அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொலைக்கார பூமியதிர்ச்சி!
மெக்ஸிக்கோவிலிருந்து வந்திருக்கும் கண்கண்ட சாட்சியின் அறிக்கை
“கட்டிடம் அதிர்ச்சியுற்றபோது நான் பத்தாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தேன். நான் கதவில் சாய்ந்தேன், அது திடீரென்று அசைக்கப்பட்டு கழன்று என்மேல் விழுந்தது. இடிந்துகிடந்த கட்டிடத்தின் கற்களினூடே வெளியேற முயற்சித்தபோது, அந்த இடிந்த கற்களினூடே என் பிள்ளைகள் சிதறிகிடப்பதைப் பார்த்தேன். எனது மூத்த மகன் ஜோஸ் இரத்த வெள்ளத்தில் கிடந்தான். என்னுடைய குடும்பம் முழுவதும் மாண்டிருப்பார்கள் என்பதில் உறுதியாயிருந்தேன்!”—ஜோஸ் மெலன்டிரஸ்.
செப்டம்பர் 19, 1985 காலை 7.19 மணி இருக்கும். 1,80,00,000 மக்கள் தொகையைக் கொண்ட மெக்ஸிக்கோ மாநகரம். இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய பூமியதிர்ச்சியாக இது இருந்தது. ரீச்டர் அதிர்வு அளவில் மாணியில் 8.1-ஆக இருந்தது.
பலருக்கு நேரம் சாதகமாக இருந்தது. ஒரு மணிநேரம் கழித்து ஏற்பட்டிருந்தால், பள்ளிகளும், வியாபார ஸ்தலங்களும் மக்களால் நிரம்பிவழிந்திருக்கும். அந்தக் கட்டிடங்களில் இருந்தவர்களெல்லோருமே மாண்டு எல்லாமே ஒரே இடுகாடாகக் காட்சியளித்திருக்கும். மெக்ஸிக்கோ நகரில் தரைமட்டமான 700 கட்டிடங்களில் குறைந்தபட்சம் 100 கட்டிடங்கள் பள்ளிகள்!
ஹெலிக்காப்டர் விமானத்திலிருந்து காட்சியைப் பார்த்த ஐ.மா. தூதுவர் ஜான் கேவின் கூறினார்: “கட்டிடங்கள் மேல் ஓர் இராட்சதன் அடியெடுத்து வைத்ததுபோன்று காட்சியளித்தது.” அவற்றில் உயிருடனும் மரித்தும் சிக்கிக் கிடந்தவர்களோ ஆயிரக்கணக்கானோர். மெக்ஸிக்கோவின் தினசரி எல் யுனிவெர்சலின்படி, முதல் 15 நாட்களில் 8,000 சடலங்களுக்குமேல் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் செத்தவர்களின் எண்ணிக்கையோ 35,000 வரையாக உயர்ந்தது.
40 ,000-ற்கும் மேற்பட்ட உயிர்பிழைத்த ஆட்கள் மருத்துவ மனைகளிலும் முகாம்களிலும் சிகிச்சை பெற்றார்கள். தங்கள் உறவினரின் சடலங்களை அடையாளம் காண மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துக்கொண்டிருந்தனர். அதற்கு இறையானவர்களை பெயர் பட்டியல்கள் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் செய்தித்தாள்களிலும் வெளிவந்தது. ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் தெருக்களில் அலைந்தார்கள்—அவர்கள் சென்று தங்குவதற்கு இடமில்லை. குறைந்தபட்சம் 40,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பிடத்தக்க விதத்தில் உயிர் பிழைத்தார்கள்
பூமியதிர்ச்சி ஏற்பட்டபோது, ஜோஸ் மாலன்ட்டுரெஸும் அவருடைய மனைவியும் தங்களது 11-வது மாடி வீட்டில் இருந்தார்கள். அவள் அறிக்கை செய்வதாவது: “எனது ஆறு வயது மகள், எலிசபெத்தை பள்ளிக்குச் செல்ல உடுத்திக் கொண்டிருந்தேன். திடீரென்று கட்டிடம் அதிர ஆரம்பித்தது. உடனே நான் என் மகன் நோஸையும் அவனுடைய மனைவியையும் எச்சரிக்க விரைந்தேன். அதே சமயத்தில் என்னுடைய இரண்டு மகள்கள் லூர்துவுக்கும் கர்மிலாக்கும் குரல்கொடுத்தேன். அவர்கள் எலிசபெத்தை மாடிக்கு எடுத்துச் சென்றனர். கட்டிடம் இடிந்துவிழும்போது மெத்தைப் படிக்கட்டின் கைப்பிடி கம்பியை இறுகப்பற்றினேன். நிலநடுக்கம் நின்றபோது 11-வது மாடி 4-வது மாடிக்கு வந்துவிட்டிருந்தது!
