‘அன்பின் அடிப்படையில் புத்திசொல்வது’
ஏறக்குறைய பொ.ச. 60-61-ல் தப்பியோடிய ஓர் அடிமை ரோமைவிட்டு புறப்பட்டு, ஆசியா மைனருக்கு தென்மேற்கிலுள்ள ஒரு நகரமாகிய கொலோசெயிலிருந்த தன் வீட்டை நோக்கி 1,400 கிலோமீட்டர் தூர பிரயாணத்தை துவங்கினான். அவன், அப்போஸ்தலனாகிய பவுல் தானே கைப்பட தன் எஜமானனுக்கு எழுதியிருந்த ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு சென்றான். இன்று, அந்தக் கடிதம் பைபிளின் ஒரு பாகமாக இருக்கிறது, அதைப் பெற்றுக்கொண்ட பிலேமோனுடைய பெயரை அது பெற்றது.
பிலேமோனுக்கு எழுதப்பட்ட கடிதம், சாதுரியமான, இணங்கச் செய்யும் காரண ஆய்வின் தலைச்சிறந்த ஒரு படைப்பாகும். ஆனால் இன்று கிறிஸ்தவர்களுக்கு அது அநேக நடைமுறையான பாடங்களைக் கொண்டிருப்பது அதிக முக்கியமானதாய் இருக்கிறது. அதில் ஒன்று கிறிஸ்தவ அன்பின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லிக்கொள்வதனுடைய மதிப்பு ஆகும். இந்தச் சுருக்கமான ஆனால் ஆற்றல் மிக்க கடிதத்தை கூர்ந்து கவனிப்போமாக.
ஓடிப்போனவன் திரும்பி வருகிறான்
பிலேமோன் ஒரு கிறிஸ்தவனாக, கொலோசே சபையின் அதிக நேசிக்கப்பட்ட ஓர் உறுப்பினனாக இருந்தான். (பிலேமோன் 4, 5) ஏன், அங்கேயிருந்த சபை, அவனுடைய வீட்டைதானே கூடுமிடமாக பயன்படுத்தியது! (வசனம் 2) மேலுமாக, பிலேமோன், அப்போஸ்தலனாகிய பவுலுக்கு தனிப்பட்டவிதமாக அறிமுகமானவனாயிருந்தான்; அவன் கிறிஸ்தவனாவதற்கு உதவிசெய்வதில் அப்போஸ்தலன் ஒரு கருவியாக இருந்திருக்கலாம். உண்மைதான், பவுல் கொலோசெயில் தான் தனிப்பட்ட விதமாக பிரசங்கிக்கவில்லை என்பதை தெரிவிக்கிறார். (கொலோசெயர் 2:1) என்றபோதிலும் எபேசுவில் அவர் இரண்டு ஆண்டுகள் செலவழித்து “ஆசியாவில் [கொலோசெ உட்பட] குடியிருந்த எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்”கும் அளவுக்கு பிரசங்கித்து வந்திருக்கிறார். (அப்போஸ்தலர் 19:10) பிலேமோன் செவிகொடுத்து கேட்டு பிரதிபலித்தவர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும்.
எப்படியிருந்தாலும், அந்தக் காலத்திலிருந்த அநேக செல்வந்தர்களைப் போல, பிலேமோன் அடிமையின் எஜமானாக இருந்தான். பூர்வ காலங்களில் அடிமைத்தனம் எப்போதும் இழிவானதாக இருக்கவில்லை. யூதர்கள் மத்தியில் ஒருவர் தன்னையோ அல்லது குடும்ப அங்கத்தினர்களையோ அடிமைத்தனத்தில் விற்றுவிடுவது, கடன்களை கொடுத்துத் தீர்க்க ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக இருந்தது. (லேவியராகமம் 25:39, 40) ரோமர் காலத்தைப் பற்றி தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்டு பைபிள் என்ஸைக்ளோபீடியா இவ்விதமாகச் சொல்கிறது: “பல்வேறு காரணங்களுக்காக அநேக ஆட்கள் தங்களை அடிமைத்தனத்தில் விற்றுப்போட்டார்கள், அனைத்துக்கும் மேலாக, ஏழையாக, சுயாதீனனாக இருப்பதைவிட சுலபமானதும், அதிக பாதுகாப்பானதுமான ஒரு வாழ்க்கையினுள் பிரவேசிக்க, விசேஷமான வேலைகளைப் பெற்றுக்கொள்ள, சமுதாயத்தில் முன்னேற அவ்விதமாகச் செய்தனர். . . . ரோமரல்லாத அநேகர் தங்களை ரோம குடிமக்களுக்கு விற்றுப்போட்டனர். அடிமைகள் விடுதலை செய்யப்படும் போது, ரோம குடிமக்களாக ஆகிவிடலாம் என்ற ரோம சட்டத்தினால் கவனமாக கட்டுப்படுத்தப்பட்ட நேர்மையான எதிர்பார்ப்போடு அவ்விதமாகச் செய்தனர்.”
