நீங்கள் கடவுளோடு நடக்கமுடியும்
“இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய [சந்திப்பு திட்டம் பண்ணிக் கொண்டாலொழிய, NW] ஒருமித்து நடந்து போவார்களோ?” என்று தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் கேட்கிறான். (ஆமோஸ் 3:3) ஆனால் கடவுளோடு நடப்பதற்கு நீங்கள் “சந்திப்பு திட்டம்” பண்ணிக் கொள்ளக்கூடுமா?
ஆம்! ஏனெனில் உண்மையிலேயே தம்முடைய நண்பர்களாக இருக்கும்படியான அழைப்பை நமக்கு கொடுப்பதன் மூலம் கடவுள் தாமே முந்திக்கொள்கிறார். இப்படிப்பட்ட நட்புரவிற்குள் அவர் நம்மை பலவந்தப்படுத்துவதில்லை. மாறாக தம்முடைய மகத்துவமான பண்புகளின் மூலம் அவர் நம்மை கவர்ந்திழுக்கிறார். ஏன், கடவுளின் நற்குணங்களுக்கு சிருஷ்டிப்பு ஒன்றே அபரிமிதமான சான்றுகளை அளிக்கிறது! “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலக முண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.” (ரோமர் 1:20) அல்லது அப்போஸ்தலர் 14:17-ல் பவுல் சொன்னபடி: “அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மை குறித்து சாட்சி விளங்க பண்ணாதிருந்ததில்லை.”
ஆகையால், ஏனோக்கு, நோவா போன்ற மனிதர்கள் கடவுள் அளித்த நட்புரவிற்கான வரவேற்பை ஏற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களாயிருந்தார்கள். கடவுள் “மகிமையையும் கனத்தையும் பெற்றுக் கொள்ளுவதற்கு பாத்திரராயிருக்கிறார்.” என்பதை கண்டுணர்ந்தனர். (வெளிப்படுத்துதல் 4:11) எனவே அவர்கள் கடவுளுடைய அழைப்பை ஏற்று விசுவாசத்தோடு அவரை அணுகினார்கள். “விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்” என்று பவுல் சொன்னான். “ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) எனவே கடவுளோடு ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள தேடுவதன் மூலம் நீங்களும்கூட அவருடன் ஒரு “சந்திப்பு திட்டம்” பண்ணிக்கொள்ளலாம். மேலும் சங்கீதக்காரன் “நீர் [கடவுள்] தெரிந்துகொண்டு சேர்த்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW]”—சங்கீதம் 65:4.
கடவுளுடன் கொள்ளும் நட்புறவு அவருடைய நிபந்தனைகளுக்கேற்ப செய்யப்படுவதன் காரணமாக ஒருவர் அவருடயை வார்த்தையாகிய பைபிளை படிக்கவேண்டும். “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று” கண்டறிந்துகொள்வதற்காக அப்படி செய்யவேண்டும். (ரோமர் 12:2) உண்மையில், “ஒருவன் எனக்கு தெரிவிக்காவிட்டால் எனக்கு [ஏசாயா தீர்க்கதரிசனம்] எப்படி தெரியும் [புரியும்]?” என்று பின்னால் பைபிள் காலங்களில் உண்மை மனதோடு தேடியவர்கள் கேட்டார்கள். ஒருவேளை நீங்கள் அவ்வாறே உணரக்கூடும். என்றபோதிலும் பிலிப்பு என்ற பெயருள்ள ஒரு சீஷன் இந்த மனிதனிடம் சென்று அவனுக்கு தீர்க்கதரிசனத்தை விளக்கும்படி கடவுள் அவனை வழிநடத்தினார். (அப்போஸ்தலர் 8:30-35) இன்று உண்மை மனதோடு அவரை தேடக்கூடியவர்களுக்கு அதைவிட குறைந்த அக்கறையை கடவுள் காட்டுகிறாரா? ஏன், நீங்கள் பைபிளை சார்ந்த இந்த பத்திரிகையை படித்துக் கொண்டிருப்பதுதானே உங்கள் பேரில் கடவுள் கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது! அப்படியானால் கடவுளைப்பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்வதற்கு யாரிடமிருந்து நீங்கள் இந்த பத்திரிகையை வாங்கினீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி அளிக்கும்படி அனுமதிப்பது ஞானமானதாக இருக்குமல்லவா?
