பின்குறிப்புகள்
1 யெகோவா
யெகோவா என்பது கடவுளுடைய பெயர். அதன் அர்த்தம், “ஆகும்படி செய்கிறவர்.” யெகோவா சர்வவல்லமையுள்ள கடவுள். அவர்தான் எல்லாவற்றையும் படைத்தவர். எதைச் செய்ய நினைத்தாலும் அதைச் செய்து முடிக்க அவருக்கு சக்தி இருக்கிறது.
எபிரெய மொழியில், கடவுளுடைய பெயர் நான்கு எழுத்துக்களால் எழுதப்பட்டது. தமிழில் அந்த எழுத்துக்கள் ய்ஹ்வ்ஹ். எபிரெய மூலப்பிரதியில் கடவுளுடைய பெயர் கிட்டத்தட்ட 7,000 தடவை இருக்கிறது. உலகெங்கும் உள்ள மக்கள், இந்த நான்கு எழுத்துக்களை வெவ்வேறு விதங்களில் உச்சரிக்கிறார்கள். அவரவர் மொழியில் பொதுவாக இருக்கும் உச்சரிப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
2 பைபிள் “கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால்” எழுதப்பட்டிருக்கிறது
கடவுள்தான் பைபிளின் நூலாசிரியர், ஆனால் அதை எழுதுவதற்கு அவர் மனிதர்களைப் பயன்படுத்தினார். உதாரணத்துக்கு, ஒரு மேனேஜர் சொல்லச் சொல்ல அவருடைய செக்ரெட்டரி ஒரு கடிதம் எழுதலாம். அதேபோல், கடவுள் மனிதர்களுக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்து, தன்னுடைய எண்ணங்களை பைபிளில் எழுத வைத்தார். கடவுளுடைய சக்தி அவர்களுக்குப் பல விதங்களில் உதவியது. உதாரணத்துக்கு, என்ன எழுத வேண்டும் என்பதைத் தரிசனங்கள் அல்லது கனவுகள் மூலம் அவர்களுக்கு வெளிப்படுத்தியது.
3 நியமங்கள்
நியமம் என்பது ஒரு அடிப்படை உண்மையைக் கற்றுக்கொடுக்கும் பைபிள் போதனை. உதாரணத்துக்கு, “கெட்ட சகவாசம் நல்ல பழக்கவழக்கங்களை கெடுத்துவிடும்” என்ற நியமம், நாம் யாரோடு பழகுகிறோம் என்பதைப் பொறுத்துதான் நம்முடைய பழக்கவழக்கங்கள் இருக்கும் என்ற உண்மையைக் கற்றுக்கொடுக்கிறது. (1 கொரிந்தியர் 15:33) அதேபோல், “ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்” என்ற நியமம், நாம் என்ன செய்தாலும் அதற்கான விளைவுகளைச் சந்தித்தே தீருவோம் என்ற உண்மையைக் கற்றுக்கொடுக்கிறது.—கலாத்தியர் 6:7.
4 தீர்க்கதரிசனம்
தீர்க்கதரிசனம் என்றால், கடவுள் கொடுக்கும் ஒரு செய்தி. இதன் மூலம் கடவுள் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தலாம், ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்கலாம், ஒரு கட்டளையைக் கொடுக்கலாம், அல்லது ஒரு நியாயத்தீர்ப்பைச் சொல்லலாம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கடவுள் சொல்லும் செய்தியும் தீர்க்கதரிசனம்தான். பைபிளில் உள்ள நிறைய தீர்க்கதரிசனங்கள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டன.
5 மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்
மேசியாவைப் பற்றி பைபிளில் சொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசனங்களையும் இயேசுதான் நிறைவேற்றினார். “மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
▸ அதி. 2, பாரா 17, அடிக்குறிப்பு
6 யெகோவா பூமியைப் படைத்ததற்கான காரணம்
இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக இருக்க வேண்டும் என்றும், தன்னை நேசிக்கும் மனிதர்கள் அதில் வாழ வேண்டும் என்றும் யெகோவா விரும்பினார். அதற்காகத்தான் அவர் இந்தப் பூமியைப் படைத்தார். அவருடைய விருப்பம் இன்னும் மாறவில்லை. சீக்கிரத்தில், அவர் கெட்டவர்களை அழித்துவிட்டு, தன்னுடைய மக்களுக்கு முடிவில்லாத வாழ்வைக் கொடுப்பார்.
