இளைஞர் கேட்கின்றனர் . . .
ஸ்கூல் பிள்ளைகள் யாராவது பார்த்துவிட்டால்?
“திங்கக்கிழமையானா ஸ்கூலுக்குப் போறது கொடுமையிலும் கொடுமை. என் பிரெண்ட்ஸுங்க யாராவது என்னைப் பாத்திருந்ததா சொன்னா, நம்பற மாதிரி அழகா எதையாவது சொல்லி சமாளிச்சிடுவேன். உதாரணமா, உழைப்பாளர் கட்சிக்காக நிதி திரட்டப் போயிருந்ததா என் பிரெண்ட்ஸுங்க கிட்ட சும்மாவாவது கதைவிட்டிருவேன்.”—ஜேம்ஸ், இங்கிலாந்து.
“என்னை பாத்தவங்க ஸ்கூலுக்கு போனப்போ என்னை கேலி பண்ணினாங்க. என்னால தாங்கவே முடியல.”—டிபோரா, பிரேஸில்.
எங்கே தங்கள் பிரெண்ட்ஸ் பார்த்துவிடுவார்களோ என ஏன் இந்த இளைஞர்கள் இப்படி பயந்து சாகிறார்கள்? ஏதோ சட்டவிரோதமான காரியத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்களா? இல்லவே இல்லை, அவர்கள் இன்று பூமியில் செய்யப்பட்டு வரும் பெரும் மதிப்புக்குரியதும் மிக முக்கியமானதுமான வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” என இயேசு கட்டளையிட்ட வேலையையே அவர்கள் செய்தார்கள்.—மத்தேயு 28:19, 20.
ஐ.மா. கெல்லப் சுற்றாய்வின்படி, 90 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வாரா வாரம் சர்ச்சுக்குப் போகிறவர்கள். சர்ச் பாடகர் குழுவில் பாடுவது போன்ற சர்ச் பொறுப்பேற்று நடத்தும் காரியங்களில் அநேக இளைஞர்கள் பங்குகொண்டாலும் அவர்களில் வெகு சிலரே கடவுளைப் பற்றி ஒருவரோடொருவர் பேசுகிறார்கள். எனினும் யெகோவாவின் சாட்சிகள் வீடுகள் தோறும் சென்று பிரசங்கிப்பது உலகறிந்த உண்மை. ஆயிரக்கணக்கான இளம் சாட்சிகள் இந்த ஊழியத்தில் பங்குகொள்கிறார்கள்.
நீங்கள் ஓர் இளம் சாட்சியென்றால், ஏற்கெனவே இந்தப் பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்ள ஆரம்பித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அதை நீங்கள் உண்மையிலேயே ரொம்ப சுலபமாக செய்கிறீர்கள் என அர்த்தப்படுத்தாது. ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட இளைஞர்களைப் போல், பள்ளி சகாக்களை ஊழியத்தில் சந்திக்க வாய்ப்பிருப்பதை நினைத்தாலே உங்களுக்குக் கவலையாக இருக்கலாம். “பாக்க நேர்த்தியா, ஸ்கர்ட் போட்டுக்கிட்டு, கையில புக் பேக்கையும் பிடிச்சுக்கிட்டு, ஸ்கூலுக்கு போறதைவிட ஒழுங்கா டிரஸ் பண்ணிக்கிட்டு போறதை என் ஸ்கூல் பிள்ளைங்க யாராவது பாத்துட்டாங்கன்னா அதைவிடவும் கஷ்டகாலம் வேற இல்லவே இல்ல” என இங்கிலாந்தை சேர்ந்த ஜென்னி என்ற இளம் பெண் ஒத்துக்கொள்கிறாள்.
