பைபிள் புத்தக எண் 17—எஸ்தர்
எழுத்தாளர்: மொர்தெகாய்
எழுதப்பட்ட இடம்: சூசான், ஏலாம்
எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச.மு. 475
காலப்பகுதி: பொ.ச.மு. 493-ஏ. 475
சுருக்கமாக சொன்னால் எஸ்தர் புத்தகத்திலுள்ள கதை இதுதான். பெர்சிய அரசனான முதலாம் ஸெர்க்ஸஸ் என சிலர் நினைக்கும் அகாஸ்வேருவின் மனைவியான அரசி வஸ்தி அவனுக்கு கீழ்ப்படிய மறுக்கிறாள். அதனால் மொர்தெகாயின் உறவினளான யூதப் பெண் எஸ்தர் அவளுக்கு பதிலாக அரசியாகிறாள். மொர்தெகாயையும் எல்லா யூதர்களையும் கொலை செய்ய ஆகாகியனான ஆமான் சதித்திட்டம் தீட்டுகிறான். ஆனால் அவன் உண்டாக்கின கழுமரத்தில் அவனே தூக்கிலிடப்படுகிறான். மொர்தெகாயோ பிரதம மந்திரியாக உயர்த்தப்படுகிறார், யூதர்களும் விடுவிக்கப்படுகின்றனர்.
2 எஸ்தர் புத்தகம் கடவுளால் ஏவப்பட்டதல்ல, அதனால் எந்தப் பயனுமில்லை, அது ஓர் அருமையான கற்பனை கதையே என்று சொல்லும் பலர் உள்ளனர். கடவுளுடைய பெயர் அதில் காணப்படவில்லை என்பதையே இதற்கு ஆதாரமாக கூறுகின்றனர். இதில் கடவுளைப் பற்றி நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்பது உண்மையே. என்றாலும், எபிரெய மொழியில் அந்த டெட்ராகிரமாட்டன் (நான்கெழுத்துக்கள்) நான்கு இடங்களில் அக்ராஸ்டிக் (acrostic) முறையில் காணப்படுகிறது. அதாவது ஒன்றன்பின் ஒன்றாக வரும் நான்கு சொற்களின் முதல் எழுத்துக்களைக் கூட்டினால் அது ய்ஹ்வ்ஹ் (YHWH, எபிரெயுவில், יהוה) அல்லது யெகோவா என்று வாசிக்கிறது. குறைந்தபட்சம் மூன்று பூர்வ எபிரெய கையெழுத்து பிரதிகளில் இந்த முதலெழுத்துக்கள் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. மேலும் மசோராவில் இவை சிவப்பு எழுத்துக்களால் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. மேலும் எஸ்தர் 7:5-ல், “நான் அவ்வாறே நிரூபிப்பேன்” என்ற கடவுளுடைய அறிவிப்பு அக்ராஸ்டிக் முறையில் வருவதாக தோன்றுகிறது.—எஸ்தர் 1:20; 5:4, 13; 7:7 மற்றும் 7:5 NW அடிக்குறிப்புகளைக் காண்க.
3 மொர்தெகாய் யெகோவாவின் சட்டத்தை ஏற்று அதற்கு கீழ்ப்படிந்தார் என்பது இந்தப் பதிவு முழுவதிலும் தெளிவாக காணப்படுகிறது. அமலேக்கியனான ஒருவனை கனப்படுத்தி வணங்க அவர் மறுத்துவிட்டார்; அமலேக்கியரை முற்றிலும் அழிக்கும்படி கடவுள் கட்டளையிட்டிருந்தார். (எஸ்தர் 3:1, 5; உபா. 25:19; 1 சா. 15:3) மொர்தெகாய் யெகோவாவிடமிருந்து வரும் விடுதலையை எதிர்பார்த்தார். மேலும், அந்த அனைத்து சம்பவங்களையும் கடவுள் வழிநடத்துவார் என்ற விசுவாசம் அவருக்கு இருந்தது. இதை எஸ்தர் 4:14-ல் உள்ள மொர்தெகாயின் வார்த்தைகள் தெரிவிக்கின்றன. அரசனிடம் செல்வதற்கு முன்பு எஸ்தரும் மற்ற யூதர்களும் மூன்று நாட்கள் உபவாசமிருந்தது கடவுளில் நம்பிக்கை வைத்ததைக் காட்டுகிறது. (எஸ்தர் 4:16) கடவுள் காரியங்களை வழிநடத்தினார் என்பது பின்வரும் விஷயங்களில் தெரிகிறது: பெண்களைக் காவல் காப்பவனாகிய யேகாயின் கண்களில் எஸ்தருக்கு தயவு கிடைத்தது; இரவில் அரசனுக்கு தூக்கம் வராததால் அரச விவரப்பதிவுகளைக் கொண்டுவந்து வாசிக்க சொன்னது; அப்போது மொர்தெகாய் முன்னர் செய்த நன்மைக்காக அவருக்கு மரியாதை செய்யப்படவில்லை என்பதை அரசன் அறியவந்தது. (எஸ்தர் 2:8, 9; 6:1-3; நீதிமொழிகள் 21:1-ஐ ஒப்பிடுக.) “அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும்” உதவிக்காக கேட்டார்கள் என்ற வார்த்தைகள் ஜெபத்தை குறிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.—எஸ்தர் 9:30.