7 பிசாசாகிய சாத்தான்
சாத்தான் ஒரு தேவதூதன். இவன்தான் முதன்முதலாகக் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போனான். சாத்தான் என்ற பெயரின் அர்த்தம் “எதிரி.” யெகோவாவுக்கு எதிராகச் செயல்படுவதால் அவன் இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறான். அவன் பிசாசு என்றுகூட அழைக்கப்படுகிறான். “இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவன்” என்பதுதான் இதன் அர்த்தம். அவன் கடவுளைப் பற்றிப் பொய் சொல்வதாலும் மக்களை ஏமாற்றுவதாலும் இந்தப் பெயரால் அழைக்கப்படுகிறான்.
8 தேவதூதர்கள்
பூமியைப் படைப்பதற்கு ரொம்பக் காலத்துக்கு முன்பே யெகோவா பரலோகத்தில் கோடானுகோடி தேவதூதர்களைப் படைத்தார். (தானியேல் 7:10) அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயரும், ஒவ்வொரு சுபாவமும் இருக்கிறது. கடவுளுக்கு உண்மையாக இருக்கும் தேவதூதர்கள் மனத்தாழ்மை காட்டுகிறார்கள்; அதனால்தான், மனிதர்கள் அவர்களை வணங்கினால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தேவதூதர்களுக்கு வித்தியாசப்பட்ட ஸ்தானங்களும் வேலைகளும் கொடுக்கப்படுகின்றன. அவற்றில் சில: யெகோவாவின் சிம்மாசனத்துக்கு முன்பாகச் சேவை செய்வது, அவருடைய செய்திகளைச் சொல்வது, பூமியிலுள்ள அவருடைய ஊழியர்களைப் பாதுகாத்து வழிநடத்துவது, அவருடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவது, பிரசங்க வேலையை ஆதரிப்பது. (சங்கீதம் 34:7; வெளிப்படுத்துதல் 14:6; 22:8, 9) எதிர்காலத்தில், அர்மகெதோனில் அவர்கள் இயேசுவோடு சேர்ந்து போர் செய்வார்கள்.—வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:14, 15.
9 பாவம்
பாவம் என்பது, யெகோவாவுக்கோ அவருடைய விருப்பத்துக்கோ விரோதமாக இருக்கும் எண்ணம், செயல், அல்லது உணர்ச்சி. பாவம், கடவுளோடு நமக்கு இருக்கும் பந்தத்தைப் பாதிக்கிறது. அதனால், கடவுள் நமக்குச் சட்டங்களையும் நியமங்களையும் கொடுத்திருக்கிறார். நாம் வேண்டுமென்றே பாவம் செய்யாமல் இருக்க அவை நமக்கு உதவுகின்றன. ஆரம்பத்தில் யெகோவா எல்லாவற்றையுமே பரிபூரணமாகப் படைத்தார். ஆனால், ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். அவர்கள் பாவம் செய்ததால் பரிபூரண வாழ்க்கையை இழந்தார்கள். பிறகு, வயதாகி செத்துப்போனார்கள். ஆதாமிடமிருந்து நமக்கும் பாவம் வந்திருப்பதால் நாமும் வயதாகி சாகிறோம்.
10 அர்மகெதோன்
அர்மகெதோன் என்பது கடவுளுடைய போர். அந்தப் போரில் சாத்தானுடைய உலகத்தையும் எல்லா அக்கிரமத்தையும் அவர் ஒழித்துக்கட்டுவார்.
11 கடவுளுடைய அரசாங்கம்
கடவுளுடைய அரசாங்கம் என்பது பரலோகத்தில் யெகோவா ஏற்படுத்தியிருக்கும் ஒரு அரசாங்கம். இயேசு கிறிஸ்துதான் அதன் ராஜாவாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்திதான் யெகோவா எல்லா அக்கிரமத்துக்கும் முடிவுகட்டுவார். பிறகு, கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியை ஆட்சி செய்யும்.
12 இயேசு கிறிஸ்து
கடவுளுடைய படைப்புகளிலேயே முதல் படைப்புதான் இயேசு. எல்லா மனிதர்களுக்காகவும் உயிரைக் கொடுக்க இயேசுவை யெகோவா இந்தப் பூமிக்கு அனுப்பினார். இயேசு கொலை செய்யப்பட்ட பிறகு யெகோவா அவரை உயிரோடு எழுப்பினார். இப்போது இயேசு, கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாகப் பரலோகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்.
