் சம்பந்தமாக யெகோவா எவ்வாறு பாசமுள்ள பெற்றோரைப் போல் நடந்துகொள்கிறார்?
12 நல்ல ராஜாவாகிய யோசபாத் விஷயத்தில் இன்னும் சிறந்த உதாரணத்தைக் காணலாம். இந்த ராஜா முட்டாள்தனமாக நடந்துகொண்டபோது, “இதனால் யெகோவா உங்கள்மேல் பயங்கர கோபமாக இருக்கிறார்” என யெகோவாவின் தீர்க்கதரிசி அவனிடம் கூறினார். சிந்திக்க வைக்கும் கருத்து! ஆனால் யெகோவாவின் செய்தி அத்துடன் முடிவடைந்துவிடவில்லை. “ஆனாலும், நீங்கள் செய்த நல்ல காரியங்களை அவர் கவனித்திருக்கிறார்” என தீர்க்கதரிசி தொடர்ந்து சொன்னார். (2 நாளாகமம் 19:1-3) யோசபாத்தின் நல்ல காரியத்தை பார்க்காதபடி யெகோவாவின் நீதியுள்ள கோபம் அவருடைய கண்ணை மூடிவிடவில்லை. இந்த விஷயத்தில் பாவமுள்ள மனிதர் எவ்வளவு மாறுபட்டிருக்கிறார்கள்! மற்றவர்கள் நமக்கு மனவேதனை உண்டாக்கும்போது, அவர்களுடைய நல்ல குணத்திற்கு நம்முடைய கண்களை மூடிக்கொள்கிறோம். மேலும், நாம் பாவம் செய்யும்போது நமக்கு ஏற்படும் ஏமாற்றமும் வெட்கமும் குற்றவுணர்வும், நம்மிடத்திலுள்ள நல்ல காரியத்தை பார்க்காதபடி நம்முடைய கண்ணை குருடாக்கிவிடலாம். ஆனால், நம்முடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பி அவற்றை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கு கடினமாக போராடும்போது, யெகோவா நம்மை மன்னிப்பார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
13 யெகோவா உங்களை ஆராய்கையில், தங்கத்தைத் தேடுபவர் உபயோகமில்லாத கல்லையும் மண்ணையும் அதிலிருந்து பிரித்தெடுப்பதைப் போலவே உங்களுடைய பாவங்களை நீக்கிவிடுகிறார். உங்களுடைய நல்ல குணங்களும் செயல்களும்தான் அவர் பத்திரமாக வைத்துக்கொள்ளும் “தங்கக்கட்டிகள்!” பிள்ளைகள் வரைந்தவற்றை அல்லது ஸ்கூல் புராஜெக்டிற்காக செய்தவற்றை பெற்றோர் ஆசையோடு பாதுகாத்து வைப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? சிலசமயங்களில் அவற்றை பிள்ளைகள் மறந்துவிடலாம்; ஆனாலும் பெற்றோர் அவற்றை பத்திரமாக வைத்திருப்பார்கள். யெகோவாவே மிகுந்த பாசமுள்ள தகப்பன். நாம் அவருக்கு உண்மைத் தன்மையோடு நிலைத்திருக்கும் வரை, அவர் நம்முடைய நல்ல செயல்களையும் குணங்களையும் ஒருபோதும் மறப்பதில்லை. சொல்லப்போனால், அவற்றை மறந்துவிடுவதை அநீதியாக கருதுகிறார், அவர் ஒருபோதும் அநீதியுள்ளவரல்ல. (எபிரெயர் 6:10) மற்றொரு வகையிலும் யெகோவா நம்மை சலித்தெடுக்கிறார்.
14, 15. (அ) நம்மிடமுள்ள நல்ல காரியத்தை காணாதபடி நம்முடைய குறைகள் யெகோவாவின் கண்ணை மறைக்கிறதா? விளக்குங்கள். (ஆ) நம் நல்ல குணங்களை யெகோவா என்ன செய்வார், தம் மக்களை அவர் எப்படி கருதுகிறார்?