4 இந்தப் பதிவு உண்மையானது, நம்பத்தக்கது என்பதை நிரூபிக்கும் பல அத்தாட்சிகள் உள்ளன. யூதர்கள் இந்தப் புத்தகத்தை ஏற்றுக்கொண்டனர். “சுருள்” என அர்த்தப்படும் மெகில்லா (Meghil·lahʹ) என்றே இதை அழைத்தனர். எஸ்றாவே இதை எபிரெய வேதாகமத்தின் அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்த்தார் என தோன்றுகிறது. அது கட்டுக்கதையாக இருந்திருந்தால் அவர் அதை நிச்சயமாகவே தவிர்த்திருப்பார். எஸ்தரின் நாட்களில் உண்டான பெரிய விடுதலையைக் கொண்டாடும் வண்ணம் யூதர்கள் இந்நாள்வரை பூரீம் என்ற சீட்டுப்போடும் பண்டிகையை ஆசரிக்கின்றனர். இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள பெர்சிய பழக்கவழக்கங்கள் மிகவும் நுட்பமாகவும் தொல்பொருள் கண்டுபிடிப்புகளுக்கும் சரித்திரப்பூர்வ உண்மைகளுக்கும் இசைவாகவும் உள்ளன. உதாரணமாக, பெர்சியர்கள் ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் கௌரவிப்பார்கள் என்பதை எஸ்தர் புத்தகம் நுட்பமாக விவரிக்கிறது. (6:8) அரசனின் அரண்மனை பற்றி எஸ்தர் புத்தகத்தில் காணப்படும் விவரிப்புகள் அனைத்தும் மிகவும் சிறிய விஷயத்திலும்கூட துல்லியமாக இருப்பதைத் தொல்பொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.a—5:1, 2.
5 மற்ற விஷயங்களிலும் இந்த விவரப்பதிவு திருத்தமாக இருப்பதை காண்கிறோம். அதாவது அரசவை அதிகாரிகள், ஊழியர்களின் பெயர்கள் உட்பட ஆமானின் பத்து குமாரர்களின் பெயர்களையும் திருத்தமாக கொடுக்கிறது. மொர்தெகாயும் எஸ்தரும் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீஸின் வம்சத்தார் என்பது காண்பிக்கப்படுகிறது. (2:5-7) பெர்சிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகள் குறிப்பிடப்படுகின்றன. (2:23; 6:1; 10:2) இந்தப் புத்தகம் பிற்கால எபிரெயு மொழியில் எழுதப்பட்டுள்ளது, அதோடு பல பெர்சிய, அரமேய சொற்களும் சொற்றொடர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மொழிநடை நாளாகம புத்தகங்கள், எஸ்றா, நெகேமியாவின் மொழிநடையைப் போலுள்ளது. ஆகவே அது எழுதப்பட்ட காலத்தோடு முற்றிலும் இசைந்துள்ளது.
6 எஸ்தர் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் எல்லாம் வல்லமைவாய்ந்த பெர்சிய பேரரசு சிறப்புற்று விளங்கிய நாட்களில் நிகழ்ந்தவை என தோன்றுகிறது. அவை அகாஸ்வேரு (முதலாம் ஸெர்க்ஸஸ்) ஆட்சியின் ஏறக்குறைய 18 ஆண்டுகளில் நடந்தவை எனவும் நம்பப்படுகிறது. ஏறக்குறைய பொ.ச.மு. 475 வரை நீடித்த இந்தக் காலப்பகுதி பற்றி கிரேக்க, பெர்சிய, பாபிலோனிய பதிவுகள் அத்தாட்சி அளிக்கின்றன.b கண்கண்ட சாட்சியும் இப்பதிவின் முக்கிய பாத்திரமுமான மொர்தெகாய்தான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்க வேண்டும் என தோன்றுகிறது. இந்தச் சம்பவங்கள் சூசான் அரண்மனையில் நிகழ்ந்தபோது இந்த எழுத்தாளரும் அங்கு இருந்திருக்க வேண்டும் என்றே இந்த விலாவாரியான, நுட்பமான விவரம் காட்டுகிறது.c மொர்தெகாய் பற்றி பைபிளின் மற்ற எந்தப் புத்தகத்திலும் குறிப்பிடப்பட்டில்லை. என்றபோதிலும் இவர் சரித்திரப்பூர்வமான ஓர் ஆள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆப்பு வடிவ எழுத்துக்கள்கொண்ட, தேதி குறிப்பிடப்படாத ஓர் ஏடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, முதலாம் ஸெர்க்ஸஸின் ஆட்சிகாலத்தில் சூசா (சூசான்) அரசவையில் உயர் அதிகாரியாக சேவித்த மார்துகா (மொர்தெகாய்?) பற்றி குறிப்பிடுகிறது என ஜெர்மனியின் எ. உங்கனாட் விவரித்துள்ளார்.d எஸ்தர் புத்தகத்தில் அடங்கிய சம்பவங்கள் அனைத்தும் சூசான் அரண்மனையில் நிகழ்ந்தன. அவை நடந்த உடனேயே, அதாவது ஏறக்குறைய பொ.ச.மு. 475-ல் மொர்தெகாய் இவற்றை எழுதி முடித்தார் என்பதில் சந்தேகமில்லை.
