திறமைவாய்ந்த ஆலோசனைக்காரர்—தங்கள் சகோதரருக்கு ஓர் ஆசீர்வாதம்
“உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்ததுபோலவும் திரும்பக் கட்டளையிடுவேன்.”—ஏசாயா 1:26.
டெரி ஓர் கிறிஸ்தவ பெற்றோரின் மகள். பள்ளியில் அவளுக்கு ஓர் இளம் சிநேகிதி இருந்தாள். அவளும் “சத்தியத்தில்” இருந்தாள். ஆனால் துவக்கப் பள்ளிப் படிப்பின் இறுதியில் அவள் முன்பிருந்ததுபோல் தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து அவ்வளவு உற்சாகமாக இல்லை. அவர்கள் இருவரும் உயர்நிலைப்பள்ளியில் நல்ல விதத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் போது டெரியின் சிநேகிதி கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருவதில் ஒழுங்கீனமாகிவிட்டாள், மற்றும் உவாட்ச் டவர் சங்கத்தையும் கிறிஸ்தவ சபையையும் குறை சொல்ல ஆரம்பித்தாள். டெரி தன்னுடைய சிநேகிதிக்காகக் கடினமாக ஜெபித்து வந்தாள். ஒரு கிறிஸ்தவளாக அவள் உறுதியாக நிலைநிற்கும்படி அவளுக்குத் தொடர்ந்து ஆலோசனை கூறினாள். கடைசியில் டெரியின் முயற்சிகள் பலனளித்தன. பத்தாவது வகுப்புக்கு வரும்போது அவளுடைய சிநேகிதி மறுபடியும் கூட்டங்களுக்கு ஒழுங்காக வர ஆரம்பித்தாள், கடைசியில் முழுக்காட்டுதலும் பெற்றாள். அவளுக்கு என்னே ஓர் ஆசீர்வாதம்! அவளுடைய உண்மையான இளம் சிநேகிதியாகிய டெரிக்கு அது என்னே ஓர் நற்பலன்!
2 இந்த அனுபவத்தைப் பார்க்கும்போது, கிறிஸ்தவர்கள் அவ்வப்போது ஒருவருக்கொருவர் அன்போடு ஆலோசனை கொடுக்க வேண்டியதன் அவசியத்தை எவரேனும் சந்தேகிக்க முடியுமா? பைபிள் நம்மைப் பின்வரும் வார்த்தைகளில் ஊக்குவிக்கிறது: “உன் அந்திய காலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.” (நீதிமொழிகள் 19:20; 12:15) டெரியின் சிநேகிதி இந்தப் புத்திமதியைப் பின்பற்றினாள். ஆனால் ஆண்டுகளினூடே அவளுக்குத் தொடர்ந்து உதவும் வகையில் டெரிக்கு அன்பும், விடாமுயற்சியும் தைரியமும் இல்லாதிருந்தால் என்ன? ஆம், நாம் “ஆலோசனையைக் கேட்பதற்கு” ஆலோசனைக்காரர் தேவை. இவர் யாராக இருக்க வேண்டும்?
ஆலோசனை—யாரால்?
3 நம்முடைய காலத்தில், யெகோவா தேவன், தம்முடைய மக்களுக்கு ஆலோசனைகாரரை ஏற்படுத்துவார் என்று வாக்களித்துள்ளார். அவர் சொன்னதாவது: “உன் ஆலோசனைகாரரை ஆதியிலிருந்ததுபோலவும் திரும்பக் கட்டளையிடுவேன்.” (ஏசாயா 1:26) இந்த வாக்குறுதி விசேஷமாக கிறிஸ்தவ சபையில் நியமிக்கப்பட்டிருக்கும் மூப்பர்களில் நிறைவேறுகிறது. ஆலோசனை கொடுப்பதுதானே போதிப்பதின் ஒருவகை, மூப்பர்கள் முக்கியமாகப் “போதகசமர்த்தகராக” இருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 3:2) பின்வரும் வார்த்தைகளைச் சொல்லும்போது பவுல் அப்போஸ்தலன் அநேகமாய் மூப்பர்களை மனதில் கொண்டிருக்க வேண்டும்: “ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய (ஆவிக்குரிய தகுதிகளைப் பெற்றவர்களாகிய, NW) நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்.” (கலாத்தியர் 6:1) ஆனால் மூப்பர்கள் மட்டுந்தான் ஆலோசனை கொடுக்கக்கூடியவர்களா?
