மிமிகுதியின் காலத்தில் மரணத்துக்கேதுவான கொடிய பஞ்சம்
என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்.”—ஏசாயா 65:13.
உலக முழுவதன் மீதும் பஞ்சத்தின் கருமை நிழல்! இந்த இக்கட்டான நிலைகுறித்து தி பாட்சன் குளோப் என்ற பத்திரிகையில் தலையங்கக் கட்டுரை பின்வருமாறு குறிப்பிட்டது: “பசி பட்டினி என்ற நிலையில் வாழும் ஏறக்குறைய நூறு கோடி மக்களைக் கொண்டிருக்கும் ஓர் உலகம், செல்வச்செழிப்பு மிகுந்த நாடுகள் அறுவடை செய்யும் மிகுதியில் ஒரு சிறிய பங்கை ஏழை நாடுகளும் அனுபவிக்க அவர்களுக்கு உதவும் வகையில் வழிகள் பல வகுக்க வேண்டும்.” என்றபோதிலும், தொழில்நுட்பத்தில் முன்னேறியிருப்பதாக அழைக்கப்படும் நாடுகளுங்கூட உணவு பற்றாக்குறைக்குத் தாங்கள் விதிவிலக்கு என்று முழு அளவில் உரிமை பாராட்டிட முடியாது. தங்களுடைய அனைத்து குடிமக்களும் உணவளிக்கப்படுவார்கள் என்பதை உறுதிபடுத்தும் ஒரு திட்டத்தை அமல்படுத்துவதில் இவர்களும் தோல்வி கண்டிருக்கின்றனர். வளர்ந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்னைக்கு அக்கறையுள்ள மனிதாபிமானமுடைய நிபுணர்களும் வழிகாண முடியாமல் தவிக்கின்றனர். இதற்குப் பரிகாரம் ஒன்று உண்டா?
2 மேற்குறிப்பிடப்பட்ட தலையங்கக் கட்டுரை பின்வரும் காரியத்தை ஒப்புக்கொண்டது: “போஷாக்குக் குறைவின் மிக வருந்தத்தக்க அம்சம் . . . எல்லாரையும் போஷிக்கக்கூடிய திறமை உலகத்துக்கு இருக்கிறது என்பதே.” என்றபோதிலும் பஞ்சம் பட்டினியின் வாதை தொடர்ந்து முன்செல்லுகிறது. ஏன் இப்படி இருக்கவேண்டும்? நம்முடைய அன்பான சிருஷ்டிகர் பூமியின் கோடிக்கணக்கான குடிகளுக்கு வேண்டிய உணவை ஏற்பாடு செய்திருக்கிறார். இந்தப் பூமி மனிதனின் வீடாக இருப்பதற்கு அதை ஆயத்தப்படுத்துகையில், ஏராளமானதை எல்லாருடைய தேவைக்கும் மிஞ்சியதை உற்பத்தி செய்யும் திறமையைக் கொண்டிருக்கச் செய்தார். (சங்கீதம் 72:16-19; 104:15, 16, 24) இந்தக் கடினமான காலங்களிலுங்கூட, சரியான வழியில் நோக்கியிருப்பவர்களுக்குப் போதுமான உணவை நம்முடைய மகத்துவ மிகுந்த பராமரிப்பாளர் அளிப்பார் என்று உறுதியளிக்கப்படுகிறோம். பெரிய உணவு நிர்வாகியாக தாம் அளித்திருப்பவர் மூலம் அவர் நமக்கும் பின்வருமாறு சொல்கிறார்: “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் [தொடர்ந்து] தேடிக்கொண்டிருங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் [வாழ்க்கையின் பொருள் தேவைகள்] உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:33; 1 யோவான் 4:14.
