ஒரு தாயாக திருப்தி காண . . .
இன்றைய உலகில் பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போகிறார்கள். தொழில்மயமான நாடுகளில் கிட்டத்தட்ட ஆண்களுக்குச் சமமாய் பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறார்கள். வளரும் நாடுகளில், பெரும்பாலும் பெண்கள் தங்கள் குடும்பத்தைப் பராமரிக்க காடுகரைகளில் பல மணிநேரம் மாடாய் உழைத்து ஓடாய் தேய்கிறார்கள்.
அநேக பெண்கள், வயிற்றுப்பாட்டுக்காக வேலைக்குப் போக வேண்டிய அவசியத்துக்கும், குடும்பத்தாரையும் வீட்டையும் பராமரிக்க வேண்டுமென்ற ஆசைக்கும் இடையே இருதலைக்கொள்ளி எறும்பாய் சிக்கித் தவிக்கிறார்கள். உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிற்காக சம்பாதிக்கிறார்கள்; அதோடு, சமைக்கிறார்கள், துவைக்கிறார்கள், வீட்டைச் சுத்தம் செய்கிறார்கள்.
மேலும், கடவுளோடு நெருங்கிய பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க கிறிஸ்தவ தாய்மார்கள் முயற்சி செய்கிறார்கள். “என்னைப் பொறுத்தவரை, வேலைக்கும் போய்க்கொண்டு, குடும்பத்தையும் கவனித்துக்கொள்வது பெரும்பாடாய் இருக்கிறது, அதிலும் சின்னப் பிள்ளைகள் இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்களிடம் முழு கவனம் செலுத்துவது எளிதல்ல” என்று சொல்கிறார் இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாயான கிறீஸ்டீனா.
தாய்மார்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது? அவர்கள் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறார்கள்? ஒரு தாய் வேலைக்குப் போய்ச் சம்பாதித்தால்தான் திருப்தி காண முடியுமா?
ஏன் வேலைக்குப் போகிறார்கள்?
அநேக தாய்மார்கள் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். குடும்பச் சுமைகளைச் சுமப்பதில் தோள்கொடுக்கும் துணைவர் சிலருக்கு இல்லை. இன்னும் சில தம்பதியர், ஒருவருடைய சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியாது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.
உண்மையில், பணம் சம்பாதிப்பதற்காகவே எல்லாத் தாய்மார்களும் வேலைக்குப் போகிறார்கள் எனச் சொல்ல முடியாது. சுயமரியாதை அதிகமாகும் என்ற எண்ணத்தில் எக்கச்சக்கமானோர் வேலைக்குப் போகிறார்கள். தன் இஷ்டப்படி செலவு செய்வதற்கோ சொகுசாக வாழ்வதற்கோ சிலர் வேலைக்குப் போகலாம். அநேகர் தங்கள் வேலையில் கெட்டிக்காரர்களாய் விளங்குவதோடு, அதில் இன்பமும் காண்கிறார்கள்.
நண்பர்களின் வற்புறுத்தல் தாய்மார்கள் சிலர் வேலைக்குப் போவதற்கான மற்றொரு காரணமாகும். வேலைக்குப் போகிற பெரும்பாலான தாய்மார்கள், மன அழுத்தத்தோடும் உடல் களைப்போடும் சதா மல்லுக்கட்டுவதை அநேகர் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும், வேலைக்குப் போகாத தாய்மார்களைப்பற்றிப் பெரும்பாலும் தப்புக்கணக்குப் போடுகிறார்கள், கேலிகிண்டலும் செய்கிறார்கள். “நீங்கள் ‘ஓர் இல்லத்தரசிதான்’ என மற்றவர்களிடம் சொல்வது ஒன்றும் அவ்வளவு சுலபமல்ல. நீங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறீர்கள் என்பதை சிலர் தங்கள் வார்த்தைகளிலோ முகபாவனையிலோ நாசூக்காகச் சொல்லிவிடுகிறார்கள்” என்று ஒரு பெண் சொன்னார். “பெண்கள் தங்கள் பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்க்க வேண்டுமென நம்முடைய சமுதாயம் எதிர்பார்க்கிறது. ஆனாலும், வேலைக்குப் போகாத தாய்மார்களை அது மட்டமாகவே கருதுகிறதென நான் நினைக்கிறேன்” என்று இரண்டு வயது மகளை உடைய ரெபெக்கா சொல்கிறார்.
