உங்கள் விசுவாசத்தின் மூலம் உலகத்தை நீங்கள் கண்டனம் செய்கிறீர்களா?
“விசுவாசத்தினாலே நோவா . . . தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு ஒரு பேழையைக் கட்டினார்; இந்த விசுவாசத்தின் மூலம் அவர் உலகத்தைக் கண்டனம் செய்தார்.”—எபிரெயர் 11:7, NW.
1, 2. நோவாவின் வாழ்க்கையை ஆராய்வதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்த ஒரே மானிடர்கள் என்ற சிலாக்கியத்தை யெகோவா நோவாவுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும்—எட்டு நபர்களுக்கு—அளித்தார். நோவாவின் காலத்தில் வாழ்ந்த மற்றவர்களின் வாழ்நாட்கள் கடவுள் அவர்களை ஜலப்பிரளயத்தில் அழித்த போது துண்டிக்கப்பட்டன. எனவே, நோவா நம்முடைய பொதுவான மூதாதையாக இருப்பதனால் அவர் காண்பித்த விசுவாசத்துக்காக நாம் அதிக நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
2 நோவாவின் வாழ்க்கையை ஆராய்வதிலிருந்து நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். நோவாவின் சந்ததியில் இருந்த ஜனங்களை அழித்து கடவுள் ஏன் நோவாவுக்கு இரட்சிப்பை அளித்தார் என்று வேத எழுத்துக்கள் நமக்குச் சொல்கிறது. நம்முடைய சந்ததி கடவுளிடமிருந்து இதே போன்ற ஒரு நியாயத்தீர்ப்பை எதிர்ப்படுகிறது என்பதை இந்தத் தெய்வீக பதிவு தெளிவாகக் காண்பிக்கிறது. இதைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: “ஏனெனில், உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.” (மத்தேயு 24:21) நோவாவின் விசுவாசத்தைப் பின்பற்றுவதன் மூலம் அண்மையில் நிகழப் போகும் இந்தத் தற்போதைய துன்மார்க்க ஒழுங்குமுறையின் அழிவைத் தப்பிப்பிழைக்கும் நிச்சயமான நம்பிக்கையை நாம் கொண்டிருக்கலாம்.—ரோமர் 15:4; எபிரெயர் 13:7 ஒப்பிடுக.
3. யெகோவா ஏன் ஜலப்பிரளயத்தைக் கொண்டுவந்தார்?
3 ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டதிலிருந்து ஜலப்பிரளயம் வரையிலுமாக 1,656 ஆண்டுகளின் போது, நன்மை செய்வதற்கான மனச்சாய்வை வெகு சில மானிடரே கொண்டிருந்தனர். ஒழுக்கப் பண்புகள் அடிமட்டமான நிலையை அடைந்தன. “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும் யெகோவா (NW) கண்டார்.” (ஆதியாகமம் 6:5) வன்முறை, இன்பங்களை நாடுவது, மனித உருவெடுத்த தேவதூதர்கள் பெண்களை மணம் செய்து கொண்டு பிறப்பித்த இராட்சத பிள்ளைகளின் தோற்றம் ஆகியவை அந்தப் பண்டையக் கால மனிதவர்க்கத்தின் மீது கடவுளின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு வழிநடத்திய காரணங்களுக்குள் சிலவாகும். நோவாவிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது.” “சர்வலோக நியாயாதிபதி”யாகிய சிருஷ்டிகரின் பொறுமை தீர்ந்து விட்டது.—ஆதியாகமம் 6:13; 18:25.
நோவா கடவுளுடன் நடந்தார்
4. (எ) யெகோவா நோவாவை எவ்விதமாக நோக்கினார்? ஏன்? (பி) கடவுளுடைய நீதி அந்தப் பொல்லாத உலகத்தை அழிப்பதைத் தேவைப்படுத்திய போது, நோவா மற்றும் அவனுடைய குடும்பத்தின் சார்பாக அவருடைய அன்பு எவ்விதம் வெளிக்காட்டப்பட்டது?