காணமுடியாதவரை காண்பது
கடவுளைப்பற்றிய அறிவில் நீங்கள் இன்னமும் வளருகையில் அவர் உங்களுக்கு இன்னும் அதிகமதிகமாய் மெய்யான ஒருவராக ஆவார். அவர் பெயரில்லாத ஒரு சக்தி மூட்டை அல்ல. ஆனால் பெயரையுடைய ஒரு ஆள் என்பதை விரைவில் மதித்துணருவீர்கள்! சங்கீதம் 83:17-ல் பைபிள் சொல்வதாவது: “யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணர” வேண்டும். ஒரு ஆளாக யெகோவா தேவன் பண்புகளை உடையவராக இருக்கிறார். விருப்பங்களையும் வெறுப்புகளையும் கொண்டவராக உணர்ச்சிகளையும்கூட உடையவராக இருக்கிறார்!—யாத்திராகமம் 34:6, 7; சங்கீதம் 78:40-ஐ ஒப்பிட்டு பாருங்கள்.
கடவுள் நீதியான தராதரங்களையும் கொண்டிருக்கிறார். உதராணமாக நீதிமொழிகள் 3:32 சொல்வதாவது: “மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.” யோசேப்பு அந்த நீதிமான்களில் ஒருவனாக இருந்தான். அவனுடைய எகிப்திய எஜமானனாகிய போர்த்திபாரின் மனைவி எப்படி அடிக்கடி தன்னோடே ஒழுக்கயீனமான பாலுறவு கொள்ளும்படி யோசேப்பிடம் பேசிக்கொண்டேயிருந்தாள் என்பதை குறித்து பைபிள் சொல்லுகிறது. என்றபோதிலும் அதை மறுப்பவனாய் அவன் சொன்னதாவது: “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.”ஆதியாகமம் 39:9.
யெகோவா தேவன் யோசேப்புக்கு உண்மையான ஒரு நபராக இருந்தார். அவன் அவரிடத்தில் ஆரோக்கியமான பயத்தை கொண்டிருந்து அவருடைய நிஜமான கண்பார்வையிலிருப்பதை போன்று செயல்பட்டான். சங்கீதக்காரன் சொன்னதைபோன்று யோசேப்பு இருந்தான்: “கர்த்தரை எப்பெழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.” (சங்கீதம் 16:8; நீதிமொழிகள் 3:5, 6-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்) மோசேயும் இதற்கொப்பான விசுவாசத்தை கொண்டிருந்தான். அவன் “காணமுடியாதவரை காண்பவராகி மன உறுதியோடிருந்தான்.”kindly check Tamil Bible—எபிரெயர் 11:27, NW.
