பைபிளின் கருத்து
கஷ்டங்கள்
கடவுள்தான் நமக்கு கஷ்டத்தை கொடுக்கிறார்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. ஒருவேளை அவர் கஷ்டத்தை கொடுக்கலனாலும், நம்மமேல அவருக்கு அக்கறையே இல்லனு நினைக்கிறாங்க. ஆனா, இதை பத்தி பைபிள் என்ன சொல்லுது? இப்போ அதை பார்க்கலாம்.
கடவுள்தான் நமக்கு கஷ்டத்தை கொடுக்கிறாரா?
மக்கள் என்ன சொல்றாங்க?
‘நல்லது கெட்டது எல்லாத்துக்கும் கடவுள்தான் காரணம்’னு சிலர் நினைக்கிறாங்க. அதனால, நமக்கு வர்ற பிரச்சினைகளுக்கும் கடவுள்தான் காரணம்னு சொல்றாங்க. உதாரணத்துக்கு சுனாமியோ பூமியதிர்ச்சியோ வந்தா, அதுக்கு கடவுள்தான் காரணம்னு நினைக்கிறாங்க. கெட்டவங்களை அழிக்கிறதுக்காகதான் அவர் இப்படியெல்லாம் செய்றார்னு சொல்றாங்க.
பைபிள் என்ன சொல்லுது?
கடவுள் நமக்கு கஷ்டத்தை கொடுக்கிறது இல்ல. அதனால, “கடவுள் என்னைச் சோதிக்கிறார்”னு யாரும் சொல்ல முடியாது. “தீய காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையுமே சோதிப்பது கிடையாது”னு பைபிள் சொல்லுது. (யாக்கோபு 1:13) கடவுள் ‘அநியாயம் செய்ய மாட்டார்.’ அதனால அவர் மக்களை நிச்சயம் கஷ்டப்படுத்தி பார்க்க மாட்டார்.—யோபு 34:12.
நாம கஷ்டப்படுறதுக்கான மூணு காரணங்களை இப்போ பார்க்கலாம். முதல் காரணம், எல்லா மனுஷங்களும் தப்பு செய்றவங்களா இருக்கிறதுனால, நாம மத்த மனுஷங்களால கஷ்டப்படுறோம். (பிரசங்கி 8:9) ரெண்டாவது காரணம், “எதிர்பார்க்காத சம்பவங்களால” எல்லாரும் பாதிக்கப்படுறோம். இந்த மாதிரி சம்பவங்கள் எப்போ, யாருக்கு நடக்கும்னு நம்மால சொல்ல முடியாது. (பிரசங்கி 9:11, NW) மூணாவது முக்கியமான காரணம் சாத்தான். “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது”னு பைபிள் சொல்லுது. அதாவது, சாத்தான் இந்த ‘உலகத்தை ஆளுகிறான்’னு சொல்லுது. (யோவான் 12:31; 1 யோவான் 5:19) நமக்கு கடவுள் கஷ்டம் கொடுக்கிறது இல்ல, சாத்தான்தான் கொடுக்கிறான்.
கடவுள் ‘அநியாயம் செய்ய மாட்டார்.’—யோபு 34:12.
நாம கஷ்டப்படுறதை கடவுள் பார்க்கிறாரா?
மக்கள் என்ன சொல்றாங்க?
கடவுளுக்கு நம்மமேல அக்கறையே இல்லனு சில பேர் நினைக்கிறாங்க. இதை பத்தி ஒரு எழுத்தாளர் இப்படி சொல்றார்: கடவுள்னு ஒருத்தர் இருந்தாகூட அவரை “ஈவிரக்கம் இல்லாதவர்னுதான் சொல்லணும்.” ஏன்னா, “நமக்கு என்னதான் கஷ்டம் வந்தாலும் அவருக்கு நம்மமேல கொஞ்சம்கூட அக்கறையே இல்ல.”
பைபிள் என்ன சொல்லுது?
கடவுளுக்கு நம்மமேல ரொம்ப அக்கறை இருக்குனு பைபிள் சொல்லுது. நமக்கு வர்ற கஷ்டங்களை பார்க்கும்போது அவரும் கஷ்டப்படுறார். சீக்கிரமா நம்முடைய கஷ்டங்களை எல்லாம் அவர் நீக்க போறார். இதை பத்தி பைபிள் என்ன சொல்லுதுனு இப்போ பார்க்கலாம்.