4 நோவா தன் நாட்களில் இருந்த ஜனங்களைவிட எவ்வளவு வித்தியாசமானவராக இருந்தார்! “நோவாவுக்கோ, யெகோவாவுடைய (NW) கண்களில் கிருபை கிடைத்தது . . . நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான் [நடந்தார், NW].” (ஆதியாகமம் 6:8, 9) நோவா எவ்வாறு கடவுளுடன் நடந்தார்? நீதியை ஆதரித்துப் பேசுபவராக பிரசங்கிப்பது, விசுவாசத்தோடும் கீழ்ப்படிதலோடும் பேழையைக் கட்டுவது போன்ற சரியான காரியங்களைச் செய்வதன் மூலம். அந்தப் பண்டைய உலகம் முழுவதுமாக கெட்டுப் போயிருந்ததால் அதை அழித்தபோதிலும், கடவுள் “நோவா முதலான எட்டுப் பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணினார்.” (2 பேதுரு 2:5) ஆம், நம்முடைய அன்பான மற்றும் நீதியான கடவுளாகிய யெகோவா நீதிமான்களை துன்மார்க்கரோடே சேர்த்து அழிக்கவில்லை. ஜலப்பிரளயத்துக்குப் பின்பு பூமியை மறுபடியும் நிரப்புவதற்கு நோவாவையும், அவருடைய குடும்பத்தாரையும், அநேக மிருகங்களையும் பாதுகாப்பதற்கு ஒரு பெரிய பேழையைக் கட்டும்படி அவர் நோவாவுக்குக் கட்டளையிட்டார். நோவா “அப்படியே செய்தான்.”—ஆதியாகமம் 6:22.
5. நோவாவின் நீதியையும் விசுவாசத்தையும் வேதாகமம் எவ்விதமாக விவரிக்கிறது?
5 பேழை கட்டி முடிந்த பின்பு, கடவுள் நோவாவிடம் இவ்வாறு சொன்னார்: “நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.” பவுல் பின்வருமாறு விஷயங்களை மொத்தமாக கூறுகிறார்: “விசுவாசத்தினாலே நோவா இன்னும் காணப்படாதிருந்தவைகளைப் பற்றி தெய்வீக எச்சரிப்புப் பெற்ற பின்பு, தேவ பயத்தைக் காண்பித்து, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு ஒரு பேழையைக் கட்டினார்; இந்த விசுவாசத்தின் மூலம் அவர் உலகத்தைக் கண்டனம் செய்தார், மற்றும் விசுவாசத்தின்படியான நீதிக்குச் சுதந்தரவாளியானார்.”—ஆதியாகமம் 7:1; எபிரெயர் 11:7, NW.
6. விசுவாசத்தின் மூலம் நோவா எவ்விதமாக அவருடைய நாளிலிருந்த உலகத்தைக் கண்டனம் செய்தார்?