ஆகவே கடவுளோடு நடத்தல் என்றால் அறிவை பெற்றுக்கொள்ளுவதை காட்டிலும் அதிகத்தை குறிக்கிறது. கடவுளால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் இசைவாக இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கை முறையை கடைபிடித்து வருவதை குறிக்கிறது! அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியது போல: “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதை செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்,”—1 கொரிந்தியர் 10:31
கடவுளுடன் நடப்பது—அதன் நன்மைகள்
“தசை மற்றும் ஆற்றலினுடைய அதன் அனைத்து சிக்கனத்திற்கும், நடப்பதையே மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளால் வியப்பூட்டும் பல்வேறு விதமான நன்மைகளுக்காக ஆதரிக்கப்படுகிறது,” என்று சுஸ்மன் மற்றும் குட்ஹி என்பவர்கள் நடப்பதன் மாயவித்தை (The Magic of Walking) என்ற ஆங்கில புத்தகத்தில் எழுதினார்கள். உரிமை பாராட்டப்படும் நன்மைகளுள் எடை கட்டுப்பாடு, மேம்பட்ட உறக்கம், இறுக்கமான நிலையின் தளர்வு மற்றும் இருதய கோளாறுகளின் தடுப்பு ஆகியவை அடங்கியிருக்கின்றன. சரீரப்பிரகாரமான நடையில் இப்படிப்பட்ட காரியங்கள் உண்மையாயிருக்குமானால் கடவுளோடு நடத்தல் அதைப் பார்க்கிலும் அதிக பலனுள்ளதாயிருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
என்றபோதிலும் ஏதோ ஆழமான உணர்ச்சிவயப்படும் ஒரு அனுபவத்தை எதிர்பாராதேயுங்கள். ஆனால் நீங்கள் விசுவாசத்தோடு ஜெபிப்பது மற்றும் செயல்படுவது ஆகியவற்றின் மூலம் தேவனிடத்தில் [நெருங்கிச்] சேருகையில்” “எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை” நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள். (யாக்கோபு 4:8; பிலிப்பியர் 4:6, 7) உதாரணமாக ஒரு பெண் தொடர்ச்சியான மனசோர்வின் காரணமாக மிதமிஞ்சி குடிப்பதிலும் போதை மருந்துகளை பயன்படுத்துவதிலும் ஈடுபட்டவளாயிருந்தாள். கிறிஸ்தவ மண்டலத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு சென்று முடிவு காண்பதற்குரிய முற்சிகளெடுத்திருக்கிறாள். ஆனால் பின்பு யெகோவாவின் சாட்சிகளுடன் அவள் பைபிளை படிக்க ஆரம்பித்தாள். அவள் சொன்னதாவது: “நான் முயன்று பார்த்த வேறு எதுவும் எனக்கு விடுதலையை அளிக்க முடியாதிருக்க யெகோவாவின் நோக்கங்களை புரிந்து கொண்டதானது வாழ்க்கையில் எனக்கு மெய்யான ஒரு நோக்கத்தை கொடுத்தது.” ஆம், ஒருவன் கடவுளோடு நடப்பதற்கு ஆரம்பிக்கையில் அவன் ஆவிக்குரியதும் உணர்ச்சி சம்பந்தப்பட்டதுமான நன்மைகளை நிச்சயமாகவே கொண்டுவரக்கூடிய பாதையில் வழிநடத்தப்படுகிறான்.—ஏசாயா 30:21-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
மற்றொரு நன்மையானது, பகுத்துணர்வுள்ள அபிகாயில் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணால் சுட்டிக்காட்டப்பட்டது. அவள் தாவீது ராஜாவிடம் சொன்னதாவது: “உம்மைத் துன்பப்படுத்தவும் உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் [யெகோவாவின், NW] ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்.” இதை கற்பனை செய்து பாருங்கள்! தன்னுடைய சத்துருக்களால் அச்சுறுத்தப்பட்டபோது ஓரு விலைமதிப்புள்ள பெருள் பத்திரமாக வைக்கப்படுவதற்காக கவனமாக கட்டு கட்டிவைக்கப்படுவதை போன்று தாவீதின் ஜீவன் யெகோவாவின் பாதுகாப்பு பொறுப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடவுளுடைய ஊழியர்களுக்கு எப்பொழுதுமே சரீரப்பிரகாரமான பாதுகாப்பு அளிக்கப்படும் என்பதை இது அவசியமாகவே குறிக்காத போதிலும் இன்று அவருடன் நடக்கக்கூடியவர்களின் நித்திய நலன்களை அவர் பாதுகாப்பார் என்பது நிச்சயமே!—1 சாமுவேல் 25:29; சங்கீதம் 116:15; ஒப்பிட்டுப் பார்க்கவும்.