நாம படுற கஷ்டங்களை கடவுள் பார்க்கிறார். யெகோவாவுடையa (அடிக்குறிப்பை பாருங்க.) “கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது”னு பைபிள் சொல்லுது. காலம் காலமா மனுஷங்க சிந்துற ஒவ்வொரு கண்ணீர் துளியையும் அவர் ஞாபகம் வெச்சிருக்கார். (சங்கீதம் 11:4; 56:8) ஒருசமயம் தன்னை வணங்குன மக்கள் கஷ்டப்படும்போது கடவுள் இப்படி சொன்னார்: “என் மக்கள் அனுபவிக்கிற துன்பத்தை என் கண்களால் கண்டேன் . . . அவர்கள் படுகிற வேதனைகளை நான் நன்றாக அறிந்திருக்கிறேன்.” அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்கனு கடவுள் முழுசா தெரிஞ்சு வெச்சிருந்தார். (யாத்திராகமம் 3:7, NW) சிலசமயம், நாம படுற கஷ்டம் மத்தவங்களுக்கு தெரியாது, அதை சொன்னாகூட அவங்களால புரிஞ்சுக்க முடியாது. ஆனா, நாம எவ்வளவு கஷ்டப்படுறோம்னு கடவுளுக்கு தெரியும். இந்த உண்மையே நிறைய பேருக்கு ஆறுதலை கொடுத்திருக்கு.—சங்கீதம் 31:7; நீதிமொழிகள் 14:10.
நாம கஷ்டப்படுறதை பார்த்து கடவுளும் கஷ்டப்படுறார். நாம எவ்வளவு கஷ்டப்படுறோம்னு கடவுளுக்கு நல்லா தெரியும். அதுமட்டும் இல்ல, அதை பார்த்து அவரும் ரொம்ப கஷ்டப்படுறார். ஒருசமயம், அவரை வணங்குன ஜனங்க கஷ்டப்படுறதை பார்த்து அவர் ரொம்ப கஷ்டப்பட்டார். “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் [கடவுள்] நெருக்கப்பட்டார்”னு பைபிள் சொல்லுது. (ஏசாயா 63:9) கடவுள் நம்ம எல்லாரையும்விட உயர்ந்தவரா இருந்தாலும், நமக்கு ஒரு கஷ்டம் வரும்போது அதை அவருக்கே வந்த கஷ்டம் மாதிரி பார்க்கிறார். அதனாலதான், “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்”னு பைபிள் சொல்லுது. (யாக்கோபு 5:11) அதுமட்டும் இல்ல, நமக்கு வர்ற கஷ்டங்களை தாங்கிக்கிறதுக்கும் அவர் உதவி செய்றார்.—பிலிப்பியர் 4:12, 13.
நம்முடைய கஷ்டங்களை எல்லாம் கடவுள் சீக்கிரம் நீக்க போறார். எல்லாருடைய பிரச்சினைகளுக்கும் கடவுள் ஒரு முடிவு கொண்டுவரப் போறார்னு பைபிள் சொல்லுது. அவர் முழு பூமியையும் ஆட்சி செய்ய போறார். அவர் ஆட்சி செய்யும்போது உலகம் எப்படி இருக்கும்? மக்களுடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்”னு பைபிள் சொல்லுது. (வெளிப்படுத்துதல் 21:4) இறந்தவங்களைகூட கடவுள் உயிரோடு கொண்டுவரப்போறார். அவங்க எந்த கஷ்டமும் இல்லாம பூமியில வாழப்போறாங்க. (யோவான் 5:28, 29) கடவுள் ஆட்சி செய்யும்போது இன்னைக்கு நாம படுற கஷ்டத்தை எல்லாம் மறந்திடுவோம். “முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை”னு கடவுள் சொல்றார்.b (அடிக்குறிப்பை பாருங்க.)—ஏசாயா 65:17. ◼ (g15-E 01)
“அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் [கடவுள்] நெருக்கப்பட்டார்.”—ஏசாயா 63:9.
a கடவுளுடைய பெயர் ‘யெகோவா’னு பைபிள் சொல்லுது.
b கஷ்டங்களை கடவுள் ஏன் விட்டு வெச்சிருக்கிறார்? அதை எப்படி சரி செய்வார்?னு தெரிஞ்சுக்க, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்துல, அதிகாரம் 8-ஐயும் 11-ஐயும் பாருங்க. இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்.