ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களுக்கான கேள்விகள்
ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்களோடு கடைசி கலந்தாலோசிப்பு
யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடுகளில்தான் பொதுவாக ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது. ஞானஸ்நானப் பேச்சுக்குப் பிறகு, ஞானஸ்நானம் எடுப்பவர்கள் எழுந்து நின்று இந்த இரண்டு கேள்விகளுக்கும் சத்தமாகப் பதில் சொல்ல வேண்டுமென்று பேச்சாளர் கேட்டுக்கொள்வார்:
1. நீங்கள் உங்கள் பாவங்களை விட்டு மனம் திருந்தி, யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து, மீட்புக்காக இயேசு கிறிஸ்து மூலம் அவர் செய்திருக்கிற ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா?
2. நீங்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகவும் அவருடைய அமைப்பில் ஒருவராகவும் ஆகிறீர்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறீர்களா?
இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் ‘ஆம்’ என்று தெளிவாகப் பதில் சொல்வார்கள். அப்படி அவர்கள் பதில் சொல்வது, மீட்புவிலையில் அவர்கள் விசுவாசம் வைத்திருப்பதையும், நிபந்தனை இல்லாமல் யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருப்பதையும் வெளிப்படையாக ‘அறிவிப்பதை’ குறிக்கும். (ரோ. 10:9, 10) ஞானஸ்நானம் எடுப்பவர்கள் ஜெபம் செய்துவிட்டு இந்தக் கேள்விகளை முன்கூட்டியே சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான், தங்களுடைய சொந்த நம்பிக்கைகளின்படி அவர்களால் பதில் சொல்ல முடியும்.
யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணிப்பதாக ஜெபத்தில் சொல்லிவிட்டீர்களா? அவரை மட்டுமே வணங்கப்போவதாகவும், அவருடைய விருப்பத்தைச் செய்வதற்கே உங்கள் வாழ்க்கையில் முதலிடம் தரப்போவதாகவும் அவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டீர்களா?
முடிந்தவரை சீக்கிரத்தில் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்று இப்போது நீங்கள் தீர்மானமாக இருக்கிறீர்களா?
ஞானஸ்நானம் எடுப்பதற்குப் பொருத்தமான உடை எது? (1 தீ. 2:9, 10; யோவா. 15:19; பிலி. 1:10)
நாம் ‘கடவுள்பக்தியை’ காட்டும் விதத்தில் ‘அடக்கத்தோடும் தெளிந்த புத்தியோடும்’ உடை உடுத்த வேண்டும். அதனால், ஞானஸ்நானம் எடுப்பவர்கள் அடக்கம் இல்லாத நீச்சல் உடைகளையோ ஏதாவது சுலோகன்கள் அல்லது வாசகங்கள் எழுதப்பட்ட உடைகளையோ உடுத்தக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கும் சுத்தமான, நேர்த்தியான, கண்ணியமான உடையை அவர்கள் உடுத்த வேண்டும்.
ஞானஸ்நானம் எடுக்கும்போது ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (லூக். 3:21, 22)
இயேசு ஞானஸ்நானம் எடுத்த விதம், இன்று எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. ஞானஸ்நானம் ஒரு முக்கியமான படி என்பதை இயேசு புரிந்து வைத்திருந்தார்; அதைத் தன்னுடைய மனப்பான்மையிலும் செயலிலும் காட்டினார். அதனால், ஞானஸ்நானம் கொடுக்கப்படும் இடத்தில் கிண்டலடிப்பது, விளையாடுவது, நீச்சலடிப்பது போன்றவை நிகழ்ச்சியின் கண்ணியத்தைக் குறைத்துவிடும். அவற்றை நாம் தவிர்க்க வேண்டும். அதோடு, ஞானஸ்நானம் எடுப்பவர் தனக்கு ஏதோ பெரிய வெற்றி கிடைத்துவிட்டது போல நடந்துகொள்ளக் கூடாது. ஞானஸ்நானம் சந்தோஷமான நிகழ்ச்சிதான்; ஆனால், அந்த சந்தோஷத்தைக் கண்ணியமான விதத்தில் காட்ட வேண்டும்.
சபையோடு தவறாமல் ஒன்றுகூடிவருவது, உங்கள் அர்ப்பணிப்புக்கு ஏற்றபடி நடந்துகொள்ள எப்படி உதவும்?
நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த பிறகும்கூட, தவறாமல் தனிப்பட்ட படிப்பு படிப்பதும் ஊழியத்தில் கலந்துகொள்வதும் ஏன் முக்கியம்?
சபை மூப்பர்களுக்கு அறிவுரைகள்
ஞானஸ்நானம் எடுக்க விரும்புவதாக ஒரு பிரஸ்தாபி சொல்லும்போது, “ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களுக்கான கேள்விகள்” (இந்தப் புத்தகத்தில் பக்கங்கள் 185-207) என்ற பகுதியை நன்றாகப் படிக்கும்படி மூப்பர்கள் அவரிடம் சொல்ல வேண்டும். “ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபிக்கு” (பக்கம் 182-ல் ஆரம்பமாகிறது) என்ற பகுதியையும் படிக்கும்படி அவர்கள் சொல்ல வேண்டும். மூப்பர்களோடு கலந்துபேச அவர் எப்படித் தயாராகலாம் என்று அந்தப் பகுதி விளக்குகிறது. அங்கே சொல்லப்பட்டிருப்பது போல, மூப்பர்களோடு கலந்துபேசும்போது அவர் தன்னுடைய தனிப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தலாம், இந்தப் புத்தகத்தையும் திறந்து வைத்துக்கொள்ளலாம். ஆனால், மூப்பர்கள் அவரைச் சந்திப்பதற்கு முன்பு இன்னொருவர் இந்தக் கேள்விகளை அவரோடு கலந்துபேச வேண்டிய அவசியம் இல்லை.
ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க விரும்பினால் அதை மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளருக்குத் தெரிவிக்க வேண்டும். “ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களுக்கான கேள்விகள்” என்ற பகுதியை அவர் படித்துத் தயாரித்த பிறகு, யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பதாக அவர் ஜெபத்தில் சொல்லிவிட்டாரா என்று மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கேட்பார். அந்த நபர் தன் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தால், “ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களுக்கான கேள்விகள்” என்ற பகுதியை அவரோடு கலந்துபேச இரண்டு மூப்பர்களை மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஏற்பாடு செய்வார். அதிலுள்ள இரண்டு பகுதிகளையும் வெவ்வேறு மூப்பர்கள் கலந்துபேச ஏற்பாடு செய்ய வேண்டும். மூப்பர்கள் அவரோடு கலந்துபேசுவதற்கு, மாநாட்டுத் தேதி அறிவிக்கப்படும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.
பொதுவாக, கேள்விகளின் இரண்டு பகுதிகளையும் தனித்தனியாக சுமார் ஒரு மணிநேரத்துக்குக் கலந்துபேசலாம். தேவைப்பட்டால், இன்னும் அதிக நேரமும் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு பகுதியையும் கலந்துபேச ஆரம்பிக்கும்போதும் அதை முடிக்கும்போதும் ஜெபம் செய்ய வேண்டும். மூப்பர்கள் அந்தக் கேள்விகளை அவசர அவசரமாகக் கேட்கக் கூடாது, பிரஸ்தாபியும் அவசர அவசரமாகப் பதில் சொல்லக் கூடாது. நியமிக்கப்பட்ட மூப்பர்களுக்கு மற்ற வேலைகள் இருந்தாலும், இந்தக் கலந்தாலோசிப்புகளுக்கு முதலிடம் தர வேண்டும்.
இந்தக் கேள்விகளை ஞானஸ்நானம் எடுக்கப்போகும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகக் கலந்துபேச வேண்டும், அவர்கள் எல்லாரிடமும் மொத்தமாகக் கலந்துபேசுவதைத் தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு கேள்விக்கும் பிரஸ்தாபி பதில் சொல்லும்போது, அவர் எந்தளவுக்கு சத்தியத்தைப் புரிந்து வைத்திருக்கிறார் என்று மூப்பர்களால் தெரிந்துகொள்ள முடியும். அதை வைத்து, அவர் ஞானஸ்நானம் எடுக்கத் தயாராக இருக்கிறாரா என்று முடிவு செய்ய முடியும். அதோடு, மூப்பர்கள் இப்படித் தனித்தனியாகக் கேள்விகள் கேட்கும்போது பிரஸ்தாபிகளால் தயக்கம் இல்லாமல் பதில் சொல்ல முடியும். கணவன் மனைவியாக இருந்தால், அவர்கள் இரண்டு பேரிடமும் சேர்ந்து கலந்துபேசலாம்.
