பூமியதிர்ச்சி!
தைவானிலிருந்து விழித்தெழு! நிருபர்
“இடம் தைபே. ஒன்பதாவது மாடியில் இருந்த என்னுடைய அபார்ட்மெண்டில் ஹாயாக படுத்தவாறு வாசித்துக்கொண்டிருந்தேன். மெதுமெதுவாக லைட் மங்கலாகி அணைந்துவிட்டது. ரூம் பலமாக ஆடத் தொடங்கியது. திடீரென்று ஏதோ ஒரு அரக்கன் வந்து அந்த கட்டிடத்தையே பிடித்து உலுக்குவது போல இருந்தது. மேல்மாடியில் சாமான்கள் தடதடவென்று தரையில் விழுந்து நொறுங்கும் சத்தத்தை கேட்டபோது கூரையே இடிந்து கீழே வந்துவிடும் போல தோன்றியது. பயந்தடித்து மேசைக்கடியில் ஓடி ஒளிந்துகொண்டேன். அந்த நிலைமை மோசமாகிக் கொண்டே போனதே ஒழிய நிற்கப்போவதாக தெரியவில்லை.”—தைவானிலுள்ள பத்திரிகையாளர்.
பூமியதிர்ச்சி. இந்த வார்த்தையைக் கேட்டாலே அதிர்ச்சிதான். சமீப காலங்களில் அவை நம்மை அதிர வைக்கும் அளவில் அடிக்கடி சம்பவிக்கின்றன. ஐ.மா. நில இயல் சர்வே துறையின்படி, 1999-ம் வருடத்தில், வழக்கத்திற்கு அதிகமான பூமியதிர்ச்சிகள் சம்பவித்தன. அவற்றால் ஏற்பட்ட மரணமும் வருட சராசரியைவிட இருமடங்கு அதிகம்.
1999-ம் வருடத்திலேயே மிக பயங்கரமான பூமியதிர்ச்சி தைவானில் ஏற்பட்டது. புவியோட்டின் கீழ் பெரிய அடிநிலத் தகடுகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு தகடுகள் இந்தப் பகுதியில் இணைகின்றன. மொத்தத்தில், 51 பெயர்ச்சிப்பிளவு கோடுகள் தைவான் வழியாகச் செல்வதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, ஒவ்வொரு வருடமும் இங்கு சுமார் 15,000 நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்படுவதில் ஆச்சரியமேதுமில்லை. இவற்றில் அதிகப்படியான நிலநடுக்கங்கள் சிறியவை. அவை ஏற்படுவதே தெரிவதில்லை.
ஆனால் 1999-ம் ஆண்டு, செப்டம்பர் 21-ம் நாள் ஏற்பட்ட அந்த அதிர்ச்சி, மறக்கத்தக்க சிறிய அதிர்ச்சி அல்ல. ஊருறங்கும் நிசப்தமான நேரம். நள்ளிரவு 1 மணி 47 நிமிடம். தைவானை கடும் பூமியதிர்ச்சி உலுக்கியது. ‘இந்த நூற்றாண்டிலேயே இந்தத் தீவின் மிகமோசமான அதிர்ச்சி’ என்பதாக குடியரசு தலைவர் லி டங் ஹ்வே குறிப்பிட்டார் என்றால் அது எவ்வளவு பயங்கரமானதாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். இந்த அதிர்ச்சி இத்தனைக்கும் முப்பதே வினாடிகள்தான் நீடித்தது. ஆனால் ரிக்டர் அளவையில் இந்த பூமி அதிர்ச்சி 7.6 என்பதாக பதிவானது.a அதிர்ச்சிகள் அதிக ஆழத்தில் ஏற்படும்போது அவற்றின் பாதிப்புகளை அதிகமாக உணர முடியாது. ஆனால் இந்த அதிர்ச்சி ஒரு கிலோமீட்டர் ஆழத்திலேயே நிகழ்ந்ததால் இதன் பாதிப்பை முழுமையாக உணர முடிந்தது. அந்த பூமியதிர்ச்சி மையம் கொண்ட இடத்திற்கு அருகே வசிக்கிறார் லியூ ஸியூ ஸியா. அவர் சொல்கிறார்: “கடுமையான நில நடுக்கத்தின் காரணமாக நான் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டேன். சாமான்களெல்லாம் விழுந்தன. கூரையிலுள்ள லைட்கூட விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த சாமான்களும் உடைந்த கண்ணாடி துண்டுகளும் கதவை அடைத்தபடி கிடந்ததால், வெளியேற வழியே இல்லை.” ஹ்வாங் ஷுஹாங் என்ற பெண்ணோ பூமியதிர்ச்சியால் கட்டிலிலிருந்து கீழே தள்ளப்பட்டாள். அவள் கூறுகிறாள்: “கண்ணை திறந்து பார்த்தால் கும்மிருட்டு. கரண்டுமில்லை, தட்டுத்தடுமாறி வெளியேவந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து விடியவிடிய ரோட்டிலேயே காத்திருந்தேன். தரையோ அதிர்ந்துகொண்டே இருந்தது.”