13 70 வாரங்களைப் பற்றிய தீர்க்கதரிசனம்
69 வாரங்கள் அடங்கிய காலப்பகுதியின் முடிவில் மேசியா தோன்றுவார் என்று பைபிள் முன்கூட்டியே சொன்னது. அந்தக் காலப்பகுதி கி.மு. 455-ல் ஆரம்பித்து கி.பி. 29-ல் முடிவடைந்தது.
அது கி.பி. 29-ல் முடிவடைந்தது என்று நமக்கு எப்படித் தெரியும்? கி.மு. 455-ல் நெகேமியா எருசலேமுக்கு வந்து அந்த நகரத்தைத் திரும்பக் கட்ட தொடங்கியபோது அந்த 69 வாரங்கள் ஆரம்பமாயின. (தானியேல் 9:25; நெகேமியா 2:1, 5-8) “வாரம்” என்று சொன்னால் 7 நாட்கள் என்று நமக்குத் தெரியும். இந்தத் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்படும் வாரங்கள் ஒவ்வொன்றும் 7 நாட்களைக் குறிப்பதில்லை, ஆனால் 7 வருஷங்களைக் குறிக்கின்றன. எப்படிச் சொல்லலாம்? பைபிள் தீர்க்கதரிசனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கணக்கின்படி, அதாவது “ஒரு நாளுக்கு ஒரு வருஷம்” என்ற கணக்கின்படி, சொல்லலாம். (எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:6) அப்படியென்றால், ஒவ்வொரு வாரமும் ஏழு வருஷங்களைக் குறிக்கின்றன, 69 வாரங்கள் என்பது 483 வருஷங்களை (69 x 7) குறிக்கின்றன. கி.மு. 455-லிருந்து 483 வருஷங்களைக் கூட்டினால், கி.பி. 29-ம் வருஷத்துக்கு வருகிறோம். அந்த வருஷத்தில்தான் இயேசு ஞானஸ்நானம் பெற்று, மேசியாவாக ஆனார்!—லூக்கா 3:1, 2, 21, 22.
அதே தீர்க்கதரிசனம் இன்னொரு வாரத்தைப் பற்றியும் சொன்னது. அதாவது, இன்னும் ஏழு வருஷங்களைப் பற்றிச் சொன்னது. அந்தக் காலப்பகுதியின் மத்திபத்தில், அதாவது கி.பி. 33-ல், மேசியா கொலை செய்யப்படுவார் என்று அது சொன்னது. அதோடு, கி.பி. 36-லிருந்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி யூதர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா தேசத்தாருக்கும் பிரசங்கிக்கப்படும் என்று சொன்னது.—தானியேல் 9:24-27.
14 திரித்துவம் என்ற பொய்ப் போதனை
யெகோவாதான் படைப்பாளர் என்றும், அவர் முதன்முதலில் இயேசுவைப் படைத்தார் என்றும் பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 1:15, 16) இயேசு சர்வவல்லமையுள்ள கடவுள் கிடையாது. கடவுளுக்குச் சமமாக இருப்பதுபோல் அவர் ஒருபோதும் சொன்னதில்லை. “என் தகப்பன் என்னைவிட பெரியவர்” என்றுதான் சொன்னார். (யோவான் 14:28; 1 கொரிந்தியர் 15:28) ஆனால் கடவுள் ஒரு திரித்துவம், அதாவது ஒரு திரியேகக் கடவுள், என்று சில மதங்கள் சொல்லித் தருகின்றன. அதன்படி, பிதா ஒரு கடவுள், குமாரன் ஒரு கடவுள், பரிசுத்த ஆவி ஒரு கடவுள், ஆனால் மூன்று பேரும் ஒரே கடவுள் என்று நம்பப்படுகிறது. உண்மையில், “திரித்துவம்” என்ற வார்த்தைகூட பைபிளில் இல்லை. இது ஒரு பொய்ப் போதனை.
பரிசுத்த ஆவி என்பது கடவுளுடைய சக்தியைக் குறிக்கிறது. அதை நம்மால் பார்க்க முடியாது. கடவுள் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறார். அது ஒரு ஆள் அல்ல. எப்படிச் சொல்லலாம்? உதாரணத்துக்கு, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் “கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. அதோடு, “பலதரப்பட்ட மக்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன்” என்று யெகோவா சொன்னார்.—அப்போஸ்தலர் 2:1-4, 17.
15 சிலுவை
உண்மைக் கிறிஸ்தவர்கள் சிலுவையைப் பயன்படுத்துவதில்லை. ஏன்?
