பைபிள் புத்தக எண் 8—ரூத்
எழுத்தாளர்: சாமுவேல்
எழுதப்பட்ட இடம்: இஸ்ரவேல்
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 1090
காலப்பகுதி: நியாயாதிபதிகளுடைய ஆட்சியின் 11 ஆண்டுகள்
ரூத் புத்தகம் சுவாரஸ்யமான ஒரு நாடகம். அழகிய காதல் கதை. அதன் நாயகன் போவாஸ், நாயகி ரூத். இருந்தபோதிலும், இது வெறுமனே ஒரு காதல் கதையுமல்ல; பொழுதுபோக்கிற்கான ஒரு காவியமுமல்ல. ராஜ்ய சுதந்தரவாளியை பிறப்பிப்பதற்கான யெகோவாவின் நோக்கத்தை இந்தப் புத்தகம் சிறப்பித்துக் காட்டுகிறது. மேலும் அவருடைய அன்புள்ள தயவை மேன்மைப்படுத்துகிறது. (ரூத் 1:8; 2:20; 3:10) புறமத தெய்வமாகிய காமோஸை வணங்கிவந்த ஒரு மோவாபிய பெண், பிறகு உண்மையான மதத்துக்கு மாறினாள். இயேசு கிறிஸ்துவின் மூதாதையாகும்படி கடவுள் அவளை தெரிந்தெடுத்தார். இதன் மூலம் யெகோவாவுடைய அன்பின் எல்லை எவ்வளவு விரிவானது என்பது புலனாகிறதல்லவா! ஆபிரகாமிலிருந்து இயேசு வரை குடும்ப வம்சாவளி பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பெண்களுடைய பெயர்களில் ரூத்தின் பெயரும் அடங்கும். (மத். 1:3, 5, 16) பைபிளின் இரண்டு புத்தகங்கள் பெண்களின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அதில் ஒன்று ரூத்; மற்றொன்று எஸ்தர்.
2 “நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில், . . . ” என்பதாக தொடங்கி, இந்தப் புத்தகம் உணர்ச்சிகளைத் தூண்டும் சம்பவங்களை விவரிக்க ஆரம்பிக்கிறது. பிற்பாடு, அதாவது இஸ்ரவேலில் அரசர்கள் ஆண்ட காலத்தில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது என இந்த வார்த்தைகளிலிருந்து புரிந்துகொள்ளலாம். எனினும், இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்கள், நியாயாதிபதிகளின் காலத்தில் ஏறக்குறைய 11 ஆண்டுகள் நடந்தவையாகும். இப்புத்தகத்தை எழுதியவருடைய பெயர் சொல்லப்படவில்லை. இருந்தபோதிலும், நியாயாதிபதிகள் புத்தகத்தை எழுதியதாய் நம்பப்படும் சாமுவேலே இதையும் எழுதியிருக்க வேண்டுமென தெரிகிறது. ராஜாக்களுடைய காலத்தின் தொடக்கத்தில் உண்மையுள்ள ஆளாக முதலிடத்தில் இருந்தவரும் சாமுவேலே. தாவீது ஏற்கெனவே முக்கியத்துவம் பெற்றுவந்ததை முடிவான வசனங்கள் குறிப்பிடுகின்றன. ஆகவே இப்புத்தகம் எழுதப்பட்ட காலம் ஏறக்குறைய பொ.ச.மு. 1090. யூதா கோத்திரத்திலிருந்து வரும் ஒரு ‘சிங்கத்தைப்’ பற்றிய யெகோவாவின் வாக்கை சாமுவேல் நன்றாக அறிந்திருந்தார். யூதா கோத்திரத்தைச் சேர்ந்த தாவீதை இஸ்ரவேலின் அரசனாக அபிஷேகம் செய்வதற்கும் யெகோவா அவரையே பயன்படுத்தினார். ஆகவே தாவீது வரை குடும்ப வம்சாவளி பட்டியலை பதிவுசெய்வதில் ஆழ்ந்த அக்கறையுடையவராக சாமுவேல் இருந்திருப்பார்.—ஆதி. 49:9, 10; 1 சா. 16:1, 13; ரூத் 1:1, பொ.மொ.; 2:4; 4:13, 18-22.