எஸ்தரின் பொருளடக்கம்
7 அரசியான வஸ்தி நீக்கப்படுகிறாள் (1:1-22). அது அகாஸ்வேரு ஆட்சி செய்த மூன்றாம் ஆண்டு ஆகும். அவன் தன் பேரரசின் அதிகாரிகளுக்கு ஒரு பெரும் விருந்து செய்து, தன் ராஜ்யத்தின் செல்வங்களையும் மகிமையையும் 180 நாட்கள் அவர்களுக்கு காட்டுகிறான். பிறகு, எல்லா மக்களுக்கும் ஏழு நாட்கள் சூசான் அரண்மனையில் மகத்தான விருந்து ஒன்று நடக்கிறது. அதே சமயம், அரசியான வஸ்தி பெண்களுக்காக ஒரு பெரும் விருந்து வைக்கிறாள். அரசன் தன் செல்வங்களையும் மகிமையையும் பற்றி பெருமை பாராட்டுகிறான். திராட்ச மதுவால் மயங்கியிருந்த அரசன், வஸ்தி வந்து தன் அழகை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காட்டும்படி அழைக்கிறான். அரசி வஸ்தி தொடர்ந்து மறுக்கிறாள். இந்தக் கெட்ட முன்மாதிரியால் பேரரசு முழுவதிலும் அரசனுக்கு மதிப்பு குறைவு ஏற்படலாம் என கூறிய அரசவை அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்ட அரசன் வஸ்தியை அரசி பட்டத்திலிருந்து நீக்கிவிடுகிறான். எல்லா மனைவிகளும் ‘தங்கள் சொந்த புருஷர்களுக்கு கனத்தைச் செலுத்த வேண்டும்’ என்றும் ஒவ்வொரு புருஷனும் ‘தன் சொந்த வீட்டில் பிரபுவாக தொடர்ந்து செயல்பட வேண்டும்’ என்றும் கட்டளையிடும் பத்திரங்களை எழுதி அனுப்புகிறான்.—1:20, 22, NW.
8 எஸ்தர் அரசியாகிறாள் (2:1-23). பிறகு, பேரரசின் 127 மாகாணங்களிலிருந்தும் மிக அழகிய கன்னிப் பெண்களைத் தேடி அவர்களை சூசானுக்கு கொண்டுவரும்படி அரசன் பிரதிநிதிகளை நியமிக்கிறான். அவர்கள் அரசனுக்கு முன்பாக கொண்டுவரப்படுவதற்கு முன் அழகுபடுத்தப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண்களில் எஸ்தரும் இருக்கிறாள். “ரூபவதியும் செளந்தரியமுடையவளுமாயிருந்த” எஸ்தர் ஒரு யூத பெண், ஆனால் அநாதை. (2:7) சூசானில் ஓர் அதிகாரியாக இருந்த இவளுடைய பெரியப்பா மகனான மொர்தெகாய் இவளை வளர்த்தார். எஸ்தரின் யூதப் பெயரான அத்சாள் என்பதன் பொருள் “மிர்டில்” (வாடாத நறுமண மலர்) என்பதாகும். பெண்களைக் காவல் காக்கிற யேகாயின் கண்களில் எஸ்தருக்கு தயை கிடைத்ததால் அவளுக்கு தனிப்பட்ட கவனிப்பைக் கொடுக்கிறான். அவள் ஒரு யூத பெண் என்பது யாருக்குமே தெரியாது, ஏனெனில் இதை இரகசியமாக வைக்கும்படி மொர்தெகாய் அவளிடம் கூறியிருந்தார். இந்த இளம் பெண்கள் ஒவ்வொருவராக அரசன் முன்பு அழைத்து வரப்படுகின்றனர். அவன் எஸ்தரை தன் புதிய அரசியாக தெரிவு செய்கிறான், அவள் முடிசூட்டப்பட்டதைக் கொண்டாட ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. சிறிதுகாலம் கழித்து, அரசனைக் கொல்வதற்கான ஒரு சதியைக் குறித்து மொர்தெகாய் கேள்விப்பட்டு, “மொர்தெகாயின் பேரால்” அதை அரசனுக்கு தெரிவிக்கும்படி எஸ்தரிடம் கூறுகிறார். (2:22) இந்தச் சதி கண்டுபிடிக்கப்பட்டு சதிகாரர்கள் தூக்கிலிடப்படுகின்றனர். பின்னர் அரச பதிவேட்டிலும் இது பதிவு செய்யப்படுகிறது.
