அதிகாரம் 10
தேவதூதர்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
1. நாம் ஏன் தேவதூதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்?
தேவதூதர்களை ‘கடவுளுடைய மகன்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (யோபு 38:7, அடிக்குறிப்பு) அவர்கள் யெகோவாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தன்னுடைய குடும்பத்தைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். தேவதூதர்கள் என்ன செய்கிறார்கள்? கடந்த காலத்தில் அவர்கள் எப்படி மனிதர்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்? இப்போது அவர்களால் நமக்கு உதவி செய்ய முடியுமா?—பின்குறிப்பு 8-ஐப் பாருங்கள்.
2. தேவதூதர்களைப் படைத்தது யார்? எத்தனை தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள்?
2 தேவதூதர்களைப் படைத்தது யார்? இயேசுவைப் படைத்த பிறகு யெகோவா தேவதூதர்களையும் படைத்தார். எப்படிச் சொல்கிறோம்? “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை” ஆகிய எல்லாவற்றையுமே இயேசுவின் மூலம் அவர் படைத்ததாக கொலோசெயர் 1:16 சொல்கிறது. எத்தனை தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள்? கோடானுகோடி தேவதூதர்கள் படைக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 103:20; வெளிப்படுத்துதல் 5:11.
3. தேவதூதர்களைப் பற்றி யோபு 38:4-7 என்ன சொல்கிறது?
3 யெகோவா இந்தப் பூமியைப் படைப்பதற்கு முன்பே தேவதூதர்களைப் படைத்ததாகவும் பைபிள் சொல்கிறது. அவர்கள் முதன்முதலாக இந்தப் பூமியைப் பார்த்தபோது மிகவும் சந்தோஷப்பட்டார்கள் என்று யோபு புத்தகம் சொல்கிறது. அவர்கள் ஒரே குடும்பமாக ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தார்கள்.—யோபு 38:4-7.
தேவதூதர்கள் கடவுளுடைய மக்களுக்கு உதவி செய்கிறார்கள்
4. தேவதூதர்கள் மனிதர்கள்மேல் எப்படி அக்கறை காட்டுகிறார்கள்?
4 தேவதூதர்கள் எப்போதுமே மனிதர்கள்மேல் அக்கறை காட்டியிருக்கிறார்கள். இந்தப் பூமிக்காகவும் மனிதர்களுக்காகவும் யெகோவா செய்ய நினைக்கிற காரியங்களிலும் அவர்கள் எப்போதுமே அக்கறை காட்டியிருக்கிறார்கள். (நீதிமொழிகள் 8:30, 31; 1 பேதுரு 1:11, 12) ஆதாமும் ஏவாளும் யெகோவாவின் பேச்சை மீறியபோது தேவதூதர்களுக்கு மிகவும் வேதனையாக இருந்திருக்கும். இன்று பெரும்பாலான மனிதர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாததைப் பார்க்கும்போது அவர்களுக்கு அதைவிட அதிக வேதனையாகத்தான் இருக்கும். ஒருவர் மனம் திருந்தி கடவுளிடம் வரும்போது தேவதூதர்கள் சந்தோஷப்படுகிறார்கள். (லூக்கா 15:10) அவர்கள் கடவுளுக்குச் சேவை செய்கிறவர்கள்மேல் அதிக அக்கறை காட்டுகிறார்கள். பூமியிலுள்ள தன் ஊழியர்களுக்கு உதவி செய்யவும் அவர்களுக்குப் பாதுகாப்பு தரவும் யெகோவா தேவதூதர்களைப் பயன்படுத்துகிறார். (எபிரெயர் 1:7, 14) இதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
5. தேவதூதர்கள் எப்படிக் கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவியிருக்கிறார்கள்?