6 நோவாவுக்கு மேலோங்கிய விசுவாசம் இருந்தது. அந்தச் சந்ததியை அழிப்பதைப் பற்றி கடவுள் சொல்லியிருந்ததை அவர் நம்பினார். யெகோவாவுக்கு மனவருத்தம் உண்டாக்கக்கூடாது என்ற ஆரோக்கியமான பயத்தை நோவா கொண்டிருந்தார், கடவுள் கொடுத்த கட்டளையின்படியே கீழ்ப்படிதலோடு பேழையைக் கட்டினார். மேலும், நீதியைப் பிரசங்கிப்பவராக, வரப்போகும் அழிவைக் குறித்து நோவா மற்றவர்களுக்குச் சொன்னார். அவர்கள் அந்த வார்த்தைகளைக் கேளாமற் போனாலும், அந்தத் துன்மார்க்க உலகம் தன்னை “அதனுடைய அச்சுக்குள் திணித்துவிட” அவர் அனுமதிக்கவில்லை. (ரோமர் 12:2, பிலிப்பிஸ்) மாறாக, தன்னுடைய விசுவாசத்தின் மூலம், நோவா உலகத்தை அதனுடைய துன்மார்க்கத்துக்காக கண்டனம் செய்தார், மேலும் அது அழிவுக்குத் தகுதியானது என்பதையும் காண்பித்தார். அவருடைய கீழ்ப்படிதலும், நீதியான செயல்களும் தன்னையும் தன் குடும்பத்தாரையும் தவிர மற்றவர்களும் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள மனமுள்ளவர்களாயிருந்திருந்தால் தப்பிப்பிழைத்திருப்பார்கள் என வெளிக்காட்டியது. உண்மையிலேயே, தன்னுடைய சொந்த அபூரண மாம்சம், தன்னைச் சுற்றியிருக்கும் துன்மார்க்க உலகம், சாத்தான் ஆகியவற்றிலிருந்து வரும் அழுத்தங்களின் மத்தியிலும் கடவுளைப் பிரியப்படுத்தும் ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்பதை நோவா நிரூபித்தார்.
கடவுள் ஏன் இந்த ஒழுங்குமுறையை அழிப்பார்
7. நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோம் என்பது நமக்கு எப்படித் தெரியும்?
7 இந்த இருபதாம் நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டும், உலகம் துன்மார்க்கத்துக்குள் மேலும் ஆழமாக அமிழ்ந்து விடுவதைக் கண்டிருக்கிறது. முக்கியமாக முதல் உலக மகா யுத்தம் முதற்கொண்டு இது உண்மையாய் இருந்திருக்கிறது. பால் சம்பந்தமான ஒழுக்கக்கேடு, குற்றச் செயல், வன்முறை, யுத்தம், பகை, பேராசை, இரத்தத்தை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற இப்பேர்ப்பட்ட காரியங்களுக்குள் மனிதவர்க்கம் அவ்வளவு ஆழ்ந்துவிட்டிருப்பதால், சரியான காரியங்களை நேசிப்பவர்கள் நிலைமைகள் இதைக் காட்டிலும் மோசமடையக் கூடுமா என யோசிக்கின்றனர். என்றபோதிலும், நம்முடைய சந்ததியில் துன்மார்க்கம் உச்ச அளவுக்கு அதிகரிக்கும் என்பதை பைபிள் முன்னறிவித்தது. நாம் “கடைசி நாட்களில்” இருக்கிறோம் என்பதற்குக் கூடுதலான அத்தாட்சியை கொடுக்கிறது.—2 தீமோத்தேயு 3:1–5; மத்தேயு 24:34.
8. பாவத்தின் உணர்வு பற்றி சிலர் என்ன சொல்லியிருக்கின்றனர்?
8 இன்று பெரும்பாலனவர்களின் மனங்களில் பாவத்தைப் பற்றிய பொதுக்கருத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 40 வருடங்களுக்கு முன்பு போப் பயஸ் XII சொன்னார்: “பாவத்தைப் பற்றிய எல்லா உணர்வையும் இழந்துவிட்டிருப்பதே இந்த நூற்றாண்டின் பாவமாகும்.” தற்போதைய சந்ததி பாவத்தையும், குற்றத்தையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. பாவத்துக்கு என்ன ஆனது? (Whatever Became of Sin?) என்ற தன்னுடைய புத்தகத்தில் டாக்டர் கார்ல் மென்னிங்கர் இவ்வாறு குறிப்பிட்டார்: “‘பாவம்’ என்ற வார்த்தையே பெரும்பாலும் மறைந்துவிட்டிருக்கிறது—அந்த வார்த்தையும் அதோடு அதனுடைய கருத்தும் . . . ஏன், எவரும் இனிமேலும் பாவம் செய்வதே இல்லையா?” சரிக்கும் தவறுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக அறிந்து கொள்ளும் திறமையை அநேகர் இழந்துவிட்டிருக்கின்றனர். ஆனால் நாம் இதைக் குறித்து ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால் “முடிவு காலத்தில்” ‘அவருடைய வந்திருத்தலின் அடையாளத்தைப்’ பற்றி கலந்தாலோசிக்கும் போது இயேசு இப்படிப்பட்ட நிலைமைகள் உருவாவதை முன்னறிவித்தார்.—மத்தேயு 24:3; தானியேல் 12:4.
