கடவுள் எப்போதாவது அநீதியைக் குறித்து ஏதாவது செய்வாரா?
“அது சற்றும் நியாயமில்லை.” அந்த இளம் மாணவி வெளிப்படையாக நியாயம் கேலிக்குரியதானதை அனுபவத்தில் பார்த்தபின்பு சீற்றம் நிறைந்தவளாய்த் தெளிவாகவே நிலைகுலைந்து போயிருந்தாள். “உண்மையில் ஒரு கடவுள் இருந்தால், இப்பேர்ப்பட்ட ஓர் அநியாயத்தை அவர் எவ்விதமாக அனுமதிக்கமுடியும்?” என்பதாக அவள் தொடர்ந்து சொன்னாள். இந்த இளம் பெண்ணைப் பார்த்து உங்களால் இரக்கப்பட்டிருக்கமுடியுமா? ஒருவேளை இருக்கலாம். ஆனால் அவளுடைய ஆட்சேபத்துக்கு உங்களால் பதிலளித்திருக்கவும்கூட முடியுமா?
ஒரு சிறு பிள்ளையாக இருந்தபோது, நீங்கள் அநியாயமாக நடத்தப்பட உங்கள் பெற்றோர் அனுமதித்திருக்கிறார்கள் என்பதாகச் சில சமயங்களில் நீங்கள் நினைத்திருக்கக்கூடும். ஆனால் மேலீடாகத் தோன்றும் அந்த அநியாயம் அவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கவில்லை, இல்லையா? அதேவிதமாகவே, அநியாயத்தைக் கடவுள் அனுமதித்திருப்பது எவ்வகையிலும் அவர் உண்மையில் இல்லை என்பதை நிரூபிப்பதில்லை.
ஆனால் இது முற்றிலும் வித்தியாசமானக் காரியம் என்பதாக அந்த இளம் மாணவி பதிலளித்தாள். அபூரணமான ஒரு மனித தகப்பன் ஓரளவு அவன்தானே அநியாயமாகக் கூட இருக்கக்கூடும் என்பதாக அவள் சுட்டிக் காண்பித்தாள். அல்லது எல்லா உண்மைகளையும் அறிந்திராத காரணத்தால், அதைக் கண்டபோது அந்த அநியாயத்தை உணராமல் இருக்கலாம். மேலுமாக, மனித குறைபாடுகளின் காரணமாக அவன் உண்மையில் பார்த்த அநியாயத்தைக் குறித்து எதையும் செய்ய திறனற்றவராக இருக்கலாம். இவை எதுவுமே, எல்லாம் அறிந்த, எல்லா வல்லவராக இருக்கும் நீதியான ஒரு கடவுளுக்குப் பொருந்தாது என்பதாக அவள் தர்க்கம் செய்தாள்.
அநீதியின் அனுமதி, தெய்வீகக் குணாதிசயங்களுக்கு வெறுமென ஒத்ததாக இல்லை என்பதாக நீங்களும்கூட நினைக்கலாம். என்றபோதிலும் யாவற்றையும் கடந்த அவருடைய ஞானத்தில், ஒரு காலப்பகுதிக்கு அநீதியை அனுமதிப்பதற்கு அவருக்கு ஒரு நம்பத்தக்க காரணம் இருப்பதாக இருக்குமா?
பைபிள் எழுத்தாளர்கள் கடவுளை “நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படு”கிறவராகக் கருதினார்கள். “அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்” என்று எழுதினான் மோசே.—சங்கீதம் 33:5; உபாகம் 32:4; யோபு 37:23.
யெகோவாவை நியாயக்கேட்டில் மகிழ்ச்சியடையாத ஒரு நீதியுள்ள கடவுள் என்பதாகக் கருதியதைத் தவிர, பைபிள் எழுத்தாளர்கள் அதை ஒரு நாள் அவர் ஒழித்துப்போடுவார் என்பதை ஒப்புக்கொள்கிறவர்களாக இருந்தார்கள். ஏசாயா உதாரணமாக, இந்த நிலைமையை முன்னறிவித்தான்: “இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள். வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும் செழிப்பான வயல்வெளியிலே நீதிதங்கித்தரிக்கும்.” (ஏசாயா 32:1, 16) ஆனால் எப்போது? கடவுள் உலகிலிருந்து அநீதியை ஒழித்துக்கட்ட விரும்பினால், முதலிடத்தில் ஏன் அதை அவர் அனுமதித்தார்?
அநீதி—ஏன் அனுமதிக்கப்பட்டிருக்கிறது?