5 சோதோம், கொமோரா நகரங்களை அழிப்பதற்கு முன்பு, லோத்துவையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக யெகோவா இரண்டு தேவதூதர்களை அனுப்பினார். (ஆதியாகமம் 19:15, 16) நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு, தானியேல் தீர்க்கதரிசி சிங்கக் குகையில் தள்ளப்பட்டபோது, ‘கடவுள் அவருடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயை அடைத்தார்.’ அதனால், தானியேலுக்கு ஒன்றுமே ஆகவில்லை. (தானியேல் 6:22) அப்போஸ்தலன் பேதுரு சிறையில் தள்ளப்பட்டிருந்தபோதும் யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பி அவரை விடுதலை செய்தார். (அப்போஸ்தலர் 12:6-11) இயேசு பூமியில் இருந்தபோது அவருக்கும் தேவதூதர்கள் உதவி செய்தார்கள். உதாரணத்துக்கு, அவர் ஞானஸ்நானம் எடுத்த பிறகு, “தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.” (மாற்கு 1:13) இயேசு கொலை செய்யப்படுவதற்கு முன்புகூட ஒரு தேவதூதர் “அவரைப் பலப்படுத்தினார்.”—லூக்கா 22:43.
6. (அ) தேவதூதர்கள் இன்று கடவுளுடைய மக்களுக்கு உதவி செய்கிறார்கள் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) இப்போது என்ன கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்வோம்?
6 நம்முடைய காலத்தில் தேவதூதர்கள் மனிதர்கள்முன் தோன்றுவது கிடையாது. ஆனாலும், கடவுள் தன்னுடைய ஊழியர்களுக்கு உதவி செய்ய இன்னமும் தேவதூதர்களைப் பயன்படுத்துகிறார். “யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களை அவருடைய தூதர் சூழ்ந்து நின்று, காப்பாற்றுகிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 34:7) நமக்கு ஏன் பாதுகாப்பு தேவை? ஏனென்றால், பலம்படைத்த எதிரிகள் நமக்குக் கெடுதல் செய்ய நினைக்கிறார்கள். அவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? அவர்கள் என்ன விதங்களில் நமக்குக் கெடுதல் செய்ய முயற்சி செய்கிறார்கள்? இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு, ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்ட கொஞ்சக் காலத்துக்குப் பிறகு என்ன நடந்ததென்று பார்க்கலாம்.
நம்மால் பார்க்க முடியாத எதிரிகள்
7. சாத்தானுடைய தந்திரங்களை நம்பி மனிதர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?
7 ஒரு தேவதூதன் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதைப் பற்றியும், அவன் மற்றவர்களை ஆளுவதற்கு ஆசைப்பட்டதைப் பற்றியும் அதிகாரம் 3-ல் நாம் படித்தோம். அவனைப் பிசாசு என்றும் சாத்தான் என்றும் பைபிள் அழைக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9) மற்றவர்களும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக வேண்டுமென்று அவன் விரும்பினான். அதனால் ஏவாளைத் தந்திரமாக ஏமாற்றினான். அதுமுதல் பெரும்பாலான மனிதர்களைத் தந்திரமாக ஏமாற்றிவந்திருக்கிறான். ஆனால் ஆபேல், ஏனோக்கு, நோவா போன்ற சிலர் யெகோவாவுக்கு உண்மையோடு இருந்திருக்கிறார்கள்.—எபிரெயர் 11:4, 5, 7.
8. (அ) சில தேவதூதர்கள் எப்படிப் பேய்களாக ஆனார்கள்? (ஆ) அழிவிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் என்ன செய்தார்கள்?
8 நோவாவின் காலத்தில், சில தேவதூதர்கள் மனித உருவத்தில் பூமிக்கு வந்து, இங்கிருந்த பெண்களை மனைவியாக்கிக்கொண்டார்கள். (ஆதியாகமம் 6:2-ஐ வாசியுங்கள்.) ஆனால், அது கடவுளுக்கு விரோதமான மிகப் பெரிய குற்றம். (யூதா 6) அந்தக் கெட்ட தேவதூதர்களைப் போலவே, அந்தக் காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான மனிதர்கள் சீர்கெட்டுப் போயிருந்தார்கள், வன்முறையில் இறங்கினார்கள். அதனால், யெகோவா பூமியில் வெள்ளத்தைக் கொண்டுவந்து கெட்டவர்களை அழித்தார். ஆனால், தன்னுடைய ஊழியர்களைக் காப்பாற்றினார். (ஆதியாகமம் 7:17, 23) அந்த அழிவிலிருந்து தப்பிப்பதற்காக அந்தக் கெட்ட தேவதூதர்கள் பரலோகத்துக்குத் திரும்பிப்போனார்கள். அவர்களைத்தான் பேய்கள் என்று பைபிள் சொல்கிறது. அவர்கள் சாத்தானோடு கூட்டுச்சேர்ந்துகொண்டார்கள்; அவன் அவர்களுடைய தலைவனாக ஆனான்.—மத்தேயு 9:34.
