இணைப்பு
கிறிஸ்தவப் பெற்றோருக்கு:
யெகோவாவை நேசிக்கவும், வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கவும் உங்களுடைய அருமையான பிள்ளைகளுக்கு உதவி செய்ய நீங்கள் நிச்சயம் ஆசைப்படுவீர்கள். அவர்கள் ஞானஸ்நானம் எடுக்கத் தயாராவதற்கு நீங்கள் எப்படி உதவலாம்? இந்த முக்கியமான படியை எடுக்க அவர்கள் எப்போது தயாராவார்கள்?
“எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, . . . ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். (மத். 28:19) அப்படியென்றால், ஞானஸ்நானம் எடுப்பதற்கு முதலில் நீங்கள் சீஷராக ஆக வேண்டும்; அதாவது, கிறிஸ்துவின் போதனைகளைப் புரிந்துகொள்கிறவராகவும் நம்புகிறவராகவும் மட்டுமல்லாமல், அவற்றின்படி செய்கிறவராகவும் இருக்க வேண்டும். சின்னப் பிள்ளைகளால்கூட இதைச் செய்ய முடியும்.
உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரி வையுங்கள்; யெகோவாவின் போதனைகளை அவர்களுடைய மனதில் பதிய வையுங்கள். (உபா. 6:6-9) அதற்காக, இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை பயன்படுத்தி, அடிப்படை பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொடுங்கள்; பைபிள் நியமங்களின் அடிப்படையில் எது சரி, எது தவறு என்பதைத் தெரிந்துகொள்ளவும் அவற்றின்படி வாழவும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். தங்கள் நம்பிக்கைகளைப் பற்றிச் சொந்த வார்த்தையில் விளக்க அவர்களுக்கு உதவி செய்யுங்கள். (1 பே. 3:15) நீங்கள் கற்றுத்தரும் விஷயங்களும், கொடுக்கும் உற்சாகமும் மட்டுமல்ல, தனிப்பட்ட படிப்பு, குடும்ப வழிபாடு, கூட்டங்கள், நல்ல நட்பு ஆகியவையும் ஞானஸ்நானம் எடுத்து தொடர்ந்து முன்னேற அவர்களுக்கு உதவி செய்யும். யெகோவாவிடம் எப்படி நெருங்கிப்போகலாம் என்று எப்போதும் யோசித்துப் பார்க்க அவர்களுக்கு உதவுங்கள்.
“சிறுபிள்ளையைக்கூட அவனுடைய செயலை வைத்தே எடைபோட முடியும். அவனுடைய நடத்தை சுத்தமாகவும் சரியாகவும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள முடியும்” என்று நீதிமொழிகள் 20:11 சொல்கிறது. ஒரு பிள்ளை இயேசு கிறிஸ்துவின் சீஷராக ஆகியிருப்பதையும், ஞானஸ்நானம் எடுக்கத் தயாராக இருப்பதையும் எதை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்?
ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தயாராகிற ஒரு பிள்ளை, தன்னுடைய பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். (அப். 5:29; கொலோ. 3:20) இயேசு 12 வயதாக இருந்தபோது, “தொடர்ந்து [தன் பெற்றோருக்கு] கட்டுப்பட்டு நடந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (லூக். 2:51) உங்கள் பிள்ளையிடம் குறையே இருக்கக் கூடாதென்று நீங்கள் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தயாராகிற ஒரு பிள்ளை, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும்; பெற்றோரின் பேச்சைத் தட்டாத பிள்ளை என்று பெயர் எடுத்திருக்க வேண்டும்.
அதோடு, பைபிள் விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். (லூக். 2:46) உங்கள் பிள்ளை கூட்டங்களுக்குப் போகவும் அங்கே பதில் சொல்லவும் ஆசைப்படுகிறதா? (சங். 122:1) தவறாமல் பைபிளை வாசிப்பதிலும் தனிப்பட்ட படிப்பு படிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறதா?—மத். 4:4.
ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தயாராகிற ஒரு பிள்ளை, கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் தர வேண்டும். (மத். 6:33) தன்னுடைய நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வது தன் பொறுப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஊழியத்தின் வெவ்வேறு அம்சங்களில் கலந்துகொள்ள வேண்டும். தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதைத் தன் ஆசிரியர்களிடமும் கூடப் படிக்கும் மாணவர்களிடமும் சொல்ல வெட்கப்படக் கூடாது. வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தில் கிடைக்கும் நியமிப்புகளைப் பொறுப்போடு கையாள வேண்டும்.
