மகா உலக வல்லரசுகளில் கடைசியானது
பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் ஏறக்குறைய 1,900 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட போது, ஐந்து “ராஜாக்கள்” அல்லது உலக வல்லரசுகள் ஏற்கெனவே வந்து போய்விட்டன என்பதாக அது சொன்னது. இவை எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய–பெர்சியா, கிரீஸ் ஆகும். ஆறாவதான ரோம் இன்னும் “இருக்கிறான்,” ஆனால் ஏழாவது இன்னும் வரவில்லை. (வெளிப்படுத்துதல் 17:10) அந்த ஏழாவது உலக வல்லரசு எதுவாக இருந்தது? அது எவ்விதமாக வந்தது? மேலும் அதைத் தொடர்ந்து வரப் போவது என்ன? இந்த முக்கியமான கேள்விகளுக்கான விடைகளே இக்கட்டுரையின் பொருளாக இருக்கிறது.
கடந்த 2,500 ஆண்டுகளினுடைய உலக சரித்திரத்தின் முக்கிய சுருக்கம், உலகம் இதுவரை அறிந்திராத மிக விரிவாக விநியோகிக்கப்பட்ட புத்தகத்தில் முன்கூட்டியே கொடுக்கப்பட்டிருந்தது. என்றபோதிலும் ஒப்பிடுகையில், அந்தப் புத்தகமாகிய பைபிளின் ஒரு பிரதியை வைத்திருப்பவர்களில் சிறுபான்மையானோரே அதிலிருக்கும் வியப்பூட்டும் தகவலை அறிந்தவர்களாக இருக்கின்றனர்.
உதாரணமாக, இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு 500-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாகவே, தானியேல் தீர்க்கதரிசி அவனுடைய காலம் முதற்கொண்டிருந்து வரும் உலக வல்லரசுகளைப் பற்றிய தேவாவியால் ஏவப்பட்ட ஒரு காட்சியைப் பதிவு செய்தான். இவை பலமுள்ள மிருகங்களால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு மிருகமும் அது பிரதிநிதித்துவம் செய்த உலக வல்லரசின் அடிப்படை குணங்களை உடையதாக இருந்தது. வலிமை மிகுந்த ரோம பேரரசு ஒரு பெரிய மிருகமாக, “கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்த”தாக விவரிக்கப்பட்டது. “அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப் பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது” என்பதாக தானியேல் சொன்னான்.—தானியேல் 7:2–7.
அந்தச் ‘சின்ன கொம்பு’
காலப் போக்கில், ரோம் பிரிட்டிஷ் தீவுகளிலிருந்து கீழே குறுக்காக ஐரோப்பாவின் பெரும் பகுதியையும் மத்திய தரைக் கடலைச் சுற்றி முழு அளவிலும், பாபிலோனுக்கு அப்பால் பெர்சிய வளைகுடா வரையிலுமாக நீண்டு கிடந்த ஒரு பகுதியை உள்ளடக்கிய ஒரு பேரரசாக வளர்ந்தது. வலிமை மிகுந்த இந்தப் பேரரசு கடைசியாக அநேக தேசங்களாக, தானியேல் கண்ட “பத்துக் கொம்புகளாக” உடைந்தது.a பின்பு தானியேல், “அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்ட”தைக் கண்டான். (தானியேல் 7:8) இது எதை அர்த்தப்படுத்தியது?
தானியேல் இவ்விதமாகச் சொல்லப்பட்டான்: “அந்தப் பத்துக் கொம்புகள் என்னவென்றால், அந்த [ரோம] ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப் பின்பு வேறொருவன் [‘சின்ன கொம்பு’] எழும்புவான்; அவன் முந்தினவர்களைப் பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்” போடுவான். (தானியேல் 7:24) ‘சின்ன கொம்பு’ யாராக இருந்தது? அவன் தாழ்த்திய மூன்று ராஜாக்கள் யார்?
ரோம பேரரசின் வடமேற்கு மூலையிலிருந்த ஒரு தீவு நீண்டகாலமாக உலக விவகாரங்களில் ஒதுங்கியே இருந்து வந்தது. சரித்திராசிரியர் ஒருவர் விளக்கியவிதமாகவே: “பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து இரண்டாம் தர வல்லரசாக இருந்து வந்தது. நெதர்லாந்தோடு ஒப்பிடுகையில் அதன் செல்வம் குறைவாகவே இருந்தது. அதன் மக்கள் தொகை ஃபிரான்ஸினுடையதைக் காட்டிலும் வெகு குறைவாகவே இருந்தது. படைக்கலம் பூண்ட அதன் படைகள் (கடற்படை உட்பட) ஸ்பேய்னுடையதைக் காட்டிலும் தரத்தில் தாழ்ந்ததாகவே இருந்தது.” என்றபோதிலும் இங்கிலாந்து ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசீய கப்பற்படையை உருவாக்கிக் கொள்ள, அதன் கடற்கொள்ளைக்காரர்களும், தனிப்பட்டவர்களின் போர்க்கப்பல்களும், ஸ்பேய்னின் குடியேற்றப் பகுதிகளையும் அவளுடைய ஏராளமான செல்வங்கள் ஏற்றப்பட்ட கப்பல்களையும் திடீர் தாக்குதல் செய்ய ஆரம்பித்தன.
மூன்று கொம்புகள்
1588-ல் இரண்டாம் பிலிப்பு ஸ்பானிய நாட்டு கப்பற்படையைக் கொண்டு இங்கிலாந்தின் மீது படையெடுத்து தோல்வியுற்றான். 130 கப்பல்களையும் அதில் 24,000 ஆட்களையும் ஏற்றிச் சென்ற இந்தப் படை ஆங்கில நாட்டு கடற்கால்வாய் வழியாக முன்னேற, இவர்கள் எதிர் காற்றுகளுக்கும் சீறியெழுந்த அட்லாண்டிக் புயலுக்குமே பலியானார்கள். 1870 வரை நவீன ஐரோப்பா (Modern Europe to 1870) என்ற புத்தகத்தில், சரித்திராசிரியர் கார்ல்டன் ஹேய்ஸ், இந்தச் சம்பவம், “கடற்படையில் இருந்த முதல் நிலை, ஸ்பெய்னிலிருந்து இங்கிலாந்துக்கு முடிவாக கடந்து சென்றதைக் குறித்துக் காட்டியது” என்பதாக எழுதுகிறார்.
17-ம் நூற்றாண்டில், ஆலந்து நாட்டவர் பெரிய அளவில் உலகிலேயே மிகப் பெரிய வாணிக கப்பற்படையை படிப்படியாக விரிவுபடுத்திக் கொண்டனர். அவர்களுடைய கப்பல்கள் சமுத்திரத்தின் மீது ஆதிக்கம் செலுத்தின. அவர்கள் எல்லா இடங்களிலுமுள்ள அரசாங்கங்களுக்கு தங்கள் லாபங்களைக் கடனாக கொடுத்தனர். ஆனால் கடலுக்கு அப்பால் வளர்ந்து வந்த அவளுடைய குடியேற்ற நாடுகளோடு, இங்கே இங்கிலாந்தும்கூட செல்வாக்குப் பெற்று வந்தது.
பின்னர் 18-ம் நூற்றாண்டில் பிரிட்டனும் பிரெஞ்சும் வட அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற மிகவும் வெவ்வேறு இடங்களில் போரிட, இது 1763-ல் பாரிஸ் ஒப்பந்தத்துக்கு வழிநடத்தியது. அதைக்குறித்து வில்லியம் B. வில்காக்ஸ் பேரரசின் நட்சத்திரம்—உலக வல்லரசாக பிரிட்டனைப் பற்றிய ஓர் ஆய்வு (Star of Empire—A Study of Britain as a World Power) என்ற புத்தகத்தில், ஒப்பந்தம் சமரச விட்டுக் கொடுப்பாக தோன்றிய போதிலும் “உண்மையில் அது ஐரோப்பாவுக்கு அப்பாலுள்ள உலகில் வலிமை மிக்க ஓர் ஐரோப்பிய வல்லரசாக பிரிட்டனின் புதிய ஸ்தானத்தை அது அங்கீகரிப்பதாகவே இருந்தது.”
மற்ற சரித்திராசிரியர்கள் பின்வருமாறு சொல்லுகையில் இதை ஒப்புக் கொள்கிறார்கள்: “ஸ்பெய்ன், ஆலந்து, ஃப்ரெஞ்சோடு இரண்டு நூற்றாண்டுகாலப் போரிலிருந்து, கிரேட் பிரிட்டன், 1763-ல் உலகில் முன்னணியிலிருந்த வியாபார மற்றும் குடியேற்ற வல்லரசாக வெளிப்பட்டது.” (1870 வரை நவீன ஐரோப்பா) “1763-ல் பிரிட்டிஷ் பேரரசு ஓரளவு புதுப்பிக்கப்பட்டதும் பெரிதாக வளர்ந்ததுமான ஒரு ரோமைப் போல உலகில் உலா வந்தது.” “அவள் மத்திப நூற்றாண்டுப் போர்களிலிருந்து மிகப் பெரியதும் மிக வலிமையானதும்—முற்றிலும் வெறுக்கப்பட்டதுமான ஓர் உலக வல்லரசாகவும் வெளிப்பட்டாள்.” (கடற்படையும் பேரரசும், [Navy and Empire] ஜேம்ஸ் L. ஸ்டோக்ஸ்பரி எழுதியது) ஆம், இந்தச் ‘சின்ன கொம்பு’ பைபிள் சரித்திரத்தின் ஏழாவது உலக வல்லரசாக ஆனது.
பிரிட்டன் நாட்டில் பிறந்தவர்கள் மேலே நைல் நதி வரையாகவும் மற்றும் சாம்பஸி குறுக்காகவும் முன்னேறினார்கள். அவர்கள் பர்மாவின் மேற்பகுதி, போர்னியோ மற்றும் பசிபிக் தீவுகளுக்குள் போய்க் கொண்டிருந்தார்கள். மேலுமாக அவர்கள் கானடா, ஆஸ்திரேலியா நியுஸிலாந்து மற்றும் வடஅமெரிக்காவின் கிழக்கு கரையை குடியேற்ற நாடுகளாக்கினார்கள். “ரோம பேரரசு தன்னிறைவுடையதாக இருந்தது” என பேக்ஸ் பிரிட்டானிக்கா (Pax Britannica) என்ற நூலில் ஜேம்ஸ் மாரிஸ் எழுதுகிறார். “பிரிட்டிஷ் பேரரசு பூமி முழுவதுமாக பரவியதாயிருந்தது.” பூமியில் நிலப்பகுதியில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கையும் அதன் குடிமக்களில் நான்கில் ஒரு பங்குக்கு அதிகமானவர்களையும் சூழ்ந்து கொண்டிருந்த இது மனிதவர்க்கத்தின் சரித்திரத்தில் மிகப் பெரிய பேரரசாக ஆனது. அதன் புகழ் ஒருபோதும் மங்கவில்லை என்பதாகச் சொல்லப்பட்டது.
இரட்டை வல்லரசு
வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இந்த ஏழாவது உலக வல்லரசு, ஓர் “ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாய்” இருப்பதாகவும்கூட வருணிக்கப்பட்டுள்ளது. (வெளிப்படுத்துதல் 13:11) ஏன் இரண்டு கொம்புகள்? ஏனென்றால் பொதுவான மொழியினாலும், கொள்கைளினாலும், குறிக்கோள்களினாலும் இணைந்துவிட்ட பிரிட்டிஷ் பேரரசும் புதிய அமெரிக்க தேசமும் விரைவில் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தன. அவைகள் பல அம்சங்களில், ஆங்கிலம் பேசும் இரட்டை உலக வல்லரசாக ஆயின.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐக்கிய மாகாணங்கள் “பிரிட்டிஷ் கடற்படையினால், ஐரோப்பாவிலிருந்து பாதுகாப்புச் செய்யப்”பட்டிருந்தது என்பதாக வில்லியம் B. வில்காக்ஸ் பேரரசின் நட்சத்திரம் என்பதில் சுட்டிக் காண்பிக்கிறார். அவர் மேலுமாகக் கூறுவதாவது: “ஒவ்வொரு பெரிய வல்லரசையும் அடையாளம் அறியப்படுவதாகச் செய்யும் ஒரு காலாட்படையை அல்லது கப்பற்படையை தன்னுடைய உள்நாட்டுப் போரில் தவிர ஒருபோதும் கொண்டில்லாமலே நூறு ஆண்டு காலமாக ஐக்கிய மாகாணங்கள் ஒரு பெரிய வல்லரசாக வளருவதற்கு சுதந்திரமாக இருந்தது.” அமெரிக்காவால் “தனித்திருக்க முடிந்தது, ஏனென்றால் மிகச் சிறந்த கப்பற்படை ஐரோப்பிய வல்லரசுகளைத் தடுத்திட இருந்திருக்கிறது.” பின்னால் ஐக்கிய மாகாணங்களும்கூட ஒரு பெரிய இராணுவ வல்லரசாக மாறியது.
பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம், வட ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் அலை மாறிய போது, 1944-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி சம்பவித்தது. அந்நாளில், 1,56,000 பிரிட்டிஷ், அமெரிக்க இன்னும் மற்ற நேச நாடுகளின் படைகள் ஐரோப்பா கண்டத்தைத் தாக்கின. அமெரிக்கப் படைப் பெருந்தலைவரின் உயர் அதிகாரத்துக்கும் பிரிட்டிஷ் படைத்துறை உயர்தரப் பணியாளரின் போர்த்திற நடவடிக்கை அதிகாரத்தின் கீழும்—முறையே ஐசன்ஹோவர் மற்றும் மான்டிகோமெரி—இணைந்து இந்தப் படைவீரர் குழுக்கள் செயல்பட்டன. மேலுமாக, ஜப்பானோடு செய்யப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டு வந்த அணுகுண்டுகள் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சியின் விளைவாக இருந்தது.
மே 5, 1986 தேதியிட்ட லாஸ் ஆன்ஜல்ஸ் குறிப்பிட்டபடியே, அமைதி காலத்தின் போதும் பிரிட்டனும் அமெரிக்காவும் “வேவு தகவல் மற்றும் அணுசக்தி தொழில்நுட்பம் போன்ற இரகசியம் காக்கப்படவேண்டிய விஷயங்களிலும் உடனுழைப்பவையாக இருந்திருக்கின்றன.” கானடா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து போன்றவை இவைகளைப் பின்னால் சேர்ந்துகொள்ள அவர்கள் “கோளத்தை வேவு தகவலை சேகரிப்பதற்காக பொறுப்புள்ள இடங்களாகப் பிரித்து, மிக இரகசியமான தகவலையும்கூட பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.” இந்த உறவு “எப்போதும் சுமுகமாக இல்லாவிட்டாலும்” இது “அதனுடைய கருத்து வேறுபாடுகளைவிட நெருக்கத்துக்காகவே அதிக குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது.”
பெரும்பாலான பிரிட்டன் குடியேற்ற நாடுகள் சுதந்திரம் பெற்று தேசங்களின் குடியுரிமை அரசுகளைச் சேர்ந்து கொண்டிருக்கின்றன. பேரரசு மறைந்துவிட்ட போதிலும், ஆங்கிலோ அமெரிக்க உலக வல்லரசு இன்னும் இருக்கிறது. ஆனால், இதற்கு முந்திய ரோம வல்லரசு ஆட்சி செய்த பல நூற்றாண்டு காலத்தோடு ஒப்பிட அது இன்னும் “கொஞ்சக் காலம்” மட்டுமே இருக்கும்.—வெளிப்படுத்துதல் 17:10.
புதிய உலகளாவிய ஆட்சி
பெரிய உலக வல்லரசுகளைப் பற்றிய தானியேலின் தீர்க்கதரிசனம், பொ.ச.மு. 500-க்கு முன்பிருந்து, நம்முடைய நாளில் ஏழாவது உலக வல்லரசு வரையாக உலக அரசாங்கங்களின் 2,500 ஆண்டுகளினூடாக உண்மையாக நிரூபித்திருக்கிறது. இதன் காரணமாக, அந்தத் தீர்க்கதரிசனத்தில் எஞ்சியிருப்பதில் நாம் நம்பிக்கை வைக்கலாம். ஆச்சரியமான உண்மை என்னவென்றால், அது இதற்கு மேல் இன்னும் கூடுதலான மனித உலக வல்லரசுகளை விவரிப்பது கிடையாது! வெளிப்படுத்துதலும்கூட அவை ஏழு மட்டுமே என்பதைக் சுட்டிக் காண்பித்தது.b அடுத்து என்ன நடக்கும்?