ஆனால் பிலேமோனின் அடிமைகளில் ஒருவனாக இருந்த ஒநேசிமு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் அவனை விட்டு ரோமுக்கு ஓடினபோது, தப்பியோட பணத்தை பிலேமோனிடமிருந்தே ஒருவேளை திருடிக்கொண்டும் சென்ற போது, ஒரு பிரச்னை எழும்பியது. (வசனம் 18) ரோமில் ஒநேசிமு கைதியாக இருந்த அப்போஸ்தலனாகிய பவுலை சந்திக்க நேரிட்டது.
அடிமை வேலையிலிருந்து தப்பியோடி வந்த ‘முன்னே பிரயோஜனமில்லாத’வனாயிருந்த இவன் இப்பொழுது ஒரு கிறிஸ்தவனாக மாறிவிட்டான். பவுல் தன்னை விரும்பியபடி பயன்படுத்திக்கொள்ள அவன் அனுமதித்து சிறையிலிருந்த அப்போஸ்தலனுக்கு பிரயோஜனமாயிருந்தான். ஒநேசிமு பவுலின் ‘உள்ளத்தில்’ இடம்பிடித்து பவுலுக்கு “பிரியமான சகோதரனாக” ஆனது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை!—வசனங்கள் 11, 12, 16.
அப்போஸ்தலனாகிய பவுல் ஒநேசிமு தன்னோடு தங்கியிருப்பதையே விரும்பியிருக்கக்கூடும். ஆனால் பிலேமோன் ஒநேசிமுவின் எஜமானாக சட்டப்படி உரிமையுடையவனாக இருந்தான். இவ்விதமாக ஒநேசிமு சட்டப்பூர்வமான தன் எஜமானின் சேவைக்குத் திரும்ப கடமைப்பட்டவனாயிருந்தான். அப்படியென்றால் பிலேமோன் அவனை எவ்விதமாக ஏற்றுக்கொள்வான்? கடுமையான தண்டனையை வழங்குவதற்கு அவனுக்கிருந்த உரிமையை அவன் கோபாவேசத்தோடு வற்புறுத்துவானா? உடன் கிறிஸ்தவனென ஒநேசிமு உரிமைப்பாராட்டுகையில் அவனுடைய நேர்மைத்தன்மையை சந்தேகிப்பானா?
அன்பில் காரியங்களைத் தீர்ப்பது
பவுல், ஒநேசிமுவைக் குறித்து பிலேமோனுக்கு எழுத தூண்டப்பட்டார். அவருடைய வழக்கப்படி ஒரு செயலாளரை பயன்படுத்தாமல் கடிதத்தை தன் சொந்த கைப்பட எழுதினார். (வசனம் 19) பிலேமோனுக்கு எழுதப்பட்ட சுருக்கமான கடிதத்தை முழுவதுமாக வாசிக்க ஒரு சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பிலேமோனுக்கும் அவன் வீட்டாருக்கும் “கிருபையும் சமாதானமும்” கூறின பின்பு, பவுல் பிலேமோனை ‘கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலும் அவனுடைய அன்புக்காகவும் விசுவாசத்துக்காகவும்’ அவனை பாராட்டுவதை நீங்கள் கவனிப்பீர்கள்.—வசனங்கள் 1-7.
பவுல் ஓர் அப்போஸ்தலனாக தன் அதிகாரத்தை பயன்படுத்தி, ‘சரியானதைச் செய்யும்படியாக பிலேமோனுக்கு கட்டளையிட்டிருக்கலாம்,’ ஆனால் மாறாக பவுல் ‘அன்பின் அடிப்படையில்’ புத்தி சொன்னான். ஒநேசிமு ஒரு கிறிஸ்தவ சகோதரனாக, பவுலுக்கு தன்னை பிரயோஜனமுள்ளவனாக நிரூபித்திருப்பவனாக ஆகியிருக்கும் உண்மைக்கு உறுதிச்சான்று பகர்ந்தான். அப்போஸ்தலன் ஒப்புக்கொண்டதாவது: “சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றிருந்தேன்.” பவுல் தொடர்ந்து சொல்கிறார்: “ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.”—வசனங்கள் 8-14.