மரணத்துக்கேதுவான கொடிய பஞ்சம்
3 இன்று பூமியில் அதிக குறிப்பிடத்தக்க காரியம் விசனகரமான ஆவிக்குரிய பஞ்சம். இதற்கும் சமாதானமின்மைக்கும் நேரடியான சம்பந்தம் இருக்கிறது. ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கு மனிதவர்க்கம் தேடி அலைமோதிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை குறித்து தம்முடைய தீர்க்கதரிசியை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பின்வருமாறு எழுதும்படி செய்தார்: “இதோ நாட்கள் வரும்—இது யெகோவாவாகிய ஆண்டவரின் திருவாக்கு—அப்போது தேசத்திலே பஞ்சம் வரச்செய்வேன், அது ஆகாரப் பஞ்சமல்ல, ஜலதாகமுமல்ல, யெகோவாவின் வசனத்தைக் கேட்க வேண்டுமெனத் தவிக்கிற பஞ்சமே. அப்பொழுது அவர்கள் ஒரு சமுத்திரந் தொடங்கி மறு சமுத்திர மட்டும் வடதிசை தொடங்கிக் கீழ்திசை மட்டும் யெகோவாவின் வசனத்தைத் தேடியலைந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.”—ஆமோஸ் 8:11, 12, தி.மொ.
4 என்றபோதிலும் இந்த இக்கட்டு நிலையிலிருந்து வெளியேற ஏதேனும் வழி இருக்கிறதா? அப்போஸ்தலனாகிய பவுல் பின்வரும் வார்த்தைகளில் நம்மை உற்சாகப்படுத்துகிறவனாய் ஆம் என்று பதிலளிக்கிறான்: “உலகத்தை . . . உண்டாக்கின தேவனானவர் . . .முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.”—அப்போஸ்தலர் 17:24-27.
5 கடவுள் “நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்றால், ஏன் தடவியாகிலும் கண்டுபிடிக்க முற்படும் பலர் அவரைக் கண்டுபிடிக்க முடியாமற்போகிறது? ஏனென்றால் அவரைத் தவறான இடங்களில் தேடுகிறார்கள். கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஆட்களில் எத்தனைபேர் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படை நூலாகிய பரிசுத்த வேதாகமத்தினிடம் செல்லுகிறார்கள்? மேய்ப்பர்கள் என்னப்பட்டவர்களில் எத்தனைபேர் “ஆடுகளுக்கு” போதனையளிக்க கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்? (எசேக்கியேல் 34:10) தம்முடைய நாளில் வாழ்ந்த மேட்டிமையான மதத் தலைவர்கள் “வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல்” இருந்தார்கள் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 22:29; யோவான் 5:44) என்றபோதிலும், இயேசு வேதவாக்கியங்களை அறிந்தவராயுமிருந்தார், மக்களுக்குப் போதிப்பவராயுமிருந்தார். அவர்களுக்காக அவர் மனதுருகினார், ஏனென்றால், “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய்” இருந்தார்கள்.—மத்தேயு 9:36.
மிகுதியின் காலம்—எப்படி?
6 தம்மை உண்மையிலேயே அறிந்துகொள்ள நாடுகிறவர்களுக்கு யெகோவா உறுதியளிக்கிறார் மற்றும் உற்சாகப்படுத்துகிறார். பொய் மத மேய்ப்பர்களைக் கடிந்துகொள்வதில் அவர் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் பின்வருமாறு சொல்கிறார்: “இதோ என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.” (ஏசாயா 65:13, 14) ஆனால் தம்முடைய சொந்த ஊழியர்களுக்குக் கடவுள் எப்படி மிகுதியாக அளிக்கிறார்? இன்றைய ஆவிக்குரிய பஞ்சத்தின் மத்தியிலும் ஜீவனை காப்பதற்கான தம்முடைய ஏற்பாட்டில் மகிழ்ச்சியுடன் பங்குகொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
7 தப்பிப்பிழைப்பதானது கடவுளுடைய தகுதிகளை அறிந்துகொள்வதையும் அவற்றில் விசுவாசங்கொண்டு செயல்படுவதையும் சார்ந்திருப்பதால், நமக்காக அவருடைய சித்தம் என்ன என்பதை அறிந்துகொள்ள நாடுகிறவர்களாய், அவர் நம்முடன் தொடர்புகொள்ளும் விதத்தைப் பகுத்துணர்கிறவர்களாய் மகிழ்ச்சியோடு கடவுளுடைய வார்த்தையிடமாகச் செல்ல வேண்டும். (யோவான் 17:3) இது சம்பந்தமாக, இன்று நடைபெறும் காரியங்களுக்கு இணையான ஒரு பைபிள் நாடகத்தை நாம் இப்பொழுது சிந்திப்போம். இந்த நாடகத்தின் முக்கிய பாத்திரம் முற்பிதாவாகிய யோசேப்பு. யெகோவா தம்முடைய ஜனத்துக்கு யோசேப்பின் மூலம் ஞானமான ஏற்பாடு செய்ததுபோல, இன்று தம்மைத் தேடுகிறவர்களை அன்போடு வழிநடத்துகிறார்.—ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:11, ஆங்கில மேற்கோள் பைபிள் அடிக்குறிப்பு (*); கலாத்தியர் 4:24.
