நீங்கள் கடவுளோடு நடப்பீர்களா?
‘உங்கள் கடவுளோடு தன்னடக்கத்துடன் நடவுங்கள்.’—மீகா 6:8, Nw.
1, 2. நம்மீது யெகோவாவுக்கு இருக்கும் உணர்ச்சிகளை, குழந்தைக்கு நடக்கப் பழக்கிவிடும் ஓர் அப்பாவின் உணர்ச்சிகளோடு எவ்வாறு ஒப்பிடலாம்?
தட்டுத்தடுமாறி நிற்கும் ஒரு குழந்தை, பாசத்தோடு இருகரம் நீட்டும் அப்பாவின் கைகளை எட்டிப்பிடிக்க தத்தித்தத்தி அடியெடுத்து வைக்கிறது. இது ஒரு சாதாரண விஷயமாகத் தெரியலாம், ஆனால் அதன் அப்பா அம்மாவுக்கோ வாழ்க்கையில் அது நெஞ்சைவிட்டு நீங்காத ஒரு தருணம், ஆயிரமாயிரம் கற்பனைகள் மனதில் பொங்கியெழுகிற சமயம். சில மாதங்களுக்கு, சில வருடங்களுக்கும்கூட அந்தக் குழந்தையுடன் கைகோர்த்துக்கொண்டு நடக்க அந்தப் பெற்றோர் ஆசை ஆசையாய் இருக்கிறார்கள். இன்னும் பல வருடங்களுக்கு, பல வழிகளில் அந்தக் குழந்தைக்கு வழிகாட்டவும் ஆதரவளிக்கவும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
2 யெகோவா தேவனுக்கும் பூமியிலுள்ள தம்முடைய குழந்தைகள்மீது இதுபோன்ற உணர்ச்சிகளே இருக்கின்றன. தம்முடைய ஜனமான இஸ்ரவேலரை, அதாவது எப்பிராயீமைக் குறித்து ஒருமுறை அவர் இவ்வாறு சொன்னார்: “நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன் . . . மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன்.” (ஓசியா 11:3, 4) ஒரு குழந்தையைப் பொறுமையுடன் நடக்கப் பழக்கிவிடும் ஓர் அன்பான அப்பாவாக, தடுமாறிவிழும் குழந்தையை வாரி அணைத்துக்கொள்கிற ஓர் அன்பான அப்பாவாக இங்கே யெகோவா தம்மை விவரிக்கிறார். மிகச் சிறந்த அப்பாவான யெகோவா நாம் எப்படி நடக்க வேண்டுமென்று கற்றுத்தர ஆர்வமாயிருக்கிறார். நன்கு நடக்க பழகிவரும் வேளையில் நம்முடன் சேர்ந்து நடப்பதில் அவரும் மகிழ்ச்சி அடைகிறார். ஆம், நம்மால் கடவுளோடு நடக்க முடியும்! இதையே இந்தக் கட்டுரையின் தலைப்பு வசனம் காண்பிக்கிறது. (மீகா 6:8, NW) ஆனால், கடவுளோடு நடப்பது என்றால் என்ன? நாம் ஏன் அவரோடு நடக்க வேண்டும்? அது எப்படிச் சாத்தியம்? கடவுளோடு நடப்பதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன? இந்த நான்கு கேள்விகளையும் ஒவ்வொன்றாக இப்போது சிந்திக்கலாம்.
கடவுளோடு நடப்பது என்றால் என்ன?
3, 4. (அ) கடவுளோடு நடப்பதைக் குறித்த வர்ணனை மிக அழகிய வர்ணனை என்று ஏன் சொல்கிறோம்? (ஆ) கடவுளோடு நடப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
3 உண்மைதான், மாம்ச உருவிலுள்ள ஒரு மனிதனால், ஆவி உருவிலுள்ள யெகோவாவுடன் சொல்லர்த்தமாக நடக்க முடியாது. (யாத்திராகமம் 33:20; யோவான் 4:24) ஆகையால், மனிதர்கள் கடவுளோடு நடப்பதாக பைபிள் சொல்லும்போது, அது அடையாள மொழியையே பயன்படுத்துகிறது. தேசிய, கலாச்சார எல்லைகளையெல்லாம் கடந்த மிக அழகிய வர்ணனையாக அது இருக்கிறது, எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாகவும் இருக்கிறது. ஒரு நபர் மற்றொரு நபரோடு சேர்ந்து நடக்கும் விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியாத யாரேனும் எந்தக் காலத்திலாவது எந்த இடத்திலாவது வாழ்கிறார்களா என்ன? இந்த வர்ணனை அன்பையும் அன்யோன்யத்தையும் வெளிப்படுத்துகிறது, அல்லவா? இத்தகைய உணர்ச்சிகள் கடவுளோடு நடப்பது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள ஓரளவு உதவுகின்றன. என்றாலும், இதைப் பற்றி இன்னும் விளக்கமாகப் பார்க்கலாம்.