9. (அ) பரலோகத்துக்குத் திரும்பிப்போன கெட்ட தேவதூதர்களுக்கு என்ன நடந்தது? (ஆ) அடுத்ததாக நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
9 அந்தக் கெட்ட தேவதூதர்கள் யெகோவாவின் பேச்சை மீறியதால், அவர் அவர்களை மறுபடியும் தன் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. (2 பேதுரு 2:4) அவர்களால் இனிமேலும் மனித உருவெடுக்க முடியாது. ஆனாலும், அவர்கள் இன்னமும் ‘உலகம் முழுவதையும் ஏமாற்றிவருகிறார்கள்.’ (வெளிப்படுத்துதல் 12:9; 1 யோவான் 5:19) அவர்களால் எப்படி இத்தனை பேரைத் தந்திரமாக ஏமாற்ற முடிகிறது என்று இப்போது பார்க்கலாம்.—2 கொரிந்தியர் 2:11-ஐ வாசியுங்கள்.
பேய்கள் மக்களை ஏமாற்றும் விதங்கள்
10. பேய்கள் எப்படி மக்களை ஏமாற்றுகின்றன?
10 பேய்கள் பல விதங்களில் மக்களை ஏமாற்றுகின்றன. மக்கள் நேரடியாகவோ சூனியக்காரர்கள் போன்ற மற்ற மனிதர்கள் மூலமாகவோ பேய்களோடு தொடர்புகொள்கிறார்கள். இதுதான் ஆவியுலகத் தொடர்பு என்று அழைக்கப்படுகிறது. ஆனால், பேய்களோடு நாம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று பைபிள் கட்டளை கொடுக்கிறது. (கலாத்தியர் 5:19-21) ஏன்? ஏனென்றால், மிருகங்களைப் பிடிப்பதற்காக ஒரு வேடன் எப்படித் தந்திரமான முறைகளைப் பயன்படுத்துகிறானோ அப்படித்தான் பேய்களும் மனிதர்களை அவற்றின் வலையில் சிக்க வைப்பதற்காகத் தந்திரமான முறைகளைப் பயன்படுத்துகின்றன.—பின்குறிப்பு 26-ஐப் பாருங்கள்.
11. குறிசொல்லுதல் என்றால் என்ன, நாம் ஏன் அதைத் தவிர்க்க வேண்டும்?
11 பேய்கள் பயன்படுத்தும் ஒரு தந்திரம் குறிசொல்லுதல். அமானுஷ்ய சக்திகளை, அதாவது மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்திகளை, பயன்படுத்தி எதிர்காலத்தைப் பற்றியோ தெரியாத ஒன்றைப் பற்றியோ சொல்வதுதான் குறிசொல்லுதல். நட்சத்திரங்களைப் பார்த்தோ கைரேகையைப் பார்த்தோ மற்ற விதங்களிலோ சொல்லப்படும் ஜோசியங்கள் இதில் அடங்கும். இவற்றில் ஆபத்தே இல்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், இவை மிகவும் ஆபத்தானவை. உதாரணத்துக்கு, குறிசொல்கிறவர்கள் பேய்களின் உதவியோடுதான் குறிசொல்கிறார்கள் என்று பைபிள் காட்டுகிறது. ஒரு பெண், ‘ஒரு பேயின்’ உதவியோடு குறிசொல்லி வந்ததாக அப்போஸ்தலர் 16:16-18 சொல்கிறது. அப்போஸ்தலன் பவுல் அந்தப் பேயை விரட்டிய பிறகு, அந்தப் பெண்ணால் குறிசொல்ல முடியவில்லை.
