அதிகாரம் 12
“கடவுளிடம் அநியாயம் இருக்கிறதா?”
1. அநீதியான சம்பவங்களால் நாம் எவ்வாறு பாதிக்கப்படலாம்?
வயதான ஒரு விதவையின் சேமிப்பை கயவர்கள் நயவஞ்சகமாக பறித்துவிடுகிறார்கள். ஈவிரக்கமில்லாத ஒரு தாய் தன் பச்சைக் குழந்தையை அம்போவென்று போட்டுவிட்டு சென்றுவிடுகிறாள். செய்யாத குற்றத்திற்காக ஒருவர் சிறையில் தள்ளப்படுகிறார். இந்த சம்பவங்கள் உங்களை எவ்வாறு பாதிக்கின்றன? இந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நினைத்து பொருமுகிறீர்களா? அது இயல்புதான். சரி தவறின் பேரில் மனிதர்களாகிய நமக்கு பலமான உணர்வு உண்டு. அநீதி நடக்கும்போது நம் இரத்தம் கொதிக்கிறது. அநீதி இழைத்தவருக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு செய்தாக வேண்டும் என்றும் நினைப்போம். இது நடக்கவில்லையென்றால், ‘நடப்பதையெல்லாம் கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாரா? ஏன் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கிறார்?’ என நாம் யோசிக்கலாம்.
2. ஆபகூக்கை அநீதி எவ்வாறு பாதித்தது, யெகோவா ஏன் அவரை அதற்காக கண்டிக்கவில்லை?
2 சரித்திரம் முழுவதும், யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் இதேபோன்ற கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு தீர்க்கதரிசியாகிய ஆபகூக் கடவுளிடம் இவ்வாறு ஜெபித்தார்: “என்னை ஏன் இப்படிப்பட்ட கொடிய அநீதியை காணச் செய்கிறீர்? வன்முறையும் அக்கிரமமும் குற்றச்செயலும் கொடூரமும் எங்கும் பரவ ஏன் அனுமதிக்கிறீர்?” (ஆபகூக் 1:3, கன்டம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்) ஆபகூக் இவ்வாறு வெளிப்படையாக கேட்டதற்காக யெகோவா அவரை கண்டிக்கவில்லை, ஏனெனில் நீதியுணர்வை மனிதனுக்கு கொடுத்ததே அவர்தான். ஆம், யெகோவா தமது அபரிமிதமான நீதியுணர்வில் ஒரு சிறிய பங்கை நமக்கு அருளியிருக்கிறார்.
யெகோவா அநீதியை வெறுக்கிறார்
3. அநீதியைக் குறித்து நம்மைவிட யெகோவா அதிகம் அறிந்திருக்கிறார் என ஏன் சொல்லலாம்?
3 நடக்கும் அநீதிகளை யெகோவா அறியாமல் இல்லை. அவர் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நோவாவின் நாளில், “பூமியில் வாழ்ந்த மனிதர்கள் மிக மோசமாக நடந்துகொண்டதையும், அவர்களுடைய உள்ளத்தின் எண்ணங்களும் ஆசைகளும் எப்போதும் மோசமாகவே இருந்ததையும் யெகோவா கவனித்தார்” என பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 6:5) அது எதைக் குறிக்கிறது என்பதை கவனியுங்கள். நாம் அறிந்திருக்கும் அநீதி, பெரும்பாலும் நாம் கேள்விப்பட்ட அல்லது எதிர்ப்பட்ட சில சம்பவங்களின் அடிப்படையிலானதே. ஆனால் யெகோவாவோ பூமியெங்கும் நடக்கும் அநீதியை அறிந்திருக்கிறார். அநீதி அனைத்தையும் பார்க்கிறார்! அதுமட்டுமின்றி இதயத்தின் நினைவுகளைக்கூட—அநீதியான செயல்களுக்கு காரணமான இழிவான சிந்தனைகளைக்கூட—அவரால் அறிய முடியும்.—எரேமியா 17:10.