யோசேப்பு, ஜீவனைக் காப்பவன்
8 ஜீவனைப் பாதுகாப்பவனாக, யாக்கோபின் மகன் யோசேப்பு கருத்தைக் கவரும் ஒரு பாத்திரமாக இருந்தான். இது பிற்காலத்தில் ஏதாவதொரு காரியத்தைக் குறிப்பிட்டு காட்டுகிறதா? தன்னுடைய சகோதரர்கள் தன்னை தகாத முறையில் நடத்தியபோது யோசேப்பின் சகிப்புத்தன்மையையும், அந்நிய நாட்டில் ஏற்பட்ட சோதனைகளையும் கஷ்டங்களையும் அவன் மேற்கொண்டதையும், அவனுடைய அசைக்கமுடியாத விசுவாசத்தையும், அவன் உத்தமத்தைக் காத்துக்கொண்டதையும், பெருஞ் சேதத்தை ஏற்படுத்தும் கடுமையான பஞ்சத்தின் போது ஞானமான நிர்வாக ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டதையும் கவனியுங்கள். (ஆதியாகமம் 39:1-3, 7-9; 41:38-41) இதற்கு இணைபொருத்தத்தை இயேசுவின் வாழ்க்கையில் காண்கிறோமல்லவா?
9 “யெகோவாவின் வசனத்தைக் கேட்க” இயலாது பட்டினிகிடக்கும் ஓர் உலகத்தின் மத்தியில் இயேசு துன்பத்தினூடே ஜீவ அப்பம் ஆனார். (ஆமோஸ் 8:11; எபிரெயர் 5:8, 9; யோவான் 6:35) யோசேப்புடன் அவர்களுடைய உறவில், யாக்கோபும் பார்வோனும் நமக்கு யெகோவாவையும் அவர் தம்முடைய குமாரன் மூலம் நிறைவேற்றும் காரியங்களையும் நமக்கு நினைப்பூட்டுகிறது. (யோவான் 3:17, 34; 20:17; ரோமர் 7:15, 16; லூக்கா 4:18) இந்த உண்மை-வாழ்க்கை நாடகத்தில் பங்குகொண்ட மற்றவர்களும் இருந்தார்கள், அவர்களுடைய பாகத்தையும் நாம் அக்கறையோடு கவனிப்போம். பெரிய யோசேப்பாகிய இயேசு கிறிஸ்துவை நாம் சார்ந்திருக்க வேண்டிய காரியத்தையும் நமக்கு நினைப்பூட்டுகிறது. படுமோசமாகிக் கொண்டிருக்கும் இந்தக் “கடைசி நாட்களில்” அவர் நம்மை மரணத்துக்கேதுவான பஞ்சத்திலிருந்து காப்பாற்றிவருவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்!—2 தீமோத்தேயு 3:1, 13.