4 இல்லை. டெரி ஒரு மூப்பர் அல்ல, என்றபோதிலும் அவளுடைய ஆலோசனை நல்ல பலன்களைக் கொண்டுவந்தன. சீரியா தேசத்து படைத் தலைவனாகிய நாகமானை நினைவுபடுத்திப் பாருங்கள். ஓர் இளம் இஸ்ரவேல் சிறுமியிடமிருந்து கிடைத்த அருமையான தகவலின் பேரிலும் தன்னுடைய வேலைக்காரர்களின் ஆலோசனைபேரிலும் அவன் செயல்பட்டான். நாபாலின் மனைவியாகிய அபிகாயில் தகுந்த நேரத்தில் கொடுத்த ஆலோசனை தாவீதை இரத்தப்பழிக்குள்ளாவதிலிருந்து இரட்சித்தது. இளம் மனிதனாகிய எலிகூ யோபுக்கும் அவனுடைய மூன்று “ஆறுதல்காரருக்கும்” சில ஞானமான ஆலோசனையைக் கொண்டிருந்தான்.—1 சாமுவேல் 25:23-35; 2 இராஜாக்கள் 5:1-4, 13, 14; யோபு 32:1-6.
5 அதுபோல இன்றுங்கூட ஆலோசனை கொடுப்பது முப்பர்களுக்கு மட்டுமே உரியதொன்றல்ல. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இடைவிடாமல் ஆலோசனை கொடுக்கிறார்கள். டெரி போன்ற இளம் பிள்ளைகள் தங்களுடைய தோழருக்கு ஆலோசனை கொடுப்பதில் வெற்றி காண்கிறார்கள். முதிர்ச்சியுள்ள சகோதரிகள், விசேஷமாக சபையிலுள்ள இளம் பெண்களுக்கு “நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்க” பைபிள் குறிப்பாக அவர்களை உற்சாகப்படுத்துகிறது. (தீத்து 2:3-5) உண்மையில் பார்க்கப்போனால், பொதுவான ஒரு கருத்தில் நாம் எல்லோருமே இந்த வழியில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொன்னான்: “நீங்கள் செய்து வருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:11.
கிறிஸ்தவ ஆலோசனையின் இலக்குகள்
6 கிறிஸ்தவ ஆலோசனைகளின் சில இலக்குகள் என்ன? ஒருவர் முன்னேறவும், சரியான வழியில் தொடரவும், பிரச்னைகளைத் தீர்க்கவும், கஷ்டங்களை மேற்கொள்ளவும், ஒருவேளை ஒரு தவறான போக்கைத் திருத்திக்கொள்ளவும் அவருக்கு உதவி செய்வதே இந்த இலக்குகள். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, “எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்து கொண்டு, புத்திசொல்லு,” என்று ஆலோசனை கொடுப்பதன் சில வகைகளைக் குறிப்பிட்டான். (2 தீமோத்தேயு 4:1, 2) ஒருவர் புண்படாமல் காரியங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் ஆலோசனை கொடுப்பது உண்மையிலேயே ஒரு கலை.