4, 5. (அ) அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களைக் குறித்து யெகோவா அக்கறையாக இருப்பதை பைபிள் எவ்வாறு காட்டுகிறது? (ஆ) யெகோவாவே அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பது எவ்வாறு?
4 ஆனால் யெகோவா அநீதியை வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பதில்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்களைக் குறித்து அக்கறையாகவும் இருக்கிறார். அவரது மக்கள் எதிரி தேசங்களால் கொடூரமாக நடத்தப்பட்டபோது, ‘“கொடுமைக்காரர்களின் கொடுமை தாங்காமல் அவர்கள் குமுறியதைக் கேட்டு” யெகோவா உள்ளம் வருந்தினார். (நியாயாதிபதிகள் 2:18) சிலர் அநீதியை எவ்வளவு அதிகமாக பார்க்கிறார்களோ அவ்வளவு அதிகமாக அவர்கள் மனம் மரத்துப் போயிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் யெகோவாவோ அப்படியில்லை! சுமார் 6,000 வருடங்களாக அவர் அநீதியை முழு உருவில் பார்த்திருக்கிறார், இருந்தாலும் அதன்மீதுள்ள அவரது வெறுப்பு சற்றும் குறையவில்லை. மாறாக, “பொய் பேசும் நாவு,” “அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,” “மூச்சுக்கு மூச்சு பொய் சாட்சி சொல்லுதல்” போன்றவற்றை அவர் வெறுப்பதாக பைபிள் உறுதியளிக்கிறது.—நீதிமொழிகள் 6:16-19.
5 இஸ்ரவேலின் அநீதியான தலைவர்களை யெகோவா கடுமையாக கண்டித்த விதத்தையும் சிந்தித்துப் பாருங்கள். “உங்களுக்கு நீதிநியாயம் தெரிய வேண்டாமா?” என அவர்களிடம் கேட்கும்படி தம் தீர்க்கதரிசியை அவர் ஏவினார். சீர்கெட்ட அந்த ஆட்களின் அதிகார துஷ்பிரயோகத்தை தத்ரூபமாக விவரித்த பிறகு, அவர்களுக்கு என்ன நேரிடும் என்பதை இவ்வாறு முன்னறிவித்தார்: “நீங்கள் உதவிக்காக யெகோவாவைக் கூப்பிடுவீர்கள். ஆனால், அவர் பதில் சொல்ல மாட்டார். உங்களிடமிருந்து தன்னுடைய முகத்தை மறைத்துக்கொள்வார். ஏனென்றால், நீங்கள் அக்கிரமம் செய்கிறீர்கள்.” (மீகா 3:1-4) அநீதியை எந்தளவுக்கு யெகோவா வெறுக்கிறார்! அதுமட்டுமா, அவரே நேரடியாக அதை அனுபவித்திருக்கிறாரே! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தான் அவரை அநியாயமாக பழித்துப் பேசிக்கொண்டிருக்கிறான். (நீதிமொழிகள் 27:11) மேலும், ‘பாவமே செய்யாத’ அவரது மகன் குற்றவாளியாக கொல்லப்பட்டபோது மிகக் கொடிய அநீதியை அனுபவித்தார். (1 பேதுரு 2:22; ஏசாயா 53:9) நிச்சயமாகவே, அநீதியால் பாதிக்கப்பட்டோரின் துன்பத்தை யெகோவா அறியாமலும் இல்லை, அதில் அக்கறைகொள்ளாமலும் இல்லை.
6. அநீதியாக நடத்தப்படுகையில் நாம் என்ன செய்யலாம், ஏன்?
6 இருந்தாலும், அநீதியை பார்க்கையில் அல்லது அநீதியாக நடத்தப்படுகையில் நாம் வெகுண்டு எழுவது இயல்பே. நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம், அநீதியோ யெகோவாவின் அனைத்து பண்புகளுக்கும் நேர்மாறானது. (ஆதியாகமம் 1:27) அப்படியென்றால் அவர் ஏன் அநீதியை அனுமதிக்கிறார்?
