சவாலை வெல்லப்போகும் அரசாங்கம்
உலகெங்கும் அமைதிப் பூங்கா!
எல்லாரும் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்க வேண்டும், மனித உரிமைகளை மதிக்க வேண்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் ஐக்கிய நாட்டு சங்கம் மக்களை ஊக்கப்படுத்துகிறது. ஏன்? “வானிலை மாற்றங்கள், குற்றச்செயல்கள், ஏற்றத்தாழ்வுகள், தீராத சண்டைகள், அகதிகளின் அதிகரிப்பு, தீவிரவாதத் தாக்குதல்கள், தொற்றுநோய்கள் போன்ற பிரச்சினைகள் . . . நாடு, எல்லை என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களையுமே பாதிக்கின்றன” என்று யூஎன் க்ரானிக்கல் பத்திரிகையில் மாஹர் நாசர் என்பவர் சொன்னார்.
மற்றவர்கள் ஒரு படி மேலே போய், உலகம் முழுவதும் ஒரே ஆட்சியைக் கொண்டுவந்தால் பிரச்சினைகள் தீரும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், இத்தாலிய தத்துவஞானியும், கவிஞரும், அரசியல் மேதையுமான டான்டே (1265-1321). இன்னொருவர், இயற்பியல் அறிஞரான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955). அரசியல் ரீதியில் பிளவுபட்டிருக்கிற உலகத்தில் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று டான்டே நினைத்தார். “ஒரு ராஜ்யத்துக்குள் பிரிவினைகள் இருந்தால் அந்த ராஜ்யம் நிலைக்காது” என்று இயேசு கிறிஸ்து சொன்னதை அவர் சுட்டிக்காட்டினார்.—லூக்கா 11:17.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், (இரண்டாம் உலகப் போரில் இரண்டு அணுகுண்டுகள் வெடிக்கப்பட்ட கொஞ்சக் காலத்தில்) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கு ஒரு திறந்த கடிதத்தை எழுதினார். “உலகம் முழுவதும் பாதுகாப்பைக் கொண்டுவர ஐக்கிய நாட்டு சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; கொஞ்சம்கூடத் தாமதிக்காமல், உலகம் முழுவதும் ஒரே அரசாங்கத்தைக் கொண்டுவர வேண்டும்” என்று அவர் அந்தக் கடிதத்தில் எழுதினார்.
அப்படியே உலகம் முழுவதும் ஒரே அரசாங்கம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சமயத்திலாவது அதிகாரத்தில் இருப்பவர்கள் ஊழல் செய்யாமலும் மக்களை அடக்கி ஒடுக்காமலும் திறமையாக ஆட்சி செய்வார்களா? அல்லது, மோசமான அரசியல்வாதிகளைப் போலத்தான் இருப்பார்களா? ‘அதிகாரம் ஒருவரை ஊழல் செய்யத் தூண்டுகிறது; அதிகாரம் கூடிவிட்டால் ஊழலும் கூடிவிடுகிறது’ என்று பிரிட்டிஷ் சரித்திராசிரியரான லார்ட் ஆக்டன் சொன்னது நம் ஞாபகத்துக்கு வருகிறது, இல்லையா?
உண்மையான சமாதானம் வேண்டுமென்றால் மனிதர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் இந்த லட்சியத்தை எப்படி அடைவது? இதெல்லாம் நடக்கிற காரியமா? கண்டிப்பாக! பைபிள் சொல்கிறபடி, உலக ஒற்றுமை வெறும் கனவல்ல, அது நிஜமாகப்போகிறது. ஆனால், ஊழல் செய்கிற அரசியல்வாதிகளைக் கொண்ட உலக அரசாங்கம் இதைச் சாதிக்காது, கடவுள் ஏற்படுத்தியிருக்கும் அரசாங்கமே இதைச் சாதிக்கும்! மனிதர்களை ஆட்சி செய்யும் உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது; அதனால், தன்னுடைய அரசாங்கத்தின் மூலம் அவர் மனிதர்களை ஆட்சி செய்வார். அந்த அரசாங்கத்தைத்தான் ‘கடவுளுடைய அரசாங்கம்’ என்று பைபிள் அழைக்கிறது.—லூக்கா 4:43.