“உதவியளிக்கவும் பெறவும் முடியாதவர்களாய் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், ஜோஸும் அவனுடைய மனைவியும் நின்றுகொண்டிருந்த இடம் பிளந்தது. அவர்கள் அந்தப் பெரும் சேதத்திற்குள் தூக்கியெறியப்பட்டார்கள். அவர்கள் செத்துப்போனார்கள் என்பதில் நாங்கள் நிச்சயமாயிருந்தோம். அதைத்தொடர்ந்து ஆறாவது மாடியில் ஒரு பாய்லரும் வாயுக் கலமும் வெடிக்கும் சப்தத்தைக் கேட்டபோது அந்த நிச்சயமுடிவுக்கு வந்தோம். 1,500 கிலோ எடையுள்ள அந்த வாயு கொள்கலம் வெடித்து என் மகன்மீது பட்டது. என்றபோதிலும் அவர்கள் இன்னும் உயிருடனிருந்தார்கள் என்பது ஆச்சரியமாயிருந்தது!
குறிப்பிடத்தக்க விதத்தில் மெலண்ட்ரஸ் குடும்பம் முழுவதும் உயிர்பிழைத்து. இளைஞன் ஜோஸ் அதிகமாக காயமுற்றிருந்தான். “எங்களுக்கு அது அதிக வேதனை மிகுந்த அனுபவமாயிருந்தது,” என்று தந்தை ஜோஸ் குறிப்பிடுகிறார். “ஆனால் எங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களிடமிருந்து கிடைத்த எல்லா அன்பான உதவிக்கும் நாங்கள் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறோம்.”
கிரெகோரியோ மான்டஸும் அவருடைய குடும்பமும் எட்டடுக்கு கட்டிடத்தில் ஐந்தாவது மாடியில் குடியிருந்தார்கள். அவர் பின்வருமாறு விளக்குகிறார்: “என்னுடைய மகள் லூப்பிட்டாவை பள்ளிக்குக் கூட்டிச்செல்வதற்காக என்னுடைய மனைவி விடியற்காலை எழுந்திருக்கும் பழக்கமுடையவள். அவர்கள் காலை 7.15-க்கு வீட்டை விட்டார்கள், பூமியதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னால் கட்டிடம் அதிர்ந்தவுடன் எனது ஐந்து மற்றும் ஆறு வயது பெண்பிள்ளைகளும் நானும் பயந்து எழுந்தோம். எல்லாமே அசைந்தது! அனால் நான் யெகோவாவிடம் ஜெபம் பண்ண ஆரம்பித்தபோது எங்களுக்கு ஒரு அமைதி ஏற்படுவதை உணர்ந்தோம்.
“அந்த சமயத்தில்தானே ஜன்னல்கள் எல்லாமே முறிந்துவிழ ஆரம்பித்தது! மதில்கள் மடிந்தன. பயந்தில் மூழ்கிய பெண்களும் பிள்ளைளும் கதறி அழும் சப்தம் எனக்கு எட்டியது. என்னுடைய இரண்டு மகள்களும் கட்டிலில் அமைதியாக உட்கார்ந்திருக்க நான் முழுங்கால்படியிட்டு தொடர்ந்து ஜெபித்தேன்.
