நீங்கள் எல்லா சமயத்திலும் ஆலோசனையின் கருத்தைக் கிரகித்துக்கொள்கிறீர்களா?
மூத்த சகோதரன் மூர்க்கத்தனமாகக் கோபப்பட்டான். அவனுடைய கோபத்தின் குறியெல்லாம் அவனுடைய இளைய சகோதரன். அதற்குக் காரணம்? அவனுடைய சகோதரன் அங்கீகரிப்புக்குப் பாத்திரவானாயிருக்க தனக்கு அது மறுக்கப்பட்டது. அவனுடைய எரிச்சல் வளருவது கண்டு அவனுக்குப் பழக்கமான ஒருவர் அவனிடம் புண்பட்ட உணர்வுகளை அடக்கிக்கொள்ளும்படியாக ஆலோசனை கொடுத்தார். அப்படிச் செய்யாவிட்டால் ஏதாவது கெட்ட சம்பவம் நடந்துவிடும். ஆனால் அந்த மனிதனோ கொடுக்கப்பட்ட நல்ல ஆலோசனையை அசட்டை செய்தான். வருத்தத்துக்குரிய காரியம், அவன் தன் இளைய சகோதரனைக் கொன்றுவிட்டான்.
அந்த மனிதன்தான் காயீன், நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாளின் மூத்த மகன். யெகோவா ஆபேலின் பலியை ஏற்றுக்கொண்டு காயீனுடையதை ஏற்றுக்கொள்ளாதிருந்தபோது காயீன் தன்னுடைய இளைய சகோதரனைக் கொலை செய்தான். அவனுக்குப் பழக்கமானவர் யெகோவா தேவன்தான். இவர்தான் அவனுக்கு அன்பான ஆலோசனை கொடுத்தார். காயீனோ அதை மறுத்தான். இதன் பலனாக ஆரம்பக் கட்டத்திலிருந்த மானிட குடும்பத்தில் கொலை பிரவேசித்தது. காயீன் தன்னுடைய நீண்ட வாழ்க்கையின் மீதி பகுதியை விலக்கப்பட்ட நாடுகடத்தப்பட்டவனாக வாழும் தண்டனைத் தீர்ப்பைப் பெற்றான். புத்திமதியின் கருத்தை உணர்ந்து கொள்ளாதது எப்பேர்ப்பட்ட விசனகரமான விளைவை ஏற்படுத்தியது!—ஆதியாகமம் 4:3-16.
காயீனுக்குப் பின் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு தாவீது அரசன் ஏத்தியனாகிய உரியாவின் மனைவி பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தான், அந்தப் பெண்ணும் கர்ப்பவதியானாள். உரியாவை தன் மனைவியிடம் போகச் சொல்லுவதன் மூலம் பிரச்னையைத் தானே தீர்த்துவிட முயன்றான். அவன் அதற்கு மறுத்தபோது உரியா யுத்தக்களத்தில் மரிக்கும்படியாக தாவீது ஏற்பாடு செய்து, பத்சேபாள் ஒரு விபச்சாரியாக மரிப்பதைத் தடைசெய்ய அவளை விவாகம் செய்துகொண்டான். கடவுளுடைய தீர்க்கதரிசி தாவீதை சந்தித்து, அவன் செய்த காரியம் எவ்வளவு வினைமையானது என்பதை அவனுடைய கவனத்திற்குக் கொண்டுவந்தான். அந்தப் புத்திமதியின் கருத்தைத் தாவீது கிரகித்துக்கொண்டான். அந்தக் குற்றச் செயலுக்காக அவன் தன்னுடைய எஞ்சிய வாழ்க்கை முழுவதும் துன்பப்பட வேண்டியதாயிருந்தபோதிலும், அவனுடைய இருதயப் பூர்வமான மனந்திரும்புதலை யெகோவா ஏற்றுக்கொண்டார்.—2 சாமுவேல் 11:1-12:14.
இந்த இரு சரித்திரப்பூர்வமான உதாரணங்களுமே ஆலோசனைக்குச் செவிகொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் காண்பிக்கின்றன. அது வெற்றிக்கும் தோல்விக்கும், இன்பத்துக்கும் துன்பத்துக்கும் ஜீவனுக்கும் மரணத்துக்குமான வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். எனவேதான் பைபிள் பின்வருமாறு சொல்லுவதில் ஆச்சரியமில்லை: “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.” (நீதிமொழிகள் 12:15) என்றபோதிலும், ஆலோசனைக்குச் செவிகொடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏன்? இது சம்பந்தமாக நாம் எப்படித் தாவீது அரசனின் நல்ல மனப்பான்மையை வளர்த்து காயீனின் கெட்ட மாதிரியைத் தவிர்க்கலாம்?