நோவாவின் நாளில் வைக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் மாதிரி
9. இயேசு எவ்விதமாக நோவாவின் நாளை தாம் வந்திருத்தலின் போது நடக்க இருந்தவற்றோடு ஒப்பிட்டார்?
9 1914-ல் ஆரம்பமாகும் ராஜ்ய வல்லமையில் அவர் வந்திருத்தலின் போது என்ன நடக்கும் என்பதற்கும் நோவாவின் நாளின் சம்பவங்களுக்கும் இடையே ஓர் இணைப்பொருத்தத்தை இயேசு விளக்கினார். அவர் இவ்வாறு சொன்னார்: “நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் [இயேசு] வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள் [கவனத்திற்கு எடுக்காதவர்களாயிருந்தார்கள், NW]. அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.”—மத்தேயு 24:37–39.
10. எவ்விதமாக மக்கள் பொதுவில் கிறிஸ்துவின் வந்திருத்தலோடு சம்பந்தப்பட்ட குறிப்பிடத்தக்க சம்பவங்களைக் குறித்து உணராதிருக்கிறார்கள்?
10 ஆம், நோவாவின் நாளைப் போன்றே இன்றும் ஜனங்கள் கவனத்திற்கு எடுக்காதிருக்கின்றனர். அன்றாட வாழ்க்கை மற்றும் சுயநல நாட்டங்கள் போன்றவற்றால் அதிக வேலையாயிருப்பவர்கள் தற்போதைய நிலைமைகள் கடந்த காலங்களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வித்தியாசப்படுகின்றன என்பதையும் முடிவின் காலத்தை அடையாளப்படுத்தும் காரியங்களோடு சரியாக பொருந்துகிறது என்பதையும் கண்டுணர மறுக்கின்றனர். பரலோகத்தில் மேசியானிய ராஜாவாக இயேசு வந்திருத்தல் 1914-ல் ஆரம்பமானது என்றும் “காரிய ஒழுங்கு முறையின் முடிவு”க்கு இணையாக செல்கிறது என்றும் பல வருடங்களாக யெகோவாவின் சாட்சிகள் நவீன கால சந்ததிக்கு சொல்லிக்கொண்டு வந்திருக்கின்றனர். (மத்தேயு 24:3) அநேக ஜனங்கள் ராஜ்ய செய்தியை ஏளனஞ் செய்கின்றனர், ஆனால் இதுவும்கூட முன்னறிவிக்கப்பட்டது, அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு எழுதினார்: “முதலாவது நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.”—2 பேதுரு 3:3, 4.
11. மகா உபத்திரவம் வரும்போது இன்றைய சந்ததி ஏன் சாக்குப்போக்கு இன்றி இருப்பர்?
11 என்றபோதிலும் இன்றைய சந்ததி மிகுந்த உபத்திரவம் வரும் போது சொல்வதற்குச் சாக்குப்போக்கு இன்றி இருப்பர். ஏன்? ஏனென்றால் பண்டைய கால தெய்வீக நியாயத்தீர்ப்புகளின் பைபிள் பதிவுகள் நம்முடைய நாளில் கடவுள் என்ன செய்வார் என்பதற்கு மாதிரியை வைக்கின்றன. (யூதா 5–7) அவர்களுக்கு முன்னால் நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கும் பைபிள் தீர்க்கதரிசனம் காலப்போக்கில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை முடிவாகக் காண்பிக்கிறது. யெகோவாவின் சாட்சிகளின் பிரசங்க வேலையையும், நோவாவைப் போன்ற அவர்களுடைய உத்தமத்தன்மையின் பதிவையும் இந்தச் சந்ததி தனக்கு முன்பாக கொண்டிருக்கிறது.
