அதிகாரம் 12
கடவுளுடைய நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
1, 2. யெகோவாவின் நண்பர்களில் சிலர் யார்?
எப்படிப்பட்டவர் உங்களுடைய நண்பராக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்? யாரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமோ... யாரோடு உங்களால் சகஜமாகப் பழக முடிகிறதோ... யார் உங்களோடு நன்றாக ஒத்துப்போகிறாரோ... யார் அன்பாக நடந்துகொள்கிறாரோ... யாரிடம் உங்களுக்குப் பிடித்த குணங்கள் இருக்கிறதோ... அவர்தானே உங்கள் நண்பராக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவீர்கள்?
2 யெகோவா சில மனிதர்களைத் தன்னுடைய நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறார். அப்படி அவர் தேர்ந்தெடுத்த ஒருவர்தான் ஆபிரகாம். (ஏசாயா 41:8; யாக்கோபு 2:23) யெகோவாவுக்குத் தாவீதையும் பிடித்திருந்தது. தாவீது ‘தன் இதயத்துக்குப் பிடித்தமானவன்’ என்று அவர் சொன்னார். (அப்போஸ்தலர் 13:22) தீர்க்கதரிசியாகிய தானியேலும் யெகோவாவுக்கு ‘மிகவும் பிரியமானவராக’ இருந்தார்.—தானியேல் 9:23.
3. ஆபிரகாம், தாவீது, தானியேல் எப்படி யெகோவாவின் நண்பரானார்கள்?
3 ஆபிரகாமும் தாவீதும் தானியேலும் எப்படி யெகோவாவின் நண்பரானார்கள்? யெகோவா ஆபிரகாமிடம், ‘நீ என் பேச்சைக் கேட்டாய்’ என்று சொன்னார். (ஆதியாகமம் 22:18) யாரெல்லாம் மனத்தாழ்மையோடு தன்னுடைய பேச்சைக் கேட்டு நடக்கிறார்களோ அவர்களைத்தான் யெகோவா தன்னுடைய நண்பர்களாகத் தேர்ந்தெடுக்கிறார். ஒரு முழு தேசம்கூட அவருடைய நண்பராக இருக்க முடியும். அவர் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களிடம், “நீங்கள் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்; அப்போது நான் உங்கள் கடவுளாக இருப்பேன், நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்” என்று சொன்னார். (எரேமியா 7:23) நீங்களும் யெகோவாவின் நண்பராவதற்கு உண்மையிலேயே ஆசைப்பட்டால், நீங்களும் அவர் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும்.
யெகோவா தன் நண்பர்களைப் பாதுகாக்கிறார்
4, 5. யெகோவா எப்படித் தன் நண்பர்களைப் பாதுகாக்கிறார்?
4 யெகோவா “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக” சந்தர்ப்பங்களைத் தேடுகிறார் என்று பைபிள் சொல்கிறது. (2 நாளாகமம் 16:9) “நான் உனக்கு விவேகத்தை தந்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு அறிவுரை சொல்வேன்” என்று சங்கீதம் 32:8-ல் யெகோவா தன் நண்பர்களுக்கு வாக்குக் கொடுக்கிறார்.
5 பலம்படைத்த ஒரு எதிரி, நாம் யெகோவாவின் நண்பராவதைத் தடுக்க விரும்புகிறான். ஆனால், யெகோவா நம்மைப் பாதுகாக்க விரும்புகிறார். (சங்கீதம் 55:22-ஐ வாசியுங்கள்.) நாம் யெகோவாவின் நண்பர்களாக, இதயப்பூர்வமாக அவருக்குச் சேவை செய்கிறோம். கஷ்டமான சூழ்நிலைகளில்கூட அவருக்கு உண்மையாக இருக்கிறோம். “அவர் [யெகோவா] என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது” என்று சொன்ன தாவீதைப் போலவே நாமும் நம்பிக்கையோடு இருக்கிறோம். (சங்கீதம் 16:8; 63:8) நாம் கடவுளுடைய நண்பராவதைத் தடுக்க சாத்தான் என்ன செய்கிறான்?
சாத்தானின் குற்றச்சாட்டு
6. மனிதர்களைப் பற்றி சாத்தான் என்ன சொல்கிறான்?