9 ஆமானின் சதி (3:1–5:14). ஏறக்குறைய நான்கு வருடங்கள் கடந்து செல்கின்றன. இப்போது ஆமான் பிரதம மந்திரியாகிறான். இவன், சாமுவேல் கொன்றுபோட்ட அமலேக்கிய அரசன் ஆகாகின் சந்ததியானாக இருந்திருக்கலாம். (1 சா. 15:33) அரசன் அவனுக்கு உயர்பதவி அளித்து, அரண்மனை வாசலிலுள்ள தன் ஊழியர்கள் அனைவரும் ஆமானுக்கு முன்பாக தலை வணங்க வேண்டும் என கட்டளையிடுகிறான். இது மொர்தெகாயையும் உட்படுத்தும். என்றாலும் மொர்தெகாய் இதை செய்ய மறுத்துவிடுகிறார். தான் ஒரு யூதன் என்று அரசனின் ஊழியக்காரரிடம் தெரியப்படுத்துகிறார். (யாத்திராகமம் 17:14, 16-ஐ ஒப்பிடுக.) ஆமான் மிகுந்த கோபமடைகிறான். மொர்தெகாய் ஒரு யூதன் என அறிந்ததும் அவரையும் யூதர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் அழிப்பதற்கான சிறந்த வாய்ப்பு இதுவே என ஆமான் நினைக்கிறான். யூதர்களை அழிப்பதற்கு ஒரு நல்ல நாளை தீர்மானிப்பதற்காக சீட்டு (பூர்) போடப்படுகிறது. ஆமான் அரசனிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி யூதர்கள் சட்டத்தை மீறுபவர்கள் என குற்றஞ்சாட்டி அவர்களை அழிக்க வேண்டும் என்ற கட்டளையை எழுத்தில் தரும்படி கேட்கிறான். இவர்களைக் கொல்வதற்கான செலவிற்கு 10,000 வெள்ளி தாலந்துகளை (ஏறக்குறைய 6,60,60,000 டாலருக்கு சமம்) தருவதாக முன்வருகிறான். அரசன் ஒப்புதலளிக்கிறான்; யூதரின் இனத்தையே அழித்துப்போடுவதற்கான நாளாக ஆதார் 13 தெரிவுசெய்யப்படுகிறது. அதற்கான கட்டளைகள் எழுதப்பட்டு அரசனின் மோதிரத்தால் முத்திரையிடப்பட்டு அந்தப் பேரரசு முழுவதற்கும் அனுப்பப்படுகின்றன.
10 இந்தச் சட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன் மொர்தெகாயும் எல்லா யூதர்களும் இரட்டுடுத்தி சாம்பலில் இருந்து துக்கிக்கின்றனர். “உபவாசமும், அழுகையும், புலம்பலும்” உண்டாகிறது. (எஸ்தர் 4:3) யூதரின் நெருக்கடி நிலைமை பற்றி மொர்தெகாய் எஸ்தருக்கு தெரிவித்தபோது பரிந்துபேசுவதற்கு அவள் முதலில் தயங்குகிறாள். அழைக்கப்படாமல் அரசனுக்கு முன் செல்பவர்களுக்கு மரண தண்டனை நிச்சயம். எனினும், எஸ்தர் அவர்களுக்கு உதவிசெய்ய தவறினால் ஏதாவது ஒரு வழியில் அவள் மரித்துப்போவாள், ‘யூதருக்கோ இரட்சிப்பு வேறொரு இடத்திலிருந்து எழும்பும்’ என மொர்தெகாய் கூறி, யெகோவாவின் வல்லமையில் தனக்கிருந்த விசுவாசத்தைக் காட்டுகிறார். மேலும், ‘இப்படிப்பட்ட காலத்திற்காகவே’ எஸ்தர் அரசியாகியிருக்கலாம் அல்லவா? (4:14) இப்போது பிரச்சினையை உணர்ந்த அவள் தன் உயிரை பணயம் வைக்க ஒப்புக்கொள்கிறாள். சூசானிலுள்ள யூதர்கள் அனைவரும் அவளோடே சேர்ந்து மூன்று நாட்கள் உபவாசம் இருக்கிறார்கள்.