கட்டுக்கதையும் நிஜமும்
சில நாடுகளில், தான் விரும்பிய துறையில் வெற்றிக்கொடி நாட்டுகிற பெண்ணை “இலட்சியப் பெண்மணியாக” மீடியா சித்தரிக்கிறது; ஆம், அவள் கைநிறைய சம்பாதித்து, பளிச்சென உடுத்தி, தன்னம்பிக்கை சிகரமாக வளைய வருவதாக அது சித்தரிக்கிறது. வீட்டுப் படியேறியதும் பிள்ளைகளின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க, தன் கணவரின் தவறுகளைச் சரிசெய்ய, வீட்டில் தலைதூக்குகிற எந்த நெருக்கடி நிலையையும் சமாளிக்க அவளுக்குத் தெம்பு இருப்பதாகக் காட்டுகிறது. உண்மையில், விரல்விட்டு எண்ண முடிந்த அளவுக்குச் சொற்ப பெண்மணிகளால்தான் இவ்வாறு இருக்க முடியும்.
ஆனால், பெண்களுக்கு அளிக்கப்படும் அநேக வேலைகள் இயந்திரத்தனமானவையாகவும், மிகக் குறைந்த சம்பளம் கிடைப்பவையாகவும் இருப்பதே நிஜம். தங்களிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை முழுமையாய் வெளிப்படுத்தும் வாய்ப்பு தங்கள் வேலையில் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம், வேலைக்குப் போகிற தாய்மார்களுக்கு இருக்கலாம். “ஆணும் பெண்ணும் சமம் என்ற இலக்கை நோக்கி முன்னேறினாலும், எப்போதும் ஆண்களுக்குத்தான் கைநிறைய சம்பளமும், உயர் பதவியும் கிடைக்கின்றன. எனவே, தாங்கள் பார்க்கிற வேலையை வைத்து தங்கள் சுயமரியாதையை மதிப்பிட்டுக்கொள்ளும் பெண்களே இதில் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்” என்று சமூக உளவியல் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது. “பெரும்பாலான பெண்கள் வீட்டிலும் வெளியிலும் வேலை பார்க்கிறார்கள். ஆகவே, மன அழுத்தத்தால் வரும் சோர்வுடன் போராடுவதற்கான வாய்ப்பு ஆண்களைவிட பெண்களுக்கு மூன்று மடங்கு அதிகமுள்ளது” என்று ஸ்பெயினில் வெளியாகும் எல் பாயீஸ் என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
கணவர்கள் எப்படி உதவலாம்?
கிறிஸ்தவ தாய் வேலைக்குப் போக வேண்டுமா, வேண்டாமா என்பது அவரவரது தனிப்பட்ட தீர்மானம் என்பது உண்மைதான். எனினும், அவள் தன் கணவருடன் கலந்துபேசி, உட்பட்டுள்ள எல்லா அம்சங்களையும் கவனமாய் சீர்தூக்கிப் பார்த்து, இருவருமாய் சேர்ந்து தீர்மானம் எடுக்க வேண்டும்.—நீதிமொழிகள் 14:15.