கெட்ட சகவாசத்தைத் தவிர்ப்பதன் மூலம் ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருப்பதற்குக் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். (நீதி. 13:20; 1 கொ. 15:33) இசை, சினிமா, டிவி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்ஸ், வெப்சைட்டுகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் அதேபோல் சுத்தமாக இருப்பதற்குக் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.
பெற்றோருடைய கடின முயற்சியால், நிறைய பிள்ளைகள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு சிறுவயதிலேயே ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். யெகோவாவுடன் இருக்கும் பந்தத்தில் இந்த முக்கியமான மைல்கல்லை எட்டுவதற்கு, அதாவது ஞானஸ்நானம் எடுப்பதற்கு, உங்கள் பிள்ளைகளுக்கு உதவ நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கட்டும்!
ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிக்கு:
ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக சபையில் சேவை செய்வது ஒரு பாக்கியம். கடவுளுடைய சேவையில் நீங்கள் செய்திருக்கிற ஆன்மீக முன்னேற்றத்துக்காக உங்களைப் பாராட்டுகிறோம். நீங்கள் பைபிளைப் படித்து, கடவுளைப் பற்றிக் கற்றுக்கொண்டு, அவருடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைத்திருக்கிறீர்கள்.—யோவா. 17:3; எபி. 11:6.
யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு, நீங்கள் ஏதாவது ஒரு மத அமைப்பின் பாகமாக இருந்திருப்பீர்கள் அல்லது எல்லா விதமான மத அமைப்புகளிலிருந்தும் ஒதுங்கி இருந்திருப்பீர்கள். ஒருவேளை, பைபிள் நியமங்களுக்கு முரணான ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்திருப்பீர்கள். ஆனால் இப்போது மனம் திருந்தி, உங்கள் வழியை மாற்றிக்கொள்வதன் மூலம் உங்கள் விசுவாசத்தைக் காட்டியிருக்கிறீர்கள். மனம் திருந்துவது என்றால், கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்துவது. வழியை மாற்றிக்கொள்வது என்றால், தவறான பாதையைவிட்டு விலகி, கடவுளுடைய பார்வையில் சரியானதைச் செய்யத் தீர்மானமாக இருப்பது.—அப். 3:19.
ஒருவேளை, பரிசுத்த எழுத்துக்களை நீங்கள் “சிசுப் பருவத்திலிருந்தே” அறிந்திருப்பீர்கள். (2 தீ. 3:15) அதனால், கெட்ட நடத்தையையும் படுமோசமான பாவங்களையும் தவிர்த்திருக்கிறீர்கள். யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்யும்படி மற்றவர்களால் வற்புறுத்தப்பட்டாலும், வேறு ஏதாவது விதத்தில் தூண்டப்பட்டாலும் உறுதியாக இருக்கக் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். உண்மை வணக்கத்தை ஆதரிப்பதன் மூலமும், உங்கள் நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் சொல்வதன் மூலமும் உங்கள் விசுவாசத்தைக் காட்டியிருக்கிறீர்கள். நன்றாக ஊழியம் செய்வதற்குப் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். இப்போது, ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக யெகோவாவுக்குச் சேவை செய்ய முடிவு எடுத்திருக்கிறீர்கள்.