11 பின்பு எஸ்தர் தன் மிகச் சிறந்த ராஜவஸ்திரத்தை உடுத்தி அரசனுக்கு முன்பாக தோன்றுகிறாள். அவனுடைய கண்களில் அவள் தயை பெறுகிறாள், அவன் தன் பொற்செங்கோலை நீட்டுவதால் அவள் உயிர் பிழைக்கிறாள். அவள் இப்பொழுது அரசனையும் ஆமானையும் ஒரு விருந்துக்கு அழைக்கிறாள். அந்த விருந்தின்போது அரசன் அவளுடைய வேண்டுகோள் என்ன என்று கேட்டு, ‘ராஜ்யத்தில் பாதிமட்டும்’ கேட்டாலும் கொடுக்கப்படும் என உறுதியளிக்கிறான். ஆகவே, அவர்கள் இருவரையும் அடுத்த நாளும் ஒரு விருந்துக்கு வரும்படி அழைக்கிறாள். (5:6) ஆமான் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்கிறான். ஆனால் அரண்மனை வாசலில் மொர்தெகாய் அமர்ந்திருக்கிறார்! அவர் இப்போதும் ஆமானுக்கு கனம் செலுத்தவோ அவனுக்கு முன்பாக அஞ்சி நடுங்கவோ மறுத்துவிடுகிறார். ஆமானுடைய மகிழ்ச்சி கோபமாக மாறுகிறது. அவன் 50 முழம் (22.3 மீ) உயரமான ஒரு கழுமரத்தை செய்து, மொர்தெகாயை அதில் தூக்கிலிடுவதற்கு அரசனிடமிருந்து கட்டளை பெறும்படி அவனுடைய மனைவியும் நண்பர்களும் ஆலோசனை கூறுகின்றனர். உடனே ஆமான் அந்தக் கழுமரத்தை தயாரிக்கிறான்.
12 காரியங்கள் தலைகீழாகின்றன (6:1–7:10). அன்று இரவு அரசனுக்கு தூக்கம் வரவில்லை. ஆகவே பதிவுகள் எழுதப்படும் புத்தகத்தைக் கொண்டுவந்து வாசிக்கும்படி கூறுகிறான். தன்னுடைய உயிரை காப்பாற்றியதற்காக மொர்தெகாய்க்கு தான் கைம்மாறு எதுவும் செய்யவில்லை என்பதைக் கண்டுபிடிக்கிறான். பிறகு முற்றத்தில் இருப்பது யார் என அரசன் கேட்கிறான். அப்போது, மொர்தெகாயை கொலை செய்வதற்காக அரசனின் உத்தரவைப் பெற வந்திருந்த ஆமான் அங்கிருக்கிறான். அரசனுக்கு பிரியமான ஒருவன் எவ்வாறு கௌரவிக்கப்பட வேண்டும் என அரசன் ஆமானிடம் கேட்கிறான். அரசன் தன்னையே மனதில் வைத்திருப்பார் என நினைத்த ஆமான் கனம் செய்வதற்கான ஒரு பகட்டான திட்டத்தைக் குறிப்பிடுகிறான். ஆனால் அரசன் அவனிடம், “யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப் பிரகாரம் செய்” என கட்டளையிடுகிறான்! (6:10) மொர்தெகாய்க்கு ராஜ வஸ்திரம் உடுத்துவித்து, அரசனின் குதிரைமீது உட்கார வைத்து, அந்த நகரத்தின் வீதிகளில் உலா வரச்செய்து, அவருக்கு முன்பாக பறைசாற்றுவதைத் தவிர ஆமானுக்கு வேறு வழியில்லாமல் போகிறது. அவமானத்தால் நிறைந்தவனாய் ஆமான் துக்கித்து வீட்டுக்கு விரைந்து செல்கிறான். அவனுடைய மனைவியாலும் நண்பர்களாலும் அவனுக்கு எந்த ஆறுதலையும் கொடுக்க முடியவில்லை. ஆமானுக்கு அழிவு நிச்சயம்!
13 இப்பொழுது ஆமான் அரசனுடனும் எஸ்தருடனும் விருந்துக்கு செல்வதற்கான நேரமாகிவிட்டது. தானும் தன் ஜனங்களும் அழிக்கப்படும்படி விற்கப்பட்டார்கள் என அரசி கூறுகிறாள். இந்தப் பொல்லாங்கைச் செய்ய துணிகரம் கொண்டது யார்? “சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான்” என எஸ்தர் கூறுகிறாள். (7:6) அரசன் கோபாவேசத்துடன் எழுந்து வெளியே தோட்டத்திற்கு செல்கிறான். அரசியுடன் தனித்திருக்கும் ஆமான் தன் உயிருக்காக மன்றாடுகிறான். அரசன் திரும்பி வரும்போது அரசியின் மஞ்சத்தில் ஆமான் இருப்பதைக் கண்டு மேலும் மூர்க்கமடைகிறான். ஆமான் மொர்தெகாய்க்காக செய்து வைத்திருந்த அதே கழுமரத்தில் அவனை தூக்கிலிடும்படி அரசன் உடனே கட்டளையிடுகிறான்!—சங். 7:16.