3 பைபிளின் அதிகாரப்பூர்வ தொகுப்பில் ரூத் புத்தகமும் ஒன்று என்ற உண்மைக்கு எதிராக ஒருபோதும் சவால் எழுப்பப்படவில்லை. மத்தேயு 1:5-ல் கொடுக்கப்பட்டுள்ள இயேசுவின் குடும்ப வம்சாவளி பட்டியலில் ரூத் இடம்பெறும்படி யெகோவா ஏவியுள்ளார். இதுவே அதன் நம்பகத்தன்மைக்கு போதிய ஆதாரம். ரூத் புத்தகத்தை யூதர்கள், எபிரெய வேதாகமத் தொகுப்பின் பாகமாகவே எப்பொழுதும் அங்கீகரித்திருக்கின்றனர். ஆகவேதான், 1947 முதற்கொண்டு கண்டெடுக்கப்பட்ட சவக்கடல் சுருள்களில், வேதாகமத் தொகுப்பு என்பதாக அங்கீகரிக்கப்பட்ட மற்ற புத்தகங்களுடன் இந்தப் புத்தகத்தின் துண்டுகளும் அடங்கியிருந்தது ஆச்சரியமல்ல. மேலும், யெகோவாவின் ராஜ்ய நோக்கங்களுடனும் அவற்றோடுகூட மோசேயின் நியாயப்பிரமாண கட்டளைகளுடனும் ரூத் புத்தகம் முற்றிலும் ஒத்திசைந்துள்ளது. இஸ்ரவேலர்கள் விக்கிரக வணக்க கானானியரோடும் மோவாபியரோடும் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ளக்கூடாது என கட்டளையிடப்பட்டிருந்தனர். இருந்தபோதிலும், யெகோவாவின் வணக்கத்தை ஏற்ற ரூத் போன்ற அன்னியரை மணம் செய்வதை இது தடைசெய்யவில்லை. ரூத் புத்தகத்தில், சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்வது சம்பந்தமான சட்டமும் கணவனுடைய சகோதரனை மணம்செய்வது சம்பந்தமான சட்டமும் அதனுடைய எல்லா நுட்பவிவரத்துடனும் பின்பற்றப்பட்டதை காணலாம்.—உபா. 7:1-4; 23:3, 4; 25:5-10.
ரூத் புத்தகத்தின் பொருளடக்கம்
4 நகோமியுடனேயே இருப்பதற்கு ரூத்தின் தீர்மானம் (1:1-22). இஸ்ரவேலில் பஞ்சம் உண்டாயிருந்த ஒரு காலத்திலிருந்து இந்தக் கதை தொடங்குகிறது. எலிமெலேக்கு என்பவர் பெத்லகேமை சேர்ந்தவர். இவருடைய மனைவியின் பெயர் நகோமி. மக்லோன், கிலியோன் என்பவர்கள் இவர்களுடைய இரண்டு குமாரர்கள். இந்தக் குடும்பம் யோர்தானை கடந்து, மோவாப் தேசத்தில் தற்காலிகமாக குடியேறுகிறது. அங்கே அந்தக் குமாரர்கள் மோவாபிய பெண்களான ஓர்பாள், ரூத் என்போரை திருமணம் செய்கின்றனர். இவர்கள் குடும்பத்தில் துயரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக புயல்போல தாக்குகின்றன. முதலாவது அக்குடும்பத்தில் தகப்பன் மரணமடைகிறார். பிறகு அவருடைய இரண்டு குமாரரும் இறந்து போகின்றனர். எலிமெலேக்குக்கு வாரிசே இல்லை. பிள்ளைகளில்லாத அந்த மூன்று விதவைகள் வாடுகின்றனர். யெகோவா இஸ்ரவேல் மக்களிடம் தம்முடைய கவனத்தை மறுபடியும் திருப்பி, தம்முடைய மக்களுக்கு உணவு கொடுப்பதை நகோமி கேள்விப்படுகிறாள். ஆகவே தனது பிறப்பிடமாகிய யூதா தேசத்துக்குத் திரும்பிச் செல்ல அவள் தீர்மானிக்கிறாள். நகோமியுடைய இரண்டு மருமகள்களும் அவளோடுகூட