யெகோவா— நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவர்
சரஜெவோவில் ஓர் வாலிபப் பெண், தன் பட்டணத்துப் பிள்ளைகள் ஏன் அவ்வளவு மிகுதியான துன்பத்தைச் சகிக்க வேண்டியதாக இருக்கிறதென்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறாள். “நாங்கள் ஒன்றும் செய்யவில்லையே. நாங்கள் குற்றமற்றவர்கள்,” என்று அவள் சொல்கிறாள். கலக்கமடைந்த அர்ஜன்டினிய தாய்மார், தங்கள் குமாரர்கள் காணாமற்போனதன்பேரில் அரசாங்கத்திற்குக் கண்டன அறிவிப்பாக, ஏறக்குறைய 15 ஆண்டுகளாக, போனஸ் அயர்ஸில் உள்ள ஒரு பொது சதுக்கத்தில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றனர். இனக்கலவரம் திடீரென்று ஏற்பட்டு பரவினபோது, தன் தாயையும் மூன்று சகோதரிகளையும் படுகொலையில் இழந்த இம்மான்யல் என்ற பெயருடைய ஆப்பிரிக்கர் ஒருவர், பின்வருமாறு வற்புறுத்தி சொல்கிறார்: “ஒவ்வொருவரும் அவரவருக்குரிய நியாயமான பலனைப் பெற வேண்டும் . . . எங்களுக்கு நியாயம் வேண்டும்.”
நியாயம் யெகோவா தேவனின் முதன்மையான பண்புகளில் ஒன்றாக இருக்கிறது. “அவர் வழிகளெல்லாம் நியாயம்,” என்று பைபிள் சொல்கிறது. நிச்சயமாகவே, யெகோவா ‘நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவர்.’ (உபாகமம் 32:4; சங்கீதம் 33:5) கடவுளை நன்றாய் அறிந்துகொள்வதற்கு, அவருடைய நியாய உணர்வை நாம் புரிந்துகொண்டு அதைப் பார்த்து நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.—ஓசியா 2:19, 20; எபேசியர் 5:1, தி.மொ.
நியாயத்தைப் பற்றிய நம்முடைய கருத்துணர்வானது, இந்தப் பண்பை மனிதர் கருதும் முறையால் பாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கலாம். உலகத்தின் சில பாகங்களில், நியாயமானது, கண்கள் கட்டப்பட்ட ஒரு பெண், வாள் ஒன்றையும், இரு தட்டுகளையுடைய தராசு ஒன்றையும் பிடித்துக்கொண்டு இருப்பதாக அடிக்கடி வருணிக்கப்படுகிறது. மனித நியாயம் நடுநிலை தவறாததாக, அதாவது, செல்வத்தால் அல்லது செல்வாக்கால் பாதிக்கப்படாததாக இருக்கிறதென்று கருதப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றப் பழியை அல்லது குற்றமில்லாமையை அது கவனமாய்ச் சீர்தூக்கிப் பார்த்துத் தீர்ப்பிட வேண்டும். அதன் வாளால், நியாயமானது, குற்றமற்றவர்களைப் பாதுகாத்து, குற்றம் செய்வோரைத் தண்டிக்க வேண்டும்.
“நியாயமானது, சட்டம், பொறுப்பு, உரிமைகள், கடமைகள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது, அதன் பரிசுகளை நடுநிலை தவறாமையின்படி அல்லது தகுதியின்படி பகிர்ந்தளிக்கிறது” என்று நேர்மையும் நியாயக் காரணமும்—தத்துவத்திலும் நடைமுறையிலும் (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது. ஆனால் யெகோவாவின் நியாயம் அதைப் பார்க்கிலும் இன்னும் மேம்பட்டதாயிருக்கிறது. தம்முடைய பரலோகத் தகப்பனைப்போலவே பெரும்பாலும் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் செயல்களையும் பண்புகளையும் ஆழ்ந்து சிந்திப்பதன்மூலம் இதை நாம் காணலாம்.—எபிரெயர் 1:3.
