முதியோரின் அக்கறைகளில் கண்ணுங் கருத்துமாய் இருத்தல்
“தனிப்பட்ட அக்கறை சார்ந்த உங்களுடைய சொந்த காரியங்களில் மட்டுமல்ல, ஆனால் மற்றவர்களுடைய தனிப்பட்ட அக்கறை சார்ந்த காரியங்களிலும் கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டும்.”—பிலிப்பியர் 2:4, NW.
பொது சகாப்தம் 33-ன் பெந்தேகொஸ்தே நாளுக்குச் சற்று பின்பு, [கிறிஸ்தவ சபையில்] “கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் [தேவையிலிருந்தவர்களுக்கு உணவு பரிமாறுதலின் பேரில்] திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.” இந்த விதவைகளில் பலர் வயது முதிர்ந்தவர்களாகவும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியாத நிலையிலிருந்தவர்களாகவும் இருந்தனர் என்பதில் சந்தேகம் இல்லை. என்றபோதிலும், அப்போஸ்தலர்கள் தாமே குறுக்கிட்டு பின்வருமாறு சொன்னார்கள்: “பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள்; அவர்களை இந்த [அவசியமான, NW] வேலைக்காக ஏற்படுத்துவோம்.”—அப்போஸ்தலர் 6:1-3.
2 எனவே தேவையிலிருந்தவர்களைக் கவனிப்பது “அவசியமான வேலை” என்பதாகப் பூர்வ கிறிஸ்தவர்கள் கருதினார்கள். பல வருடங்களுக்குப் பின்பு சீஷனாகிய யாக்கோபு பின்வருமாறு எழுதினான்: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.” (யாக்கோபு 1:27) அப்படியென்றால், முழு முக்கியத்துவமுடைய பிரசங்க வேலை அசட்டை செய்யப்பட்டது என்று பொருள்படுமா? இல்லை, விதவைகளுக்கான நிவாரண பணிகள் சரியான விதத்தில் நிறைவேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்பு, “தேவ வசனம் விருத்தியடைந்தது, சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று.”—அப்போஸ்தலர் 6:7.
3 இன்று நாம் “கையாளுவதற்குக் கடினமான காலங்களில்,” வாழ்ந்து கொண்டிருக்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW] குடும்ப வாழ்க்கையும் உலகப்பிரகாரமான வேலையும் உட்படுத்தும் காரியங்களை நாம் கவனிக்க வேண்டியதாயிருப்பதால் முதியோரின் தேவைகளைக் கவனிப்பதற்கு வேண்டிய பெலத்தையும்—அல்லது ஆர்வத்தையும் நாம் இழக்க நேரிடும். எனவேதான் பிலிப்பியர் 2:4 பொருத்தமாகவே நம்மைப் பின்வருமாறு ஊக்குவிக்கிறது: “தனிப்பட்ட அக்கறை சார்ந்த உங்களுடைய சொந்த காரியங்களில் மட்டுமல்ல, ஆனால் மற்றவர்களுடைய தனிப்பட்ட அக்கறை சார்ந்த காரியங்களிலும் கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டும்.” (NW) இதை சமநிலையுடன் நடைமுறையான விதத்தில் செயல்படுத்துவது எப்படி?
விதவைகளைக் கனம்பண்ணுதல்
4 சபையிலுள்ள விதவைகளைப் பூர்வ கிறிஸ்தவர்கள் எப்படிக் கவனித்து வந்தார்கள் என்பதைப் பவுல் 1 தீமோத்தேயு 5-ம் அதிகாரத்தில் காண்பிக்கிறான். அவன் தீமோத்தேயுவிடம்: “உண்மையில் ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு.” (வசனம் 3, தி.மொ.) நிதி சம்பந்தப்பட்ட ஆதரவை ஒழுங்காகக் கொடுப்பதன்மூலம் வயதான விதவைகள் விசேஷ கனத்திற்குரியவர்களாகத் தெரிந்து கொள்ளப்பட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எல்லாவிதமான காணக்கூடிய ஆதரவிலிருந்தும் துண்டிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் மற்றும் ‘தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவர்களாய் இரவும் பகலும் வேண்டுதல்களிலும், ஜெபங்களிலும் நிலைத்திருந்தார்கள்.’ (வசனம் 5) பராமரிக்கப்படவேண்டியதன் சம்பந்தமான அவர்களுடைய ஜெபங்கள் எப்படிக் கேட்கப்பட்டது? சபையின் மூலமாக. ஒழுங்கான ஏற்பாட்டின் மூலமாக தகுதியுள்ள விதவைகள் அளவாகப் பராமரிக்கப்பட்டார்கள். விதவை ஒருத்தி தன்னை ஆதரித்துக்கொள்ளுமளவுக்கு நிதி வசதி உடையவளாய் இருந்தால், அல்லது அவளை ஆதரிக்கும் நிலையில் உறவினர்கள் இருந்தால், இப்படிப்பட்ட பராமரிப்பு ஏற்பாடுகள் அவளுக்கு அவசியமற்றிருந்தது.—வசனங்கள் 4, 16.
