யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
எஸ்தர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
இந்தத் திட்டம் நிறைவேறியே தீரும். யூதர்கள் பூண்டோடு அழிக்கப்படுவார்கள். இது சாமர்த்தியமாகச் செய்து முடிக்கப்படும். முன்குறிக்கப்பட்ட ஒரே நாளில் சாம்ராஜ்யம் முழுவதிலும், இந்தியாவிலிருந்து எத்தியோப்பியா வரை குடியிருக்கிற யூதர்கள் அனைவரும் ஒழித்துக்கட்டப்படுவார்கள். இதுவே இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியவரின் மனதில் ஓடுகிறது. ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை அவர் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. பரலோகத்தின் தேவனால், தாம் தெரிந்தெடுத்த மக்களை ஆபத்தான எந்தச் சூழ்நிலையிலிருந்தும் இரட்சிக்க முடியும்! அவ்வாறு இரட்சித்த விஷயம் எஸ்தர் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தை எழுதியவர் மொர்தெகாய் எனும் பெயருடைய வயதான ஒரு யூதர். பெர்சிய ராஜாவான அகாஸ்வேருவுடைய, அதாவது முதலாம் சஷ்டாவுடைய (Xerxes I) ஆட்சிக்காலத்தில் சுமார் 18 வருட காலப்பகுதியை இது உள்ளடக்குகிறது. இதில் தத்ரூபமாக விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள், விரோதிகளின் சதித்திட்டங்களிலிருந்து தம் மக்களை யெகோவா எப்படிக் காப்பாற்றுகிறார்—அவர்கள் பரந்த சாம்ராஜ்யம் முழுவதிலும் பரவி இருந்தாலும்கூட எப்படிக் காப்பாற்றுகிறார்—என்பதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதைப் பற்றித் தெரிந்துகொள்வது, இன்று 235 தேசங்களில் பரிசுத்த சேவை செய்துவருகிற யெகோவாவுடைய மக்களின் விசுவாசத்தை உண்மையிலேயே பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இப்புத்தகத்தில் வரும் சில கதாபாத்திரங்கள், நாம் பின்பற்றத்தக்க நல்ல உதாரணங்களாகத் திகழ்கின்றன; அதே சமயத்தில் மற்ற கதாபாத்திரங்கள், நாம் பின்பற்றத்தகாத கெட்ட உதாரணங்களாக இருக்கின்றன. நிச்சயமாகவே, ‘தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது.’—எபிரெயர் 4:12.
ராணி குறுக்கிட்டே ஆக வேண்டும்
அகாஸ்வேரு ராஜா தன்னுடைய ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் (பொ.ச.மு. 493-ல்) ஒரு ராஜ விருந்து வைக்கிறார். பேரழகியான வஸ்தி ராணி, ராஜாவின் வெறுப்பைச் சம்பாதிக்கிறாள்; அதனால் தன் ஸ்தானத்தை இழக்கிறாள். அவளுக்குப் பதிலாக அத்சாள் எனும் யூதப் பெண், தேசத்தின் ரூபவதிகளான அனைத்து கன்னிப்பெண்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். அவளுடைய பெரியப்பா மகனான மொர்தெகாயின் சொல்படி, அவள் தன்னை ஒரு யூதப் பெண்ணாகக் காட்டிக்கொள்ளாமல், எஸ்தர் என்ற தன்னுடைய பெர்சிய பெயரையே பயன்படுத்துகிறாள்.