பயணப்படுகின்றனர். ஆனால் மோவாபுக்குத் திரும்பச் செல்லும்படி நகோமி அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறாள். தனது மருமகள்களுக்கு அவர்களுடைய சொந்த மக்களிடமிருந்து கணவர்களை அருளும்படி யெகோவாவின் அன்புள்ள இரக்கத்துக்காக விண்ணப்பிக்கிறாள். முடிவாக ஓர்பாள் “தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்திற்கும் திரும்பிப் போய்விட்டாள்.” ஆனால் ரூத், யெகோவாவின் வணக்கத்தாளாக மாறிய சமயத்தில் கொண்டிருந்த அதே உறுதியோடும் உண்மையோடும், நகோமியை விடாமல் பற்றிக்கொள்கிறாள். அவளுடைய தீர்மானம் பின்வரும் வார்த்தைகளில் அழகான முறையில் வெளிப்படுத்தப்படுகிறது: “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தெய்வம் என்னுடைய தெய்வம். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து அங்கே அடக்கம் பண்ணப்படுவேன், மரணமேயல்லாமல் வேறெதுவும் உம்மைவிட்டு என்னைப் பிரித்தால் யெகோவா தமது இஷ்டப்படியெல்லாம் எனக்குச் செய்வாராக.” (1:15-17, தி.மொ.) நகோமி என்ற பெயரின் அர்த்தம் “என் இனிமை” என்பதாகும். இருப்பினும், தான் விதவையாகவும் பிள்ளையற்றவளாகவும் இருப்பதால் “கசப்பு” என்பதை அர்த்தப்படுத்தும் மாராள் என்ற பெயரால் தன்னை அழைக்கும்படி கூறுகிறாள்.
5 போவாஸின் வயலில் சிந்திய கதிர்களை ரூத் பொறுக்குகிறாள் (2:1-23). பெத்லகேமுக்கு வந்து சேர்ந்தபிறகு, வாற்கோதுமை அறுவடையின்போது வயலில் சிந்தின கதிர்களைப் பொறுக்கிவருவதற்கு நகோமியின் அனுமதியைப் பெறுகிறாள் ரூத். போவாஸ் என்பவரே அந்த வயலின் சொந்தக்காரர். வயதான யூதனாயிருந்த இவர், ரூத்தின் மாமனாரான எலிமெலேக்குவின் நெருங்கிய உறவினர். ரூத்தை இந்த போவாஸ் கவனிக்கிறார். கடவுளுடைய சட்டத்தின்படி, அறுவடையின்போது வயலில் சிந்தினவற்றைப் பொறுக்கும் உரிமையை ரூத் பெற்றிருந்தாள். இருந்தபோதிலும் அதற்கு அனுமதியைக் கேட்பதன் மூலம் ரூத் மனத்தாழ்மையைக் காட்டுகிறாள். (லேவி. 19:9, 10) அவளுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது. தனது வேலைக்காரிகளான இளம் பெண்களோடு தன்னுடைய வயலிலேயே கதிர் பொறுக்கும்படி ரூத்திடம் போவாஸ் சொல்கிறார். நகோமியிடம் அவள் கொண்டிருந்த உண்மைப் பற்றுறுதியைப் பற்றித் தான் கேள்விப்பட்டதாக ரூத்திடம் சொல்கிறார். அதனால் பின்வரும் வார்த்தைகளில் அவளை உற்சாகப்படுத்துகிறார்: “நீ செய்ததற்கேற்ற நற்பலனை யெகோவா உனக்குக் கொடுத்தருள்வார். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவரே பிரதியுபகாரம் செய்வார்.” (ரூத் 2:12, தி.