14 மொர்தெகாய் உயர்த்தப்படுகிறார், யூதர்கள் விடுவிக்கப்படுகின்றனர் (8:1–10:3). ஆமானின் உடைமைகள் யாவற்றையும் அரசன் எஸ்தருக்கு கொடுக்கிறான். எஸ்தர் தனக்கும் மொர்தெகாய்க்கும் உள்ள உறவை அகாஸ்வேருவுக்கு தெரியப்படுத்துகிறாள். அரசன், மொர்தெகாயை ஆமானின் முந்தைய பதவிக்கு உயர்த்தி அரச முத்திரை மோதிரத்தையும் அவருக்கு கொடுக்கிறான். யூதரை அழிக்கும்படி எழுதப்பட்ட கட்டளையை மாற்ற வேண்டும் என கேட்பதற்காக எஸ்தர் மறுபடியும் தன் உயிரைப் பணயம் வைத்து அரசனுக்கு முன்பாக செல்கிறாள். ஆனால், ‘பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்தை’ ரத்துசெய்ய முடியாதே! (1:19) ஆகவே, ஒரு புதிய சட்டத்தை எழுதி அதை அரசனுடைய மோதிரத்தால் முத்திரைபோடும்படி எஸ்தருக்கும் மொர்தெகாய்க்கும் அரசன் அதிகாரம் கொடுக்கிறான். இந்த எழுதப்பட்ட கட்டளையும் முந்தின கட்டளை அனுப்பப்பட்ட அதே முறையில் பேரரசு முழுவதிலும் அனுப்பப்படுகிறது. ஆமானின் சட்டம் நிறைவேறும் அதே நாளில், யூதர்கள் “ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும் தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும்” அவர்களுக்கு உரிமை அளித்தது.—8:11.
15 குறிக்கப்பட்ட நாளாகிய ஆதார் மாதம் 13-ம் தேதி வருகிறது, அப்போது எந்த மனிதனாலும் யூதரை எதிர்த்து நிற்க முடியவில்லை. எஸ்தர் அரசனிடம் கேட்டுக்கொண்டதால், சூசானில் இந்தப் போராட்டம் 14-ம் தேதியிலும் தொடருகிறது. பேரரசு முழுவதிலும் யூதரின் சத்துருக்கள் மொத்தம் 75,000 பேர் கொல்லப்படுகின்றனர். சூசான் அரண்மனையில் மேலும் 810 பேர் கொல்லப்படுகின்றனர். ஆமானின் பத்து குமாரரும் இதில் அடங்குவர், இவர்கள் முதல் நாள் கொல்லப்பட்டு இரண்டாம் நாள் கழுமரங்களில் தொங்கவிடப்படுகின்றனர். ஆனால் யாரும் கொள்ளைப் பொருளாக எதையும் எடுக்கவில்லை. ஆதார் மாதம் 15-ம் தேதியில் யூதர்கள் இளைப்பாறி, விருந்துண்டு களிகூருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆதார் மாதம் 14, 15 தேதிகளில் இந்தப் ‘பூர் என்னப்பட்ட சீட்டுப்போடும்’ பண்டிகையை யூதர்கள் ஆசரிக்க வேண்டும் என்ற கட்டளைகளை மொர்தெகாய் எழுதி அனுப்புகிறார். இதை அவர்கள் இந்நாள்வரை ஆசரித்து வருகின்றனர். (9:24) மொர்தெகாய் ராஜ்யத்தில் பெரியவராக்கப்படுகிறார். அகாஸ்வேரு ராஜாவுக்கு இரண்டாவதாக இருக்கும் தன் பதவியை ‘தன் ஜனத்தின் நன்மைக்காகவும் அவர்களுடைய சந்ததியார் யாவருக்கும் சமாதானத்தைப் பேசவும்’ மொர்தெகாய் பயன்படுத்துகிறார்.—10:3, NW.