14 யெகோவா நமது குறைகளையும் தாண்டி, நமது உள்ளார்ந்த ஆற்றலை பார்க்கிறார். கலை ரசனையுள்ள ஒருவர் மிகவும் சேதமடைந்த சித்திரங்களையோ அல்லது பிற வேலைப்பாடுகளையோ புதுப்பிப்பதற்கு அதிக முயற்சி எடுப்பார். உதாரணமாக, லண்டனின் தேசிய அருங்காட்சியகத்தில், லியோநர்டோ டா வின்ஸி என்ற ஓவியர் வரைந்த 30 மில்லியன் டாலர் மதிப்புடைய வரைபடத்தை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்திவிட்டார். ஆனால் சேதமடைந்த இந்த வரைபடத்தை தூக்கியெறிந்துவிட வேண்டும் என ஒருவரும் சொல்லவில்லை. சுமார் 500 வருடங்கள் பழைய ஓவியத்தை புதுப்பிக்கும் வேலை உடனடியாக ஆரம்பமானது. கலைப் பிரியர்களின் கண்களில் இது விலையேறப் பெற்றது. வெறும் சாக்பீஸாலும் கரிக்கட்டையாலும் வரையப்பட்ட படத்தைவிட நீங்கள் அதிக மதிப்புமிக்கவர்கள் அல்லவா? பாவத்தால் நீங்கள் எவ்வளவு மோசமாக சேதமடைந்திருந்தாலும்சரி, கடவுளுடைய பார்வையில் நீங்கள் மதிப்புமிக்கவர்களே. (சங்கீதம் 72:12-14) மனித குடும்பத்தைப் படைத்த கைதேர்ந்த கலைஞராகிய யெகோவா தேவன், அவர்கள் பரிபூரணத்தை அடைவதற்கு என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் கண்டிப்பாக செய்வார்.—அப்போஸ்தலர் 3:21; ரோமர் 8:20-22.
15 ஆம், நம்மிடத்தில் நாமே பார்த்திராத நல்ல காரியத்தை யெகோவா பார்க்கிறார். மேலும், நாம் அவரை சேவிக்கும்போது, நாம் கடைசியில் பரிபூரணம் அடையும்வரை அந்த நல்ல காரியம் அதிகரிக்கும்படியும் செய்வார். சாத்தானுடைய உலகம் நம்மை எப்படி நடத்தினாலும்சரி, யெகோவா தமது உண்மையுள்ள ஊழியர்களை செல்வங்களாக கருதுகிறார்.—ஆகாய் 2:7.
யெகோவா தமது அன்பை நிரூபிக்கிறார்
16. யெகோவா நம்மீது வைத்துள்ள அன்பிற்கு மிகப் பெரிய அத்தாட்சி எது, இந்தப் பரிசு தனிப்பட்ட விதமாக நமக்கு அளிக்கப்பட்டிருப்பது எப்படி தெரியும்?
16 நான்காவதாக, நம்மீது வைத்துள்ள அன்பை நிரூபிப்பதற்கு யெகோவா இன்னும் பலவற்றை செய்கிறார். நாம் லாயக்கற்றவர்கள் அல்லது அன்பை பெற தகுதியற்றவர்கள் என்ற சாத்தானுடைய பொய்க் குற்றச்சாட்டிற்கு கிறிஸ்துவின் மீட்புப் பலியே மிகச் சரியான பதிலடி. சித்திரவதைக் கம்பத்தில் கடும் வேதனையோடு இயேசு உயிர்விட்டதும், தமது அன்பு மகன் மரிப்பதை பார்த்து அதைவிட கடும் வேதனையில் யெகோவா துடித்ததும், நம்மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பிற்கு அத்தாட்சி! இந்தப் பரிசு தனிப்பட்ட விதமாக தங்களுக்கும் அளிக்கப்பட்டிருப்பதை நம்புவது அநேகருக்கு கடினமாக இருக்கிறது, இது வருந்தத்தக்க விஷயம். அதைப் பெறுவதற்கு தாங்கள் லாயக்கற்றவர்கள் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்போஸ்தலன் பவுலை நினைத்துப் பாருங்கள்; அவர் கிறிஸ்துவை பின்பற்றியவர்களை துன்புறுத்தினார். என்றாலும், “கடவுளுடைய மகன் . . . என்மேல் அன்பு வைத்து எனக்காகத் தன்னையே தியாகம் செய்தார்” என அவர் பிற்பாடு எழுதினார்.—கலாத்தியர் 1:13; 2:20.
17. யெகோவா தம்மிடமும் தமது மகனிடமும் எவற்றின் வாயிலாக நம்மை ஈர்க்கிறார்?