மனத்தாழ்மை உதவுகிறது
அநேக சமயங்களில் மக்கள் ஆலோசனைக்குச் செவிகொடுப்பதைக் கடினமாகக் காண்கின்றனர், ஏனென்றால் தங்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அல்லது அப்படி ஏற்றுக்கொள்கிறவர்களாயிருந்தால் இந்த நபரிடமிருந்து ஏன் ஆலோசனைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் காணமுடிகிறதில்லை. உண்மையில் இது அகந்தை, சிறிதளவு நியாயங்களை நிதானிப்பது இதை மேற்கொள்ள உதவும். உதாரணமாக “எல்லாரும் பாவஞ்செய்து தேவ மகிமையற்றவர்களாகி” இருக்கிறோம் என்று பவுல் சொன்னான். (ரோமர் 3:23) நம்மெல்லாருக்கும் அவ்வப்போது ஆலோசனைகள் அல்லது புத்திமதிகள் தேவை என்பதை அது எடுத்துரைக்கிறது. அதே சமயத்தில் நமக்கு ஆலோசனை கொடுப்பவர்களுக்குங்கூட குறைபாடுகள் உண்டு என்றும் அது சொல்லுகிறது. இதற்கும் யாரும் விதிவிலக்கல்ல. எனவே, மற்றொருவரில் நீங்கள் ஊகிக்கும் குறைபாடுகள், அவர் உங்களுக்கு ஆலோசனை கொடுக்கும் நிலையிலிருந்து உங்களுக்குக் கொடுக்கும் ஆலோசனையை நீங்கள் ஏற்றுக்கொள்வதைத் தடைசெய்ய அனுமதியாதீர்கள்.
அகந்தையை எதிர்த்துப்போராட வேண்டிய அவசியத்தை இயேசு அழுத்திக் காண்பித்தார். அவர் தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்.” (மத்தேயு 18:3) தங்களுடைய பெற்றோர்கள் புத்திமதிகளைக் கொடுத்து வழிநடத்தும்போது இளம்பிள்ளைகளுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. யாராவது ஒருவர் உங்களுக்கு ஆலோசனை கொடுத்தால், அப்படிப்பட்ட ஆலோசனை உங்கள் பேரில் அவருடைய அன்பையும் அக்கறையையும் நிரூபிக்கிறது என்பதை உணர்ந்து அதே விதமாக உணருகிறீர்களா? (எபிரெயர் 12:6) தாவீது அரசன், புத்திமதியை ஏற்றுக்கொள்ள மனத்தாழ்மையுடன் மனதுள்ளவனாயிருந்தது அவனுடைய மனந்திரும்புதலை யெகோவா ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது. அவன் பின்வருமாறு எழுத அவனைத் தூண்டியது: “நீதிமான் என்னைத் தயவாய் குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும். அது என் தலைக்கு எண்ணெயைப் போலிருக்கும்.”—சங்கீதம் 141:5.
இப்படிப்பட்ட சாந்தமான மனப்பான்மை, ஆலோசனை குறிப்பிட்ட எந்த விதிமுறைகளும் இல்லாத அம்சங்களைத் தொடும்போது நமக்கு உதவக்கூடும். உதாரணமாக, நம்முடைய சிகை அலங்கரிப்பு அல்லது உடை உடுத்தும் விதம் சபையிலுள்ள சிலருக்கு இடறலாக இருக்கிறது என்று நாம் புத்திமதியைப் பெறும்போது, அதன் கருத்தை உணர்ந்துகொள்வதற்கு உண்மையான மனத்தாழ்மை தேவைப்படுகிறது. என்றாலும், அப்படிச் செய்வது, அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்த அறிவுரையைப் பின்பற்றுவதாக இருக்கும்: “ஒவ்வொருவனும் தன் சுய பிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.”—1 கொரிந்தியர் 10:24.