அப்படியானால் இது கிறிஸ்தவர்கள் ஏதோ ஒரு வகையான இனிமை வாழ்க்கையை வாழ்பவர்கள் போன்று மனிதவர்க்கத்தினருக்கு பொதுவாக நேரிடும் பிரச்னைகளிலிருந்து விலக்களிக்கப்படுவார்கள் என்பதை குறிக்காது. சாலொமோன் குறிப்பிட்டதாவது “சமயமும் தேவ செயலும் [எதிர்பாராத சம்பவங்களும், NW] எல்லாருக்கும் நேரிடுகிறது. (பிரசங்கி 9:11) உதாரணமாக அப்போஸ்தலனாகிய பவுல் “மாம்சத்திலே ஒரு முள்” காரணமாக அவதியுற்றான். ஒருவேளை அது சரீர சம்பந்தமான ஏதோ ஒரு பலவீனமாக இருந்திருக்கலாம். (2 கொரிந்தியர் 12:7; கலாத்தியர் 4:13-15) அவனுடைய உடனாளியாகிய தீமோத்தேயுவும் அதைப் போன்றே “அடிக்கடி நேரிட்ட பலவீனங்களால்” அவதியுற்றான். (1 தீமோத்தேயு 5:23) அவ்வாறே இன்றும் கிறிஸ்தவர்களுக்கு வியாதிகளும் மேலும் எப்பொழுதாவது சோர்வுகளும் அல்லது மன அழுத்தங்களும் ஏற்படுகின்றன.
கூடுதலாக, யெகோவா தேவன் சில சமயங்களில் யோசேப்பு சிறையிலடைக்கப்படும்படி அனுமதித்தபோது என்ன செய்தாரோ அதைப்போன்றே நம்மையும் சுத்திகரிப்பதற்காக தற்காலிக சோதனைகளை அனுமதிக்கிறார். (சங்கீதம் 105:17-19) ஒரு சிலர் ஸ்தேவானுக்கு நேரிட்டதைபோன்று கொடூரமான துன்புறுத்துவோரின் கைகளில், முன்னதாகவே மரணமடையக்கூடும். (அப்போஸ்தலர் 7:57-60) ஆனால் கடவுளுடைய நண்பர்கள் ஒருபோதும் கைவிடப்பட்டவர்களாய் உணரக்கூடாது. (2 கொரிந்தியர் 4:8, 9) “தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே.” (எபியெர் 6:10) பல ஆண்டுகள் அநியாய சிறைவாசத்தினூடே உண்மையோடு நிலைத்திருந்த ஒரு கிறிஸ்தவ பெண் சொன்னதாவது: “யெகோவாவின் சேவையிவ் வைராக்கியத்தோடு சகித்து நிலைத்திருக்கக்கூடிய ஒருவருமே ஏமாற்றத்தை அனுபவிப்பதில்லை என்பதை குறித்து நான் வெகு ஆழமாய் நம்புகிறேன். நான் யெகோவாவின் பேரிலும் மேலும் அவருடைய உறுதியளிக்கும் பின்வரும் வார்த்தைகளின் பேரிலும் என் முழு இருயதத்தோடுகூடிய நம்பிக்கையை கொண்டிருக்கிறேன்: ‘நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை.’”—எபிரெயர் 13:5.
நம்முடைய போராட்டத்தைக் காத்துகொள்வதில் உதவி
இப்படிப்பட்ட விசுவாசமுள்ள போக்கை காத்துக்கொள்வது சுலபமல்ல. சாத்தானும் அவனுடைய பொல்லாத ஆவிகளும் நம்மை வலையினுள் சிக்க வைப்பதில் ஆர்வமுள்ளோராயிருக்கின்றனர். (எபேசியர் 6:12) அதன் பின்பு தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையொன்று இருக்கிறது. கவர்ச்சிகரமான கண்ணிகளை கொண்டிருக்கிறது. தேமா என்ற பெயருடைய ஒரு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவன் “இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்ததன்” காரணமாக திசை மாறி போய்விட்டான். (2 தீமோத்தேயு 4:10) இறுதியாக பொல்லாத சிந்தனைகளை கொண்ட நம்முடைய சொந்த பாவமுள்ள மாம்சம் தானே இருக்கிறது. (ரோமர் 7:21-23) கடவுளோடு தொடர்ந்து நடக்க வேண்டுமானால் இந்த செல்வாக்குகளுக்கு எதிராக தொடர்ச்சியான ஒரு போராட்டம் அவசியமாக இருக்கிறது.