17 கிறிஸ்துவின் பலியால் வரும் நன்மைகளை அனுபவிக்க நமக்கு உதவுவதன் மூலம் நம்மீது வைத்துள்ள அன்பை யெகோவா நிரூபிக்கிறார். “என்னை அனுப்பிய தகப்பன் ஒருவனை ஈர்க்காவிட்டால் அவன் என்னிடம் வர முடியாது” என்றார் இயேசு. (யோவான் 6:44) ஆம், தமது மகனிடமும் முடிவில்லாத வாழ்வு பெறும் நம்பிக்கையினிடமும் யெகோவா நம்மை ஈர்க்கிறார். எப்படி? முதலாவதாக, பிரசங்க வேலையின் மூலம்! இந்தப் பிரசங்க வேலையின் செய்தி தனிப்பட்ட விதமாக நம்மை வந்தடைகிறது. இரண்டாவதாக, தமது பரிசுத்த சக்தியின் வாயிலாகவும் நம்மை ஈர்க்கிறார்; நம்முடைய வரம்புகள் மற்றும் குறைகள் மத்தியிலும் ஆவிக்குரிய சத்தியங்களைக் கிரகித்துக் கொள்வதற்கும் அவற்றை வாழ்க்கையில் பின்பற்றுவதற்கும் நமக்கு உதவ யெகோவா தமது பரிசுத்த சக்தியையே பயன்படுத்துகிறார். ஆகவே, “நான் எப்போதுமே உன்மேல் அன்பு காட்டியிருக்கிறேன். என்றுமே மாறாத அன்பினால் உன்னை என் பக்கம் இழுத்திருக்கிறேன்” என இஸ்ரவேலைக் குறித்து சொன்னதைப் போல நம்மைக் குறித்தும் யெகோவா சொல்ல முடியும்.—எரேமியா 31:3.
18, 19. (அ) தனிப்பட்ட விதத்தில் யெகோவா எப்படி நம்மீது அன்பு காட்டுகிறார், அதில் அவர் தனிப்பட்ட அக்கறை காட்டுவது எப்படி தெரிகிறது? (ஆ) யெகோவா அனுதாபத்தோடு கேட்கிறவர் என்பதை அவருடைய வார்த்தை எவ்வாறு நமக்கு உறுதியளிக்கிறது?
18 ஜெபத்தின் மூலம் யெகோவாவின் அன்பை மிகவும் நெருக்கமான விதத்தில் அனுபவிக்கிறோம். “எப்போதும் ஜெபம் செய்யுங்கள்” என பைபிள் கேட்டுக்கொள்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:17) யெகோவா செவிசாய்த்துக் கேட்கிறார். ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்றும் அவர் அழைக்கப்படுகிறார். (சங்கீதம் 65:2) வேறு எவருக்கும், தமது சொந்த மகனுக்கும்கூட, ஜெபத்தைக் கேட்கும் அதிகாரத்தை அவர் கொடுக்கவில்லை. இந்த அகிலாண்டத்தையே படைத்தவர் ஜெபத்தில் தம்மை தயங்காமல் அணுகும்படி நம்மை உந்துவிக்கிறார். அவர் எப்படி செவிசாய்க்கிறார்? உணர்ச்சியே இல்லாமல், மந்தமாக, அலட்சியமாக கேட்கிறாரா? இல்லவே இல்லை.
19 யெகோவா அனுதாபம் மிகுந்தவர். அனுதாபம் என்றால் என்ன? ‘உன் வேதனையால் என் இதயம் துடிப்பதே அனுதாபம்’ என வயதான கிறிஸ்தவர் ஒருவர் சொன்னார். நாம் படும் வேதனையைக் கண்டு யெகோவா பரிதாபப்படுகிறாரா? அவரது ஜனமாகிய இஸ்ரவேலர் துன்பங்களை அனுபவித்தபோது, “அவர்கள் வேதனைப்பட்ட சமயத்திலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்” என சொல்லப்பட்டிருக்கிறது. (ஏசாயா 63:9) அவர்களுடைய துன்பங்களை யெகோவா பார்த்தது மட்டுமின்றி, அவர்களுக்காக அவர் அனுதாபப்பட்டார். தமது ஊழியர்களுக்காக எந்தளவு அனுதாபப்படுகிறார் என்பதை அவரது வார்த்தைகளே விளக்குகின்றன; “உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” என்று அவர் சொன்னார்.b (சகரியா 2:8) கண்மணியைத் தொடுவது எவ்வளவு வேதனையாக இருக்கும்! ஆம், அந்தளவுக்கு யெகோவா நமக்காக அனுதாபப்படுகிறார். நாம் வேதனையில் துடிக்கும்போது அவரும் துடிக்கிறார்.
20. ரோமர் 12:3-ல் உள்ள அறிவுரைக்குக் கீழ்ப்படிய வேண்டுமாகில், முதிர்ச்சியற்ற எத்தகைய மனப்பான்மையை நாம் தவிர்க்க வேண்டும்?