திடீரென்று—கூச்சல் ஒருபக்கம், கட்டிடம் அதிர்வது ஒரு பக்கம், தூசி பறப்பது ஒரு பக்கம்—கட்டிடம் தரைமட்டமானது! நாங்கள் ஒரு லிப்ட்டில் கீழே இறங்குவதுபோன்று இருந்தது. அந்தச் சமயத்தில் என்னுடைய பிள்ளைகளில் ஒருத்தி, ‘அப்பா, அர்மகெதோன் வந்துவிட்டது,’ என்று சொன்னபோதிலும், அப்படி அல்ல என்று உறுதியாய்த் தெரிவித்தேன்.
ஒரு நொடி அமைதி ஏற்பட்டது—எல்லாமே இருண்டிருந்தது, எங்கு பார்த்தாலும் தூசி. எங்களுடைய அறையின் கூறைக்கும் தரைக்கும் இடையே 50 சென்டிமீட்டர் (20 அங்குலம்) இடைவெளிதான் இருந்தது.” அந்த சேதத்தில் சிக்கிய என்னுடைய மகள் சேதமடைந்த பொருட்களாலும் கண்ணாடிகளாலும் மூடப்பட்டிருந்ததைக் கண்டேன். இருந்தாலும் அவர்கள் காயமுறவில்லை—ஒரு அடிகூட படவில்லை.!
தெருவிலிருந்த என்னுடைய மனைவி மேரியும் லுப்பிட்டாவும் கட்டிடம் இடிந்து விழுவதைப் பார்த்தார்கள். நாங்கள் மரித்திருப்போம் என்பதில் அவர்கள் நிச்சயமாயிருந்தார்கள். என்றபோதிலும் அந்தப் பல அடுக்கு கட்டிடத்தில் குடியிருந்த 32 குடும்பங்களில் உயிர்பிழைத்த சிலரில் நாங்களும் உட்பட்டிருந்தோம்.
பதினாறு வயது ஜுடித் ரமிரஸ் பூமியதிர்ச்சி ஏற்பட்ட சமயத்தில் பள்ளியில் இருந்தாள். “ஆசிரியர் பாடம் சொல்ல ஆரம்பித்தார்கள்,” என்றாள் அவள். “திடீரென்று கட்டிடம் அசைய ஆரம்பித்தது. ஆழ்கடலில் செல்லும் ஒரு கப்பலில் இருப்பதுபோன்றிருந்தது. ஒரே குழப்பம். மாணவர்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் உடைத்தெறிந்து வெளியேற முயன்றார்கள்.
“மூன்றாம் மாடி ஐன்னல் வழியாய் நான் பார்த்தபோது, பாதி கட்டிடம் இடிந்திருந்தது, ஏறக்குறைய 500 மாணவர்கள் இன்னும் கட்டிடத்திற்குள் இருந்தார்கள்! நாங்கள் இருந்த பகுதியும் இடிந்துவிழுமோ என்று பயந்தோம். மாடிப் படிக்கட்டுகள் இருந்த இடம் தெரியாமல் போயிற்று, எனவே, எங்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு குகை வழியாய் வெளியேறினோம். அந்தச் சேதமடைந்த கட்டிடத்திலிருந்து தப்பித்துவந்த நாங்கள் கட்டிடங்கள் தீக்கு இறையாவதையும் தெருக்கள் ஒரே குழப்பத்திலிருப்பதையும் கண்டோம்.”