12 இந்த உண்மைகளை கவனத்திற்கு எடுக்காதவர்களுக்கு என்ன நேரிடும் என்பதை பேதுரு விளக்குகிறார். இயேசுவைப் போன்று, இந்த அப்போஸ்தலனும் நோவாவின் நாளில் என்ன நடந்தது என்பதை குறிப்பிடுவதன் மூலம் இவ்வாறு சொல்கிறார்: “பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவ பக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்து போகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.”—2 பேதுரு 3:5–7.
13. பெருஞ் சிறப்பு வாய்ந்த சம்பவங்கள் முன்னாலிருப்பதை முன்னிட்டுப் பார்க்கையில், பேதுருவிடமிருந்து வரும் என்ன புத்திமதிக்கு செவிசாய்க்க வேண்டும்?
13 கடவுளின் இந்த நிச்சயமான நியாயத்தீர்ப்பு நம்மை எதிர் நோக்கிக் கொண்டிருக்கையில், கேலி செய்பவர்களால் நாம் ஏமாற்றப்படவோ அல்லது பயமுறுத்தப்படவோ அனுமதிக்கக்கூடாது. நாம் அவர்களுடைய முடிவில் பங்கு கொள்ள வேண்டிய அவசியமில்லை. பேதுரு இவ்வாறு புத்திமதி கூறுகிறார்: “இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.”—2 பேதுரு 3:11–13.
தப்பிப்பிழைப்பதற்கு நோவாவின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
14. நம்மைநாமே பகுத்து ஆராய்ந்து பார்க்க என்ன கேள்விகள் நமக்கு உதவக்கூடும்?
14 நோவாவும் அவருடைய குடும்பமும் தப்பிப்பிழைப்பதற்கான நபர்களாக ஆவதற்கும், இருப்பதற்கும் எதிர்ப்பட்ட அதே சவால்களை இன்று நாம் எதிர்ப்படுகிறோம். நோவாவைப் போன்று யெகோவாவின் சாட்சிகள் நற்கிரியைகளினால் ஆதரிக்கப்பட்ட தங்களுடைய விசுவாசத்தின் மூலம் உலகத்தைக் கண்டனம் செய்கின்றனர். ஆனால் நம்மில் ஒவ்வொருவரும் நம்மையே இவ்வாறு கேட்டுக் கொள்ளலாம்: ‘தனிப்பட்டவிதமாய் நான் எவ்வாறு இருக்கிறேன்? மிகுந்த உபத்திரவம் நாளைக்கு வருமென்றால், தப்பிப்பிழைப்பதற்கு தகுதியுள்ளவனாக கடவுள் என்னை நியாயந்தீர்ப்பாரா? “தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்த” நோவாவைப் போன்று உலகத்திலிருந்து வித்தியாசப்பட்டவனாக இருக்க எனக்கு தைரியம் இருக்கிறதா? நான் பேசும், செயல்படும் அல்லது உடுத்தும் விதம் எனக்கும் ஓர் உலகப்பிரகாரமான நபருக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைச் சொல்வதற்கு சில சமயங்களில் கடினமாக இருக்கிறதா?’ (ஆதியாகமம் 6:9) இயேசு தம் சீஷர்களைப் பற்றி இவ்வாறு சொன்னார்: “நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல.”—யோவான் 17:16; 1 யோவான் 4:4–6 ஒப்பிடவும்.
