தாயின் மதிப்புமிக்க பங்கு
தாயின் பங்கை பெரும்பாலும் மக்கள் மதித்துணருவதே இல்லை, அற்பமாகக்கூட கருதுகின்றனர். சில பத்தாண்டுகளுக்கு முன்பு, பிள்ளைப் பராமரிப்பையும்கூட சிலர் மதிப்புக்குறைவாக பேச ஆரம்பித்துவிட்டனர். ஒரு வேலைக்குப் போவதோடு ஒப்பிடுகையில், இது அவ்வளவு முக்கியமல்ல என்றும் பெருஞ்சுமையானது என்றும்கூட அவர்கள் நினைத்தனர். இதெல்லாம் மிதமிஞ்சிய மனப்பான்மையென சிலர் கருதினாலும், ஒரு தாயாக வீட்டையும் பிள்ளைகளையும் பராமரிக்கும் வேலையை இரண்டாந்தர வேலையாக தாய்மாரை கருத வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பெண் தனக்கிருக்கும் திறமையை முழுமையாக வெளிக்கொணருவதற்கு வீட்டிற்கு வெளியே ஏதாவது ஒரு வேலையைத் தேடிக் கொள்ளத்தான் வேண்டும் என்றும்கூட சிலர் உணருகின்றனர்.
ஆனாலும் அநேக கணவன்மார்களும் பிள்ளைகளும் குடும்பத்தில் தாய் வகிக்கும் பாகத்தை மதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பிலிப்பைன்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் வேலை செய்து வரும் கார்லோ சொல்கிறார்: “என்னோட அம்மா கொடுத்த பயிற்றுவிப்பினால்தான் நான் இன்னிக்கு இங்கே இருக்கிறேன். என்னோட அப்பா கண்டிப்பானவராக இருந்தார். எதற்கெடுத்தாலும் தண்டித்தார். ஆனால் எங்க அம்மாதான் காரியங்களை விளக்கி நியாயத்தை எடுத்துக் காட்டி எங்களுக்குப் புரிய வச்சாங்க. அம்மா கற்பித்த விதத்தை நான் ரொம்ப மெச்சுகிறேன்.”
தென் ஆப்பிரிக்காவில் குறைந்த படிப்பறிவுடைய ஒரு தாயால் வளர்க்கப்பட்ட ஆறு பிள்ளைகளில் ஒருவர் பீட்டர். அவருடைய அப்பா குடும்பத்தை அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டார். பீட்டர் சொல்கிறார்: “என்னோட அம்மா வீடுகளிலும் அலுவலகங்களிலும் ஆயாவாக வேலை செய்தாங்க, அதனால அவங்களோட சம்பளம் போதவில்லை. எங்கள் எல்லோருடைய ஸ்கூல் ஃபீசையும் கட்டுவதே பெரும் பாடாய் இருந்தது. நிறைய நாள் பசியோடு தூங்கியிருக்கிறோம். வீட்டு வாடகை கட்டுவது அம்மாவுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. இது போன்ற எத்தனையோ கஷ்டங்களை அனுபவிச்சாலும், அம்மா ஒருபோதும் மனம் தளர்ந்துவிடவில்லை. மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது என்று அம்மா எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அம்மா மட்டும் அந்தளவுக்கு துணிச்சலுடன் எங்களை வளர்க்காதிருந்தால், வாழ்க்கையில நாங்க இந்த நிலைக்கு வந்திருக்கவே முடியாது.”
பிள்ளைகளை வளர்ப்பதற்கு தன் மனைவி தரும் ஒத்துழைப்பை பற்றி நைஜீரியாவில் வாழும் அஹ்மத் இவ்வாறு சொல்கிறார்: “என் மனைவி வகிக்கும் பாகத்தை நான் ரொம்பவே மதிக்கிறேன். நான் வீட்டில் இல்லாதபோதும்கூட என் பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் இல்லை என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் மனைவி எனக்கு போட்டியாக இருக்கிறாள் என்று நினைப்பதற்குப் பதிலாக, நான் அவளுக்கு நன்றி சொல்கிறேன். எனக்குக் கொடுக்கிற அதேயளவு மரியாதையை அவளுக்கும் கொடுக்க வேண்டும் என்று என் பிள்ளைகளுக்கு சொல்லி வருகிறேன்.”
