எமது வாசகரிடமிருந்து
விழித்தெழு!-வில் மாற்றம் நேற்றிரவு, ஜனவரி 2006 விழித்தெழு! பத்திரிகையைப் படித்து முடித்தேன். இதிலுள்ள புதிய அம்சங்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. தற்போது இது படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் அடங்கிய பத்திரிகையாக இருக்கிறது; இதிலுள்ள புதிய அம்சங்கள் வாசகரைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. நாம் ஆன்மீக ரீதியில் வளர்வதற்காக யெகோவா தரும் வழிநடத்துதலை இப்பத்திரிகை முழுவதிலும் காண்கிறேன்.
பி.என்., கனடா
எனக்கு வயது 16. விழித்தெழு! பத்திரிகையில் இருக்கும் புதிய அம்சங்கள் பைபிளைப் படிக்க எங்களுக்குப் பேருதவியாக இருக்கும். படித்ததை ஆழமாக சிந்தித்துப் பார்க்க சில கட்டுரைகளின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகள் உதவுகின்றன. என்னுடைய பள்ளிப் படிப்பிற்காக விழித்தெழு! பத்திரிகையைப் பயன்படுத்துவதில் சந்தோஷமடைகிறேன். இது போன்ற அருமையான, பயனுள்ள தகவல்களை தொடர்ந்து எங்களுக்காக வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.
எஸ்.என்., நமிபியா
விசுவாசம் என்னைக் காத்துவருகிறது—ALS நோயுடன் வாழ்க்கை (ஜனவரி 2006) ஜேஸன் ஸ்டுவர்டுடைய அனுபவத்தைப் படித்த பிறகு, என்னுடைய பிரச்சினைகள் எல்லாம் ஒன்றுமேயில்லை எனத் தோன்றியது. நம்முடைய சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு நாம் யெகோவாவுக்குச் செய்யும் சேவையை அவர் மதிப்புள்ளதாகக் கருதுகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். ஜேஸனுடைய மனைவியின் சுயதியாகத்தையும், யெகோவாவில் அவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் நான் மெச்சுகிறேன். இந்த அனுபவம் என் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டது. எதிர்காலத்தில் வரும் பிரச்சினைகளைச் சந்திக்க இது எனக்கு உதவும்.
சி.ஆர்.எஸ்., பெரு
ஜேஸனுடைய அனுபவத்தைப் படித்தபோது அழுதுவிட்டேன்; அதற்குக் காரணம், அவர் சந்தித்த கஷ்டங்களைப் பற்றி வாசித்தபோது என்னால் தாங்க முடியவில்லை; அதுமட்டுமல்ல யெகோவாவின் சாட்சியான நான், இவரைப்போன்ற கிறிஸ்தவ சகோதரனைப் பெற்றிருப்பதை நினைத்து பெருமைப்பட்டதாலும்தான். “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் நேரிடலாம் என்பதால், சோதனைகளை எதிர்பட தயாராக இருக்கவேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை இந்தக் கட்டுரையிலிருந்து அறிந்துகொண்டேன்.—பிரசங்கி 9:11, NW.
டி.ஏ., ஹங்கேரி
ALS நோயினால் என் அம்மாவை இழந்தேன். அதனால், ஜேஸனுடைய அனுபவத்தை படித்ததும் என் உள்ளம் உருகியது. ஊழியத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்வதற்கு அவருடைய முன்மாதிரி என்னை ஊக்குவித்தது. இந்த சகோதரரையும் அவருடைய மனைவியையும் தொடர்ந்து பலப்படுத்தும்படி யெகோவாவிடம் ஜெபிக்கிறேன்.
எல்.ஸெட்.ஜி., பராகுவே
ஜேஸன் ஆரோக்கியமாக இருந்தபோது தனிப்பட்ட படிப்பிற்கு அதிக நேரம் செலவிட்டதால் தேவைப்பட்ட சமயத்தில் அவருக்கு ஆன்மீக பலம் கிடைத்தது. இந்த உண்மையைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்தேன். பைபிளை தனிப்பட்ட விதமாக ஊக்கமாய் படிக்க வேண்டும் என்ற திடதீர்மானத்தை எடுத்திருக்கிறேன்.