யெகோவாவைப் பற்றி உங்களுக்குச் சிறு வயதிலேயே தெரிந்திருந்தாலும் சரி, பிற்பாடு தெரியவந்திருந்தாலும் சரி, தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றம் செய்வதைப் பற்றி, அதாவது யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிப்பதையும் ஞானஸ்நானம் எடுப்பதையும் பற்றி, நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்றால், அவருக்கே என்றென்றும் முழு பக்தி காட்ட முடிவெடுத்திருப்பதாக ஜெபத்தில் சொல்ல வேண்டும். (மத். 16:24) அதன்பின், அவருக்கு உங்களை அர்ப்பணித்திருப்பதற்கு அடையாளமாகத் தண்ணீரில் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். (மத். 28:19, 20) இப்படி, உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம், யெகோவாவினால் நியமிக்கப்பட்ட ஊழியராக ஆவீர்கள். அது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
ஆனாலும், நீங்கள் ஏற்கெனவே பைபிளில் படித்திருக்கிறபடி, உங்களுக்குப் பல சவால்கள் வரலாம். இயேசு ஞானஸ்நானம் எடுத்த பிறகு என்ன நடந்ததென்று யோசித்துப் பாருங்கள். “கடவுளுடைய சக்தி [அவரை] வனாந்தரத்துக்கு வழிநடத்தியது; அங்கே பிசாசு அவரைச் சோதித்தான்.” (மத். 4:1) நீங்களும் இயேசுவின் சீஷராக ஞானஸ்நானம் எடுத்த பிறகு, சோதனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். (யோவா. 15:20) அவை பல விதங்களில் வரலாம். உங்கள் குடும்பத்தார் உங்களை எதிர்க்கலாம். (மத். 10:36) உங்களோடு படிப்பவர்கள், உங்களோடு வேலை செய்கிறவர்கள், அல்லது முன்னாள் நண்பர்கள் உங்களைக் கேலிகிண்டல் செய்யலாம். மாற்கு 10:29, 30-ல் இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை எப்போதும் மனதில் வையுங்கள்: “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எனக்காகவும் நல்ல செய்திக்காகவும் வீட்டையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ அம்மாவையோ அப்பாவையோ பிள்ளைகளையோ வயல்களையோ தியாகம் செய்கிறவன், இந்தக் காலத்தில் துன்புறுத்தல்களோடுகூட, 100 மடங்கு அதிகமாக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் அம்மாக்களையும் பிள்ளைகளையும் வயல்களையும் பெறுவான்; வரப்போகும் காலத்தில் முடிவில்லாத வாழ்வையும் நிச்சயம் பெறுவான்.” அதனால், தொடர்ந்து யெகோவாவிடம் நெருங்கியிருக்கவும், அவருடைய நீதிநெறிகளின்படி வாழவும் கடினமாக முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் ஞானஸ்நானம் எடுக்க விரும்பும்போது, அதை மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளரிடம் சொல்லுங்கள். உங்களுக்கு ஞானஸ்நானம் எடுக்கத் தகுதி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள மூப்பர்கள் உங்களோடு கலந்துபேசுவார்கள்; அடுத்துவரும் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். அதனால், நீங்கள் தனிப்பட்ட படிப்பு படிக்கும்போது இந்தக் கேள்விகளையும் சேர்த்துப் படிக்க ஆரம்பிக்கலாம்.
அப்படிப் படிக்கும்போது, மேற்கோள் காட்டப்பட்டுள்ள வசனங்களை வாசிக்கவும் அவற்றைப் பற்றி யோசித்துப் பார்க்கவும் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் புத்தகத்தில் அல்லது வேறு எங்காவது நீங்கள் குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளலாம். மூப்பர்கள் உங்களோடு கலந்துபேசும்போது நீங்கள் இந்தப் புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொள்ளலாம், உங்கள் குறிப்புகளையும் பயன்படுத்தலாம். ஏதாவது ஒரு கேள்வி உங்களுக்குப் புரியாவிட்டால், உங்களுக்கு பைபிள் படிப்பு நடத்துபவரிடம் அல்லது மூப்பர்களிடம் உதவி கேட்கத் தயங்காதீர்கள்.
மூப்பர்கள் உங்களோடு கலந்துபேசும்போது நீளமான, விலாவாரியான பதில்களைச் சொல்ல வேண்டுமென்று நினைத்துக்கொள்ளாதீர்கள். சொந்த வார்த்தைகளில் எளிமையாகவும் நேரடியாகவும் பதில் சொல்வது சிறந்தது. பொதுவாக, உங்கள் பதிலுக்கு அடிப்படையாக இருக்கும் ஓரிரு பைபிள் வசனங்களையும் சேர்த்துச் சொல்வது பிரயோஜனமாக இருக்கும்.
அடிப்படை பைபிள் போதனைகளைப் பற்றி நீங்கள் இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லை என்று மூப்பர்கள் நினைத்தால், உங்களுக்கு உதவ ஏற்பாடு செய்வார்கள். காலப்போக்கில், வசனங்களில் புரிந்துகொண்ட உண்மைகளைச் சொந்த வார்த்தைகளில் சொல்ல உங்களால் முடியும், ஞானஸ்நானம் எடுக்க தகுதி பெறவும் முடியும்.
[சபை மூப்பர்களின் கவனத்துக்கு: ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்களோடு கலந்துபேசுவது சம்பந்தமான ஆலோசனைகள் பக்கங்கள் 208-212-ல் கொடுக்கப்பட்டுள்ளன.]