முக்கியமான ஒரு விவாதம்
7. யெகோவாவின் பெயர் மீதும், அவர் ஆட்சி செய்கிற விதம் மீதும் எப்படி சவால்விடப்பட்டது என விளக்குங்கள்.
7 அந்தக் கேள்விக்கான பதில், ஒரு முக்கியமான விவாதத்தோடு தொடர்புடையது. நாம் ஏற்கெனவே சிந்தித்தபடி, இந்தப் பூமியின் மீதும் அதிலுள்ள அனைவர் மீதும் அரசாட்சி செய்யும் உரிமை படைப்பாளருக்கு இருக்கிறது. (சங்கீதம் 24:1; வெளிப்படுத்துதல் 4:11) என்றாலும் மனித சரித்திரம் துவங்கிய சமயத்தில் யெகோவாவின் நல்ல பெயர் கெடுக்கப்பட்டது, அவர் ஆட்சி செய்கிற விதமும் சவால் விடப்பட்டது. அது எப்படி நடந்தது? முதல் மனிதனாகிய ஆதாம் தனது பரதீஸிய வீட்டின் தோட்டத்திலிருந்த ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை சாப்பிடக்கூடாது என யெகோவா கட்டளையிட்டார். ஆனால் அவன் கீழ்ப்படியாவிட்டால்? “கண்டிப்பாகச் செத்துப்போவாய்” என கடவுள் அவனிடம் சொன்னார். (ஆதியாகமம் 2:17) கடவுளுடைய கட்டளை ஆதாமுக்கோ அவன் மனைவி ஏவாளுக்கோ கடினமானதாக இல்லை. இருந்தாலும் கடவுள் அளவுக்கு மீறி கட்டுப்பாடு விதிக்கிறார் என ஏவாளை நம்ப வைத்தான் சாத்தான். அவள் அம்மரத்தின் கனியை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று சாத்தான் சொன்னான்? “நீங்கள் கண்டிப்பாகச் செத்துப்போக மாட்டீர்கள். நீங்கள் அதைச் சாப்பிடும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமையைத் தெரிந்துகொண்டு கடவுளைப் போல ஆவீர்கள் என்றும் கடவுளுக்குத் தெரியும்” என நேரடியாக சொன்னான்.—ஆதியாகமம் 3:1-5.
8. (அ) சாத்தான் ஏவாளிடம் எதை மறைமுகமாக குறிப்பிட்டான்? (ஆ) கடவுளுடைய பெயர் மற்றும் அவருடைய பேரரசுரிமை சம்பந்தமாக சாத்தான் என்ன சவால்விட்டான்?
8 இவ்வாறு யெகோவா ஏவாளிடமிருந்து முக்கியமான தகவலை மறைத்ததாகவும் அவளிடம் பொய் சொன்னதாகவும்கூட சாத்தான் மறைமுகமாக குறிப்பிட்டான். அவளை யெகோவாமீதே சந்தேகப்பட வைத்தான். அவர் உண்மையிலேயே நல்லவர்தானா என யோசிக்கும்படி செய்தான். இப்படி, கடவுளுடைய பேருக்கு ஒரு மிகப்பெரிய களங்கத்தை சாத்தான் ஏற்படுத்தினான். அதுமட்டுமல்ல, அவன் யெகோவாவின் பேரரசாட்சியையும், அதாவது ஆவர் ஆட்சி செய்கிற விதத்தையும், குற்றம்சாட்டினான். கடவுளே உன்னதப் பேரரசர் என்ற உண்மைக்கு எதிராக கேள்வியெழுப்பாதபடி சாத்தான் உஷாராக இருந்தான். ஆனால் அவரது பேரரசுரிமை சரியானதா, தகுதியானதா, நீதியுள்ளதா என்பதைக் குறித்து சவால்விட்டான். வேறு வார்த்தைகளில் சொன்னால், யெகோவா தமது பேரரசுரிமையை நியாயமான விதத்திலும் தமது மக்களின் சிறந்த நலனுக்காகவும் பயன்படுத்துவதில்லை என வலியுறுத்தினான்.