5 “சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே [ஆவிக்குரிய பிரகாரமாய்] செத்தவள்,” என்று பவுல் எச்சரிக்கிறான். (வசனம் 6) கிங்டம் இன்டர்லீனயர் சொல்லர்த்தமாக மொழிபெயர்த்திருப்பதுபோல், சிலர் எந்த விதத்தில் “சிற்றின்ப நாட்டமுடைய நடத்தையுடையவராக” இருந்தனர் என்பதைப் பவுல் விளக்கவில்லை. சிலர் தங்களுடைய “காமவிகார” வேட்கையுடன் போராடிக் கொண்டிருந்திருக்கலாம். என்றபோதிலும் லிடல் & ஸ்காட்ஸ் கிரேக்க-ஆங்கில சொற்களஞ்சியத்தின்படி “சிற்றின்ப நாட்டமுடைய நடத்தை” ‘சொகுசான அல்லது சலுகைகள் நிறைந்த வாழ்க்கையையும் உட்படுத்தியிருக்கக்கூடும்’. சபை தங்களை செளகரியமாக வைத்துக்கொள்ள வேண்டும், அளவுகடந்த விதத்தில் நிதியுதவி அளிக்கப்பட வேண்டும், அளவுகடந்த சலுகைகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று சிலர் விரும்பியிருக்கக்கூடும். எப்படியிருந்தாலும், சபையின் ஆதரவைப் பெறுவதற்கு அப்படிப்பட்டவர்கள் தகுதிபெறவில்லை என்று பவுல் குறிப்பிடுகிறான்.
6 பவுல் தொடர்ந்து சொன்னதாவது: “அறுபது வயதுக்குக் குறையாதவள், [நிதியுதவி பெற்றிடும்] விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.” பவுலின் நாட்களில் 60 வயதைக் கடந்த ஒரு பெண் தன்னைத் தானே ஆதரித்துக் கொள்ள முடியாதவளும், விவாகஞ் செய்து கொள்ளும் நிலையிலில்லாதவளுமாய்க் கருதப்பட்டாள்.a மறுபட்சத்தில், “இளவயதுள்ள விதவைகளை அதிலே [அந்தப் பட்டியலிலே] சேர்த்துக் கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங் கொள்ளும்போது விவாகம் பண்ண மனதாகி, முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள்.—வசனங்கள் 9, 11, 12.
7 ‘அந்தப் பட்டியல்’ ஒருவேளை இளம் விதவைகளுக்கும் இடங்கொடுத்திருந்தால், சிலர், தாங்கள் விவாகமின்றி இருந்துவிடலாம் என்ற அவசர முடிவுக்கு வந்துவிட்டிருக்கலாம். ஆனால், காலங்கள் செல்லச் செல்ல, தங்களுடைய “காமவிகார வேட்கையைக்” கட்டுப்படுத்துவதைக் கடினமாகக் கண்டு விவாகஞ் செய்துகொள்ள விரும்பக்கூடும். இப்படிச் செய்வதன்மூலம் விவாகமின்றி இருந்துவிட வேண்டும் என்று தாங்கள் “முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே ஆக்கினைக்குட்படுவார்கள்.” (பிரசங்கி 5:2-6-ஐ ஒப்பிடவும்) இப்படிப்பட்ட பிரச்னைகளைத் தவிர்க்கும்படியாக பவுல் பின்வருமாறு கூறினான்; “ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம் பண்ணவும் பிள்ளைகளைப் பெறவும் . . . வேண்டுமென்றிருக்கிறேன்.”—வசனம் 14.
8 நல்ல கிறிஸ்தவ கிரியைகளின் நீண்ட பதிவை உடையவர்களுக்கு மட்டுமே அந்தப் பட்டியலில் இடமிருக்கும்படியாக அப்போஸ்தலன் அந்தப் பட்டியலைக் கட்டுப்படுத்தினான். (வசனம் 10) இப்படியாக சோம்பேறிகளுக்கு அல்லது பேராசையுள்ளவர்களுக்கு, சபை, “நலன் காக்கும் அரசு” அல்ல. (2 தெசலோனிக்கேயர் 3:10, 11) ஆனால் முதிர்வயதான ஆண்கள் அல்லது இளவயது விதவைகளைப் பற்றியதென்ன? அப்படிப்பட்டவர்கள் தேவையிலிருக்க நேரிட்டால், சபையின் அங்கத்தினர்கள் தனிப்பட்டவிதத்தில் கவனித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.—1 யோவான் 3:17, 18-ஐ ஒப்பிடவும்.