7 ஆலோசனை எப்பொழுது கொடுக்கப்படவேண்டும்? பிள்ளைகளுக்கு இடைவிடாமல் ஆலோசனை கொடுக்கும் சந்தர்ப்பம் பெற்றோருக்கு இருக்கிறது, பிள்ளைகளும் இதை எதிர்பார்த்தவர்களாயிருக்கின்றனர். (நீதிமொழிகள் 6:20; எபேசியர் 6:4) சபையிலே தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் ஒரு மாணவர் பேச்சைக் கொடுத்தப் பிறகு ஆலோசனையை எதிர்பார்க்கிறார். புதியதோர் ராஜ்ய பிரஸ்தாபி ஒரு கிறிஸ்தவ ஊழியனாக முதிர்ச்சியிடமாக முன்னேறும் போது உதவியையும் ஆலோசனையையும் எதிர்பார்க்கிறார். (1 தீமோத்தேயு 4:15) சில சமயங்களில் உதவியும் ஆலோசனையும் நாடும் தனிப்பட்ட ஆட்கள் சபையிலுள்ள மூப்பர்களையோ அல்லது மற்றவர்களையோ அணுகுகிறார்கள்.
8 சில சமயங்களில் ஆலோசனையை வரவேற்காத அல்லது விரும்பாத ஆட்களுக்கும் ஆலோசனை கொடுக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. ஒருவேளை சிலர் யெகோவாவின் சேவையில் வைராக்கியத்தை இழந்துகொண்டிருக்கலாம், டெரியின் சிநேகிதியைப் போல் ‘பின்னே போய்க் கொண்டிருக்கலாம்’ (எபிரெயர் 2:1) ஒருவர் சபையிலுள்ள மற்றொருவர் பேரில் தனிப்பட்ட பலமான கருத்துவேறுபாட்டைக் கொண்டிருக்கக்கூடும். (பிலிப்பியர் 4:2) அல்லது உடை, சிகை அலங்காரம் போன்ற விஷயங்களில் அல்லது நண்பரை அல்லது இசையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவருக்கு உதவி தேவைப்படக்கூடும்.—1 கொரிந்தியர் 15:33; 1 தீமோத்தேயு 2:9.
9 ஆனானி தீர்க்கதரிசி யூதாவின் அரசனாகிய ஆசாவுக்கு ஆலோசனை கொடுத்தபோது ஆசா அதைக் கடுமையாக வெறுத்ததால் “அவனைக் காவலறையிலே வைத்தான்”! (2 நாளாகமம் 16:7-10) அந்த நாட்களிலே அரசனுக்கு ஆலோசனை சொல்லும் ஒருவன் அதிக தைரியமுள்ளவனாக இருக்கவேண்டும். இன்றுங்கூட ஆலோசனைக்காரர் தைரியமாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஆலோசனை கொடுப்பது ஆரம்பத்தில் கோபத்தை ஏற்படுத்தக்கூடும். அனுபவமுள்ள ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய இளம் கூட்டாளிக்கு ஆலோசனை கொடுப்பதிலிருந்து பின்வாங்கினார். காரணம்? அவர் சொன்னதாவது: “நாங்கள் இப்போது நல்ல நண்பர்கள். அந்த நட்பைக் காத்துக்கொள்ள விரும்புகிறேன்.!” என்றபோதிலும், தேவைப்பட்ட சமயத்தில் உதவி அளிப்பதிலிருந்து பின்வாங்குவது நல்ல நண்பனுக்கு அடையாளமாக இல்லை.—நீதிமொழிகள் 27:6; யாக்கோபு 4:17-ஐ ஒப்பிடவும்.
10 உண்மை என்னவெனில், அனுபவம் காண்பிப்பதுபோல, ஆலோசனைக்காரர் திறமை வாய்ந்த ஒருவராக இருப்பாரானால், சாதாரணமாக புண்பட்ட உணர்ச்சிகள் மட்டுப்படுத்தப்பட்டு ஆலோசனையின் இலக்குகள் அடையப்படும். திறமையுள்ள ஓர் ஆலோசனைகாரராக இருப்பதற்குத் தேவைப்படுவது என்ன? இதற்கு விடை காண, நாம் இரண்டு பேருடைய மாதிரிகளைக் கவனிக்கலாம்.