நாடகம் வெளிப்படுத்தும் காரியங்கள்
10 யோசேப்பின் நாளில் யெகோவா தம்முடைய மக்களுக்கு எதிர்காலத்தில் என்ன வைத்திருக்கிறார் என்பதை எந்த மனிதனும் அறிந்திருக்க முடியாது. ஆனால் தன்னுடைய முக்கியமான பாகத்தை நிறைவேற்ற யோசேப்பு அழைக்கப்படும் அந்தச் சமயத்திற்குள் அவனுடைய தகுதிகளைப் பொறுத்ததில் யெகோவா அவனை ஏற்கெனவே பயிற்றுவித்து பூரணப்படுத்திவிட்டார். அவனுடைய ஆரம்ப கால வாழ்க்கையைக் குறித்து பதிவு பின்வருமாறு வாசிக்கிறது: “யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள், சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.” (ஆதியாகமம் 37:2) “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியின்” மத்தியில் தம்முடைய பிதாவின் ஆடுகளைக் கவனித்துவருவதில் இயேசு சற்றும் உண்மை தவறாதவராய் இருந்ததுபோல் யோசேப்பு தன்னுடைய தகப்பனின் அக்கறைகளுக்கு உண்மை தவறாதவனாயிருந்தான்.—மத்தேயு 17:17, 22, 23.
11 யோசேப்பின் தகப்பனாகிய இஸ்ரவேல் அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனை அதிகமாக நேசிக்கலானார், மற்றும் அவனுக்குப் பலவருண அங்கி ஒன்றையும் செய்துகொடுத்தார். இதனால் யோசேப்பின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் “அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைக்க” ஆரம்பித்தார்கள். அவன் இரண்டு சொப்பனங்களைக் கண்டான்; தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவான் என்று அவற்றை விடுவித்து அவனைப் பகைப்பதற்குக் கூடுதலான காரணத்தைக் கொண்டிருந்தனர். அதுபோல, யூதர் மத்தியிலிருந்த தலைவர்கள் இயேசுவின் உண்மை தவறாத தன்மை, அவருடைய போதனை போதனாமுறை மற்றும் அவர் மேலிருந்த யெகோவாவின் ஆசீர்வாதம் ஆகியவற்றினிமித்தம் அவரை பகைத்தார்கள்.—ஆதியாகமம் 37:3-11; யோவான் 7:46; 8:40.
12 ஒரு சமயம், யோசேப்பின் சகோதரர்கள் சீகேமுக்கு அருகாமையில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்கள். யோசேப்பின் தகப்பன் கவலைகொள்வதற்குக் காரணம் இருந்தது, ஏனென்றால் அங்குதான் சீகேம் தீனாளைக் கெடுத்தான், இதனால் சிமியோனும் லேவியும் அவர்களுடைய சகோதரர்களோடு சேர்ந்து அந்த நகரத்தின் ஆண்கள் அனைவரையும் கொன்றுபோட்டார்கள். அவர்களுடைய நலம் காணவும் அதைத் தன்னிடம் வந்து அறிக்கை செய்யவும் யாக்கோபு யோசேப்பை அனுப்புகிறான். தன்னுடைய சகோதரர்கள் தன்னை பகைத்தபோதிலும் யோசேப்பு அவர்களைக் காண உடனடியாகப் புறப்படுகிறான். அதுபோன்று, யெகோவா தமக்குப் பூமியில் கொடுத்த வேலையை இயேசு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்; அது இரட்சிப்பின் அதிபதியாக பூரணப்படுத்தப்படுகிறபோது மிகுந்த உபத்திரவங்களை உட்படுத்தியபோதும் அப்படிச் செய்தார். தம்முடைய சகிப்புத்தன்மையில் இயேசு நம் எல்லாருக்கும் எவ்வளவு சிறந்த ஒரு முன்மாதிரியாக ஆனார்!—ஆதியாகமம் 34:25-27; 37:12-17; எபிரெயர் 2:10; 12:1, 2.