சுவிசேஷ எழுத்தாளராகிய மத்தேயு, ஏசாயா 42:3-ன் வார்த்தைகளை இயேசுவுக்குப் பொருத்திப் பயன்படுத்தினார், அவர் சொன்னதாவது: “அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.” முறிந்து வளைந்து மிதிக்கப்பட்டதுமான, நெரிந்த ஒரு நாணலைப்போல் இருந்த ஜனங்களுக்கு இயேசு ஆறுதலான ஒரு செய்தியை அறிவித்தார். விளக்கின் புகைந்தெரியும் ஒரு திரியைப்போன்று, தங்கள் உயிரின் கடைசி தீப்பொறி ஏறக்குறைய அணைக்கப்பட்டிருந்ததுபோல் அவர்கள் இருந்தார்கள். அடையாளக் குறிப்பாய், நெரிந்த நாணல்களை முறிப்பதற்கும் புகைந்தெரியும் திரிகளை அணைப்பதற்கும் பதிலாக, இயேசு, துன்புற்றிருந்தவர்களுக்காக மனதுருகினார், அவர்களுக்குக் கற்பித்து, அவர்களைச் சுகப்படுத்தினார், மற்றும் யெகோவா தேவனின் நியாயத்தை அவர்களுக்குத் தெளிவாக்கினார். (மத்தேயு 12:10-21) ஏசாயாவின் தீர்க்கதரிசனம் முன்னறிவித்தபடியே, அந்த வகையான நியாயம் நம்பிக்கை உணர்ச்சியூட்டியது.
இரக்கமும் யெகோவாவின் நியாயமும்
இரக்கம் கடவுளுடைய நியாயத்தின் உள்ளியல்பான ஒரு பாகமாக உள்ளது. இயேசு பூமியில் இருந்தபோது இது முக்கியமாய் வெளிப்பட்டது. நியாயத்துக்கும் நீதிக்குமுரிய கடவுளுடைய தராதரங்களுக்கு அவர் பூரண மாதிரியாக இருந்தார். எனினும், யூத சதுசேயரும் பரிசேயரும்—பெரும்பாலும் தாங்கள் சொந்தமாய் உண்டாக்கியிருந்த—விடாக் கண்டிப்பான சட்டங்களின் ஒரு தொகுப்பைப் பின்பற்றுவதன் மூலம் நீதியை அடைய நாடினர். அவர்களுடைய கண்டிப்பான சட்டக் கட்டுப்பாட்டு நியாயம், பொதுவாய் இரக்கத்தைப் புறக்கணித்தது. உண்மையான நியாயமும் நீதியும் எது என்ற இந்த விவாதத்தைச் சுற்றியே இயேசுவுக்கும் பரிசேயருக்கும் இடையில் பல மோதல்கள் எழும்பின.—மத்தேயு 9:10-13; மாற்கு 3:1-5; லூக்கா 7:36-47.
மற்றவர்களை நியாயமும் நீதியுமான முறையில் நடத்துவது எவ்வாறு என்று இயேசு சித்தரித்துக் காட்டினார். நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பதற்கு என்ன தேவை என்று, நியாயப்பிரமாணத்தில் அறிவுத்திறம் வாய்ந்த ஒரு மனிதர் ஒரு சமயத்தில் இயேசுவைக் கேட்டார். அதற்குப் பதிலளிப்பவராய் இயேசு, அவரை ஒரு கேள்வி கேட்டார். தன் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் கடவுளில் அன்புகூர வேண்டும், தன்னைப்போல் தன் அயலானில் அன்புகூர வேண்டும் என்பவையே மிக முக்கியமான இரண்டு கட்டளைகள் என்று அவர் பதிலளித்தபோது, இயேசு அவரை மெச்சிக்கொண்டார். அப்போது அந்த மனிதர்: “எனக்கு அயலான் யார்”? என்று கேட்டார். அயலானுக்குரிய அன்பு காட்டின சமாரியனைப் பற்றிய உவமையைச் சொல்வதன் மூலம் இயேசு பதிலளித்தார்.—லூக்கா 10:25-37, தி.மொ.