பவுல்—ஒரு திறமையுள்ள ஆலோசனைக்காரன்
11 ஆலோசனை கொடுப்பதற்கு அப்போஸ்தலனாகிய பவுலுக்கு அநேக சந்தர்ப்பங்கள் இருந்தன, சில சமயங்களில் அவன் கடுமையான காரியங்களை நேரடியாக சொல்லவேண்டியதாயிருந்தது. (1 கொரிந்தியர் 1:10-13; 3:14; கலாத்தியர் 1:6; 3:1) அப்படியிருந்தாலும், அவனுடைய ஆலோசனைகள் திறம்பட்டவையாயிருந்தன. ஏனென்றால் அவை யாருக்குச் சொல்லப்பட்டதோ அவர்களை அவன் நேசிக்கிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். கொரிந்தியரிடம் அவன் சொன்னதாவது: “அன்றியும் நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள் மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகம் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன்.” (2 கொரிந்தியர் 2:4) கொரிந்தியரில் பலர் பவுலின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார்கள், ஏனென்றால், அது தன்னல நோக்கங்களைக் கொண்டதாயில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், “அன்பு . . . தற்பொழிவை நாடாது.” மேலும் அவன் தனிப்பட்ட கோபங்கொண்டு பேசவில்லை என்பதில் உறுதியாயிருந்தார்கள், ஏனென்றால் “அன்பு . . . சினமடையாது. தீங்கு நினையாது.”—1 கொரிந்தியர் 13:4, 5.
12 இன்றுங்கூட கடுமையான ஆலோசனையை நாம் ஏற்றுக்கொள்வது அதிக எளிதான காரியம். நமக்கு ஆலோசனை கொடுப்பவர் தனிப்பட்டவிதத்தில் கோபங்கொண்டவராய் நம்மிடம் பேசவில்லை, எந்தவித தன்னல நோக்கங்களும் இல்லை, ஆனால் அவர் நம்மை நேசிக்கிறார் என்பதை நாம் அறிந்திருப்போமானால் ஆலோசனையை ஏற்றுக்கொள்வது எளிதான காரியமாயிருக்கும். உதாரணமாக, மூப்பர் ஒருவர் சபையிலுள்ள இளைஞர்களிடம் அவர்களில் குறைகாணும்போது மட்டுமே பேசுகிறவராக இருந்தால், அந்த இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடும். ஆனால் அந்த மூப்பர் இளைஞர்களுடன் நல்ல உறவைக் கொண்டிருப்பாரானால் என்ன? அவர்களை வெளி ஊழியத்தில் அழைத்துச் செல்கிறவராகவும் ராஜ்ய மன்றத்தில் அணுகப்படக்கூடியவராகவும், தங்களுடைய பிரச்னைகளையும், நம்பிக்கைகளையும், சந்தேகங்களையுங் குறித்து தன்னிடம் பேசுவதற்கு அவர்களை உற்சாகப்படுத்துகிறவராகவும், ஒருவேளை அவர்களை (பெற்றோரின் அனுமதியோடு) அவ்வப்போது தன்னுடைய வீட்டுக்கு அழைப்பவராகவும் இருந்தால் என்ன? அப்பொழுது ஆலோசனை கொடுக்கப்பட வேண்டியதாயிருந்தால் அது ஒரு நண்பரிடமிருந்து வருகிறது என்று அறிந்து, அந்த இளைஞர்கள் அதைத் தாராளமாக ஏற்றுக்கொள்வார்கள்.
