விரைவில் எல்லா ஜாதிகளுக்கும் நீதி
“நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் (யெகோவா, NW) உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக.”—உபாகமம் 16:20.
1. மனிதனுக்காக கடவுளுடைய ஆதிநோக்கம் என்னவாக இருந்தது? எவ்விதமாக மாத்திரமே அவன் அதை நிறைவேற்ற முடியும்?
பூமி முழுவதையும் பரிபூரண உயிரினங்களால் நிரம்பியிருக்கச் செய்ய வேண்டும் என்பதே, மனிதனையும் மனுஷியையும் சிருஷ்டித்ததில் யெகோவா தேவனின் நோக்கமாக இருந்தது. அவர்கள் அனைவரும் அவரைத் துதிப்பவர்களாக இருந்து பூமியைக் கீழ்ப்படுத்துவதில் தங்கள் பங்கைச் செய்கிறவர்களாக இருப்பர். (ஆதியாகமம் 1:26–28) மனிதன் கடவுளுடைய சாயலிலும் ரூபத்திலும் உண்டாக்கப்பட்டபடியினால், அவனுக்கு ஞானம், நீதி, அன்பு, வல்லமை என்ற குணங்கள் இயற்பண்புகளாக அமைந்திருக்கின்றன. இந்தக் குணங்களைச் சமநிலையாக செயல்படுத்துவதனால் மாத்திரமே மனிதன் தனக்காகத் தன்னை உண்டாக்கினவர் கொண்டுள்ள நோக்கத்தை நிறைவேற்றமுடியும்.
2. நீதியைப் பின்பற்றுவது இஸ்ரவேல் புத்திரருக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது?
2 முந்தைய இதழில் குறிப்பிடப்பட்டிருந்த வண்ணமே, மனிதன், காரியங்களைச் செய்யும் கடவுளுடைய வழிக்கு எதிராகக் கலகம் செய்து மரணத்தீர்ப்பளிக்கப்பட்டான். இப்பொழுது, அபூரணத்தின் காரணமாக, மனிதவர்க்கத்துக்கான கடவுளுடைய ஆதிநோக்கத்தை நிறைவேற்றுவது அவனுக்குக் கூடாத காரியமாக இருந்தது. பரிபூரண நீதியை விளங்கப்பண்ணுவதற்கு மனிதன் திறமையற்றிருப்பது இந்தத் தோல்வியில் குறிப்பிடத்தக்க காரியமாக இருந்திருக்கிறது. அப்படியென்றால், மோசே இஸ்ரவேல் புத்திரருக்குப் பின்வருமாறு நினைப்பூட்டியதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “நீதியையே பின்பற்றுவாயாக”! அவர்களுடைய வாழ்க்கையும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் சுதந்தரித்துக் கொள்வதற்குரிய திறமையும் அவர்கள் நீதியைப் பின்பற்றுவதன் பேரில் சார்ந்திருந்தது.—உபாகமம் 16:20.
வரவிருக்கும் நல்ல காரியங்களுக்கு ஒரு நிழல்
3. ஏன் இஸ்ரவேலரோடு யெகோவாவின் செயல்தொடர்புகளை ஆராய்வது இன்று நமக்கு முக்கியமாக இருக்கிறது?
3 இஸ்ரவேல் தேசத்தோடு யெகோவாவின் செயல்தொடர்புகள், அவர் தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஊழியனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாகத் தம்முடைய நீதியை எல்லா ஜாதிகளுக்கும் தெளிவாக விளங்கப்பண்ணுவார் என்பது நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் காரியங்களை இவ்விதமாக விளக்குகிறான்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) கடவுள் “நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவராக” இருப்பதன் காரணமாக இஸ்ரவேலர் ஒருவரோடொருவர் கொள்ளும் அவர்களுடைய எல்லாச் செயல்தொடர்புகளிலும் தம்மைப் பின்பற்றவேண்டுமென்று அவர் வற்புறுத்தினார். (சங்கீதம் 33:5) இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட 600 சட்டங்களில் சிலவற்றை ஆராய்வதன் மூலம் இதைத் தெளிவாகக் காணமுடியும்.
4. மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் சமுதாய-உரிமைப் பிரச்னைகள் எவ்விதமாகக் கையாளப்பட்டன?
4 மோசேயின் நியாயப்பிரமாணம் பின்பற்றப்பட்ட போது, சமுதாய உரிமைப் பிரச்னைகள் இருக்கவில்லை. தேசத்தில் வாழவந்த இஸ்ரவேலனல்லாதவனுடைய விஷயத்தைப் பற்றியதில் லேவியராகமம் 19:34 சொல்வதாவது: “உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக.” என்னே ஒரு நீதியான அன்புள்ள ஏற்பாடு! மேலுமாக நியாயாதிபதிகளும் சாட்சிகளும் ஒன்றுபோல இவ்விதமாக நல்லறிவூட்டப்பட்டார்கள்: “வழக்கிலே கூட்டமானவர்களின் கட்சியில் சாய்ந்து நியாயத்தைப் புரட்டச் சாட்சி சொல்லாதே. சிறுமையானவன் வழக்கில் அவனுக்குப் பக்ஷபாதம் காட்டாதே.” (யாத்திராகமம் 23:2, 3, தி.மொ.) இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்—செல்வந்தனுக்கும் தரித்திரனுக்கும் ஒரேவிதமாக நீதி வழங்கப்படுதல்!
5. மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் குற்றவழக்குச் சட்டங்களை இன்றுள்ளவைகளோடு ஒப்பிடுக.
5 மோசேயினுடைய நியாயப்பிரமாணச் சட்டத் தொகுப்பின் கீழ் குற்ற வழக்குச் சட்டங்கள், இன்று தேசங்களின் எழுத்துருவச் சட்டங்களைக் காட்டிலும் மிக மேன்மையானவையாக இருந்தன. உதாரணமாக, திருடுகிற ஒருவன், சட்டத்துக்குக் கீழ்ப்படிகின்ற, கடினமாக உழைக்கும் ஆட்களின் மீது சுமையை சுமத்தாதபடிக்கு அவன் சிறையிலடைக்கப்படவில்லை. அவன் வேலை செய்து அவன் திருடியதற்கு இரட்டிப்பாய் அல்லது அதிகமாக செலுத்தியாக வேண்டும். ஆகவே மோசம் செய்யப்பட்டவன் எந்த நஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை. திருடியவன் வேலை செய்யவும் திரும்பச் செலுத்தவும் மறுப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியானால், உரியவருக்குத் திரும்பச் செலுத்தும்வரை அவன் அடிமையாக விற்கப்படவேண்டும். அவன் பிடிவாதமான மனநிலையைத் தொடர்ந்து காண்பிப்பானேயானால், அவன் மரணத்துக்குட்படுத்தப்பட்டான். இந்த விதமாக மோசம் செய்யப்பட்டவனுக்கு நீதி செய்யப்பட்டது, திருடும் மனச்சாய்வுக் கொண்டிருக்கக்கூடிய மற்றவர்களுக்கு இது பயத்தை ஏற்படுத்தி பலமான ஒரு தடையாக இருந்தது. (யாத்திராகமம் 22:1, 3, 4, 7; உபாகமம் 17:12) மேலுமாக, உயிர் கடவுளுடைய பார்வையில் பரிசுத்தமாக இருப்பதன் காரணமாக, எந்த ஒரு கொலைக்காரனும் கொலைசெய்யப்பட்டான். இது பொல்லாத, கொலைகார மனுஷனை தேசத்திலிருந்து அப்புறப்படுத்தியது. என்றபோதிலும், கைப்பிசகாய்க் கொலை செய்தவனுக்கு இரக்கம் காண்பிக்கப்பட்டது.—எண்ணாகமம் 35:9–15, 22–29, 33.