12. (அ) இறந்தவர்களோடு தொடர்புகொள்ள முயற்சி செய்வது ஏன் ஆபத்தானது? (ஆ) பேய்களோடு சம்பந்தப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களில் கடவுளுடைய ஊழியர்கள் ஏன் ஒருபோதும் கலந்துகொள்வதில்லை?
12 மக்களை ஏமாற்றுவதற்குப் பேய்கள் இன்னொரு தந்திரத்தையும் பயன்படுத்துகின்றன. இறந்தவர்கள் உண்மையில் வேறு எங்கோ உயிர்வாழ்கிறார்கள்... நம்மால் அவர்களோடு பேச முடியும்... அவர்கள் நம்மோடு தொடர்புகொள்ள முடியும்... அல்லது நமக்குக் கெடுதல் செய்ய முடியும்... என்றெல்லாம் நம்மை நம்பவைக்க முயற்சி செய்கின்றன. உதாரணத்துக்கு, ஒருவருடைய நண்பரோ குடும்பத்தாரோ இறந்துவிட்டால், ஆவிகளோடு பேசும் சக்தி இருப்பதாகச் சொல்கிற ஆட்களிடம் அவர் ஒருவேளை போகலாம். இறந்துபோன அந்த நபரைப் பற்றி ஏதாவது சுவாரஸ்யமான விஷயத்தை அந்த ஆட்கள் சொல்லலாம், இறந்தவரின் குரலில்கூட பேசலாம். (1 சாமுவேல் 28:3-19) இறந்தவர்கள் வேறு எங்கோ உயிர்வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கையில்தான் இன்று அவர்களுக்காக நிறைய சடங்கு சம்பிரதாயங்கள் பின்பற்றப்படுகின்றன. உதாரணத்துக்கு, இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன, வருஷாவருஷம் திதி கொடுக்கப்படுகிறது, பலி செலுத்தப்படுகிறது, அல்லது விதவைக்கான சடங்குகள் செய்யப்படுகின்றன. இவற்றில் கலந்துகொள்ள கிறிஸ்தவர்கள் மறுக்கும்போது, அவர்களுடைய குடும்பத்தாரோ ஊர் மக்களோ அவர்களைப் பழித்துப் பேசலாம், கேவலப்படுத்தலாம், அல்லது ஒதுக்கி வைத்துவிடலாம். ஆனால், இறந்தவர்கள் எங்குமே உயிர்வாழ்வதில்லை என்பது கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். இறந்தவர்களோடு நம்மால் பேசவே முடியாது, அவர்களால் நமக்கு எந்தக் கெடுதலும் செய்ய முடியாது. (சங்கீதம் 115:17) அதனால், இறந்தவர்களோடு அல்லது பேய்களோடு தொடர்புகொள்ள ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். பேய்களோடு சம்பந்தப்பட்ட சடங்கு சம்பிரதாயங்களில் ஒருபோதும் கலந்துகொள்ளாதீர்கள்.—உபாகமம் 18:10, 11-ஐ வாசியுங்கள்; ஏசாயா 8:19.
13. பேய்களை நினைத்துப் பயந்து நடுங்கிக்கொண்டிருந்த பலரால் என்ன செய்ய முடிந்திருக்கிறது?
13 பேய்கள் மக்களை ஏமாற்றுவதோடு அவர்களைப் பயமுறுத்தவும் செய்கின்றன. கடவுள் சீக்கிரத்தில் சாத்தானையும் அவனோடு சேர்ந்த பேய்களையும் இந்தப் பூமியிலிருந்து அழிக்கப்போகிறார். இனி “கொஞ்சக் காலம்தான் இருக்கிறது” என்று தெரிந்திருப்பதால், அவை எப்போதையும்விட இப்போது அதிக வெறித்தனமாகவும் கொடூரமாகவும் நடந்துகொள்கின்றன. (வெளிப்படுத்துதல் 12:12, 17) ஆனாலும், பேய்களை நினைத்துப் பயந்து நடுங்கிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆட்களால் அந்தப் பயத்திலிருந்து விடுபட முடிந்திருக்கிறது. எப்படி?