சாந்தமும் மனத்தாழ்மையும்
13 பவுலின் ஆலோசனைகள் வெற்றிகரமாக இருந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. அவன் தெய்வீக ஞானத்தில் சார்ந்திருந்தான், தன்னுடைய சொந்த அபிப்பிராயங்களில் அல்ல. ஆலோசனைகாரனாயிருந்த தீமோத்தேயுவுக்குப் பின்வரும் காரியத்தை நினைவுபடுத்துகிறான்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்ய தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவையாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16; 1 கொரிந்தியர் 2:1, 2-ஐ ஒப்பிடவும்) அதுபோல கிறிஸ்தவ ஆலோசனைகாரரும் இன்று தாங்கள் சொல்வதை பைபிள் வசனங்களில் ஆதாரமிடுகின்றனர். ஒரு குடும்பத்திலே, பிள்ளைகளுக்கு ஆலோசனை கொடுக்கும் ஒவ்வொரு சமயத்திலும் பெற்றோர் பைபிளை பயன்படுத்துவதில்லை என்பது உண்மைதான். என்றபோதிலும், கிறிஸ்தவ பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கீழ்ப்படிதல், சுத்தம், மற்றவர்களில் கரிசனை, காலதாமதத்தை தவிர்த்தல் போன்ற எந்தக் கரியங்களின் பேரில் பேசினாலும், அவர்கள் சொல்லும் காரியத்திற்குப் பைபிள் ஆதாரம் இருக்கவேண்டும். (எபேசியர் 6:1; 2 கொரிந்தியர் 7:1; மத்தேயு 7:12; பிரசங்கி 3:1-8) சபையில் நாம் நம்முடைய சொந்த தனிப்பட்ட கருத்துக்களையும் விருப்பு வெறுப்புகளையும் மற்றவர்கள் மீது திணிக்க முற்படக்கூடாது. இதுகுறித்து கவனமாயிருக்க வேண்டும். ஏதாவது ஒரு காரியத்தின்பேரில் மூப்பர்கள் பலமான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்களானால், அதை ஆதரிக்கும் வகையில் வசனங்களைப் பணியச் செய்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும். (மத்தேயு 4:5, 6) அவர்கள் கொடுக்கும் எந்த ஒரு ஆலோசனைக்கும் ஒரு உண்மையான பைபிள் காரணம் இருக்க வேண்டும்.—சங்கீதம் 119:105.
14 சாந்தத்தோடு கொடுக்கப்படும் ஆலோசனையுங்கூட அதிக திறம்பட்டதாயிருக்கிறது. எனவே தான், ஒரு செயலின் வினைமைத் தன்மையை அறியாமல் தவறான படியை எடுக்கும் ஒருவனைப்பற்றி பேசும்போது, தகுதியுள்ளவர்கள் “சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணும்படி” உற்சாகப்படுத்துகிறான். (கலாத்தியர் 6:1) “ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டும்படி” பவுல் தீத்துவைத் துரிதப்படுத்தினான்.—தீத்து 3:1, 2; 1 தீமோத்தேயு 6:11.
15 ஏன் சாந்தம் அவசியம்? ஏனென்றால் கட்டுப்படுத்தப்படாத உணர்ச்சிகள் தொத்தும் தன்மை வாய்ந்தது. கோபமான வார்த்தைகள் அதிக கோபமான வார்த்தைகளைப் பிறப்பிக்கிறது. கோபம் கொதித்தெழும் சமயத்தில் நியாயங்களை எடுத்துக் காண்பிப்பது மிகவும் கடினம் ஆலோசனை கொடுக்கப்படுகிறவர் கோபமாகப் பிரதிபலித்தாலும், ஆலோசனை கொடுப்பவரும் அப்படியே பிரதிபலிக்கவேண்டும் என்பதில்லை. மாறாக, ஆலோசனைகாரரின் சாந்தமான தன்மைதானே காரியங்களை அமைதி படுத்த உதவும். “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்.” (நீதிமொழிகள் 15:1) ஆலோசனை கொடுப்பவர் பெற்றோராயிருந்தாலும் ஒரு மூப்பராக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் இது உண்மையாக இருக்கிறது.