சிலுவை ரொம்பக் காலமாகவே பொய் மதங்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில், இயற்கையை வணங்குவதற்கும், புறமத பாலியல் சடங்குகளைச் செய்வதற்கும் சிலுவை பயன்படுத்தப்பட்டது. இயேசு இறந்து 300 வருஷங்கள்வரை கிறிஸ்தவர்கள் சிலுவையைப் பயன்படுத்தவே இல்லை. ஆனால், ரோமப் பேரரசரான கான்ஸ்டன்டைன் சிலுவையைக் கிறிஸ்தவத்தின் சின்னமாக்கினார். கிறிஸ்தவத்தை இன்னும் பிரபலமாக்குவதற்காக அந்தச் சின்னம் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சிலுவைக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இப்படிச் சொல்கிறது: “கிறிஸ்தவத்துக்கு முன்பிருந்த கலாச்சாரங்களிலும் சரி, கிறிஸ்தவமல்லாத கலாச்சாரங்களிலும் சரி, சிலுவை பயன்படுத்தப்பட்டது.”
இயேசு சிலுவையில் இறக்கவில்லை. “சிலுவை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைகளின் அர்த்தம், “செங்குத்தான கம்பம்,” “மரக் கம்பம்,” அல்லது “மரம்” என்பதாகும். “இரண்டு மரக் கட்டைகள் பயன்படுத்தப்பட்டதாக [புதிய ஏற்பாட்டின்] கிரேக்கப் பதிவில் மறைமுகமாகக்கூடச் சொல்லப்படவில்லை” என்று தி கம்ப்பேனியன் பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், இயேசு செங்குத்தான கம்பத்தில்தான் கொலை செய்யப்பட்டார்.
நாம் உருவங்களை அல்லது சின்னங்களை வணங்கக் கூடாதென்று யெகோவா சொல்லியிருக்கிறார்.—யாத்திராகமம் 20:4, 5; 1 கொரிந்தியர் 10:14.
16 நினைவு நாள்
இயேசு தன்னுடைய மரண நாளை அனுசரிக்க வேண்டுமென்று தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுத்தார். இஸ்ரவேலர்கள் பஸ்காவைக் கொண்டாடிய அதே தேதியில், அதாவது நிசான் 14-ல், கிறிஸ்தவர்கள் இயேசுவின் நினைவு நாளை அனுசரிக்கிறார்கள். நினைவு நாளின்போது, இயேசுவின் உடலுக்கும் இரத்தத்துக்கும் அடையாளமாக இருக்கிற ரொட்டியும் திராட்சமதுவும், கூடிவந்திருக்கிற ஒவ்வொருவருடைய கையிலும் கொடுக்கப்படும். ஆனால், இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகிறவர்கள் மட்டும்தான் அந்த ரொட்டியைச் சாப்பிட்டு, அந்தத் திராட்சமதுவைக் குடிப்பார்கள். பூமியில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கை உள்ளவர்கள், நினைவு நாள் நிகழ்ச்சியை மதித்து அதில் கலந்துகொள்வார்கள். ஆனால், அவர்கள் அந்த ரொட்டியைச் சாப்பிடவோ அந்தத் திராட்சமதுவைக் குடிக்கவோ மாட்டார்கள்.
17 ஆத்துமா
எபிரெய வார்த்தையான நெஃபெஷ், கிரேக்க வார்த்தையான சைக்கீ ஆகியவை பெரும்பாலான தமிழ் பைபிள்களில் ஆத்துமா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இது சரியான மொழிபெயர்ப்பு கிடையாது. ஏனென்றால், ஆத்துமா அழியாது என்ற பொய்க் கோட்பாட்டை இது ஆதரிக்கிறது. நெஃபெஷ், சைக்கீ ஆகிய வார்த்தைகள் முக்கியமாக (1) ஒரு நபரை, (2) ஒரு மிருகத்தை, (3) ஒரு நபரின் அல்லது மிருகத்தின் உயிரை அர்த்தப்படுத்துகின்றன. (ஆதியாகமம் 1:20; 2:7; 1 பேதுரு 3:20) இந்த வார்த்தைகள் பிணத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.—எண்ணாகமம் 6:6; ஆகாய் 2:13.