4 கடவுளுக்கு உண்மையாக இருந்த ஏனோக்கையும் நோவாவையும் உங்கள் மனதிற்குக் கொண்டுவாருங்கள். அவர்கள் கடவுளோடு நடந்துகொண்டிருந்ததாக ஏன் விவரிக்கப்படுகிறார்கள்? (ஆதியாகமம் 5:24; 6:9; NW) பைபிளில், ‘நடப்பது’ என்ற வார்த்தை, குறிப்பிட்ட ஒரு போக்கைத் தொடர்ந்து பின்பற்றுவதையே பெரும்பாலும் அர்த்தப்படுத்துகிறது. ஏனோக்கும் நோவாவும் யெகோவா தேவனுடைய சித்தத்திற்கு இசைவான ஒரு வாழ்க்கைப் போக்கைத் தேர்ந்தெடுத்து அதைப் பின்பற்றினார்கள். தங்களைச் சுற்றி வாழ்ந்த ஜனங்களைப் போலின்றி, வழிநடத்துதலுக்காக யெகோவாவை நோக்கியிருந்தார்கள், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள். அவரை நம்பினார்கள். ஆனால், அவர்களுக்காக யெகோவாதான் எல்லாத் தீர்மானங்களையும் எடுத்தார் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. தெரிவுசெய்வதற்கான சுதந்திரத்தை மனிதர்களுக்கு யெகோவா கொடுத்திருக்கிறார், அந்த வரத்தை நம்முடைய சொந்த ‘புத்தியுடன்’ சேர்த்துப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (ரோமர் 12:1) என்றாலும், தீர்மானங்களை எடுக்கையில் யெகோவாவின் ஈடிணையற்ற உன்னத அறிவின் உதவியைக்கொண்டு நம்முடைய புத்தியை வழிநடத்த நாம் தாழ்மையோடு அனுமதிக்கிறோம். (நீதிமொழிகள் 3:5, 6; ஏசாயா 55:8, 9) இவ்வாறு, யெகோவாவுடன் நெருங்கிய தோழமையை அனுபவித்தபடியே வாழ்க்கைப் பயணத்தைத் தொடருகிறோம்.
5. ஒருவருடைய ஆயுளின் அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவது பற்றி இயேசு ஏன் பேசினார்?
5 வாழ்க்கையை ஒரு பயணத்துடன் அல்லது நடை பயணத்துடன் ஒப்பிட்டு பைபிள் அடிக்கடி பேசுகிறது. சில சமயங்களில், அந்த ஒப்புமை நேரடியாகக் குறிப்பிடப்படுகிறது, ஆனால் வேறு சமயங்களில் அது மறைமுகமாகத் தெரிவிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, இயேசு இவ்வாறு சொன்னார்: “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர [“ஆயுளின்,” NW] அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத்தேயு 6:27) இந்த வார்த்தைகளில் ஏதோவொன்று உங்களைக் குழப்புவதாக இருக்கலாம். இயேசு எதற்காக ஒரு நபருடைய “ஆயுளின் அளவோடு ஒரு முழத்தைக்” கூட்டுவது பற்றிப் பேச வேண்டும்? முழம் என்பது நீளத்தை, அல்லது தூரத்தை, கணக்கிட அல்லவா பயன்படுத்தப்படுகிறது? காலத்தை வைத்துத்தானே ஆயுளைக் கணக்கிட முடியும்?a வாழ்க்கையை ஒரு பயணத்திற்கு ஒப்பிட்டே இயேசு பேசினார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆக, கவலைப்படுவது உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒரு சிறிய அடியைக்கூட சேர்க்க உதவாது என்பதையே அவர் உண்மையில் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்படியானால், எவ்வளவு தூரம் நாம் கடவுளோடு நடப்போம் என்பதை நம்மால் நிர்ணயிக்க முடியாது என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லவே இல்லை! இது நம்முடைய இரண்டாவது கேள்விக்கு, அதாவது நாம் ஏன் கடவுளோடு நடக்க வேண்டும் என்ற கேள்விக்கு நம்மை வழிநடத்துகிறது.