9 முதல் நூற்றாண்டு சபைகளுக்கு இப்படிப்பட்ட ஏற்பாடுகள் போதுமானவையாக இருந்திருக்கும். ஆனால் தி எக்ஸ்பொஸிட்டர்ஸ் பைபிள் கமன்ட்டரி கூறுவதுபோல்: “இன்று ஈட்டுறுதி வருமானம், சமூக பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவை இருப்பதால் நிலைமை மிகவும் வித்தியாசமாயிருக்கிறது.” சமூக மற்றும் பொருளாதார நிலை மாறுபட்டிருப்பதால், முதியோர் பொருளாதார உதவி பெறுவது சம்பந்தப்பட்ட ஒரு பட்டியலை சபைகள் கொண்டிருக்கவேண்டிய அவசியத்தை மட்டுப்படுத்துகிறது. என்றபோதிலும் தீமோத்தேயுவுக்குப் பவுல் சொன்ன வார்த்தைகள் பின்வரும் காரியங்களை நாம் மதித்துணரச் செய்கிறது: (1) முதியோரின் பிரச்னைகளைக் குறித்து சபையிலுள்ள எல்லோரும்—விசேஷமாக மூப்பர்கள் அக்கறையாக இருக்க வேண்டும். (2) முதியோரைக் கவனிப்பதற்கான ஏற்பாடுகள் சரியாக ஒழுங்குபடுத்தப்பட்டதாயிருக்க வேண்டும். (3) அப்படிப்பட்ட கவனிப்பு உண்மையான தேவையிலிருப்பவர்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்பட்டதாயிருக்க வேண்டும்.
மூப்பர்களாக, அவர்களுடைய அக்கறைகளைக் கண்ணுங் கருத்துமாய்க் கவனித்தல்
10 வயது முதிர்ந்தவர்களுக்கு அக்கறைக் காண்பிப்பதில் கண்காணிகள் எப்படிக் காரியங்களை முன்னின்று வழிநடத்துகின்றனர்? அவர்களுடைய கூட்டங்களில் சிந்திக்கப்படுவதற்கான குறிப்புப் பட்டியலில் அவ்வப்போது முதியோரின் தேவைகளையும் உட்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக ஏதாவது உதவி தேவைப்படுமானால், அதைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். அவர்கள் தனிப்பட்ட விதத்தில் கவனிக்க முடியாமலிருக்கக்கூடும். என்றாலும் சபையில் உதவி செய்ய மனமுள்ள ஆட்கள்—இளைஞர்கள் உட்பட—அநேகர் இருக்கக்கூடும். அப்படிப்பட்ட கவனிப்பை அவர்கள் மேற்பார்வையிடக்கூடும். ஒருவேளை ஒரு நபருக்கு அளிக்கப்படும் கவனிப்பை ஒழுங்குபடுத்தும் உத்தரவாதத்தை ஒரு சகோதரருக்கு நியமித்துவிடலாம்.
11 சாலொமோனின் ஆலோசனை: “உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்.” முதியோருடைய “குறைவில் அவர்களுக்கு உதவி செய்வதை” நன்கு உறுதிபடுத்திக்கொள்ள கண்காணிகள் அவர்களைத் தனிப்பட்ட விதத்தில் சந்திக்க வேண்டும். (ரோமர் 12:13) ஒரு பயணக் கண்காணி பின்வருமாறு சொன்னார்: “முதியோர் சிலர் அதிக சுதந்தரமாக இருப்பதால், என்ன செய்யவேண்டும் என்று அவர்களைக் கேட்பதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அவர்களுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்பதை யூகித்து அதைச் செய்வதில் ஈடுபடுவதே சிறந்தது. ஜப்பானிலுள்ள கண்காணிகள் சிலர், சபையில் 80-வயதுடைய ஒரு குறிப்பிட்ட சகோதரிக்கு அதிக கவனிப்பு தேவைப்பட்டது என்பதைக் கண்டனர். அவர்கள் அறிக்கை செய்வதாவது: “எவராவது ஒருவர் அவர்களை ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் இருமுறை சந்திக்கும்படியாக, அல்லது அவர்களோடு தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளும்படியாக நாங்கள் ஏற்பாடு செய்து அது செயலாவதைக் கவனித்து வருகிறோம்.”—மத்தேயு 25:36-ஐ ஒப்பிடவும்.