சில காலத்திற்குப் பிறகு, ஆமான் எனும் பெயருடைய கர்வம் பிடித்த ஒருவன் பிரதம மந்திரி ஸ்தானத்திற்கு உயர்த்தப்படுகிறான். ‘ஆமானை வணங்கி நமஸ்கரிக்க’ மொர்தெகாய் மறுக்கிறார்; இதனால் மூர்க்கமடைந்த ஆமான், பெர்சிய சாம்ராஜ்யத்திலுள்ள யூதர்கள் அனைவரையும் ஒழித்துக்கட்ட சதித் திட்டம் போடுகிறான். (எஸ்தர் 3:2) அத்திட்டத்திற்கு அகாஸ்வேரு ராஜாவையும் சம்மதிக்கப்பண்ணி, இந்தப் படுகொலையை நிறைவேற்றுவதற்கு ஆணை பிறப்பிக்கும்படி செய்கிறான். இதை அறிந்த மொர்தெகாய் ‘இரட்டுடுத்தி சாம்பல் போட்டுக்கொள்கிறார்.’ (எஸ்தர் 4:1) இப்போது எஸ்தர் குறுக்கிட்டே ஆக வேண்டும். அவள் ராஜாவையும் அவருடைய பிரதம மந்திரியையும் தன்னுடைய விருந்துக்கு அழைக்கிறாள். அவர்கள் சந்தோஷமாக வருகிறார்கள். மற்றொரு விருந்துக்காக மறுநாளும் வரும்படி அவர்களிடம் வேண்டுகிறாள். ஆமான் சந்தோஷத்தில் மிதக்கிறான். அதேசமயத்தில், மொர்தெகாய் தன்னை மதிக்காததால் கொதிப்படைகிறான். மறுநாள் விருந்துக்கு முன்பாகவே மொர்தெகாயைத் தீர்த்துக்கட்டத் திட்டமிடுகிறான்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:3-5—ராஜாவின் விருந்து 180 நாட்களுக்கு நீடித்திருந்ததா? விருந்து அத்தனை நாட்களுக்கு நீடித்திருந்ததாக வசனம் சொல்வதில்லை; ராஜா தன் மகிமையான ராஜ்யத்தின் ஐசுவரியத்தையும் மகத்துவத்தையுமே அதிகாரிகளுக்கு 180 நாட்கள் காண்பித்தார். தன் ராஜ்யத்தின் மகிமையைப் பகட்டாகக் காட்டி பிரபுக்களை வசீகரிப்பதற்காகவும், தன் திட்டங்களை நிறைவேற்ற தனக்குத் திறமை இருக்கிறதென அவர்களை நம்ப வைப்பதற்காகவும் இந்த நீண்டகால நிகழ்ச்சியை ராஜா பயன்படுத்தியிருக்கலாம். அப்படியானால், 3 மற்றும் 5 வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விருந்து 180 நாட்களின் முடிவில் செய்யப்பட்ட ஏழுநாள் விருந்தைக் குறிக்க வேண்டும்.
1:8—‘முறைப்படி பானம்பண்ணுகையில் ஒருவனும் பலவந்தம்பண்ணப்படவில்லை’ என்பது எவ்விதத்தில்? இப்படிப்பட்ட விருந்தின்போது ஒரு குறிப்பிட்ட அளவு குடிக்கும்படி ஒருவரையொருவர் ஊக்குவிப்பது பெர்சியரின் பழக்கமாக இருந்தது; ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் அகாஸ்வேரு ராஜா அதற்கு விதிவிலக்களித்தார். “அவர்கள் தங்கள் விருப்பப்படி அதிகமாகவோ குறைவாகவோ குடிக்க முடிந்தது” என ஒரு நூல் கூறுகிறது.
1:10-12—ராஜா அழைத்தபோது வஸ்தி ராணி ஏன் வர மறுத்தாள்? குடித்திருக்கும் விருந்தினர் முன் சென்று தன்னுடைய மதிப்பைக் கெடுத்துக்கொள்ள விரும்பாததால்தான் அவள் வராமலிருந்தாள் என சில அறிஞர்கள் கூறுகிறார்கள். அல்லது, அந்த ராணி பார்வைக்கு அழகியாக இருந்தாலும் உண்மையில் அடங்காதவளாகவே இருந்திருக்கலாம். அவளுடைய உள்ளெண்ணத்தைப் பற்றி பைபிள் குறிப்பிடாவிட்டாலும், கணவனுக்குக் கீழ்ப்படியாதது ஒரு பெரிய குற்றம் என்றும், அப்படியே விட்டுவிட்டால் வஸ்தியின் கெட்ட முன்மாதிரியை பெர்சிய மாகாணங்களிலுள்ள மனைவிகள் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் அன்றைய ஞானிகள் கருதினார்கள்.