ஒய்.எம்., ஜப்பான்
இளைஞர் கேட்கின்றனர்—ஏன் என்னை நானே காயப்படுத்திக் கொள்கிறேன்? (ஜனவரி 2006) இளவயதில் எனக்கு குடிப்பழக்கமும் போதைப்பொருள்களை எடுத்துக்கொள்ளும் பழக்கமும் இருந்தது; அவற்றைச் சமாளிக்க போராடினேன், ஆனால் என்னையே காயப்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை சமாளிப்பதுதான் ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்தப் பிரச்சினை இப்போதும் தொல்லை தருகிறது. ஆனாலும், இதுபோன்ற கட்டுரைகள் சகிப்பதற்கு எனக்குப் பலத்தைத் தருகின்றன. என் நன்றியைத் தெரிவிக்க வார்த்தைகளே இல்லை.
இ.சி., ஐக்கிய மாகாணங்கள்
டீனேஜில் இருந்தே எனக்கு இந்தப் பழக்கம் இருந்தது. இப்போது எனக்கு வயது 56. நான்கு வருடங்களுக்கு முன்னால் இப்பழக்கத்தை விட்டுவிட்டேன். ஆனால் சிலசமயங்களில் என்னுடைய பிரச்சினைகள் ரொம்பப் பெரிதாக இருப்பதால், அதை மீண்டும் செய்யத் துடிக்கிறேன். இந்தக் கட்டுரை என் உள்ளத்தின் ஆழத்தைத் தொட்டது. என்னைப் போன்றவர்கள் அன்றாட பிரச்சினைகளை புதுத்தெம்போடு சந்திக்க இது உதவும்.
பெயர் குறிப்பிட விரும்பவில்லை, நெதர்லாந்து
எனக்கு வயது 17. இந்தக் கட்டுரைக்காக ரொம்ப நன்றி. என்னை நானே காயப்படுத்திக் கொள்வதுதான் என்னுடைய பிரச்சினை. சமீபத்தில், மீண்டும் என்னை நானே கீறிக்கொண்டேன். அதன்பிறகு, என் அம்மாவிடம் சென்று, என்னோடு சேர்ந்து ஜெபிக்கும்படி கேட்டேன். இந்தப் பிரச்சினையின் மத்தியிலும், யெகோவா என்னை நேசிக்கிறார் என்பதைக் கற்றுக்கொண்டேன். உங்களுடைய கட்டுரை மிகவும் உதவியாக இருந்தது, அதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்.
என்.எம்., செக் குடியரசு
இந்தக் கட்டுரையைப் பார்த்தவுடன் “அடடா நம்பமுடியவில்லையே!” என்றுதான் நினைத்தேன். எனக்கு வயது 18. என்னை நானே காயப்படுத்திக் கொள்வேன். வலி, என்னுடைய மற்ற உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த உதவியது. அதனால், அடிக்கடி என்னைக் காயப்படுத்திக்கொள்ள வேண்டுமென நினைப்பேன்; இந்த எண்ணத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியவில்லை. இக்கட்டுரையைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. கண்களில் கண்ணீர் திரண்டது; ஜெபத்தில் யெகோவாவுக்கு நன்றி சொன்னேன். யெகோவாவின் அமைப்பில் மட்டுமே இதுபோன்ற ஆறுதலைப் பெறுவது சாத்தியம்.
ஏ.பி., ரஷ்யா
14 வயதில், என்னுடைய உணர்ச்சிரீதியிலான பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காக என்னை நானே காயப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். இதனால் ஒருமுறை மருத்துவமனைக்குக்கூட செல்ல வேண்டியிருந்தது. டைரி எழுதும் பழக்கம் இந்தப் பிரச்சினையின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த ரொம்பவே உதவியது. மேலும், என்னை நானே காயப்படுத்திக்கொள்ளத் தூண்டப்படும்போது, என்னைப் பற்றி நன்கு தெரிந்திருக்கிற ஒரு தோழியை அழைப்பேன். குறிப்பாக, ஜெபம் எனக்கு உதவியாக இருந்தது. ஜெபிப்பதற்கு தகுதியற்றவளாக நான் உணரும்போது, நண்பர்களும் கிறிஸ்தவ மூப்பர்களும் என்னுடன் சேர்ந்து ஜெபிப்பார்கள். இது ஒரு கஷ்டமான போராட்டமாக இருந்தது, ஆனால் அதை எப்படி சமாளிப்பதென்று கற்றுக்கொண்டேன்; அதோடு, கிடைக்கிற எல்லா உதவியையும் ஏற்றுக்கொண்டேன். அதனால் என்னை நானே காயப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் அதன்பிறகு ஏற்படவில்லை.