நாம் ஏன் கடவுளோடு நடக்க வேண்டும்?
6, 7. அபூரண மனிதர்களுக்கு எது கட்டாயம் தேவைப்படுகிறது, அந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய நாம் ஏன் யெகோவாவின் உதவியை நாட வேண்டும்?
6 நாம் ஏன் யெகோவா தேவனோடு நடக்க வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் எரேமியா 10:23-ல் (NW) கொடுக்கப்பட்டிருக்கிறது: ‘யெகோவாவே, மனிதனுடைய வழி அவனுக்கு உரிமையானதல்ல என்பதை நான் நன்றாகவே அறிவேன். தன் சொந்த நடையை நடத்தக்கூட அவனுக்கு உரிமை இல்லை.’ ஆகையால், மனிதர்களான நமக்கு நம்முடைய சொந்த வாழ்க்கையை நடத்துவதற்கு வேண்டிய திறமையும் கிடையாது, உரிமையும் கிடையாது. நமக்குக் கட்டாயம் வழிநடத்துதல் தேவை. கடவுளிடமிருந்து முற்றிலுமாக விலகி, தங்களுக்கு இஷ்டமான வழியில் நடக்கப் பிடிவாதமாய் இருப்பவர்கள், ஆதாம் ஏவாள் செய்த அதே தவறைத்தான் செய்கிறார்கள். அந்த முதல் தம்பதியர் எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்கும் உரிமையைத் தாங்களாக எடுத்துக்கொண்டார்கள். (ஆதியாகமம் 3:1-6) ஆனால், அந்த ‘உரிமை நமக்கு இல்லவே இல்லை.’
7 வாழ்க்கை எனும் பயணத்தில் வழிநடத்துதல் தேவை என உங்களுக்குத் தோன்றுகிறது, அல்லவா? அன்றாடம், சிறிய, பெரிய தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டியிருக்கிறது. இதில் சில தீர்மானங்கள் கடினமானவை, நம் எதிர்காலத்தையே, ஏன் நம் பிரியமானவர்களின் எதிர்காலத்தைக்கூட மாற்றக்கூடியவை. ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள், கணக்கிட முடியாதளவு நம்மைவிட வயதில் மூத்தவரான ஒருவர், ஞானமான ஒருவர் அத்தகைய எல்லாத் தீர்மானங்களையும் எடுப்பதில் நமக்கு அன்புடன் வழிநடத்துதலைக் கொடுப்பதற்குச் சந்தோஷப்படுகிறார்! வருத்தகரமாக, பெரும்பாலோர் இன்று தாங்களாகவே தீர்மானம் செய்யவும், தங்கள் நடைகளை தாங்களாகவே நடத்திக்கொள்ளவும்தான் விரும்புகிறார்கள். “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்” என்று நீதிமொழிகள் 28:26-ல் சொல்லப்பட்டுள்ள சத்தியத்தை அவர்கள் அசட்டை செய்கிறார்கள். ஆனால், திருக்குள்ள நம் இருதயத்தை நம்புவதால் வருகிற விபரீதங்களிலிருந்து நாம் இரட்சிக்கப்பட, அதாவது தப்பித்துக்கொள்ள வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (எரேமியா 17:9) நாம் ஞானமாக நடக்க வேண்டுமென்று விரும்புகிறார்; அதோடு, நம்முடைய ஞானமுள்ள வழிகாட்டியாகவும் போதகராகவும் அவரைக் கருதி அவர்மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டுமென்றும் விரும்புகிறார். அவ்வாறு செய்யும்போது, நம்முடைய வாழ்க்கைப் பயணம் பாதுகாப்பாக, மனநிறைவாக, சந்தோஷமாக இருக்கும்.