18 ஆவி
எபிரெய வார்த்தையான ரூவக், கிரேக்க வார்த்தையான நியூமா ஆகியவை பெரும்பாலான தமிழ் பைபிள்களில் ஆவி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இது சரியான மொழிபெயர்ப்பு கிடையாது. ஏனென்றால், மனிதர்களுக்குள் அழியாத ஆவி ஒன்று இருக்கிறது என்ற பொய் நம்பிக்கையை இது ஆதரிக்கிறது. “சுவாசம்” என்பதுதான் ரூவக், நியூமா ஆகிய வார்த்தைகளின் அடிப்படை அர்த்தம். இந்த வார்த்தைகளுக்கு, (1) காற்று, (2) உயிர்சக்தி, (3) ஏதோவொரு விஷயத்தைச் சொல்லவோ செய்யவோ ஒருவருடைய இதயத்தில் ஏற்படும் தூண்டுதல், (4) கடவுளிடமிருந்து அல்லது கெட்ட தேவதூதர்களாகிய பேய்களிடமிருந்து வரும் செய்திகள், (5) நல்ல தேவதூதர்கள் அல்லது கெட்ட தேவதூதர்கள், (6) கடவுளுடைய சக்தி என வேறுபல அர்த்தங்களும் இருக்கின்றன.
19 கெஹென்னா
கெஹென்னா என்பது எருசலேமுக்குப் பக்கத்திலிருந்த ஒரு பள்ளத்தாக்கின் பெயர். அங்குதான் குப்பைக்கூளங்கள் எரிக்கப்பட்டன. இயேசுவின் காலத்தில் இந்தப் பள்ளத்தாக்கில் மிருகங்களோ மனிதர்களோ சித்திரவதை செய்யப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால், கெஹென்னா என்பது இறந்தவர்கள் என்றென்றும் நெருப்பில் வாட்டி வதைக்கப்படுகிற ஒரு இடமாக இருக்க முடியாது. சிலர் கெஹென்னாவுக்குள் தள்ளப்படுவார்கள் என்று இயேசு சொன்னபோது, அவர்கள் நிரந்தரமாக அழிக்கப்படுவார்கள் என்றுதான் அர்த்தப்படுத்தினார்.—மத்தேயு 5:22; 10:28.
20 பரமண்டல ஜெபம்
பரமண்டல ஜெபம் என்பது இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஜெபம். எப்படி ஜெபம் செய்ய வேண்டும் என்பதை இதன் மூலம் அவர் கற்றுக்கொடுத்தார். அந்த ஜெபத்தின் சில வரிகளைக் கவனியுங்கள்:
“உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்”
பரலோகத்திலும் பூமியிலும் உள்ள எல்லாருமே கடவுளுடைய பெயருக்கு மதிப்புமரியாதை காட்ட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். அதனால், அவர் தன்னுடைய பெயருக்கு வந்த எல்லா களங்கத்தையும் நீக்க வேண்டுமென்று ஜெபம் செய்கிறோம்.
“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”
கடவுளுடைய அரசாங்கம் சாத்தானின் பொல்லாத உலகத்தை அழித்துவிட்டு, இந்தப் பூமியை ஆட்சி செய்து, இதை ஒரு பூஞ்சோலையாக மாற்ற வேண்டுமென்று நாம் ஜெபம் செய்கிறோம்.
“உங்களுடைய விருப்பம் . . . பூமியிலும் நிறைவேற வேண்டும்”
கீழ்ப்படிதலுள்ள பரிபூரண மனிதர்கள் பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ வேண்டும் என்பதுதான் யெகோவாவின் நோக்கம். மனிதர்களைப் படைத்த சமயத்திலிருந்தே இதுதான் அவருடைய விருப்பம். இதை அவர் நிறைவேற்ற வேண்டுமென்று நாம் ஜெபம் செய்கிறோம்.
21 மீட்புவிலை
மனிதர்களைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்காக யெகோவா மீட்புவிலைக்கு ஏற்பாடு செய்தார். முதல் மனிதனான ஆதாம் பாவம் செய்தபோது பரிபூரண மனித வாழ்க்கையையும் யெகோவாவோடு இருந்த பந்தத்தையும் இழந்துவிட்டான். ஆதாம் இழந்தவற்றை மறுபடியும் பெறுவதற்காகத் தேவைப்பட்ட விலைதான் மீட்புவிலை. எல்லா மனிதர்களையும் பாவத்திலிருந்து மீட்பதற்காக இயேசுவைக் கடவுள் இந்தப் பூமிக்கு அனுப்பினார். இயேசு தன்னுடைய உயிரைப் பலியாகக் கொடுப்பதன் மூலம், மனிதர்கள் என்றென்றும் வாழ்வதற்கும் பரிபூரணமாவதற்கும் வழிசெய்தார்.