9. (அ) கீழ்ப்படியாமையால் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் என்ன நேரிட்டது, இது என்ன முக்கிய கேள்விகளை எழுப்பியது? (ஆ) யெகோவா ஏன் கலகக்காரர்களை உடனடியாக அழித்துவிடவில்லை?
9 அதன் பிறகு ஆதாமும் ஏவாளும் விலக்கப்பட்ட மரத்தின் கனியை சாப்பிட்டு யெகோவாவிற்கு கீழ்ப்படியாமல் போனார்கள். இதனால், கடவுள் அறிவித்தபடியே மரண தண்டனையை பெறவிருந்தார்கள். சாத்தானின் பொய் சில முக்கிய கேள்விகளை எழுப்பியது. மனிதவர்க்கத்தை ஆள யெகோவாவிற்கு உண்மையிலேயே உரிமை இருக்கிறதா, அல்லது மனிதன் தன்னைத்தானே ஆண்டுகொள்ள வேண்டுமா? யெகோவா தமது பேரரசுரிமையை மிகச் சிறந்த விதத்தில்தான் பயன்படுத்துகிறாரா? யெகோவா தமது சர்வவல்லமையை பயன்படுத்தி கலகக்காரர்களை அப்போதே உடனடியாக அழித்திருக்கலாம். ஆனால் அவருடைய வல்லமையைக் குறித்து அல்ல, அவருடைய பெயரை குறித்தே கேள்விகள் எழுப்பப்பட்டன. அதோடு, இதில் அவர் ஆட்சி செய்யும் விதமும் உட்பட்டிருந்தது. ஆகவே ஆதாமையும் ஏவாளையும் சாத்தானையும் அழிப்பது கடவுளுடைய அரசுரிமையின் நியாயத்தை நிரூபித்திருக்காது. அதற்கு மாறாக, அவரது அரசுரிமையைக் குறித்து இன்னுமதிக கேள்விகளையே எழுப்பியிருக்கும். மனிதர் கடவுளுடைய துணை இல்லாமல் தங்களைத் தாங்களே வெற்றிகரமாக ஆண்டுகொள்ள முடியுமா என்பதை தீர்மானிப்பதற்கு, காலத்தை அனுமதிப்பதே ஒரே வழியாக இருந்தது.
10. மனித ஆட்சியைப் பற்றி சரித்திரம் எதை காட்டியிருக்கிறது?
10 காலம் எதை காட்டியிருக்கிறது? இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏகாதிபத்தியம், குடியாட்சி, சோஷியலிஸம், கம்யூனிஸம் என பல விதமான அரசாங்கங்களையும் மக்கள் முயன்று பார்த்திருக்கின்றனர். இவை எல்லாவற்றின் பலனையும் பைபிளின் வெளிப்படையான பின்வரும் கூற்று சுருக்கியுரைக்கிறது: “மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது” (பிரசங்கி 8:9) நியாயமான காரணத்தோடுதான், “யெகோவாவே, மனுஷனுக்குத் தன் வழியைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை என்றும், தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்” என தீர்க்கதரிசியாகிய எரேமியா குறிப்பிட்டார்.—எரேமியா 10:23.
11. மனிதவர்க்கம் துன்பப்பட யெகோவா ஏன் அனுமதித்தார்?