2:14-17—ராஜாவுடன் எஸ்தர் ஒழுக்கங்கெட்ட பாலுறவில் ஈடுபட்டாளா? இல்லை என்பதே பதில். ராஜாவிடம் கொண்டு செல்லப்பட்ட பிற பெண்கள், “அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற” பிரதானியின் பொறுப்பிலிருந்த இரண்டாம் மாடத்திற்கு காலையிலே திரும்பினார்கள். இவ்வாறு, ராஜாவோடு இரவுப்பொழுதைக் கழித்த அவர்கள் அவரது மறுமனையாட்டிகளாக ஆனார்கள். ஆனால், எஸ்தரோ ராஜாவைப் பார்த்த பிறகு மறுமனையாட்டிகளின் மாடத்திற்கு கொண்டுபோகப்படவில்லை. அகாஸ்வேரு ராஜாவிடத்தில் எஸ்தர் கொண்டுவரப்பட்டபோது, ‘ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தார்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவர் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது.’ (எஸ்தர் 2:17) அகாஸ்வேருவின் ‘தயவையும் பட்சத்தையும்’ அவள் எப்படிப் பெற்றாள்? மற்றவர்களின் தயவைப் பெற்றது போலவேதான். உதாரணத்திற்கு, ‘அவள் [யேகாயின்] பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவன் கண்களிலே தயை கிடைத்தது.’ (எஸ்தர் 2:8, 9) அவளுடைய தோற்றத்தையும் நல்ல குணங்களையும் யேகாய் கவனித்ததால் அவளிடம் உண்மையான தயவு காட்டினார். சொல்லப்போனால், “எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.” (எஸ்தர் 2:15) அவ்வாறே, எஸ்தரிடத்தில் பார்த்த காரியங்கள் ராஜாவையும் கவர்ந்தன; அதனால் அவளிடம் அன்பு காட்டினார்.
3:2; 5:9—மொர்தெகாய் ஏன் ஆமானுக்குத் தலைவணங்க மறுத்தார்? இஸ்ரவேலர்கள், உயர்பதவியில் இருந்தவர்களின் ஸ்தானத்திற்கு மரியாதை காட்ட அவர்களுக்குத் தலைவணங்குவதில் எந்தத் தவறும் இருக்கவில்லை. ஆனால் ஆமானின் விஷயத்தில் அப்படியல்ல. ஆமான், ஆகாகிய வம்சத்தைச் சேர்ந்தவன்; ஆகவே அமலேக்கியனாக இருந்திருக்கலாம். அந்த அமலேக்கியர் முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டுமென யெகோவா சொல்லியிருந்தார். (உபாகமம் 25:19) இப்படியிருக்க, ஆமானுக்கு மொர்தெகாய் தலைவணங்கினால், அது யெகோவாவுக்கு உத்தமத்தைக் காட்டுவதாய் இருக்காது. எனவே, தான் ஒரு யூதன் என்று சொல்லி, அவருக்குத் தலைவணங்க ஒரேயடியாக மறுத்துவிட்டார்.—எஸ்தர் 3:3, 4.
நமக்குப் பாடம்:
2:10, 20; 4:12-16. யெகோவாவை வணங்கிய முதிர்ச்சியுள்ள ஒருவர் கொடுத்த வழிநடத்துதலுக்கும் ஆலோசனைக்கும் எஸ்தர் கீழ்ப்படிந்தாள். அவ்வாறே நாமும் ‘நம்மை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குவது’ ஞானமான செயல்.—எபிரெயர் 13:17.
2:11; 4:5. நாம் ‘நமக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளை நோக்க’ வேண்டும்.—பிலிப்பியர் 2:4.
2:15. யேகாய் கொடுத்தவற்றைவிட கூடுதலான ஆபரணங்களையோ சிறந்த வஸ்திரங்களையோ கேட்காமல் பணிவையும் தன்னடக்கத்தையும் எஸ்தர் காண்பித்தாள். ‘அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தைக்’ காண்பித்ததால்தான் ராஜாவின் தயவைப் பெற்றாள்.—1 பேதுரு 3:4.
2:21-23. ‘மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படிவதில்’ எஸ்தரும் மொர்தெகாயும் சிறந்த உதாரணங்களாய்த் திகழ்ந்தனர்.—ரோமர் 13:1.
3:4. எஸ்தரைப் போலவே, சில சூழ்நிலைகளில் நாம் யார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் இருப்பது ஞானமானது. என்றாலும், யெகோவாவின் பேரரசாட்சி, நம்முடைய உத்தமத்தன்மை போன்ற முக்கிய விஷயங்கள் சம்பந்தப்பட்டிருந்தால், நாம் யெகோவாவின் சாட்சிகள் என்பதைத் தைரியமாகத் தெரியப்படுத்த வேண்டும்.
4:3. சோதனைகள் வரும்போது, பலத்திற்காகவும் ஞானத்திற்காகவும் நாம் யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டும்.
4:6-8. ஆமானின் சதித்திட்டத்தால் ஏற்பட்ட ஆபத்துக்கு மொர்தெகாய் சட்டப்படி தீர்வுகாண முயன்றார்.—பிலிப்பியர் 1:7, NW.
4:14. யெகோவாமேல் மொர்தெகாய் வைத்திருந்த நம்பிக்கை பின்பற்றத்தக்க மாதிரியாகும்.