16 கடைசியாக, தன்னைவிட இளமையாயிருந்த தீமோத்தேயு என்ற மூப்பருக்குப் பவுல் சொன்னதைக் கவனியுங்கள்: “முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரை சகோதரரைப் போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப் போலவும் பாவித்து புத்திசொல்லு.” (1 தீமோத்தேயு 5:1, 2) என்னே மிகச் சிறந்த ஆலோசனை! வயதில் முதிர்ந்த ஒருபெண்ணுக்கு, தன்னைவிட இளைய ஒரு மூப்பர், ஒருவேளை தன்னுடைய சொந்த மகன் வயதில் இருக்கும் ஒரு மூப்பர் கடுமையாக அல்லது மரியாதைக் குறைவாக ஆலோசனை கொடுத்தால் வயதுமுதிர்ந்த அந்தப் பெண்மனி எப்படி உணருவாள் என்பதை எண்ணிப்பாருங்கள். ஆலோசனை கொடுப்பவர் இப்படியாகச் சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது: ‘இந்த நபரின் தன்மையையும் வயதையும் பார்க்கும்போது, இந்தக் குறிப்பிட்ட ஆலோசனையை அவருக்குக் கொடுப்பதற்கு மிகுந்த அன்பான திறம்பட்ட முறை என்னவாக இருக்கும்? நான் அவருடைய அல்லது அவளுடைய இடத்தில் இருந்தால், எப்படி அணுகப்படுவதை விரும்புவேன்?’—லூக்கா 6:31; கொலோசெயர் 4:6.
பரிசேயரின் ஆலோசனை
17 பவுலின் நல்ல முன்மாதிரியிலிருந்து இப்பொழுது ஒரு கெட்ட மாதிரிக்குத் திரும்புங்கள்—இயேசுவின் நாட்களிலிருந்த யூத தலைவர்கள். அவர்கள் ஏராளமான ஆலோசனைகளைக் கொடுத்தார்கள், ஆனால் எப்பொழுதும்போல் அந்தத் தேசம் அதிலிருந்து நன்மை பெறவில்லை. ஏன்?
18 பல காரணங்கள் இருந்தன. ஒன்று, இயேசுவின் சீஷர்கள், உணவு அருந்துவதற்கு முன்பு தங்கள் கைகளைக் கழுவவில்லை என்பதற்காக பரிசேயர்கள் அவர்களைக் கடிந்து கொண்ட சமயத்தைக் கவனியுங்கள். தங்களுடைய பிள்ளைகள் உணவு அருந்துவதற்கு முன்பு தங்களுடைய கைகளைக் கழுவவேண்டும் என்று அநேக தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆலோசனை கூறுகிறார்கள் என்பது உண்மைதான். இது ஒரு சுகாதார பழக்கமாதலால் இதைச் சிபாரிசு செய்வதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அந்தப் பரிசேயர்கள் அடிப்படையில் சுகாதாரத்தைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை. அவர்களுக்குக் கை கழுவுவது ஒரு பாரம்பரிய பழக்கமாக இருந்தது, எனவே இயேசுவின் சீஷர்கள் இந்தப் பாரம்பரியத்தைப் பின்பற்றவில்லை என்பதால் கோபப்பட்டனர். என்றபோதிலும், இஸ்ரவேலில் இதைவிட பெரிய பிரச்னைகளை அவர்கள் கவனிக்க வேண்டியதாயிருந்தது என்பதை இயேசு காண்பித்தார். உதாரணமாக பத்து கற்பனைகளில் “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக,” என்ற ஐந்தாவது கற்பனைக்குக் கீழ்ப்படிவதைத் தவிர்க்க சிலர் பரிசேய பாரம்பரியத்தைப் பயன்படுத்தினர். (யாத்திராகமம் 20:12; மத்தேயு 15:1-11) வருத்தத்திற்குரிய காரியம் என்னவெனில், பரிசேயரும் சதுசேயரும் சிறுசிறு விவரங்களுக்குக் கவனம் செலுத்துவதில் அவ்வளவாக ஈடுபாடுடையவர்களாயிருந்ததால், அவர்கள் நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதயையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டார்கள்.”—மத்தேயு 23:23.