6 இந்தப் புத்தகத்தின் 11-ஆம் அதிகாரத்தில் நாம் ஏற்கெனவே பார்த்தபடி, யெகோவாவிடம் சாத்தான் சவால்விட்டான். யெகோவா பொய் சொன்னார் என்றும், சரி எது தவறு எது என்பதை ஆதாம் ஏவாளே தீர்மானிப்பதற்கு விடாமல் அநியாயம் செய்தார் என்றும் அவன் குற்றம்சாட்டினான். கடவுளுடைய நண்பர்களாவதற்கு ஆசைப்படுகிற மனிதர்களையும் சாத்தான் குற்றம்சாட்டுவதாக பைபிளிலுள்ள யோபு புத்தகம் காட்டுகிறது. அவர்கள் கடவுள்மேல் இருக்கிற அன்பினால் அல்ல, ஆனால் அவரிடமிருந்து கிடைக்கிற ஆசீர்வாதங்களுக்காகத்தான் அவரை வணங்குகிறார்கள் என்று அவன் சொல்கிறான். யாரை வேண்டுமானாலும் கடவுளிடமிருந்து பிரித்துவிட தன்னால் முடியும் என்றுகூட சாத்தான் சவால்விடுகிறான். யோபுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும், யெகோவா அவரை எப்படிப் பாதுகாத்தார் என்பதையும் இப்போது பார்க்கலாம்.
7, 8. (அ) யோபு என்பவர் யார்? (ஆ) யோபுவைப் பற்றி சாத்தான் என்ன சொன்னான்?
7 யோபு என்பவர் யார்? அவர் கிட்டத்தட்ட 3,600 வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு நல்ல மனிதர். அந்தச் சமயத்தில் அவரைப் போல ஒரு மனிதர் வேறு யாருமே உலகத்தில் இல்லை என்று யெகோவா சொன்னார். யோபு யெகோவாமேல் ரொம்பப் பயபக்தியோடு இருந்தார்; கெட்ட காரியங்களை அவர் வெறுத்தார். (யோபு 1:8) அதனால், யோபு யெகோவாவின் நண்பராக இருந்தார்.
8 ஆனால், யோபு சுயநலத்தினால்தான் கடவுளை வணங்கியதாக சாத்தான் குற்றம்சாட்டினான். அவன் யெகோவாவிடம், “நீங்கள்தான் அவனையும் அவன் வீட்டையும் அவனிடம் இருக்கிற எல்லாவற்றையும் சுற்றி வேலிபோட்டு அவனைப் பாதுகாக்கிறீர்களே. அவன் செய்வதையெல்லாம் ஆசீர்வதிக்கிறீர்களே. அவனுடைய மந்தைகள் தேசத்தில் பெருகியிருக்கின்றனவே. நீங்கள் மட்டும் உங்கள் கையை நீட்டி அவனிடம் இருக்கிற எல்லாவற்றையும் தொட்டுப் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் முகத்துக்கு நேராகவே அவன் உங்களைத் திட்டித் தீர்ப்பான்” என்று சொன்னான்.—யோபு 1:10, 11.
9. என்ன செய்ய சாத்தானுக்கு யெகோவா அனுமதி கொடுத்தார்?
9 யெகோவாவிடமிருந்து கிடைக்கிற ஆசீர்வாதங்களுக்காகத்தான் யோபு அவரை வணங்கியதாக சாத்தான் குற்றம்சாட்டினான். யோபு யெகோவாவை வணங்காதபடி தன்னால் செய்துவிட முடியும் என்றுகூட அவன் சவால்விட்டான். அவன் சொன்னதை யெகோவா ஒத்துக்கொள்ளவில்லை; ஏனென்றால், யோபு தன்மேல் உண்மையான அன்பு வைத்திருந்ததால்தான் தன்னுடைய நண்பராக இருந்தார் என்று யெகோவாவுக்குத் தெரியும். இருந்தாலும், யோபுவைச் சோதித்துப் பார்க்க சாத்தானுக்கு அனுமதி கொடுத்தார்.
சாத்தான் யோபுவைத் தாக்குகிறான்
10. சாத்தான் எப்படி யோபுவைத் தாக்கினான்? யோபு எப்படி நடந்துகொண்டார்?