மொ.) அந்தச் சாயங்காலம் ரூத் தன் உழைப்பின் பலன்களை நகோமியுடன் தாராளமாக பகிர்ந்துகொள்கிறாள். வயலில் சிந்தினதைப் பொறுக்குவதில் தனக்கு கிடைத்த நற்பயனுக்கு, போவாஸின் நல்ல மனதே காரணம் என விளக்குகிறாள். இந்தச் சம்பவத்தில் யெகோவாவின் வழிநடத்துதல் இருப்பதை உணர்ந்து நகோமி பின்வருமாறு கூறுகிறாள்: “உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் விடாமல் தயை பாராட்டி வருகிற யெகோவாவின் ஆசீர்வாதம் அவனுக்குரியதாக . . . அந்த மனுஷன் நமக்கு நெருங்கின பந்து, நம்மை மீட்பதற்குரிய இனத்தான்.” (2:20, தி.மொ.) ஆம், போவாஸ் நெருங்கிய உறவினன். இறந்துபோன எலிமெலேக்குவின் பெயரில் நகோமிக்குச் சந்ததியைச் சட்டப்பூர்வமாய் எழுப்ப தகுந்தவர். வாற்கோதுமை அறுப்பும் கோதுமை அறுப்பும் முடிவடையும் வரை போவாஸின் வயலில் சிந்திய கதிர்களை ரூத் தொடர்ந்து பொறுக்கி வருகிறாள்.
6 மீட்பவராக, ரூத்தை மணந்துகொள்கிறார் போவாஸ் (3:1–4:22). தள்ளாடும் வயதை எட்டிவிட்ட தம்மால் இனிமேலும் சந்ததியைப் பிறப்பிக்க முடியாது என நகோமி உணருகிறாள். ஆகவே தனக்குப் பதிலாக சுதந்தர மீட்புக்குரிய மணம் செய்யும்படி ரூத்திடம் சொல்கிறாள். இப்படிப்பட்ட முக்கியமான பருவகாலத்தின்போது தானியம் தூற்றப்படுவதை நிலத்தின் சொந்தக்காரரே நேரில் மேற்பார்வையிடுவது வழக்கம். சுட்டுப்பொசுக்கும் மதிய வேளைக்குப் பிறகு மாலைப்பொழுதில் வீசும் காற்றில் தானியம் தூற்றப்பட்டது. போரடிக்கும் களத்திலேயே போவாஸ் தூங்குவார். அங்குதான் ரூத் அவரை காண்கிறாள். அவள் அமைதலாக போவாஸிடம் வந்து, அவருடைய பாதங்களின்மீது மூடியிருந்த போர்வையை ஒதுக்கி படுத்துக்கொள்கிறாள். நள்ளிரவில் அவர் கண்விழிக்கையில், ரூத் தன்னை யார் என வெளிப்படுத்துகிறாள். கணவனின் சகோதரனை மணம் செய்வதற்குரிய உரிமையைக் கேட்கும் பெண் கைக்கொள்ளவேண்டிய வழக்கமான முறைமையின்படி, அவருடைய போர்வையைத் தன்மீது விரிக்கும்படி கேட்கிறாள்.a போவாஸ் அவளிடம், “மகளே, நீ யெகோவாவின் ஆசீர்வாதத்திற்குரியவள்” என கூறுகிறார். இளவயதின் ஆசைகளால் வாலிபர் பின் செல்லாததற்காக அவளை மெச்சுகிறார். ரூத் ஒழுக்கங்கெட்ட நடத்தையை தேடாமல் “குணசாலி” என்ற நற்பெயரை பெற்றுக்கொள்கிறாள். (3:10, 11, தி.மொ.) எனினும், தன்னைப் பார்க்கிலும் மிக நெருங்கிய உறவினனாக மீட்பவனாயுள்ள மற்றொருவன் இருக்கிறான் என அவர் இப்பொழுது ரூத்திடம் சொல்கிறார். காலையில் அவனோடு கலந்து பேசப்போவதாகவும் சொல்கிறார். விடியற்காலை வரையில் ரூத் அவருடைய பாதங்களுக்கு அருகில் தொடர்ந்து படுத்திருக்கிறாள். பின்பு போவாஸ் அவளுக்குத் தானியத்தைப் பரிசாக அளிக்கிறார். பிறகு நகோமியிடம் ரூத் திரும்பிச் செல்கிறாள். இறுதியாக என்ன நடந்தது என்பதைப் பற்றி அறிந்துகொள்ள நகோமி ஆர்வத்துடன் வினவுகிறாள்.