19 இன்றுங்கூட ஆலோசனைக்காரர் அதேவிதமான தவற்றைச் செய்யாதபடிக்குக் கவனமாயிருக்கவேண்டும். அவர்கள் சுயநல காரணங்களைத் தவிர்க்க வேண்டும், அதாவது சிறுசிறு விவரங்களில் அவ்வளவு அதிகமாக உட்பட்டு “விசேஷித்தவைகளை” மறந்துவிடுவதைத் தவிர்க்க வேண்டும். சிறிய விஷயங்களில் நாம் அன்பினாலே “ஒருவரையொருவர் பொறுத்துக்” கொள்ள ஊக்குவிக்கப்படுகிறோம். (கொலோசெயர் 3:12, 13) ஒரு காரியத்தைப் பெரும் பிரச்னையாக்குவதை எப்பொழுது தவிர்க்க வேண்டும், ஆலோசனை உண்மையிலேயே எப்பொழுது கொடுக்கப்படவேண்டும் என்பதை நிதானிக்கும் திறமையானது, ஒருவர் “ஆவிக்குரிய தகுதிபெற்றவ”ராக இருப்பதற்கு உதவும் ஒரு காரியமாகும்.—கலாத்தியர் 6:1.
20 அந்த முதல் நூற்றாண்டு ஆலோசனைகாரரை பலனற்றவர்களாக்கிய வேறொரு காரியமும் உண்டு. ‘நான் சொல்லுகிறபடி செய், நான் செய்கிறபடி செய்யாதே,’ என்ற ஒரு தத்துவத்தைப் பின்பற்றினார்கள். அவர்களைக் குறித்து இயேசு பின்வருமாறு சொன்னார்: “நியாய சாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும் மாட்டீர்கள்!” (லூக்கா 11:46) எத்தனை அன்பற்ற செயல்! இன்று ஆலோசனை கொடுக்கும் பெற்றோரும், மூப்பர்களும், மற்றவர்களும், மற்றவர்களைச் செய்யும்படி சொல்லும் காரியங்களைத் தாங்கள் செய்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும். நாம்தாமே வெளி ஊழியத்தில் நல்ல முன்மாதிரியை வைக்காமல், மற்றவர்களை வெளி ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடும்படியாக எப்படி உற்சாகப்படுத்தமுடியும்? பொருள்சம்பந்தமான காரியங்கள் நம்முடைய வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்துகையில் நாம் எப்படி மற்றவர்களைப் பொருளாசைக்கு எதிராக எச்சரிக்க முடியும்?—ரோமர் 2:21, 22; எபிரெயர் 13:7.