4:16. எஸ்தர் தன் உயிருக்கே ஆபத்து ஏற்படவிருந்த ஒரு சூழ்நிலையில், யெகோவாவை முற்றிலும் சார்ந்திருந்து விசுவாசத்தோடும் தைரியத்தோடும் செயல்பட்டாள். நாமும், நம்மேல் சார்ந்திராமல் யெகோவாமேல் சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வது மிகமிக அவசியம்.
5:6-8. அகாஸ்வேருவின் ஆதரவைப் பெறுவதற்காக அவரை இரண்டாம் நாள் விருந்துக்கும் எஸ்தர் அழைத்தாள். அப்போது எஸ்தர் விவேகத்துடன் நடந்துகொண்டதைப் போல, நாமும் நடந்துகொள்ள வேண்டும்.—நீதிமொழிகள் 14:15.
அடுத்தடுத்து தலைகீழ் மாற்றங்கள்
அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் நிலைமையைத் தலைகீழாக்குகின்றன. மொர்தெகாய்க்காக ஆமான் செய்த தூக்குமரத்தில் அவனே தூக்கிப்போடப்படுகிறான், ஆனால் அவனது கொலைத்திட்டத்துக்கு பலியாகவிருந்தவரோ பிரதம மந்திரியாகிறார்! யூதர்களை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதற்கான திட்டம் என்னவாகும்? அதற்கும் திடீர் மாற்றம் காத்திருக்கிறது.
விசுவாசமுள்ள எஸ்தர் மீண்டும் தைரியமாகப் பேசுகிறாள். ஆமானின் சதித்திட்டத்தை முறியடிப்பதற்காக தன் உயிரையே பணயம் வைத்து ஒரு வேண்டுகோளுடன் ராஜாவுக்கு முன் ஆஜராகிறாள். என்ன செய்யப்பட வேண்டுமென்பது அகாஸ்வேருவுக்குத் தெரிந்துவிடுகிறது. ஆகவே, கடைசியாக யூதர்களை ஒழித்துக்கட்ட வேண்டிய அந்த நாள் வருகையில், யூதர்கள் அல்ல, ஆனால் அவர்களுக்குத் தீங்கு செய்ய வகைதேடுகிறவர்கள் தீர்த்துக்கட்டப்படுகிறார்கள். இந்த மாபெரும் விடுதலையை நினைவுகூருவதற்காக ஒவ்வொரு வருடமும் பூரீம் எனும் பண்டிகையைக் கொண்டாடும்படி மொர்தெகாய் கட்டளையிடுகிறார். அவர் அகாஸ்வேரு ராஜாவுக்கு இரண்டாம் ஸ்தானத்தில் இருந்து ‘தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறார்.’—எஸ்தர் 10:3.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
7:4—யூதர்களை அழிப்பதால் ‘ராஜாவுக்கு நஷ்டம் உண்டாவது’ எப்படி? யூதர்களை அடிமைகளாக விற்பதற்கு வாய்ப்பிருந்தும், அப்படிச் செய்யாமல் அவர்களை அழித்துவிடுவது ராஜாவுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தும் என்பதை எஸ்தர் சாதுரியமாக எடுத்துச் சொல்கிறாள். யூதர்களைக் கொலை செய்ய ஆமான் 10,000 வெள்ளி தாலந்துகளைக் கொடுப்பதாகச் சொன்னது உண்மைதான்; ஆனால் அவன் யூதர்களை அடிமைகளாக விற்க திட்டம் தீட்டியிருந்தால் இன்னும் எவ்வளவோ அதிகமான பணம் ராஜாவின் கஜானாவுக்கு வந்துசேர்ந்திருக்கும். இந்த நஷ்டம் ஒருபுறமிருக்க, அந்தச் சதித்திட்டத்தால் ராணியையும்கூட ராஜா இழக்க வேண்டியிருக்கும்.
7:8—ஆமானின் முகத்தை பிரதானிகள் ஏன் மூடிப்போட்டார்கள்? அவமானத்தை அல்லது வரவிருக்கும் ஆபத்தைக் குறிப்பதற்காக அவ்வாறு மூடிப்போட்டிருக்கலாம். “பூர்வ காலத்தவர் சிலசமயங்களில், கொலை செய்யப்படவிருப்பவரின் தலையை மூடினார்கள்” என ஓர் ஆராய்ச்சி நூல் குறிப்பிடுகிறது.