ஸ்கூல் பிள்ளைகளை பார்த்துவிடுவோமோ என்ற பயம் பிடுங்குகையில் சில இளம் கிறிஸ்தவர்கள் தந்திரமாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள். “ஊழியத்திற்கு வருகையில் தலையை மூடமுடிந்த ஜாக்கெட்டை அணிந்து வரும் ஓர் இளம் சாட்சியை எனக்குத் தெரியும். அவனுடைய ஸ்கூல் பிரெண்ட்ஸை பார்த்துட்டான்னா போதும் உடனே தலையை மூடுகிற துணியை முகம் வரைக்கும் இழுத்துவிட்டுக்குவான்” என்கிறான் லியான் என்ற இளைஞன். இன்னும் சில இளைஞர்கள் சில பகுதிகளில் பிரசங்க ஊழியம் செய்வதையே அடியோடு தவிர்க்கிறார்கள். “ஒரு குறிப்பிட்ட தெருவில் ஊழியத்திற்குப் போய்விடக்கூடாதே என ஜெபித்தது எனக்கு நினைவு இருக்கிறது. ஏன்னா அந்தத் தெருவில எனக்குத் தெரிஞ்ச ஸ்கூல் பிள்ளைங்க எக்கச்சக்கமா இருந்தாங்க” என சொல்கிறான் சைமன் என்ற இளைஞன்.
ஊழியத்தின் போது உங்களுக்கு அறிமுகமான ஒருவரை சந்திக்க நேரிடுகையில் கொஞ்சம் தர்மசங்கடமாக உணருவது சகஜம்தான். எனினும், அந்தப் பயம் உங்களை கட்டுப்படுத்த அனுமதித்தால் அதனால் உங்களுக்கு வேதனைதான் மிஞ்சும். “ஊழியம்னாலே எனக்கு சுத்தமா பிடிக்காம இருந்தது. அதனால நான் ஆவிக்குரிய விதமா ரொம்ப பாதிக்கப்பட்டிருந்தேன்” என ஒப்புக்கொள்கிறாள் ஜெர்மனியை சேர்ந்த ஆலிஸா.
அப்படியானால், நீங்கள் ஏன் பிரசங்கிக்க வேண்டும்—அதிலும் முக்கியமாய் உங்களுக்கு அதிக கஷ்டமாக இருந்தால் ஏன் போக வேண்டும்? பதிலறிய, கடவுள் ஏன் இந்தப் பொறுப்பை உங்கள்மீது சுமத்தியிருக்கிறார் என்பதை நாம் கலந்தாலோசிப்போம். பின்னர், முயற்சியோடும் திடதீர்மானத்தோடும் உங்கள் பயத்தை மேற்கொள்வது எப்படி சாத்தியம் என்பதை காண்போம்.
பிரசங்கிக்கும் பொறுப்பு
மற்றவர்களுடன் உங்கள் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்வது புதிதானதோ அசாதாரணமானதோ அல்ல என்ற உண்மையை முதலாவது நீங்கள் புரிந்துகொள்வது உங்களுக்கு உதவலாம். பூர்வ காலம் முதற்கொண்டே, கடவுள் பயமுள்ள ஆண்களும் பெண்களும் தங்கள் விசுவாசத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு நோவாவை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் பிரமாண்டமான பேழையைக் கட்டினது யாவரும் அறிந்த விஷயம். (ஆதியாகமம் 6:14-16) ஆனால் 2 பேதுரு 2:5-ன்படி அவர் ‘நீதியைப் பிரசங்கித்தவராகவும்’ இருந்தார். வரவிருக்கும் அழிவைக் குறித்து மற்றவர்களுக்கு எச்சரிக்க வேண்டிய பொறுப்பை நோவா உணர்ந்தார்.—மத்தேயு 24:37-39.
பின்னர், யூதரல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி குறிப்பான எந்தக் கட்டளைகளும் யூதர்களுக்குக் கொடுக்கப்படாத போதிலும் அநேகர் தங்களுடைய விசுவாசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். இவ்வாறு அந்நிய தேசத்தாளான ரூத் என்ற பெண் யெகோவாவைப் பற்றி அறிந்துகொண்டாள். யூத குலத்தை சேர்ந்த தன் மாமி நகோமிக்கு நன்றியுள்ளவளாக இருப்பதை ரூத் இவ்வாறு தெரிவித்தாள்: “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.” (ரூத் 1:16) பின்னர், யூதரல்லாத அநேகர் யெகோவாவின் “மகத்துவமான நாமத்தை” கேட்டறிந்து அவருடைய ஆலயத்தில் அவரை வழிபட வருவார்கள் என சாலொமோன் ராஜா சொன்னார்.—1 இராஜாக்கள் 8:41, 42.