குடும்பத்தை நடத்த இரண்டு பேருமே வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் இருப்பதாக ஒரு தம்பதியர் நினைத்தால் என்ன செய்யலாம்? அத்தகைய சூழ்நிலையில், ஞானமுள்ள ஒரு கணவர் முக்கியமாக பைபிள் தரும் பின்வரும் புத்திமதிக்குக் கவனம் செலுத்துவார். அது சொல்வதாவது: “அவ்வாறே கணவன்மாராகிய நீங்களும் உங்கள் மனைவியரோடு திருமண வாழ்வு பற்றிய (கிறிஸ்தவ) புரிந்துகொள்ளுதலின்படி வாழவேண்டும். நீங்கள் உங்கள் மனைவியரை மதிக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் உங்களைக் காட்டிலும் எளியவர்கள். அதே சமயத்தில் உங்களுக்கு வாழ்வளித்த தேவனுடைய கிருபையில் அவர்களும் கூட்டு வாரிசுதாரர்கள் ஆவார்கள்.” (1 பேதுரு 3:7, ஈஸி டு ரீட் வர்ஷன்) உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் தன் மனைவியின் வரையறைகளை உடனடியாகப் புரிந்துகொண்டு நடப்பதன்மூலம் ஒரு கணவர் அவளுக்கு மதிப்புக் கொடுக்கிறார். முடிந்தபோதெல்லாம், வீட்டு வேலைகளில் தன் மனைவிக்கு ஒத்தாசை செய்வார். அவர் இயேசுவைப் பின்பற்றுகிறவராக, எளிய வேலைகளையும் தாழ்மையோடு செய்ய மனமுள்ளவராய் இருப்பார்; அத்தகைய வேலைகளைச் செய்வதைக் கௌரவக் குறைச்சலாகக் கருத மாட்டார். (யோவான் 13:12-15) இந்த வேலைகளை, ஓய்வொழிச்சலின்றி பம்பரமாய் சுழலுகிற தன் மனைவிமீது தனக்கிருக்கும் அன்பை வெளிக்காட்ட கிடைத்த வாய்ப்புகளாகக் கருதுவார். இத்தகைய உதவிக்கு மனைவி பெரிதும் நன்றியுள்ளவளாய் இருப்பாள்.—எபேசியர் 5:25, 28, 29.
கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போக நேர்ந்தால், இருவருமே வீட்டு வேலைகளில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருப்பது மிக அவசியம். இந்த உண்மையை, ஸ்பெயினில் வெளியாகிற ஏபிசி என்ற செய்தித்தாளில் வெளிவந்த அறிக்கை வலியுறுத்திக் காட்டுகிறது. குடும்ப விவகாரங்களுக்கான நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வைப்பற்றி அந்தக் கட்டுரை கருத்துத் தெரிவித்தது. அதில், ஸ்பெயினில் விவாகரத்து விகிதம் அதிகரித்திருப்பதற்கு, “சமய நெறிகளையும் ஒழுக்க நெறிகளையும் பின்பற்றாதிருப்பது” மட்டுமல்ல, “பெண்கள் வேலை பார்க்க ஆரம்பித்தது, வீட்டு வேலைகளில் ஆண்கள் உதவாதிருப்பது” என்ற இரண்டு அம்சங்களும்கூட காரணம் என்று அந்தக் கட்டுரை குற்றஞ்சாட்டியது.
கிறிஸ்தவ தாய்மாரின் முக்கியப் பங்கு
பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் பொறுப்பை முக்கியமாக தகப்பன்மார்களுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார். ஆனாலும், விசேஷமாக பிள்ளையின் சிசுப் பருவத்தில் அதைப் பயிற்றுவிக்கும் முக்கியப் பொறுப்பு தங்களுக்கும் கொடுக்கப்பட்டிருப்பதை கிறிஸ்தவ தாய்மார்கள் அறிந்திருக்கிறார்கள். (நீதிமொழிகள் 1:8; எபேசியர் 6:4) பிள்ளைகளின் மனதில் நியாயப்பிரமாண சட்டத்தைப் பதிய வைக்கும் பொறுப்பு பெற்றோர் இருவருக்குமே உண்டென்று இஸ்ரவேலருக்கு யெகோவா அறிவுரை கொடுத்திருந்தார். இதற்கு, நேரமும் பொறுமையும் தேவை; அதுவும், பிள்ளை வளர்ந்து வரும் சமயத்தில் இது முக்கியமாய் தேவை என்பதை அவர் அறிந்திருந்தார். இதன் காரணமாகவே, வீட்டிலும், வழியிலும், எழுந்திருக்கும்போதும், படுத்துக்கொள்ளுகிறபோதும் தங்கள் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டுமென்று பெற்றோரிடம் அவர் சொன்னார்.—உபாகமம் 6:4-7.