11 மனிதன் சுயமாக ஆட்சிசெய்வது மிகுந்த துன்பத்தை விளைவிக்கும் என யெகோவா ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தார். அப்படியென்றால் அதை தடுக்காமல், கேடு விளையும்படி அனுமதித்தது அவர் பங்கில் அநீதியான செயலா? இல்லவே இல்லை! உதாரணத்திற்கு: உங்கள் பிள்ளையின் உயிர் ஆபத்தில் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்; ஆபரேஷன் செய்தாக வேண்டிய நிலை. ஆபரேஷன் உங்கள் பிள்ளைக்கு வேதனையளிக்கும் என்பது உங்களுக்கு தெரியும்; அதை நினைத்து நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள். அதேசமயம், இந்தத் தற்காலிக வேதனையை சகித்தால் பிள்ளை பிற்பாடு நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் என்பதும் உங்களுக்கு தெரியும். அதேவிதமாக, மனித ஆட்சியை அனுமதிப்பது ஓரளவு வேதனையையும் துன்பத்தையும் தரும் என்பதை கடவுள் அறிந்திருந்தார், அதோடு அதைப் பற்றி முன்னறிவித்திருந்தார். (ஆதியாகமம் 3:16-19) ஆனால் கலகத்தின் கெட்ட விளைவுகளை மனிதவர்க்கம் முழுவதும் அனுபவிக்கும்படி அனுமதித்தால்தான் உண்மையான, நிரந்தர பரிகாரம் கிடைக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். இவ்விதத்தில் பேரரசுரிமை குறித்த விவாதம் நிரந்தரமாக நித்திய காலத்திற்கும் தீர்க்கப்படும்.
மனிதனின் உத்தமத்தைக் குறித்த விவாதம்
12. யோபுவின் விஷயத்தில் காட்டப்பட்டபடி, மனிதருக்கு எதிராக சாத்தான் என்ன குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறான்?
12 இந்த விவாதத்தில் இன்னொரு விஷயமும் உண்டு. கடவுளுடைய ஆட்சி சரியானதா, நீதியானதா என சாத்தான் சவால்விட்டபோது, பேரரசுரிமை மற்றும் அவருடைய பெயர் சம்பந்தமாக மட்டும் அவரை பழிதூற்றவில்லை; உத்தமத்தைக் காப்பது சம்பந்தமாக கடவுளுடைய ஊழியர்களையும் பழிதூற்றினான். உதாரணத்திற்கு, நீதியுள்ள மனிதனாகிய யோபுவைக் குறித்து சாத்தான் யெகோவாவிடம் என்ன சொன்னான் என கவனியுங்கள்: “‘நீங்கள்தான் அவனையும் அவன் வீட்டையும் அவனிடம் இருக்கிற எல்லாவற்றையும் சுற்றி வேலிபோட்டு அவனைப் பாதுகாக்கிறீர்களே. அவன் செய்வதையெல்லாம் ஆசீர்வதிக்கிறீர்களே. அவனுடைய மந்தைகள் தேசத்தில் பெருகியிருக்கின்றனவே. நீங்கள் மட்டும் உங்கள் கையை நீட்டி அவனிடம் இருக்கிற எல்லாவற்றையும் தொட்டுப் பாருங்கள். கண்டிப்பாக உங்கள் முகத்துக்கு நேராகவே அவன் உங்களைத் திட்டித் தீர்ப்பான்’ என்று சொன்னான்.”—யோபு 1:10, 11.
13. யோபுவின் மீது சாத்தான் சுமத்திய குற்றச்சாட்டுகள் எதை அர்த்தப்படுத்தின, இது எவ்வாறு எல்லா மனிதர்களையும் உட்படுத்துகிறது?