சமாரியனைப் பற்றிய இயேசுவின் உவமையில் யெகோவாவின் நீதியும், இரக்கமுள்ள நியாயமும் மாதிரிப்படுத்தி விளக்கப்பட்டன. தனக்குத் தெரிந்திராத, காயப்பட்ட மனிதன் ஒருவனுக்கு, தன்னலமற்ற முறையில் உதவிசெய்ததன்மூலம், அந்தச் சமாரியன் நேர்மையும், நியாயமும், இரக்கமுமுள்ள காரியத்தை செய்தான். பூமியிலிருந்தபோது இயேசுதாமே அதே மனநிலையைக் காட்டினார். அவர் நீதியும் நியாயமும் உள்ளவராக இருந்தார். மேலும், தேவையிலிருந்த ஜனங்களுக்காக, துன்பத்துக்கும், நோய்க்கும், மரணத்துக்கும் உட்பட்டிருந்த பாவமுள்ள அபூரண மனிதவர்க்கத்துக்காக, அவர் தம்முடைய உயிரைக் கொடுத்தார். அப்போஸ்தலனாகிய பவுல், நீதியை மீட்கும்பொருளுக்குரிய ஏற்பாடுடன் இணைத்தார். அவர் எழுதினதாவது: “ஒரே மீறுதலின் பலன் எல்லா மனுஷருக்கும் ஆக்கினைத்தீர்ப்பானதுபோல ஒரே நீதிச்செயலின் பலன் எல்லா மனுஷருக்கும் ஜீவனையளிக்கும் விடுதலைத்தீர்ப்பாயிற்று.” (ரோமர் 5:18, தி.மொ.) இந்த ‘ஒரே நீதிச்செயல்,’ மனிதவர்க்கத்தினர் நேரடியான பொறுப்புள்ளோராக இராத, ஆதாமின் பாவத்தினுடைய அழிவுக்கேதுவான விளைவுகளிலிருந்து கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தினரை மீட்பதற்குரிய கடவுளுடைய வழியாக இருந்தது.
கடவுளுடைய நியாயம், பாவமுள்ள மனிதரை மீட்கவும் அதே சமயத்தில் நீதியான நியமங்களைக் கடைப்பிடிக்கவும் நாடினது. பாவத்தைக் கவனியாமல் விடுவது அநியாயமும் அன்பற்றதுமாக இருந்திருக்கும், ஏனெனில் அது சட்டமீறுதலை ஊக்குவித்திருக்கும். மறுசார்பில், பலனளிப்பு ஒன்றோ அல்லது தண்டனை ஒன்றோ அளிப்பதோடு, கடவுளுடைய நியாயம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தால், மனிதவர்க்கத்தினரின் நிலைமை நம்பிக்கையற்றதாக இருந்திருக்கும். பைபிளின்படி, “பாவத்தின் சம்பளம் மரணம்” மேலும் “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.” (ரோமர் 3:10; 6:23) தமக்குத்தாமேயும் தம்முடைய மிக நேசமான குமாரனுக்கும் பெரும் தனிப்பட்ட பாதிப்புண்டாக, பாவங்களுக்கான பிராயச்சித்த பலி ஒன்றை யெகோவா ஏற்பாடு செய்தார்.—1 யோவான் 2:1, 2, தி.மொ.
கடவுளுடைய நியாயம், நியமத்தை அடிப்படையாகக் கொண்ட அன்போடு (கிரேக்கில், அகாப்பே [a·gaʹpe]) ஒன்றிணைந்து உள்ளதென்று மீட்பின்பலி காட்டுகிறது. மெய்யாகவே, கடவுளுடைய நியாயம் அவருடைய நீதியான நியமங்களின் தீர்ப்பாகும்—கடவுளுடைய ஒழுக்க தராதரத்தின் ஒரு பிரதிபலிப்பாகும். ஆகையால் கடவுள் அதை பயன்படுத்துகையில், தேவ நியாயம் ஆதாரமாகக் கொள்ளும் அன்பு அகாப்பே ஆகும். (மத்தேயு 5:43-48) ஆகையால், யெகோவாவின் நியாயத்தை நாம் உண்மையில் புரிந்துகொண்டால், அவருடைய நியாயத்தீர்ப்புகளில் முழுமையான நம்பிக்கை நமக்கு இருக்கும். ‘சர்வலோக நியாயாதிபதியாக,’ அவர் சரியானதையே எப்போதும் செய்கிறார்.—ஆதியாகமம் 18:25; சங்கீதம் 119:75.