‘உன் தாயின் போதகத்தை [சட்டதிட்டம்] தள்ளாதே’ என்று கடவுளுடைய வார்த்தை பிள்ளைகளுக்குக் கட்டளையிடுகிறது; இதன்மூலம், தாய்மார்களுக்கு இருக்கும் முக்கியமான, கண்ணியமிக்க பங்கை வலியுறுத்திக் காட்டுகிறது. (நீதிமொழிகள் 6:20) பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய எந்தச் சட்டதிட்டத்தையும் ஏற்படுத்துவதற்கு முன்பாக ஒரு தாய் அதைப்பற்றி தன் கணவரிடம் கலந்து பேசுவார் என்பது உண்மைதான். எனினும், அந்த வசனம் குறிப்பிடுவதுபோல, சட்டங்களை ஏற்படுத்த தாய்மார்களுக்கும் உரிமை இருக்கிறது. கடவுள் பயமுள்ள தாய்மார்கள் கற்பிக்கிற ஆன்மீக நெறிகளையும் ஒழுக்க நெறிகளையும் மனதில் பதித்துக்கொள்கிற பிள்ளைகள் பெருமளவு பயன் அடைவார்கள். (நீதிமொழிகள் 6:21, 22) வேலைக்குப் போகாதிருப்பதற்கான காரணத்தை, இரண்டு சிறு பிள்ளைகளை உடைய டேரேசா என்ற தாய் விளக்கினார். “என் பிள்ளைகளை கடவுளுக்குச் சேவை செய்கிறவர்களாக வளர்க்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாகச் செய்வதற்கு விரும்புகிறேன்” என அவர் சொன்னார்.
பிள்ளைகளைச் செதுக்கி சீரமைத்த தாய்மார்கள்
தன் தாயினுடைய உள்ளப்பூர்வமான முயற்சிகளிலிருந்து இஸ்ரவேலை ஆண்ட லேமுவேல் ராஜா நிச்சயமாகவே பயன் அடைந்தார். அவருடைய தாய் போதித்த உபதேசம், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (நீதிமொழிகள் 31:1; 2 தீமோத்தேயு 3:16) திறமைசாலியான மனைவியைப்பற்றி இந்தத் தாய் தரும் விவரிப்பு, ஞானமான விதத்தில் தங்கள் துணைவியைத் தேர்ந்தெடுக்க ஆண்களுக்கு இன்றும் உதவுகின்றன. ஒழுக்கக்கேடு, குடிவெறி ஆகியவை சம்பந்தமாக அவர் கொடுத்த எச்சரிக்கைகள், அவை எழுதப்பட்ட சமயத்தில் எந்தளவு ஏற்றதாய் இருந்தனவோ அந்தளவு இன்றும் இருக்கின்றன.—நீதிமொழிகள் 31:3-5, 10-31.