12 சபையிலுள்ள முதியோர்கூட சபைக்கூட்டங்களின் நன்மைகளைப் பெற்றுக் கொள்ளும் விஷயத்திலும் கண்காணிகள் அக்கறையுள்ளவர்களாயிருக்கிறார்கள். (எபிரெயர் 10:24, 25) கூட்டங்களுக்குச் சென்று வர சிலருக்கு போக்குவரத்து உதவி தேவைப்படுமா? சரியாக காதுகேளாத நிலையிலுள்ளவர்கள் கூட்டங்களில் “கேட்டு உணர” முடியாதவர்களாய் இருக்கிறார்களா? (மத்தேயு 15:10) ஒருவேளை அவர்களுக்கு தலைமேல் அணியப்படும் ‘குரல்வாங்கிகள்’ (head phones) பொருத்தப்படுவது நடைமுறையானதாக இருக்கக்கூடும். இதுபோல, அநேக சபைகள் ஊனமுற்றவர்கள் வீட்டிலிருந்தே கேட்பதற்காக கூட்டங்களின் நிகழ்ச்சிகளைத் தொலைபேசியின் மூலம் ஒலிபரப்புகின்றனர். கூட்டங்களுக்கு வரமுடியாதளவுக்கு நோய்ப்பட்டிருப்பவர்களுக்காக மற்றவர்கள் கூட்டங்களின் நிகழ்ச்சிகளை டேப் செய்கின்றனர். சிலருடைய விஷயத்தில், அவர்களுக்காக டேப் ரிக்காடர்களை வாங்கிக்கொடுத்திருக்கின்றனர். டேப்களைப் பற்றி சொல்லும்போது, ஜெர்மனியிலுள்ள ஒரு மூப்பர் குறிப்பிட்டதாவது: “ஆவிக்குரிய விதத்தில் பக்திவிருத்திக்கேதுவாயில்லாத நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அநேக முதியோரை நான் சந்தித்திருக்கிறேன்.” அதற்கு மாறாக சங்கம் தயாரித்திருக்கும் ராஜ்ய கீதங்களும் பைபிள் வாசிப்பும் அடங்கிய டேப்களைப் போட்டு கேட்க அவர்களை ஏன் உற்சாகப்படுத்தக்கூடாது?
13 சபையின் சில மூத்த அங்கத்தினர்கள் ஒழுங்கீன அல்லது செயலற்ற பிரசங்கிகளாக ஆகிவிட்டிருக்கிறார்கள். என்றபோதிலும் “ராஜ்யத்தின் நற்செய்தியை” அறிவிப்பதற்கு வயது தடையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. (மத்தேயு 24:14) உங்களோடு வெளி ஊழியத்தில் கலந்து கொள்வதற்காக உங்கள் சாதாரண அழைப்புக்குச் சிலர் நல்ல விதத்தில் பிரதிபலிக்கக்கூடும். வெளி ஊழிய அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்வதன்மூலம் பிரசங்கிப்பதற்கான ஆர்வத்தை அவர்களில் தூண்டக்கூடியவர்களாய் இருக்கலாம். மாடி வீடுகளுக்குச் செல்வது அவர்களுக்குப் பிரச்னையாக இருந்தால், மின் ஏற்றங்களையுடைய மாடி வீடுகளை அல்லது அதிக படிகள் இல்லாத வீடுகளைச் சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். முதியோரை சில பிரஸ்தாபிகள் தங்களுடைய பைபிள் படிப்புகளுக்குக் கூட்டிச் செல்லலாம்—அல்லது படிப்பை அந்த முதியோரின் வீட்டில் நடத்தலாம்.
14 ‘பணம் ஒரு பாதுகாப்பு’ (பிரசங்கி 7:12) என்றாலும், பல முதிய சகோதர சகோதரிகள் கடுமையான பண நெருக்கடியிலிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய உறவினர்கள் இல்லாமலிருக்கலாம். இப்படிப்பட்ட தேவை இருக்கிறது என்பதை அறிய வரும்போது, சபையிலுள்ள தனிப்பட்ட அங்கத்தினர்கள் பொதுவாக அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்ய சந்தோஷப்படுவார்கள். (யாக்கோபு 2:15-17) அதே சமயத்தில் அப்படிப்பட்டவர்களுக்காக என்னென்ன அரசாங்க சேவைகள் அல்லது சமூக சேவைகள், ஈட்டுறுதி ஆவணங்கள், ஓய்வூதியங்கள் போன்றவை இருக்கின்றன என்பதையும் பார்க்கலாம். என்றபோதிலும் சில நாடுகளில் அப்படிப்பட்ட சேவைகளும் வசதிகளும் கிடைப்பது கடினமாயிருக்கக்கூடும். அப்பொழுது 1 தீமோத்தேயு 5-ம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனையைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழி இல்லாமலிருக்கலாம், அதாவது சபை முழுவதுமாக சேர்ந்து நிவாரணமளிக்க ஏற்பாடு செய்யலாம். (நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல், பக்கங்கள் 122, 123-ஐ பார்க்கவும்)
நைஜீரியாவிலுள்ள பிரஸ்தாபிகள் 82 வயது ஒழுங்கான பயனியருக்கும் அவருடைய மனைவிக்கும் ஒழுங்காக பொருளதவி செய்து வந்தார்கள். அவர்கள் வசித்து வந்த கட்டடத்தை இடிப்பதற்கான உத்தரவை அரசு பிறப்பித்தபோது, அவர்களுக்கு வேறொரு இடம் கிடைக்கும் வரையாக ராஜ்ய மன்றத்தோடு இணைக்கப்பட்டிருந்த ஓர் அறையில் அவர்கள் தங்கிக் கொள்வதற்காக அந்தச் சகோதரர்கள் ஏற்பாடு செய்தனர்.