10 முதலாவதாக, யோபுவுக்குச் சொந்தமான எல்லா மிருகங்களும் திருட்டுப்போகும்படி அல்லது செத்துப்போகும்படி சாத்தான் செய்தான். அதன் பிறகு, யோபுவின் வேலைக்காரர்களில் கிட்டத்தட்ட எல்லாரையுமே சாத்தான் கொன்றுவிட்டான். யோபு எல்லாவற்றையும் இழந்தார். கடைசியாக, ஒரு சூறாவளிக் காற்றினால் யோபுவின் பத்துப் பிள்ளைகளையும் சாத்தான் கொன்றுவிட்டான். “இவ்வளவு நடந்தும் யோபு பாவம் செய்யவில்லை, கடவுள்மேல் எந்தக் குறையும் சொல்லவில்லை,” அவர் யெகோவாவுக்கு உண்மையாகவே இருந்தார்.—யோபு 1:12-19, 22.
11. (அ) சாத்தான் வேறு எப்படியும் யோபுவைத் தாக்கினான்? (ஆ) அப்போது யோபு எப்படி நடந்துகொண்டார்?
11 ஆனாலும், சாத்தான் அந்த விஷயத்தை அத்தோடு விடவில்லை. அவன் கடவுளிடம், “நீங்கள் அவனுடைய எலும்பையும் சதையையும் தொட்டுப் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் முகத்துக்கு நேராகவே உங்களைத் திட்டித் தீர்ப்பான்” என்று சொன்னான். பிறகு, மிகவும் கொடிய ஒரு வியாதியால் யோபுவைத் தாக்கினான். (யோபு 2:5, 7) அப்போதும் யோபு யெகோவாவுக்கு உண்மையாகவே இருந்தார். “சாகும்வரை நான் என்னுடைய உத்தமத்தை விட மாட்டேன்” என்று சொன்னார்.—யோபு 27:5.
12. சாத்தான் ஒரு பொய்யன் என்பதை யோபு எப்படி நிரூபித்தார்?
12 சாத்தானின் குற்றச்சாட்டுகளைப் பற்றியோ, தனக்குப் பயங்கரமான கஷ்டங்கள் வந்ததற்கான காரணத்தைப் பற்றியோ யோபுவுக்கு எதுவுமே தெரியவில்லை. யெகோவாதான் தனக்குக் கஷ்டங்கள் கொடுத்ததாக அவர் நினைத்தார். (யோபு 6:4; 16:11-14) ஆனாலும், அவர் யெகோவாவுக்கு உண்மையாகவே இருந்தார். யோபு சுயநலத்தினால் அல்ல, உண்மையான அன்பினால்தான் கடவுளுடைய நண்பராக இருந்தார் என்பது தெள்ளத்தெளிவானது. சாத்தானின் குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய் என்பது நிரூபணமானது!
13. யோபு கடவுளுக்கு உண்மையாக இருந்ததன் விளைவு என்ன?
13 பரலோகத்தில் நடந்த விஷயங்கள் யோபுவுக்குத் தெரியாவிட்டாலும், அவர் கடவுளுக்கு உண்மையாக இருந்தார். இப்படி, சாத்தான் எவ்வளவு பொல்லாதவன் என்பதை யோபு நிரூபித்தார். உண்மையான நண்பனாக இருந்ததற்காக யெகோவா யோபுவை ஆசீர்வதித்தார்.—யோபு 42:12-17.
சாத்தான் உங்கள்மேல் சுமத்தும் குற்றச்சாட்டு
14, 15. எல்லா மனிதர்கள் மீதும் சாத்தான் என்ன குற்றம்சாட்டுகிறான்?
14 யோபுவின் அனுபவத்திலிருந்து நீங்கள் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். யெகோவா தரும் ஆசீர்வாதங்களுக்காகத்தான் நாம் அவரை வணங்குகிறோம் என்று சாத்தான் குற்றம்சாட்டுகிறான். யோபு 2:4 காட்டுகிறபடி, ‘ஒரு மனுஷன் . . . தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராயிருப்பான்’ என்று சாத்தான் சொன்னான். அதனால், சாத்தான் யோபுவை மட்டுமல்ல, எல்லா மனிதர்களையுமே சுயநலக்காரர்கள் என்று குற்றம்சாட்டுகிறான். யோபு இறந்து நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகும் அவன் யெகோவாவைப் பழித்துப் பேசிக்கொண்டும் அவருடைய ஊழியர்களைக் குற்றம்சாட்டிக்கொண்டும் இருந்தான். அதனால்தான் நீதிமொழிகள் 27:11-ல், “என் மகனே, ஞானமாக நடந்து என் இதயத்தைச் சந்தோஷப்படுத்து. அப்போதுதான், என்னைப் பழித்துப் பேசுகிறவனுக்கு என்னால் பதிலடி கொடுக்க முடியும்” என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.
