அதிகாரம் இருபது
யெகோவாவின் நாளை மனதில் மிக அண்மையில் வையுங்கள்
பூமி முழுவதும் ஒரு பரதீஸாக மாற வேண்டுமென்பது யெகோவாவின் நோக்கம்; இதுவே முதன்முதலாக நீங்கள் பைபிளிலிருந்து கற்ற விஷயங்களில் ஒன்று. அந்தப் புதிய உலகில் போர், குற்றச்செயல், வறுமை, நோய்நொடி, துன்பங்கள், மரணம் போன்றவை இருக்கவே இருக்காது. இறந்து போனவர்களும்கூட மீண்டும் உயிரோடு வருவார்கள். எப்பேர்ப்பட்ட அருமையான எதிர்பார்ப்புகள்! அரசராக கிறிஸ்துவின் காணக்கூடாத வந்திருத்தல் 1914-ல் ஆரம்பமாகியிருப்பதற்கும் அது முதற்கொண்டு நாம் இந்தப் பொல்லாத உலகின் கடைசி நாட்களில் வாழ்ந்து வருவதற்கும் உள்ள அத்தாட்சி, இந்த எதிர்பார்ப்புகளின் நிறைவேற்றம் சமீபித்திருப்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. இந்தக் கடைசி நாட்களின் முடிவில் யெகோவா இந்த ஒழுங்குமுறையை அழித்து வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகை ஸ்தாபிப்பார்!
2 வரப்போகும் இந்த அழிவின் காலத்தை “யெகோவாவின் நாள்” என பைபிள் அழைக்கிறது. (2 பேதுரு 3:10, NW) இது சாத்தானிய உலகம் முழுவதற்கும் எதிரான ‘யெகோவாவுடைய கோபத்தின் நாள்.’ (செப்பனியா 2:3, NW) ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்தில் . . . எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்படும்’ யுத்தத்தில் ‘பூலோகமெங்குமுள்ள ராஜாக்கள்’ ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகையில் இது உச்சக்கட்டத்தை எட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) “யெகோவாவின் நாள்” மிக சமீபமாயிருப்பதாக நீங்கள் உறுதியாக நம்புவதை உங்களுடைய வாழ்க்கை போக்கு மெய்ப்பித்துக் காட்டுகிறதா?—செப்பனியா 1:14-18; எரேமியா 25:33.
3 யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவராக சாத்தானிய ஒழுங்குமுறைக்கு முடிவைக் கொண்டுவர இயேசு கிறிஸ்து எப்போது வருவார் என்ற திட்டவட்டமான தேதியை பைபிள் கொடுப்பதில்லை. “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்” என இயேசு சொன்னார். (மாற்கு 13:32) யெகோவாவை உண்மையில் நேசிக்காதவர்கள், அவருடைய நாள் இப்போதைக்கு வராதென தங்கள் மனங்களில் அதைத் தள்ளி வைத்து, உலகப்பிரகாரமான நாட்டங்களில் ஈடுபடுவார்கள். ஆனால் யெகோவாவை உண்மையிலேயே நேசிப்பவர்கள் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவு எப்போது வந்தாலும் சரி, அவரை முழு ஆத்துமாவோடு சேவிப்பார்கள்.—சங்கீதம் 37:4; 1 யோவான் 5:3.
4 யெகோவாவை நேசிப்போருக்கு எச்சரிக்கை விடுப்பவராக, “அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திரு[ங்கள்]” என இயேசு சொன்னார். (மாற்கு 13:33-37) காலத்தின் முக்கியத்துவத்தையே உணரத் தவறும் அளவுக்கு உண்ணுவதில், குடிப்பதில், அல்லது ‘லவுகீக கவலைகளில்’ மூழ்கிப் போய்விடாமல் இருக்கும்படி நமக்கு அவர் அறிவுறுத்துகிறார்.—லூக்கா 21:34-36; மத்தேயு 24:37-42.