மூப்பர்கள் ஒரு சகோதரியோடு இந்தக் கேள்விகளைக் கலந்துபேசும்போது, மற்றவர்களுடைய பார்வையில் படும்படி உட்கார்ந்து அவரிடம் பேச வேண்டும், ஆனால், அவர்கள் பேசுவது மற்றவர்களுக்குக் கேட்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இன்னொருவரையும் கூட்டிக்கொண்டு போகலாம்; ஆனால், கலந்துபேசப்படும் பகுதியைப் பொறுத்து அவர் ஒரு மூப்பராகவோ உதவி ஊழியராகவோ இருக்க வேண்டும். இதைப் பற்றி அடுத்த பாராவில் விளக்கப்பட்டிருக்கிறது.
சில சபைகளில் ஒருசில மூப்பர்கள்தான் இருப்பார்கள். அப்படியென்றால், “பகுதி 1: கிறிஸ்தவ நம்பிக்கைகள்” என்ற பகுதியிலுள்ள கேள்விகளைக் கலந்துபேசுவதற்கு, விவேகமும் பகுத்தறிவும் உள்ள திறமையான ஒரு உதவி ஊழியர் நியமிக்கப்படலாம். ஆனால், “பகுதி 2: கிறிஸ்தவ வாழ்க்கை” என்ற பகுதியை மூப்பர்கள் மட்டும்தான் கலந்துபேச வேண்டும். ஒரு சபையில் தகுதிபெற்ற சகோதரர்கள் போதுமான பேர் இல்லையென்றால், பக்கத்திலுள்ள சபையில் இருக்கும் மூப்பர்களால் உதவி செய்ய முடியுமா என்று தெரிந்துகொள்ள வட்டாரக் கண்காணியைத் தொடர்புகொள்ளலாம்.
வயதுவராத ஒரு பிள்ளை ஞானஸ்நானம் எடுப்பதாக இருந்தால், யெகோவாவின் சாட்சியாக இருக்கும் அதன் பெற்றோரில் ஒருவர் அல்லது இரண்டு பேருமே அந்தக் கலந்தாலோசிப்பின்போது இருக்க வேண்டும். பெற்றோரால் இருக்க முடியாத சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு பகுதியையும் இரண்டு மூப்பர்கள் (அல்லது கலந்துபேசும் பகுதியைப் பொறுத்து ஒரு மூப்பரும் ஒரு உதவி ஊழியரும்) கலந்துபேச வேண்டும்.
ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர் பைபிளின் அடிப்படைப் போதனைகளை ஓரளவு நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறாரா என்பதை மூப்பர்கள் உறுதிசெய்வார்கள். அதோடு, அவர் சத்தியத்தை உயர்வாக மதிக்கிறாரா, யெகோவாவின் அமைப்புக்கு மதிப்புமரியாதை காட்டுகிறாரா என்றெல்லாம் அவர்கள் உறுதிசெய்வார்கள். அவருக்கு பைபிளின் அடிப்படைப் போதனைகள் புரியவில்லை என்றால், இன்னொரு சமயம் ஞானஸ்நானம் எடுக்கத் தகுதி பெறுவதற்குத் தேவையான உதவியை அளிக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்வார்கள். சிலருக்கு ஊழியத்தின் மேல் இன்னும் அதிக மதிப்பை வளர்த்துக்கொள்ளவோ, அமைப்பின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொள்ளவோ காலம் தேவைப்படலாம். ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தயாராகிவிட்டாரா என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள, ஒவ்வொரு கேள்விக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை மூப்பர்கள்தான் விவேகத்தோடு முடிவு செய்ய வேண்டும். சில கேள்விகளுக்கு அதிக நேரம் தேவைப்படலாம், மற்ற கேள்விகளுக்கு குறைவான நேரமே போதுமானதாக இருக்கலாம். ஆனால், எல்லா கேள்விகளையுமே கட்டாயம் கேட்க வேண்டும்.
இந்தக் கேள்விகளைக் கலந்துபேச நியமிக்கப்படும் மூப்பர்கள், இரண்டாவது பகுதி கலந்தாலோசிக்கப்பட்ட பிறகு ஒன்றுகூடி வந்து, அந்த நபர் ஞானஸ்நானத்துக்குத் தயாரா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள். அந்தந்த நபருடைய பின்னணி, திறமை, சூழ்நிலைகள் ஆகியவற்றை மூப்பர்கள் கருத்தில் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அவருடைய முழு இதயமும் யெகோவாவின் பக்கம் இருக்க வேண்டும்; அதோடு, பைபிளின் அடிப்படைப் போதனைகளை அவர் புரிந்திருக்க வேண்டும். மூப்பர்களுடைய அன்பான உதவியோடு, ஞானஸ்நானம் எடுப்பவர்கள் நல்ல செய்தியை அறிவிக்கும் முக்கியமான பொறுப்பைச் செய்யத் தயாராக இருப்பார்கள்.