தன் மனைவி சிறந்த தாயாக இருப்பதைக் குறித்து பாலஸ்தீனா நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகழ்ந்து சொல்வதாவது: “எங்கள் மகளை வளர்ப்பதற்கு லீனா நிறைய காரியங்களைச் செய்திருக்கிறாள்; குடும்பத்தின் ஆன்மீக தன்மையை வளர்ப்பதிலும் சிறந்த ஒரு பங்கை வகிக்கிறாள். என்னைப் பொறுத்த வரையில் அவளுடைய மத நம்பிக்கைகளே அவளுடைய வெற்றிக்குக் காரணம்.” லீனா ஒரு யெகோவாவின் சாட்சி, எனவே பைபிள் நியமங்களின் அடிப்படையில் தன்னுடைய மகளுக்குக் கற்பிக்கிறாள்.
அந்த நியமங்களில் சில யாவை? தாய்மாரை பைபிள் எவ்வாறு கருதுகிறது? பண்டைய காலங்களில் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவதில் தாய்மாருக்கு எப்படி மதிப்பும் மரியாதையுமிக்க ஸ்தானம் கொடுக்கப்பட்டது?
தாய்மார் பற்றிய சமநிலையான நோக்கு
கடவுள் பெண்ணைப் படைத்தபோது குடும்ப ஏற்பாட்டில் ஒரு மதிப்புக்குரிய ஸ்தானத்தை அவளுக்குக் கொடுத்தார். பைபிளின் முதல் புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.” (ஆதியாகமம் 2:18) முதல் ஸ்திரீயாகிய ஏவாளுக்கு ஆதாமின் ஏற்ற துணையாக அல்லது நிறைவுசெய்யும் துணையாக இருக்கும் ஸ்தானத்தைக் கொடுத்தார். ஆதாமுக்கு ஏற்ற துணையாக இருக்கும்படியே அவள் படைக்கப்பட்டாள். பிள்ளைகளைப் பெற்று வளர்க்கவும், பூமியைப் பண்படுத்தவும், அதிலுள்ள மிருகங்களைப் பராமரிக்கவும் வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கத்தில் அவளுக்கு பங்கு இருந்தது. உண்மையான நண்பனாகிய தன் கணவன் அறிவுஜீவியாக திகழ்வதற்கு தூண்டுபவளாகவும் உற்சாகமூட்டுபவளாகவும் அவள் இருக்க வேண்டியிருந்தது. இப்படியொரு சிறந்த பரிசை சிருஷ்டிகரிடமிருந்து பெற்றதற்கு ஆதாம் எவ்வளவு சந்தோஷமுள்ளவனாக இருந்தான்!—ஆதியாகமம் 1:26-28; 2:23.
பிற்பாடு, பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு சில நெறிமுறைகளை கடவுள் ஏற்படுத்தினார். உதாரணமாக, இஸ்ரவேல் தாய்மார் வெறுப்புக்குரியவர்களாக இல்லாமல் கனத்திற்குரியவர்களாக நடத்தப்பட வேண்டியிருந்தது. ஒரு மகன் ‘தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபித்தால்’ அவன் மரண தண்டனைக்கு ஆளாக்கப்படுவான். கிறிஸ்தவ இளைஞர்கள் ‘தங்கள் பெற்றாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ என்று ஊக்குவிக்கப்பட்டார்கள்.—லேவியராகமம் 19:3; 20:9; எபேசியர் 6:1; உபாகமம் 5:16; 27:16; நீதிமொழிகள் 30:17.
கணவனுடைய வழிநடத்துதலின்கீழ், மகள்களுக்கும் சரி மகன்களுக்கும் சரி, தாய் கற்பிக்க வேண்டியிருந்தது. ஒரு மகன் தன் ‘தாயின் போதகத்தைத் தள்ளிவிடக் கூடாது’ என்ற கட்டளை இருந்தது. (நீதிமொழிகள் 6:20) மேலும், நீதிமொழிகள் 31-ம் அதிகாரம் ‘[ராஜாவாகிய லேமுவேலுடைய] தாய் அவனுக்குப் போதித்த உபதேசத்தைப்’ பற்றி சொல்கிறது. மதுபானத்தை தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி தன் மகனுக்கு ஞானமான அறிவுரையை இவ்வாறு அவள் கொடுத்தாள்: ‘திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. மதுபானம் பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.’—நீதிமொழிகள் 31:1, 4, 5.