முதல் நூற்றாண்டில், ஐனிக்கேயாள் என்ற தாய் தன் மகன் தீமோத்தேயுவை சிறந்த விதத்தில் பயிற்றுவித்ததற்காக அப்போஸ்தலன் பவுல் அவரைப் பாராட்டினார். அவருடைய கணவர் யெகோவாவை வழிபடாமல் கிரேக்கக் கடவுட்களை வழிபட்டிருக்கலாம்; இத்தகைய சூழ்நிலையில், ‘பரிசுத்த வேத எழுத்துக்களில்’ தீமோத்தேயு நம்பிக்கை வைப்பதற்கு ஐனிக்கேயாள் அவற்றை உண்மையானவையென மெய்ப்பித்துக் காட்ட வேண்டியிருந்தது. அவர் எப்பொழுதிலிருந்து தீமோத்தேயுவுக்கு வேத வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்? “சிறுவயதுமுதல்,” வேறு வார்த்தைகளில் சொன்னால் தீமோத்தேயு பச்சிளங்குழந்தையாய் இருந்த சமயம்முதல் என்பதாக பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 1:5; 3:14, 15) ஐனிக்கேயாளுடைய விசுவாசமும் முன்மாதிரியும், அதோடு அவர் கற்பித்தவையும் பிற்காலத்தில் தீமோத்தேயு மிஷனரி ஊழியம் செய்வதற்கு உண்மையிலேயே அவரைத் தயார்படுத்தின.—பிலிப்பியர் 2:19-22.
கடவுளுடைய உண்மை ஊழியர்களை உபசரித்த தாய்மார்களைப் பற்றியும் பைபிள் குறிப்பிடுகிறது. இவர்கள், சிறந்த மாதிரிகளாய் விளங்கிய அருமையான ஆட்களுடன் பழக தங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். உதாரணத்திற்கு, தன் ஊருக்கு வரும்போதெல்லாம் ஒரு சூனேமிய பெண், எலிசா தீர்க்கதரிசியை தன் வீட்டில் தங்க வைத்தாள். இறந்துபோன இவளுடைய மகனை பின்னர் எலிசா உயிர்த்தெழுப்பினார். (2 இராஜாக்கள் 4:8-10, 32-37) பைபிள் எழுத்தாளராகிய மாற்குவின் தாயான மரியாளின் உதாரணத்தையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆரம்ப கால சீஷர்கள் கூட்டங்களை நடத்துவதற்கு எருசலேமிலிருந்த தன் வீட்டை அவர் அளித்திருந்ததாகத் தெரிகிறது. (அப்போஸ்தலர் 12:12) அவருடைய வீட்டுக்குத் தவறாமல் வந்துபோன அப்போஸ்தலர்களுடனும் பிற கிறிஸ்தவர்களுடனும் பழகியதிலிருந்து மாற்கு நிச்சயம் பயன் அடைந்திருப்பார்.
உண்மையில், தங்கள் பிள்ளைகளின் மனதில் கடவுளுடைய நெறிமுறைகளைப் பதியவைக்கிற உண்மையுள்ள தாய்மார்களின் கடின உழைப்பை யெகோவா உயர்வாய் மதிக்கிறார். அதோடு, அவர்களுடைய உண்மைத்தன்மையின் காரணமாகவும் தங்கள் வீட்டில் ஆன்மீக சூழலை உருவாக்க அவர்கள் முயற்சி எடுப்பதன் காரணமாகவும் யெகோவா அவர்களை நேசிக்கிறார்.—2 சாமுவேல் 22:26; நீதிமொழிகள் 14:1.
பரம திருப்தி தரும் தீர்மானம்
மேற்குறிப்பிடப்பட்ட பைபிள் உதாரணங்கள் காட்டுவதைப்போல, உடல் ரீதியாக, ஆன்மீக ரீதியாக, உணர்ச்சி ரீதியாக குடும்பத்தாரை நன்கு பேணிப் பராமரிப்பது விசேஷ ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தருகிறது. ஆனால், இப்படிப் பராமரிப்பது எளிய வேலையல்ல. ஒரு நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவரைவிட வீட்டைப் பராமரிக்கிற ஒரு தாய்தான் பெரும்பாலும் அதிகமான நேரத்தையும் சக்தியையும் கவனத்தையும் செலவிடுவதாகத் தெரிகிறது.