7 அந்த மீட்பவனைக் காண போவாஸ் விடியற்காலையில் அந்தப் பட்டண வாசலுக்குச் செல்கிறார். அந்தப் பட்டணத்து மூப்பர்கள் பத்துப் பேரைச் சாட்சிகளாக வைத்து, எலிமெலேக்கிற்கு சொந்தமான எல்லாவற்றையும் கிரயத்துக்கு வாங்கிக்கொள்ளும்படியான முதல் வாய்ப்பை அந்த நெருங்கிய உறவினனுக்கு அளிக்கிறார். அவன் அதை ஏற்றுக்கொள்வானா? இதனால் தன்னுடைய செல்வம் அதிகரிக்கும் என்பதை அறிந்த அவன் உடனடியாக சம்மதிக்கிறான். எனினும், ரூத்தை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்தபோதோ பின்வாங்குகிறான். தன் சொந்த சுதந்தரத்தைக் குறித்து பயப்படுகிறான். தன் பாதரட்சையைக் கழற்றிக் கொடுப்பதன்மூலம் இந்த ஏற்பாட்டில் தனக்கு சம்மதம் இல்லை என்பதை சட்டப்பூர்வமாக அடையாளப்படுத்தித் தெரிவிக்கிறான். பைபிள் பதிவில் அவனுடைய பெயர்கூட குறிப்பிடப்படவில்லை. போவாஸ் அவனை நோக்கி “ஓய்” என்று மதிப்பற்ற விதமாகத்தான் அழைக்கிறார். பின்பு, அதே சாட்சிகளுக்கு முன்னால், போவாஸ் ரூத்தைத் தன் மனைவியாக வாங்கிக்கொள்கிறார். ஏதோ சுயநலத்திற்காக போவாஸ் அவ்வாறு செய்தாரா? இல்லவே இல்லை, “மரித்தவனுடைய பேர் . . . அற்றுப்போகாமல்” இருக்கவே அப்படிச் செய்தார். (4:1, 10) பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் இந்த அன்புள்ள ஏற்பாட்டின்மீது யெகோவா ஆசீர்வாதத்தை பொழியும்படி கேட்கின்றனர். நிச்சயமாகவே யெகோவாவும் தமது ஆசீர்வாதத்தை அருளுகிறார்! போவாஸின் முதிர்வயதில் ரூத் அவருக்கு ஒரு மகனை பெறுகிறாள். நகோமி அந்தப் பிள்ளையை பேணிவளர்க்கும் தாயாகிறாள். ஓபேத் என பெயரிடப்பட்ட அந்தப் பிள்ளை “நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை” என அழைக்கப்படுகிறான்.—4:17.
