கிறிஸ்தவக் குடும்பம் வயதானவர்களுக்கு உதவுகிறது
“முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.”—சங்கீதம் 71:9.
1. பல கலாச்சாரங்களில் வயதானவர்கள் எப்படி நடத்தப்படுகின்றனர்?
“துர்ப்பிரயோகம் செய்யப்பட்ட வயதானவர்களில் ஏறக்குறைய ஏழில் ஆறுபேர் (86%) தங்களுடைய சொந்தக் குடும்பங்களால் தவறாக நடத்தப்பட்டனர் என்பதாகச் சுற்றாய்வுகள் குறிப்பிடுகின்றன,” என்று தி உவால் ஸ்டிரீட் ஜர்னல் சொன்னது. நவீன முதிர்ச்சி (Modern Maturity) என்ற பத்திரிகை குறிப்பிட்டது: “வயதானோரைத் தவறாக நடத்துதல்தானே, தேசத்தின் செய்தித்தாள்களின் பக்கங்களில் வெளிவந்திருக்கும் மிக அண்மை காலத்து [குடும்ப குற்றச்செயல்].” ஆம், அநேக கலாச்சாரங்களில் வயதானவர்கள் படுமோசமாகத் தவறாக நடத்தப்படுவதற்கும் புறக்கணிப்பிற்கும் பலியாகி இருக்கின்றனர். உண்மையில் பலர் ‘தற்பிரியராயும், . . . நன்றியறியாதவர்களாயும், உண்மையற்றவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும்’ இருக்கும் ஒரு காலமாக நம்முடைய காலம் இருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1-3.
2. எபிரெய வேத எழுத்துக்களின்படி, யெகோவா வயதானவர்களை எப்படி நோக்குகிறார்?
2 ஆனால் பண்டைய இஸ்ரவேலில் வயதானவர்கள் அவ்விதத்தில் நடத்தப்படவேண்டியவர்களாய் இல்லை. நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது: “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.” ஏவப்பட்டு எழுதப்பட்ட ஞானமான நீதிமொழிகள் புத்தகம் நமக்கு ஆலோசனை கூறுகிறது: “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.” அது கட்டளையிடுகிறது: “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” மோசேயின் நியாயப்பிரமாணம் இருபாலினத்தையும் சேர்ந்த வயதானவர்களுக்கு மதிப்பையும் மரியாதையையும் கற்றுக்கொடுத்தது. தெளிவாகவே, யெகோவா வயதானவர்கள் மதிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறார்.—லேவியராகமம் 19:32; நீதிமொழிகள் 1:8; 23:22.
பைபிள் காலங்களில் வயதானவர்களைப் பராமரித்தல்
3. தன்னுடைய வயதான தகப்பனுக்கு யோசேப்பு எவ்வாறு பரிவு காட்டினார்?
3 மதிப்பு வார்த்தைகளில் மட்டுமல்ல, ஆனால் அன்பாதரவான செயல்களாலும் காண்பிக்கப்பட வேண்டும். யோசேப்பு தன்னுடைய முதிர்வயதுள்ள தகப்பனுக்கு அதிகமான பரிவைக் காண்பித்தார். சுமார் 300 கிலோமீட்டருக்கும் மேலான தூரம், கானானிலிருந்து எகிப்திக்கு யாக்கோபு பயணம் செய்யும்படி அவர் விரும்பினார். ஆகையால் யோசேப்பு யாக்கோபுக்கு, “பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக வழிக்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும்” அனுப்பினார். யாக்கோபு கோசேனைச் சென்றடைந்ததும், யோசேப்பு அவரிடம் சென்று, “அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான்.” யோசேப்பு தன் தகப்பன்மீது ஆழ்ந்த பாசத்தைப் பொழிந்தார். வயதானவர்களுக்கான அக்கறையைக் குறித்ததில் என்னே ஓர் ஊக்கமளிக்கும் முன்மாதிரி!—ஆதியாகமம் 45:23; 46:5, 29.
4. ரூத் ஏன் பின்பற்றுவதற்கு ஒரு நல்ல மாதிரியாக இருக்கிறாள்?