மீட்கும் பணி
பொழுது விடிந்தது, ஆனால் தைவானோ பூமியதிர்ச்சியின் கோலம்பூண்டு விடியலுக்காக காத்திருந்தது. ஒற்றை மாடி வீட்டிலிருந்து அடுக்குமாடி கட்டிடங்கள் வரையாக 12,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சாய்ந்துவிட்டன. இச்சேதத்தைப் பற்றிய செய்தி எங்கும் பரவியது. மீட்கும் பணியில் அனுபவமுள்ளவர்கள் 23 நாடுகளிலிருந்து தைவானுக்கு வந்து உள்ளூர் வாலண்டியர்களுடன் சேர்ந்து பணியிலிறங்கினர். பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர்.
எந்த ஒரு சேதத்தையும் தொடரும் முதல் 72 மணிநேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் அதற்குள் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடித்தாக வேண்டும். இங்கோ இந்த மீட்கும் பணியாளர்களுக்கு சில எதிர்பாராத அனுபவங்கள் காத்திருந்தன. உதாரணமாக, 87 மணிநேரங்களாக மாட்டிக்கொண்டு தவித்த ஆறு வயது சிறுவனை விடுவித்தார்கள். தைபேயில், பெரிய இயந்திரங்களை பயன்படுத்தி, 12-மாடி குடியிருப்புக் கட்டிடத்தின் சிதைந்த இடிபாடுகளை அகற்றும்போது திடீரென்று அதற்குள்ளிருந்து எட்டிப்பார்த்தான் ஓர் இளைஞன். அவனும் அவன் சகோதரனும் 120 மணிநேரங்களுக்குமேல் சிக்கித் தவித்தனர். அந்த கொடிய அனுபவத்திலிருந்து அவர்கள் தப்பித்ததே ஆச்சரியம்!
எவ்வளவு முயற்சி எடுத்தபோதிலும், எல்லாரையும் விடுவிக்க முடியவில்லை. மீட்பு பணியாளர்களை நெகிழ வைக்கும் சில சம்பவங்களும் உண்டு. “ஒரு குழந்தையின் அழுகைக் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது, எட்டு மணிநேரத்திற்கு முன்புகூட கேட்டது. பிறகு அந்த சத்தம் கேட்கவேயில்லை,” என்று மீட்கும் குழு ஒன்றின் தலைவர் வருத்தப்பட்டார். மொத்தத்தில், தைவானில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,300-ஐ தாண்டியது. 8,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பின்விளைவு
பூமியதிர்ச்சி தாக்கியதால் வீடிழந்த லட்சக்கணக்கானோருக்கு தங்குமிடம் அளிப்பதற்காக பெரும் முயற்சி தொடங்கியது. பாதிக்கப்பட்ட சிலர் மீண்டும் கட்டிடங்களுக்குள் நுழைவதற்கே ஆரம்பத்தில் தயங்கினர். இந்த தயக்கம் நியாயமானதே. ஏனென்றால், முதல் அதிர்ச்சிக்குப் பின் பத்து நாட்களுக்கு தொடர்ந்து கிட்டத்தட்ட 10,000 அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டன! இந்த அதிர்வுகளில் ஒன்று ரிக்டர் அளவையில் 6.8 காண்பித்தது. ஏற்கெனவே ஆட்டம்கண்ட பல கட்டிடங்கள் ‘இந்த ஆட்டம்’ தாங்காமல் விழுந்துவிட்டன.
நிவாரண பணியோ தொடர்ந்தது. அயல்நாட்டு நிவாரண குழுக்கள், சி ஜி என்ற புத்த குழு, தீயணைப்பு படையினர் ஆகியோர் உட்பட பல சமூகநல அமைப்புகள் தங்கள் நேரத்தையும் திறமைகளையும் இந்த வேலைக்காக அர்ப்பணித்து நிவாரணப் பணியில் முழுமூச்சாக இறங்கினர். யெகோவாவின் சாட்சிகளும் இந்த நிவாரண பணியில் ஈடுபட்டனர். கலாத்தியர் 6:10-ல் சொல்லப்பட்ட பைபிள் ஆலோசனைக்கு இசைய, அவர்களுக்கு இரண்டு குறிக்கோள்கள். (1) உடன் விசுவாசிகளைக் கவனிக்க விரும்பினர். (2) தங்களைப் போன்ற மத நம்பிக்கைகளைக் கொண்டிராத யாவருக்கும் நன்மை செய்யவும் விரும்பினர்.