மீட்பு நடவடிக்கை
பூமியதிர்ச்சிக்குப் பின்பு மெக்ஸிக்கோ அரசு உடனடியான நடவடிக்கைகளை எடுத்தது. காவல்துறை, தீப்படை மற்றும் பல அதிகாரிகள் சேர்ந்து தங்களாலான மட்டும் உயிர்காக்கும் பணியை திட்டமிட்டு செயல்படுத்தினர். ஏறக்குறைய 2,800 கடற்படையினரும் அவர்களோடு பல ஆயிரம் பேரும் சேர்ந்து மீட்பு பணியில் இறங்கினர். கொள்ளை ஏற்படாமல் தடுக்க இராணுவமும் செயல்பட்டது. மீட்பு மையங்களிலும் முகாம்களிலும் ஏறக்குறைய 22,000 பேர் சிகிச்சையளிக்கப்பட்டனர். உதவி பொருட்கள் தாங்கிய விமானங்கள் ஏறக்குறைய 50 தேசங்களிலிருந்து வந்தன. வெளிநாட்டு நிபுணர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து தங்கள் பணியை இலவசமாக வழங்கினர். இந்தக் கூட்டு முயற்சியினால் பத்து நாட்களுக்குள் 3,266 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், மற்றும் கண்டுபிடிக்கப்படாத 17,000 பேரை கடைசியில் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் ஒருவரை மீட்பது அவ்வளவு சாதாரணமாக இருக்கவில்லை.
ஆபத்தான மீட்பு பணிகள்
நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகும் இடிந்துகிடந்த கட்டிடங்களுக்குள்ளிருந்து அழுகையின் குரல் கேட்டுக் கொண்டிருந்தது! மீட்புப் பணிக்கு வந்த ஓர் இளம் மனிதன் அப்படியே உட்கார்ந்து கைகளை முடக்கி முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தான். அவன் உதவி செய்யமுடியாத நிலைக்குள்ளானான். சேதமடைந்திருந்த கட்டிடங்களின் கற்களை அப்புறப்படுத்துவதற்கு ஆட்கள் பயந்தனர், கட்டிடத்தின் பகுதிகள் அதனால் எங்கு முழுமையாக இடிந்து விழுமோ என்ற பயம் வேதனையைக் கூட்டினது.
மறுபட்சத்தில், ஒருவரை மீட்க முடிந்ததும் அங்கு ஒரே மகிழ்ச்சி. “என்னால் ஒன்பது பேரை மீட்க முடிந்த திருப்தி எனக்கு இருக்கிறது,” என்றார் ஜுவான் லெபஸ்டிடா. அவர் ஐக்கிய மாகாணங்களிலிருந்து ஒரு மீட்புக் குழுவைக் கூட்டிக்கொண்டு வந்தார். “எங்களிடம் இந்தப் பணிக்குப் போதுமான பொருட்கள் இல்லாமலிருந்தும், சேதமடைந்திருந்த கட்டிடங்களினூடே நகர்ந்துசென்று உயிருடன் புதைந்து கிடந்த ஆட்களுக்ககாகத் தேடினோம். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
அவர்கள் எப்படி இரண்டு பேரை காப்பாற்றினார்கள் என்பதை அவர் விளக்குகிறார்: “சேதமடைந்த ஒரு உணவு விடுதிக்கு வந்த நாங்கள், அசைவுகளைக் கணிக்கும் ஒரு எலக்ட்ரானிக் சாதனத்தை பயன்படுத்தினோம். மனித உடலிலிருந்து வரும் சக்தியலைகளை அல்லது அசைவுகளைக்கூட கணிக்கவல்ல சாதனம் இது. இந்தச் சாதனம் எங்களிடம் இல்லையென்றால் சேதத்தில் சிக்கியிருந்த நான்கு பேரை நாங்கள் கண்டுபிடித்திருக்க முடியாது! ஒரு நீண்ட குழாய் வழியாய் அந்த விடுதியின் சரக்குக் கிடங்கிற்குள் தண்ணீரும் பிராணவாயுவும் செலுத்தினோம். அந்த அறைக்குள் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் பல நாட்களாக சிக்கிக்கிடந்தனர்.