4 வயதானவர்களுக்குத் தயவைக் காண்பிப்பதற்கான மற்றொரு பின்பற்றத்தக்க மாதிரி ரூத். ஒரு புறஜாதியாளாய் இருந்தபோதிலும், அவள் தன்னுடைய வயதான, விதவையான யூத மாமியாராகிய நகோமியைப் பற்றிக்கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய சொந்த மக்களை விட்டுவிட்டு, தனக்கு இன்னொரு கணவன் கிடைக்காமல் போகும் சாத்தியத்தையும் பொருட்படுத்தாமல் இருந்தாள். தன்னுடைய சொந்த மக்களிடம் போகும்படி நகோமி உந்துவித்தபோது, பைபிளில் பதிவு செய்யப்பட்ட மிக அழகான வார்த்தைகள் சிலவற்றால் ரூத் பதிலளித்தாள்: “நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்.” (ரூத் 1:16, 17) யூதமுறைப்படியான திருமண ஏற்பாட்டின்கீழ் வயதான போவாசைத் திருமணம் செய்ய மனமுவந்தவளாய் இருந்தபோதும் ரூத் நல்ல குணங்களைக் காண்பித்தாள்.—ரூத், 2 முதல் 4 அதிகாரங்கள்.
5. மக்களுடன் செயல்தொடர்பு கொள்ளுகையில் இயேசு என்ன குணங்களைக் காண்பித்தார்?
5 மக்களுடன் செயல்தொடர்பு கொள்ளுகையில் இயேசு அதேவிதமான மாதிரி வைத்தார். அவர் பொறுமை, பரிவு, தயவு ஆகியவற்றை உடையவராயும் புத்துணர்ச்சியளிப்பவராயும் இருந்தார். அவர், 38 வருடங்களாக நடக்க முடியாமல் ஊனமுற்றிருந்த ஓர் ஏழை மனிதனிடம் தனிப்பட்ட அக்கறை எடுத்து அவனைக் குணப்படுத்தினார். விதவைகளுக்கு ஆதரவு காட்டினார். (லூக்கா 7:11-15; யோவான் 5:1-9) வாதனையின் கழுமரத்தில் அவருடைய வேதனையுள்ள மரணத்தின் விசனமான சமயத்திலுங்கூட, தன்னுடைய 50-களின் துவக்கத்தில் இருந்திருக்கக்கூடிய தம்முடைய தாய் பராமரிக்கப்படுவதை நிச்சயப்படுத்திக்கொண்டார். தம்முடைய மாய்மாலமான பகைவரைத் தவிர மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் இயேசு புத்துணர்ச்சியளிக்கும் கூட்டாளியாக இருந்தார். இவ்வாறு அவரால் சொல்ல முடிந்தது: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.”—மத்தேயு 9:36; 11:28, 29; யோவான் 19:25-27.
அன்பாதரவான கவனத்திற்குத் தகுதியுடையவர்கள் யார்?
6. (அ) விசேஷித்த கவனிப்பிற்குத் தகுதியுடையவர்கள் யார்? (ஆ) நம்மைநாமே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
6 யெகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் பராமரித்தலைப்பற்றிய விஷயத்தில் அத்தகைய நல்ல முன்மாதிரிகளை வைத்திருப்பதால், ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அவர்களுடைய மாதிரியைப் பின்பற்றுவது பொருத்தமாகவே இருக்கிறது. நம் மத்தியில், பல வருடங்களாக வருத்தப்பட்டு பாரஞ்சுமந்திருக்கிற சிலரைக் கொண்டிருக்கிறோம்—தங்களுடைய வாழ்க்கையின் தளர்ச்சியான வருடங்களில் நுழைந்திருக்கும் வயதான சகோதர சகோதரிகள். சிலர் நம்முடைய பெற்றோராக அல்லது தாத்தா பாட்டிகளாக இருக்கக்கூடும். அவர்களை நாம் குறைவாக மதிப்பிடுகிறோமா? அவர்களைத் தாழ்வாக நடத்துகிறோமா? அல்லது அவர்களுடைய பரந்த அனுபவத்தையும் ஞானத்தையும் உண்மையிலேயே போற்றுகிறோமா? வயோதிபத்திற்குப் பொதுவானதாக இருக்கும் விநோதமான தனிப்பண்புகளாலும் குற்றங்குறைகளாலும் சிலர் நம்முடைய பொறுமையைச் சோதிப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், ‘அப்படிப்பட்ட சூழ்நிலைகளின்கீழ் நான் எவ்வளவு வித்தியாசப்பட்டவனாய் இருப்பேன்?’