அதன் பிறகு, கேள்விகளைக் கேட்பதற்கு நியமிக்கப்பட்ட மூப்பர்களில் ஒருவரோ இரண்டு பேரோ, அந்தப் பிரஸ்தாபியைச் சந்தித்து, அவர் ஞானஸ்நானம் எடுக்கத் தகுதி பெறுகிறாரா இல்லையா என்று சொல்ல வேண்டும். அவர் தகுதி பெறுகிறார் என்றால், “ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்களோடு கடைசி கலந்தாலோசிப்பு” (பக்கங்கள் 206-207) என்ற பகுதியை அவரோடு கலந்துபேச வேண்டும். இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை அவர் இன்னும் படித்து முடிக்கவில்லையென்றால், ஞானஸ்நானத்துக்குப் பிறகு தொடர்ந்து படிக்கும்படி மூப்பர்கள் அவரிடம் சொல்ல வேண்டும். அவர் ஞானஸ்நானம் எடுக்கும் தேதி அவருடைய பெயரில் இருக்கும் பிரஸ்தாபி அட்டையில் பதிவு செய்யப்படும் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். பிரஸ்தாபியிடமிருந்து மூப்பர்கள் வாங்கும் அப்படிப்பட்ட தனிப்பட்ட தகவல்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய மதம் சம்பந்தப்பட்ட உலகளாவிய வேலைகளைக் கவனித்துக்கொள்ள அமைப்புக்கு உதவுகின்றன; அதோடு, ஆன்மீக விஷயங்களில் ஈடுபடவும் ஆன்மீக உதவிகளைப் பெறவும் பிரஸ்தாபிகளுக்கு உதவுகின்றன. தனிப்பட்ட தகவல்கள், jw.org வெப்சைட்டில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய தகவல் பாதுகாப்பு கொள்கையின்படி பயன்படுத்தப்படும் என்பதை மூப்பர்கள் புதிய பிரஸ்தாபிகளுக்கு ஞாபகப்படுத்தலாம். பொதுவாக, இந்தக் கலந்தாலோசிப்பு 10 நிமிஷத்துக்கோ அதற்கும் குறைவாகவோ மட்டும்தான் இருக்க வேண்டும்.
அந்தப் பிரஸ்தாபி ஞானஸ்நானம் எடுத்து ஒரு வருஷம் ஆன பிறகு, இரண்டு மூப்பர்கள் அவரைச் சந்தித்து தேவையான உற்சாகத்தையும் ஆலோசனைகளையும் தர வேண்டும். அவர்களில் ஒருவர் அந்த நபருடைய தொகுதிக் கண்காணியாக இருக்க வேண்டும். வயதுவராத பிள்ளையிடம் பேசுவதாக இருந்தால், சாட்சியாக இருக்கும் பெற்றோரில் ஒருவர் அல்லது இரண்டு பேருமே அந்தப் பிள்ளையோடு இருக்க வேண்டும். ரொம்ப அன்பாகவும் உற்சாகம் தரும் விதத்திலும் மூப்பர்கள் பேச வேண்டும். அவர் செய்திருக்கும் ஆன்மீக முன்னேற்றத்தைப் பற்றிக் கலந்துபேச வேண்டும். அதோடு, தனிப்பட்ட படிப்பு, தினசரி பைபிள் வாசிப்பு, வாராந்தர குடும்ப வழிபாடு, கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வது, ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வது போன்ற விஷயங்களில் அவர் தொடர்ந்து முன்னேற்றம் செய்ய நடைமுறையான ஆலோசனைகள் தர வேண்டும். (எபே. 5:15, 16) இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தை அவர் இன்னும் படித்து முடிக்கவில்லையென்றால், அவருக்கு உதவி செய்ய யாராவது ஒருவரை மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மூப்பர்கள் அவரை அன்போடு பாராட்ட தயங்கவே கூடாது. பொதுவாக, ஓரிரு விஷயங்களில் ஆலோசனைகளும் அறிவுரைகளும் தந்தால் போதும்.