8 ரூத் புத்தகத்தின் முடிவான வசனங்கள் பேரேசிலிருந்து போவாஸின் வழியாக, தாவீதுவரையான வம்சாவளியை குறிப்பிடுகின்றன. இதில் எல்லா தலைமுறைகளும் குறிப்பிடப்படவில்லை என சில விமர்சகர்கள் விவாதித்திருக்கின்றனர். ஏனெனில் இந்த காலப்பகுதி மிக நீண்டதாக இருக்கிறது, ஆனால் குறிப்பிடப்பட்டுள்ள தலைமுறைகளோ மிகவும் குறைவு என்கின்றனர். அது உண்மைதானா? அல்லது ஒவ்வொருவரும் நீண்ட ஆயுளுள்ளவர்களாகவும் தங்களுடைய முதிர்வயதிலும் ஒரு குமாரனுடனும் ஆசீர்வதிக்கப்பட்டார்களா? இரண்டாவதே உண்மையாக இருக்க வேண்டும். ஏனென்றால், வாக்குப்பண்ணப்பட்ட வித்து, மனிதனின் இயல்பான வல்லமையால் அல்ல; மாறாக, யெகோவாவின் ஏற்பாட்டாலும் தகுதியற்ற தயவாலுமே பிறப்பிக்கப்படுகிறது. மற்ற சந்தர்ப்பங்களிலும் இதேவிதமாக யெகோவா தம்முடைய வல்லமையைச் செலுத்தியிருக்கிறார். உதாரணமாக ஈசாக்கு, சாமுவேல், முழுக்காட்டுபவனான யோவான் ஆகியோருடைய பிறப்புகளில் யெகோவா இவ்வாறு செய்திருக்கிறாரே!—ஆதி. 21:1-5; 1 சா. 1:1-20; லூக். 1:5-24, 57-66.
ஏன் பயனுள்ளது
9 மகிழ்ச்சி தரும் இந்தப் பதிவு, நீதியை நேசிப்பவர்களுடைய உறுதியான விசுவாசத்தைக் கட்டியெழுப்ப உதவிசெய்கிறது. ஆகவே இந்தப் பதிவு பயனுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை. ஆர்வத்தைத் தூண்டும் இந்த நாடகத்திலுள்ள முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் யெகோவாவின்பேரில் அதிக விசுவாசத்தைக் காட்டினார்கள். இவர்கள் தங்கள் “விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்”றார்கள். (எபி. 11:39) இவர்கள் இன்று நமக்குச் சிறந்த முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். யெகோவாவின் பற்றுமாறா அன்பில் நகோமி ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டினாள். (ரூத் 1:8; 2:20) யெகோவாவின் வணக்கத்தைக் கடைப்பிடிக்கும்படி ரூத் மனமுவந்து தன் தாய்நாட்டைவிட்டுச் சென்றாள்; அவள் தன்னை உண்மையும் பணிவும் உள்ளவளாகவும் மனமுவந்து வேலை செய்பவளாகவும் நிரூபித்தாள். யெகோவாவின் சட்டத்தின்பேரில் போவாஸுக்கு ஆழ்ந்த மதித்துணர்வு இருந்தது. யெகோவாவின் சித்தத்தை செய்வதில் பூரண உடன்பாடும் மனத்தாழ்மையும் இருந்தது. மேலும் உண்மையுள்ள நகோமியினிடமும் உழைப்பாளியான ரூத்தினிடமும் அன்பு இருந்தது. இந்த அனைத்து குணங்களும், மீட்பு சுதந்தரத்தின்மூலம் இந்த திருமண சிலாக்கியத்தை பெறுவதற்கு வழிநடத்தியது.