உணவு, தண்ணீர், தங்கும் கூடாரங்கள், வெளியே வைத்து சமைப்பதற்கு தேவையான சாதனங்கள் ஆகியவற்றை முதல் நாளிற்குள்ளேயே யெகோவாவின் சாட்சிகள் கொண்டுவந்து சேர்த்தனர். நில நடுக்கத்தால் எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. எனவே, பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆறு சபைகளின் மூப்பர்கள் ஒன்றுசேர்ந்து சாட்சிகளையும் அவர்களுடைய உறவினர்களையும் பைபிள் படிப்பவர்களையும் அக்கறை காண்பித்தவர்களையும் தேடி கண்டுபிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர். சரியான கவனிப்பைப் பெறுவதற்காகவும் எளிதில் தொடர்புகொள்ள வசதியாகவும் இருக்கும்படி வீடிழந்த சாட்சிகளை ஒரே இடத்தில் தங்கும்படி உற்சாகப்படுத்தினர். பயணக் கண்காணிகளும் தைவானிலுள்ள கிளை அலுவலக குழு அங்கத்தினர்களும் ஒவ்வொரு முகாமையும் சபையையும் சந்தித்து உற்சாகமளித்தனர்.
சேதமடைந்த வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் சரிசெய்வதுதான் அடுத்த வேலை. யார் யாருக்கு உதவி தேவை என்று ஒவ்வொரு சபையும் ஒரு லிஸ்ட் தயாரித்தது. பின்பு, தேவையான ரிப்பேர் வேலைகளை செய்வதற்கு மண்டல கட்டிட குழு வாலண்டியர் குழுக்களை அனுப்பியது. பூமியதிர்ச்சி சம்பவித்த ஒரு மாதத்திற்குள், நிவாரண பணி முடிந்தது.
சாட்சிகளல்லாத அயலாருக்கும் யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்தனர். உதாரணமாக, மருத்துவமனைகளுக்கும் கூடார நிவாரண முகாம்களுக்கும் சென்று ஆறுதலளித்தனர். ஜூன் 22, 1996, விழித்தெழு!-வில் பிரசுரிக்கப்பட்ட “இயற்கைச் சேதங்கள்—இதைச் சமாளிப்பதற்கு உங்கள் பிள்ளைக்கு உதவுதல்” என்ற கட்டுரையின் நகல்களையும் கொடுத்தனர். அநேகர் அந்தத் தகவலை ஆவலோடு வரவேற்று உடனே வாசித்தார்கள். ஆங்காங்கே இருக்கும் மலைப்பகுதிகளும் பூமியதிர்ச்சியால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன. ரோடுகள் பழுதுபார்க்கப்பட்டு போக்குவரத்துக்காக தயாரானதும் யெகோவாவின் சாட்சிகள் ட்ரக்குகள் நிறைய நிவாரணப் பொருட்களை அங்கும் அனுப்பினார்கள்.
இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் பூமியதிர்ச்சிகள் ஏற்படும் என்பதை பைபிளைப் படித்தவர்கள் அறிந்திருக்கின்றனர். ஏனென்றால் “பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்,” என்று பல வருடங்களுக்கு முன்பே பைபிள் முன்னறிவித்திருக்கிறது. (மத்தேயு 24:7) இதை அறிவிப்பதோடு நிறுத்திவிடாமல் நம்பிக்கையூட்டும் தீர்வையும் பைபிள் அளிக்கிறது. மனிதவர்க்கம், கடவுளுடைய ராஜ்யத்தின் சமாதானமான ஆட்சியின்கீழ் இயற்கை சேதங்களின் பிடியில் மாட்டிக்கொள்ளும் பயத்திலிருந்து விரைவில் விடுவிக்கப்படும் என்று உறுதி அளிக்கிறது. அப்போது, பூமி உண்மையில் ஒரு பரதீசாக திகழும்.—ஏசாயா 65:17, 21, 23; லூக்கா 23:43.
[அடிக்குறிப்பு]
a மாறாக, ஆகஸ்ட் 1999-ல் துருக்கியில் ஏற்பட்ட துயரகரமான பூமியதிர்ச்சி ரிக்டர் அளவில் 7.4 பதிவு செய்தது. ஆனால் தைவானில் ஏற்பட்டதைவிட ஏழு மடங்கு அதிகம் பேரை கொள்ளைகொண்டது.
[பக்கம் 26-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகள் முகாம்களில் தங்கியிருக்கும்போதும் கூட்டங்களை நடத்தினார்கள்
[பக்கம் 27-ன் படங்கள்]
அநேக ரோடுகளை பூமியதிர்ச்சி நாசமாக்கியது
[படத்திற்கான நன்றி]
San Hong R-C Picture Company
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
San Hong R-C Picture Company
[பக்கம் 27-ன் படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 2, 25-7 நிலநடுக்க வரைபடம்: Figure courtesy of the Berkeley Seismological Laboratory