“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”
‘உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் . . . பூமியில் நிறைவேற வேண்டும்’ என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ளும்படி இயேசு கற்றுக்கொடுத்தார்; கடவுளுடைய அரசாங்கத்தை மனதில் வைத்துத்தான் அவர் இதைக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9, 10) அந்த அரசாங்கம், பதவி வெறிபிடித்த அல்லது சுயநலம்பிடித்த மனிதர்களின் விருப்பத்தை அல்ல, கடவுளுடைய விருப்பத்தை இந்தப் பூமியில் நிறைவேற்றும்.
கடவுளுடைய அரசாங்கம் “பரலோக அரசாங்கம்” என்றுகூட அழைக்கப்படுகிறது. (மத்தேயு 5:3) ஏனென்றால், அது பூமியிலிருந்து ஆட்சி செய்யாமல் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும். அதனால், மக்களுடைய பணம் அதற்குத் தேவைப்படாது. கடவுளுடைய ஆட்சியில் மக்களிடம் எந்தக் கட்டணமும் வரியும் வசூலிக்கப்படாது. அப்போது நமக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கும்!
கடவுளுடைய அரசாங்கம் “கடவுளுடைய ராஜ்யம்” என்றும் அழைக்கப்படுகிறது. அப்படியென்றால், அதற்கு ஒரு ராஜா இருப்பார். அவர்தான் இயேசு கிறிஸ்து. ஆட்சி செய்யும் அதிகாரத்தைக் கடவுளே அவருக்குக் கொடுத்திருக்கிறார். இந்த ராஜாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்:
“ஆட்சி செய்யும் அதிகாரம் அவருடைய தோளின் மேல் இருக்கும். . . . அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.”—ஏசாயா 9:6, 7.
“எல்லா இனத்தினரும் தேசத்தினரும் மொழியினரும் இவருக்குச் சேவை செய்வதற்காக, அரசாட்சியும் மேன்மையும் ராஜ்யமும் இவருக்கே கொடுக்கப்பட்டன. இவருடைய அரசாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.”—தானியேல் 7:14.
“உலகத்தின் அரசாங்கம் நம் எஜமானுக்கும் [கடவுளுக்கும்] அவருடைய கிறிஸ்துவுக்கும் சொந்தமான அரசாங்கமானது.”—வெளிப்படுத்துதல் 11:15.
கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியில் அவருடைய விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றும். அந்த அரசாங்கத்தின் கீழ் வாழும் மக்கள் இந்தப் பூமியைப் பராமரிப்பதற்குக் கற்றுக்கொள்வார்கள். அதன் பிறகு இந்தப் பூமியில் மறுபடியும் இயற்கை எழில் கொஞ்சும்; திரும்பிய பக்கமெல்லாம் விதவிதமான உயிரினங்களைப் பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்!
எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளுடைய அரசாங்கம் அதன் குடிமக்கள் எல்லாருக்கும் ஒரேவிதமான ஒழுக்கநெறிகளைக் கற்றுக்கொடுக்கும். அந்தச் சமயத்தில் எந்த விதமான சண்டை சச்சரவும் பிரிவினையும் இருக்காது. “யாருக்கும் எந்த ஆபத்தும் வராது. எந்தக் கேடும் வராது. ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்று பைபிள் சொல்கிறது.—ஏசாயா 11:9.
இன்று ஐக்கிய நாட்டு சங்கம் எதைச் சாதிக்க விரும்புகிறதோ அதைக் கடவுளுடைய அரசாங்கம் சாதிக்கும். அதாவது, உலகம் முழுவதுமுள்ள மக்களைச் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைக்கும்! “அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்” என்று சங்கீதம் 37:11 சொல்கிறது. “குற்றச்செயல்,” “தூய்மைக்கேடு,” “வறுமை,” “போர்” போன்ற வார்த்தைகள் இனி நம் அகராதியிலேயே இருக்காது. ஆனால், இதெல்லாம் எப்போது நடக்கும்? கடவுளுடைய அரசாங்கம் எப்போது ஆட்சி செய்ய ஆரம்பிக்கும்? அது எப்படி ஆட்சியைப் பிடிக்கும்? அந்த ஆட்சியில் வாழ நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த பக்கத்தைப் பாருங்கள்...