13 யோசேப்பு தூரத்தில் வருவதை அவனுடைய பத்து சகோதரரும் கண்டார்கள். அப்பொழுதே அவனுக்கு விரோதமாக அவர்களுடைய கோபம் பற்றியெறிய ஆரம்பித்தது. அவனைத் தொலைத்துக்கட்ட சதி செய்தார்கள். முதலாவது அவனைக் கொன்றுவிட திட்டமிட்டார்கள். ஆனால் ரூபன், முதல் மகனாக தனக்கு இருந்த உத்தரவாதத்துக்குப் பயந்து, தண்ணீர் வற்றியிருந்த ஒரு குழிக்குள் போட்டுவிட வற்புறுத்தி அவர்களுடைய எண்ணத்தின் மீது வெற்றி கண்டான்; பின்பு வந்து அவனை விடுவித்து விடலாம் என்று எண்ணினான். என்றபோதிலும் இதற்குள்ளாக, அந்தப் பக்கமாகப் போய்கொண்டிருந்த இஸ்மவேலர் கூட்டத்தாரில் சிலரிடம் அடிமையாக விற்றுவிடும்படியாக யூதா பலமாக சிபாரிசு செய்தான். அப்பொழுது சகோதரர்கள் யோசேப்பின் நீண்ட அங்கியை எடுத்து அதை ஒரு வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்தில் தோய்த்து தங்களுடைய தகப்பனிடம் காண்பிக்க கொடுத்தனுப்புகிறார்கள். யாக்கோபு அதைக் கண்டு: “இது என் குமாரனுடைய அங்கிதான்! ஒரு துஷ்ட மிருகம் அவனைப் பட்சித்துப் போட்டது, யோசேப்பு பீறுண்டு போனான்!” என்று புலம்பினான். இயேசு பூமியில் தமக்கு நியமிக்கப்பட்டிருந்த வேலையை நிறைவேற்றுகையில் பட்ட துன்பங்களைக் கண்டு யெகோவாவும் அப்படியே உணர்ந்திருப்பார்.—ஆதியாகமம் 37:18-35; 1 யோவான் 4:9, 10.
எகிப்தில் யோசேப்பு
14 யோசேப்பை உட்படுத்தும் கிளர்ச்சிமிகுந்த சம்பவங்களின் நிறைவேற்றம் சரியாக வரிசைக் கிரமமாக நடந்தேறுகிறது என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக்கூடாது. மாறாக, இன்று நமக்கு போதனையாகவும் உற்சாகமூட்டுவதாகவும் ஒரு மாதிரி தொடரைக் காண்கிறோம். அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான்: “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன் கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ் செய்வாராக.”—ரோமர் 15:4-6.
15 யோசேப்பு எகிப்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பார்வோனின் பிரதான மெய்க்காப்பாளனாகிய போத்திபார் என்ற பெயர்கொண்ட ஓர் எகிப்தியனுக்கு விற்கப்பட்டான். யெகோவா யோசேப்புடன் இருந்தார். அவன் தன் தகப்பனின் வீட்டிலிருந்து தொலைதூரத்தில் இருந்தபோதிலும் தன் தகப்பன் மனதில் பதிய வைத்த அருமையான நியமங்களின்படி வாழ்ந்தான். யோசேப்பு யெகோவாவின் வணக்கத்தை விட்டுவிடவில்லை. யோசேப்பின் மிகச்சிறந்த தன்மைகளை அவனுடைய எஜமான் போத்திபார் போற்றுகிறவனாய் தன்னுடைய முழு வீட்டுக்கும் விசாரணைக்காரனாக நியமித்தான். யெகோவா யோசேப்பினிமித்தம் போத்திபாரின் வீட்டை ஆசீர்வதித்தார்.—ஆதியாகமம் 37:36; 39:1-6.