22 1914 ஏன் முக்கியமான ஒரு வருஷம்?
கடவுள் 1914-ல் தன்னுடைய அரசாங்கத்தை ஏற்படுத்துவார் என்று தானியேல் புத்தகத்தின் 4-ஆம் அதிகாரத்தில் உள்ள தீர்க்கதரிசனம் சொல்கிறது.
தீர்க்கதரிசனம்: ஒரு பெரிய மரம் வெட்டிச் சாய்க்கப்படும் என்ற தீர்க்கதரிசனத்தை ஒரு கனவின் மூலமாக நேபுகாத்நேச்சார் ராஜாவுக்கு யெகோவா தெரியப்படுத்தினார். அந்தக் கனவில், அடிமரம் மறுபடியும் துளிர்க்காமல் இருப்பதற்காக ‘ஏழு காலங்களுக்கு’ இரும்பிலும் செம்பிலும் அதற்குக் காப்புகள் போடப்பட்டன. அதன் பிறகு அது மறுபடியும் வளரும் என்று சொல்லப்பட்டது.—தானியேல் 4:1, 10-16.
தீர்க்கதரிசனத்தின் அர்த்தம்: அந்த மரம் கடவுளுடைய ஆட்சியைக் குறிக்கிறது. பல வருஷங்களாக, இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி செய்ய எருசலேமில் யெகோவா ராஜாக்களை நியமித்தார். (1 நாளாகமம் 29:23) ஆனால், அந்த ராஜாக்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள், அதனால் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்தது. கி.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டது. அப்போதுதான் அந்த “ஏழு காலங்கள்” ஆரம்பமானது. (2 ராஜாக்கள் 25:1, 8-10; எசேக்கியேல் 21:25-27) “மற்ற தேசத்தாருக்கு குறிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறும்வரை எருசலேம் மற்ற தேசத்தாரால் மிதிக்கப்படும்” என்று இயேசு சொன்னபோது, அந்த ‘ஏழு காலங்களைத்தான்’ அர்த்தப்படுத்தினார். (லூக்கா 21:24) அப்படியென்றால், இயேசு பூமியில் இருந்தபோது அந்த “ஏழு காலங்கள்” முடிவடையவில்லை. அதன் முடிவில் ஒரு ராஜாவை நியமிக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார். அந்தப் புதிய ராஜாவாகிய இயேசுவின் ஆட்சியில் கடவுளுடைய மக்கள் என்றென்றும் வாழ்வார்கள். அப்போது பூமியில் வாழும் எல்லாருக்கும் ஏராளமான ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.—லூக்கா 1:30-33.
“ஏழு காலங்கள்”: அந்த “ஏழு காலங்கள்” 2,520 வருஷங்கள் நீடித்தன. அது கி.மு. 607-ல் ஆரம்பித்து கி.பி. 1914-ல் முடிவடைந்தது. அப்போதுதான், யெகோவா மேசியாவாகிய இயேசுவைப் பரலோக அரசாங்கத்தின் ராஜாவாக்கினார்.
அந்த “ஏழு காலங்கள்” 2,520 வருஷங்கள் நீடித்ததாக நாம் எப்படிச் சொல்கிறோம்? மூன்றரை காலங்கள் 1,260 நாட்களைக் குறிப்பதாக பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:6, 14) அப்படியென்றால், “ஏழு காலங்கள்” என்பது 2,520 நாட்கள். பைபிள் தீர்க்கதரிசனங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கணக்கின்படி, அதாவது “ஒரு நாளுக்கு ஒரு வருஷம்” என்ற கணக்கின்படி, 2,520 நாட்கள் 2,520 வருஷங்களைக் குறிக்கின்றன.—எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:6.
23 தலைமைத் தூதராகிய மிகாவேல்
‘தலைமைத் தூதர்’ என்றால் எல்லா தூதர்களுக்கும் தலைவர் என்று அர்த்தம். ஒரேவொரு தலைமைத் தூதர் மட்டும்தான் இருப்பதாக பைபிள் சொல்கிறது. அவருடைய பெயர் மிகாவேல்.—தானியேல் 12:1; யூதா 9.