8. பாவமும் அபூரணமும் மனிதர்களை எந்த இடத்திற்கு நடத்திச்செல்கின்றன, என்றாலும் நம்மைக் குறித்ததில் யெகோவா எதை விரும்புகிறார்?
8 நாம் ஏன் கடவுளோடு நடக்க வேண்டும் என்பதற்கு மற்றொரு காரணம் எவ்வளவு தூரம் நாம் நடக்க விரும்புகிறோம் என்பதை உட்படுத்துகிறது. சோகமான ஓர் உண்மையை பைபிள் தெரிவிக்கிறது. ஒரு விதத்தில், அபூரண மனிதர்கள் எல்லோருமே ஒரே இடத்தை நோக்கித்தான் நடந்துகொண்டிருக்கிறோம். முதுமையோடு வரக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி விவரிக்கையில், பிரசங்கி 12:5 இவ்வாறு சொல்கிறது: ‘மனுஷன் தன் நித்திய வீட்டுக்கு [நடந்து] போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரிகிறார்கள்.’ அந்த ‘நித்திய வீடு’ எது? அது கல்லறை ஆகும், பாவமும் அபூரணமும் நம்மை வழிநடத்திச்செல்கிற இடமாகும். (ரோமர் 6:23) என்றாலும், தொட்டிலிலிருந்து சுடுகாடுவரையான தொல்லைமிகுந்த ஒரு குறுகியகால நடைபயணத்தைவிட மேம்பட்ட ஒரு பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டுமென யெகோவா விரும்புகிறார். (யோபு 14:1) நாம் கடவுளோடு நடந்தால் நித்திய காலத்திற்கு அவ்வாறு நடக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும், அதுதான் ஆரம்பத்திலிருந்தே அவருடைய விருப்பமாக இருந்தது. உங்களுடைய விருப்பமும் அதுதானே? அப்படியானால், உங்களுடைய பிதாவான அவரோடு நீங்கள் நிச்சயம் நடக்க வேண்டும்.
நாம் எவ்வாறு கடவுளோடு நடக்கலாம்?
9. யெகோவா தம் மக்களிடமிருந்து ஏன் சில சமயங்களில் மறைந்திருந்தார், ஆனாலும் ஏசாயா 30:20-ன்படி அவர் என்ன உறுதியை அளித்தார்?
9 நாம் சிந்திக்கிற மூன்றாவது கேள்வி, மிகுந்த கவனத்துடன் ஆராய வேண்டிய கேள்வியாகும். நாம் எவ்வாறு கடவுளோடு நடக்கலாம் என்பதே அந்தக் கேள்வி. இதற்கான பதில் ஏசாயா 30:20, 21-ல் உள்ளது: ‘உன் [மகத்தான] போதகர் இனி ஒருபோதும் மறைந்திருக்க மாட்டார்; உன் கண்கள் உன் [மகத்தான] போதகரைக் காணும். நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.’ ஊக்கமூட்டும் இந்தப் பதிவில், ஜனங்கள் தமக்கு விரோதமாய்க் கலகம் செய்யும்போது யெகோவா உண்மையிலேயே அவர்களிடமிருந்து தம்மை மறைத்துக்கொண்டார் என்பதை வசனம் 20-லுள்ள அவரது வார்த்தைகள் அவர்களுக்கு நினைப்பூட்டியிருக்கலாம். (ஏசாயா 1:15; 59:2) என்றாலும், இங்கே யெகோவா மறைந்திருப்பதாய் அல்ல, ஆனால் விசுவாசமிக்க தமது மக்களுக்கு முன்பாக நின்றுகொண்டிருப்பதாய்ச் சொல்லப்படுகிறார். மாணவர்களுக்கு முன் நின்றுகொண்டு, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்கிக்கொண்டிருக்கும் ஒரு போதகரை, அதாவது ஆசிரியரை, நாம் கற்பனைசெய்து பார்க்கலாம்.
10. எந்த அர்த்தத்தில், உங்கள் மகத்தான போதகர் ‘உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை நீங்கள் கேட்கலாம்?’