மகிழ்ச்சிக்குரிய காரியமாவது, மிகச் சிறந்த அருமையான ஆலோசனைகளால் மிகுந்திருக்கும் பைபிளை யெகோவா நமக்கு கொடுத்திருக்கிறார். உண்மையில் பார்த்தால், ஆலோசனை என்ற வார்த்தை அதன் வித்தியாசமான வகைகளில் 170 முறைக்கு மேலாக காணப்படுகிறது. மேலும் இந்த ஆலோசனையை நாம் பொருத்துவதற்கு அன்பான மேய்ப்பர்களையும் அவர் அளித்திருக்கிறார். குடும்ப ஏற்பாடுங்கூட, தங்களுடைய உத்தரவாதங்களை அறிந்திருக்கும் பெற்றோர்களிடமிருந்து வரும் ஆலோசனை மூலம் அன்பான உதவியைக் கொடுப்பதற்கான மற்றொரு ஏற்பாடு. அப்படிப்பட்ட ஆலோசனைக்கு நாம் எல்லா சமயத்திலும் தாழ்மையுடன் செவிகொடுப்போமாக.
“கேட்கிறதற்குத் தீவிரமாக இருங்கள்”
யாக்கோபு 1:19 கொடுக்கும் புத்திமதி: “யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” நாம் ஆலோசனையைப் பெறும்போது இது விசேஷமாக உண்மையாக இருக்கிறது. ஏன்? ஒன்று, நம்முடைய சொந்த பலவீனங்களை அநேகமாய் நாம் அறிந்திருக்கிறோம் என்பதும், நம்மீது அக்கறையாக இருக்கும் ஒரு நண்பர் அதை நமக்குக் குறிப்பிட்டு காண்பித்து நமக்கு ஆலோசனை கொடுப்பது நமக்கு ஆச்சரியமாயிருப்பதில்லை என்பதும் உண்மை அல்லவா? அவர் என்ன சொல்லப் பார்க்கிறார் என்பதை வேகமாக உணர்ந்துகொள்வோமானால், நிச்சயமாகவே உட்பட்டிருக்கும் எல்லோருக்குமே அது காரியத்தை இலகுவாக்குகிறது.
ஆலோசனையுடன் ஒரு நண்பர் நம்மிடம் வருவாரானால், அவனோ அல்லது அவளோ ஓரளவுக்குப் பதட்டமடைகிறவராக இருக்கக்கூடும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆலோசனை கொடுப்பது அவ்வளவு எளிய காரியமல்ல. ஒருவேளை ஆலோசகராக வந்திருக்கும் அவர் பயன்படுத்தவேண்டிய வார்த்தைகள் அல்லது அணுகுமுறைக்கு அதிக கவனஞ் செலுத்தியிருக்கக்கூடும். நாம் நன்கு செய்துவந்திருக்கும் கிறிஸ்தவ ஊழியத்தின் சில சேவைகளுக்காக நம்மை ஒரு மூப்பர் போற்றி நம்மோடு சம்பாஷணையை தொடங்கலாம். ஆனால் அதுதானே அவர் ஆலோசனை கொடுக்கும்போது அவருடைய உள்நோக்கங்களைச் சந்தேகிக்கச் செய்துவிடக்கூடாது. ஆலோசனை கொடுப்பவர் முதலாவதாக நம்மிடம் மறைமுகமாக பேசக்கூடும், சாதுரியமற்றவராக அல்லது நேரடியாக பேசாமலிருக்க முயற்சி செய்வார். சொல்லப்படுகிற கருத்தை உடனடியாக உணர்ந்துகொள்ளும் திறமை நமக்கு இருப்பதுதானே ஆலோசகர் மேற்கொண்டிருக்கும் காரியத்தில் அவருக்கு உதவும், ஒருவேளை நம்மை புண்படுத்தாமலிருக்கக்கூடும்.
நாம் கருத்தை உணர்ந்துகொள்ள சில சமயங்களில் ஆலோசகர் ஓர் உதாரணத்தையோ அல்லது எடுத்துக்காட்டையோ பயன்படுத்தக்கூடும். ஓர் இளம் மனிதன் வினைமையான தவற்றை செய்யும் ஒருவனாக ஆகிவிடவில்லை, ஆனால் அவன் ஒரு தவறான பாதையிலிருந்தான். அவனிடம் நியாயத்தைப் புரியவைக்க ஒரு முதிர்ந்த கிறிஸ்தவன் மேசையின் மீதிருந்த ஓர் அளவுகோலை எடுத்தார். தன்னுடைய கையில் அந்த அளவுகோலை வளைத்து, அவனிடம், “ஓர் அளவுகோலை நான் இதுபோன்று வளைத்து அதே சமயத்தில் ஒரு நேர்கோட்டை வரைந்திட முடியுமா? என்று கேட்டார். அந்த இளம் மனிதன் கருத்தை உணர்ந்துகொண்டான். தன்னுடைய சொந்த ஆசைகளுக்குப் பொருந்தியவகையில் அவன் கட்டுப்பாடுகளை வளைத்துக்கொண்டிருந்தான். நீதிமொழிகள் 19:20-லுள்ள ஞானமான ஆலோசனையைப் பின்பற்றிட அந்த உதாரணம் அவனுக்கு உதவி செய்தது: “ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை [சிட்சையை, NW] எற்றுக்கொள்ளுங்கள்.”