என்.டபுள்யூ., ஜெர்மனி
இந்தக் கட்டுரையின் முதல் பக்கத்தில் ஒரு பெண் தன்னுடைய தலைமுடியைப் பிடித்து இழுப்பது போன்ற படம் இருந்தது; அந்தக் கட்டுரையில், “சாரா” தன் தலைமுடியை பிய்த்துக்கொண்டு தனக்குத்தானே தண்டனை விதித்துக்கொள்வாள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. என் மகளுக்கு ட்ரிகடிலமேனீயா (trichotillomania) என்றழைக்கப்படுகிற கோளாறு இருக்கிறது; இந்தக் கோளாறு உள்ளவர்கள் தங்கள் தலைமுடியைப் பிய்த்துக்கொள்வார்கள். இந்த நிலை அதீத சடங்கு மனப்பான்மையோடு (obsessive-compulsive disorder) தொடர்புடையது. ஏதோவொரு கட்டாயத்தால்தான் இப்படி செய்கிறார்களே தவிர, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தினால் அல்ல. தலைமுடியைப் பிய்த்துக்கொள்வது அடுத்ததாக தங்களையே கீறிக்கொள்வதில் போய் முடிவதில்லை.
எம்.எச்., ஐக்கிய மாகாணங்கள்
“விழித்தெழு!” பதில்: ட்ரிகடிலமேனீயா என்ற வார்த்தை, 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது; நடத்தை சம்பந்தப்பட்ட கோளாறைக் குறிக்கிறது. இந்தக் கோளாறு உள்ளவர்களால் தங்கள் முடியைப் பிய்த்துக்கொள்ளும்படியான தூண்டுதலை கட்டுப்படுத்த முடியாது. அந்தப் படம் இயல்பாக சித்தரித்ததுபோல, முடியைப் பிய்த்துக்கொள்வதன் மூலம் சிலர் தங்களை காயப்படுத்திக் கொள்கிறார்கள். என்றாலும், கட்டாயத் தூண்டுதலால் முடியைப் பிய்த்துக்கொள்கிற ஒவ்வொருவரும் எங்கள் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்பவர்கள் என்று அர்த்தப்படாது. மேற்சொல்லப்பட்ட வாசகர் குறிப்பிட்டது போல, சில சமயங்களில் இந்தப் பழக்கம் அதீத சடங்கு மனப்பான்மையோடு மிக நெருங்கிய தொடர்புடையதாயிருக்கிறது.
எப்படியானாலும், ட்ரிகடிலமேனீயாவுக்கான காரணத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பிரச்சினையால் கஷ்டப்படுவோர்க்கு தகுந்தபடி சிகிச்சை அளிக்க முடியும் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, இந்தப் பிரச்சினை உள்ளவர்கள், நோயைக் கண்டறியவும் சிகிச்சை பெறவும் மருத்துவ நிபுணரை அணுகுவது நல்லது.
எப்படி பதில் அளிப்பீர்கள்? (ஜனவரி 2006) இந்தப் புதிய அம்சத்தைப் பார்த்ததும் என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை! எங்களுடைய பேரப் பிள்ளைகளுக்கு வீட்டிலேயே நாங்கள் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம். இது, அவர்களுடைய அன்றாட பைபிள் படிப்பிற்கும் பள்ளி பாடங்களின் பாகமாக படிக்கும் விழித்தெழு! கட்டுரைகளை மறுபார்வை செய்வதற்கும் பெரும் துணையாக இருக்கிறது. நீங்கள் பிள்ளைகள்மீது இந்தளவுக்கு அக்கறை காட்டுவதற்கு ரொம்ப நன்றி.
பி.இ., ஐக்கிய மாகாணங்கள்
இந்தப் பகுதி சவாலாக இருக்கிறது. ஆனால் பதிலைக் கண்டுபிடித்துவிட்டால் எனக்கு மிகவும் சந்தோஷமாகிவிடும்! நேற்று சாயங்காலம் முழுவதுமாக இந்தப் பக்கத்தைத்தான் படித்தேன். படிக்க படிக்க ஆர்வமாக இருந்தது! மற்றவர்களும் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்காக, நான் வளர்ந்த பிறகு இந்த பத்திரிகையைத் தயாரிக்க உதவி செய்வேன்.
டி.எச்., ஐக்கிய மாகாணங்கள்
எனக்கு 8 வயது. இந்தப் பக்கத்தை எங்கள் குடும்பப் படிப்பில் பயன்படுத்துகிறோம். அதற்காக நாங்கள் ஆராய்ச்சி செய்வது பிடித்திருக்கிறது. “நான் யார்?” பகுதி கஷ்டமாக இருந்தாலும் அதை சவாலாக எடுத்துச் செய்கிறோம். இது போன்ற அருமையான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்.
சி.டபிள்யூ., ஐக்கிய மாகாணங்கள்