கணவரோடு கலந்தாலோசித்துவிட்டு, வேலைக்குப் போகாதிருப்பதற்கோ பகுதிநேர வேலை செய்வதற்கோ ஒரு தாய் தீர்மானிக்கலாம். அப்படி அவர் தீர்மானித்தால், அந்தக் குடும்பத்தார் கொஞ்சப் பொருள்களை வைத்துக்கொண்டு, சிக்கனமாக வாழ்க்கை நடத்த நேரிடலாம். அதே சமயத்தில், அவர் அத்தகைய தீர்மானம் எடுத்ததற்கான காரணத்தை அறியாத மற்றவர்களுடைய கேலிகிண்டலை சகிக்கவும் வேண்டியிருக்கலாம். ஆனால், செய்த தியாகத்தைவிட கிடைக்கும் பலன்கள் அதிகமாய் இருக்கலாம். மூன்று பிள்ளைகளை உடைய பாகீ என்பவருக்கு பகுதி நேர வேலைக்குப் போக வேண்டிய தேவை இருக்கிறது. “பள்ளியிலிருந்து பிள்ளைகள் வீடு திரும்பும்போது, அவர்களை அரவணைக்கவும் அவர்களுடன் பேசவும் நான் வீட்டிலிருந்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். அவருடைய பிள்ளைகள் எப்படிப் பயன் அடைகிறார்கள்? “அவர்கள் வீட்டுப்பாடம் செய்வதற்கு உதவுகிறேன், ஏதேனும் பிரச்சினை எழுந்தால் உடனுக்குடன் என்னால் சரிசெய்ய முடிகிறது. ஒவ்வொரு நாளும் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செலவிடுகிற நேரம் நல்ல பேச்சுத்தொடர்புக்கு வழிசெய்திருக்கிறது. என் பிள்ளைகளுடன் செலவிடும் இந்த நேரம் எனக்குப் பொன் போன்றிருப்பதால் எனக்குக் கிடைத்த நல்ல முழுநேர வேலையை மறுத்துவிட்டேன்” என்கிறார் அவர்.
வேலைக்குப் போகாதிருந்தாலோ பகுதி நேர வேலை பார்த்தாலோ குடும்பத்தார் எல்லாருமே பயன் அடைகிறார்கள் என்பது அநேக கிறிஸ்தவ தாய்மார்கள் அனுபவத்தில் கண்ட உண்மை. “வேலைக்குப் போவதை நிறுத்தியபோது பிரச்சினைகள் பெருமளவு குறைந்ததுபோல் தோன்றியது. என் பிள்ளைகளுடன் பேசுவதற்கும், என் கணவருக்கு பல காரியங்களில் ஒத்தாசை செய்யவும் எனக்கு நேரமிருந்தது. என் பெண் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன்; அவர்கள் கற்றுக்கொண்டு, முன்னேறுவதைப் பார்த்து ஆனந்தப்பட்டேன்” என்று விவரிக்கிறார் முன்பு குறிப்பிடப்பட்ட கிறீஸ்டீனா. ஒரு சம்பவம் அவருடைய மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிட்டது. “பிள்ளை பராமரிப்பு மையத்தில்தான் என் மூத்த மகள் முதன்முதலாக நடக்கக் கற்றுக்கொண்டாள். ஆனால், இரண்டாவது மகள் நடப்பதற்கு வீட்டில் நான் கற்றுக்கொடுத்தேன். அவள் முதல் அடியெடுத்து வைத்து ‘தொப்பென’ விழப்போன சமயத்தில் அவளை என் கைகளில் தாங்கிக்கொண்டேன். அந்த ஒரு வினாடி எனக்குப் பரம திருப்தியைத் தந்தது” என்று அவர் சொல்கிறார்.