5 அவ்வாறே பேதுருவும் ‘யெகோவாவின் நாளை’ மிக அண்மையில் வைத்திருக்கும்படி எச்சரிக்கிறார்; “அந்த நாளில் வானங்கள் எரிந்து அழிந்துபோம். ஆக்கக்கூறுகள் கடுமையான வெப்பத்தால் உருகிப்போம்.” மனித அரசாங்கங்கள் அனைத்தும்—“வானங்கள்”—அழிக்கப்படும்; பொல்லாத மனித சமுதாயமும்—“பூமியும்”—அதன் ‘ஆக்கக்கூறுகளும்’ அதாவது, இந்தப் பொல்லாத உலகின் கருத்துக்களும் மனப்பான்மைகளும் ஒழிக்கப்படும்; கடவுளை சார்ந்திராமல் சுதந்திரமாக வாழும் மனப்போக்கு, ஒழுக்கங்கெட்ட, பொருளாசைமிக்க வாழ்க்கை போன்றவை இவற்றில் அடங்கும். அதற்கு பதிலாக, “நீதி வாசம் பண்ணும் புதிய வானங்களும் [கடவுளுடைய பரலோக அரசாங்கமும்] புதிய பூமியும் [புதிய மனித சமுதாயமும்] உண்டாகும்.” (2 பேதுரு 3:10-13, NW) உலகையே அதிர வைக்கும் இச்சம்பவங்கள் திடீரென நினையாத நாளிலும் நேரத்திலும் ஆரம்பிக்கும்.—மத்தேயு 24:44.
அடையாளங்களுக்கு விழிப்புடனிருங்கள்
6 நாம் வாழும் காலத்தை கருத்தில் கொண்டு கடைசி நாட்களை, அதாவது ‘இந்த ஒழுங்குமுறையின் முடிவை’ சுட்டிக்காட்டும் கூட்டு அடையாளங்களை மிகத் தெளிவாக அறிந்திருப்பது அவசியம். மத்தேயு 24:3-ன்படி, (NW) சீஷர்களின் கேள்விக்கு இயேசு கொடுத்த பதிலை எண்ணிப் பாருங்கள்; வசனங்கள் 4 முதல் 22 வரை விவரிக்கப்பட்டுள்ள அடையாளங்களில் சில பொ.ச. 33-க்கும் 70-க்கும் இடைப்பட்ட யூத ஒழுங்குமுறையின் முடிவு காலத்தில் சிறியளவில் நடந்தேறின. ஆனால் அதன் பெரிய நிறைவேற்றம் 1914 முதற்கொண்டு, அதாவது கிறிஸ்துவின் ‘வந்திருத்தலுக்கும் இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கும்’ உரிய காலத்தில் நடந்தேறுகிறது. மத்தேயு 24:23-28 வசனங்கள், பொ.ச. 70-லிருந்து கிறிஸ்துவின் வந்திருத்தல் காலப்பகுதி வரை என்ன நடக்கும் என்பதை விவரிக்கின்றன. மத்தேயு 24:29–25:46-ல் சொல்லப்பட்டுள்ளவை இந்த முடிவின் காலத்தில் நடந்தேறுகின்றன.
7 அந்த அடையாளத்தை நிறைவேற்றுகிற சம்பவங்களையும் மனப்பான்மைகளையும் நாம் தனிப்பட்ட விதமாக கூர்ந்து கவனிக்க வேண்டும். இவற்றை பைபிள் தீர்க்கதரிசனத்தோடு சம்பந்தப்படுத்திப் பார்ப்பது யெகோவாவின் நாளை மிக நெருக்கமாக மனதில் வைப்பதற்கு நமக்கு உதவும். அந்த நாள் மிக விரைவில் வரவிருப்பதைப் பற்றி மற்றவர்களுக்கு எச்சரிக்கையில் அதை நம்ப வைக்கும் விதமாக சொல்வதற்கும் உதவுகிறது. (ஏசாயா 61:1, 2) இவற்றையெல்லாம் மனதில் வைத்து பின்வரும் கேள்விகளை பரிசீலிக்கலாம்; அவை அடையாளத்தின் சில பகுதிகளை—மத்தேயு 24:7-லும் லூக்கா 21:10, 11-லும் பதிவு செய்யப்பட்டுள்ளவற்றை—சிறப்பித்துக் காட்டுகின்றன.
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும்” எழும்புவதைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டது 1914 முதற்கொண்டு அசாதாரண விதத்தில் எப்படி நிறைவேறி வருகிறது? போர் சம்பந்தமாக அது முதற்கொண்டு என்ன நடந்திருக்கிறது?
1918-ல், முதல் உலகப் போருக்கு பலியானவர்களைவிட அதிகமானோரை விழுங்கிய கொள்ளை நோய் எது? மனிதன் மருத்துவத்தில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் என்னென்ன நோய்கள் இன்னும் லட்சக்கணக்கானோரை வாரிக்கொள்கின்றன?
கடந்த நூற்றாண்டின் விஞ்ஞான சாதனைகள் விண்ணை எட்டியிருந்தாலும் உணவு பற்றாக்குறை எந்தளவுக்கு உலகை உலுக்கியுள்ளது?