பிரேஸிலில் ஒரு முதிர் வயது தம்பதியைக் கவனிப்பதற்காக ஒரு செவிலியரை சபை ஏற்பாடு செய்தது. அதே சமயத்தில், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும், உணவு தயாரித்துக் கொடுப்பதற்கும், மற்ற சரீர உதவிகளைச் செய்வதற்கும் ஒரு சகோதரியை ஏற்பாடு செய்தது. அவர்களுக்காக சபை ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கியது.
15 முதல் நூற்றாண்டில் இருந்தது போலவே அப்படிப்பட்ட ஏற்பாடுகள் உண்மையிலேயே தேவையிலிருக்கும் தகுதிவாய்ந்த நபருக்கே உரியது. கண்காணிகள், அளவுக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புகளை அல்லது நியாயமற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யும் கடமையிலில்லை. முதியோருங்கூட ‘கண்ணைத் தெளிவாக’ வைத்துக்கொள்ள வேண்டும்.—லூக்கா 11:34.
தனிப்பட்டவர்களாக அவர்களுடைய அக்கறைகளில் கண்ணுங் கருத்துமாய் இருத்தல்
16 சில நாட்களுக்கு முன்பு ஒரு முதிர்வயது சகோதரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அவளுக்கு ஊட்டச்சத்து குறைவுபட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். “சபையில் இன்னும் அநேகர் அவளில் தனிப்பட்ட அக்கறை செலுத்தியிருப்பார்களானால், அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது” என்று ஒரு மூப்பர் எழுதினார். ஆம், மூப்பர்கள் மட்டும்தான் முதியோர் பேரில் அக்கறை காண்பிக்க வேண்டும் என்பதல்ல. பவுல் சொன்னான்: “நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.”—எபேசியர் 4:25.
17 உங்களில் சிலர் வயது முதிர்ந்தவர்களாய், ஏறகெனவே தனிப்பட்ட உத்தரவாதங்களைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ‘தனிப்பட்ட அக்கறை சார்ந்த உங்களுடைய காரியங்களில் மட்டும் கண்ணுங் கருத்துமாய் இருக்க’ வேண்டாம். (பிலிப்பியர் 2:4) தனிப்பட்ட காரியங்களை சரியானவிதத்தில் ஒழுங்குபடுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் அடிக்கடி ‘காலத்தை வாங்க முடியும்.’ (எபேசியர் 5:16) உதாரணமாக, வயதான ஒருவரை வெளி ஊழியத்திற்குப் பின்பு உங்களால் சந்திக்க முடியுமா? சிலருக்கு வார நாட்கள் தானே தனிமையின் நாட்களாக இருக்கக்கூடும். வயதானவர்களைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் விஷயத்தில் இளைஞரும் தங்களை உட்படுத்திக் கொள்ளலாம். ஒரு இளைஞனின் உதவியைப் பெற்று வந்த ஒரு சகோதரி “யெகோவா தேவனே இந்த இளம் சகோதரன் ஜானுக்காக என் நன்றியை ஏறெடுக்கிறேன். அவன் ஒரு அருமையான பையன்,” என்று ஜெபித்தாள்.
18 கூட்டங்களிலே வயதானவர்களைப் பார்த்து, ஏனோதானோவென்று வாழ்த்துதல் கூறுகிறீர்களா? காது கேட்காதவர்கள் அல்லது சரியாக பேச முடியாதவர்களுடன் உறையாடுவது கடினமாக இருக்கும் என்பது உண்மைதான். முதிர் வயதின் காரணமாக, எல்லா முதியோரும் கலகலவென்று இருக்க மாட்டார்கள். என்றபோதிலும், “பொறுமையுள்ளவன் உத்தமன்.” (பிரசங்கி 7:8) சற்று முயன்றால் உண்மையிலேயே “உற்சாகத்தைப் பரிமாறிக்கொள்ளும்” வாய்ப்பு உருவாகக்கூடும். (ரோமர் 1:12, NW) ஒரு வெளி ஊழிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முற்படுங்கள். காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையில் நீங்கள் வாசித்த ஒரு குறிப்பைப் பகிர்ந்து கொள்ளுங்கள். செவி கொடுத்து கேட்பது இன்னும் மேன்மையானது. (யோபு 32:7-ஐ ஒப்பிடவும்) நீங்கள் சந்தர்ப்பமளித்தால், முதியோர் உங்களோடு பகிர்ந்துகொள்ள அதிகத்தைக் கொண்டிருக்கின்றனர். மூப்பர் ஒருவர் பின்வரும் காரியத்தை ஒப்புக்கொண்டார்: “அந்த வயதான சகோதரரை சந்திப்பதில் நான் ஏராளமான நன்மையைப் பெற்றேன்.”