8:17 (NW)—‘தேசத்து [பெர்சிய] ஜனங்கள் அநேகர் தங்களை யூதர்கள் என அறிவித்தது’ ஏன்? எதிராணை பிறப்பிக்கப்பட்டதானது, கடவுளுடைய ஆதரவு யூதர்களுக்கு இருப்பதைக் குறிக்கிறதென நினைத்து பெர்சியர்கள் அநேகர் யூதமார்க்கத்திற்கு மாறியிருக்க வேண்டும். இதுபோன்ற காரணத்தின் அடிப்படையில்தான் இன்று சகரியா தீர்க்கதரிசனம் ஒன்று நிறைவேறி வருகிறது. அது இவ்வாறு குறிப்பிடுகிறது: “பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்.”—சகரியா 8:23.
9:7, 9, 10, 15, 16—கொள்ளையிடுவதற்குச் சட்டம் அனுமதித்தபோதிலும், யூதர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? தங்களுடைய உயிரைப் பாதுகாக்க வேண்டுமென்பதே அவர்களுடைய நோக்கமாய் இருந்தது, செல்வத்தைச் சேர்க்க வேண்டுமென்பதல்ல.
நமக்குப் பாடம்:
6:6-10. “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.”—நீதிமொழிகள் 16:18.
7:3, 4. யெகோவாவின் சாட்சிகள் என்று தெரியவந்தால் ஒருவேளை துன்புறுத்தப்படலாம் என்பதை அறிந்தும்கூட, நாம் தைரியமாக நம்மை அடையாளம் காட்டுகிறோமா?
8:3-6. விரோதிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்க அரசு அதிகாரிகளிடத்திலும் நீதிமன்றங்களிலும் முறையீடு செய்யலாம், செய்யவும் வேண்டும்.
8:5. தன்னுடைய ஜனங்களை அழிக்கும்படி பிறப்பிக்கப்பட்ட ஆணையில் ராஜாவுக்கும் பொறுப்பிருந்ததை எஸ்தர் நேரடியாகச் சுட்டிக்காட்டாமல் சாதுரியமாகப் பேசினாள். அதுபோல, உயர் அதிகாரிகளிடம் சாட்சி கொடுக்கையில் நாமும் சாதுரியமாகப் பேசுவது அவசியம்.
9:22. நம் மத்தியில் உள்ள ஏழை எளியோரை நாம் மறந்துவிடக்கூடாது.—கலாத்தியர் 2:10.
யெகோவா “சகாயமும் இரட்சிப்பும்” அருளுவார்
எஸ்தர், ராணியாக ஆகியிருப்பதில் கடவுளுடைய நோக்கம் உட்பட்டிருப்பதை மொர்தெகாய் குறிப்பிடுகிறார். உயிருக்கு அச்சுறுத்தல் வந்தபோது, யூதர்கள் உபவாசமிருந்து, உதவிக்காக ஜெபம் செய்கிறார்கள். ராஜாவின் அழைப்பின்றி ராணி அவரிடம் செல்கிறாள், ஒவ்வொரு முறையும் அவள் கேட்கும் காரியத்திற்கு ராஜா சம்மதம் தெரிவிக்கிறார். முக்கியமான அந்த இரவில் ராஜாவால் தூங்கவே முடிவதில்லை. ஆம், இந்த எஸ்தர் புத்தகம், யெகோவா தமது ஜனங்களின் நன்மைக்காக காரியங்களை நடக்க வைப்பது பற்றியதே.
எஸ்தர் புத்தகத்திலுள்ள விறுவிறுப்பூட்டும் தகவல், முக்கியமாக ‘முடிவு காலத்தில்’ வாழ்கிற நமக்கு ஊக்கம் அளிக்கிறது. (தானியேல் 12:4) “கடைசி நாட்களிலே,” அதாவது, முடிவு காலத்தின் கடைசிக் கட்டத்திலே மாகோகு தேசத்தானான கோகு—பிசாசாகிய சாத்தான்—யெகோவாவின் ஜனங்களை முழுமூச்சுடன் தாக்குவான். உண்மை வணக்கத்தாரை துடைத்தழிக்க வேண்டுமென்பதே அவனுடைய ஒரே குறிக்கோள். ஆனால், எஸ்தருடைய காலத்தில் நடந்ததுபோலவே, யெகோவா தம் வணக்கத்தாருக்கு “சகாயமும் இரட்சிப்பும்” அருளுவார்.—எசேக்கியேல் 38:16-23; எஸ்தர் 4:14.
[பக்கம் 10-ன் படம்]
அகாஸ்வேருக்கு முன்பாக எஸ்தரும் மொர்தெகாயும்