பிரபஞ்சத்தில் அநீதியே இல்லாதிருந்த ஒரு சமயம் இருந்தது. பிசாசாகிய சாத்தானுடைய அழுத்தத்தின் கீழ், ஆதாமும் ஏவாளும் கலகம் செய்தது முதற்கொண்டுதானே மனிதவர்க்கத்துக்கு அநீதி தெரியவரலாயிற்று. கலகம் செய்த சமயத்தில் சாத்தான் உடனடியாக அழிக்கப்படவில்லை. தம்முடைய சொந்த நல்ல நோக்கத்திற்காகவே கடவுள், மனிதன் அநீதங்களைச் செய்வதை அனுமதிக்கும் ஒரு காலப்பகுதியை அனுமதித்தார். அவரிடம் பக்தியுள்ளவர்கள் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பார்களா என்பதைச் சோதிப்பதற்காக இது இருக்கும். உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்களாக இருக்க அவர்கள் தெரிந்துகொள்வது, கடவுளுக்கு எதிராக எல்லா மனித சிருஷ்டிகளையும் திருப்பிவிடமுடியும் என்ற சாத்தானின் திறமையை மறுப்பதாக இருக்கும். கடவுளுடைய அரசுரிமை இவ்விதமாக நியாயநிரூபணம் செய்யப்படுகையில் சாத்தானின் கிரியைகள் அழிக்கப்படும், எல்லா அநீதிகளும் அகற்றப்படும்.
இதற்கிடையில், அநீதியாக நடந்துகொள்வதிலிருந்து கடவுள் மக்களை வலுக்கட்டாயமாகத் தடைசெய்வாரேயானால், அவர் தெரிவு செய்யும் உரிமையை அவர்களிடமிருந்து பறித்துக்கொள்பவராக இருப்பார். தவிர மக்கள் மற்றவர்களுடைய தவறான செயல்களின் அநீதியான விளைவுகளை உணர அனுமதிப்பதன் மூலம், தெய்வீக சட்டங்களுக்கு ஏதிராக ஆதாம் ஏவாள் அநியாயமாக கலகஞ்செய்து, அதற்குப் பதிலாக தங்களுடைய சொந்த குறையுள்ள தராதரங்களை ஏற்படுத்திக்கொண்டது எத்தனை கேடாக இருந்தது என்பதை கடவுள் விளக்குகிறார். மனிதவர்க்கம் விதைத்ததை அறுக்க அனுமதிப்பதன் மூலம், கடவுள் அவருடைய வழியில் காரியங்களைச் செய்வதன் மேன்மையை, நேர்மையான இருதயமுள்ள ஆட்கள் உணர உதவி செய்கிறார்.—எரேமியா 10:23; கலாத்தியர் 6:7.
மேலுமாக, தனிநபர்கள் செய்யும் நீதியான அல்லது அநீதியான செயல்கள் வெளிப்படுத்தும் சான்றை அளிக்கின்றன. முழு நீதியும் திரும்ப நிலைநாட்டப்பட்ட புதிய உலகில் பூமியின் மீது வாழ தகுதியுள்ளவர்கள் யார் என்ற தீர்ப்பை வழங்குவதற்கு இந்தச் செயல்கள் கடவுளுக்கு திருத்தமான ஓர் அடிப்படையை அளிக்கின்றன. இதைக் குறிப்பாய் உணர்த்துவதாய், நாம் வாசிப்பதாவது: “துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான்.”—எசேக்கியேல் 18:21.
அநீதி எப்போது முடிவுக்கு வரும்?
மனிதவர்க்கத்தோடு யெகோவா தேவனின் செயல்தொடர்புகள் எப்போதும் நீதியாகவும் அன்புள்ள தயவினால் தனிப்படுத்திக் காண்பிக்கப்பட்டுமிருக்கின்றன. இதை விளக்குவதாய், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியனான ஆபிரகாம், ஏதோ ஒரு காரியம் ஏன் சம்பவிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமலிருந்தபோது, கடவுளைக் குறித்து அவன் சொன்னதாவது: “துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ.” (ஆதியாகமம் 18:25) கிறிஸ்துவின் வருகையோடு கடவுளுடைய குணாதிசயங்களாகிய நீதியும் அன்புள்ள தயவும் பெரிதாக்கப்பட்டன. கிறிஸ்து இயேசுவின் மூலம் மீட்பின் கிரய பலி ஏற்பாடு யூதர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் ஆகிய இரு சாராருக்குமே நித்திய ஜீவனையடையும் வழியை திறந்து வைத்தது. இது அப்போஸ்தலனாகிய பேதுருவை பின்வருமாறு சொல்ல வழிநடத்தியது: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
கடவுளுடைய மேசியானிய ராஜா தம்முடைய ஆட்சியை ஆரம்பித்துவிட்டார் என்றும் பரிபூரண அளவில் நம்முடைய பூமிக்கு நீதி திரும்ப நிலைநாட்டப்படப்போகும் காலம் சமீபமாயிருக்கிறது என்றும் அறிவிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.a அந்த ராஜா தற்போதைய அநீதியான உலகை அழித்து அதனுடைய காணக்கூடாத கடவுளாகிய பிசாசாகிய சாத்தானின் வல்லமையை முறித்துப் போடுகையில், இது நிறைவேற்றமடையும். இது சீக்கிரத்தில் பொதுவாக அர்மகெதோன் என்றழைக்கப்படும் “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய மகா நாளில் நடக்கும் யுத்தத்தில்” சம்பவிக்கும் என்று பைபிள் காண்பிக்கிறது.—வெளிப்படுத்துதல் 16:14, 16.
“கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதரா”யில்லை, ஆகவே அர்மகெதோன் நீதியான ஒரு யுத்தமாக இருக்கும். (ரோமர் 3:5) அதற்குப் பின்பு கிறிஸ்து இயேசுவும் அப்போஸ்தலர்கள் போன்ற அவருடைய உடன் அரசர்களும் பரலோகத்திலிருந்து ஆயிரம் வருடங்களுக்கு ஆளுகைச் செய்வர். (வெளிப்படுத்துதல் 20:4) கடந்த காலத்தில் அநீதியை அனுபவித்திருக்கும் இலட்சக்கணக்கான ஆட்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக பரிபூரண நீதியை அனுபவிப்பதற்காக மனிதவர்க்கத்தின் ஆதி வீடாகிய பூமியின் மீது நீதியுள்ள ஓர் ஒழுங்கிற்குள் உயிர்த்தெழுப்பப்படுவர்.
“தேவனிடத்தில் அநீதி உண்டென்று சொல்லலாமா?”
அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளுடைய செயல்தொடர்புகளில் ஒன்றைக் குறித்து அவ்விதமாகக் கேட்டான். பதில்? “சொல்லக்கூடாதே” என்று பவுல் எழுதினான். மனிதர்களை, கோபாக்கினைக்கு அல்லது இரக்கத்துக்குப் பாத்திரராக ஒரு குயவனால் வடிவங்கொடுக்கப்பட்ட களிமண்ணுக்கு ஒப்பிட்டு பவுல் இவ்விதமாக விளக்கினான்: “தேவன் தம்முடைய கோபத்தை காண்பிக்கவும், தம்முடைய வல்லமையைத் தெரிவிக்கவும் தயாராக இருந்தபோதிலும், தம்மை கோபப்படுத்துகிற ஆட்கள் அழிக்கப்பட எத்தனை பாத்திராக இருந்தபோதிலும் பொறுமையோடே சகித்துக் கொள்கிறார். அவர் இரக்கம் காண்பிக்க விரும்பும் அந்த மற்ற ஆட்களுக்கு, தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தை வெளிப்படுத்த விரும்புவதால் இவர்களை சகித்துக்கொள்கிறார்.”—ரோமர் 9:14, 20–24, எருசலேம் பைபிள்.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்த இளம் பெண்ணைப் போல, பொதுவில் அநீதியை அல்லது ஏதோ குறிப்பிட்ட தவறை கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதை நீங்கள் சில சமயங்களில் காணக்கூடும். ஆனால் அவ்விதமாகச் செய்வதில் அவருடைய பொறுமையையும் ஞானத்தையும் கேள்விக் கேட்க அவர் கையினால் வார்க்கப்பட்டவர்களாகிய நாம் யார்? யெகோவா தேவன் யோபுவிடம் சொன்னார்: “நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என் மேல் குற்றஞ்சுமத்துவாயோ?”—யோபு 40:8.
அவ்விதமாகச் செய்த குற்றமுள்ளவர்களாக இருக்க ஒருபோதும் நாம் விரும்பமாட்டோம். மாறாக, அநீதி இன்னும் நம்மோடு இருந்தபோதிலும்கூட, நீதியின் கடவுள் விரைவில் அதை முழு பூமியிலிருந்தும் நீக்கிப்போடுவார் என்பதை அறிந்திருப்பதில் நாம் களிகூர விரும்புவோம். (w89 10/15)
[அடிக்குறிப்புகள்]
a 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் பூமியின் மீது அதனுடைய காணக்கூடாத ஆட்சியை ஆரம்பித்துவிட்டது என்பதற்குரிய நிரூபணத்திற்கு காவற்கோபுர பைபிள் மற்றும் துண்டுபிரதி சங்கம் வெளியிட்டுள்ள, நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கங்கள் 134–41 பார்க்கவும். இந்தப் புத்தகத்தில் “கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார்?” என்ற பொருளின் பேரிலும்கூட ஓர் அதிகாரம் இருக்கிறது.
[பக்கம் 31-ன் படம்]
அநீதியின் அனுமதி கடவுள் உண்மையில் இல்லை என்பதை நிரூபிக்க எவ்வகையிலும் பயன்படுத்தப்பட முடியாது.
குடித்து வெறித்த ஓர் ஓட்டுநர் பொது அறிவு, தன்னடக்கம் மற்றும் கரிசனை என்ற குணங்களைப் பயன்படுத்த மறுப்பதற்குக் கடவுள் குற்றமுள்ளவரா?
நம்முடைய பூமிக்கு முழு நீதி திரும்ப நிலைநாட்டப்படும் சமயம் சமீபமாயிருக்கிறது