“மீட்புக் குழு வெளியே காத்துக்கொண்டிருக்க நானும் பிரான்ஸிலிருந்து வந்த ஒரு நிபுணரும் அந்த இடிந்த அறைக்குள் செல்ல வழிவகுத்தோம். மதில்களும் தரையும் பலவீனமாக இருந்தால் அதையும் கணித்திடும் இந்த சாதனத்தைக் கொண்டு நாங்கள் முன்னேறினோம். சுவர்களையும் தரைகளையும் தொட்டுப் பார்க்கக் கற்றுக்கொடுக்கப்பட்டோம். கட்டிடத்தின் பகுதி இடிந்துவிழப்போகிறதென்றால், மதில்களுக்குள்ளிருந்து மண்விழுவதை நாங்கள் உணரமுடிந்தது. உயிருடன் சேதத்தில் அடைந்துகிடந்த ஆட்களிடம் செல்லுவதற்கு எங்களுக்கு ஏழு மணிநேரம் எடுத்தது.
“நாங்கள் அவர்களிடம் செல்லுவதற்கு முன்பு இரண்டுபேர் மரித்துவிட்டார்கள். இரண்டு பெண்கள் மரித்த நிலையை எட்டினார்கள். ஆனால் அவர்களுடைய வாயோடு வாய் வைத்து சுவாசிக்கும் முறையையும் இருதய மசாஜும் கொடுத்து 15 நிமிடம் கழித்து அவர்களை உயிர்பிழைக்கச் செய்தோம்! ஆம், எங்களுடைய முயற்சிகள் வீண்போகாமல் பலன்கண்டது!
எல்லாம் முடிந்ததா?
“வெள்ளிக்கிழமை மாலை, நில நடுக்கத்திற்கு மறுநாள்,” என்று காவற்கோபுர சங்கத்தின் மெக்ஸிக்கோ கிளைக்காரியாலய அங்கத்தினர் ஒருவர் விளக்க ஆரம்பித்தார். “செர்ஜியோ மாரன் என்பவரின் வீட்டை நான் பார்த்தேன். அவருடைய வீடு இரண்டாம் மாடியில் இருந்தது. சுவர்களில் வெடிப்பு காணப்பட்டது. பாரமான கூரைகளும் தரைகளும் பலவீனப்பட்டிருந்தது. ஆச்சரியமான செயல், கட்டிடம் பூமியதிர்ச்சியில் தகர்க்கப்படவில்லை. சுற்றுபுறத்திலிருந்த பல கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. மரித்த சடலங்களும் காயமுற்ற ஆட்களும் சூழ காணப்பட்டனர்.
“எங்கும் அழுத்தமான, வருத்தமான சூழ்நிலை. மருத்துவமனை வாகனங்கள் நாள் முழுவதும் போய்வந்துகொண்டிருந்தன. அருகாமையில் தானே ஒரு நீண்ட வரிசை மக்கள் கூட்டம், இறந்து கிடந்த தங்கள் உறவினர் மற்றும் நண்பரின் சடலங்களை அடையாளம் காண நின்றுகொண்டிருந்தனர். ஒரு நாள் முழுவதையும் அந்த பிராந்தியத்தைக் கால்நடையாகவே சுற்றிப் பார்த்து வந்தேன். அநேக தெருக்களில் செல்லமுடியாத நிலை, ஏனென்றால் உயர்ந்த கட்டிடங்கள் சாய்ந்த நிலையிலிருந்தன, எந்த நிமிடத்திலும் அவை இடிந்துவிழக்கூடும். இடிந்தகிடந்த கற்களிடையே உதவிக்காக குரல்கொடுத்துக் கொண்டிருந்த ஆட்களைக் பார்க்கும்போதும் அவர்கள் சப்தத்தைக் கேட்கும்பொழுதும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நான் செல்கியோ மாரனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று இரண்டாவது நடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஒரே நிசப்தம். “நான் வெறுமனே கற்பனை செய்துகொண்டிருக்கிறேனா?” என்று என்னையே கேட்டுக்கொண்டேன். அப்போது மின்விளக்குகளெல்லம் அணைந்துவிட்டன. கடிகாரங்கள் மாலை 7:38-ல் நின்றுவிட்டன—முதல் நடுக்கத்திற்குப் பின்பு 36 மணிநேரங்கள் கடந்து இந்த நிலநடுக்கம், நான் இருந்த கட்டிடம் முன்னும் பின்னுமாக அசைந்தது. என் சந்தேகங்களனைத்தும் கலைந்தன. எல்லாம் மீண்டும் சம்பவிக்கிறது!
