பைபிளும் பருவ வயது ஒழுக்கமும்
“பருவ வயதினர் பாலுறவு பற்றிய செய்திகளின் சம்பந்தமாக, கூடுமானவரை மோசமான உலகங்கள் அனைத்தையும் சுதந்தரித்துக் கொண்டிருப்பது போல தெரிகிறது; திரைப்படங்கள், இசை, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவை பாலுறவு புத்தெழுச்சி தருவதாயும் இன்பந்தருவதாயும் இருப்பதாக அவர்களுக்குச் சொல்கிறது. . . . என்றபோதிலும் அதே சமயத்தில் நல்ல பெண்கள் அதற்கு இணங்கிவிடக்கூடாது என்ற செய்தியை இளைஞர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.”—ஆலன் கட்மேஷர் நிறுவனம்.
இன்றைய இளைஞர்கள் ஒழுக்கம் சம்பந்தமாக தெளிவற்ற ஒரு சகாப்தத்தில் வளர்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் பைபிள் பாலின ஒழுக்க விஷயத்தில் திட்டவட்டமாக தெளிவான அறிவுரைகளைத் தருகிறது. பாலின கல்வித் திட்டங்கள் கர்ப்பத்தைத் தவிர்ப்பதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தினாலும், விவாகத்துக்கு முன்பு பாலுறவில் ஈடுபடுவதுதானே தவிர்க்கப்பட வேண்டும் என்பதாக பைபிள் காண்பிக்கிறது. “உண்மையில் வேசித்தனத்திலாவது [விவாகத்துக்கு முன் பாலுறவும் உட்பட்டிருக்கிறது] அல்லது அசுத்தத்திலாவது, அல்லது வரையறையற்ற ஆண் பெண் உறவிலாவது ஈடுபடுகிற எவரும் . . .தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளமாட்டார் என்று நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.” (எபேசியர் 5:5, எருசலேம் பைபிள்) பாலுறவுகள் விவாகத்துக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருப்பது தெளிவாக இருக்கிறது.
ஆகவே பருவ வயது கர்ப்ப பிரச்னைக்குப் பரிகாரம், கருத்தடை முறைகளை கற்பிப்பதல்ல, ஆனால் அவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் ஆவிக்குரிய விஷயங்களில் வழிநடத்துதலைக் கொடுப்பதிலேயே இருக்கிறது. இந்த வழிநடத்துதலைக் கொடுப்பது யாருடைய பொறுப்பு என்பதையும் பைபிள் தெளிவாகக் காண்பிக்கிறது: “பிதாக்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.”—எபேசியர் 6:4.
சுற்றாய்வு ஒன்றில் இளைஞர்கள் “பாலினத் தகவலைக் கொடுப்பதில் தங்கள் பெற்றோரை அதிருப்தி என்பதிலிருந்து ஆரம்பித்து மிகவும் திருப்தி என்பது வரையாக அவர்களை மதிப்பிடும்படியாகக் கேட்கப்பட்டார்கள். வளரிளமைப் பருவத்திலிருந்த இவர்கள் தங்கள் அம்மாக்கள் பெரும்பாலும் மிகவும் குறைந்த அளவே திருப்திகரமாக இருப்பதாகவும் அப்பாக்கள் மிகவும் அதிருப்திகரமாக இருப்பதாகவும் மதிப்பிட்டிருந்தார்கள்.” அப்படியென்றால் பாலின விஷயங்களில் தங்கள் பிள்ளைகளுக்குப் பெற்றோர் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நடைமுறைக்கு ஒத்துவருமா?
இளைஞர்களுக்கு ஒழுக்க அறிவுரைகளைக் கொடுப்பது
நீதிமொழிகள் 4:1–4-ல் சாலொமோன் ராஜா இளைஞர்களைப் பின்வருமாறு ஊக்குவிக்கிறார்: “பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள் . . . நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக் கொள்ளக்கடவது.” சாலொமோன் மிகவும் அந்தரங்கமான விஷயங்களையும்கூட தன் தகப்பனிடம் கலந்துப் பேசக் கூடியவனாய் இருந்தான் என்பது தெளிவாக இருக்கிறது. சாலொமோன் தானேயும்கூட பாலின ஒழுக்கங்கெட்ட நடத்தையைக் குறித்து ஒளிவு மறைவு ஏதுமின்றி பேசுகிறான்.—நீதிமொழிகள் 5:1–19.
யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், அநேகக் குடும்பங்கள் இதேப் போன்று தங்கள் பிள்ளைகளுடன் மனம் திறந்தப் பேச்சுத் தொடர்பைக் காத்துவருகிறார்கள்! பாலுறவு சம்பந்தமாக வெறுமென “கூடாது!” என்று சொல்வதைவிட அதிகத்தைச் செய்கிறார்கள். வரையறையற்ற பாலுறவைத் தவிர்ப்பதற்கு அவர்களுடைய பிள்ளைகளுக்குச் சரியான காரணங்களைக் கொடுக்க பைபிள் அவர்களுக்கு உதவுகிறது. சாலொமோனின் வார்த்தைகளை மறுபடியுமாகச் சிந்தித்துப் பாருங்கள். நீதிமொழிகள் 5:3, 4-ல் வாலிபர்களை வேசியோடு பாலுறவு கொள்வதை தவிர்க்கும்படியாக உற்சாகப்படுத்துகிறான். “பரஸ்திரீயின் [வேசி] உதடுகள் தேன்கூடு போல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.” ஆம், ஒழுக்கங் கெட்ட வாழ்க்கை மிகவும் கவர்ச்சியாகத் தோன்றக்கூடும். என்றபோதிலும் சாலொமோன் எச்சரிப்பதாவது: “அவள் செய்கையின் முடிவோ எட்டியைப் போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம் போல் கூர்மையுமாயிருக்கும்.”
சாலொமோனைப் போலவே பாலுறவுகளின் பின்விளைவுகளைக் குறித்துப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளோடு காரண காரியங்களோடு பேசலாம். அலைக்கழிக்கப்பட்ட மனச்சாட்சி, தேவையற்ற கர்ப்பங்கள், ஏய்ட்ஸ் போன்ற பாலுறவுகளினால் கடத்தப்படும் நோய்கள்—ஒரு சில நொடிப் பொழுது இன்பத்தை அனுபவிப்பதற்கு இவை கசப்பான பலன்கள். சாலொமோன் மேலுமாக “[அவர்களுடைய] மேன்மையை அந்நியர்களுக்குக் கொடுக்காதிருக்கும்படியாக” வாலிபர்களுக்கு அறிவுரைக் கொடுக்கிறான். (நீதிமொழிகள் 5:9) விவாகத்தில் அக்கறையில்லாத ஒரு நபரிடமாக அவனோ அல்லது அவளோ தன்னையே கொடுத்துவிடுவது சுயமதிப்பின் குறைவைக் காட்டுவதாக இருக்குமல்லவா? ஒருவர் தன்னுடைய சொந்த அல்லது வேறு ஒருவரின் சுயநலமான காம உணர்ச்சிகளைத் திருப்தி செய்து கொள்வதற்கு ஒரு கருவியாக சேவிப்பது வெட்கக்கேடாக இருக்கிறதல்லவா? பிள்ளைகள் இந்த உண்மைகளை மதித்துணருவதற்குப் பெற்றோர் அவர்களுக்கு உதவிச் செய்யலாம்.