13 யெகோவா தமது காக்கும் வல்லமையை பயன்படுத்தி யோபுவின் பக்தியை விலைக்கு வாங்கியதாக சாத்தான் வாதிட்டான். இவ்வாறு யோபுவின் உத்தமத்தன்மை வெறும் மாய்மாலமானது என அர்த்தப்படுத்தினான்; கடவுளிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்வதற்காகவே யோபு அவரை வணங்குகிறான் என சொல்லாமல் சொன்னான். கடவுளிடமிருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கவில்லை என்றால் யோபுவும் அவரை நிச்சயம் தூஷிப்பார் என்று சாத்தான் உறுதியாக கூறினான். யோபு, ‘நேர்மையானவனாக, உத்தமனாக, கடவுளுக்குப் பயந்து நடந்து கெட்டதை வெறுத்து ஒதுக்குகிற’ பிரத்தியேக மனிதனாக இருந்ததை சாத்தான் அறிந்திருந்தான்.a ஆகவே சாத்தானால் யோபுவின் உத்தமத்தன்மையை முறிக்க முடிந்தால், மற்ற மனிதர்களின் உத்தமத்தன்மையை முறிப்பதும் கடினமான காரியமல்லவே! இவ்வாறு சாத்தான் உண்மையில், கடவுளை சேவிக்க விரும்பிய அனைவரின் உத்தமத்தைக் குறித்தும் கேள்வி எழுப்பினான். சொல்லப்போனால் சாத்தான் விவாதத்தை பொதுப்படையாக்கி, ‘ஒரு மனுஷன் . . . தன்னுடைய உயிரை . . . காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராயிருப்பான்’ என யெகோவாவிடம் சொன்னான்.—யோபு 1:8; 2:4.
14. மனிதர்கள்மீது சாத்தான் சுமத்திய குற்றச்சாட்டைக் குறித்து சரித்திரம் என்ன காட்டியிருக்கிறது?
14 யோபுவைப் போன்ற அநேகர், சோதனையின் மத்தியிலும் யெகோவாவிற்கு உத்தமமாக நிலைத்திருந்ததை சரித்திரம் காட்டுகிறது; இது சாத்தான் கூறியதற்கு நேர்மாறானது. அவர்கள் தங்கள் உத்தமத்தால் யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்திருக்கின்றனர்; இவ்வாறு, சோதனையை சந்திக்கையில் மனிதர் கடவுளை சேவிப்பதை விட்டுவிடுவார்கள் என்ற சாத்தானின் நிந்தைப் பேச்சிற்கு யெகோவாவால் பதிலளிக்க முடிந்திருக்கிறது. (எபிரெயர் 11:4-38) ஆம், நேர்மை இருதயமுள்ளவர்கள் கடவுளை மறுதலிக்க மறுத்துவிட்டிருக்கின்றனர். மிகுந்த துன்பமான சூழ்நிலைகளில் சிக்கித் தவித்தபோதும், சகித்திருப்பதற்கு தேவையான பலத்திற்காக இன்னுமதிகமாக யெகோவாவின்மீது சார்ந்திருக்கின்றனர்.—2 கொரிந்தியர் 4:7-10.
15. கடவுளுடைய கடந்தகால மற்றும் எதிர்கால நியாயத்தீர்ப்புகளைக் குறித்து என்ன கேள்வி எழும்பலாம்?
15 ஆனால் யெகோவாவின் நீதி, அவரது பேரரசுரிமையையும் மனித உத்தமத்தன்மையையும் மட்டுமே உட்படுத்துவது இல்லை. தனிப்பட்டவர்களுக்கும் முழு தேசங்களுக்கும் யெகோவா நியாயத்தீர்ப்பு வழங்கிய பதிவு பைபிளில் உள்ளது. எதிர்காலத்தில் அவர் வழங்கப்போகும் நியாயத்தீர்ப்புகளைக் குறித்த தீர்க்கதரிசனங்களும் அதில் உண்டு. யெகோவா நீதியாக நியாயத்தீர்ப்பு வழங்கியிருக்கிறார் என்றும் வழங்குவார் என்றும் நாம் எவ்வாறு நிச்சயமாக இருக்கலாம்?
கடவுளுடைய நீதி ஏன் உயர்ந்தது
16, 17. உண்மையான நீதியைப் பொறுத்தவரை மனிதனுக்கு குறுகிய கண்ணோட்டமே இருப்பதை என்ன உதாரணங்கள் காட்டுகின்றன?