இரண்டாம் மாடியிலிருந்த நாங்கள் நிலைகால்களைத் தடவிச்சென்று அவற்றிற்கு இடையே நின்றுகொண்டோம். யெகோவாவின் உதவிக்காக நாங்கள் ஊக்கத்தோடே ஜெபித்தோம். கட்டிடம் அசைந்த சமயத்தில், கடுமையான இடிந்துவிழும் சப்தம் எங்கள் தலைகளுக்கு மேலிருந்து இறங்குவதைக் கேட்டோம். வீட்டின் நிலைமையைப் பார்த்த நான், கட்டிடம் தரைமட்டமாகிவிடும் என்று நிச்சயமாயிருந்தேன்! என்றபோதிலும் அது அப்படியே நின்றுவிட்டது, நாங்கள் பத்திரமாக சாலைக்கு வந்துவிட்டோம், அங்கே ஒரே அழுகையும் கூச்சலும், குழப்பமும், அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்ற நிச்சயமும் இல்லாத நிலை.
“நல்லவேளையாக, முதல் நடுக்கம் பாதித்த அளவுக்கு இரண்டாம் நடுக்கம் அந்தப் பிராந்தியத்தை பாதிக்கவில்லை. முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்த பன்னிரண்டு நாட்களில் நிலநடுக்க அளவைக்கணிக்கும் ரீச்டர் மாணி அளவில் 3.5 மற்றும் 7.3 ஆக இருந்த 73 நடுக்கங்களைப் பதிவு செய்திருக்கின்றன!”
“மகா பூமியதிர்ச்சிகள் உண்டாகும்”
நாம் “இந்த ஒழுங்குமுறையின் முடிவில்” இருக்கிறோம் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டும் “அடையாளத்”தின் ஓர் அம்சமாக கிறிஸ்து இயேசு “பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்” என்றார். (மத்தேயு 24:3, 7) அவர் சாதாரணமான நடுக்கங்களைக் குறித்து பேசவில்லை; மாறாக, “மகா பூமியதிர்ச்சிகள்” என்று குறிப்பிட்டார். (லூக்கா 21:11) இப்படியாக, மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட இந்தப் பெரும் அழிவு—1914முதல் ஏற்பட்டிருக்கும் 600-க்கும் அதிகமான பெரிய பூமியதிர்ச்சிகள் உட்பட—நம்முடைய நாளுக்கான பைபிள் தீர்க்கதரிசனத்தின் உண்மைக்கு சான்றளிக்கின்றன.
மெக்ஸிக்கோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள்—சற்றுநேரத்திற்கு ஆச்சரியப்பட நேர்ந்தது என்றாலும்—கிறிஸ்து இயேசுவின் ஆறுதலான வார்த்தைகளை மதித்துணருகிறார்கள்: “இவைகள் [அடையாளத்தின் வித்தியாசமான அம்சங்கள்] சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.” (லூக்கா 21:28) ஆம், ஓர் ஒளிமயமான எதிர்காலம் நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கிறது. கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையில், அவருடைய மக்கள் பூமியதிர்ச்சிகளிலிருந்தும், பல இயற்கை சேதங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
இந்தப் பெரும் சேதத்தில் குறைந்தபட்சம் 38 யெகோவாவின் சாட்சிகளும் அவர்களுடைய கூட்டாளிகளும் தங்கள் ஜீவனை இழந்தார்கள். ஏராளமான பொருள் சம்பந்தமான சேதமும் இருந்தது. குறைந்தபட்சம் 146 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்தார்கள். பைபிள் குறிப்பிடுவதுபோல் “சமயமும் எதிர்பாராத சம்பவங்களும்” ஏற்படுவதால் கவலைக்குரிய நிலைமைகள் நம் எவரையும் பாதிக்கக்கூடும்.—பிரசங்கி 9:11.