2 தீமோத்தேயு 3:1-5, 13 வசனங்கள் காலங்காலமாக இருந்துவரும் வாழ்க்கைப் பாணியை குறிக்காமல் கடைசி நாட்களின் முடிவு நெருங்கி வருகையில் நிலைமைகள் இன்னும் மோசமடைந்திருக்கும் விதத்தையே விவரிக்கின்றன என எது உங்களை நம்ப வைக்கிறது?
ஜனங்களை பிரித்தல்
8 இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுடன் வேறு முக்கிய காரியங்களையும் இயேசு சம்பந்தப்படுத்தி பேசினார். அவற்றில் ஒன்று ‘பொல்லாங்கனுடைய புத்திரரிலிருந்து’ ‘ராஜ்யத்தின் புத்திரரைப்’ பிரிப்பதைப் பற்றியதாகும். கோதுமைக்குள் களைகளை சத்துரு விதைத்துவிட்டுச் சென்றதைப் பற்றிய உவமையில் இயேசு இதைக் குறிப்பிட்டார். இந்த உவமையில் “கோதுமை” அபிஷேகம் பண்ணப்பட்ட உண்மை கிறிஸ்தவர்களை பிரதிநிதித்துவம் செய்கிறது. ‘களைகளோ’ தங்களை கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டு அதேசமயத்தில் ‘பொல்லாங்கனுடைய புத்திரராக’ நிரூபிப்பவர்களை பிரதிநிதித்துவம் செய்கிறது; ஏனெனில் அவர்கள் பிசாசு ஆட்சி செய்யும் இந்த உலகத்தோடு பற்றுதலாக இருக்கிறார்கள். இவர்கள் ‘[கடவுளுடைய] ராஜ்யத்தின் புத்திரரிலிருந்து’ பிரிக்கப்பட்டு அழிவுக்கென குறிக்கப்படுகிறார்கள். (மத்தேயு 13:24-30, 36-43) இந்தப் பிரிக்கும் வேலை முடிந்து விட்டதா?
9 முதல் உலகப் போருக்குப் பின்பு கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்ட அனைவரும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்: (1) கிறிஸ்தவமண்டலத்தின் குருக்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும்; இவர்கள் நாட்டுப்பற்றை விட்டுக்கொடுக்காமல் அதே சமயத்தில் சர்வதேச சங்கத்திற்கு (தற்போது ஐக்கிய நாடுகள் சங்கம்) பெரும் ஆதரவு அளித்தவர்கள் (2) போருக்குப் பின்னான காலப்பகுதியில் வாழ்ந்த உண்மை கிறிஸ்தவர்கள்; இவர்கள் இந்த உலகின் தேசங்களுக்கு அல்ல, ஆனால் கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்திற்கு முழு ஆதரவையும் அளித்தவர்கள். (யோவான் 17:16) இவர்கள் ‘ராஜ்யத்தினுடைய நற்செய்தியை’ பூமியெங்கும் பிரசங்கிப்பதன் மூலம் தங்களை கடவுளுடைய ராஜ்யத்தின் உண்மையான ஊழியர்களாக நிரூபித்தார்கள். (மத்தேயு 24:14, NW) அதன் பலன் என்ன?
10 முதலாவதாக, கடவுளுடைய ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் மீதியானோர் கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள்; இவர்கள் கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தின் பாகமாகும் நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் தேசங்களுக்குள் சிதறுண்டு இருந்தாலும் ஓர் ஐக்கியப்பட்ட அமைப்புக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள். அபிஷேகம் பண்ணப்பட்டவர்களை இறுதியாக முத்திரைபோடும் வேலை முடிவுக்கு வருகிறது.—வெளிப்படுத்துதல் 7:3, 4.
11 அடுத்ததாக, கிறிஸ்துவின் வழிநடத்துதலின்கீழ் ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து . . . திரள் கூட்டம்’ கூட்டிச் சேர்க்கப்பட ஆரம்பித்தது. இவர்கள் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ தப்பிப்பிழைத்து கடவுளுடைய புதிய உலகிற்குள் பிரவேசிக்கப்போகும் ‘வேறே ஆடுகள்’ ஆவர். (வெளிப்படுத்துதல் 7:9, 14; யோவான் 10:16) முடிவு வருவதற்கு முன்பாக செய்யப்பட வேண்டிய இந்த ராஜ்ய பிரசங்கிப்பு வேலை நம் நாள் வரையாக தொடர்ந்து நடைபெறுகிறது. இப்போது லட்சக்கணக்கில் இருக்கும் வேறே ஆடுகளைச் சேர்ந்த இந்தத் திரள் கூட்டத்தார், ராஜ்யத்தின் முக்கிய செய்தியை அறிவிப்பதில் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோருக்கு ஒத்தாசை புரிகிறார்கள். இந்தச் செய்தி சகல தேசங்களிலும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில் என்ன நடக்கும்?