10 திருமணம் யெகோவாவின் ஏற்பாடு. இந்தச் சந்தர்ப்பத்தில், சுதந்தரத்தை மீட்க செய்யப்பட்ட மணம், அவருக்கு கனமுண்டாக பயன்படுத்தப்பட்டது. போவாஸுக்கும் ரூத்துக்கும் திருமணத்தை யெகோவாவே ஏற்பாடு செய்தார். தம்முடைய பற்றுமாறா அன்பின்படி அவர் அத்திருமணத்தை ஆசீர்வதித்தார்; தாவீதுக்கும் முடிவில் பெரிய தாவீதாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் வழிநடத்தும் யூதாவின் ராஜரீக வம்சாவளி தடைபடாமல் பாதுகாக்கவும் கடவுள் அவர்களுடைய திருமணத்தை பயன்படுத்தினார். தம்முடைய சட்டப்பூர்வ ஏற்பாட்டின்படி ராஜ்ய சுதந்தரவாளியைப் பிறப்பிக்கச் செய்வதில் யெகோவா மிகவும் கவனத்தோடு இருந்தது நம்முடைய நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். இது, ராஜ்ய வாக்குகள் யாவும் நிறைவேற்றமடைவதைத் திடநம்பிக்கையோடு ஆவலோடு எதிர்பார்க்கும்படியாகவும் நம்மை செய்விக்க வேண்டும். ஆவிக்குரிய இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவிடமிருந்து நிறைவான பலன் பெறுவோம் என்ற திடநம்பிக்கையுடன், தற்கால அறுவடை ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கும்படி இது நம்மை உற்சாகப்படுத்த வேண்டும். கடவுளுடைய ‘செட்டைகளின் கீழ் நாம் அடைக்கலம் தேடி வந்திருக்கிறோம்.’ அவருடைய ராஜ்ய நோக்கங்கள் அவற்றின் முழுமையான நிறைவேற்றத்தை நோக்கி மிகவும் மகிமையோடு முன்னேறுகின்றன. (2:12) அந்த ராஜ்யத்துக்கு வழிநடத்தும் பதிவில் ரூத்தின் புத்தகம் மற்றொரு முக்கிய பாலமாக உள்ளது!
[அடிக்குறிப்பு]
a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, புத். 2, பக்கம் 829.
[கேள்விகள்]
1. (அ) ரூத் புத்தகம் ஏன் வெறும் காதல் கதை அல்ல? (ஆ) என்ன விசேஷ விதங்களில் பைபிள் ரூத்தைப் பற்றி குறிப்பிடுகிறது?
2. ரூத் புத்தகத்தின் சம்பவங்கள் எப்போது நடைபெற்றன, இந்தப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது, யாரால்?
3. ரூத்தின் நம்பகத்தன்மையை என்ன உண்மைகள் உறுதிப்படுத்துகின்றன?
4. என்ன தீர்மானத்தை ரூத் எதிர்ப்படுகிறாள், அவளுடைய வணக்கமுறையைக் குறித்ததில் அவளுடைய தெரிவு எதைக் காட்டுகிறது?
5. என்ன சிறந்த பண்புகளை ரூத் காட்டுகிறாள், போவாஸ் அவளை எவ்வாறு உற்சாகப்படுத்துகிறார்?
6. சுதந்தர மீட்புக்குரிய மணம் செய்யும்படி ரூத் எவ்வாறு கேட்கிறாள், போவாஸ் என்ன பதிலளிக்கிறார்?
7. போவாஸ் எவ்வாறு இந்தத் திருமணத்தைக் கலந்துபேசி ஏற்பாடு செய்கிறார், முடிவாக உண்டாகும் ஆசீர்வாதம் என்ன?
8. வாக்குப்பண்ணப்பட்ட வித்தைப் பிறப்பிப்பது யெகோவாவின் ஏற்பாட்டினால் உண்டாகிறது என்பதை மேலும் எது நிரூபிக்கிறது?
9. என்ன வகைகளில் ரூத் நாடகத்திலுள்ள முக்கியமான கதாபாத்திரங்கள் இன்று நமக்குச் சிறந்த முன்மாதிரிகளாக உள்ளனர்?
10. ஏன் ரூத் புத்தகத்தில் உள்ள பதிவு ராஜ்ய வாக்குறுதிகளில் நம்முடைய நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும்?