மேலுமாக, திருமணத்தைக் குறித்து சிந்திக்கும் ஒவ்வொரு இளைஞரும் ராஜாவாகிய லேமுவேலின் தாய் விவரித்த “குணசாலியான ஸ்திரீயை” கவனத்தில் கொள்வது ஞானமாயிருக்கும், அவள் சொன்னாள்: “அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது.” குடும்பத்தில் அப்படிப்பட்டவள் வகிக்கும் முக்கியமான பங்கை குறித்து விவரித்தப் பிறகு, அந்த ராஜாவின் தாய் இவ்வாறு சொன்னாள்: “செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.” (நீதிமொழிகள் 31:10-31) தெளிவாகவே, குடும்பத்தில் கனத்திற்குரிய ஸ்தானத்தையும் பொறுப்பையும் பெறுவதற்கே பெண்களை நம்முடைய சிருஷ்டிகர் படைத்தார்.
கிறிஸ்தவ சபையில் மனைவிகளும் தாய்களும் மதிக்கப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள். எபேசியர் 5:25 சொல்கிறது: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்.” “பரிசுத்த வேத எழுத்துக்களை” மதிக்கும்படி தாய் மற்றும் பாட்டியால் கற்றுக்கொடுக்கப்பட்ட இளம் தீமோத்தேயுவுக்கு இந்தத் தெய்வீக ஆலோசனை கொடுக்கப்பட்டது: ‘முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போல . . . பாவி.’ (2 தீமோத்தேயு 3:15; 1 தீமோத்தேயு 5:1, 2) எனவே, ஒரு நபர் வயதான ஒரு பெண்ணை தன் தாயைப் போல பாவித்து கனம்பண்ண வேண்டும். உண்மையில், பெண்கள் கடவுளுடைய பார்வையில் மதிப்புமிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கண்ணியமான ஸ்தானத்தை அவர் கொடுக்கிறார்.
பாராட்டு தெரிவியுங்கள்
பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்ட கலாச்சாரத்தில் வளர்ந்த ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த கல்வியையே நான் பெற்றேன். பெண்கள் தவறாக நடத்தப்பட்டதையும் மரியாதையில்லாமல் நடத்தப்பட்டதையும் நான் கவனித்திருக்கிறேன். எனவே பெண்களை கடவுள் பார்க்கும் விதமாக பார்ப்பதற்கு நான் கடுமையாக போராட வேண்டியிருந்தது; குடும்பத்திலும் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் சமயத்திலும் எனக்கு துணையாகவும் உதவியாளராகவும் என் மனைவியைக் கருதுவது மிகவும் கடினமாக இருந்தது. அவளை நேரடியாக பாராட்டுவது எனக்கு கஷ்டம் என்றாலும், என்னுடைய பிள்ளைகளில் நான் காணும் நல்ல குணங்கள் எல்லாமே அவளுடைய கடின உழைப்பின் பலன்கள்தான் என்பதை என்னால் மறுக்க முடியாது.”
கற்பிக்கும் பொறுப்பை ஏற்கும் தாய்மார் எல்லாருமே தங்கள் பங்கை நினைத்து பெருமைப்பட வேண்டும். அது உண்மையிலேயே மதிப்புவாய்ந்த வேலை. நம்முடைய பாராட்டுதலையும் உள்ளப்பூர்வ போற்றுதலையும் பெறுவதற்கு அவர்கள் உண்மையில் தகுதிவாய்ந்தவர்களே. நாம் நம்முடைய அம்மாமாரிடமிருந்து அதிகத்தைக் கற்றுக்கொள்கிறோம்; வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் பழக்கங்கள், சிறந்த உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு உதவும் நல்நடத்தைகள், இன்னும் பல சந்தர்ப்பங்களில் இளைஞர்கள் சரியான பாதையில் செல்வதற்கு உதவும் ஒழுக்க மற்றும் ஆன்மீக அடிப்படையிலான வளர்ப்பு முறைகள் ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறோம். உங்களுக்காக உங்களுடைய அம்மா செய்த காரியங்களுக்கு சமீபத்தில் எப்பொழுதாவது உங்கள் பாராட்டை தெரிவித்தீர்களா? (g05 2/22)
[பக்கம் 9-ன் படம்]
சோர்ந்துவிடக்கூடாது என்று பீட்டருடைய அம்மா அவனுக்கு சொல்லிக் கொடுத்தார்
[பக்கம் 10-ன் படம்]
பிள்ளைகளை வளர்க்க தன் மனைவி அளிக்கும் உதவியை அஹ்மத் மிகவும் பாராட்டுகிறார்
[பக்கம் 10-ன் படம்]
தன் மனைவியின் மத நம்பிக்கைகளே தன் மகளின் நல்நடத்தைக்கு காரணம் என்று லீனாவின் கணவர் உணருகிறார்