ஒரு தாய் வேலைக்குப் போகாமலிருப்பதாலோ பகுதி நேர வேலை பார்ப்பதாலோ உட்பட்டுள்ள வருமான இழப்பு எதிர்பார்த்ததைவிட குறைவாக இருக்கலாம் என்பது சிந்திக்க வேண்டிய மற்றொரு அம்சமாகும். “உண்மையில், பிள்ளையைப் பராமரிப்பதற்குக் கொடுக்கும் பணமும் போக்குவரத்து செலவுமே என் சம்பளத்தில் பெருமளவை விழுங்கிவிட்டன. எங்களுடைய சூழ்நிலையைக் கவனமாய் நாங்கள் ஆராய்ந்து பார்த்தபோது, வீட்டுக்காக நான் பெரிதாக எதையும் சம்பாதித்துக் கொடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்” என்று விளக்குகிறார் கிறீஸ்டீனா.
வேலைக்குப் போகாமல் வீட்டைப் பராமரிப்பதால் கிடைக்கிற பலன்களோடு ஒப்பிட, வருமான இழப்பால் பெரிய நஷ்டமேதுமில்லை என்பதை தங்களுடைய சூழ்நிலையை சீர்தூக்கிப் பார்த்த பிறகு சில தம்பதியர் புரிந்திருக்கிறார்கள். “என் மனைவி வீட்டிலிருந்து இரண்டு மகள்களையும் கவனித்துக்கொள்வதில் எனக்குச் சந்தோஷம்தான். அவள் வேலைக்குப் போனபோது நாங்கள் இருவருமே அதிக மன அழுத்தத்தில் கஷ்டப்பட்டோம்” என்று சொல்கிறார் கிறீஸ்டீனாவின் கணவர் பால். இந்தத் தம்பதியரின் தீர்மானம் அவர்களுடைய மகள்களுக்கு எப்படி உதவியது? “அவர்கள் அதிக பாதுகாப்பாக உணருகிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் இந்தச் சின்னஞ்சிறு வயதில் மோசமான காரியங்களால் பாதிக்கப்படமால் தடுக்கவும் எங்களால் முடிந்தது” என்று பால் சொல்கிறார். தங்கள் மகள்களுடன் முடிந்தளவு அதிக நேரத்தைச் செலவிட இந்தத் தம்பதியர் ஏன் விரும்புகிறார்கள்? “பெற்றோராக நாங்கள் பிள்ளைகளின் இருதயத்தில் எழுதாவிட்டால் வேறு யாராவது எழுதிவிடுவார்கள் என்பது நிச்சயம்” என்று பால் சொல்கிறார்.
இதிலிருந்து, ஒவ்வொரு தம்பதியரும் தங்கள் சூழ்நிலையைத் தாங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டுமென்றும் மற்றவர்கள் எடுக்கிற தீர்மானங்களை யாரும் குறைசொல்லக் கூடாது என்றும் தெளிவாய்த் தெரிகிறது. (ரோமர் 14:4; 1 தெசலோனிக்கேயர் 4:12) எனினும், ஒரு தாய் வேலைக்குப் போகாதிருப்பதால் குடும்பத்திற்குக் கிடைக்கும் அநேக நன்மைகளைச் சிந்தித்துப் பார்ப்பது அதிக பயனுள்ளதாய் இருக்கிறது. முன்னர் குறிப்பிடப்பட்ட டேரேசா இந்த விஷயத்தில் தன் கருத்தைப் பின்வருமாறு கூறுகிறார்: “பிள்ளைகளைப் பராமரிப்பதிலும் அவர்களுக்குக் கற்பிப்பதிலும் முடிந்தவரை அதிக நேரம் செலவிடுவதைவிட வேறு எதுவுமே அந்தளவுக்கு திருப்தி அளிக்காது.”—சங்கீதம் 127:4. (w08 2/1)
[பக்கம் 21-ன் படம்]
தங்கள் பிள்ளைகளைப் பயிற்றுவிக்கும் மிக முக்கியமான வேலையில் கிறிஸ்தவ தாய்மார்கள் பங்கெடுக்கிறார்கள்