6. இஸ்ரவேலரின் சட்டங்களை ஆராய்வது என்ன முடிவுக்கு நம்மை வழிநடத்துகிறது?
6 அப்படியென்றால், இஸ்ரவேல் தேசத்தோடு கடவுள் கொண்டிருந்த எல்லா நியாய விசாரணை சம்பந்தப்பட்ட செயல்தொடர்புகளிலும் கடவுளுடைய நீதி சிறப்பித்துக் காட்டப்பட்டதை யாரால் மறுதலிக்க முடியும்? ஆகவே, ஏசாயா 42:1-லுள்ள கடவுளுடைய வாக்குறுதி எவ்விதமாக கிறிஸ்து இயேசுவால் செயலுருவாக்கப்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கையில் என்னே ஆறுதல், என்னே நம்பிக்கை நம்மை நிரப்புகிறது! அங்கே நாம் இவ்விதமாக உறுதியளிக்கப்படுகிறோம்: “அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.”
நீதி இரக்கத்தோடு சமநிலைப்படுத்தப்படுகிறது
7. இஸ்ரவேலரோடு யெகோவாவின் இரக்கமுள்ள செயல்தொடர்புகளை விவரிக்கவும்.
7 கடவுளுடைய நீதி இரக்கத்தோடு சமநிலைப்படுத்தப்படுகிறது. இஸ்ரவேலர் கடவுளுடைய நீதியான வழிகளுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தபோது, இது தெளிவாக காண்பிக்கப்பட்டது. அவர்கள் 40 வருடங்கள் வனாந்தரத்தில் இருந்தபோது யெகோவாவின் இரக்கமுள்ள கவனிப்பைப் பற்றிய மோசேயின் விவரிப்பை கவனித்துப் பாருங்கள்: “பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார். அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார். கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு போகிறது போல, கர்த்தர் (யெகோவா, NW) ஒருவரே அவனை வழிநடத்தினார்.” (உபாகமம் 32:10–12) பின்னால் தேசம் விசுவாச துரோகத்துக்கு மாறியபோது யெகோவா இவ்விதமாக மன்றாடினார்: “உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள்.”—சகரியா 1:4எ.
8, 9. (எ) கடவுள் எந்தளவுக்கு யூதர்களுக்கு இரக்கமுள்ள நியாயத்தைக் காண்பித்தார்? (பி) கடைசியாக என்ன ஆபத்து அவர்களை மேற்கொண்டது? ஆனால் அவர்களோடு கடவுளுடைய செயல்தொடர்புகளைக் குறித்து என்ன சொல்லப்படலாம்?
8 யெகோவா இரக்கம் காட்ட முன்வந்தபோது அதற்கு செவிசாய்க்க அவர்கள் விருப்பமற்றவர்களாயிருந்தனர். சகரியா தீர்க்கதரிசி மூலமாகக் கடவுள் சொன்னதாவது: “எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள்.” (சகரியா 1:4பி) ஆகவே அவர்கள் தம்மிடமாகத் திரும்ப, உதவிசெய்வதற்கு கடவுளுடைய இரக்கமுள்ள நீதி அவருடைய ஒரே-பேறான குமாரனை அனுப்பும்படி அவரைத் தூண்டியது. யோவான் ஸ்நானகன் இவ்விதமாகச் சொல்லி கடவுளுடைய குமாரனை அறிமுகம் செய்து வைத்தான்: “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:29) பல ஆண்டுகளாக இயேசு சோர்ந்து போகாமல் யூதர்களுக்குக் கடவுளுடைய நீதியான வழிகளைக் கற்பித்து, எண்ணற்ற பல அற்புதங்களை நடப்பித்து, இவ்விதமாக தாம் முன்னறிவிக்கப்பட்ட மீட்பர் என்பதை நிரூபித்தார். (லூக்கா 24:27; யோவான் 5:36) ஆனால் ஜனங்கள் செவிசாய்க்கவோ நம்பவோ இல்லை. ஆகவே இயேசு இவ்விதமாக கூற தூண்டப்பட்டார்: “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.”—மத்தேயு 23:37, 38.