யெகோவாவின் நியாயத்தைப் பார்த்து நடவுங்கள்
“கடவுளைப் பார்த்து நடக்கிறவர்களாகுங்கள்,” என்று பைபிள் நமக்கு அறிவுரை கூறுகிறது. (எபேசியர் 5:1, தி.மொ.) இது, அவருடைய அன்பை மட்டுமல்லாமல், அவருடைய நியாயத்தையும் பார்த்து நடப்பதென்றும் பொருள்படுகிறது. எனினும், நாம் அபூரணராக இருப்பதால், நம்முடைய வழிகள் யெகோவா தேவனுடைய வழிகளைப்போல் அவ்வளவு உயர்ந்தவையாக இல்லை. (ஏசாயா 55:8, 9; எசேக்கியேல் 18:25) ஆகவே, நீதியையும் நியாயத்தையும் நேசிப்போராக நாம் எவ்வாறு நிரூபிக்க முடியும்? “மெய்யான நீதியிலும் பக்தியிலும் கடவுளுக்கிசையச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்”வதன் மூலமே. (எபேசியர் 4:24, தி.மொ.) அப்போது கடவுள் விரும்புவதை நாமும் விரும்புவோம், அவர் வெறுப்பதை நாமும் வெறுப்போம். ‘மெய்யான நீதி,’ வன்செயல்களுக்கும், ஒழுக்கக்கேட்டுக்கும், அசுத்தத்துக்கும், விசுவாசதுரோகத்துக்கும் அறவே விலகியிருக்கிறது. ஏனெனில் பரிசுத்தமானதை இவை குலைக்கின்றன. (சங்கீதம் 11:5; எபேசியர் 5:3-5; 2 தீமோத்தேயு 2:16, 17) மற்றவர்களில் உண்மையான அக்கறை காட்டும்படியும் தேவ நீதி நம்மைத் தூண்டியியக்குகிறது.—சங்கீதம் 37:21; ரோமர் 15:1-3.
மேலும், கடவுளுடைய நியாயத்தின் இரக்கமான இயல்பை நாம் மதித்துணர்ந்தால், ஆவிக்குரிய சகோதரரை அல்லது சகோதரிகளை நியாயந்தீர்க்க நாம் மனம் சாயமாட்டோம். யெகோவா அவர்களைப் புரிந்துகொள்கிற அளவாக நாம் அவர்களைப் புரிந்துகொள்ள எவ்வாறு முடியும்? நம்முடைய சொந்த, ஒருபுற சாய்வு நோக்குநிலையிலிருந்தே அவர்களை நாம் தீர்ப்பு செய்வோம் அல்லவா? இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “நீங்கள் தீர்ப்புப்பெறாதபடி நீங்களும் தீர்ப்புச்செய்யாதிருங்கள். நீங்கள் செய்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்ப்புப்பெறுவீர்கள்; நீங்கள் அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தைக் கவனியாமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? அல்லது, உன் சகோதரனிடத்தில்; நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப் போடுகிறேன், பொறு என்று நீ சொல்வதெப்படி? இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கிறதே. மாயக்காரனே, முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடத் தெளிந்த பார்வையடைவாய்.” (மத்தேயு 7:1-5, தி.மொ.) நம் சொந்த அபூரணங்களைப்பற்றிய நம்முடைய நேர்மையான மதிப்பீடு, அநீதி என்று யெகோவா கருதும் தீர்ப்புகளைச் செய்வதிலிருந்து நம்மைத் தடுத்து வைக்கும்.
நியமிக்கப்பட்ட சபை மூப்பர்கள், வினைமையான தவறுசெய்யப்பட்ட வழக்குகளில், நீதிவிசாரணை தீர்ப்புகளைச் செய்ய கடமைப்பட்டிருக்கின்றனர். (1 கொரிந்தியர் 5:12, 13) அவ்வாறு செய்கையில், கடவுளுடைய நியாயமானது கூடியபோதெல்லாம் இரக்கம் காட்டுவதற்கு நாடுகிறதென்பதை அவர்கள் நினைவில் வைக்கின்றனர். மனந்திரும்பாத பாவிகளின் காரியத்தில் இருப்பதுபோல்—இரக்கம் காட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்றால், அதைக் காட்ட முடியாது. ஆனால், அத்தகைய தவறுசெய்தவர்களை மூப்பர்கள், பழிவாங்கும் மனப்பான்மையுடன் சபையை விட்டு விலக்குவதில்லை. சபைக்குப் புறம்பாக்கின நடவடிக்கைதானே அவரைத் தன் உணர்வுகளுக்கு வரச்செய்யும் என்று அவர்கள் நம்புகின்றனர். (எசேக்கியேல் 18:23-ஐ ஒப்பிடுக.) கிறிஸ்துவின் தலைமையின்கீழ், மூப்பர்கள் நியாயத்தின் சார்பாகச் சேவிக்கின்றனர். இது, “காற்றுக்கு ஒதுக்கைப்போல” அவர்கள் இருப்பதையும் உட்படுத்துகிறது. (ஏசாயா 32:1, 2, தி.மொ.) ஆகையால் அவர்கள், ஒருசார்பற்ற தன்மையையும் நியாயமானத் தன்மையையும் காட்ட வேண்டும்.—உபாகமம் 1:16, 17.
நீதியில் விதை விதையுங்கள்
கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகத்துக்காக நாம் காத்திருக்கையில், கடவுளுடைய தயவை அனுபவித்து மகிழ்வதற்கு நாம் ‘நீதியைத் தேட’ வேண்டும். (செப்பனியா 2:3; 2 பேதுரு 3:13) இந்த எண்ணம், ஓசியா 10:12-ல் (NW) காணப்படுகிற இவ்வார்த்தைகளில் அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது: “நீதியில் உங்களுக்காக விதை விதையுங்கள்; அன்புள்ள தயவுக்கேற்ப அறுவடை செய்யுங்கள். உழத்தகுந்த நிலத்தை உங்களுக்காகப் பயிர்செய்யுங்கள், யெகோவா வந்து நீதியில் போதனையை உங்களுக்குக் கொடுக்கும் வரையில் அவருக்காகத் தேடுவதற்கான காலம் இருக்கையிலேயே.”
அயலானுக்கு அன்பு காண்பித்த சமாரியனைப் பற்றிய தம்முடைய உவமையைக் கொண்டு இயேசு விளக்கிக் காட்டினபடி, நம்முடைய அன்றாட வாழ்க்கையில், ‘நீதியில் விதைகளை விதைப்பதற்கு’ பல வாய்ப்புகள் நமக்கு இருக்கின்றன. நாம் ‘அன்புள்ள தயவுக்கேற்ப அறுவடை செய்யும்படி’ யெகோவா நிச்சயப்படுத்துவார். ‘நியாயத்துக்குரிய பாதையில்’ நாம் விடாது நடந்துகொண்டிருந்தால், ராஜ்ய ஆட்சியின்கீழ் நீதியில் போதனையை நாம் தொடர்ந்து பெற்று வருவோம். (ஏசாயா 40:14) காலம் கடந்து செல்கையில், யெகோவா நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறவர் என்பதை, சந்தேகமில்லாமல், இன்னும் அதிக முழுமையாக நாம் மதித்துணருகிறவர்களாவோம்.—சங்கீதம் 33:4, 5.
[பக்கம் 23-ன் படம்]
அயலானுக்கு அன்பு காட்டின சமாரியன் யெகோவாவின் நியாயத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தான்
[பக்கம் 23-ன் படம்]
நெரிந்த நாணல்களைப்போல் இருந்தவர்களான, துன்பப்பட்ட ஆட்களுக்காக இயேசு மனதுருகினார்