ஏன் பயனுள்ளது
16 வேறு எந்த பைபிள் எழுத்தாளரும் எஸ்தர் புத்தகத்திலிருந்து நேரடியாக மேற்கோள் காட்டவில்லை என்றாலும் இந்தப் புத்தகம் வேதாகமத்தின் மற்ற பகுதிகளோடு முற்றிலும் இசைந்துள்ளது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பின்னர் கூறப்பட்ட பைபிள் நியமங்கள் சிலவற்றை இது மிக அழகாக படம்பிடித்து காட்டுகிறது. இந்த நியமங்கள் யெகோவாவின் வணக்கத்தாருக்கு எல்லா காலங்களிலும் பொருந்துகின்றன. பின்வரும் பகுதிகளை ஆராய்வது இதைத் தெளிவாக காட்டும், கிறிஸ்தவ விசுவாசத்தையும் கட்டியெழுப்பும்: எஸ்தர் 4:5—பிலிப்பியர் 2:4; எஸ்தர் 9:22—கலாத்தியர் 2:10. அரசனுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படியவில்லை என யூதர்களுக்கு எதிராக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு, ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை போலவே உள்ளது. (எஸ்தர் 3:8, 9; அப். 16:21; 25:7) மொர்தெகாய், எஸ்தர், மற்ற யூதர்கள் ஆகியோரின் சிறந்த மாதிரியைப் பின்பற்றி, யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள், கடவுளுடைய விடுவிக்கும் வல்லமையில் ஜெபத்தோடே நம்பிக்கை வைப்பதன் மூலம் இத்தகைய குற்றச்சாட்டுகளை பயமின்றி எதிர்ப்படுகின்றனர்.—எஸ்தர் 4:16; 5:1, 2; 7:3-6; 8:3-6; 9:1, 2.
17 கிறிஸ்தவர்களாக நாம் எதிர்ப்படும் சூழ்நிலைமை, மொர்தெகாயும் எஸ்தரும் எதிர்ப்பட்டதிலிருந்து மிகவும் வித்தியாசமானது என நாம் நினைத்துவிடக்கூடாது. பகைமை நிறைந்த ஓர் உலகத்தில் ‘மேலான அதிகாரங்களின்’ ஆட்சியில்தான் நாமும்கூட வாழ்கிறோம். நாம் எந்த தேசத்தில் குடியிருந்தாலும் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து நடக்கும் குடிமக்களாக இருக்கவே விரும்புகிறோம். ஆனால் அதேசமயம், ‘இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துவதற்கு’ இடையே உள்ள வித்தியாசத்தை தெளிவாக உணர விரும்புகிறோம். (ரோ. 13:1; லூக். 20:25) பிரதம மந்திரியான மொர்தெகாயும் அரசியான எஸ்தரும், தங்கள் வேலைகளை மனப்பூர்வமாயும் கீழ்ப்படிதலோடும் செய்வதில் நல்ல முன்மாதிரிகளாக இருக்கின்றனர். (எஸ்தர் 2:21-23; 6:2, 3, 10; 8:1, 2; 10:2) எனினும், வெறுக்கத்தக்க ஆகாகியனான ஆமானுக்கு முன்பாக குனிந்து வணங்க வேண்டும் என்ற அரச கட்டளைக்கு கீழ்ப்படிய முடியாது என்பதை மொர்தெகாய் பயமற்றவராக காண்பித்தார். மேலும், ஆமான் யூதர்களை அழிக்க சதிசெய்தபோது சட்டப்பூர்வமான நிவாரணத்திற்காக மனுசெய்தார்.—3:1-4; 5:9; 4:6-8.
18 இவ்வாறு எஸ்தர் புத்தகம் ‘கடவுளால் ஏவப்பட்டதும் பயனுள்ளதுமான’ பரிசுத்த பைபிளின் பாகமாக இருக்கிறது என எல்லா அத்தாட்சிகளும் சுட்டிக்காட்டுகின்றன. கடவுளை அல்லது அவருடைய பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் விசுவாசத்தின் மிகச் சிறந்த முன்மாதிரிகளை அது நமக்கு அளிக்கிறது. மொர்தெகாயும் எஸ்தரும் யாரோ ஒருவரின் கற்பனையில் தோன்றிய கதாபாத்திரங்கள் அல்ல. அவர்கள் யெகோவா தேவனின் ஊழியர்களாக, இரட்சிப்பதற்கான அவருடைய வல்லமையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த உண்மையான நபர்களாக இருந்தனர். அவர்கள் அன்னிய நாட்டில் ‘மேலான அதிகாரங்களுக்கு’ கீழ்ப்பட்டு வாழ்ந்தபோதிலும், கடவுளுடைய ஜனங்களையும் அவர்களுடைய வணக்க சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வமான எல்லா வழிவகைகளையும் பயன்படுத்தினார்கள். இன்று நாமும், இரட்சிப்பளிக்கும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்திக்காக ‘எதிர்த்து வழக்காடி நற்செய்தியைச் சட்டப்பூர்வமாய் ஸ்தாபிப்பதில்’ அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம்.—பிலி. 1:7, NW.