9 கடவுள் தம்முடைய நியாயதண்டனையை நிறைவேற்றுவதை பொ.ச. 70 வரையாக, இன்னுமொரு 37 ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்திருந்தார். பின்னர் அவர் ரோமர்கள் எருசலேமை அழிக்கவும் ஆயிரக்கணக்கான யூதர்களைக் கைதிகளாகக் கொண்டு செல்லவும் அனுமதித்தார். அநேக நூற்றாண்டு காலப் பகுதியினூடாக யெகோவாவின் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் நாம் சிந்திக்குமிடத்து, இஸ்ரவேல் வீட்டாரோடு அவருடைய எல்லாச் செயல்தொடர்புகளிலும் நீதி சிறப்பித்துக் காட்டப்பட்டதை யார் காணத் தவறக்கூடும்?
எல்லா ஜாதிகளுக்கும் நீதி
10. கடவுளின் நீதி எவ்விதமாக எல்லா ஜாதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது?
10 இயேசுவை இஸ்ரவேலர் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து யாக்கோபு சொன்னான்: “தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முறையாக அவர்களிடம் தம்முடைய கவனத்தைத் திருப்பினார்.” (அப்போஸ்தலர் 15:14, NW) இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொண்ட அந்த ஒருசில யூதர்கள் உட்பட, இந்த “ஜனம்” மொத்தமாகச் சேர்ந்து “தேவனுடைய [ஆவிக்குரிய] இஸ்ரவேலை” உண்டுபண்ணுகிறார்கள். இது ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றும் 1,44,000 பேரைக் கொண்டதாகும். (கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 7:1–8; 14:1–5) விருத்தசேதனம் பண்ணப்படாத முதல் புறஜாதி விசுவாசி கொர்நேலியுவாக இருந்தான். கொர்நேலியுவும் அவனுடைய வீட்டாரும் கடவுளுடைய இரட்சிப்பின் வழியை ஏற்றுக்கொண்டபோது பேதுரு சொன்னான்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும் எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 10:34, 35) பவுல் பின்வருமாறு சொல்கையில் யெகோவாவின் பாரபட்சமின்மையின் நியாயத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறான்: “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.”—கலாத்தியர் 3:28, 29.
11. ஆபிரகாமுக்கு என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டது? அது எவ்விதமாக நிறைவேற்றமடையும்?
11 இங்கே நாம் யெகோவா ஆபிரகாமுக்குக் கொடுத்த மகத்தான வாக்குறுதியைப் பற்றி நினைப்பூட்டப்படுகிறோம். அந்த முற்பிதா தன்னுடைய நேசக்குமாரன் ஈசாக்கை பலிகொடுக்க முன்வந்ததன் அடிப்படையில் கடவுள் அவனிடம் சொன்னதாவது: “நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால், நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, . . . உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்.” (ஆதியாகமம் 22:16–18) இந்த வாக்குறுதி எவ்விதமாக நிறைவேறும்? இயேசு கிறிஸ்துவும், மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களாக நிரூபிக்கும் அவரைப் பின்பற்றுகிற அபிஷேகம் பண்ணப்பட்ட அவருடைய 1,44,000 பேரும் சேர்ந்து உண்டுபண்ணும் “ஆபிரகாமின் வித்து” பரலோகத்திலிருந்து மனிதவர்க்கத்தின் மீது ஆயிரமாண்டுகாலம் அரசாளுவார்கள். (வெளிப்படுத்துதல் 2:10, 26; 20:6) அந்த ஆசீர்வாதமானக் காலப்பகுதியைக் குறித்து, யெகோவா நமக்கு உறுதியளிப்பதாவது: “அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை.” ஏன்? ஏனென்றால் அந்த மேசியானிய ராஜ்யத்தின் “கர்த்தத்துவம்” ‘நியாயத்தினாலும் நீதியினாலும் என்றென்றைக்கும் நிலைப்படுத்தப்படும்.’—ஏசாயா 9:7.
12. ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் எந்தளவுக்கு ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டு வருகிறது?
12 ஆனால் ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை அனுபவித்துக் களிப்பதற்கு இயேசு கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சி ஆரம்பமாகும் வரையாகக் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த ஆசீர்வாதங்கள் ஏற்கெனவே “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலு”மிருந்து வரும் “திரளான கூட்டமாகிய ஜனங்க”ளால் அனுபவிக்கப்பட்டுவருகிறது. அடையாள அர்த்தத்தில் ‘தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய [இயேசு கிறிஸ்து] இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்களாய்’ இருப்பதன் மூலம் அவர்கள் யெகோவாவுக்கு முன்பாக நீதியான ஒரு நிலைநிற்கையைக் கொண்டவர்களாகிறார்கள். ஆபிரகாமைப் போல் அவர்கள் யெகோவாவின் சிநேகிதர்களாகிறார்கள்! எல்லா ஜாதிகளிலுமிருந்து வரும் இலட்சக்கணக்கானோருக்கு யெகோவாவுடைய இரட்சிப்பின் வழியில் நிச்சயமாகவே நீதி சிறப்பித்துகாட்டப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
கடவுளின் நீதியான வழிகளுக்கு நீங்கள் பிரதிபலிக்கிறீர்களா?
13, 14. (எ) என்ன சொந்த இருதய பரிசோதனையை நாம் அனைவரும் செய்துகொள்ள வேண்டும்? (பி) யெகோவா தேவனுக்கு நம்முடைய நன்றியுணர்வு எவ்விதமாக வெளிப்படுத்தப்படலாம்?
13 உங்களுக்காக மீட்கும் பொருளாகத் தம்முடைய ஒரே பேறான குமாரனைக் கொடுத்ததில் கடவுளின் நீதி மற்றும் அன்பின் வழியால் உங்கள் இருதயம் தொடப்பட்டு நீங்கள் வெகுவாக உணர்ச்சியூட்டப்பட்டிருக்கிறீர்களா? யெகோவா ஆபிரகாமை, அவன் அவ்வளவாக நேசித்த அவனுடைய குமாரனை பலிகொடுக்கும்படி கேட்டபோது அவனுடைய உணர்ச்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள்! ஆனால் கடவுளுடைய உணர்ச்சிகள் இன்னும் ஆழமாகச் செல்கின்றன. தம்முடைய குமாரன், அவமானத்தையும், வழிச்செல்வோரின் பழிதூற்றலையும், கழுமரத்தின் சித்திரவதையான வேதனையையும் அனுபவித்தபோது அவருடைய உணர்ச்சிகளைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். இயேசுவின் பின்வரும் கதறலுக்கு யெகோவாவின் பிரதிபலிப்பைக் கற்பனைச் செய்துபாருங்கள்: “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத்தேயு 27:39, 46) இருந்தபோதிலும், கடவுளுடைய நீதியை நிலைநாட்டும் வகையில் அவருடைய உத்தமத்தை நிரூபிப்பதற்கு இவ்விதமான முறையில் தம் குமாரன் மரிக்க அனுமதிக்கும்படியாக யெகோவா தேவனை நீதி வற்புறுத்துவதாய் இருந்தது. மேலுமாக தம்முடைய குமாரனை மரிக்க அனுமதிப்பதன் மூலம், யெகோவா நமக்கு இரட்சிப்பின் வழியைத் திறந்து வைத்தார்.