மற்றவர்களிடம் பேசும்படி நேரடியாக எந்தக் கட்டளையையும் பெறாதபோதிலும் கடவுளுடைய இந்தப் பூர்வ ஊழியர்கள் அவரைக் குறித்து பேசினார்கள் என்றால் இன்றைய கிறிஸ்தவர்கள் பிரசங்கிப்பதற்கான பொறுப்பை எந்தளவுக்கு உணர வேண்டும்! ‘ராஜ்யத்தினுடைய சுவிசேஷத்தை’ பிரசங்கிக்கும்படியான கட்டளையையும் நாம் பெற்றிருக்கிறோமே. (மத்தேயு 24:14) அப்போஸ்தலன் பவுலைப் போல், இந்த நற்செய்தியை அறிவிப்பது நம்மீது விழுந்த கடமையென உணருகிறோம். (1 கொரிந்தியர் 9:16) நம்முடைய இரட்சிப்பே ஆபத்திலுள்ளது. “கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்[டால்] . . . இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்” என ரோமர் 10:9, 10 சொல்கிறது.
எங்கே நீங்கள் “அறிக்கை பண்ண” முடியும்? சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் மூலம் பிரசங்கிப்பது பொருத்தமானதாக இருந்தாலும் மற்றவர்களை சந்திப்பதற்கு வீட்டுக்கு வீடு ஊழியம் அதிக திறம்பட்ட வழிகளில் ஒன்றாக இன்னமும் இருந்து வருகிறது. (அப்போஸ்தலர் 5:42; 20:20) நீங்கள் இளைஞராக இருக்கிற காரணத்தால் இந்த ஊழியத்தில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறீர்களா? இல்லவே இல்லை. ஏனெனில், “வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்” என சங்கீதம் 148:12, 13-ல் பைபிள் கட்டளை கொடுக்கிறது.
சகாக்களுக்குப் பிரசங்கிக்கும் சவால்
ஊழியத்திற்குப் போகையில், உங்கள் பள்ளியில் பயிலும் பிள்ளைகள் யாரையாவது பார்த்துவிட்டால் வெட்க உணர்வு தலைதூக்குவதும் மனதுக்குள் போராட்டம் நடப்பதும் ஒப்புக்கொள்ளத்தக்கதே. சொல்லப்போனால், மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது இயல்பானதே. கேலி கிண்டல் செய்யப்படவோ, குத்தலான பேச்சுக்களை கேட்கவோ, மோசமான ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகவோ யாரும் விரும்புவதில்லை. “ஸ்கூல் பிள்ளைங்க ரொம்ப பொல்லாததுங்க!” என விவரிக்கிறாள் டான்யா என்ற இளம் பெண். எனவே, நன்கு உடை உடுத்தி, கையில் பைபிளையும் எடுத்துக்கொண்டு சென்றால் ஸ்கூல் பிள்ளைகள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என யோசிக்கலாம். அவர்கள் உங்களை கேலிசெய்ய அதிக வாய்ப்பிருப்பது வருந்தத்தக்கது. “என் கிளாஸ்ல படிக்கிற பையன் ஒருத்தன் எங்க பில்டிங்ல இருந்தான். அவன் ‘அந்த பைபிளை தூக்கிக்கிட்டு புறப்பட்டுட்டியா! ஆமா, அந்த பிரீஃப்கேஸில என்ன இருக்கு?’ என கேட்பான்” என்று பிரேஸிலை சேர்ந்த ஃபிலிப்பி என்ற இளைஞன் சொல்கிறான்.