19 முதியோர் பேரில் உங்களுக்கு இருக்கும் அக்கறை, அப்படிப்பட்டவர்களைக் கவனிக்கும் குடும்பத்தாரிடமும் காண்பிக்கப்பட வேண்டும் அல்லவா? வயதான பெற்றோரைக் கவனித்துவரும் ஒரு தம்பதி பின்வருமாறு அறிக்கை செய்தனர்: “எங்களை உற்சாகப்படுத்துவதற்குப் பதிலாக, சபையிலுள்ள சிலர் எங்களில் குறைகாண ஆரம்பித்தனர். ஒரு சகோதரி சொன்னாள்: ‘நீங்கள் கூட்டத்துக்கு வர தவறுவீர்களானால், ஆவிக்குரிய பிரகாரமாய் வியாதிப்பட்டுவிடுவீர்கள்!’ ஆனால் நாங்கள் கூட்டங்களில் அதிகமாய்க் கலந்து கொள்வதற்கு அவள் எந்த ஒரு உதவியும் செய்ய மனமற்றவளாயிருந்தாள்.” அதுபோல, உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், எனக்குத் தெரியப்படுத்துங்கள் போன்ற அர்த்தமற்ற வாக்குறுதிகளுங்கூட அதிக சோர்வடையச் செய்கிறது. இது, “குளிர்காய்ந்து பசியாறுங்கள்,” என்று சொல்லுவதைவிட மோசமாயிருக்கிறது. (யாக்கோபு 2:16) உங்களுடைய அக்கறையை அல்லது கரிசனையை செயலில் காட்டுவது எவ்வளவு சிறந்தது! ஒரு தம்பதி பின்வருமாறு அறிக்கை செய்கின்றனர்: “நண்பர்கள் அருமையானவர்களும் ஆதரவாகவும் இருந்திருக்கின்றனர்! அம்மாவை சிலர் ஓரிரண்டு நாட்களுக்குக் கவனித்துக் கொள்வதன் மூலம் எங்களுக்குச் சற்று ஓய்வளிக்கின்றனர். மற்றவர்கள் அம்மாவை பைபிள் படிப்புகளுக்கும் கூட்டிச் செல்கிறார்கள். அவர்களுடைய நலங் குறித்து மற்றவர்கள் விசாரிக்கும்போது எங்களுக்கு உற்சாகமாக இருக்கிறது.”
20 நம்மத்தியிலிருக்கும் வயோதிபர் பொதுவாக நல்லவிதத்தில் கவனிக்கப்பட்டு வருகிறார்கள். என்றபோதிலும், இப்படியாகத் தங்களைக் கவனிக்கும் காரியத்தைத் துக்கத்தோடே அல்ல, ஆனால் மகிழ்ச்சியோடே செய்வதற்கு வயதான சாட்சிகள் தாமே என்ன செய்யலாம்? (எபிரெயர் 13:17-ஐ ஒப்பிடவும்) உங்களைக் கவனித்துக் கொள்வதற்காக மூப்பர்கள் செய்யும் ஏற்பாடுகளுடன் ஒத்துழையுங்கள். உங்களுக்காகச் செய்யப்படும் தயவான செயல்கள் எதுவாயிருந்தாலும், அவற்றிற்கு நன்றியையும் போற்றுதலையும் வெளிப்படுத்துங்கள், மற்றும் அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பதையும் குறைகாண்பதையும் தவிர்த்துவிடுங்கள். முதுமையின் வேதனைகளும் நோக்காடுகளும் உண்மையானவை என்றாலும் மகிழ்ச்சியான, நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருக்க முற்படுங்கள்.—நீதிமொழிகள் 15:13.
21 ‘அருமையான சகோதரர்கள். அவர்கள் இல்லையென்றால் நான் என்ன செய்வேனோ, எனக்குத் தெரியாது,’ என்று முதியோர் பலர் சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம். என்றபோதிலும், முதியோரைக் கவனிக்கும் அடிப்படை உத்தரவாதம் அவர்களுடைய பிள்ளைகளைச் சார்ந்தது. இது எதை உட்படுத்துகிறது, இந்தச் சவாலை எப்படிச் சிறந்த விதத்தில் கையாளலாம்? (w87 6/1)
[அடிக்குறிப்புகள்]
a லேவியராகமம் 27:1-7 (ஒரு பொருத்தனையின் மூலம்) ஆலயத்துக்குப் பணிவிடைக்காரர்களாக ‘செலுத்தப்பட்ட’ தனியாட்களை மீட்டுக்கொள்ளுதல் குறித்து பேசுகிறது. மீட்டுக்கொள்ளுதலுக்கான கிரயம் வயதுக்கேற்ப வித்தியாசப்பட்டது. 60 வயதில் இந்தக் கிரயம் வெகுவாகக் குறைந்தது, ஏனென்றால் அந்த வயதிலிருப்பவர் இளைஞரைப் போல் அந்தளவுக்குக் கடினமாக உழைக்க முடியாது என்று கருதப்பட்டது. தி என்ஸைக்ளோபீடியா ஜீதேய்க்கா கூடுதலாகக் குறிப்பிடுவதாவது: “தால்முத்தின் பிரகாரம் முதுமை . . . 60-ல் ஆரம்பமாகிறது.”
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ முதல் நூற்றாண்டில் முதிர் வயதான விதவைகளுக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன?