எதிர்த்து நில்லுங்கள், விடுபடுங்கள்
14. முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களைப் போலவே நாமும் எப்படிப் பேய்களின் பிடியிலிருந்து விடுபடலாம்?
14 பேய்களை எதிர்த்து நிற்கவும், அவற்றின் பிடியிலிருந்து விடுபடவும் என்ன செய்யலாம் என்று பைபிள் சொல்கிறது. எபேசு நகரத்திலிருந்த சிலருடைய உதாரணத்தை அது சொல்கிறது. அவர்கள் பைபிளிலுள்ள சத்தியங்களைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு பேய்களோடு தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்களால் எப்படிப் பேய்களுடைய பிடியிலிருந்து விடுபட முடிந்தது? “மாயமந்திரங்கள் செய்துவந்த ஏராளமான ஆட்கள் தங்களுடைய புத்தகங்களை மொத்தமாகக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்னால் தீ வைத்துக் கொளுத்தினார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 19:19) அவர்கள் கிறிஸ்தவர்களாக மாற விரும்பியதால், தங்களிடம் இருந்த எல்லா மாயமந்திர புத்தகங்களையும் கொளுத்திவிட்டார்கள். இன்றும், யெகோவாவை வணங்க விரும்புகிற ஒவ்வொருவரும் பேய்களோடு சம்பந்தப்பட்ட எல்லா பொருள்களையும் ஒழித்துக்கட்ட வேண்டும். பேய்கள், மாயமந்திரப் பழக்கங்கள், அமானுஷ்ய சக்திகள் போன்றவற்றை ஆபத்தில்லாததாக அல்லது சுவாரஸ்யமானதாகக் காட்டுகிற புத்தகங்களையும் பத்திரிகைகளையும் ஜாதகங்களையும் சினிமா படங்களையும் பாடல்களையும் விளையாட்டுகளையும் போஸ்டர்களையும் நாம் ஒழித்துக்கட்ட வேண்டும். பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் தாயத்துகளையும் மந்திரக் கயிறுகளையும்கூட நாம் ஒழித்துக்கட்ட வேண்டும்.—1 கொரிந்தியர் 10:21.
15. சாத்தானையும் அவனோடு சேர்ந்த பேய்களையும் எதிர்த்து நிற்க வேறு எதையும் நாம் செய்ய வேண்டும்?
15 எபேசு நகரத்தில் இருந்தவர்கள் மாயமந்திர புத்தகங்களைக் கொளுத்தி சில வருஷங்களான பிறகும்கூட, அவர்கள் ‘பொல்லாத தூதர் கூட்டத்தோடு போராட’ வேண்டியிருந்ததாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 6:12) அப்படியென்றால், அவர்கள் தங்களுடைய புத்தகங்களைக் கொளுத்திய பிறகும்கூட, பேய்கள் அவர்களுக்குத் தொல்லை கொடுக்க முயற்சி செய்துகொண்டே இருந்தன. அதனால், அவர்கள் வேறு எதையும் செய்ய வேண்டியிருந்தது? “பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம் அணைப்பதற்காக, விசுவாசத்தைப் பெரிய கேடயமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று பவுல் அவர்களிடம் சொன்னார். (எபேசியர் 6:16) ஒரு கேடயம் எப்படி ஒரு போர்வீரனைப் பாதுகாக்குமோ அப்படித்தான் நம்முடைய விசுவாசம் நம்மைப் பாதுகாக்கும். யெகோவா நம்மைக் காப்பாற்றுவார் என்பதில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால், சாத்தானையும் அவனோடு சேர்ந்த பேய்களையும் நம்மால் எதிர்த்து நிற்க முடியும்.—மத்தேயு 17:20.