20 கடவுளுடைய அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய இத்தகைய அத்தாட்சியை முதிர்ச்சியுள்ள எந்தவொரு கிறிஸ்தவரும் தற்பெருமை கொள்வதற்கோ சுயகெளரவம் கொள்வதற்கோ சாக்காக பயன்படுத்த மாட்டார். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்களில் யாரும் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக எண்ணாமல், அவரவருக்குக் கடவுள் கொடுத்திருக்கிற விசுவாசத்தின்படியே எண்ண வேண்டும். அப்படிச் செய்வது உங்களுக்குத் தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட அளவற்ற கருணையால் இதை உங்கள் எல்லாருக்கும் சொல்கிறேன்.” (ரோமர் 12:3) மற்றொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு சொல்கிறது: “உங்களில் ஒவ்வொருவனும் தன்னுடைய உண்மையான மதிப்பிற்கு மேலாக தன்னை மதிப்பிடாமல், தன்னைக் குறித்து தெளிவாக மதிப்பிடுவானாக.” (மக்களின் மொழியில் ஒரு மொழிபெயர்ப்பு [ஆங்கிலம்], சார்ல்ஸ் பி. உவில்லியம்ஸ்) ஆகவே, நம்முடைய பரலோக தகப்பனுடைய இதமான அன்பில் குளிர்காய்கையில், நாம் தெளிந்த புத்தியோடு நடப்போமாக. மேலும், கடவுளுடைய அன்பை நாம் சம்பாதிக்கவும் முடியாது, அதற்கு நாம் தகுதியானவர்களும் அல்ல என்பதை நினைவில் கொள்வோமாக.—லூக்கா 17:10.
21. சாத்தானுடைய எத்தகைய பொய்களை நாம் தொடர்ந்து ஒதுக்கித் தள்ள வேண்டும், எந்த பைபிள் சத்தியத்தை நாம் தொடர்ந்து இதயத்தில் பதிக்க வேண்டும்?
21 நாம் லாயக்கற்றவர்கள் அல்லது நேசிக்கப்பட தகுதியற்றவர்கள் என்பது உள்ளிட்ட சாத்தானுடைய பொய்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுவதற்கு நம்முடைய சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் நாம் ஒவ்வொருவரும் செய்வோமாக. உங்கள் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து எதைக் கற்றிருக்கிறீர்கள்? கடவுள் எவ்வளவுதான் அன்பைக் கொட்டினாலும் உங்களை திருத்தவே முடியாது என்றோ, நீங்கள் செய்கிற நல்ல காரியம் அவர் கண்ணுக்கு துரும்பிலும் துரும்பாகத் தான் தெரியும் என்றோ, உங்களுடைய கணக்குவழக்கில்லாத பாவங்களை அவருடைய அருமை மகனின் பலிகூட மன்னிக்காது என்றோ உணருகிறீர்களா? இதெல்லாம் சுத்த பொய். இப்படிப்பட்ட பொய்களை அடியோடு ஓரங்கட்டிவிடுங்கள்! கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட பவுலின் வார்த்தைகளில் பொதிந்துள்ள சத்தியத்தை நாம் தொடர்ந்து நம்முடைய இதயத்தில் பதிப்போமாக: “சாவோ, வாழ்வோ, தேவதூதர்களோ, அரசாங்கங்களோ, இன்றுள்ள காரியங்களோ, இனிவரும் காரியங்களோ, வலிமைமிக்க சக்திகளோ, உயர்வான காரியங்களோ, தாழ்வான காரியங்களோ, வேறெந்தப் படைப்போ நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று உறுதியாக நம்புகிறேன்.”—ரோமர் 8:38, 39.
a உயிர்த்தெழுதல் நம்பிக்கையை யெகோவாவின் நினைவாற்றலுடன் பைபிள் அடிக்கடி சம்பந்தப்படுத்திப் பேசுகிறது. யோபு யெகோவாவிடம் இவ்வாறு கூறினார்: “கடவுளே, . . . நீங்கள் குறித்திருக்கிற காலம் முடிந்ததும் என்னை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” (யோபு 14:13) “நினைவுக் கல்லறைகளில் இருக்கிற எல்லாரும்” உயிர்த்தெழுப்பப்படுவதைப் பற்றி இயேசு குறிப்பிட்டார். இது மிகப் பொருத்தமாக இருந்தது, ஏனென்றால், யாரை உயிர்த்தெழுப்ப யெகோவா சித்தமுள்ளவராக இருக்கிறாரோ அவர்களை பூரணமாக நினைவுகூருகிறார்.—யோவான் 5:28, 29.
b கடவுளுடைய ஜனங்களைத் தொடுகிறவன், கடவுளுடைய கண்ணை அல்ல, ஆனால் தன்னுடைய சொந்த கண்ணை அல்லது இஸ்ரவேலின் கண்ணை தொடுகிறான் என்பது போல சில மொழிபெயர்ப்புகள் சொல்கின்றன. இந்தப் பிழை வேத அறிஞர்கள் சிலரால் ஏற்பட்டது, கடவுளுடைய கண்ணைத் தொடும் கருத்தை மரியாதைக் குறைவானதாக கருதி, இந்தத் திருத்தத்தை அவர்கள் செய்தார்கள். அவர்கள் எடுத்த தவறான முயற்சி யெகோவா தனிப்பட்ட விதமாக எந்தளவு அனுதாபப்படுகிறார் என்பதை இருட்டடிப்பு செய்துவிட்டது.