மறைமுகமாகக் கொடுக்கப்படும் ஆலோசனையை அறிந்துகொள்ளுங்கள்
இந்த உணர்வு, ஒருவருடைய தலையிடுதல் இல்லாமலிருந்தும் மறைமுகமான ஆலோசனையிலிருந்து நாம் நன்மை பெற நமக்கு உதவக்கூடும். இது போர்ச்சுகலைச் சேர்ந்த ஓர் இளம் மனிதனின் காரியத்தில் உண்மையாயிருந்தது. அவன் பைபிளைப் படிக்க ஆரம்பித்து, உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற ஒரு புத்தகத்தையும் வாங்கினான். ஒரு சில நாட்களுக்குப் பின் தான் அந்தப் புத்தகத்தை மூன்று முறை படித்துவிட்டதாகவும், அதனால் உதவப்பட்டதாகவும் கூறினான். எவ்விதம் உதவப்பட்டான்? அந்த இளைஞன் சொன்னது இதுதான்:
“எதிர்காலத்தைக் குறித்து எனக்கு உண்மையான நம்பிக்கை கிடையாது, ஆனால் அதில் இரண்டாம் அதிகாரம் [“நீ ஏன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கக்கூடும்”] என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை அளித்தது. மற்றும் நான் தற்புணர்ச்சியில் சில ஆண்டுகளாக ஈடுபட்டுவந்தேன். இது கடவுளுக்குப் பிரியமற்றது. எனக்கே கேடுண்டாக்கக்கூடியது என்பதை ஒருவரும் என்னிடம் சொன்னதில்லை. அதிகாரம் 5-ஐ [“தற்புணர்ச்சியும் ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியும்”] வாசித்த பின்பு இந்தப் பழக்கத்தை விட்டுவிட தீர்மானித்தேன். அதிகாரம் 7 [“உன் உடையும் தோற்றமும்—உன்னைப் பற்றி பேசுகின்றன”] என்னுடைய தனிப்பட்ட தோற்றத்தை நான் மதிக்கும்படி எனக்கு உதவி செய்தது. நீங்கள் பார்க்கிறபடி நான் ஏற்கனவே என் தலை முடியை வெட்டிவிட்டேன்.”
அவன் தொடர்ந்து சொன்னான்: “பல ஆண்டுகளாக நான் புகைபிடித்துவந்தேன். அதிகாரம் 15 [“மயக்க மருந்துகள்—மெய்யான வாழ்க்கைக்கு அடிப்படையாகுமா?”] அந்தக் காரியத்தில் என்னைச் சீர்படுத்தியது. நான் யெகோவாவிடம் ஜெபித்தேன். ஞாயிற்றுக்கிழமை முதற்கொண்டு இன்னொரு சிகரெட்டைக் கையில் தொட்டதில்லை. உங்களுக்குத் தெரியுமா, சில காலமாக நான் என் காதலியுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்தேன், ஆனால் அதிகாரம் 18 [“பால் சம்பந்தமான காரியத்தில் நல்நடத்தை அறிவுள்ள காரியமா?”] இந்தக் காரியத்தின் பேரில் கடவுளுடைய நோக்குநிலை என்ன என்பதை என் கவனத்துக்குக் கொண்டுவந்தது. இது குறித்து நான் ஏற்கெனவே அவளுடன் பேசியிருந்தேன், எங்களுடைய உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்திட அவள் தீர்மானித்தாள்.”
ஓர் இளம் மனிதனின் வாழ்க்கையில் ஒரு குறுகிய காலத்திற்குள் இப்படிப்பட்ட மாற்றத்தைக் காண்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது! அதைக் கூடிய காரியமாக்கியது எது? தான் வாசித்த காரியங்கள் தனிப்பட்டவிதத்தில் தனக்கு ஆலோசனைகளாக இருந்தன என்பதை அவன் உணரமுடிந்ததுதான்.