15. (எ) 1 பேதுரு 4:3, 4-ன் பிரகாரம், நம்முடைய முந்தைய உலகப்பிரகாரமான சிந்தனையையும் நடத்தையையும் நாம் எவ்வாறு கருதவேண்டும்? (பி) உலகப்பிரகாரமான நம்முடைய முன்னாள் நண்பர்கள் நம்மைக் குறைகூறுவார்களேயானால், நாம் என்ன செய்ய வேண்டும்?
15 பேதுரு இவ்வாறு புத்திமதி கொடுக்கிறார்: “சென்ற வாழ்நாட்காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்து கொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம் பண்ணி, களியாட்டுச் செய்து, வெறி கொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்து வந்தோம். அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.” (1 பேதுரு 4:3, 4) இனிமேலும் அவர்களோடு நடவாமல் கடவுளோடு நீங்கள் நடக்கிறதினால் உங்களுடைய முன்னாள் நண்பர்கள் உங்களைப் பழிதூற்றி பேசக்கூடும். ஆனால், நோவாவைப் போன்று, உங்களுடைய விசுவாசத்தின் மூலமும், தாழ்மையோடு செய்யப்படும் நற்கிரியைகளின் மூலமும் நீங்கள் அவர்களைக் கண்டனம் செய்யலாம்.—மீகா 6:8.
16. கடவுள் நோவாவை எவ்விதமாக கருதினார்? நம்முடைய எண்ணங்களையும் நடத்தையையும் ஆராய்ந்து பார்க்க என்ன கேள்விகள் நமக்கு உதவக்கூடும்?
16 கடவுள் நோவாவை ஒரு நீதியுள்ள மனிதனாக கருதினார். அந்த விசுவாசமுள்ள முற்பிதாவுக்கு “யெகோவாவுடைய (NW) கண்களில் கிருபை கிடைத்தது.” (ஆதியாகமம் 6:8) கடவுளுடைய தராதரங்களின் வெளிச்சத்தில் உங்களுடைய எண்ணங்களையும் நடத்தையையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்கும் போது, நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றையும் நீங்கள் போய்க்கொண்டிருக்கும் எல்லா இடங்களையும் அவர் அங்கீகரிக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இப்போது அதிகப் பரவலாகக் காணப்படும் தரங்குறைவான பொழுதுபோக்குகளில் நீங்கள் சில சமயங்களில் பங்கு கொள்கிறீர்களா? நாம் தூய்மையான, நலந்தரும் மற்றும் கட்டியெழுப்பும் காரியங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (பிலிப்பியர் 4:8) ‘நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறிவதற்காக’ நீங்கள் ஊக்கத்தோடு கடவுளுடைய வார்த்தையைப் படிக்கிறீர்களா? (எபிரெயர் 5:14) கெட்ட கூட்டாளிகளை ஒதுக்கிவிட்டு, கிறிஸ்தவக் கூட்டங்களிலும் மற்ற சமயங்களிலும் யெகோவாவின் உடன் வணக்கத்தாருடைய கூட்டுறவை நீங்கள் அருமையானதாக போற்றுகிறீர்களா?—1 கொரிந்தியர் 15:33; எபிரெயர் 10:24, 25; யாக்கோபு 4:4.
17. யெகோவாவின் சாட்சிகளாக நாம் எவ்விதமாக நோவாவைப் போல இருக்கலாம்?
17 பேழையை கட்டி முடித்ததாக அறிக்கை செய்த பிறகு, வேதாகமம் இவ்வாறு சொல்கிறது: “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.” (ஆதியாகமம் 6:22) அந்தத் தெய்வீக மனிதன் யெகோவாவுக்கு ஒரு சாட்சியாகப் பிரசங்கிப்பதிலும் ஊக்கமாக இருந்தான். நோவாவைப் போன்று, நீதியை ஒழுங்காக பிரசங்கிப்பவராக, சரியானதைச் சிபாரிசு செய்வதில் விடாபற்று கொண்டவராக நீங்கள் இருக்கலாம். வெகு சிலரே செவிகொடுத்துக் கேட்டாலும், இந்தத் துன்மார்க்க உலகின் முடிவை எச்சரிப்பதில் விடாமுயற்சியுடன் செயல்படுகிறவர்களாய் இருங்கள். முடிவுக்கு முன்பு சீஷராக்கும் வேலையை செய்து முடிப்பதற்கு உடன் விசுவாசிகளோடு ஒற்றுமையாய் வேலை செய்யுங்கள்.—மத்தேயு 28:19, 20.
