உபாகமம்
18 பின்பு அவர், “லேவியர்களாகிய குருமார்களுக்கும் சரி, லேவி கோத்திரத்தைச் சேர்ந்த மற்ற எல்லாருக்கும் சரி, இஸ்ரவேலில் பங்கோ சொத்தோ கொடுக்கப்படாது. யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற தகன பலிகளிலிருந்து, அதாவது அவருடைய பங்கிலிருந்து, அவர்கள் சாப்பிடுவார்கள்.+ 2 அதனால், அவர்களுடைய சகோதரர்களோடு அவர்களுக்கு எந்தச் சொத்தும் கிடையாது. யெகோவா அவர்களுக்குச் சொன்னபடி, அவர்தான் அவர்களுடைய சொத்து.
3 ஜனங்களிடமிருந்து குருமார்கள் உரிமையுடன் பெற்றுக்கொள்ள வேண்டியவை இவைதான்: ஒரு மாட்டையோ ஆட்டையோ பலி செலுத்துபவர், அதன் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் குருவானவருக்குக் கொடுக்க வேண்டும். 4 முதலில் விளைந்த தானியங்களையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் முதலில் கத்தரித்த ஆட்டு மயிரையும் குருவானவருக்குக் கொடுக்க வேண்டும்.+ 5 யெகோவாவின் பெயரில் என்றென்றும் சேவை செய்ய அவரையும் அவருடைய மகன்களையும்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்;+ மற்ற கோத்திரங்களில் இருக்கிறவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.
6 ஆனால், இஸ்ரவேல் நகரம் ஒன்றில் வாழ்கிற ஒரு லேவியன்+ அந்த நகரத்தைவிட்டு யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு*+ போக ஆசைப்பட்டால், 7 அங்கே யெகோவாவின் முன்னிலையில் சேவை செய்கிற தன்னுடைய சகோதரர்களான லேவியர்களைப்+ போலவே அவனும் தன் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் சேவை செய்யலாம். 8 மற்ற லேவியர்களுக்குக் கிடைக்கிற அதே அளவு உணவை அவனும் பெற்றுக்கொள்வான்.+ அதோடு, பரம்பரைச் சொத்துகளை விற்பதன் மூலம் கிடைப்பதையும் அவன் அனுபவிப்பான்.
9 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்துக்குப் போன பின்பு, மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களை நீங்கள் கற்றுக்கொள்ளக் கூடாது.+ 10 உங்களில் யாருமே தன் மகனை அல்லது மகளை நெருப்பில் பலி கொடுக்க* கூடாது.+ குறிசொல்லவோ,+ மாயமந்திரம் செய்யவோ,+ சகுனம் பார்க்கவோ,+ சூனியம் வைக்கவோ,+ 11 வசியம் செய்யவோ, ஆவிகளோடு பேசுகிறவரிடம்+ அல்லது குறிசொல்கிறவரிடம் போகவோ,+ இறந்தவர்களைத் தொடர்புகொள்ளவோ கூடாது.+ 12 ஏனென்றால், இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள். இந்த அருவருப்பான காரியங்களைச் செய்வதால்தான் உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தத் தேசத்தாரை உங்களிடமிருந்து துரத்திவிடுகிறார். 13 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும்.+
14 உங்கள் முன்னாலிருந்து துரத்தியடிக்கப்படுகிற அந்தத் தேசத்தார், மாயமந்திரம் செய்கிறவர்களின் பேச்சையும் குறிசொல்கிறவர்களின் பேச்சையும் கேட்டு வந்தார்கள்.+ ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா இப்படிப்பட்ட எதையும் செய்ய உங்களை அனுமதிக்கவில்லை. 15 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார். அவர் சொல்வதை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.+ 16 ஓரேபில் கூடிவந்த நாளில்+ நீங்கள் கேட்டுக்கொண்டபடிதான், உங்கள் கடவுளாகிய யெகோவா அவரை நியமிக்கப்போகிறார். அந்த நாளில் நீங்கள், ‘இனி நாங்கள் எங்களுடைய கடவுளாகிய யெகோவாவின் குரலைக் கேட்காமலும், பற்றியெரிகிற அவருடைய நெருப்பைப் பார்க்காமலும் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் நாங்கள் செத்தே விடுவோம்’+ என்று சொன்னீர்கள். 17 அதற்கு யெகோவா என்னிடம், ‘அவர்கள் சொல்வது சரிதான். 18 நான் அவர்கள் நடுவிலிருந்து உன்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை நியமிப்பேன்.+ என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்.+ என்னுடைய எல்லா கட்டளைகளையும் அவர்களுக்கு அவர் சொல்வார்.+ 19 அவர் என் பெயரில் சொல்கிற வார்த்தைகளைக் கேட்டு நடக்காதவனை நான் தண்டிப்பேன்.+
20 நான் சொல்லாத விஷயத்தை அகங்காரத்தோடு* என் பெயரில் சொல்லும் தீர்க்கதரிசியும், மற்ற தெய்வங்களின் பெயரில் பேசும் தீர்க்கதரிசியும் கொல்லப்பட வேண்டும்.+ 21 ஆனாலும், “இதை யெகோவா சொல்லவில்லை என்பது எனக்கு எப்படித் தெரியும்?” என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். 22 அந்தத் தீர்க்கதரிசி யெகோவாவின் பெயரில் பேசியது நிறைவேறாமல் போனால் அல்லது பொய்த்துப் போனால், அதை யெகோவா சொல்லவில்லை என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். அந்தத் தீர்க்கதரிசிதான் அதை அகங்காரத்தோடு சொல்லியிருக்கிறான். அவனுக்கு நீங்கள் பயப்படக் கூடாது’ என்று சொன்னார்” என்றார்.