[அடிக்குறிப்புகள்]
a வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 1, பக்கம் 764; தொ. 2, பக்கங்கள் 327-31.
b வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, தொ. 2, பக்கங்கள் 613-16.
c மக்ளின்டாக், ஸ்டிராங்ஸ் ஆகியோரின் ஸைக்ளோப்பீடியா, 1981 மறுபதிப்பு, தொ. III, பக்கம் 310.
d எ. உங்கனாட், “Keilinschriftliche Beiträge zum Buch Esra und Ester,” Zeitschrift für die alttestamentliche Wissenschaft, LVIII (1940-41), பக்கங்கள் 240-4.
[கேள்விகள்]
1. எஸ்தர் புத்தகத்திலுள்ள கதை என்ன?
2. (அ) எஸ்தர் புத்தகம் தேவாவியால் ஏவப்பட்டதை சிலர் ஏன் சந்தேகிக்கின்றனர்? (ஆ) எஸ்தர் புத்தகத்தில் கடவுளுடைய பெயர் என்ன விதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது?
3. கடவுளில் விசுவாசத்தையும் அவரிடம் ஜெபிப்பதையும் எந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன, கடவுளே காரியங்களை வழிநடத்துகிறார் என்பதை என்ன சம்பவங்கள் உணர்த்துகின்றன?
4. எஸ்தர் புத்தகம் நம்பத்தக்கது, உண்மையானது என்பது எவ்வாறு நிரூபிக்கப்படுகிறது?
5. எஸ்தர் புத்தகத்தில் காணப்படும் என்ன துல்லியமான விவரங்கள் அதன் உண்மைத்தன்மைக்கு அத்தாட்சி அளிக்கின்றன, அதன் மொழி எந்தக் காலப்பகுதியோடு ஒத்திருக்கிறது?
6. (அ) எஸ்தர் புத்தகம் எந்தக் காலப்பகுதியை சேர்ந்ததென தோன்றுகிறது? (ஆ) எழுத்தாளர், எழுதப்பட்ட இடம், காலம் ஆகியவற்றைப் பற்றி அத்தாட்சிகள் என்ன தெரிவிக்கின்றன?
7. அகாஸ்வேருவின் விருந்தின்போது என்ன சங்கடநிலை ஏற்படுகிறது, அதன் காரணமாக அரசன் என்ன செய்கிறான்?
8. (அ) என்ன சம்பவங்கள் காரணமாக எஸ்தர் அரசியாகிறாள்? (ஆ) என்ன சதியை மொர்தெகாய் வெளிப்படுத்துகிறார், அதைப் பற்றிய என்ன பதிவு செய்யப்படுகிறது?
9. ஆமானுக்கு எதன் காரணமாக மொர்தெகாய் மீது கோபம் ஏற்படுகிறது, அவன் யூதருக்கு எதிராக என்ன அரச கட்டளையைப் பெறுகிறான்?
10. யெகோவாவின் வல்லமையில் விசுவாசம் வைக்கிறவர்களாய் மொர்தெகாயும் எஸ்தரும் என்ன செய்கின்றனர்?
11. அரசனோடு தனக்கிருக்கும் செல்வாக்கை எஸ்தர் எவ்வாறு பயன்படுத்துகிறாள், ஆனால் ஆமான் மொர்தெகாய்க்கு எதிராக என்ன சதி செய்கிறான்?
12. ஆமானுக்கு அவமானம் உண்டாக அகாஸ்வேரு ராஜா மொர்தெகாயை கௌரவிக்க வழிநடத்திய சம்பவங்கள் என்ன?
13. விருந்தின்போது எஸ்தர் எதை வெளிப்படுத்துகிறாள், இது ஆமானின் அழிவுக்கு எவ்வாறு வழிநடத்தியது?
14. எஸ்தருக்கும் மொர்தெகாய்க்கும் அரசன் எவ்வாறு வெகுமதியளிக்கிறான், என்ன கட்டளையை எழுதுவதன் மூலம் யூதருக்கு ஆதரவு காட்டுகிறான்?
15. (அ) அந்தப் போராட்டத்தின் விளைவென்ன, என்ன பண்டிகையை மொர்தெகாய் தொடங்கி வைக்கிறார்? (ஆ) மொர்தெகாய் என்ன பதவிக்கு உயர்த்தப்படுகிறார், தன் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறார்?
16. எஸ்தர் புத்தகத்தில் கிறிஸ்தவர்களுக்கு உதவும் என்ன தெய்வீக நியமங்களும் நல்ல முன்மாதிரியும் உள்ளன?
17. கடவுளுக்கும் ‘மேலான அதிகாரங்களுக்கும்’ கீழ்ப்படிவதில் மொர்தெகாயும் எஸ்தரும் என்ன முன்மாதிரி வைத்தார்கள்?
18. (அ) எஸ்தர் புத்தகம் ‘கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது’ என்பதை எது நிரூபிக்கிறது? (ஆ) கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளின் சார்பாக வழக்காடுவதை இது எவ்வாறு ஊக்குவிக்கிறது?