◻ சபையில் வயதானவர்களைக் கவனிப்பதற்குக் கண்காணிகள் எப்படிக் காரியங்களை ஒழுங்கு படுத்தலாம்?
◻ சபையிலுள்ள தனிப்பட்ட ஆட்கள் எப்படி வயதான சகோதர சகோதரிகளில் தங்கள் அக்கறையை வெளிப்படுத்தலாம்?
◻ தங்களைக் கவனிப்பவர்களுக்கு உதவியாக முதியோர் என்ன செய்யலாம்?
[கேள்விகள்]
1, 2. (எ) முதியோரின் தேவைகளைக் கவனிப்பதில் முதல் நூற்றாண்டு ஆளும்குழு எவ்வாறு அக்கறை காண்பித்தது? (பி) பிரசங்க வேலை அசட்டை செய்யப்படவில்லை என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது,
3. பிலிப்பியர் 2:4-ல் என்ன உற்சாகம் அளிக்கப்படுகிறது? இது குறிப்பாக ஏன் இன்று அதிக பொருத்தமாக இருக்கிறது?
4. (எ) முதல் நூற்றாண்டு சபை ஏன், எப்படி விதவைகளைக் “கனம்பண்ணியது”? (பி) அப்படிப்பட்ட பராமரிப்பு ஏற்பாடுகள் எப்பொழுதுமே அவசியமாயிருந்ததா?
5. (எ) ஒரு சில விதவைகள் எப்படிச் ‘சுகபோகமாய் வாழ்கிறவர்களாய்’ இருந்திருக்கக்கூடும்? (பி) சபை அப்படிப்பட்டவர்களைக் கவனிக்கும் கடமையில் இருந்ததா?
6, 7 மற்றும் அடிக்குறிப்பு. (எ) ‘அந்தப் பட்டியல்’ என்ன? (பி) 60 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் ஏன் ஆதரவைப் பெற தகுதியற்றவர்களாயிருந்தனர்? (சி) இள வயதுள்ள விதவைகள் “ஆக்கினைக்குள்ளாகாதபடிக்கு” அவர்களுக்குப் பவுல் எவ்வாறு உதவினான்?
8. (எ) பவுலின் வழிமுறைகள் சபையை எவ்வாறு பாதுகாத்தது? (பி) தேவையிலிருந்த இளவயது விதவைகளும் வயதான ஆண்களும் கவனிக்கப்பட்டார்களா?
9. (எ) முதியோரைக் கவனிப்பதற்கான இன்றைய ஏற்பாடுகள் ஏன் முதல் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளிலிருந்து வித்தியாசப்படும்? (பி) 1 தீமோத்தேயு 5-ம் அதிகாரத்தில் விதவைகளைப் பற்றிய பவுலின் குறிப்புகள் இன்று நாம் எதை மதித்துணரச் செய்கிறது?
10. முதியோரில் அக்கறை காண்பிக்கும் விஷயத்தில் மூப்பர்கள் எப்படிக் காரியங்களை முன்நின்று ஒழுங்குபடுத்தலாம்?
11. முதியோரின் தேவைகளை மூப்பர்கள் எப்படி அறிந்து கொள்ளலாம்?
12. முதியோர் சபை கூட்டங்களிலிருந்து நன்மை பெறும் காரியத்தில் மூப்பர்கள் எப்படிக் கவனமாயிருக்கலாம்? (பி) சங்கம் தயாரிக்கும் டேப்களை எப்படி நல்லவிதத்தில் பயன்படுத்தலாம்?
13. ராஜ்ய பிரஸ்தாபிகளாக சுறுசுறுப்பாய் நிலைத்திருக்க முதியோர் எப்படி உதவப்படலாம்?
14 மற்றும் பெட்டி. (எ) வயதான ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டால் மூப்பர்கள் என்ன செய்யலாம்? (பி) வயதான பிரஸ்தாபிகளின் தேவைகளை சில சபைகள் எப்படிப் பூர்த்தி செய்திருக்கின்றன?
15. (எ) சபை கொடுக்கமுடிந்த உதவியில் வரம்புகள் உண்டா? (பி) லூக்கா 11:34-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனை அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பவர்களுக்கு எப்படிப் பொருத்தமாக இருக்கும்?
16, 17. (எ) முதியோர்பேரில் மூப்பர்களைத் தவிர மற்றவர்களும் அக்கறை காண்பிப்பது ஏன் முக்கியமானது? (பி) அதிக வேலையாக இருக்கும் பிரஸ்தாபிகளுங்கூட எப்படி முதியோருக்காக ‘நேரத்தை வாங்கலாம்’?
18. (எ) வயதான ஒருவருடன் உரையாடுவது ஏன் சில சமயங்களில் கடினமாக இருக்கக்கூடும்? (பி) வயதான ஒருவரை சந்திப்பதை அல்லது அவரோடு உரையாடுவதை எப்படி இருவருக்கும் பக்திவிருத்திக்கேதுவானதாக ஆக்கலாம்?