14 அப்படியென்றால், நிச்சயமாகவே, யெகோவா தேவனிடமும் அவருடைய குமாரனிடமும் நமக்குள்ள நன்றியுணர்வு பகிரங்கமாக பின்வருமாறு ஒப்புக்கொள்ள நம்மைத் தூண்ட வேண்டும்: “இரட்சிப்பின் மகிமை . . . எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக.” (வெளிப்படுத்துதல் 7:10) இவ்வகையில் நாம் நேர்நிலையாகப் பிரதிபலிப்பதன் மூலம் நாம் மோசேயின் இந்த வார்த்தைகளை விசுவாசிக்கிறோம் என்பதைக் காண்பிக்கிறோம்: “அவர் [யெகோவா] வழிகளெல்லாம் நியாயம்.” (உபாகமம் 32:4) நாம் இவ்விதமாக ஒப்புக்கொண்டு பின்னர் மனிதனுடைய இரட்சிப்புக்கு கடவுளுடைய நியாயமான வழிகளைப் பின்தொடருகையில் யெகோவாவின் மற்றும் இயேசு கிறிஸ்துவின் இருதயங்களுக்கு என்னே மகிழ்ச்சியை நாம் கொண்டுவருவோம்!
15. நிக்கொதேமுவிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் நமக்கு என்ன முக்கியத்துவத்தையுடையதாக இருக்கிறது?
15 1870-களில் நம்முடைய உடன்விசுவாசிகள் மீட்கும் பலியைக் குறித்த விஷயத்தில் உறுதியான நிலைநிற்கையை எடுத்ததற்காக நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாக இல்லையா? மனிதனுடைய இரட்சிப்புக்குக் கடவுளுடைய நியாயமான மற்றும் அன்புள்ள வழியைப் பற்றிக்கொண்டிருக்க இன்று அதேவிதமாக தீர்மானமாயிருக்கும் ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்களாயிருப்பதற்காக நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாக இல்லையா? அப்படியிருக்கிறோமென்றால், நாம் இயேசு நிக்கொதேமுவிடம் சொன்ன காரியத்துக்கு விசேஷ கவனம் செலுத்த வேண்டும்: “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; . . . சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.” கடவுளுடைய பிரதிகூலமான நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள நாம் ‘தேவனுக்குள்ளாய் கிரியைகளைச்’ செய்வதன் மூலம் குமாரனில் நம்முடைய விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும்.—யோவான் 3:17, 18, 21.
16. இயேசுவின் சீஷர்கள் எவ்விதமாக பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்த முடியும்?
16 இயேசு சொன்னார்: “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.” (யோவான் 15:8, 10) இந்தக் கற்பனைகளில் சில யாவை? அவற்றில் ஒன்று யோவான் 13:34, 35-ல் காணப்படுகிறது. இங்கே இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” அன்பின் கனி யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் தெளிவாக உணரப்படுகிறது. இயேசு மேலும் கட்டளையிட்டதாவது: “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) நீங்கள் தனிப்பட்டவராக இந்தத் ‘தேவனுக்குள்ளாய்க் கிரியைகளைச்’ செய்துவருகிறீர்களா?
17. பிரசங்க மற்றும் கற்பிக்கும் வேலை யெகோவாவின் நீதியின் வெளிக்காட்டு என்பதை என்ன விளைவு காண்பிக்கிறது?
17 இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் இந்தப் பிரசங்க மற்றும் கற்பிக்கும் வேலைகளைச் செய்வதற்கு அனுமதிப்பதில் யெகோவாவின் வழியின் நீதி, ஒரே ஆண்டில் யெகோவாவின் சாட்சிகளால் என்ன சாதிக்கப்பட்டது என்பதை நாம் சிந்திக்கையில் தெளிவாகத் தெரிய வருகிறது. 1989-ன் போது 2,63,855 புதிய சீஷர்கள் முழுக்காட்டப்பட்டார்கள்! இது உங்களுடைய இருதயத்துக்கு சந்தோஷத்தைக் கொண்டுவருவதில்லையா?
நீதியின் கடவுள் சீக்கிரத்திலே செயல்படுவார்
18. யெகோவாவின் மக்கள் துன்புறுத்தப்படுவதை முன்னிட்டுப் பார்க்கையில் என்ன கேள்விகள் எழுப்பப்படலாம்?
18 சாட்சிகொடுக்கும் வேலை எதிர்ப்புகளில்லாமல் செய்யப்பட்டு வரவில்லை. இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களிடமாகச் சொன்னார்: “அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:20) யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன-நாளைய சரித்திரம் இந்தக் கூற்றின் உண்மைத்தன்மைக்கு சான்றளிக்கிறது. தடையுத்தரவுகள், காவலில் வைக்கப்படுதல், அடிக்கப்படுதல், சித்தரவதையும்கூட சாட்சிகளால் ஒரு தேசத்திற்குப் பின் ஒரு தேசமாகத் தொடர்ந்து அனுபவிக்கப்பட்டு வருகிறது. ஆபகூக்கின் தீர்க்கதரிசன வார்த்தைகள் மீண்டுமாக நம் மனதிற்கு வருகின்றன: “நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது.” ஆகவே சிலசமயங்களில் யெகோவாவின் மக்களுக்கும்கூட பின்வருமாறு கேட்கத் தோன்றக்கூடும்: ‘துரோகிகளை யெகோவா நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது யெகோவா ஏன் மெளனமாயிருக்கிறார்?’—ஆபகூக் 1:4, 13.
19. கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து காரியங்களைப் புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்வதற்கு இயேசு என்ன உவமையைக் கொடுத்தார்?
19 இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க கடவுளுடைய நோக்குநிலையிலிருந்து காரியங்களைக் காண நமக்கு உதவி செய்யும் ஓர் உவமையை இயேசு கொடுத்தார். லூக்கா 17:22–37-ல், இயேசு இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவைத் தனிப்படக் குறித்துக்காட்டும் வன்முறையான நிலைமைகளை விவரித்தார். நோவாவின் நாட்களில் ஜலப்பிரளயத்துக்கு முன்னாலும் லோத்துவின் நாட்களில் சோதோம் கொமோரா அழிக்கப்படுவதற்கு முன்னாலுமிருந்த காலங்களை அவை ஒத்திருக்கும் என்பதாக அவர் சொன்னார். பின்னர், லூக்கா 18:1–5-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இயேசு தம்முடைய சீஷர்களிடமாகத் திரும்பி, “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்.” இயேசு அதிக வறுமையிலிருந்த ஒரு விதவையைப் பற்றியும் அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிலையிலிருந்த “ஒரு நியாயாதிபதி”யைப் பற்றியும் சொன்னார். விதவை தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தாள்: “எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ் செய்ய வேண்டும்.” அவள் விடாப்பிடியாக இருந்ததன் காரணமாக கடைசியாக நியாயாதிபதி ‘அவளுக்கு நியாயஞ் செய்யப்படுவதைப்’ பார்த்துக்கொண்டான்.
20. இயேசுவின் உவமை நமக்கு என்ன பாடத்தைக் கொண்டிருக்கிறது?
20 இன்று நமக்கு இதில் பாடம் என்ன? அந்த அநீதியான நியாயாதிபதியோடு ஒப்பிட யெகோவாவின் தெளிவான வேறுபாடுகளைக் காண்பிப்பவராய் இயேசு சொன்னார்: “அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—லூக்கா 18:6–8எ.
21. நம்முடைய தனிப்பட்ட பிரச்னைகளை நாம் எவ்விதமாக நோக்கவும், கையாளவும் வேண்டும்?
21 நம்முடைய தனிப்பட்ட பிரச்னைகளுக்கு வருகையில், நம்முடைய மன்றாட்டுகளுக்குப் பதில் கிடைப்பதில் தோன்றுகிற தாமதத்துக்குக் கடவுளுடைய பங்கில் விருப்பமின்மை காரணமாக இல்லை என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். (2 பேதுரு 3:9) ஏதோ ஒருவகையான துன்புறுத்தலை அல்லது அந்த விதவையைப் போல அநியாயத்தை நாம் அனுபவிக்க வேண்டியிருந்தால், கடைசியாக நீதி செய்யப்படுவதைக் கடவுள் பார்த்துக்கொள்வார் என்பதில் நாம் விசுவாசம் வைக்கலாம். இப்படிப்பட்ட விசுவாசத்தை நாம் எவ்விதமாகக் காண்பிக்கலாம்? இடைவிடாமல் ஜெபம் செய்வதன் மூலமாகவும் செயலில் உண்மையுள்ள போக்கைக் காத்துக்கொள்ள நம்முடைய ஜெபங்களை ஆதரிப்பதன் மூலமுமே. (மத்தேயு 10:22; 1 தெசலோனிக்கேயர் 5:17) நம்முடைய உண்மையின் மூலம், நாம் பூமியில் விசுவாசம் இருப்பதையும், நீதியை மெய்யாகவே நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதையும், நாம் அவர்களில் ஒருவராக இருப்பதையும் நிரூபிக்கிறவர்களாக இருப்போம்.—லூக்கா 18:8பி.
“ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்”
22. வெற்றிக்களிப்புடைய என்ன குறிப்போடு மோசே தன் பாடலை முடித்தான்?
22 பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, மோசே தன்னுடைய பாடலை இந்த வெற்றிக்களிப்புடைய குறிப்போடு முடித்தான்: “ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார்.” (உபாகமம் 32:43) யெகோவாவின் பழிவாங்கும் நாள் மிக அருகில் வந்துகொண்டிருக்கிறது. அவர் இன்னும் நீதியோடுகூட பொறுமையை கடைப்பிடித்துவருவதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!
23. கடவுளுடைய ஜனங்களின் களிகூருதலில் பங்குகொள்கிறவர்களுக்கு என்ன மகிழ்ச்சியான முடிவு காத்திருக்கிறது?
23 எல்லா ஜாதிகளிலும் அல்லது தேசங்களிலும் இருப்பவர்கள் “மனந்திரும்புவதற்கு” வழி இன்னும் திறந்திருக்கிறது, ஆனால் தாமதிப்பதற்கு நேரமில்லை. பேதுரு எச்சரித்தான்: “கர்த்தருடைய (யெகோவாவுடைய, NW) நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்.” (2 பேதுரு 3:9, 10) இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை விரைவில் அழிக்கப்படுவதைக் கடவுளுடைய நீதி தேவைப்படுத்துகிறது. அவ்விதமாகச் செய்யப்படுகையில், இன்பந்தரும் அழைப்புக்கு பிரதிபலித்திருக்கும் ஆட்களின் மத்தியில் நாம் காணப்படுவோமாக: “ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்.” ஆம், கடவுளுடைய எல்லா வழிகளிலும் நீதி சிறப்பித்துக் காட்டப்பட்டிருப்பதைக் கண்டிருக்கும் மகிழ்ச்சியுள்ளவர்களின் மத்தியில் நாம் காணப்படுவோமாக! (w89 3/1)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ மோசேயின் நியாயப்பிரமாணம் கடவுளுடைய நீதியில் நம்முடைய விசுவாசத்தை ஏன் பலப்படுத்த வேண்டும்?
◻ கடவுளுடைய நியாயமான வழிகளுக்குப் பிரதிபலிக்க நம்மை எது தூண்டுவிக்க வேண்டும்?
◻ யெகோவா எவ்விதமாக மகிமைப்படுத்தப்படலாம்?
◻ இன்று, எங்கு மாத்திரமே மெய்யான களிகூருதலைக் காணமுடியும்?
[பக்கம் 11-ன் படம்]
“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 10:34, 35
[பக்கம் 14-ன் படம்]
தேவன் தம்மை நோக்கி கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்வார்