ஒழுக்கங்கெட்ட ஒரு நபரை கையாளுவதைக் குறித்து சாலொமோன் மேலுமான அறிவுரையைக் கொடுத்தான்: “உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே.” (நீதிமொழிகள் 5:8) ஒத்திணங்கிப் போகச் செய்யும் சூழ்நிலைமைகளைத் தவிர்ப்பதற்குப் பெற்றோர் இளைஞர்களுக்கு நடைமுறையான ஆலோசனையைத் தரலாம். அவர்கள் ஒழுக்கநெறி ஏதுமில்லாத தனி நபர்களோடு நாட்குறித்துக் கொண்டு செல்லாதிருக்கும்படியாக அவர்களை உற்சாகப்படுத்தலாம். அவர்கள் காதலீடுபாடுக் கொள்ளத் தகுதியுள்ளவர்களாகும் கட்டத்தை அடையும் போது, பாவமான நடத்தையைத் தவிர்ப்பதற்கு நடைமுறைக்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உற்சாகப்படுத்தப்படலாம். உதாரணமாக காதலீடுபாடுக் கொண்ட தம்பதி நாட்குறித்துக் கொண்டு தனியே வெளியேச் செல்கையில் தங்களோடு எவரையாவது அழைத்துச் செல்ல ஏற்பாடுச் செய்யலாம். காலத்துக்கேற்றதல்லாத பழம்பாணியா? ஒருவேளை இருக்கலாம். ஆனால் “முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும் போது நீ துக்கித்து: ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்து கொள்ளுதலை என் மனம் அலட்சியம் பண்ணினதே!” என்று சொல்வதற்குப் பதிலாக, நியாயமான முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை எடுப்பது மேலானதாகும்.—நீதிமொழிகள் 5:11–13.
யெகோவாவுக்குப் பயப்பட இளைஞர்களுக்கு உதவுதல்
ஒருசில மதிப்பீடுகளின்படி, ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே பாலுறவில் சுறுசுறுப்பாக ஈடுபடும் 120 இலட்சம் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஏய்ட்ஸ் கொள்ளைநோயும்கூட இந்த ஒழுக்கயீனமான போக்கைத் தடுப்பதற்கு எதையும் செய்யவில்லை. என்றபோதிலும் யெகோவாவின் சாட்சிகள், ஏய்ட்ஸ் அல்லது கர்ப்பம் பற்றிய பயத்தைக் காட்டிலும் அதிகமாக செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஏதோ ஒன்றைத் தங்களுடைய பிள்ளைகளில் ஊன்ற வைக்க முயற்சி செய்கிறார்கள்: யெகோவா தேவன் மீது ஆரோக்கியமான ஒரு பயமாக இது இருக்கிறது. சாலொமோன் நீதிமொழிகள் 5:21-ல் வாலிபர்களுக்குப் பின்வருமாறு நினைப்பூட்டுகிறான்: “மனுஷனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார்.” யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரும் நான்கு பிள்ளைகளுக்குத் தகப்பனுமாகிய ஜான் இந்தப் புத்திமதியைத் தருகிறார்: “பிள்ளைகளுக்கு உதவியாக இருப்பது, யெகோவாவிடமுள்ள ஓர் அன்புள்ள பயமாகும். சுயநலமான நம்முடைய செயல்களினால் யெகோவாவை விசனப்படுத்த முடியும் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவிக்க பயப்பட வேண்டாம்.”—நீதிமொழிகள் 27:11-ஐ ஒப்பிடவும்.
ஆனால் கடவுள் பயம் ஒழுக்கங் கெட்ட நடத்தைக்குத் திறம்பட்ட ஒரு தடையாக இருக்க வேண்டுமானால், கடவுள் ஓர் இளைஞனுக்கு மிகவும் மெய்யான ஓர் ஆளாக இருக்க வேண்டும். (எபிரேயர் 11:27 ஒப்பிடவும்.) பிள்ளைகள் ஒழுங்கான பைபிள் படிப்பு, தினசரி ஜெபம் மற்றும் உண்மையான வாழ்க்கை அனுபவங்களின் மூலமாக கடவுளோடு உண்மையான ஓர் உறவை வளர்த்துக் கொள்ள பெற்றோர் அவர்களுக்கு உதவி செய்யலாம். கடவுள் தன்னில் அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதை ஓர் இளைஞன் மதித்துணரும் போது, அவருக்கு வெறுப்புண்டாக்கக்கூடிய நடத்தையைத் தவிர்க்க அவன் தூண்டப்படுவான்.—1 பேதுரு 5:7.