இந்த உலக வல்லரசுகளைப் பற்றிப் பேசும் தானியேல் 7-ம் அதிகாரம், இன்னும் அதிக ஆச்சரியத்தைத் தரும் எதையோ ஒன்றைப் பற்றித் தொடர்ந்து விவரிக்கிறது—பூமி ஆளப்படும் விதத்தில் ஒரு பெரிய மாற்றம்! குறைகள் நிறைந்த மனித அரசாங்கங்கள் முடிவுக்கு வரவும் அதற்குப் பதிலாக நீதியுள்ள பரலோக ஆட்சி ஏற்படவும் இருக்கிறது.
தானியேல் கண்ட காட்சி “நீண்ட ஆயுசுள்ளவர்” யெகோவாவின் மகத்துவமுள்ள பரலோக சிங்காசனத்தைக் காண அவனை அனுமதித்தது. இவருக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டவர் “மனுஷகுமாரனுடைய சாயலான”—உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவாக இருந்தார்.c தானியேல் கூறுகிறான்: “சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் [தோல்வியுறும் மனித ராஜ்யங்களைப் போல் இல்லாமல்] அழியாததுமாயிருக்கும்.”—தானியேல் 7:9, 10, 13, 14.
இதே உலக வல்லரசுகளைப் பற்றி தானியேலுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனம் இவ்வாறு சொன்னது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். . . . அது அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும் . . . சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம்.”—தானியேல் 2:44, 45.
கடவுளின் இந்த ராஜ்ய அரசாங்கம் இயேசு நம்மை ஜெபிக்கும்படியாக கற்பித்த அதே ராஜ்யமாக இருக்கிறது. அவர் சொன்னார்: “நீங்கள் ஜெபம்பண்ண வேண்டிய விதமாவது: ‘பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.’”—மத்தேயு 6:9, 10.
அந்த அரசாங்கத்தின் கீழ் பூமியின் குடிகள் எத்தனை மகிழ்ச்சியாக இருப்பர்! அது மனிதனின் தன்னலத்தேட்டத்திலிருந்து தெய்வீக நீதிக்கும், காரியங்களைச் செய்வதில் மனிதனுடைய அபூரணமான வழியிலிருந்து கடவுளின் உன்னதமான தராதரங்களுக்கும் ஒரு மாற்றமாக இருக்கும். ராஜ்யத்தின் செயல்முறையைக் குறித்து பைபிள் சொல்லும் காரியங்கள் இந்தத் தொடர் கட்டுரைகளில் வரவிருக்கும் கட்டுரையின் பொருளாக இருக்கும். (w88 5⁄15)
[அடிக்குறிப்புகள்]
a பயங்கரமான கருவியாகிய கொம்பு, பைபிளில் அரசர்களையும் ஆட்சியிலிருக்கும் அரசர்குலத்தையும் பிரதிநிதித்துவம் செய்வதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—உபாகமம் 33:17; சகரியா 1:18–21; வெளிப்படுத்துதல் 17:3, 12.
b வெளிப்படுத்துதல் 17:11, “எட்டாவதானவனும் அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனுமாகிய” ஒரு “மிருகத்தை”ப் பற்றி குறிப்பிடுகிறது. ஏழாவதின் வாழ்நாட் காலத்தின் போது இருக்கப் போகும் இந்த எட்டாவது வல்லரசு பின்னால் ஒரு கட்டுரையில் சிந்திக்கப்படும்.
c “மனுஷகுமாரன்” என்ற சொற்றொடர் சுவிசேஷப் பதிவுகளில் சுமார் 80 தடவைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சமயமும் அது இயேசு கிறிஸ்துவையே குறிப்பிடுகிறது.—மத்தேயு 26:63, 64-ஐப் பார்க்கவும்.
[பக்கம் 32-ன் படம்]
ஜுன் 6, 1944 அன்று ஐரோப்பாவை நேசநாடுகள் தாக்குதல் செய்தது ஆங்கில–அமெரிக்க ஒத்துழைப்புக்குக் குறிப்பிடத்தக்க உதாரணமாக இருந்தது