18. மகா உபத்திரவத்தின் போது யார் தப்பிப்பிழைக்க வேண்டும் என்பதை எதன் அடிப்படையில் யெகோவா நிர்ணயிக்கிறார்?
18 நோவாவின் நாளில் தாம் செய்தது போல் அதே நீதியும் நியாயமுமான தராதரங்களைப் பொருத்தி, யார் தப்பிப்பிழைக்க வேண்டும், மிகுந்த உபத்திரவத்தின் போது யார் அழிய வேண்டும் என்பதை இப்போது கடவுள் நிர்ணயிக்கிறார். தற்போதைய பிரிக்கும் வேலையை, ஒரு மேய்ப்பன் வெள்ளாடுகளை செம்மறியாடுகளிலிருந்து பிரிப்பதற்கு இயேசு ஒப்பிட்டார். (மத்தேயு 25:31–46) சுயநல விருப்பங்கள், பொழுது போக்குகள் ஆகியவற்றின் பேரில் தங்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருப்பவர்கள் இந்தப் பழைய உலகம் முடிவடைவதை விரும்புவதில்லை, அவர்கள் தப்பிப்பிழைக்கவும் மாட்டார்கள். ஆனால் இந்த உலகத்தின் அசுத்தத்தில் ஈடுபடுத்திக் கொள்வதைத் தவிர்க்க விரும்புபவர்கள், கடவுள் பேரில் பலமான விசுவாசத்தைக் காத்துக் கொள்பவர்கள் தொடர்ந்து ராஜ்ய செய்தியைப் பிரசங்கித்து யெகோவாவின் வரப்போகும் நியாயத்தீர்ப்பை எச்சரித்துக் கொண்டிருப்பவர்கள், தப்பிப்பிழைப்பவர்களாக தெய்வீக ஆதரவை அனுபவிப்பர். இயேசு இவ்வாறு சொன்னார்: “அப்பொழுது, இரண்டு பேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.”—மத்தேயு 24:40, 41; 2 தெசலோனிக்கேயர் 1:6–9; வெளிப்படுத்துதல் 22:12–15.
நோவாவுடன் ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்
19. ஏசாயாவும் மீகாவும் கடைசி நாட்களுக்கு என்ன கூட்டிச்சேர்ப்பை முன்னறிவிக்கின்றனர்?
19 இணையான தீர்க்கதரிசனங்கள் மூலம், கடவுளின் தீர்க்கதரிசிகளான ஏசாயாவும் மீகாவும் கடைசி நாட்களில் என்ன நடக்கும் என்பதை விவரித்தனர். இன்று நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கும் காரியங்களை அவர்கள்—நேர்மையான இருதயமுள்ள திரளான ஜனங்கள் பழைய உலகத்திலிருந்து வெளியே வருவதையும், மெய் வணக்கத்தின் அடையாளப்பூர்வமான மலைக்கு ஏறிச்செல்வதையும்—அவர்கள் முன்னமே கண்டனர். மற்றவர்களுக்கு அவர்கள் பின்வரும் அழைப்பை அளிக்கின்றனர்: “நாம் யெகோவாவின் (NW) பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்.” (ஏசாயா 2:2, 3; மீகா 4:1, 2) இந்தச் சந்தோஷமான கூட்டத்தோடு நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்களா?
20. விசுவாசத்தின் மூலம் உலகத்தைக் கண்டனம் செய்கிறவர்களால் என்ன ஆசீர்வாதங்கள் அனுபவித்துக் களிக்கப்படும்?