7. வயதானவர்களிடம் ஒற்றுணர்வைக் காட்டுவதற்கான தேவையை எது விளக்கிக்காட்டுகிறது?
7 மத்தியக் கிழக்கிலிருந்து, வயதானவர்களுக்காக ஓர் இளம் பெண்ணின் பரிவைப்பற்றிய ஓர் உருக்கமான கதை உள்ளது. சமையலறையில் ஒரு பாட்டி உதவி செய்துக்கொண்டிருக்கையில், எதிர்பாராமல் ஒரு பீங்கான் தட்டை கீழேபோட்டு உடைத்துவிட்டாள். தான் திறம்பட செய்யாத காரியத்தைக்குறித்து அவள் வருத்தப்பட்டாள்; அவளுடைய மகள் இன்னும் அதிகமாக எரிச்சலடைந்தாள். பின்னர், அவள் தன் சொந்த சிறிய மகளை அழைத்து, உள்ளூர் கடைக்கு அனுப்பி ஓர் உடைக்கமுடியாத மரக்கட்டை தட்டை பாட்டிக்கு வாங்கும்படி அனுப்பினாள். அந்தச் சிறுமி இரண்டு மரக்கட்டைத் தட்டுகளுடன் திரும்பி வந்தாள். அவளுடைய தாய் வினவினாள்: “ஏன் இரண்டு தட்டுகளை வாங்கினாய்?” பேத்தி தயக்கத்துடன் பதிலளித்தாள்: “ஒன்று பாட்டிக்கு, மற்றொன்று நீங்கள் வயதாகும்போது உங்களுக்கு.” ஆம், இந்த உலகில் நாம் அனைவரும் வயதாகும் எதிர்நோக்கை எதிர்ப்படுகிறோம். பொறுமையாகவும் தயவாகவும் நடத்தப்படுவதை நாம் போற்றமாட்டோமா?—சங்கீதம் 71:9.
8, 9. (அ) நம் மத்தியிலுள்ள வயதானவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும்? (ஆ) சமீபத்தில் கிறிஸ்தவர்களான சிலர் எதை நினைவில் வைக்கவேண்டியது அவசியம்?
8 நம்முடைய வயதான சகோதர சகோதரிகளில் பலர் கடந்த காலத்தில் உண்மையான கிறிஸ்தவ நடவடிக்கையின் ஒரு நீண்டகாலப் பதிவைக் கொண்டிருக்கின்றனர் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். நம்முடைய மதிப்பிற்கும் அன்பாதரவான கவனிப்பிற்கும், நம்முடைய தயவான உதவிக்கும் உற்சாகத்திற்கும் அவர்கள் நிச்சயமாகத் தகுதியுடையவர்களாய் இருக்கின்றனர். ஞானி சரியாகவே சொன்னார்: “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.” மேலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், நரைமயிர் மதிக்கப்பட வேண்டும். இந்த வயதான ஆண்களிலும் பெண்களிலும் சிலர் இன்னும் உண்மையுள்ள பயனியர்களாகச் சேவித்துக் கொண்டிருக்கின்றனர்; அநேக ஆண்கள் சபைகளில் மூப்பர்களாக உண்மையுடன் தொடர்ந்து சேவிக்கின்றனர்; சிலர் பயணக் கண்காணிகளாக சிறந்த மாதிரியான வேலையைச் செய்கின்றனர்.—நீதிமொழிகள் 16:31.
9 பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை கூறினார்: “முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு.” (1 தீமோத்தேயு 5:1, 2) அவமதிப்பைக் காட்டும் உலகிலிருந்து சமீபத்தில் கிறிஸ்தவ சபைக்குள் வந்திருப்பவர்கள், அன்பின் அடிப்படையில் சொல்லப்பட்ட பவுலின் வார்த்தைகளைக் குறிப்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். இளைஞரே, பள்ளியில் நீங்கள் பார்த்திருப்பவர்களின் கெட்ட மனநிலைகளைப் பின்பற்றாதிருங்கள். வயதான சாட்சிகளின் தயவுள்ள ஆலோசனையை எதிர்க்காதீர்கள். (1 கொரிந்தியர் 13:4-8; எபிரெயர் 12:5, 6, 11) என்றாலும், உடல்நலக் குறைவு அல்லது பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாக வயதானவர்களுக்கு உதவி தேவைப்படுகையில், அவர்களுக்கு உதவி செய்வதற்கான முக்கிய உத்திரவாதத்தை உடையவர்கள் யார்?