19. (எ) முதியோர் பேரில் நமக்கு இருக்கும் கரிசனை யாருக்கும் செல்லுகிறது? (பி) முதியோரைக் கவனித்துவரும் குடும்பங்களுக்கு நாம் உதவக்கூடிய சில வழிகள் யாவை?
20, 21. தங்களைக் கவனித்துக் கொள்வோருக்கு உதவும் வகையில் முதியோர் என்ன செய்யலாம்?
[பக்கம் 13-ன் பெட்டி]
முதியோருக்கு உதவி செய்தல்—சிலர் என்ன செய்கிறார்கள்
பிரேஸிலில் ராஜ்ய மன்றத்திற்கு அருகாமையில் வசித்துவரும் ஒரு சகோதரரின் சரீர தேவைகளைக் கவனிப்பதற்காக அங்குள்ள சபை ஒரு வசதியான வழியைக் கண்டுபிடித்தது. ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்வதற்காக நியமிக்கப்படும் புத்தகப்படிப்புத் தொகுதி அவருடைய வீட்டையும் சுத்தம் செய்கிறது.
உடல் ஊனமுற்ற ஒரு சகோதரர் தேவராஜ்ய பள்ளியில் சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருப்பதற்கு அங்குள்ள மற்றொரு சபை ஒரு எளிதான வழியைக் கண்டுபிடித்தது. பேச்சு கொடுப்பதற்கான அவருடைய சமயம் வரும்போது, அவருடைய வீட்டிற்கு ஓரிரு சகோதரர்களைத் தன்னோடு கூட்டிச் செல்வதற்காக ஒரு சகோதரர் நியமிக்கப்படுகிறார். ஒரு சிறிய கூட்டம் ஜெபத்தோடு ஆரம்பிக்கப்படுகிறது. அந்தச் சகோதரர் தன் பேச்சைக் கொடுக்கிறார். தேவையான ஆலோசனை கொடுக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு எவ்வளவு உற்சாகமளிப்பதாயிருக்கிறது!
இந்தக் காரியத்தில் பயண கண்காணிகள் நல்ல முன்மாதிரிகளாயிருந்திருக்கின்றனர். ஒரு சபையில் சக்கர நாற்காலிக்குக் கட்டுப்படுத்தப்பட்ட வயதான ஒரு சகோதரர் அதிக எரிச்சலடைய ஆரம்பித்ததால், அவரை சந்திப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது. என்றபோதிலும் ஒரு பயண கண்காணி, தான் கொடுத்த படக்காட்சியுடன் கூடிய பேச்சை அவருக்குத் தனிப்பட்ட விதத்தில் கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்த வயது சென்ற சகோதரர் அதைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் சிந்தினார். அந்தப் பயணக் கண்காணி சொல்லுகிறார்: “சிறிது கவனமும் அன்பும் எப்படி இந்தளவுக்குப் பலன்களைக் கொண்டிருக்க முடியும் என்பதைக் காண்பதில் மிகுந்த திருப்தியடைகிறேன்.”
நைஜீரியாவிலுள்ள சில மூப்பர்கள் வயதான சகோதரரைச் சந்திக்கச் சென்றபோது அவர் அதிக வியாதிப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த வயதான சகோதரருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட வேண்டியதாயிருந்தது. ஆனால் அதற்கான பணம் அந்தச் சகோதரரிடம் இல்லை. இந்தத் தேவை சபைக்கு அறிவிக்கப்பட்டபோது, சகோதரர்கள் அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு வேண்டிய பண உதவி அளித்தார்கள். அவரை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்று வரும் பொறுப்பை இரண்டு சகோதரர்கள் மாறி மாறி கவனித்தனர். இதற்காக அவர்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டியதாகவும் இருந்தது. என்றபோதிலும் அந்தச் சகோதரர் நோயிலிருந்து குணமடைந்து அவர் மரிக்கும் வரை நான்கு வருடங்களாக தொடர்ந்து துணைப் பயனியர் சேவையைச் செய்ததைக் கண்டு அந்தச் சகோதரர்கள் அதிகமாக சந்தோஷப்பட்டார்கள்.
பிலிப்பீன்ஸில், வயதான ஒரு சகோதரிக்கு குடும்பம் கிடையாது. அவள் மூன்று வருடங்களாக வியாதியிலிருந்தபோது, அவளைக் கவனிப்பதற்கான ஏற்பாடுகளைச் சபை மேற்கொண்டது அவள் இருப்பதற்காக ஒரு சிறிய இடத்தை ஏற்பாடு செய்து, ஒவ்வொரு நாளும் உணவு கொண்டு வந்து கொடுத்தது, அவளுடைய சுகாதாரத்துக்கடுத்த காரியங்களையும் கவனித்துக் கொண்டது.
[பக்கம் 12-ன் படம்]
சபையிலுள்ள முதியோரைக் கனம்பண்ணுவதில் எல்லோரும் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம்