கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிக்க சபைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன
பூமியிலிருக்கையில், இயேசு கிறிஸ்து கிராமங்கள் தோறும், பட்டணங்கள் தோறும் சென்று கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்தார். அவர் தம்முடைய சீஷர்களையும் பயிற்றுவித்து அதே வேலையை செய்வதற்கு அனுப்பினார். பரலோகத்துக்கு ஏறிப்போவதற்கு முன்பாக, சகல ஜாதிகளிலுமுள்ள ஆட்களைச் சீஷராக்கும்படி தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் கட்டளையிட்டார். பூர்வ கிறிஸ்தவ சபை அதன் தொடக்கம் முதற்கொண்டே, நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டது. சீஷர்கள் சென்றயிடமெல்லாம் அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்துக் கொண்டிருப்பவர்களாக காணப்பட்டார்கள்.—மத்தேயு 4:17, 23; 10:1-16; 28:19, 20; லூக்கா 4:43, 44; 8:1; 10:1-9; அப்போஸ்தலர் 1:8; 4:31; 5:42; 8:12; 19:8; 28:23, 30, 31; ரோமர் 10:9, 10, 14.
இயேசு, இந்தக் காரிய ஒழுங்கின் முடிவைப் பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தில் இவ்விதமாகச் சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” இந்தப் பிரசங்க வேலையே, இன்று கிறிஸ்தவ சபையின் முக்கிய உத்தரவாதமாக இருக்கிறது.—மத்தேயு 24:14; மாற்கு 13:10.
உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய எல்லா சபைகளும் தங்களுடைய உள்ளூர் பிராந்தியம் முழுவதிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை முறைப்படி பிரசங்கித்து முடிப்பதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. இது ஒழுங்கான முறையில் செய்து முடிக்கப்படும்பொருட்டு ஒவ்வொரு தேசத்திலும் உவாட்ச் டவர் சங்கத்தின் கிளைக்காரியாலயம் ஒவ்வொரு சபைக்கும் ஒரு பிராந்தியத்தைச் சாட்சி கொடுப்பதற்காக ஒதுக்கித் தருகிறது. கொடுக்கப்படும் அந்தப் பிராந்தியத்தைச் சபை சிறிய பகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறது. பின்பு இவை, ஜனங்கள் சந்திக்கப்படுவதைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பேற்பவர்களிடம் பிரித்து கொடுக்கப்படுகின்றன.—1 கொரிந்தியர் 14:33, 40.
சாட்சிகள் பொதுவாக வீடு-வீடாய்ச் செல்வதன் மூலம் ஜனங்களைச் சந்திக்கிறார்கள். வீட்டு வாசல்களில் தங்களுடைய பைபிளை உபயோகித்து ராஜ்ய செய்தியைச் சுருக்கமாக எடுத்துரைக்கத் தங்கள் சபைக்கூட்டங்களில் யெகோவாவின் சாட்சிகள் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய கூடுதலான அறிவைப் பெற்றுக்கொள்ள விரும்பும் வீட்டுக்காரர்களிடம் விட்டுவர சாட்சிகள் பைபிள் பிரசுரங்களை எடுத்துச் செல்லுகிறார்கள்.
பிராந்தியத்திலுள்ள ஒவ்வொருவரும் இந்த முக்கியமான ராஜ்ய செய்தியைக் கேட்பதற்குச் சந்தர்ப்பத்தை அளிக்கும் பொருட்டு சாட்சிகள் வீடு வீடாக செல்கையில், எந்த வீட்டில் ஆட்கள் இல்லை அல்லது எங்கே வேறு ஏதோ காரணத்தினால் முழுமையான சாட்சி கொடுக்க முடியவில்லை என்றவற்றைக் காட்டும் விவரமான ஒரு பதிவை வைத்துக்கொள்கிறார்கள். மற்றொரு சமயத்தில் இவர்களைப் போய்ச் சந்திப்பார்கள். எந்த இடத்திலாவது அக்கறைக் காட்டினால், அதைக் குறித்து வைத்துக்கொண்டு, அவர்களுக்குக் கூடுதலான வேதப்பூர்வ தகவலைக் கொடுக்க சாட்சிகள் திரும்பப் போய்ச் சந்திக்கிறார்கள். அவர்கள் விரும்பினால் அவர்களுடன் ஒழுங்காய் பைபிள் படிப்பு நடத்துவார்கள். இவை அனைத்தும் இலவசமாய் செய்யப்படுகிறது.
யெகோவாவின் சாட்சிகள் தெருக்களில் நின்றும் கடந்து செல்வோருக்குப் பத்திரிகைகளை அளிக்கிறார்கள். இவ்வகையில் அவர்கள் வீட்டில் காணமுடியாத அநேக ஆட்களைச் சந்திக்க முடிகிறது. செவிகொடுத்துக் கேட்க மனமுள்ள ஒவ்வொருவரையும் சென்றெட்ட உண்மையான முயற்சி செய்யப்படுகிறது.—அப்போஸ்தலர் 17:17; வெளிப்படுத்தின விசேஷம் 14:6, 7; 22:17.
பெரும்பான்மையர் எந்த அக்கறையையும் காண்பிக்காதபோது, சாட்சிகள் ஏன் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்? தனி நபர்களின் சூழ்நிலைமை அநேகமாக மாறுவதும், மற்றொரு சந்திப்பின்போது அவர்கள் சாதகமாகப் பிரதிபலிப்பதும் கவனிக்கப்பட்டிருக்கிறது, அல்லது குடும்பத்தில் முன்பு சந்திக்காத வேறு ஒருவரைச் சந்திக்க நேரிடும், அவர் ஒருவேளை அக்கறை காண்பிப்பார்.
இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்.” கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிப்பது, நாம் முதலாவது ராஜ்யத்தைத் தேடுவதில் இன்றியமையாத ஒரு பங்கை வகிக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் இதைத் தங்களுடைய வாழ்க்கையில் அதிமுக்கியமான குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றனர்.—மத்தேயு 6:33; 2 தீமோத்தேயு 4:2.
● இயேசுவும் பூர்வ கிறிஸ்தவர்களும் செய்த எந்த வேலை நம்முடைய நாளிலும் செய்யப்படுமென முன்னறிவிக்கப்பட்டது?
● யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது?
● பெரும்பான்மையர் அக்கறைக் காண்பிக்காதபோதிலும் சாட்சிகள் ஏன் தொடர்ந்து ஜனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்?
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகள் பல்வேறு நாடுகளில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிக்கிறார்கள்
தாய்லாந்து
மெக்ஸிக்கோ
நெதர்லாந்து
கொரியா
குரசோ
கானா
பிரிட்டன்
ஆஸ்திரேலியா