16 யெகோவாவின் “வழிகளெல்லாம் நியாயமானவை” என சொல்வது மிகப் பொருத்தமானது. (உபாகமம் 32:4) நாம் ஒருவரும் நம்மைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது; ஏனெனில் நம் குறுகிய கண்ணோட்டத்தினால் நியாயம் எது என்பதை பெரும்பாலும் பகுத்துணர முடிவதில்லை. உதாரணத்திற்கு ஆபிரகாமை எடுத்துக்கொள்ளுங்கள். சோதோமில் துன்மார்க்கம் தலைவிரித்தாடிய போதும் அதன் அழிவைக் குறித்து அவர் யெகோவாவிடம் மன்றாடினார். “பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களையும் நீங்கள் அழித்துவிடுவீர்களா?” என அவரிடம் கேட்டார். (ஆதியாகமம் 18:23-33) நிச்சயம் அழிக்க மாட்டார் என்பதே பதில். நீதிமானாகிய லோத்துவும் அவரது மகள்களும் சோவாருக்குள் பத்திரமாக சென்ற பிறகே யெகோவா சோதோம் மீது “நெருப்பையும் கந்தகத்தையும் கொட்டினார்.” (ஆதியாகமம் 19:22-24) இதற்கு எதிர்மாறாக யோனாவோ, நினிவே மக்களுக்கு கடவுள் இரக்கத்தைக் காட்டியபோது “அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.” அவர்கள் உள்ளப்பூர்வமாக திருந்தியபோதிலும், அழிவு வரும் என யோனா ஏற்கெனவே அறிவித்துவிட்டதால், அவர்கள் அழிந்துபோவதைப் பார்க்கவே அவர் விரும்பினார்.—யோனா 3:10–4:1.
17 பொல்லாதவர்களை அழிப்பது மட்டுமல்ல, நீதிமான்களை காப்பதும் தம் நீதியில் உட்பட்டிருக்கிறது என்ற உறுதியை யெகோவா ஆபிரகாமுக்கு வழங்கினார். யோனாவோ, யெகோவா இரக்கமுள்ளவர் என்பதை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. துன்மார்க்கர் தங்கள் வழிகளை விட்டு திரும்பும்போது அவர் “மன்னிக்கத் தயாராக” இருக்கிறார். (சங்கீதம் 86:5) அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்று பயப்படுகிற சில மனிதர்களைப் போல் யெகோவா இல்லை; எப்படியெனில், அவர் தமது அதிகாரத்தை காட்டுவதற்காக மட்டுமே கடும் நியாயத்தீர்ப்பை வழங்குவதில்லை; தம்மை பலவீனராக காட்டுமோ என்ற பயத்தின் காரணமாக இரக்கம் காட்டாமல் இருப்பதுமில்லை. இரக்கம் காட்ட வாய்ப்பிருக்கும் போதெல்லாம் அதைக் காட்டுவதே அவரது குணம்.—ஏசாயா 55:7; எசேக்கியேல் 18:23.
18. வெறுமனே உணர்ச்சிகளின் அடிப்படையில் யெகோவா செயல்படுவதில்லை என்பதை பைபிளிலிருந்து காட்டுக.
18 என்றாலும், வெறும் உணர்ச்சிகள் யெகோவாவை குருடாக்கிவிடுவதில்லை. அவரது மக்கள் விக்கிரகாராதனையில் மூழ்கியிருந்தபோது இப்படி உறுதியாக அறிவித்தார்: “உன்னுடைய நடத்தைக்கு ஏற்றபடி உனக்குத் தீர்ப்பு கொடுப்பேன். நீ செய்த அருவருப்பான காரியங்களுக்காக உன்னைத் தண்டிப்பேன். உன்னைப் பார்த்து நான் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கரிசனை காட்ட மாட்டேன். நீ செய்த பாவங்களுக்குத் தக்க தண்டனை கொடுப்பேன்.” (எசேக்கியேல் 7:3, 4) ஆகவே மனிதர் தங்கள் மோசமான நடத்தைகளில் ஊறிப்போகும்போது யெகோவா அதற்கேற்றபடி நியாயந்தீர்க்கிறார். ஆனால் அவரது நியாயத்தீர்ப்பு வலுவான அத்தாட்சியின் அடிப்படையிலானது. ஆகவே சோதோமையும் கொமோராவையும் குறித்த பயங்கரமான புலம்பல் அவரது காதுகளை எட்டியபோது இப்படி சொன்னார்: “மற்றவர்கள் புலம்புவதுபோல், அந்த ஜனங்கள் உண்மையிலேயே மோசமாக நடக்கிறார்களா என்று நான் இறங்கிப் போய்ப் பார்க்கப்போகிறேன்.” (ஆதியாகமம் 18:20, 21) உண்மைகள் அனைத்தையும் கேட்டறிவதற்கு முன்பே அவசரப்பட்டு தீர்ப்பளிக்கும் அநேக மனிதர்களைப் போல் யெகோவா இல்லாததற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! உண்மையில் பைபிள் சொல்கிறபடியே அவர் “நம்பகமான கடவுள், அநியாயமே செய்யாதவர்.”—உபாகமம் 32:4.