16 அந்த இடத்தில்தானே போத்திபாரின் மனைவி யோசேப்பை தன்னோடு பாலுறவுகொள்ளும்படி வற்புறுத்தினாள். அவன் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அவனுடைய அங்கியைப் பிடித்து இழுத்தாள், ஆனால் அவன் தன் அங்கியை அவள் கையில் விட்டுவிட்டு ஓடினான். யோசேப்பு தன்னைக் கெடுக்க முயன்றதாக அவள் போத்திபாரிடம் குற்றஞ்சாட்டினாள். போத்திபார் அவனை சிறையில் போட்டான். ஒரு குறிப்பிட்ட காலம்வரை அவன் விலங்கிடப்பட்டான். ஆனால், அவனுடைய சிறை அனுபவத்தின் கடுமையான துன்பங்களினூடேயும் யோசேப்பு தன்னை உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் ஒரு மனிதனாக நிரூபித்தான். இப்படியாக, சிறைத்தலைவன் கைதிகளையெல்லாம் அவனிடத்தில் ஒப்படைத்தான்.—ஆதியாகமம் 39:7-23; சங்கீதம் 105:17, 18.
17 அந்தக் காலப்பகுதியில் பார்வோனின் பிரதான பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் அரசனுக்குப் பிரியமற்று நடந்ததால் சிறைச்சாலையில் காவலில் வைக்கப்பட்டார்கள். அவர்களை விசாரிக்க யோசேப்பு நியமிக்கப்பட்டான். மீண்டும் யெகோவா காரியங்களைத் தம்முடைய நோக்கம் நிறைவேற செயல்படுத்துகிறார். அந்த இரண்டு பிரதானிகளும் சொப்பனங்கள் கண்டு அதிக குழம்பிய நிலைக்குள்ளானார்கள். “சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியது” என்பதை அழுத்திக் காண்பித்த பின்பு யோசேப்பு அவர்கள் கண்ட சொப்பனங்களுக்கு விளக்கம் கொடுத்தான். யோசேப்பு குறிப்பிட்டுக் காண்பித்தபடியே, மூன்று நாட்களுக்குப் பின்பு (பார்வோனின் பிறந்த நாளன்று) பானபாத்திரக்காரன் தன் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டான். ஆனால் பிரதான சுயம்பாகியோ தூக்கிலிடப்பட்டான்.—ஆதியாகமம் 40:1-22.
18 தன்னுடைய சார்பில் பார்வோனிடம் பேசும்படியாக யோசேப்பு பானபாத்திரக்காரனைக் கேட்டிருந்தபோதிலும், பானபாத்திரக்காரன் யோசேப்பை நினைவுபடுத்துவதற்குள் இரண்டு வருடங்கள் கடந்துபோயிற்று. இதுவுங்கூட பார்வோன் ஓர் இரவு இரண்டு முறை மனதைக் கலங்கவைத்த சொப்பனங்களைக் கண்டதன் காரணமாகதான். அரசனின் மந்திரவாதிகளும் சாஸ்திரிகளும் அவற்றின் அர்த்தத்தை விவரித்திட முடியாதிருக்க, யோசேப்பு சொப்பனங்களுக்கு அர்த்தஞ் சொல்ல முடியும் என்று அந்த பானபாத்திரக்காரன் பார்வோனிடம் கூறினான். எனவே பார்வோன் யோசேப்பை அழைத்திட, அவன் சரியான அர்த்தத்திற்கு ஊற்றுமூலர் யார் என்று தாழ்மையுடன் குறிப்பிடுகிறான்: “தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச் செய்வார்.” அப்பொழுது எகிப்தின் அரசன் சொப்பனங்களை யோசேப்பிடம் விவரமாய்ச் சொன்னான்:
“நான் நதி ஓரத்திலே நின்றுகொண்டிருந்தேன். அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல்மேய்ந்தது. அவைகளின் பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப் போல அவலட்சணமான பசுக்களை எகிப்து தேசமெங்கும் நான் கண்டதில்லை. கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது. அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும் வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல் முன் இருந்ததுபோலவே அவலட்சணமாயிருந்தது . . .