10 வசனம் 21-ல், வித்தியாசமான ஒரு வர்ணனை கொடுக்கப்பட்டுள்ளது. யெகோவா தமது மக்கள் சரியான பாதையில் செல்வதற்காக வழிகாட்டிக்கொண்டே அவர்களுக்குப் பின்னால் நடந்து போவதாகச் சித்தரிக்கப்படுகிறார். ஒரு மேய்ப்பன் சில சமயங்களில் தன்னுடைய ஆடுகள் தவறான பாதையில் சென்றுவிடாதபடி உரக்க சப்தமிட்டபடி அவற்றிற்குப் பின்னால் நடந்து செல்வான்; இதை அடிப்படையாக வைத்தே அந்த வர்ணனை கொடுக்கப்பட்டிருக்கலாம் என பைபிள் அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்த வர்ணனை நமக்கு எப்படிப் பொருந்துகிறது? வழிநடத்துதலுக்காக கடவுளுடைய வார்த்தையின் உதவியை நாம் நாடும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பதிவுசெய்யப்பட்ட வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம். காலம் பல கடந்தாலும், அவை நம் பின்னாலிருந்து ஒலிப்பது போல் இருக்கின்றன. என்றாலும், அவை எழுதப்பட்ட காலத்தின்போது எந்தளவுக்குப் பொருத்தமாய் இருந்தனவோ அதே அளவுக்கு இன்றும்கூட பொருத்தமாய் உள்ளன. அன்றாட தீர்மானங்களை எடுப்பதில் பைபிள் ஆலோசனைகள் நமக்கு வழிநடத்துதலை அளிக்கலாம், அதோடு நம்முடைய வாழ்க்கைக்கான எதிர்கால திட்டங்களை அமைக்கவும் உதவலாம். (சங்கீதம் 119:105) அத்தகைய ஆலோசனைகளை நாம் ஊக்கமாய்த் தேடி, அவற்றைப் பொருத்திப் பிரயோகிக்கும்போது யெகோவா நம்முடைய வழிகாட்டியாக இருப்பார். நாம் அவரோடு நடந்துகொண்டிருப்போம்.
11. எரேமியா 6:16-ன்படி, யெகோவா தம்முடைய ஜனங்களுக்காக என்ன அன்பான வர்ணனையை அளித்தார், ஆனால் அவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?
11 கடவுளுடைய வார்த்தை அந்தளவு நம்மை நெருக்கமாக வழிநடத்த நாம் உண்மையிலேயே அனுமதிக்கிறோமா? சில சமயங்களில் சற்று நின்று நம்மை நாமே நேர்மையாகச் சோதித்துப் பார்ப்பது நல்லது. அப்படிச் செய்ய நமக்கு உதவும் ஒரு வசனத்தைக் கவனியுங்கள்: “வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (எரேமியா 6:16) திருப்பங்களில் சற்று நின்று எந்த வழியில் செல்ல வேண்டுமென்று விசாரிக்கும் ஒரு பயணியை இந்த வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டலாம். ஆன்மீகக் கருத்தில், இஸ்ரவேலிலிருந்த யெகோவாவின் கலகக்கார ஜனங்கள் இதுபோன்ற ஒன்றையே செய்ய வேண்டியிருந்தது. “பூர்வ பாதைகள்” எவையென்று கண்டுபிடித்து அவற்றின் வழியே அவர்கள் செல்ல வேண்டியிருந்தது. அந்த ‘நல்ல வழியில்தான்’ அவர்களுடைய விசுவாசமுள்ள முற்பிதாக்களும் சென்றிருந்தார்கள், ஆனால் அந்த ஜனங்கள் முட்டாள்தனமாய் அவற்றிலிருந்து விலகிப்போயிருந்தார்கள். வருத்தகரமாக, யெகோவாவிடமிருந்து வந்த அந்த அன்பான நினைப்பூட்டுதலை ஏற்க அந்த இஸ்ரவேல் ஜனங்கள் பிடிவாதமாய் மறுத்தார்கள். அதே வசனம் இவ்வாறு தொடர்கிறது: ‘அவர்களோ, நாங்கள் அதிலே நடக்க மாட்டோம் என்றார்கள்.’ ஆனால், நவீன காலங்களில், அத்தகைய ஆலோசனைக்கு கடவுளுடைய மக்கள் வேறுவிதமாய்ப் பிரதிபலித்திருக்கிறார்கள்.
12, 13. (அ) எரேமியா 6:16-லுள்ள ஆலோசனைக்கு கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள் எவ்வாறு பிரதிபலித்திருக்கிறார்கள்? (ஆ) இன்று நாம் நடந்துசென்று கொண்டிருக்கிற பாதையை நமக்கு நாமே எவ்வாறு ஆராய்ந்து பார்க்கலாம்?
12 கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள், 19-ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து எரேமியா 6:16-லுள்ள அந்த ஆலோசனையை தங்களுக்குப் பொருத்தி வந்திருக்கிறார்கள். ‘பூர்வ பாதைகளுக்கு’ முழு இருதயத்தோடு திரும்புவதில் ஒரு வகுப்பாக மற்றவர்களை முன்னின்று வழிநடத்தியிருக்கிறார்கள். விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்தைப் போல் அல்லாமல், “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை” உண்மையுடன் பின்பற்றியிருக்கிறார்கள்; அச்சட்டத்தை இயேசு கிறிஸ்து நிறுவியிருந்தார், பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த உண்மையுள்ள அவருடைய சீஷர்கள் அதை ஆதரித்தார்கள். (2 தீமோத்தேயு 1:13) கிறிஸ்தவமண்டலத்தார் ஒதுக்கிவிட்டுள்ள ஆரோக்கியமான, சந்தோஷமான வாழ்க்கைப் பாணியைத் தொடருவதற்கு அபிஷேகம் செய்யப்பட்டோர் இந்நாள் வரையாக ஒருவருக்கொருவர் உதவிசெய்கிறார்கள், அதோடு ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்த தங்கள் தோழர்களுக்கும் உதவிசெய்கிறார்கள்.—யோவான் 10:16.
13 உண்மையுள்ள அந்த அடிமை வகுப்பு “ஏற்ற வேளையிலே” லட்சக்கணக்கான ஜனங்களுக்கு ஆன்மீக உணவை அளித்து, ‘பூர்வ பாதைகளைக்’ கண்டுபிடிப்பதற்கும், கடவுளோடு நடப்பதற்கும் உதவியிருக்கிறது. (மத்தேயு 24:45-47, NW) அந்த லட்சக்கணக்கானோரில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், உங்கள் இஷ்டப்படி வேறு பாதையில் வழிவிலகிச் செல்வதைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? அவ்வப்போது சற்று நின்று, நீங்கள் செல்லக்கூடிய வாழ்க்கைப் பாதையை ஆராய்ந்து பார்ப்பது ஞானமாகும். பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் நீங்கள் உண்மையோடு வாசித்து வந்தால், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இன்று வழங்கிவருகிற போதனாத் திட்டங்களில் பங்குகொண்டால், கடவுளோடு நடப்பதில் நீங்கள் பயிற்சி பெற்றுவருகிறீர்கள் என்று அர்த்தம். அதோடு, உங்களுக்குக் கொடுக்கப்படும் ஆலோசனையை மனத்தாழ்மையுடன் பின்பற்றினால், ‘பூர்வ பாதைகளைப்’ பின்பற்றி நீங்கள் கடவுளோடு நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
“அதரிசனமானவரைத் தரிசிக்கிறது” போல நடவுங்கள்
14. யெகோவா நமக்கு நிஜமானவராக இருந்தால், நாம் எடுக்கும் தனிப்பட்ட தீர்மானங்களில் அது எப்படித் தெரியும்?
14 யெகோவாவோடு நாம் நடக்க வேண்டுமானால், நம்முடைய கடவுளான அவர் நமக்கு நிஜமானவராக இருக்க வேண்டும். பூர்வ இஸ்ரவேலிலிருந்த தம்முடைய உண்மையுள்ள மக்களிடமிருந்து யெகோவா தம்மை மறைத்துக்கொள்ளவில்லை என அவர் தாமே உறுதி அளித்ததை நினைவில் வையுங்கள். அவ்வாறே இன்றும்கூட, தம்முடைய மக்களிடம் ஒரு மகத்தான போதகராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். யெகோவா உங்கள் முன் நின்றுகொண்டு, போதனைகளை அளித்துக்கொண்டிருப்பது போல் உணரும் அளவுக்கு அவர் உங்களுக்கு நிஜமானவராக இருக்கிறாரா? நாம் கடவுளோடு நடக்க வேண்டுமென்றால், அப்படிப்பட்ட விசுவாசமே நமக்குத் தேவை. மோசேக்கு அத்தகைய விசுவாசம் இருந்தது, ஏனெனில், ‘அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல அவர் உறுதியாயிருந்தார்.’ (எபிரெயர் 11:27) யெகோவா நமக்கு நிஜமானவராக இருந்தால், அவருடைய உணர்ச்சிகளை மனதில் வைத்தே நாம் தீர்மானங்களை எடுப்போம். உதாரணத்திற்கு, தவறான காரியங்களில் ஈடுபடுவதையும், அதன்பின் அந்தத் தவறுகளைக் கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்தோ குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தோ மறைப்பதையும் நாம் நினைத்துக்கூட பார்க்க மாட்டோம். மாறாக, யாருமே நம்மைப் பார்க்காவிட்டால்கூட, கடவுளோடு நடக்கவே நாம் கடுமையாக முயலுவோம். அதோடு, “என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்” என்று பூர்வத்தில் வாழ்ந்த தாவீது ராஜா தீர்மானித்ததைப் போல் நாமும் தீர்மானிப்போம்.—சங்கீதம் 101:2.
15. நம்முடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளோடு பழகும்போது யெகோவா எப்படி நமக்கு நிஜமானவராக ஆகிவிடுகிறார்?
15 நாம் அபூரண மாம்ச சிருஷ்டிகள் என்றும், கண்களால் பார்க்க முடியாத காரியங்களை நம்புவதில் சிலசமயம் கஷ்டப்படுகிறவர்கள் என்றும் யெகோவா அறிந்திருக்கிறார். (சங்கீதம் 103:14) அத்தகைய பலவீனங்களை மேற்கொள்ள அவர் நமக்கு நிறையவே உதவிசெய்கிறார். உதாரணமாக, பூமியின் எல்லாத் தேசங்களிலிருந்தும் “தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை” கூட்டிச்சேர்த்திருக்கிறார். (அப்போஸ்தலர் 15:14) அப்படிப்பட்ட நாம் ஐக்கியமாக அவருக்குச் சேவை செய்யும்போது, ஒருவரிடமிருந்து ஒருவர் பலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். ஏதோவொரு பலவீனத்தை மேற்கொள்ள அல்லது ஏதோவொரு கடினமான சோதனையிலிருந்து மீள நம்முடைய கிறிஸ்தவ சகோதரருக்கோ சகோதரிக்கோ யெகோவா எப்படி உதவியிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது, கடவுள் நமக்கு இன்னும் நிஜமானவராக ஆகிவிடுகிறார்.—1 பேதுரு 5:9.
16. இயேசுவைப் பற்றிக் கற்றுக்கொள்வது கடவுளோடு நடக்க நமக்கு எப்படி உதவும்?
16 எல்லாவற்றையும்விட முக்கியமாக, யெகோவா தமது குமாரனை நமக்கு ஒரு முன்மாதிரியாக அளித்திருக்கிறார். இயேசு இவ்வாறு சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6) யெகோவா நமக்கு இன்னும் நிஜமானவராக ஆவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்து படிப்பதாகும். இயேசு சொன்ன எல்லா வார்த்தைகளும், செய்த எல்லாக் காரியங்களும் தம்முடைய பரலோகப் பிதாவின் குணங்களையும் வழிகளையும் அச்சுப்பிசகாமல் அப்படியே பிரதிபலித்தன. (யோவான் 14:9) நாம் தீர்மானங்கள் எடுக்கையில், அத்தகைய விஷயங்களை இயேசு எவ்வாறு கையாண்டிருப்பார் என்பதைக் கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு கவனமாகவும் ஜெப சிந்தையோடும் தீர்மானங்கள் எடுக்கும்போது, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். (1 பேதுரு 2:21) அதன் விளைவாக, கடவுளோடு நடந்துகொண்டிருக்கிறோம்.
என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?
17. யெகோவாவின் வழியில் நடந்தால், நம் ஆத்துமாக்களுக்கு எத்தகைய “இளைப்பாறுதல்” கிடைக்கும்?