கடவுளோடு ஒரு வாலிபன் கொள்ளும் உறவு மற்ற அநேக இளைஞர்களில் பூர்த்தி செய்யப்படாது போகும் ஒரு சில தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும்கூட உதவி செய்யக்கூடும். உதாரணமாக, ஓர் இளைஞன் பலம் அல்லது சுயமதிப்புக் குறைவுபடுகையில் ஏற்படும் உணர்ச்சிகளை எதிர்த்துப் போராட வரையறையற்ற பாலுறவுகளில் ஈடுபடுவதே இளைஞர்களின் வழியாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் யெகோவாவோடு நட்புக் கொண்டுள்ள ஒருவரை இப்படிப்பட்ட நினைவுகள் தொல்லைப்படுத்துவது கிடையாது. இப்படிப்பட்ட ஓர் இளைஞன், “தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார்” என்று சொல்லலாம்.—சங்கீதம் 54:4.
பாலுறவையும் விவாகத்தையும் பற்றிய சமநிலையான நோக்கு
நிச்சயமாகவே பெற்றோர், பாலுறவுகளைப் பற்றி தங்கள் பிள்ளைகள் போலி நாணமான அல்லது எதிர் மறையான கருத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறதில்லை. வேசித்தனத்தைப் பைபிள் கண்டனம் செய்தபோதிலும் விவாக ஏற்பாட்டினுள் பாலுறவு நெருக்கங்கள் மிகவும் மனநிறைவைத் தருவதாக இருக்கக்கூடும் என்பதைக்கூட அது காண்பிக்கிறது. கவிதை மொழிநடையில் சாலொமோன் மேலுமாகச் சொல்வதாவது: “உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு . . . அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்தி செய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.”—நீதிமொழிகள் 5:18, 19.
விவாக உறவுகளைப் பற்றிய இந்த மிக மேன்மையான கருத்தைச் சந்தித்துப் பார்க்கையில் அந்தரங்கமான விஷயங்களைக் கலந்து பேசுவதில் சங்கடப்படுவதற்குப் பெற்றோர்களுக்கு எந்தக் காரணமுமில்லை. (முன்னால் குறிப்பிடப்பட்ட) ஜான் சொல்வதாவது: “பாலுறவு விஷயமானது இரகசியமாக இல்லாதபடிக்கு அவர்களிடம் நாங்கள் எப்பொழுதும் ஒளிவுமறைவில்லாமல் பேசுகிறோம். இது சிருஷ்டிகராகிய யெகோவாவிடமிருந்து வரும் ஓர் ஈவாக, தகுதியான நேரத்தில் கணவன் மனையியால் அனுபவிக்கப்பட வேண்டியதாக இருப்பதை நாங்கள் உயர்த்திக் காண்பிக்கிறோம்.” பருவ வயதிலுள்ள இரண்டு பையன்களின் மற்றொரு தகப்பன் சொல்வதாவது: “சிறு வயது முதற்கொண்டே நாங்கள் ஒளிவுமறைவின்றி பாலுறவு பற்றி அவர்களிடம் பேசி வந்திருக்கிறோம். அன்பையும் பாலுறவையும் பற்றி மரியாதையான உயர்ந்த ஒரு கருத்தை அவர்களுக்குக் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறோம். நாங்கள் இடைவிடாமல் பேச்சுத் தொடர்பு கொள்கிறோம்.” அவர்களுடைய பிள்ளைகள் கற்புள்ளவர்களாக நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வாலிபர்களை “இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குதல்”
“பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்,” என்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் முன்னுரைத்தான். (2 தீமோத்தேயு 3:13) இதன் காரணமாக ஒழுக்க தராதரங்கள் தொடர்ந்து கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கும். பருவ வயதினர் தராதரமின்றி பாலுறவு கொள்வதும் கர்ப்பமாவதும் சமுதாயத்தைத் தொடர்ந்து தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும்.