15 நீங்களும் யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்து, அவருடைய உண்மையான நண்பராக இருக்க முடியும். சாத்தான் ஒரு பொய்யன் என்பதை நிரூபிக்கவும் முடியும். கடவுளுடைய நண்பராவதற்கு உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும், அப்படிச் செய்வதுதான் மிகச் சிறந்த தீர்மானமாக இருக்கும்! அந்தத் தீர்மானத்தில் உறுதியாக இருங்கள்! பிரச்சினைகள் வந்தால் நீங்கள் கடவுளுக்கு உண்மையாக இருக்க மாட்டீர்கள் என்று சாத்தான் சொல்கிறான். அவன் நம்மை ஏமாற்றி, கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கப் பார்க்கிறான். எப்படி?
16. (அ) மக்களை யெகோவாவிடமிருந்து பிரிப்பதற்கு சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்கள் என்ன? (ஆ) உங்களை யெகோவாவிடமிருந்து பிரிப்பதற்கு சாத்தான் எப்படி முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
16 நாம் கடவுளுடைய நண்பராவதைத் தடுப்பதற்கு சாத்தான் பல தந்திரங்களைப் பயன்படுத்துகிறான். அவன் “கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்.” (1 பேதுரு 5:8) நீங்கள் பைபிள் படிப்பதை அல்லது அதன்படி நடப்பதை உங்கள் நண்பர்களோ குடும்பத்தாரோ மற்றவர்களோ தடுக்கும்போது ஆச்சரியப்படாதீர்கள். அவர்கள் மூலமாக சாத்தான்தான் உங்களைத் தாக்குகிறான் என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்.a (யோவான் 15:19, 20) சாத்தான் ‘ஒளியின் தூதனைப் போலவும் வேஷம் போடுகிறான்.’ அவன் நம்மை ஏமாற்றி, யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரித்துவிடலாம். (2 கொரிந்தியர் 11:14) சாத்தான் பயன்படுத்துகிற இன்னொரு தந்திரம், கடவுளை வணங்கும் தகுதி நமக்கு இல்லை என்பதுபோல் நம்மை நினைக்க வைப்பதாகும்.—நீதிமொழிகள் 24:10.
யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்
17. நாம் ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம்?
17 நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது சாத்தானை ஒரு பொய்யன் என்று நிரூபிக்கிறோம். கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க எது நமக்கு உதவும்? “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் நீங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது. (உபாகமம் 6:5) நாம் யெகோவாமேல் அன்பு வைத்திருப்பதால்தான் அவருக்குக் கீழ்ப்படிகிறோம். அந்த அன்பு அதிகமாகும்போது, அவர் என்ன சொன்னாலும் செய்ய விரும்புவோம். “நாம் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதுதான் அவர்மீது அன்பு காட்டுவதாகும். அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார்.—1 யோவான் 5:3.
18, 19. (அ) செய்யக் கூடாதென்று யெகோவா சொல்கிற சில விஷயங்கள் என்ன? (ஆ) நம்மால் செய்ய முடியாததை யெகோவா செய்யச் சொல்ல மாட்டார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
18 எதையெல்லாம் செய்யக் கூடாது என்று யெகோவா சொல்கிறார்? அதற்கான சில உதாரணங்கள், “யெகோவா வெறுப்பதை வெறுத்திடுங்கள்” என்ற பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில விஷயங்கள் அப்படியொன்றும் தவறு இல்லை என்று நீங்கள் முதலில் நினைக்கலாம். ஆனால், அங்கு கொடுக்கப்பட்டிருக்கிற பைபிள் வசனங்களைப் படித்து, அவற்றைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். அப்போது, யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு ஞானமானது என்று புரிந்துகொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றும் புரிந்துகொள்வீர்கள். அந்த மாற்றங்களைச் செய்வது சிலசமயம் கஷ்டமாக இருந்தாலும், அவற்றைச் செய்யும்போது கடவுளுடைய உண்மையான நண்பராக இருப்பீர்கள். அதனால், உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். (ஏசாயா 48:17, 18) அந்த மாற்றங்களை உங்களால் செய்ய முடியும் என்று எப்படிச் சொல்லலாம்?