17 யெகோவா தேவனோடு நடப்பது திருப்திகரமான வாழ்க்கை வாழ உதவும். ‘நல்ல வழியைத்’ தேடிக்கண்டுபிடிப்பது பற்றி யெகோவா தம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நினைவுபடுத்திப் பாருங்கள். “அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்று அவர் சொன்னார். (எரேமியா 6:16) இங்கு சொல்லப்பட்டிருக்கும் “இளைப்பாறுதல்” எதைக் குறிக்கிறது? சகல சௌகரியங்களும் இன்பங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கையைக் குறிக்கிறதா? இல்லை. அதைவிட பல மடங்கு உயர்ந்த ஒன்றை யெகோவா கொடுக்கிறார், உலகிலுள்ள மிகப் பெரிய பணக்காரர்களுக்குக்கூட கிடைக்காத ஒன்றை கொடுக்கிறார். உங்கள் ஆத்துமாக்களுக்குக் கிடைக்கும் இளைப்பாறுதல் என்பது மன அமைதியையும், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும், ஆன்மீகத் திருப்தியையும் குறிக்கிறது. மிகச் சிறந்த வாழ்க்கைப் பாதையையே தேர்ந்தெடுக்கிறோம் என்ற திடநம்பிக்கையையும் அது குறிக்கிறது. தொல்லைமிகுந்த இவ்வுலகில் அத்தகைய மனநிம்மதி ஓர் அரிய ஆசீர்வாதமே!
18. என்ன ஆசீர்வாதத்தை உங்களுக்கு அருள யெகோவா விரும்புகிறார், உங்களுடைய தீர்மானம் என்ன?
18 சந்தேகமில்லாமல், வாழ்க்கையே ஒரு பெரிய ஆசீர்வாதம்தான். வாழ்க்கை எனும் பயணத்தில் நடக்காமல் இருப்பதைவிட, சிறிது தூரமாவது நடப்பது எவ்வளவோ மேல். ஆனாலும் உங்களுடைய பயணம், இளமைத் துடிப்பிலிருந்து முதுமையின் கோரப்பிடி வரைக்குமே செல்கிற கொஞ்ச தூரப் பயணமாக இருக்க வேண்டுமென்பது ஒருபோதும் யெகோவாவின் விருப்பம் அல்ல. எல்லா ஆசீர்வாதங்களைக் காட்டிலும் மிகச் சிறந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெற வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். ஆம், அவரோடு நீங்கள் என்றென்றும் நடக்க வேண்டுமென்று விரும்புகிறார்! மீகா 4:5-ல் இது நன்றாகவே சொல்லப்பட்டிருக்கிறது: “சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் நடப்போம்.” அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள நீங்கள் மனதார ஆசைப்படுகிறீர்களா? ‘மெய்யான வாழ்க்கையை,’ யெகோவா மனங்கவரும் விதத்தில் வர்ணிக்கிற வாழ்க்கையை, அனுபவிக்க விரும்புகிறீர்களா? (1 தீமோத்தேயு 6:19, NW) ஆம் என்றால், யெகோவாவோடு இன்றும், நாளையும், அதன்பின் என்றென்றும் நடக்கத் திடத்தீர்மானமாய் இருங்கள்!
[அடிக்குறிப்பு]
a சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இந்த வசனத்தில் ‘முழம்’ என்ற வார்த்தைக்குப் பதிலாக, “ஒரு நொடி” (தி எம்ஃபட்டிக் டையக்லட்) அல்லது ‘ஒரு நாள்’ (பொது மொழிபெயர்ப்பு, அடிக்குறிப்பு) என்று பயன்படுத்தியிருக்கின்றன. ஆனால், இதன் மூல வார்த்தை ஒரு முழத்தைத்தான் குறிக்கிறது, ஒரு முழம் என்பது சுமார் 45 சென்டிமீட்டர் நீளமாகும்.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• கடவுளோடு நடப்பது என்றால் என்ன?
• கடவுளோடு நடக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?
• கடவுளோடு நடக்க எது உங்களுக்கு உதவும்?
• கடவுளோடு நடப்பவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன?
[பக்கம் 23-ன் படங்கள்]
பைபிளின் மூலம், “வழி இதுவே” என்ற யெகோவாவின் குரல் நம் பின்னே ஒலிப்பதைக் கேட்கிறோம்
[பக்கம் 25-ன் படம்]
சபை கூட்டங்களில், ஏற்ற வேளையில் ஆன்மீக உணவைப் பெறுகிறோம்