கடவுள் பக்தியுள்ள பெற்றோர், தங்கள் பிள்ளைகளை “இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்கு”வதற்காக பைபிளிடமாகத் திரும்புவர். (2 தீமோத்தேயு 3:15) பைபிள் போதனை உங்களுக்குத் தேவை என்பதாக நீங்கள் உணருவீர்களானால் இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்பவர்களுக்கு எழுதுவதன் மூலம் யெகோவாவின் சாட்சிகளோடு தாராளமாகத் தொடர்பு கொள்ளுங்கள். இப்படிப்பட்டக் கல்வியை நீங்கள் இலவசமாக பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்வதற்கு அவர்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். யெகோவாவின் சாட்சிகள், உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் போன்ற புத்தகங்களையும்கூட உங்களுக்குத் தரக்கூடும்.a இது பல்லாயிரக்கணக்கான வாலிபர்களுக்கு உலகின் ஒழுக்கங்கெட்ட கண்ணிகளைத் தவிர்ப்பதற்கு உதவி செய்திருக்கும் வேதப்பூர்வமான தகவலைக் கொண்டிருக்கிறது.
ஆனால் முறைகேடாக கருவுற்ற அவல நிலையை ஏற்கெனவே அனுபவித்திருக்கும் பெண்களைப் பற்றி என்ன? இப்படிப்பட்ட நிலைமைகள் நம்பிக்கையற்றவை அல்ல. தன்னுடைய நடத்தைப் போக்குக்காக உண்மையில் மனஸ்தாபப்படுகிறவரை கடவுள் ‘மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.’ (ஏசாயா 55:7) துணையின்றி ஒரே பெற்றோராக இருப்பது எளிதாக இல்லாவிட்டாலும் பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் அதில் வெற்றி பெறலாம். ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு முன்னால், விவாகத்துக்குப் புறம்பாக மூன்று பிள்ளைகளைக் கொண்டிருந்த ஓர் இளம் பெண் அதைத்தானே செய்திருக்கிறாள். அவள் தன்னுடைய குடும்பத்தில் கடவுளுடைய வார்த்தையைப் பொருத்தி பிரயோகிக்க முயற்சி செய்கிறாள். யெகோவாவின் சாட்சிகளோடு நெருக்கமாகக் கூட்டுறவுக் கொள்வதன் மூலம் அவள் அதிகமான ஆறுதலையும் ஆதரவையும் பெற்றுக் கொண்டிருக்கிறாள். அவள் சொல்கிறாள்: “இத்தனை தாராளமாக மன்னிக்கிற ஒரு கடவுளை சேவிப்பதும் இவ்வளவாக புரிந்துகொள்கின்ற சகோதர சகோதரிகளைக் கொண்டிருப்பதும் நிச்சயமாகவே மகத்தானதாக இருக்கிறது. வாழ்க்கையில் முதல் முறையாக நான் ஆவிக்குரிய விதத்திலும் சரீரப்பிரகாரமாயும் சுத்தமாகவும் ஆரோக்கியமாவும் உணருகிறேன்.”
நிச்சயமாகவே முதலிடத்தில் விவாகத்துக்கு முன்பாக பாலுறவு கொள்வதை தவிர்ப்பதே மிகச் சிறந்ததாக இருக்கும். ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பைபிளின் கால வரம்பற்ற ஆலோசனையைப் பின்பற்றுவதன் காரணமாக, இன்று அவ்விதமாக செய்வது மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. (w88 4⁄15)
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் வெளியிடப்பட்டது.
[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]
பாலினம் பற்றிய விஷயத்தின் சம்பந்தமாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் இடைவிடாத பேச்சுத் தொடர்பைக் கொண்டிருக்கலாம்
[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]
யெகோவாவின் சாட்சிகள் ஏய்ட்ஸ் அல்லது கர்ப்பமாதலின் பயத்தைக் காட்டிலும் அதிகமாக செல்வாக்குச் செலுத்தத்தக்க ஏதோ ஒன்றை தங்களின் பிள்ளைகளில் ஊன்ற வைக்க முயற்சி செய்கிறார்கள்: யெகோவா தேவனைப்பற்றிய ஆரோக்கியமான ஒரு பயம்
[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]
ஒரு சில மதிப்பீடுகளின்படி, ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே பாலுறவில் சுறுசுறுப்பாக ஈடுபடும் 120 இலட்சம் வாலிபர்கள் இருக்கிறார்கள்
[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]
கிறிஸ்தவ இளைஞர்கள் கடவுளோடு கொண்டிருக்கும் தங்கள் உறவை பாழாக்கிவிடக்கூடிய நடத்தையைத் தவிர்த்துவிடுவர்