இதன் காரணமாகவே, கடவுள் மூன்று சக்திவாய்ந்த கருவிகள் நமக்கு உதவியாக கிடைக்கக்கூடும்படியாக செய்திருக்கிறார். (1) தேவையான வழிநடத்துதலை கொடுக்கக்கூடிய அவருடைய வார்த்தையாகிய பைபிள் (சங்கீதம் 119:105) (2) அவருடைய காணக்கூடிய அமைப்பு, கடவுளுடைய ஆவிக்குரிய போஷிக்கும் திட்டத்தை நிறைவேற்றக்கூடிய கிறிஸ்தவ சபை. (மத்தேயு 24:45-47; எபேசியர் 4:11-16) இந்த பத்திரிகையை பிரசுரிக்கக்கூடிய காவற்கோபுர சங்கம் அந்த அமைப்போடு நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. (3) ஜெபத்தின் மூலமும் அவருடைய வார்த்தையை படிப்பதன் மூலமும் அவருடைய ஜனங்களோடு கூட்டுரவு கொள்ளுவதன் மூலமும் நாம் பெறக்கூடிய அவருடைய பரிசுத்த ஆவி. இந்த ஏற்பாடுகள் ஏதாவது ஒன்றை நாம் அசட்டை செய்வதானது, வினைமையான தாறாக இருக்கும். தீர்க்கதரிசியாகிய மீகா நம்மை உற்சாகப்படுத்துவதாவது: “தேவனோடு மனத்தாழ்மையாய் [அடக்கமாய், NW] நட.” (மீகா 6:8) அப்படியானால் நாம் நம்முடைய வரம்புகளை உணர்ந்தவர்களாய் கடவுள் மீது முற்றிலும் சார்ந்தவர்களாக இருப்பதை இது குறிக்கிறது.
மெய்யாகவே, கடவுளோடு நடக்கும் நமது நடையானது புயற்காற்றின்போது தன் தந்தையோடு நடந்து செல்லக்கூடிய ஒரு சிறு பெண்ணிற்கு ஒப்பிடப்படலாம். அவள் அவருடைய கையை விட்டுவிடவோ அல்லது தன் சொந்த வழியில் செல்லவோ தீர்மானித்தால் அவள் விரைவில் காணாமற்போய்விடுவாள். ஆனால் அவள் அவரை இறுக்கமாக பிடித்துக்கொள்வாளேயாகில் தன் தந்தையோடு பாதுகாப்பாயும் மற்றும் நம்பிக்கையுடன் நடந்து செல்லக்கூடும். நாமும்கூட தம்முடைய வார்த்தை மற்றும் அமைப்பின் மூலமாக கடவுள் கொடுக்கக்கூடிய வழிநடத்துதலிற்கு நம்மை கீழ்ப்படுத்திக் கொள்வதற்கு கவனமாக இருக்கவேண்டும். சுயேச்சையாக செல்வது நம்பிக்கையில்லாத அளவு நாம் காணாமற்போய்விடுவதற்கே வழிநடத்தும். என்றபோதிலும் அடக்கத்தோடு கடவுளுடன் நடந்து செல்வதன் மூலம் வந்துகொண்டிருக்கும் அர்மகெதோன் புயலினூடே பாதுகாப்பாக வழிநடத்தப்பட்டு வாக்களிக்கப்பட்ட புதிய ஒழுங்கிற்குள் தப்பிப் பிழைக்கலாம். அங்கே மரணமும் வேதனையும் கடந்தகால காரியங்களாக இருக்கும். (வெளிப்படுத்துதல் 16:16; 21:3, 4; 2 பேதுரு 3:13) ஆகையால் தம்மோடு நடப்பதற்காக கடவுள் கொடுக்கும் கிருபை பொருந்திய அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? (w85 9/1)
[பக்கம் 6-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையும், ஆவியும், அமைப்பும் நாம் ‘கடவுளோடு நடப்பதில்’ உண்மையுள்ளவர்களாய்த் தொடர்ந்து செல்ல நமக்கு உதவக்கூடும்
“யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல் இருப்பார்கள்”—சங்கீதம் 125:1, NW.