21 ஆலோசனைகாரராக யூத தலைவர்கள் தோல்வி கண்டதற்கு மற்றொரு காரணம், அவர்கள் ஒடுக்குதல் முறையைக் கையாண்டனர். ஒரு சமயம் இயேசுவைக் கைது செய்வதற்காக அவர்கள் ஆட்களை அனுப்பினார்கள். இந்த மனிதர் இயேசுவின் கற்பிக்கும் முறையால் கவர்ச்சிக்கப்பட்டு அவரைக் கைது செய்யாமல் திரும்பிவிட்டார்கள். பரிசேயர்கள் அவர்களை “நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயர்களாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டோ? வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்,” என்று கடிந்துகொண்டார்கள். (யோவான் 7:45-49) இது—அதிகார ஒடுக்குதலும் பரிகசித்தலும்—கடிந்துகொள்வதற்கு ஒரு அடிப்படையாக இருந்ததா? அப்படிப்பட்ட ஆலோசனை முறையின் குற்றத்திற்குக் கிறிஸ்தவ ஆலோசனைக்காரர்கள் ஆளாக வேண்டாம்! மற்றவர்களை அடிக்கியாளுவதையோ அல்லது, ‘நான் சொல்லுவதை நீங்கள் கேட்க வேண்டும், நான் ஒரு மூப்பர்,’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதையோ அவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அல்லது ஒரு சகோதரியிடம் பேசும்போது, “நான் சொல்லுவதை நீங்கள் கேட்க வேண்டும், ஏனென்றால் நான் ஒரு சகோதரன்,” என்ற எண்ணத்தை அவர்கள் கொள்ளும்படியாகச் செய்வதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
22 ஆம், ஆலோசனை கொடுப்பது என்பது நாம்—விசேஷமாக நியமிக்கப்பட்ட மூப்பர்கள்—அவ்வப்போது நம்முடைய உடன் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்க கடமைப்பட்டிருக்கும் ஓர் அன்பான செயல். நீங்களாகவே நினைத்துக்கொள்ளும் எந்த ஒரு காரியத்தின் அடிப்படையிலும் ஆலோசனை கொடுக்கப்படக்கூடாது. ஆனால், தேவைப்படும்போது, அது தைரியமாகக் கொடுக்கப்படவேண்டும். அதற்கு ஒரு பைபிள் ஆதாரம் இருக்க வேண்டும், அதே சமயத்தில் சாந்தமான ஆவியோடும் கொடுக்கப்பட வேண்டும். மற்றும் நம்மை நேசிக்கும் ஒருவரிடமிருந்து வரும் ஆலோசனையை ஏற்றுக்கொள்வது அதிக எளிதான காரியம். (w86 9/15)
நீங்கள் விளக்க முடியுமா?
◻ கிறிஸ்தவ ஆலோசனை கொடுக்கும் சிலாக்கியமும் உத்தரவாதமும் யாருக்கு இருக்கிறது?
◻ ஆலோசனை கொடுப்பதற்கு தைரியம் ஏன் தேவையாக இருக்கலாம்?
◻ பவுல் கொரிந்திய கிறிஸ்தவர்களை நேசித்தான் என்ற உண்மைதானே அவனுடைய ஆலோசனையை அவர்கள் ஏற்றுக்கொள்வதை ஏன் எளிதாக்கியது?
◻ கிறிஸ்தவ ஆலோசனைக்காரர் ஏன் சாந்தமாகவும் மனத்தாழ்மையாகவும் இருக்க வேண்டும்?
◻ தன்னுடைய ஆலோசனை ஒடுக்குதல் முறையில் அமைந்திருக்கிறது என்ற எண்ணத்தைக் கொடுப்பதை ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு தவிர்க்கலாம்?
[கேள்விகள்]
1, 2. (எ) நீதிமொழிகள் 12:15-ம் 19:20-ம் ஆலோசனையின் மதிப்பை எப்படிக் காண்பிக்கின்றன? (பி) நாம் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முதலாவது என்ன தேவைப்படுகிறது? இதை எந்த அனுபவம் விளக்குகிறது?
3. கிறிஸ்தவ சபையில் தேவையான சமயங்களில் ஆலோசனை கொடுப்பதற்கு யெகோவா யாரைக் கொடுத்திருக்கிறார்?
4, 5. (எ) மூப்பர்கள் மட்டுமே ஆலோசனை கொடுக்கக்கூடியவர்கள் அல்ல என்பதைக் காண்பிக்கும் சில வேதப்பூர்வமான எடுத்துக்காட்டுகள் என்ன? (பி) மூப்பர்கள் அல்லாத மற்ற கிறிஸ்தவர்கள் ஆலோசனைகள் வழங்கும் சில பொருத்தமான தற்கால சூழ்நிலைகள் யாவை?
[பக்கம் 25-ன் படம்]
“பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தைக் காண்பிக்க” மற்றவர்களுக்கு நினைப்பூட்டும்படி பவுல் தீத்துவைத் துரிதப்படுத்தினான்