19 செய்ய முடியாத ஒரு விஷயத்தைச் செய்யும்படி யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதே இல்லை. (உபாகமம் 30:11-14) நம்முடைய உண்மையான நண்பராக, நம்மைப் பற்றி நம்மைவிட அவருக்கு நன்றாகத் தெரியும். நம்முடைய பலங்களும் பலவீனங்களும் அவருக்கு நன்றாகத் தெரியும். (சங்கீதம் 103:14) “கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார். அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் அவர் வழிசெய்வார்” என்று அப்போஸ்தலன் பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். (1 கொரிந்தியர் 10:13) சரியானதைச் செய்வதற்கான பலத்தை யெகோவா எப்போதுமே கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாம். கஷ்டமான சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கு ‘இயல்புக்கு மிஞ்சிய சக்தியை’ அவர் உங்களுக்குக் கொடுப்பார். (2 கொரிந்தியர் 4:7) பவுலுக்கு அப்படிப்பட்ட கஷ்ட காலங்களில் யெகோவாவின் உதவி கிடைத்தது. அதனால்தான், “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது” என்று அவர் சொன்னார்.—பிலிப்பியர் 4:13.
கடவுள் நேசிப்பதை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
20. நீங்கள் கடவுளைப் போலவே என்ன குணங்களைக் காட்ட வேண்டும்? ஏன்?
20 நாம் யெகோவாவின் நண்பராவதற்கு ஆசைப்பட்டால், அவர் எதையெல்லாம் தவறு என்று சொல்கிறாரோ அதையெல்லாம் செய்வதை விட்டுவிட வேண்டும். (ரோமர் 12:9) கடவுளுடைய நண்பர்கள் அவர் நேசிப்பதை நேசிக்கிறார்கள். கடவுள் எதையெல்லாம் நேசிக்கிறார் என்று சங்கீதம் 15:1-5 சொல்கிறது. (வாசியுங்கள்.) யெகோவாவின் நண்பர்கள் அவரைப் போலவே “அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு” போன்ற குணங்களைக் காட்டுகிறார்கள்.—கலாத்தியர் 5:22, 23.
21. கடவுள் நேசிக்கும் குணங்களைக் காட்ட நீங்கள் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
21 அந்த அருமையான குணங்களைக் காட்ட நீங்கள் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? பைபிளைத் தவறாமல் வாசிப்பதன் மூலமும் ஆழ்ந்து படிப்பதன் மூலமும் யெகோவா எதையெல்லாம் நேசிக்கிறார் என்று நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். (ஏசாயா 30:20, 21) அப்படிச் செய்யும்போது, யெகோவாமேல் உங்களுக்கு இருக்கும் அன்பு அதிகமாகும். அந்த அன்பு அதிகமாகும்போது, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க விரும்புவீர்கள்.
22. நீங்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் என்ன பலன் கிடைக்கும்?
22 வாழ்க்கையில் நீங்கள் மாற்றங்கள் செய்ய வேண்டியதை, பழைய உடையைக் கழற்றிவிட்டுப் புதிய உடையைப் போட்டுக்கொள்வதற்கு ஒப்பிடலாம். நீங்கள் “பழைய சுபாவத்தை” களைந்துபோட்டு, “புதிய சுபாவத்தை” அணிந்துகொள்ள வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:9, 10) அது அவ்வளவு சுலபம் இல்லைதான். ஆனாலும், செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்து யெகோவாவுக்குக் கீழ்ப்படியும்போது, நமக்கு “மிகுந்த பலன்” தரப்போவதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார். (சங்கீதம் 19:11) அதனால், அவருக்குக் கீழ்ப்படியவும் சாத்தானை ஒரு பொய்யன் என்று நிரூபிக்கவும் தீர்மானம் எடுங்கள். எதிர்காலத்தில் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதற்காக அல்ல, சுயநலமில்லாத அன்பு இருப்பதால் யெகோவாவை வணங்குங்கள். அப்போது, நீங்கள் யெகோவாவின் உண்மையான நண்பராவீர்கள்!
a நீங்கள் பைபிள் படிப்பதை எதிர்க்கிறவர்கள் சாத்தானின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், சாத்தான் ‘இந்த உலகத்தின் கடவுளாக’ இருக்கிறான்; ‘இந்த உலகம் முழுவதும் அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.’ அதனால், நீங்கள் யெகோவாவை வணங்குவதை சிலர் எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை.—2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19.