இப்படி கேலி கிண்டலுக்கு ஆளாவது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கு தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனாகிய இஸ்மவேலால் மோசமாக கேலி செய்யப்பட்டதைப் பற்றி பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 21:9) இப்படி மோசமாக நடத்தப்பட்டதை அப்போஸ்தலன் பவுல் அற்ப விஷயமாக கருதவில்லை. கலாத்தியர் 4:29-ல் (பொ.மொ.) அப்போஸ்தலன் அதை பொருத்தமாகவே ‘துன்புறுத்துதல்’ என அழைத்தார்.
அதைப்போலவே, தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் சிலர் பகைமை உணர்ச்சியோடு நடந்துகொள்வார்கள் என இயேசு எச்சரித்தார். “உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது” என அவர் சொன்னார்.—யோவான் 15:18, 19.
அப்படியானால், ஒரு கிறிஸ்தவராக ஓரளவு துன்புறுத்துதலை அனுபவிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். (2 தீமோத்தேயு 3:12) பைபிளைப் பற்றி உங்கள் சகாக்களிடம் வாயே திறக்கவில்லை என்றாலும் வெறுமனே உயர்ந்த ஒழுக்க தராதரங்களைக் கடைப்பிடிப்பதற்காகவும், மோசமான காரியங்களில் அவர்களுக்குத் துணைபோகாததற்காகவும்கூட சிலர் உங்களை துன்புறுத்தலாம். (1 பேதுரு 4:4) எனினும், “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள் [“சந்தோஷமுள்ளவர்களாய் இருப்பீர்கள்,” NW]” என ஆறுதலளிக்கும் இந்த வார்த்தைகளை இயேசு சொல்கிறார். (மத்தேயு 5:11) மற்றவர்கள் கேலி கிண்டல் செய்தாலோ குத்தலாக பேசினாலோ உங்களால் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்? யெகோவா தேவனின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பதால் உங்களால் முடியும். (நீதிமொழிகள் 27:11) யெகோவாவுக்குப் பிரியமானதை செய்வதால் நித்திய ஜீவன் எனும் பரிசைப் பெறப் போகிறவர்களில் ஒருவராக உங்களைக் காட்டுகிறீர்களே!—லூக்கா 10:25-28.
ஊழியத்தில் நீங்கள் சந்திக்கும் உங்கள் பள்ளி தோழர்கள் அனைவரும் அல்லது பெரும்பாலானோர்கூட உங்கள் செய்தியை அலட்சியப்படுத்த மாட்டார்கள் என்பது சந்தோஷமான விஷயம். “ஊழியத்தில் ஸ்கூல் பிரெண்ட்டை பார்த்தா பெரும்பாலும் உங்களைவிட அவங்கதான் ரொம்ப தர்மசங்கடமாக உணருவாங்க!” என இங்கிலாந்தை சேர்ந்த ஆஞ்சலா என்ற இளம் பெண் நமக்கு சொல்கிறாள். நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதில் சிலர் உண்மையில் அதிக ஆர்வம் காட்டலாம். எப்படியிருந்தாலும், அநேக இளம் கிறிஸ்தவர்கள் தங்கள் சக மாணவர்களுக்கு சாட்சி கொடுப்பதில் மாபெரும் வெற்றியை அனுபவித்து மகிழ்கிறார்கள். இதன் சம்பந்தமாக வெளியாகும் எமது அடுத்த தொடர் கட்டுரை நீங்களும் வெற்றி காண்பதற்கான சில வழிகளைப் பற்றி கலந்தாலோசிக்கும். (g02 2/22)
[பக்கம் 23-ன் படம்]
ஊழியத்தில் சக மாணவரை சந்தித்து விடுவோமோ என அநேக இளைஞர்கள் பயப்படுகின்றனர்
[பக்கம் 25-ன் படம்]
கேலிகிண்டல்கள் உங்கள் விசுவாசத்தைக் குறித்து வெட்கப்படும்படி செய்ய ஒருபோதும் இடங்கொடுக்காதீர்கள்