12 மேலே சொல்லப்பட்ட அனைத்தும் நாம் இந்தக் கடைசி நாட்களின் முடிவில் வாழ்வதையும் யெகோவாவின் நாள் சமீபத்தில் இருப்பதையும் குறிக்கின்றன. ஆனால், அந்தப் பயங்கரமான நாள் வருவதற்கு முன்பு இன்னும் நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றனவா? ஆம் இருக்கின்றன. உதாரணமாக, ராஜ்யத்தைக் குறித்த விவாதத்தின் அடிப்படையில் ஜனங்கள் பிரிக்கப்படுவது இன்னும் முடிவடையவில்லை. வருடக்கணக்காக கடுமையான எதிர்ப்பு நிலவிய சில இடங்களில் இப்போது புதிய சீஷர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நற்செய்தியை ஏற்க மறுப்போருக்கும் சாட்சி கொடுப்பதன் மூலம் யெகோவாவின் இரக்கம் வெளிக்காட்டப்படுகிறது. ஆகவே, இந்த ஊழியத்தில் தொடர்ந்து ஈடுபடுங்கள்! இந்த ஊழியம் நிறைவுபெறுகையில் முடிவு வரும் என இயேசு நமக்கு உறுதியளிக்கிறார்.
13 மற்றொரு அதிமுக்கியமான பைபிள் தீர்க்கதரிசனம் இவ்வாறு முன்னுரைக்கிறது: “சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள் மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.” (1 தெசலோனிக்கேயர் 5:2, 3) “சமாதானமும் சவுக்கியமும்” என்ற அறிவிப்பு எவ்விதத்தில் செய்யப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் உலக ஆட்சியாளர்கள் மனிதரின் பிரச்சினைகளை உண்மையில் தீர்த்து விட்டார்கள் என இது நிச்சயமாகவே அர்த்தப்படுத்தாது. யெகோவாவின் நாளை மனதில் மிக அண்மையில் வைப்பவர்கள் இந்த அறிவிப்பைக் கேட்கையில் ஏமாற மாட்டார்கள். அதனைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே திடீர் அழிவு வரும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
14 மிகுந்த உபத்திரவத்தின் ஆரம்பத்தில், ஆட்சியாளர்கள் பொய் மத உலக பேரரசாகிய மகா பாபிலோனுக்கு எதிராக செயல்பட்டு அவளை அழித்துப் போடுவார்கள். (மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 17:15, 16) அதற்குப்பின் தேசங்கள், யெகோவாவின் பேரரசுரிமைக்கு ஆதரவு காட்டுபவர்கள் பக்கமாக கவனத்தைத் திருப்பும். இதனால் அரசாங்கங்களிடமும், அவற்றை ஆதரிக்கிறவர்களிடமும் யெகோவாவின் பயங்கர கோபம் கிளறப்படும்; விளைவு அவர்களுக்கு ஒட்டுமொத்த அழிவு. அதுவே மிகுந்த உபத்திரவத்தின் உச்சக்கட்டமான அர்மகெதோன் யுத்தம். அதற்குப் பின்பு சாத்தானும் அவனது பேய்களும் அபிஸுக்குள் தள்ளப்படுவார்கள்; அவர்களால் இனிமேலும் மனிதகுலத்தை ஆட்டிப்படைக்க முடியாது. அத்துடன் யெகோவாவின் நாள் முடிவுக்கு வரும்; அப்போது அவரது பெயர் பரிசுத்தமாக்கப்படும்.—எசேக்கியேல் 38:18, 22, 23; வெளிப்படுத்துதல் 19:11–20:3.
15 இந்த ஒழுங்குமுறையின் முடிவு கடவுளுடைய கால அட்டவணையின்படி சரியான சமயத்தில் வரும். அது தாமதிக்காது. (ஆபகூக் 2:3) பொ.ச. 70-ல் எருசலேமுக்கு வந்த அழிவை நினைவில் கொள்ளுங்கள்; யூதர்கள் எதிர்பாராத சமயத்தில், இனி ஆபத்தில்லை என எண்ணிய சமயத்தில் சடுதியாக அழிவு வந்தது. பூர்வ பாபிலோனைக் குறித்து என்ன சொல்லலாம்? அது வலிமையும், துணிவும், அரணிப்பான உயர்ந்த மதில்களின் பாதுகாப்பும் உள்ளதாக இருந்தது. ஆனால் ஒரே இரவில் வீழ்ந்தது. அதேபோல் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கும்கூட அழிவு திடீரென வரும். அது வரும்போது, நாம் மெய் வணக்கத்தில் ஒன்றுபட்டவர்களாகவும் யெகோவாவின் நாளை மனதில் மிக அண்மையில் வைத்திருந்தவர்களாகவும் காணப்படுவோமாக.