“பின்பு நான் என் சொப்பனத்திலே நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன். பின்பு சாவியானவைகளும் கீழ்க் காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது. சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்திலே சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை.”—ஆதியாகமம் 40:23—41:24.
19 என்னே விநோதமான கனவுகள்! அவற்றை எப்படி ஒருவன் விளக்கிட முடியும்? யோசேப்பு விளக்கினான், ஆனால் தன்னுடைய சொந்த மகிமைக்காக அல்ல. அவன் சொன்னான்: “பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான் . . . தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்.” பின்பு யோசேப்பு அந்தச் சொப்பனங்களின் வல்லமை வாய்ந்த தீர்க்கதரிசன செய்தியைப் பின்வருமாறு வெளிப்படுத்துகிறான்:
“எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும். அதன்பின் பஞ்சம் உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தின் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம். இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது.”—ஆதியாகமம் 41:25-32.
20 வரப்போகும் இந்தப் பஞ்சத்தைக் குறித்து பார்வோன் என்ன செய்யக்கூடும்? செழிப்பான ஏழு வருடங்களின் ஏராளமான விளைச்சலை சேமித்து வைப்பதற்கு விவேகமும் ஞானமுமுள்ள மனுஷனை தேசத்தின் மீது அதிகாரியாக ஏற்படுத்தும்படி யோசேப்பு சிபாரிசு செய்தான். பார்வோன் யோசேப்பின் விசேஷமான தன்மைகளை அறிய வந்தான். தன்னுடைய கையிலிருந்து முத்திரை மோதிரத்தைக் கழற்றி யோசேப்பின் கையிலே போட்டு, இப்படியாக பார்வோன் யோசேப்பை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாக நியமித்தான்.—ஆதியாகமம் 41:33-46.
21 பார்வோனுக்கு முன்னால் நின்ற அந்தச் சமயத்தில் யோசேப்பின் வயது 30. இயேசு கிறிஸ்து முழுக்காட்டுதல் பெற்று ஜீவனை அளிக்கும் தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்ததும் அந்த வயதில்தான். நம்முடைய நாட்களுக்கு விசேஷ பொருத்தத்தையுடைய ஆவிக்குரிய பஞ்சத்தின் காலத்தில் யெகோவாவின் “அதிபதியாகவும் இரட்சகராகவும்” இருப்பவருக்கு யெகோவா எப்படி யோசேப்பை முந்நிழலாகப் பயன்படுத்தினார் என்பதைப் பின்னால் பிரசுரிக்கப்படும் ஒரு கட்டுரை காண்பிக்கும்.—அப்போஸ்தலர் 3:15; 5:31. (w87 5/1)
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்
◻ இன்று பஞ்சம் என்ன இரு வழிகளில் அச்சுறுத்தும் காரியமாக இருக்கிறது?
◻ தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரருடன் இருக்கும்போது யோசேப்பு என்ன அருமையான தன்மைகளை வளர்த்தான்?
◻ எகிப்தில் யோசேப்பின் ஆரம்பகால அனுபவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ யோசேப்பினிடமும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் யெகோவா காண்பித்த அக்கறை நமக்கு எதை உறுதிப்படுத்துகிறது?
[கேள்விகள்]
1, 2. (எ) எந்தப் பிரச்னையில் தேசங்கள் வீணாக போராடிக்கொண்டிருக்கின்றன? (பி) பைபிள் சுட்டிக்காட்டும் உண்மையான நம்பிக்கை என்ன?
3. அதிக குறிப்பிடத்தக்க பஞ்சம் எது? அது எப்படி முன்னறிவிக்கப்படுகிறது?
4, 5. (எ) கடவுளைத் தேடியும் ஏன் சிலர் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை? (பி) தம்முடைய நாளின் மதத்தலைவர்களுக்கு இயேசு எவ்வாறு முரணாக இருந்தார்? (மத்தேயு 15:1-14)
6. ஆவிக்குரிய மிகுதியைக் குறித்ததில் யெகோவா எவ்வாறு தம்முடைய ஊழியர்களுக்கு உறுதியளிக்கிறார்?
