நீதி கடவுளுடைய எல்லா வழிகளிலும் காணப்படுகிறது
“அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:4.
1. மோசே தான் மரிப்பதற்கு முன் இஸ்ரவேல் புத்திரரிடம் பாடிய தன் பாடலில் யெகோவாவின் என்ன தன்மைகளைச் சிறப்பித்துக் காண்பித்தான்? அவன் அப்படிப் பேசுவதற்கு ஏன் தகுதியுள்ளவனாயிருந்தான்?
உன்னத நீதிபதியும் சட்டப்பிரமாணிகரும் அரசருமாயிருக்கும் யெகோவா, “நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்.” (சங்கீதம் 33:5; ஏசாயா 33:22) “யெகோவா முகமுகமாய் அறிந்த” மோசே நியாயப்பிரமாணத்தின் மத்தியஸ்தனாகவும் ஒரு தீர்க்கதரிசியாகவும் யெகோவாவின் நீதியான வழிகளை நன்கு அறிந்திருந்தான். (உபாகமம் 34:10; யோவான் 1:17) மோசே மரிப்பதற்கு முன்பு, அவன் யெகோவாவின் உன்னதத் தன்மையாகிய நீதியைச் சிறப்பித்துக் காட்டினான். இஸ்ரவேல் சபை முழுவதும் கேட்கும்படியாக அவன் இந்தப் பாடலின் வார்த்தைகளை மொழிந்தான்: “வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. . . . யெகோவாவுடைய நாமத்தைப் பிரசித்திப்படுத்துவேன், நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள். அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:1, 3, 4, NW.
2. கடவுளுடைய எல்லாச் செயல்களிலும் நீதி எப்படி காணப்படுகிறது? இது ஏன் முக்கியமாயிருக்கிறது?
2 நீதி யெகோவாவின் எல்லா வழிகளிலும் காணப்படுகிறது, அது எல்லாச் சமயத்திலும் அவருடைய ஞானம், அன்பு, மற்றும் வல்லமையுடன் பூரண இசைவில் காண்பிக்கப்படுகிறது. யோபு 37:23-ல் கடவுளுடைய ஊழியனாகிய எலிகூ யோபுவுக்கு இதை நினைவுபடுத்தினான்: “சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.” அரசனாகிய தாவீது எழுதினான்: “யெகோவா (NW) நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை.” (சங்கீதம் 37:28) என்னே ஆறுதலான வாக்கு! கடவுளுடைய எல்லா வழிகளிலும், தமக்கு உண்மையாயிருப்பவர்களை அவர் ஒரு நொடி பொழுதும் கைவிடமாட்டார். கடவுளுடைய நீதி இதற்கு உத்தரவாதமளிக்கிறது!
நீதி ஏன் குறைபடுகிறது
3. மனிதர் மத்தியில் எது குறைந்து காணப்படுகிறது? இது மனிதன் கடவுளோடு கொண்டிருக்கும் உறவை எப்படி பாதித்திருக்கிறது?
3 யெகோவா தேவன் நீதியின் கடவுளாக இருப்பதால், நீதியில் பிரியப்படுகிறவராக இருப்பதால், மற்றும் “பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த”வராய் இருப்பதால், நீதி ஏன் மனிதர் மத்தியில் இந்தளவுக்குக் குறைவுபடுகிறது? (ஏசாயா 40:28) உபாகமம் 32:5-ல் மோசே பதிலளிக்கிறான்: “அவர்களோ தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார்!” மனிதனுடைய அழிவுக்குரிய கேடான செயல்கள் அவனை அவனுடைய சிருஷ்டிகரிடமிருந்து அந்தளவுக்குப் பிரித்துவிட்டிருப்பதால்தானே, “பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே” கடவுளுடைய நினைவுகளும் வழிகளும் மனிதருடையதிலிருந்து உயர்ந்திருப்பதாய் விளக்கப்படுகிறது.—ஏசாயா 55:8, 9.
4. மனிதன் என்ன வழியைத் தெரிந்துகொண்டிருக்கிறான்? இது அவனை எங்கே வழிநடத்தியிருக்கிறது?
4 மனிதன் தன்னுடைய சிருஷ்டிகரை விட்டு சுயமாகச் செயல்படும் விதமாக உருவாக்கப்படவில்லை என்பதை ஒருபோதும் மறவாதீர்கள். சரியாகவே இந்த நிலையை எரேமியா இப்படியாக நமக்கு விவரிக்கிறான்: “யெகோவாவே, (NW) மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) கடவுளுடைய நீதியான வழிகளையும் ஆட்சியையும் மனிதன் மறுத்திருப்பது, அவனை முற்றிலும் வித்தியாசமான, மிகவும் வல்லமைவாய்ந்த காணக்கூடாத சக்திகளாகிய சாத்தானின் கீழும் அவனுக்கு உடந்தையாக இருக்கும் பிசாசுகளின் கீழும் வைத்திருக்கிறது. “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது,” என்று அப்போஸ்தலனாகிய யோவான் அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறான். இந்தப் பொல்லாத சேனைகள் மனிதவர்க்கத்தின் மத்தியில் நீதியை நிலைநாட்டுவதில் சற்றும் அக்கறையற்றவை.—1 யோவான் 5:19.
5. இன்றைய உலகில் நீதி குறைவுபடுவதற்கு உதாரணங்கள் தரவும்.
5 இந்த ஒழுங்குமுறையின் கடைசி நாட்களின் முடிவில் இருக்கும் நீதியின்மைக்கு ஓர் உதாரணம், 1984-ல் ஐ.மா. அரசு தலைமை வழக்கறிஞர் வில்லியம் ஃபிரஞ்சு ஸ்மித்தால் எடுத்துக்காட்டப்பட்டது. 1977 முதல் 1983 வரை 12 அமெரிக்க மாகாணங்களில் நிறைவேற்றப்பட்ட சிறைத் தீர்ப்புகளின் பேரில் ஓர் ஆய்வு சம்பந்தமாகக் குறிப்பிடும்போது, ஸ்மித் சொன்னார்: “மிகவும் மோசமான குற்றவாளிகள்—கொலையாளிகள், கற்பழிப்பவர்கள், போதை மருந்து கடத்துபவர்கள்—போதியளவான தண்டனை பெறுகிறார்கள் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். கடினமான குற்றவாளிகள் திரும்ப தெருக்களுக்கு வந்து புதிய குற்றச் செயல்களில் ஈடுபடுவது எவ்வளவு எளிதாக இருக்கிறது . . . என்று இந்தப் புள்ளிவிவரமளிப்புத் துறையின் ஆய்வு காண்பிக்கிறது.” உவாஷிங்டன் சட்டமுறை ஸ்தாபனத்தின் பால் கேமனர், “நீதிமுறை அநேக சமயங்களில் கடமை தவறுகிறது,” என்று சொன்னதில் ஆச்சரியமில்லை.
6. (எ) யூதாவின் சிறையிருப்புக்கு முன் அதன் ஒழுக்க நிலை என்னவாக இருந்தது? (பி) ஆபகூக் என்ன கேள்விகளைக் கேட்டான்? அவை இன்று பொருந்துகின்றனவா?
6 யூதா பொ.ச.மு. 607-ல் பாபிலோனிய சேனைக்கு வீழ்ச்சியுறுவதற்கு முன்பு, தேசம் முழுவதும் நீதி தவறிய நிலை இருந்தது. அப்பொழுது கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய ஆபகூக் தெய்வீக ஏவுதலின் கீழ் இப்படியாகச் சொல்ல ஏவப்பட்டான்: “ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒரு போதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்ளுகிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.” (ஆபகூக் 1:4) அநீதியான அந்தச் சூழ்நிலையைப்பார்த்த அந்தத் தீர்க்கதரிசி யெகோவாவை இப்படிக் கேட்கத் தூண்டப்பட்டான்: “பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன?” (ஆபகூக் 1:13) இன்று, மனித நடவடிக்கையின் எல்லா அம்சங்களிலும் அநீதியான பழக்கங்கள் கண்டு மக்கள் இப்படியாகக் கேட்கக்கூடும்: நீதியின் கடவுள் பூமியில் காணப்படும் அநீதியான செயல்களை ஏன் பார்த்துக்கொண்டிருக்கிறார்? ‘நீதி புரட்டப்படுவதை’ அவர் ஏன் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்? அவர் ஏன் “மெளனமாயிருக்கிறார்”? இந்தக் கேள்விகள் முக்கியமானவை, மேலும் கடவுளுடைய விலையேறப்பெற்ற வார்த்தையாகிய பைபிள் மட்டுமே உண்மையான, திருப்தியளிக்கும் விடைகளை அளிக்கின்றது.
கடவுள் ஏன் அநீதியை அனுமதித்திருக்கிறார்
7. (எ) கடவுள் மனிதனுக்குக் கொடுத்த பரதீஸை ஏன் இழந்தான்? (பி) ஏதேனில் என்ன விவாதங்கள் எழும்பிற்று? இதற்குக் கடவுளுடைய நீதியின் பிரதிபலிப்பு எவ்விதமாக இருந்தது?
7 மோசே உறுதியாகச் சொன்னது போல கடவுளுடைய கிரியைகள் பரிபூரணமானவை. பரிபூரண மானிட தம்பதியை கடவுள் ஏதேன் தோட்டமாகிய பரதீஸில் வைத்த காரியத்தில் இது உண்மையாக இருந்தது. (ஆதியாகமம் 1:26, 27; 2:7) அந்த முழு ஏற்பாடும் மனிதவர்க்கத்தின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பூரணமாயிருந்தது. தெய்வீகப் பதிவு நமக்குச் சொல்லுகிறது: “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:31) ஆனால் ஏதேனிய அமைதி வெகுகாலம் நீடிக்கவில்லை. ஒரு கலகக்கார ஆவி சிருஷ்டியின் செல்வாக்கின் கீழ் ஏவாளும் அவளுடைய கணவனாகிய ஆதாமும் யெகோவாவுக்கு எதிராக, அவருடைய ஆளும் முறைக்கு எதிராகச் செல்ல இழுக்கப்பட்டனர். கடவுள் அவர்களுக்குக் கொடுத்த கட்டளையின் நியாயமானத் தன்மை இப்பொழுது கேள்விக்குட்படுத்தப்பட்டது. (ஆதியாகமம் 3:1–6) கடவுளுடைய ஆட்சியின் நீதியான தன்மைக்கு எதிரான இந்தச் சவால் முக்கியமாக நீதி சம்பந்தமான ஒழுங்கு பிரச்னைகளை எழுப்பியது. விசுவாசமுள்ள மனிதனாகிய யோபுவின் சரித்திர பதிவு, இப்பொழுது கடவுளுடைய அனைத்து சிருஷ்டிகளின் உத்தமமும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அனைத்துலகிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவாதங்களைத் தீர்ப்பதற்கு காலம் அனுமதிக்கப்படுவதையே நீதி தேவைப்படுத்தியது.—யோபு 1:6–11; 2:1–5; லூக்கா 22:31-ஐயும் பார்க்கவும்.
8. (எ) இப்பொழுது மனிதன் தன்னை என்ன வருத்தமான நிலைக்குள் இருப்பதாகக் காண்கிறான்? (பி) மோசேயின் பாடலில் காணப்படும் நம்பிக்கையின் ஒளி யாது?
8 கடவுளுடைய நீதியான வழிகளை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டதன் பலனாகிய மனிதவர்க்கத்தின் வருத்தமான நிலை, பவுலால் ரோமர் 8:22-ல் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. அங்கே அப்போஸ்தலன் எழுதினான்: “இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.” அந்தப் பேரளவான “தவிப்புக்கும்” “வேதனைக்கும்” காரணம், “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளும்” மனிதர் மத்தியில் நீதி குறைவுபடுவதே. (பிரசங்கி 8:9) ஆனால் சர்வவல்ல தேவனுக்கு நன்றி, நீதி கேலிக்குரியதாகியிருக்கும் அப்படிப்பட்ட நிலையை அவர் தொடர்ந்து என்றுமாக அனுமதிக்கப்போவதில்லை! இது குறித்து மோசே உபாகமம் 32:40, 41-லுள்ள தன்னுடைய பாடலில் என்ன சொன்னான் என்பதைக் கவனியுங்கள்: “நான் என்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் . . . மின்னும் என் பட்டயத்தை நான் [யெகோவா] கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன்.”
9. மனிதன் யெகோவாவுக்கு எதிராகக் கலகம்பண்ணின போது அவருடைய கரம் எவ்விதம் “நியாயத்தைப் பிடித்துக்கொண்டது” என்பதை விளக்குங்கள்.
9 ஏதேன் தோட்டத்தில் யெகோவாவின் கரம் “நியாயத்தைப் பிடித்துக்கொண்டது.” கடவுள் நியாயமாகவே தம்முடைய சட்டங்களை வேண்டுமென்றே மீறிய மனிதனுக்கு மரண தண்டனைத் தீர்ப்பைத் தாமதமின்றி வழங்கினார். அவர் ஆதாமிடம், “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்,” என்று சொன்னார். (ஆதியாகமம் 3:19) நூற்றாண்டுகள் கழிந்த பின்னர், ஆதாமிய பாவச் செயல் மனிதவர்க்கம் முழுவதன் மேலும் ஏற்படுத்திய கொடிய பாதிப்புகளை அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாய்ச் சுருக்கமாக எழுதினான்: “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது, எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.”—ரோமர் 5:12.
10. ஆதாம் கடவுளுக்கு எதிராகக் கலகம்பண்ணினது முதல் என்ன இரண்டு வித்துகள் விருத்தியடைந்தன? மற்றும் யெகோவா எவ்வாறு பிரதிபலித்தார்?
10 மனிதனின் கலகத்தனமான போக்கைத் தொடர்ந்து, கடவுள் மேலும் கூறியதாவது: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15, 17–19) இந்த இரண்டு வித்துக்களின் விருத்தி கடந்த 6,000 ஆண்டுகளாக நடந்துவந்திருக்கிறது. அவர்களிடையே “பகை” எப்பொழுதுமே இருந்துவந்திருக்கிறது. ஆனால் இந்தப் பூமியின் மீது காட்சிகள் மாறின போதிலும் யெகோவாவின் நீதியான வழிகள் மாறவில்லை. தம்முடைய தீர்க்கதரிசியாகிய மல்கியாவின் மூலம் அவர் சொல்வதாவது: “நான் யெகோவா; நான் மாறாதவர்.” (மல்கியா 3:6) அபூரணமான, கலகத்தனமான மனிதருடன் கடவுள் கொண்டிருந்த எல்லாத் தொடர்புகளிலும் நீதி காணப்படுகிறது என்பதை இது உறுதிப்படுத்தியிருக்கிறது. யெகோவா ஒருமுறைகூட தம்முடைய உன்னத, நீதியான, நியமங்களிலிருந்து விலகியதில்லை, அதே சமயத்தில் இவற்றை ஞானம், அன்பு, வல்லமை ஆகிய அவருடைய மகத்தான தன்மைகளுக்கும் ஒத்திசைவுபடுத்தியிருக்கிறார்.
கடவுள் மனிதனுடைய உதவிக்கு வருகிறார்
11, 12. மனிதனின் நம்பிக்கையற்ற நிலையை சங்கீதம் 49 எவ்வாறு விவரிக்கிறது?
11 ஆக்டொபஸ் என்ற அச்சந்தரும் ஒரு பெரிய எண்காலியின் உணர்ச்சிக்கொடுக்குகளைப்போல, முழு மனித குடும்பத்தையும் உள்ளடக்கிக்கொள்ளும் வகையில் சாத்தானின் பொல்லாத செல்வாக்கு எட்டியிருக்கிறது. ஆம், மனிதருக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரணத்தீர்ப்பிலிருந்து மட்டுமல்ல, அபூரண மனித ஆட்சியிலிருந்தும் அவர்களை மீட்டுக்கொள்ளவேண்டிய தேவை எவ்வளவாக இருக்கிறது!
12 மரணதண்டனை வழங்கப்பட்டதுமுதல் மனிதன் தன்னைப் பயங்கரமான நிலையில் காண்கிறான். இது கோராகின் புத்திரர் பாடிய பின்வரும் சங்கீதத்தில் நன்றாகக் குறிப்பிடப்படுகிறது: “ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். ஒருவனாவது தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. (அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.)” (சங்கீதம் 49:1, 2, 7–9) இந்தக் காரியங்களெல்லாம் கடவுள் வெளிக்காட்டியிருக்கும் நீதியின் அடிப்படையில் நிகழ்ந்திருக்கிறது!
13, 14. (எ) மனிதனை யார் மட்டுமே மீட்கக்கூடும்? இதற்காகக் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டவர் ஏன் மிகவும் பொருத்தமானவராயிருந்தார்? (பி) கடவுளுடைய எல்லா வாக்குத்தத்தங்களுக்கும் இயேசு எவ்வாறு “ஆம்” என்று ஆனார்?
13 அப்படியிருக்க, உதவி எங்கிருந்து வரக்கூடும்? மரணத்தின் வல்லமையான பிடியிலிருந்து மனிதனை யார் மீட்கக்கூடும்? சங்கீதம் விடையளிக்கிறது: “ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார்.” (சங்கீதம் 49:15) அவருடைய நீதிக்கு ஒத்திசைவாகச் செயல்படும் கடவுளுடைய மகா பெரிய அன்பு மட்டுமே மனிதனை “பாதாளத்தின் வல்லமைக்குத்” தப்புவிக்க முடியும். ஓர் இரவு நேரத்தின்போது, இயேசுவும் அதிக விழிப்புள்ளவனாயிருந்த பரிசேயன் நிக்கொதேமுவும் கொண்டிருந்த ஒரு சம்பாஷணையில் நம்முடைய கேள்விகளுக்கு மேலுமான பதில் கொடுக்கப்படுகிறது. இயேசு அவனிடம் சொன்னார்: “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) கடவுளுடைய குமாரன் பூமிக்கு வருவதற்கு முன்பு, அவர் தம்முடைய பிதாவுடன் பரலோகத்தில் வாழ்ந்துவந்தார். அவர் மனிதனாகப் பிறப்பதற்கு முன்னான சமயத்தில் “மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தார்” என்று சொல்லப்படுகிறது. (நீதிமொழிகள் 8:31) எனவே, மனிதவர்க்கத்தை மீட்டுக்கொள்வதற்காகக் கடவுள் குறிப்பாக இந்த ஆவி சிருஷ்டியை—தம்முடைய ஒரே பேறான குமாரனை—தெரிந்துகொண்டது எவ்வளவு பொருத்தமானது!
14 இயேசுவைக் குறித்து பவுல் சொன்னான்: “தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.” (2 கொரிந்தியர் 1:20) ஏசாயா தீர்க்கதரிசியால் பதிவுசெய்யப்பட்டிருக்கும் இந்தத் தீர்க்கதரிசனங்களில் ஒன்று, மத்தேயு 12:18, 21-ல் மேற்கோளாகக் காட்டப்படுகிறது. இங்கே இயேசுவைக் குறித்து நாம் வாசிப்பதாவது: “இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள்.”—ஏசாயா 42:1–4 பார்க்கவும்.
15, 16. இயேசு ஆதாமின் சந்ததியினருக்கு எவ்விதம் “நித்திய பிதா”வாக இருக்க முடிந்தது?
15 இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின்போது, சகல தேசங்களின் மனிதரும் தம்முடைய நாமத்தில் நம்பிக்கை வைத்து, கடவுளுடைய நீதியின் நன்மைகளை அனுபவித்து மகிழலாம் என்பதை தெளிவுபடுத்தினார். இயேசு சொன்னார்: “அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மத்தேயு 20:28) இஸ்ரவேல் தேசத்துக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய பரிபூரண சட்டம் குறிப்பிட்டதாவது: “ஜீவனுக்கு ஜீவன்.” (உபாகமம் 19:21) எனவே, இயேசு தம்முடைய பரிபூரண ஜீவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தபின்பு, மீண்டும் பரலோகத்திற்கு ஏறிச்செல்லும்படி கடவுளுடைய வல்லமையால் உயிர்த்தெழுப்பப்பட்டார். அப்பொழுது ஆதாமின் ஜீவ உரிமைகளை மீட்டுக்கொள்வதற்காகத் தம்முடைய பரிபூரண மானிட ஜீவனின் கிரயத்தை அளிக்கும் நிலையிலிருந்தார். இப்படியாக, இயேசு “பிந்தின [அல்லது இரண்டாவது] ஆதாமாக” ஆனார். இப்பொழுது அவர் விசுவாசிக்கும் ஆதாமின் சந்ததியினருக்கு “நித்திய பிதா”வாக செயல்பட அதிகாரம் பெற்றிருக்கிறார்.—1 கொரிந்தியர் 15:45; ஏசாயா 9:6.
16 தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியின் அன்பான ஏற்பாட்டின் மூலம் கடவுள் இரட்சிப்பைக் கொண்டுவரும் அவருடைய வழி இப்படியாக ‘தேசங்களுக்குத் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது.’ அதில் உண்மையிலேயே தெய்வீக நீதி காணப்படுகிறது. கடவுள் ‘நம்முடைய ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பதற்கான’ வழியைத் திறந்திருப்பதற்கு நாம் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!
மீட்கும்பொருளை உயர்வாக மதித்தல்
17, 18. 1870-களில் C.T. ரசல் எதில் கூட்டு சேர்ந்தார்? ஆனால் 1878-ல் பார்பரின் என்ன செயல் அவரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது?
17 முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, நவீன நாளைய யெகோவாவின் சாட்சிகள் இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பொருள் போதனையை எல்லாச் சமயத்திலும் உயர்வாக மதித்துவந்திருக்கின்றனர். காவற்கோபுர பைபிள் சங்கத்தின் முதல் தலைவர் சார்ல்ஸ் டேஸ் ரசல் ஒரு சமயத்தில் காலைத் தூதுவன் (The Herald of the Morning) என்ற ஆங்கில மத பத்திரிகையின் உடன் ஆசிரியராகவும் நிதி ஆதரவாளராகவும் இருந்தார் என்பதை நம் நினைவுக்குக் கொண்டுவருவது அக்கறைக்குரியது. அந்தப் பத்திரிகை ஆரம்பத்தில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில், நியு யார்க்கிலிருந்த ரோசெஸ்டரைச் சேர்ந்த N.H. பார்பர் என்ற ஓர் அட்வென்டிஸ்டால் பிரசுரிக்கப்பட்டது. ரசல் அப்பொழுது தன்னுடைய 20-களில் இருந்தார், பார்பரோ அவரைவிட அதிக மூத்தவர்.
18 இந்தக் கூட்டு 1878 வரை நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்பொழுது பார்பர் மீட்கும் பொருள் போதனையை மறுத்து ஒரு கட்டுரையைப் பிரசுரித்தது இவருக்கு ஆச்சரியமாயிருந்தது. என்ன நடந்தது என்பதை விளக்குபவராய் ரசல் சொன்னார்: “திருவாளர் பார்பர் . . . பாவநிவாரணத்தை மறுத்து—கிறிஸ்துவின் மரணம் ஆதாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் மீட்புக் கிரயம் என்பதை மறுத்து தூதுவன் (The Herald) என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார். நம்முடைய ஆண்டவரின் மரணம் மனிதனின் பாவங்களுக்குரிய தண்டனைக்குக் கிரயமாகக் கொடுக்கப்படுவதற்கு இனிமேலும் பயன்படாது, இது ஓர் ஈ-யின் உடலினூடே குண்டூசியைக் குத்தி அதற்கு துன்பத்தையும் மரணத்தையும் ஏற்படுத்துவது தன் குழந்தையின் சிறு குற்றத்துக்கு நியாயமான ஒரு பரிகாரம் என்று ஒரு பூமிக்குரிய பெற்றோர் கருதுமளவுக்கு இருக்கிறது என்று அவர் சொன்னார்.”
19. (எ) மீட்கும் பொருள் குறித்த பார்பரின் கருத்தின்பேரில் ரசலின் பிரதிபலிப்பு என்னவாயிருந்தது? (பி) காவற்கோபுரம் பத்திரிகை சம்பந்தமாக ரசலின் ஆசை நிறைவேறியிருக்கிறதா?
19 ரசல் தன்னுடைய பழைய கூட்டாசிரியரின் கருத்துக்கு உடன்பட்டிருக்கலாம், ஆனால் அவர் அதற்கு இடங்கொடுக்கவில்லை. அந்தப் பத்திரிகையில் இந்த விவாதம் பல மாதங்களுக்குத் தொடர்ந்தது, பார்பர் மீட்கும் பொருளை மறுத்து எழுதுவதும், ரசல் மீட்கும் பொருளை ஆதரித்து எழுதுவதுமாக இருந்தது. கடைசியில் ரசல் பார்பரின் கூட்டிலிருந்து முழுவதுமாக விலகி இந்தப் பத்திரிகையைப் பிரசுரிக்க ஆரம்பித்தார், அந்தச் சமயத்தில் இதற்கு சீயோனின் காவற்கோபுரம் மற்றும் கிறிஸ்துவின் பிரசன்னத் தூதுவன் (Zion’s Watch Tower and of Christ’s Presence) என்று பெயர். புதிய பத்திரிகையைக் குறித்து C.T. ரசல் தன் உணர்வுகளை இப்படியாகத் தெரிவித்தார்: “ஆரம்பத்திலிருந்தே இது மீட்கும் பொருளை விளம்பரப்படுத்துவதில் விசேஷ பாகத்தை வகித்துவந்திருக்கிறது. கடவுளுடைய கிருபையால் அது கடைசிவரை அப்படி இருக்கும் என்று நம்புகிறோம்.” பதிப்பாசிரியர் ரசலின் நம்பிக்கை உண்மையில் நிறைவேறியிருக்கிறதா? அது நிச்சயமாகவே நிறைவேறியிருக்கிறது! இதற்கு விளக்கமளிக்கும் வகையில், இந்த இதழின் 2-ம் பக்கம், “இப்பொழுது அரசராயிருக்கும் இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைக்க இது உற்சாகப்படுத்துகிறது; அவர் சிந்தின இரத்தம் மனிதவர்க்கம் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு வழியைத் திறக்கிறது,” என்று சொல்லுகிறது.
20. என்ன கேள்விகள் இன்னமும் விடையளிக்கப்படவேண்டியதாய் இருக்கின்றன?
20 இதுவரை நம்முடைய சிந்திப்பில் மனித குடும்பத்தின் மீதிருக்கும் பாவம் மற்றும் மரணத்தின் சாபத்திலிருந்து மனிதகுலத்தை மீட்க ஒரு வழியைத் தேவைப்படுத்தும் கடவுளுடைய நீதியின் போக்கை நாம் பின்பற்றினோம். அன்புதானே அந்த வழியை ஏற்படுத்தியிருக்கிறது. என்றபோதிலும், இதுபோன்ற சில கேள்விகள் விடையளிக்கப்படவேண்டியதாய் இருக்கின்றன: இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியின் நன்மைகள் எப்படி கிடைக்கப்பெறுகிறது? அவற்றிலிருந்து நீங்கள் எப்படி நன்மை பெறலாம் மற்றும் எவ்வளவு சீக்கிரத்தில்? தொடர்ந்துவரும் இதழ், நீதி கடவுளுடைய எல்லா வழிகளிலும் காணப்படுகிறது என்பதன்பேரில் உங்கள் நம்பிக்கையை நிச்சயமாய்ப் பெருக்கிடும் விடைகளை அளிக்கிறது. (w89 3/1)
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ கடவுள் நீதிக்கு எந்தளவுக்கு முக்கியத்தும் அளிக்கிறார்?
◻ மனிதவர்க்கத்திற்குள் ஏன் இந்தளவு அநீதி இருக்கிறது?
◻ மனிதன் மரணத்திலிருந்து தப்பி மீளுவதற்குக் கடவுள் எப்படி ஒரு வழியை ஏற்பாடு செய்தார்?
◻ காவற்கோபுரம் எந்தளவுக்கு மீட்கும்பொருளை உயர்வாக மதித்திருக்கிறது?
[பக்கம் 25-ன் படம்]
மோவாபின் சமவெளியில் மோசே தன்னுடைய பாடலின் வார்த்தைகளை உரைக்கிறார்
[பக்கம் 28-ன் படம்]
தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை . . . தந்தருளி உலகத்தில் இவ்வளவாய் அன்புகூர்ந்தார்