மறுபார்வை
• யெகோவாவின் நாளை மனதில் மிக அண்மையில் வைப்பது ஏன் மிக முக்கியம்? அதை நாம் எப்படி செய்யலாம்?
• ஜனங்களை பிரிக்கும் வேலையில் நாம் எப்படி தனிப்பட்ட விதமாக சம்பந்தப்பட்டுள்ளோம்?
• யெகோவாவின் நாள் ஆரம்பிப்பதற்கு முன்பு இன்னும் என்னென்ன காரியங்கள் நடந்தேற உள்ளன? ஆகவே, நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்?
[கேள்விகள்]
1. இந்தப் பழைய ஒழுங்குமுறையின் வேதனைகளிலிருந்து விரைவில் விடுதலை கிடைக்குமென முதன்முதலில் கற்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?
2. “யெகோவாவின் நாள்” என்பது என்ன?
3. (அ) யெகோவாவின் நாள் எப்போது வரும்? (ஆ) “அந்த நாளையும் அந்த நாழிகையையும்” யெகோவா தெரிவிக்காதது நமக்கு எப்படி நன்மையாக இருந்திருக்கிறது?
4. இயேசு என்ன எச்சரிக்கை விடுத்தார்?
5. பேதுரு விவரித்த விதமாக யெகோவாவின் நாளில் என்னவெல்லாம் சம்பவிக்கும்?
6. (அ) சீஷர்களின் கேள்விக்கு இயேசு கொடுத்த பதில் யூத ஒழுங்குமுறையின் முடிவு காலத்தில் எந்தளவுக்கு நிறைவேறியது? (ஆ) இயேசு கொடுத்த பதிலின் எந்தப் பகுதி 1914 முதற்கொண்டு நடந்துவரும் சம்பவங்கள் மீதும், காட்டப்படும் மனப்பான்மைகள் மீதும் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது?
7. (அ) இன்றைய சூழ்நிலைகள் அந்த அடையாளத்தை நிறைவேற்றும் விஷயத்தில் நாம் ஏன் தனிப்பட்டவர்களாக விழிப்புடன் இருக்க வேண்டும்? (ஆ) 1914 முதற்கொண்டு இந்த அடையாளம் எவ்வாறு நிறைவேறியிருக்கிறது என்பதை காண்பித்து இப்பாராவிற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.
8. (அ) மத்தேயு 13:24-30, 36-43-ல் விவரிக்கப்பட்டுள்ள வேறெந்த விஷயத்தையும் இயேசு இக்காரிய ஒழுங்குமுறையின் முடிவோடு சம்பந்தப்படுத்தினார்? (ஆ) இயேசுவின் உவமை எதைக் குறிக்கிறது?
9. (அ) முதல் உலகப் போருக்குப் பின்பு கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டோர் மத்தியில் என்ன மாபெரும் பிரிக்கும் வேலை நடந்தேறியது? (ஆ) தாங்களே ராஜ்யத்தின் உண்மையான ஊழியர்கள் என்பதை அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் எப்படி நிரூபித்தார்கள்?
10. ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் முதல் பலன் என்ன?
11. (அ) கூட்டிச் சேர்க்கும் என்ன வேலை தொடர்ந்து நடைபெறுகிறது, எந்தத் தீர்க்கதரிசனத்திற்கு இசைவாக? (ஆ) இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் எதைக் குறிக்கிறது?
12. யெகோவாவின் நாள் வருவதற்கு முன்பாக எந்தளவுக்கு பிரசங்க வேலை செய்யப்பட வேண்டியுள்ளது?
13. ஒன்று தெசலோனிக்கேயர் 5:2, 3-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, குறிப்பிடத்தக்க என்ன சம்பவம் இன்னும் நடந்தேற வேண்டியுள்ளது, அது நமக்கு எதை அர்த்தப்படுத்தும்?
14. மிகுந்த உபத்திரவத்தின் போது என்னென்ன சம்பவங்கள் நடந்தேறும், என்ன வரிசைக் கிரமத்தில்?
15. யெகோவாவின் நாள் இன்னும் தாமதிக்கும் என நினைப்பது ஏன் ஞானமற்றது?
[பக்கம் 180, 181-ன் படங்கள்]
சாத்தானிய ஒழுங்குமுறையின் அழிவோடு இந்தக் கடைசி நாட்கள் விரைவில் முடிவடையும்