வயதானவர்களைப் பராமரிப்பதில் குடும்பத்தின் பங்கு
10, 11. (அ) பைபிளின்படி, வயதானவர்களைக் கவனிப்பதற்கு யார் முக்கிய பங்கை வகிக்கவேண்டும்? (ஆ) வயதானவர்களைக் கவனிப்பது ஏன் எப்போதும் எளிதாக இருப்பதில்லை?
10 ஆரம்ப கிறிஸ்தவ சபையில், விதவைகளைக் கவனிப்பதில் பிரச்னைகள் எழும்பின. அப்படிப்பட்ட தேவைகள் கவனிக்கப்பட வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு குறிப்பிட்டார்? “உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு. விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது. ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”—1 தீமோத்தேயு 5:3, 4, 8.
11 தேவையான சமயங்களில், வயதானவர்களுக்கு உதவுவதற்கு நெருங்கிய குடும்ப அங்கத்தினர்கள் முதலானவர்களாய் இருக்க வேண்டும்.a இந்த வழியில், அன்பு, வேலை, பராமரிப்பு ஆகியவற்றை வருடக்கணக்கில் அளித்த தங்களுடைய பெற்றோருக்கு, வளர்ந்த பிள்ளைகள் போற்றுதலைக் காண்பிக்கலாம். இது எளிதாக இல்லாதிருக்கக்கூடும். மக்கள் வயதாகையில், அவர்கள் இயல்பாகவே மெதுவாகச் செயல்படுகின்றனர்; சிலர் இயலாதவர்களாகக்கூட ஆகிவிடுகின்றனர். மற்றவர்கள், தன்னலம் கருதுபவர்களாயும், அதிகத்தைக் கேட்பவர்களாயும் மாறிவிடுகின்றனர்; ஒருவேளை தாங்கள் அவ்வாறு இருக்கின்றனர் என்று உணராமல்கூட அப்படிச் செய்கின்றனர். ஆனால் நாம் குழந்தைகளாய் இருந்தபோது, நாமும் தன்னலம் கருதுபவர்களாயும் அதிகத்தைக் கேட்பவர்களாயும் இருக்கவில்லையா? அப்போது நம்முடைய பெற்றோர் ஆவலோடு நம்முடைய உதவிக்கு வரவில்லையா? அவர்களுடைய வயதான காலத்தில் காரியங்கள் மாறி இருக்கின்றன. ஆகவே, என்ன தேவைப்படுகிறது? பரிவும் பொறுமையும்.—1 தெசலோனிக்கேயர் 2:7, 8.
12. வயதானவர்களை—கிறிஸ்தவ சபையிலுள்ள மற்ற எல்லாரையும்—கவனிப்பதற்கு என்ன குணங்கள் தேவைப்படுகின்றன?
12 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதியபோது நடைமுறையான ஆலோசனையைக் கொடுத்தார்: “ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து [யெகோவா, NW] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” இந்த விதமான பரிவையும் அன்பையும் நாம் சபையில் காட்ட வேண்டுமென்றால், அதை இன்னும் அதிகமாகவே நாம் குடும்பத்தில் காட்ட வேண்டாமா?—கொலோசெயர் 3:12-14.
13. வயதான பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளைத் தவிர, வேறு யாருக்கும் உதவி தேவைப்படும்?
13 சிலநேரங்களில் இந்த விதமான உதவி, வெறும் பெற்றோருக்கோ தாத்தா பாட்டிகளுக்கோ மட்டுமல்லாமல் மற்ற வயதான உறவினர்களுக்கும் தேவைப்படக்கூடும். பிள்ளைகளைக் கொண்டிராத சில வயதானவர்கள், மிஷனரி ஊழியத்தில், பயண ஊழியத்தில், மற்ற முழு நேர ஊழியத்தில் பல வருடங்கள் சேவித்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் உண்மையிலேயே ராஜ்ய அக்கறைகளை முதலில் கொண்டிருந்திருக்கிறார்கள். (மத்தேயு 6:33) அவர்களுக்கு ஒரு பராமரிக்கும் உணர்வைக் காண்பிப்பது பொருத்தமாயிருக்கும் அல்லவா? உவாட்ச் டவர் சொஸையிட்டி வயதான பெத்தேல் அங்கத்தினர்களைக் கவனிக்கும் விதத்தைக் குறித்ததில் நாம் ஒரு நல்ல மாதிரியை நிச்சயமாகக் கொண்டிருக்கிறோம். புரூக்லினிலுள்ள பெத்தேல் தலைமை அலுவலகத்திலும், சொஸையிட்டியின் கிளை அலுவலகங்கள் பலவற்றிலும், இந்த வேலைக்கென்று நியமிக்கப்பட்ட பயிற்றுவிக்கப்பட்ட குடும்ப அங்கத்தினர்களிடமிருந்து, பல வயதான சகோதர சகோதரிகள் தினசரி கவனத்தைப் பெறுகின்றனர். இந்த வயதானவர்களைத் தங்கள் சொந்த பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளைப்போல கவனிப்பதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அதே நேரத்தில், வயதானவர்களின் அனுபவத்திலிருந்து அவர்கள் அதிகத்தைக் கற்றுக்கொள்கின்றனர்.—நீதிமொழிகள் 22:17.
பராமரிப்பதில் சபையின் பங்கு
14. ஆரம்ப கிறிஸ்தவ சபையில் வயதானவர்களுக்காக என்ன ஏற்பாடு செய்யப்பட்டது?
14 வயதானவர்களுக்காக இன்று அநேக நாடுகள் முதிர்-வயது ஓய்வு ஊதிய முறைகளையும் அரசால் கொடுக்கப்படும் மருத்துவ கவனிப்பையும் கொண்டிருக்கின்றன. அவற்றைப் பெற உரிமையுடைவர்களாய் இருக்கிறார்கள் என்றால் கிறிஸ்தவர்கள் இந்த ஏற்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும், முதல் நூற்றாண்டில், அப்படிப்பட்ட எந்த ஏற்பாடுகளும் இருக்கவில்லை. ஆகவே, துணையற்ற விதவைகளுக்கு உதவும்படி கிறிஸ்தவ சபை சாதகமான படிகளை மேற்கொண்டது. பவுல் குறிப்பிட்டார்: “அறுபது வயதுக்குக் குறையாதவர்களும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி, பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக் குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் [சபை உதவியைப் பெறுவதற்கு] சேர்த்துக் கொள்ளவேண்டும்.” இவ்வாறாக, வயதானவர்களுக்கு உதவி செய்வதில் சபைக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்பதைப் பவுல் காண்பித்தார். விசுவாசத்தில் பிள்ளைகளைக் கொண்டிராத, ஆவிக்குரிய சிந்தை உடைய பெண்கள் அப்படிப்பட்ட உதவிக்குத் தகுதி பெற்றனர்.—1 தீமோத்தேயு 5:9, 10.
15. அரசு உதவியைப் பெறுவதற்கு ஏன் உதவி தேவைப்படக்கூடும்?
15 வயதானவர்களுக்காக அரசின் ஏற்பாடுகள் இருக்கும் இடங்களில், இவை பொதுவாக ஊக்கமிழக்கச் செய்வதாகத் தோன்றும் எழுத்துவேலைகளை உட்படுத்தும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், வயதானவர்கள் விண்ணப்பித்து, பணத்தைச் சென்று வாங்குவதற்கு, அல்லது அத்தகைய உதவியை அதிகரிப்பதற்குக்கூட, சபையிலுள்ள கண்காணிகள் உதவிக்காக ஏற்பாடு செய்வது பொருத்தமானதாக இருக்கிறது. சில நேரங்களில் சூழ்நிலைகளில் மாற்றங்கள் அதிகரிக்கப்பட்ட ஓய்வு ஊதியத்தில் விளைவடையலாம். ஆனால் வயதானவர்கள் கவனிக்கப்படுவதற்காகக் கண்காணிகள் ஒழுங்கமைக்கக்கூடிய மற்றுமநேக நடைமுறையான காரியங்களும் இருக்கின்றன. இவற்றில் சில யாவை?
16, 17. சபையிலுள்ள வயதானவர்களுக்கு என்ன வித்தியாசமான வழிகளில் நாம் உபசரிக்கும் தன்மையைக் காண்பிக்கலாம்?
16 உபசரிக்கும் தன்மை பைபிள் காலங்கள் வரையாகச் செல்லும் ஒரு பழக்கமாக இருக்கிறது. இன்று வரையாக பல மத்திய கிழக்கு நாடுகளில், அந்நியர்களுக்குக் காண்பிக்கப்படும் உபசரிப்பு, ஒரு கப் தேநீர் அல்லது காப்பி கொடுக்கும் வரையாவது செல்கிறது. அப்படியென்றால், பவுல் பின்வருமாறு எழுதியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை: “பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.” (ரோமர் 12:13) உபசரித்தலுக்கான கிரேக்க வார்த்தையாகிய ஃபிலோக்ஸினீயா, “அந்நியர்களுக்கான அன்பு (அவர்களுக்கான பிரியம், அல்லது அவர்களிடம் தயவு) என்று சொல்லர்த்தமாகப் பொருள்படும். கிறிஸ்தவர்கள் அந்நியர்களை உபசரிக்க வேண்டும் என்றால், விசுவாசத்தில் தன்னுடன் சம்பந்தப்பட்டவர்களிடம் இன்னும் அதிகமாகவே உபசரிப்பவராக அவர் இருக்க வேண்டாமா? ஒரு விருந்திற்கான அழைப்பு ஒரு வயதானவரின் வழக்கமான செயல்முறையிலிருந்து ஒரு விரும்பத்தக்க இடைவேளையாக இருக்கும். ஞானம் மற்றும் அனுபவத்தின் குரல் உங்கள் சமூகக் கூட்டுறவுகளில் வேண்டுமானால், வயதானவர்களை உட்படுத்திக் கொள்ளுங்கள்.—லூக்கா 14:12-14-ஐ ஒப்பிடுங்கள்.
17 வயதானவர்கள் உற்சாகப்படுத்தப்படுவதற்கு பல வழிகள் இருக்கின்றன. ராஜ்ய மன்றத்திற்கு அல்லது ஓர் அசெம்பிளிக்கு ஒரு தொகுதியாக காரில் செல்வோமானால், அந்தச் சவாரியை வரவேற்கும் வயதானவர்கள் சிலர் இருக்கிறார்களா? அவர்கள் கேட்பதற்காகக் காத்திராதேயுங்கள். அவர்களைக் கொண்டுச்செல்வதற்கு நீங்களாகவே முன்வாருங்கள். அவர்களுக்காகக் கடைகளுக்குச் சென்று வருவது மற்றொரு நடைமுறையான உதவியாகும். அல்லது அவர்களால் போக முடியும் என்றால், நாம் கடைக்குச் செல்லும்போது நம்முடன் அவர்களைக் கூட்டிச் செல்ல முடியுமா? ஆனால் தேவைப்பட்டால், சற்று ஓய்வெடுத்து, தங்களுடைய சோர்வை அகற்றக்கூடிய இடங்கள் இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். சந்தேகமின்றி, பொறுமையும் தயவும் கேட்கப்படும்; ஆனால் ஒரு வயதானவரின் உண்மையான நன்றியறிதல் மிகவும் பயனளிப்பதாய் இருக்கிறது.—2 கொரிந்தியர் 1:11.
சபைக்கு ஓர் அழகிய சொத்து
18. ஏன் வயதானவர்கள் சபைக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கின்றனர்?
18 சில வெள்ளை அல்லது நரைத்த முடிகளை (வயதின் காரணமான வழுக்கைத் தலைகளையும்) பார்ப்பது சபைக்கு என்னே ஓர் ஆசீர்வாதம்! உயிர்த்துடிப்பும் சுறுசுறுப்புமுள்ள இளைஞர் மத்தியில், ஞானமும் அனுபவமும் தூவப்பட்டிருக்கும்—எந்தச் சபைக்கும் ஓர் உண்மையான சொத்தைக் கொண்டிருக்கிறோம். அவர்களுடைய அறிவு ஒரு கிணற்றிலிருந்து எடுக்கப்படவேண்டிய புத்துயிரளிக்கும் தண்ணீரைப்போல் இருக்கிறது. அது நீதிமொழிகள் 18:4 சொல்வதைப்போல் இருக்கிறது: “மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.” தாங்கள் விரும்பப்படுகின்றனர் மற்றும் போற்றுதல் அளிக்கப்படுகின்றனர் என்பதை உணர வயதானவர்களுக்கு எவ்வளவு உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது!—சங்கீதம் 92:15 ஒப்பிடவும்.
19. தங்களுடைய வயதான பெற்றோருக்காக எப்படி சிலர் தியாகங்களைச் செய்திருக்கின்றனர்?