7. இன்று நம்முடைய உற்சாகத்துக்காக எந்தப் பூர்வீக நாடகம் அன்போடு அளிக்கப்பட்டது?
8, 9.. (எ) யோசேப்பு, யாக்கோபு மற்றும் பார்வோன் ஆகியோருக்குப் பிற்காலத்தில் என்ன இணைபொருத்தங்களைக் காண்கிறோம்? (பி) இதன் நிறைவேற்றத்தில் நாம் எப்படி நம்மை உட்படுத்திக்கொள்ளலாம்?
10. (எ) தன்னுடைய முக்கியமான பாகத்தை நிறைவேற்றுவதற்காக யோசேப்பு எப்படி ஆயத்தப்படுத்தப்பட்டான்? (பி) அவனுடைய ஆரம்பகால வாழ்க்கையிலேயே என்ன தன்மைகளை வெளிப்படுத்தினான்?
11. (எ) யோசேப்பின் ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஏன் அவனைப் பகைக்க ஆரம்பித்தனர்? (பி) இதற்கொப்பான என்ன நிலைமையை இயேசு எதிர்பட்டார்?
12. (எ) யாக்கோபு ஏன் தன்னுடைய குமாரர்களின் நலன்குறித்து அக்கறையாயிருந்தான்? (பி) யோசேப்பின் வாழ்க்கைக்கும் இயேசுவின் வாழ்க்கைக்குமிடையே என்ன இணைபொருத்தத்தைக் காண்கிறோம்?
13. (எ) யோசேப்பின் ஒன்றுவிட்ட சகோதர்கள் எப்படித் தங்களுடைய பகைமையைக் காண்பித்தனர்? (பி) யாக்கோபின் துயரம் எதற்கு ஒப்பிடப்படலாம்?
14. இந்தப் பூர்வீக நாடகம் இன்று நமக்கு எப்படிப் பயனுள்ளதாக இருக்கக்கூடும்?
15. யோசேப்பும் போத்திபாரின் வீடும் செழித்ததற்குக் காரணம் என்ன?
16, 17. யோசேப்பு எப்படி உத்தமத்திற்கான மற்றொரு சோதனையை எதிர்பட்டான்? (பி) சிறைச்சாலையில் யோசேப்பின் அனுபவந்தானே காரியங்களின்பேரில் என்ன வழிநடத்துதலைக் காண்பிக்கிறது?
18. (எ) யோசேப்பு எப்படி நினைக்கப்பட்டான்? (பி) பார்வோன் கண்ட சொப்பனங்களின் சாராம்சம் என்ன?
19. (எ) யோசேப்பு எப்படி மனத்தாழ்மையைக் காண்பித்தான்? (பி) அந்தச் சொப்பனங்களுக்குக் கொடுக்கப்பட்ட அர்த்தத்தில் என்ன செய்தி கொடுக்கப்பட்டிருந்தது?
20, 21. (எ) எச்சரிப்புக்குப் பார்வோன் எப்படிப் பிரதிபலித்தான்? (பி) இந்தக் கட்டத்தில், யோசேப்பும் இயேசுவும் எவ்வாறு ஒப்பிடப்படலாம்?
[பக்கம் 25-ன் பெட்டி]
தி சண்டே ஸ்டார் (டொரான்டோ, மார்ச் 30, 1986) என்ற பத்திரிகையில் எழுத்தாளர் ஒருவர் பிரதான சர்ச்சுகள் என்று அழைக்கப்பட்டவை குறித்து பின்வருமாறு சொன்னார்: “இன்றைய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆழ்ந்த ஆவிக்குரிய பசியைப் போக்குவதற்குச் செயல்படும் காரியத்தில்தான் அவர்கள் அதிகமாக தவறுகிறார்கள்.”