புன்னகையை பூட்டி வைக்காதீர்கள்!
யாராவது உங்களைப் பார்த்து புன்னகை செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? நீங்களும் பதிலுக்கு புன்னகைப்பீர்கள், அல்லவா? நண்பர்களோ அல்லது முன்பின் தெரியாதவர்களோ உங்களைப் பார்த்து புன்னகைத்தால் தானாகவே உங்கள் முகத்திலும் புன்சிரிப்பு ஏற்படும். புன்னகை என்பது சந்தோஷத்தை தரும் ஒரு அருமருந்து. மாக்தலேனா என்ற பெண், இறந்துபோன தன் கணவர் ஜார்ஜைப் பற்றி இப்படி சொல்கிறார்: “என் கணவரோட புன்சிரிப்பு ரொம்ப அழகா இருக்கும். அது மனசுக்கு இதமா இருக்கும். அவர் முகத்தை பாத்தாலே போதும், என் கவலையெல்லாம் பறந்திடும், ரொம்ப பாதுகாப்பா உணர்வேன்.”
ஒரு நபரின் கள்ளங்கபடம் இல்லாத புன்சிரிப்பிலிருந்து அவரைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளலாம்? அவர் நகைச்சுவை உணர்வுள்ளவர்... சந்தோஷமாக இருக்க விரும்புபவர்... என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். அசோசியேஷன் ஃபார் சைக்கலாஜிக்கல் சைன்ஸ் வெளியிடும் அப்சர்வர் என்ற ஆன்லைன் பத்திரிகை இப்படி சொல்கிறது, “புன்னகைப்பது மனிதர்களுடைய இயல்பு என்று சொல்லலாம்,” புதிதாக பிறந்த குழந்தைகள்கூட மற்றவர்களுடைய “முகபாவனைகளை மிக சரியாக புரிந்துகொள்கிறார்கள்.” “ஒருவரின் புன்னகையிலிருந்து மற்றவர்கள் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்கிறார்கள். அதற்கு ஏற்றமாதிரி நடந்துகொள்கிறார்கள்.”
அமெரிக்காவில் இருக்கும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சில உண்மைகளை தெரிந்துகொண்டார்கள். வயதான நோயாளிகளை கவனித்துக்கொள்பவர்களின் முகபாவனைகள், நோயாளிகளின் உடல்நிலையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தியது என்று கவனித்தார்கள். அவர்களுடைய முகபாவனைகள் இதமாக, அக்கறையாக, கரிசனையாக இருப்பதை நோயாளிகள் உணர்ந்தபோது அவர்களுடைய உடல்நிலையும் மனநிலையும் முன்னேறியது. அதோடு, அந்த நோயாளிகள் சந்தோஷமாகவும் உணர்ந்தார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். ஆனால், அவர்களுடைய முகபாவனைகள் இதமாக இல்லாதபோது, நோயாளிகளின் உடலும் உள்ளமும் மோசமானது.
நீங்கள் புன்னகை செய்தால், அது உங்களுக்கே ஒரு வரமாக அமையும்! உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும், மகிழ்ச்சியாக இருப்பீர்கள், உங்கள் மன அழுத்தமும் குறையும் என்றெல்லாம் சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. ஆனால், கடுகடுவென நடந்துகொண்டால்... சிடுமூஞ்சியாக இருந்தால்... உங்களுக்குத்தான் கஷ்டம்!
புன்னகை “எனக்கு இன்னும் தைரியத்த கொடுத்துச்சு”
மேலே சொல்லப்பட்டிருந்த மாக்தலேனா ஒரு யெகோவாவின் சாட்சி. இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் நாசி கொள்கைகளை ஆதரிக்காததால் ஜெர்மனியில் இருக்கும் ராவன்ஸ்புரூக் சித்திரவதை முகாமுக்கு தன் குடும்பத்தோடு அனுப்பப்பட்டார். அவர் சொல்கிறார், “சிறையில இருந்த மத்தவங்ககிட்ட பேசக்கூடாதுனு அதிகாரிகள் சில சமயம் சொல்லுவாங்க,” “அவங்களால எங்களோட வாயிக்குதான் பூட்டுப்போட முடிஞ்சுது, முகத்துக்கு இல்ல. என்னோட அம்மா, அக்கா முகத்துல இருக்கிற புன்சிரிப்பை பாக்கும்போது அது எனக்கு இன்னும் தைரியத்த கொடுத்துச்சு. எவ்ளோ கஷ்டங்கள் வந்தாலும் சகிச்சிருக்க உதவுச்சு.”
வாழ்க்கையில் வரும் கவலைகள் நம்மை சரமாரியாக தாக்கும்போது புன்னகை வருவது கஷ்டம்தான். இருந்தாலும், ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள்தான் உணர்ச்சிகளை உண்டாக்குகிறது. (நீதிமொழிகள் 15:15; பிலிப்பியர் 4:8, 9) அதனால், நல்ல விஷயங்களைப் பற்றியும் இனிமையான நினைவுகளைப் பற்றியும் ஏன் நீங்கள் யோசிக்கக் கூடாது? இப்படி செய்வது கஷ்டமாக இருக்கலாம், இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள்.a பைபிளை வாசிப்பதும் கடவுளிடம் ஜெபம் செய்வதும் நிறைய பேருக்கு உதவியாக இருந்திருக்கிறது. (மத்தேயு 5:3; பிலிப்பியர் 4:6, 7) “சந்தோஷம்,” “மகிழ்ச்சி” மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் பைபிளில் பல தடவை வருகின்றன. ஒவ்வொரு நாளும் நீங்கள் பைபிளை ஏன் படித்து பார்க்கக் கூடாது? அப்படி செய்தால் உங்கள் முகத்திலும் புன்னகை பூக்கும்!
மற்றவர்கள் உங்களைப் பார்த்து முதலில் புன்னகைக்க வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். முதலில் உங்கள் முகத்தில் புன்னகை மலரட்டும், அது மற்றவர்கள் முகத்தில் புன்னகையை பூக்க செய்யும்! கடவுள் கொடுத்த வரத்தை உங்களுக்குள் பூட்டி வைக்காதீர்கள்! அதை மற்றவர்களுக்கு பரிசாக கொடுங்கள்!! ◼
a நவம்பர் 2013 ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் இருக்கும், “இதயத்தில் சந்தோஷம்—விருந்து கொண்டாட்டத்துக்கு சமம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.