ஆலோசனைக்குச் செவிகொடுத்தல் நன்மைகளைக் கொண்டுவருகிறது
ஆலோசனை—அது பைபிள் மூலம் அல்லது பைபிள் பிரசுரங்கள் மூலம் மறைமுகமாக வந்தாலுங்சரி, அல்லது ஒரு நண்பர் மூலமாக நேரடியாக வந்தாலுஞ்சரி—நன்மையாக இருக்கும். இந்தக் காரியம் ஒரு தகப்பனின் அனுபவத்தில் காணப்படுகிறது. தன்னுடைய 18 வயது மகன் தான் கொடுக்கும் சிட்சைக்குச் சரியாக பிரதிபலிக்காததால் சபையிலுள்ள ஆவிக்குரிய முதிர்ச்சியான சகோதரரின் உதவியை நாடினார். மூப்பர்கள் அவருடன் காரியங்களை அன்போடு சிந்தித்தனர். கடவுளைச் சேவிப்பதற்கான வைராக்கியம் அவருக்கு இருந்தது. ஆனால் அவர் தன்னுடைய குடும்பத்தோடு இன்னும் அதிக சமநிலையுடன் நடந்துகொள்ள வேண்டியதாயிருந்தது.
அவரிடம் பவுலின் வார்த்தைகள் வாசிக்கப்பட்டது: “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளை எரிச்சல்படுத்தாமல், யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனப்பக்குவத்திலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4) அந்தத் தகப்பனார் பின்வரும் காரியங்களைக் குறித்து சிந்திக்கும்படி கேட்கப்பட்டார்: “தன்னுடைய மகனை உற்சாகப்படுத்தும் விதம், அவனுடைய நன்மையைக் கருத்தில் கொண்டதாயிருந்தபோதிலும், அவனுக்கு எரிச்சலூட்டுவதாய் இருந்ததா? கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் தகப்பன் கொண்டிருக்கும் வைராக்கியத்தை மகனும் கொண்டிருப்பதற்கு அப்படிப்பட்ட காரியங்களுக்காக அவனுடைய இருதயத்தில் அன்பை வளர்த்திடாமல் அதை எதிர்பார்க்கும் ஒரு நிலைமையாக அது இருக்குமா? தன்னுடைய மகன் ‘தன்னுடைய கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்கக் கற்றுக்கொள்ள’ அவர் அவனுக்கு உதவி செய்தாரா?—உபாகமம் 31:12, 13.
அந்தத் தகப்பன் கொடுக்கப்பட்ட ஆலோசனைக்குச் செவிகொடுத்து அதைப் பொருத்திப் பிரயோகித்தார். பலன்? அவருடைய 18 வயது மகன் இப்பொழுது கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்கிறான், அவனுடைய தகப்பன் இப்பொழுது அவனுடன் ஒரு வாராந்தர பைபிள் படிப்பை நடத்துகிறார். அந்தத் தகப்பன் சொன்னதாவது: “இப்பொழுது எங்களுக்குள் ஒரு நல்ல தகப்பன்-மகன் உறவு இருக்கிறது.” ஆம், தகப்பனும் மகனுமாக இருவருமே ஆலோசனையின் கருத்தைக் கிரகித்துக் கொண்டார்கள்.
நாம் எல்லாருமே தவறுகள் செய்கிறோம், நமக்கு அவ்வப்போது புத்திமதிகள் தேவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. (நீதிமொழிகள் 24:6) ஞானமான ஆலோசனையின் கருத்தைக் கிரகித்துக்கொண்டு அதற்குச் செவிகொடுத்தால் நாம் அநேக ஆசீர்வாதங்களை அனுபவிப்போம். அவற்றில் விலைமதிக்கமுடியாத ஆசீர்வாதம்: நம்முடைய அன்புள்ள பரம பிதாவாகிய யெகோவா தேவனுடன் அர்த்தமுள்ள தனிப்பட்ட ஓர் உறவை வளர்ப்பதும் அதைக் காத்துக்கொள்வதுமாகும். இப்படியாக நாம் தாவீது அரசனின் வார்த்தைகளை எதிரொலிப்பவர்களாயிருப்போம்: “எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவைக் துதிப்பேன்.”—சங்கீதம் 16:7. (w87 4/1)