அப்போஸ்தலன், இவ்விதமாக பிலேமோனை அவனுடைய முன்னாள் அடிமையை ஒரு சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படி துரிதப்படுத்தினார். “என்னை ஏற்றுக்கொள்வது போல அவனையும் ஏற்றுக்கொள்ளும்” என்று பவுல் எழுதினார். ஒநேசிமு அடிமைத்தனத்திலிருந்து கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. பவுல் தன்னுடைய நாளில் இருந்த சமுதாய ஒழுங்கை மாற்றுவதற்கு கிளர்ச்சி செய்துகொண்டில்லை. (எபேசியர் 6:9; கொலோசெயர் 4:1; 1 தீமோத்தேயு 6:2 ஒப்பிடவும்.) இருந்தபோதிலும், இப்பொழுது ஒநேசிமுவுக்கும் பிலேமோனுக்குமிடையே இருந்த கிறிஸ்தவ பிணைப்பினால், அடிமை-எஜமான் உறவில் மாற்றமிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிலேமோன் ஒநேசிமுவை, “அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவும்” கருதுவான்.—வசனங்கள் 15-17.
ஒருவேளை களவு செய்ததன் விளைவாக ஒநேசிமு பட்டிருந்த கடனைப் பற்றியதென்ன? மறுபடியுமாக பவுல் பிலேமோனிடமாக தன்னுடைய நட்பின் அடிப்படையில் கேட்டுக்கொள்வதாவது: “அவன் உமக்கு யாதொரு அநியாயஞ் செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும்.” பிலேமோன் மன்னிக்கும் ஆவியைக் காண்பித்து, பவுல் கேட்டுக்கொண்டதற்கும் அதிகமாய்ச் செய்வான் என்று நம்பிக்கையை பவுல் வெளிப்படுத்தினார். பவுல் சீக்கிரத்தில் விடுவிக்கப்பட எதிர்பார்த்தபடியால், சமீப எதிர்காலத்தில் பிலேமோனுடைய உபசரிப்பையும்கூட அனுபவிக்க அவர் ஏற்பாடு செய்து கொண்டார். கூடுதலான வாழ்த்துதல்களைத் தெரிவித்து பிலேமோனுக்கு “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையை” கூறின பின்பு பவுல் தன் கடிதத்தை முடித்துக் கொள்கிறார்.—வசனங்கள் 18-25.
இன்று கிறிஸ்தவர்களுக்கு பாடங்கள்
பிலேமோன் புத்தகத்தில் இன்று கிறிஸ்தவர்களுக்கு ஏராளமான நடைமுறையான பாடங்கள் இருக்கின்றன. ஒரு காரியமானது, உடன் விசுவாசி ஒருவர் நமக்கு எதிராக வினைமையான தவறை செய்துவிட்டாலும்கூட மன்னிப்பவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது நமக்கு நினைப்பூட்டுகிறது. “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.—மத்தேயு 6:14.
இன்று கிறிஸ்தவ சபையினுள்ளே அதிகாரமுள்ள ஸ்தானங்களிலிருப்பவர்கள் விசேஷமாக பிலேமோன் புத்தகத்திலிருந்து பயனடையலாம். சரியானதைச் செய்யும்படியாக பிலேமோனுக்கு கட்டளையிட பவுல் தன் அப்போஸ்தல அதிகாரத்தை பயன்படுத்தாமல் தன்னை அடக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலுமாக, ஒநேசிமு ரோமில் தங்கியிருந்து பவுலுக்கு சேவை செய்துகொண்டிருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று பவுல் வற்புறுத்தவில்லை. பவுல் மற்றவர்களுடைய சொத்துரிமையை மதித்தார். அதிகாரத்தைப் பயன்படுத்தும் அணுகுமுறையினால் இணக்கம் ஏற்படக்கூடுமென்றாலும் பிலேமோன் தன் இருதயத்திலிருந்து செயல்படுவது மேன்மையாக இருக்கும் என்பதை அவர் மதித்துணர்ந்தார். இருதயப்பூர்வமான ஒரு பிரதிபலிப்பை வரவழைக்க அவர் அன்பின் அடிப்படையில் கேட்டுக்கொண்டார்.
ஆகவே கிறிஸ்தவ மூப்பர்கள் இன்று தங்கள் அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்வதன் மூலமாகவோ அல்லது மந்தையோடு கொள்ளும் செயல்தொடர்புகளில் கடுமையான அதிகாரத்தோரணையான முறையை பயன்படுத்துவதன் மூலமாகவோ “தேவனுடைய . . . சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக” ஒருபோதும் இருக்கக்கூடாது. (1 பேதுரு 5:1-3) இயேசு சொன்னார்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள் மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது.” (மத்தேயு 20:25, 26) மந்தையின் உறுப்பினர்கள் உத்தரவுகளைவிட அன்புள்ள வேண்டுகோள்களுக்கு அதிகமாக பிரதிபலிப்பதை கண்காணிகள் பொதுவாக காண்கிறார்கள். மனச்சோர்வினால் அவதியுறுகிறவர்கள் தங்கள் பிரச்னைகளை செவிகொடுத்துக் கேட்க தயவாக நேரத்தை எடுத்துக்கொண்டு புரிந்துகொள்ளும் ஆற்றலோடு புத்திமதி கொடுக்கும் மூப்பர்களை போற்றுகிறார்கள்.
மேலுமாக பவுலின் கடிதம் பாராட்டு மற்றும் சாதுரியத்தின் மதிப்பை மூப்பர்களுக்கு நினைப்பூட்டுகிறது. பிலேமோனால் ‘பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் இளைப்பாறினதை’ ஒப்புக்கொண்டு அவர் துவங்குகிறார். (வசனம் 7) கபடமில்லாத இந்தப் பாராட்டு பிலேமோனை அதிகமாக கருத்துக்களை வாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு மனநிலையில் வைத்தது. அதேவிதமாகவே இன்று புத்திமதி அல்லது அறிவுரை அநேகமாக உண்மையான அனலான பாராட்டோடு சேர்த்துக் கொடுக்கப்படலாம். இப்படிப்பட்ட புத்திமதி நயமற்றதாக அல்லது சாதுரியமற்றதாக இல்லாமல், ஆனால் செவிசாய்ப்பவர்களுக்கு அதிக இனிமையாக இருக்கும் பொருட்டு தாராளமாக “உப்பால் சாரமேறினதாயிருக்க” வேண்டும்.—கொலோசெயர் 4:6.
மேலும் பிலேமோன் சரியான காரியத்தைச் செய்வான் என்ற நம்பிக்கையை அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு தெரிவிக்கிறார்: “நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன்.” (வசனம் 21) மூப்பர்களே, இதேவிதமான நம்பிக்கையை உங்கள் உடன் கிறிஸ்தவர்களிடம் நீங்கள் தெரிவிக்கிறீர்களா? சரியானதைச் செய்ய விரும்பும்படி இது அவர்களுக்கு உதவுகிறது அல்லவா?
அக்கறையூட்டும் வண்ணமாக, பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் நம்பிக்கையை தெரிவிப்பதும்கூட ஒரு நல்ல பாதிப்பைக் கொண்டிப்பதை அடிக்கடி காண்கிறார்கள். மனமுவந்து கீழ்ப்படிவதன் மதிப்பை—வெறுமென தேவைகளை நிறைவு செய்வதற்கும் அப்பால் செல்வதை—உணர்ந்துகொள்வதன் மூலம் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஓரளவு கண்ணியத்தை வழங்கலாம். பெற்றோரின் கட்டளைகள் அல்லது வேண்டுகோள்கள், சாத்தியமாக இருக்கையில், தயவான அன்புள்ள தொனியில் கொடுக்கப்பட வேண்டும். பிறரிடத்தில் தன்னை வைத்துப் பார்க்கும் பண்பை வெளிக்காட்ட வேண்டும், காரணங்கள் கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர் பாராட்டுகள் தகுதியானதாக இருக்கையில் தங்கள் பிள்ளைகளை அனலோடு பாராட்ட வேண்டும், அளவுக்கு அதிகமாக குறைகாண்பது விசேஷமாக பொது இடங்களில் அவ்விதமாகச் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
அதேவிதமாகவே, கணவன்மார்கள் நியாயமானத்தன்மையையும் தயவுமாகிய குணங்களை வெளிப்படுத்தி, தங்கள் மனைவிமார்களை புகழ்ந்து பேச தயாராக இருக்கலாம். இது மனைவிக்குரிய கீழ்ப்படிதலை இன்பமானதாகவும், புத்துணர்ச்சிக்கும் சந்தோஷத்துக்கும் மூலகாரணமாயும் ஆக்குகிறது!—நீதிமொழிகள் 31:28; எபேசியர் 5:28.
பிலேமோன் சரியாக எவ்விதமாக பவுலின் கடிதத்துக்குப் பிரதிபலித்தான் என்பது சொல்லப்பட்டில்லை. ஆனால் பவுல் தகுதியற்ற ஒருவரிடம் நம்பிக்கை வைத்திருப்பார் என்று நாம் கற்பனை செய்ய முடியாது. அதேவிதமாகவே இன்று கிறிஸ்தவ மூப்பர்கள், பெற்றோர்கள் மற்றும் கணவன்மார்கள் தங்கள் செயல்தொடர்புகளில் கட்டாயப்படுத்தி, கட்டளையிட்டு அல்லது வற்புறுத்துவதன் மூலமாக அல்ல, ஆனால் ‘அன்பின் அடிப்படையில் புத்தி சொல்வதன்’ மூலம் வெற்றி காண்பார்களாக. (w92 4/15)
[பக்கம் 23-ன் படம்]
ஓர் அப்போஸ்தலனாக தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக பவுல் கிறிஸ்தவ அன்பின் அடிப்படையில் பிலேமோனுக்கு புத்திசொன்னான்