16. யெகோவாவின் மேல் உள்ள நம் விசுவாசத்தை எப்படி இன்னும் பலமாக்கலாம்?
16 யெகோவாமேல் உள்ள நம் விசுவாசத்தை எப்படிப் பலமாக்கலாம்? நாம் தினமும் பைபிளைப் படிக்க வேண்டும், பாதுகாப்புக்காக அவரையே சார்ந்திருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். யெகோவாமேல் நாம் உறுதியான நம்பிக்கை வைத்தால், சாத்தானோ பேய்களோ நமக்கு எந்தக் கெடுதலும் செய்ய முடியாது.—1 யோவான் 5:5.
17. பேய்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேறு எதையும் நாம் செய்ய வேண்டும்?
17 எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்கள் வேறு எதையும் செய்ய வேண்டியிருந்தது? ஆவியுலகத் தொடர்பில் ஊறிப்போயிருந்த ஒரு நகரத்தில் அவர்கள் வாழ்ந்துவந்ததால், ‘எல்லா சந்தர்ப்பங்களிலும் ஜெபங்களை ஏறெடுங்கள்’ என்று பவுல் அவர்களிடம் சொன்னார். (எபேசியர் 6:18) பாதுகாப்புக்காக அவர்கள் எல்லா சமயங்களிலும் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டியிருந்தது. நாமும் ஆவியுலகத் தொடர்பில் ஊறிப்போயிருக்கும் உலகத்தில் வாழ்ந்துவருகிறோம். அதனால், நாமும் பாதுகாப்புக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். அதுவும் அவருடைய பெயரைச் சொல்லி ஜெபம் செய்ய வேண்டும். (நீதிமொழிகள் 18:10-ஐ வாசியுங்கள்.) சாத்தானிடமிருந்து காப்பாற்றச் சொல்லி நாம் யெகோவாவிடம் கேட்டுக்கொண்டே இருந்தால், அவர் கண்டிப்பாக நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுப்பார்.—சங்கீதம் 145:19; மத்தேயு 6:13.
18, 19. (அ) சாத்தானோடும் பேய்களோடும் நமக்கு இருக்கும் போராட்டத்தில் நம்மால் எப்படி ஜெயிக்க முடியும்? (ஆ) எந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த அதிகாரத்தில் தெரிந்துகொள்வோம்?
18 ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் நாம் விட்டொழித்து, பாதுகாப்புக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தால், சாத்தானையும் அவனோடு சேர்ந்த பேய்களையும் நம்மால் எதிர்த்து நிற்க முடியும். அவர்களை நினைத்து நாம் பயப்பட வேண்டியிருக்காது. (யாக்கோபு 4:7, 8-ஐ வாசியுங்கள்.) பேய்களைவிட யெகோவாவுக்குத்தான் மிக அதிகமான சக்தி இருக்கிறது. அவர் நோவாவின் நாட்களில் பேய்களைத் தண்டித்தார், எதிர்காலத்தில் பேய்களை ஒரேயடியாக அழிக்கப்போகிறார். (யூதா 6) நாம் தனியாகப் போராட வேண்டியதில்லை என்பதை ஞாபகம் வையுங்கள். நம்மைப் பாதுகாக்க யெகோவா தன்னுடைய தூதர்களைப் பயன்படுத்துகிறார். (2 ராஜாக்கள் 6:15-17) யெகோவாவுடைய உதவியுடன், சாத்தானோடும் பேய்களோடும் நமக்கு இருக்கும் போராட்டத்தில் நம்மால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும்.—1 பேதுரு 5:6, 7; 2 பேதுரு 2:9.
19 மனிதர்கள் படும் வேதனைகளுக்கெல்லாம் சாத்தானும் அவனோடு சேர்ந்த பேய்களும் முக்கியக் காரணமாக இருந்தாலும், கடவுள் ஏன் அவர்களை இன்னும் அழிக்காமல் விட்டுவைத்திருக்கிறார்? இந்தக் கேள்விக்கான பதிலை நாம் அடுத்த அதிகாரத்தில் தெரிந்துகொள்வோம்.