19 முழுநேர சேவையிலிருக்கும் சிலர், வயதான, நோயுற்ற பெற்றோரைக் கவனிப்பதற்காகத் தங்களுடைய சிலாக்கியங்களை விட்டுவிட்டு வீடு திரும்புவதற்கான தேவையை உணர்ந்திருக்கின்றனர். முன்பு தங்களுக்காகத் தியாகம் செய்தவர்களுக்காக அவர்கள் ஒரு தியாகத்தைச் செய்திருக்கின்றனர். முன்பு மிஷனரிகளாக இருந்து, இன்னும் முழுநேர சேவையிலிருக்கும் ஒரு தம்பதி, தங்களுடைய வயதான பெற்றோரைக் கவனிப்பதற்காக வீடு திரும்பினர். இதை அவர்கள் 20 வருடங்களுக்கு மேலாகச் செய்துவந்திருக்கின்றனர். நான்கு வருடங்களுக்குமுன் அந்த மனிதனின் தாய் ஒரு முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட வேண்டியதாய் இருந்தது. இப்பொழுது தன்னுடைய 60-களில் இருக்கும் அந்தக் கணவர் ஒவ்வொரு நாளும் தன்னுடைய 93-வயது தாயைப் பார்க்கச் செல்கிறார். அவர் விவரிக்கிறார்: “நான் அவளை எப்படி கைவிட முடியும்? அவள் என்னுடைய தாய்!” மற்ற சந்தர்ப்பங்களில், வயதானவர்களின் பிள்ளைகள் தங்களுடைய நியமிப்புகளில் தொடர்ந்திருக்கும்படி, சபைகளும் தனிநபர்களும் அவர்களைக் கவனிக்க முன்வந்திருக்கின்றனர். அத்தகைய தன்னலமற்ற அன்பும் அதிக பாராட்டுதலுக்கு உரியது. ஒவ்வொரு சூழ்நிலையும் மனச்சாட்சிப்பூர்வமாகக் கையாளப்பட வேண்டும்; ஏனென்றால் வயதானவர்கள் புறக்கணிக்கப்படக்கூடாது. உங்களுடைய வயதான பெற்றோரை நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பதைக் காண்பியுங்கள்.—யாத்திராகமம் 20:12; எபேசியர் 6:2, 3.
20. வயதானவர்களைக் கவனிப்பதைக் குறித்ததில் யெகோவா நமக்கு என்ன முன்மாதிரியை அளித்திருக்கிறார்?
20 உண்மையில், நம்முடைய வயதான சகோதர சகோதரிகள் ஒரு குடும்பத்துக்கு அல்லது ஒரு சபைக்கு ஓர் அழகின் கிரீடமாக இருக்கின்றனர். யெகோவா சொன்னார்: “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.” கிறிஸ்தவக் குடும்பத்திலுள்ள நம்முடைய வயதான சகோதர சகோதரிகளிடமாக அதே பொறுமையையும் கவனிப்பையும் நாம் காண்பிப்போமாக.—ஏசாயா 46:4; நீதிமொழிகள் 16:31.
[அடிக்குறிப்புகள்]
a வயதானவர்களுக்கு உதவி செய்வதற்கு குடும்ப அங்கத்தினர்கள் என்ன செய்யலாம் என்பதைப்பற்றிய விவரமான ஆலோசனைகளுக்கு, ஆங்கில காவற்கோபுரம், டிசம்பர் 1, 1987-ஐ பார்க்கவும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ வயதானவர்களைக் கவனிப்பதைக் குறித்ததில் என்ன பைபிள் முன்மாதிரிகளை நாம் கொண்டிருக்கிறோம்?
◻ நாம் வயதானவர்களை எப்படி நடத்தவேண்டும்?
◻ வயதான அன்பானவர்களை குடும்ப அங்கத்தினர்கள் எப்படி கவனிக்க வேண்டும்?
◻ வயதானவர்களுக்கு உதவிசெய்ய சபை என்ன செய்யலாம்?
◻ வயதானவர்கள் ஏன் நம் எல்லாருக்கும் ஓர் ஆசீர்வாதமாக இருக்கின்றனர்?
[பக்கம் 23-ன் படம்]
வயதான நகோமிக்கு ரூத் இரக்கத்தையும் மதிப்பையும் காண்பித்தாள்
[பக்கம் 24-ன் படம்]
வயதானவர்கள் சபையின் விலைமதிக்கத்தக்க அங்கத்தினர்கள்