அன்பான உதவி
என்றபோதிலும், பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் எல்லோரையும் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. “அப்படிப்பட்ட அன்பான கரிசனையைப் பார்ப்பது ஆச்சரியமாயிருக்கிறது,” என்கிறார் விக்டர் காஸ்டெல்லனாஸ். 5,000 கிலோவுக்கும் (11,000 பவுண்டு) அதிகமான உணவு பாதிக்கப்பட்ட இடங்களுக்கெல்லாம் கிடைத்தது. பாதிக்கப்படாத பகுதிகளிலிருந்த குடும்பங்கள் வீடுகளை இழந்த கிறிஸ்தவ சகோதரர்களை கவனித்துக்கொண்டார்கள்.
தங்களுடைய உயிரைக் காத்துக் கொண்டவர்களாக ஜுவர் கேவஸும், அவருடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் பள்ளிக்குச் சென்றிருந்த தங்களுடைய மற்ற இரண்டு பிள்ளைகளைத் தேடுவதற்காகப் புறப்பட்டார்கள். வீட்டிற்கு ஆறு பேராகத் திரும்பிய அந்தக் குடும்பம் தங்களுடைய வீட்டில் வட்டார கண்காணியும் அந்தப் பிராந்தியத்திலுள்ள மூப்பர்களும் உட்பட்ட ஒரு கிறிஸ்தவ சகோதர கூட்டத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
“நாங்கள் இன்னும் இடிந்த கட்டிடங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம், எங்களுக்கு உதவி தேவைப்படும் என்று அவர்கள் நினைத்தார்கள்,” என்று திருமதி கேவஸ் கூறுகிறார்கள். “ஆச்சரியமாயிருந்தது! எங்களுக்கு உதவி செய்ய விரைந்த சில சாட்சிகளை நாங்கள் முன்பு சந்தித்ததேயில்லை.”
ஆம், கொலைக்கார பூமியதிர்ச்சி, மெக்ஸிக்கோவில் அதன் காயங்களை விட்டுச் சென்றபோதிலும், அது யெகோவாவின் சாட்சிகளுடைய விசுவாசத்தையும் தைரியத்தையும் மோசமான விதத்தில் பாதிக்கவில்லை. திருமதி மெலண்ட்ரஸ் சொன்னதாவது: “நாங்கள் சந்தித்த எல்லோரிடமும் ராஜ்ய நம்பிக்கையை பிரஸ்தாபப்படுத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டோம். யெகோவாவை சேவிக்கும் எங்கள் முயற்சிகளை இந்தப் பூமியதிர்ச்சி எந்தவிதத்திலும் மட்டுப்படுத்த முடியவில்லை. மாறாக எங்களுடைய விசுவாசத்தில் அதிக பலப்பட்டவர்களாகவும் அதிக தீர்மானமுள்ளவர்களாகவும் உணருகிறோம். (g86 2/22)
[பக்கம் 14-ன் படம்]
ஜோஸ் மெலண்டிரஸும் (தந்தை) அவருடைய மனைவியும் அவர்கள் குடியிருந்த கட்டிடமும்
[பக்கம் 15-ன் படம்]
ஜுடித் ராமிரெஸ் கானலெப் பள்ளி இடிந்து விழுந்தபோது உயிர் தப்பினாள்