உண்மையுள்ள தேவதூதர்கள் அடங்கிய கடவுளுடைய படையின் தலைவர்தான் மிகாவேல். மிகாவேலும் அவருடைய தூதர்களும் ராட்சதப் பாம்போடும் அதனுடைய தூதர்களோடும் போர் செய்ததாக வெளிப்படுத்துதல் 12:7 சொல்கிறது. கடவுளுடைய படையின் தலைவர் இயேசு என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. அப்படியென்றால், மிகாவேல் என்பது இயேசுவுடைய இன்னொரு பெயர்.—வெளிப்படுத்துதல் 19:14-16.
24 கடைசி நாட்கள்
கடவுளுடைய அரசாங்கம் சாத்தானின் உலகத்தை அழிப்பதற்கு முன்பான காலப்பகுதியை இது குறிக்கிறது. இந்தக் காலப்பகுதியில் உலகம் முழுவதும் முக்கியமான சம்பவங்கள் நடக்கும். இதே காலப்பகுதியைக் குறிப்பதற்கு ‘கடைசிக் கட்டம்,’ ‘மனிதகுமாரனின் பிரசன்னம்’ போன்ற வார்த்தைகளையும் பைபிள் தீர்க்கதரிசனங்கள் பயன்படுத்துகின்றன. (மத்தேயு 24:3, 27, 37) 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது இந்த ‘கடைசி நாட்கள்’ ஆரம்பமாயின. அர்மகெதோனில் சாத்தானின் உலகம் அழிக்கப்படும்போது இந்தக் காலப்பகுதி முடிவடையும்.—2 தீமோத்தேயு 3:1; 2 பேதுரு 3:3.
25 உயிர்த்தெழுதல்
இறந்துபோன ஒருவரைக் கடவுள் மறுபடியும் உயிரோடு எழுப்புவதுதான் உயிர்த்தெழுதல். ஒன்பது பேர் உயிரோடு எழுப்பப்பட்டதைப் பற்றி பைபிள் சொல்கிறது. எலியா, எலிசா, இயேசு, பேதுரு, பவுல் ஆகியவர்கள் இறந்தவர்களை உயிரோடு எழுப்பினார்கள். கடவுளுடைய சக்தியினால்தான் அவர்கள் இந்த அற்புதத்தைச் செய்தார்கள். ‘நீதிமான்களையும் அநீதிமான்களையும்’ இந்தப் பூமியில் உயிரோடு எழுப்பப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 24:15) சிலர் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வதற்காகப் பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்படுவார்கள்.—யோவான் 5:28, 29; 11:25; பிலிப்பியர் 3:11; வெளிப்படுத்துதல் 20:5, 6.
26 ஆவியுலகத் தொடர்பு
சூனியக்காரர்கள், மத்தியஸ்தர்கள் போன்ற மனிதர்கள் மூலமாகவோ நேரடியாகவோ ஆவிகளோடு தொடர்புகொள்ளும் பழக்கம்தான் ஆவியுலகத் தொடர்பு. மனிதர்கள் இறந்த பிறகு சக்திவாய்ந்த ஆவிகளாக மாறிவிடுகிறார்கள் என்ற பொய்ப் போதனையை நம்புவதால்தான் சிலர் இந்த ஆபத்தான பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள். பேய்கள், அதாவது, கெட்ட தேவதூதர்கள், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக மனிதர்களைத் தூண்டுகிறார்கள். ஜோதிடம், குறிசொல்லுதல், மாயமந்திரம், சூனியம், மூடநம்பிக்கைகள் போன்றவையும் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்டவைதான். ஆனால், இவற்றில் ஆபத்தே இல்லாததுபோல் பல புத்தகங்களும் பத்திரிகைகளும் சினிமா படங்களும் பாடல்களும் விளையாட்டுகளும் போஸ்டர்களும் நம்மை நினைக்க வைக்கலாம். சொல்லப்போனால், பேய்கள், மாயமந்திரப் பழக்கங்கள், அமானுஷ்ய சக்திகள் போன்றவற்றை சுவாரஸ்யமானதாகக்கூட அவை காட்டலாம். இறந்தவர்களுக்காகப் பலி செலுத்துவது, திதி கொடுப்பது, விதவைக்கான சடங்குகள் செய்வது, மற்ற இறுதிச் சடங்குகள் செய்வது ஆகியவையும் ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்டவை. பேய்களின் சக்தியைப் பயன்படுத்த முயற்சி செய்யும்போது சிலர் போதைப்பொருள்களை எடுத்துக்கொள்வது வழக்கம்.—கலாத்தியர் 5:20; வெளிப்படுத்துதல் 21:8.