யெகோவாவின் நீதியில் நம்பிக்கை வையுங்கள்
19. யெகோவாவின் நீதியைக் குறித்து குழப்பமூட்டும் சில கேள்விகள் நமக்கு இருந்தால் என்ன செய்யலாம்?
19 யெகோவாவின் கடந்தகால நடவடிக்கைகளைக் குறித்த எல்லா கேள்விகளுக்கும் பைபிள் பதிலளிப்பதில்லை; எதிர்காலத்தில் தனிப்பட்டவர்களையும் தொகுதியினரையும் யெகோவா எவ்வாறு நியாயந்தீர்ப்பார் என்ற எல்லா விவரங்களையும்கூட அது அளிப்பதில்லை. அப்படிப்பட்ட விவரங்கள் கொடுக்கப்படாத பைபிள் பதிவுகளை அல்லது தீர்க்கதரிசனங்களை குறித்து நாம் குழப்பமடைகையில், தீர்க்கதரிசியாகிய மீகா காட்டிய அதே உத்தமத்தன்மையை நாமும் காட்டலாம். “என்னை மீட்கும் கடவுளுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்” என அவர் எழுதினார்.—மீகா 7:7.
20, 21. யெகோவா எப்போதுமே சரியானதை செய்வார் என நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
20 ஒவ்வொரு சூழ்நிலையிலும் யெகோவா சரியானதையே செய்வார் என நாம் நிச்சயமாக இருக்கலாம். அநீதியை மனிதன் கண்டும் காணாமல் விட்டுவிட்டாலும், “பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்” என யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (ரோமர் 12:19) காத்திருக்கும் மனப்பான்மை நமக்கு இருந்தால், அப்போஸ்தலனாகிய பவுல் உறுதியான நம்பிக்கையோடு இவ்வாறு சொன்னபடியே நாமும் சொல்வோம்: “கடவுளிடம் அநியாயம் இருக்கிறதா? இல்லவே இல்லை!”—ரோமர் 9:14.
21 இப்போது நாம் “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” ஒரு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:1) அநீதியினாலும் ‘கொடுமைகளாலும்’ அநேகர் கொடூரமாக நடத்தப்பட்டிருக்கின்றனர். (பிரசங்கி 4:1) ஆனால் யெகோவா மாறவே இல்லை. அவர் இன்னமும் அநீதியை வெறுக்கிறார், அதனால் பாதிக்கப்படுவோர் மீது மிகுந்த அக்கறையாக இருக்கிறார். யெகோவாவிற்கும் அவருடைய பேரரசுரிமைக்கும் உத்தமத்தோடு நாம் நிலைத்திருந்தால், தமது குறிக்கப்பட்ட காலம் வரை சகித்திருப்பதற்கு தேவையான பலத்தை அவர் நமக்கு அருளுவார்; அந்தக் காலத்தில் தமது ஆட்சியின்கீழ் அனைத்து அநீதிகளையும் சரிக்கட்டுவார்.—1 பேதுரு 5:6, 7.