20 தங்களுடைய விசுவாசத்தினால் உலகத்தைக் கண்டனம் செய்பவர்கள் அனுபவிக்கப் போகும் ஆசீர்வாதங்களையும்கூட ஏசாயாவும் மீகாவும் குறிப்பிட்டனர். அவர்கள் நடுவே மெய் சமாதானமும் நீதியும் நிலவும், அவர்கள் இனிமேலும் யுத்தத்தை கற்க மாட்டார்கள். யெகோவாவிடமிருந்து பெறப்போகும் சுதந்தரத்தைப் பற்றி நிச்சய நம்பிக்கையை அவர்கள் கொண்டிருப்பர், மேலும் ‘அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன் தன் அத்திமரத்தின் நிழலிலும் உட்காருவான்.’ ஆனால் ஒவ்வொரு நபரும் ஒரு திடமான தீர்மானத்தைச் செய்ய வேண்டும், ஏனென்றால் இரண்டு வழிகள் சாத்தியமானதாக இருக்கக்கூடும் என்று மீகா காண்பிக்கிறார்: “சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக் கொண்டு நடப்பார்கள்; ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாமத்தைப் பற்றிக் கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.”—மீகா 4:3–5; ஏசாயா 2:4.
21. பூமியின் மீது நித்திய ஜீவனின் மகத்தான ஆசீர்வாதத்தில் நீங்கள் எவ்விதம் பங்குகொள்ளலாம்?
21 மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை வேதாகமம் தெளிவாகக் காண்பிக்கிறது: பலமான விசுவாசம். நோவாவுக்கு அப்படிப்பட்ட விசுவாசம் இருந்தது, ஆனால் உங்களுக்கு அது இருக்கிறதா? அப்படியிருந்தால், நீங்களும் அவரைப் போலவே “விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியாக” ஆவீர்கள். (எபிரெயர் 11:7) நோவா தன்னுடைய சந்ததியின் மீது வந்த கடவுள் கட்டளையிட்ட அழிவை தப்பிப்பிழைத்தார். ஜலப்பிரளயத்துக்குப் பிறகு 350 வருடங்கள் அவர் வாழ்ந்தது மட்டுமல்லாமல், பூமியில் என்றென்றுமாக வாழும் எதிர்பார்ப்புடன் உயிர்த்தெழுப்பப்படவும் போகிறார். என்னே ஒரு மகத்தான ஆசீர்வாதம்! (எபிரெயர் 11:13–16) நோவாவோடும், அவருடைய குடும்பத்தோடும், நீதியை நேசிக்கும் மற்ற ஆயிரக்கணக்கானவர்களோடும் அந்த ஆசீர்வாதத்தில் நீங்கள் பங்கு கொள்ளலாம். எவ்வாறு? முடிவு வரை சகித்திருப்பதன் மூலமும் உங்களுடைய விசுவாசத்தின் மூலம் உலகத்தைக் கண்டனம் செய்வதன் மூலமும். (w89 10/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ நோவாவின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்பது ஏன் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது?
◻ தங்களுடைய அழிவுக்கு வழிநடத்தும் வகையில், இந்தச் சந்ததியிலுள்ள ஆட்கள் எதை கவனத்திற்கு எடுக்காதவர்களாக இருக்கிறார்கள்?
◻ நோவாவைப் போன்று நாம் எவ்விதமாக இந்த உலகத்தைக் கண்டனம் செய்யலாம்?
◻ நீதியின் பிரசங்கியாக நோவாவைப் போல நாம் எவ்விதம் இருக்கலாம்?
12. நோவாவின் நாளைய உலக அழிவைப் பேதுரு எவ்வாறு ‘இப்பொழுது இருக்கிற வானங்கள் மற்றும் பூமியின்’ மீது வரயிருப்பதோடு ஒப்பிடுகிறார்?