27 யெகோவாவின் பேரரசுரிமை
யெகோவாதான் சர்வவல்லமையுள்ள கடவுள். அவர்தான் இந்த முழு பிரபஞ்சத்தையும் படைத்தார். (வெளிப்படுத்துதல் 15:3) அதனால், அவர் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர். எல்லா படைப்புகளையும் ஆட்சி செய்யும் முழு அதிகாரம், அதாவது பேரரசுரிமை, அவருக்கு இருக்கிறது. (சங்கீதம் 24:1; ஏசாயா 40:21-23; வெளிப்படுத்துதல் 4:11) தான் படைத்த எல்லாவற்றுக்கும் அவர் சட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறார். மற்றவர்களை ஆட்சியாளர்களாக நியமிக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. நாம் அவர்மேல் அன்பு காட்டும்போதும் அவருக்குக் கீழ்ப்படியும்போதும் அவருடைய பேரரசுரிமையை ஆதரிக்கிறோம்.—1 நாளாகமம் 29:11.
28 கருக்கலைப்பு
தாயின் வயிற்றிலுள்ள குழந்தையை வேண்டுமென்றே கொல்வதுதான் கருக்கலைப்பு. விபத்தினாலோ தாய்க்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினையினாலோ குழந்தை இறந்துபோவதை இது குறிப்பதில்லை. தாயின் வயிற்றில் கரு உருவாகும் நொடியிலிருந்தே அது ஒரு தனி உயிர்தான், தாயின் உடலுடைய ஒரு பாகம் மட்டுமல்ல.
29 இரத்தம் ஏற்றுதல்
இரத்தம் ஏற்றுதல் என்பது, இரத்தத்தை அல்லது இரத்தத்தின் நான்கு முக்கியக் கூறுகளில் ஒன்றை (அதாவது பிளாஸ்மா, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் ஆகியவற்றில் ஒன்றை) ஒருவருடைய உடலில் ஏற்றுவதைக் குறிக்கிறது. அவருடைய இரத்தமே சேமித்து வைக்கப்பட்டு அவருக்கு ஏற்றப்படலாம் அல்லது இன்னொருவரின் இரத்தம் அவருக்கு ஏற்றப்படலாம்.
30 கண்டிப்பது
பைபிளின்படி, கண்டிப்பது என்பது வெறுமனே தண்டிப்பது அல்ல. அது புத்திமதி சொல்வதையும், அறிவுரை கொடுப்பதையும், கற்றுக்கொடுப்பதையும், திருத்துவதையும் உட்படுத்துகிறது. யெகோவா ஒருபோதும் அளவுக்கு மீறி அல்லது கொடூரமாகக் கண்டிப்பதில்லை. (நீதிமொழிகள் 4:1, 2) பெற்றோர்களுக்கு யெகோவா அருமையான உதாரணமாக இருக்கிறார். யெகோவாவின் கண்டிப்பு சிறந்த பலனைத் தருகிறது; அதனால், கண்டிப்பையும் புத்திமதியையும் ஒருவர் விரும்பவும் ஆரம்பித்துவிடலாம். (நீதிமொழிகள் 12:1) யெகோவா தன் மக்களை நேசிக்கிறார், அவர்களைப் பயிற்றுவிக்கிறார். அவர்களுக்கு அறிவுரை தந்து, அவர்களுடைய தவறான கருத்துகளைச் சரிசெய்கிறார். அதனால், அவருக்குப் பிரியமான விதத்தில் யோசிக்கவும் நடக்கவும் அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைக் கண்டிக்கும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும்? முதலாவதாக, கீழ்ப்படிவது ஏன் அவசியம் என்பதைப் பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும். அதோடு, யெகோவாவையும் அவருடைய வார்த்தையாகிய பைபிளையும் நேசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். பைபிள் நியமங்களைப் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு உதவ வேண்டும்.
31 பேய்கள்
மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தியுள்ள கெட்ட தேவதூதர்கள்தான் பேய்கள். அவற்றை மனித கண்களால் பார்க்க முடியாது. அவை கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய், அவருடைய எதிரிகளாகிவிட்டன. (ஆதியாகமம் 6:2; யூதா 6) யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல்போன சாத்தானோடு அவை சேர்ந்துகொண்டன.—உபாகமம் 32:17; லூக்கா 8:30; அப்போஸ்தலர் 16:16; யாக்கோபு 2:19.