நம் விதியை கடவுள் முன்கூட்டியே நிர்ணயித்துவிட்டாரா?
“அடிக்கடி தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் முன்விதிக்கப்படுதல் என்ற பதம் பயன்படுத்தப்படாமலே இருந்தால், கற்பனையான மிகப் பல பிரச்சினைகள் தவிர்க்கப்படலாம்.” நீங்கள் “முன்விதிக்கப்படுதல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் அல்லது பயன்படுத்தப்படுவதைக் கேட்டிருந்தால் இது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதாக நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்.
சமீப பிரெஞ்சு கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா டாவோ-வின் பிரகாரம், முன்விதிக்கப்படுதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது. மற்றொரு புத்தகம் சொல்கிறது: “இன்று, முன்விதிக்கப்படுதல் என்பது இனிமேலும் பெரும்பாலானவர்களுக்கு, புராட்டஸ்டன்ட்களுக்குக்கூட, இறையியல் விவாதங்களின் மையப்பொருளாக இல்லை என்று தெரிகிறது.”
என்றபோதிலும், முன்விதிக்கப்படுதலைப் பற்றிய கேள்வி வரலாறு முழுவதிலும் அநேக ஆட்களின் மன அமைதியைக் குலைத்திருக்கிறது. சீர்திருத்தத்தைத் தூண்டிய கருத்து வேற்றுமையின் முக்கிய பகுதியாக இது இருந்தது. கத்தோலிக்க சர்ச்சினுள்ளும்கூட, பல நூற்றாண்டுகளாக இது காரசாரமான விவாதங்களின் பொருளாக இருந்திருக்கிறது. இன்று அதிகமாக விவாதிக்கப்படாவிட்டாலும் அது இன்னும் ஒரு பிரச்சினையாகவே இருந்துவருகிறது. தன்னுடைய விதி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிந்துகொள்ள யார்தான் விரும்பமாட்டார்?
முன்விதிக்கப்படுதல் —வார்த்தையின் பொருள்
சர்ச்சுகளில் “முன்விதிக்கப்படுதல்” என்ற வார்த்தை என்ன பொருள்படுகிறது? டிக்ஷனரி டி தியாலஜி கத்தோலிக் அதை “பெயரால் குறிப்பிடப்படும் ஒரு சிலரை நித்திய வாழ்க்கைக்குக் கொண்டுவருவதற்கு தேவனுடைய நோக்கம்,” என்பதாக கருதுகிறது. “பெயரால் குறிப்பிடப்படும்” தெரிந்துகொள்ளப்பட்டவர்களே, பின்வரும் பதங்களில் ரோமருக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடும் ஆட்கள் என்பதாக பொதுவாக கருதப்படுகிறது: “அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். . . . தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்விதித்திருக்கிறார்; எவர்களை முன்விதித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கியிருக்கிறாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.”—ரோமர் 8:28-30, ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷன்.
சில ஆட்கள் பரலோகங்களில் கிறிஸ்துவின் மகிமையில் பங்குகொள்ளும்பொருட்டு தங்களுடைய பிறப்புக்கு முன்பேயும்கூட, கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டதாக நம்பப்பட்டது. இது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் கேள்விக்கு வழிநடத்துகிறது: கடவுள் தாம் இரட்சிக்க விரும்புகிற மனிதர்களை முழுவதும் தன்னுடைய சொந்த இஷ்டத்தின்படியே தெரிவுசெய்கிறாரா அல்லது கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொள்வதற்கும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் தெரிவு செய்யும் சுயாதீனமும் அதில் ஒரு பங்கும் மனிதர்களுக்கு இருக்கிறதா?
அகஸ்டீன், முன்விதிக்கப்படுதல் நம்பிக்கையின் தந்தை
மற்ற சர்ச் தந்தைமார் ஏற்கெனவே முன்விதிக்கப்படுதலைப் பற்றி எழுதியிருந்த போதிலும், அகஸ்டீனே (பொ.ச. 354-430) கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளின் கோட்பாட்டுக்கு அடித்தளம் போட்டதாக பொதுவாக கருதப்படுகிறார். அகஸ்டீனின் கருத்துப்படி, நீதிமான்கள் நித்திய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும்படி கடவுளால் வெகு காலத்துக்கு முன்பாகவே முன்விதிக்கப்பட்டுவிட்டனர். மறுபட்சத்தில், அநீதிமான்கள் இந்த வார்த்தையின் கண்டிப்பான பொருளின்படி கடவுளால் முன்விதிக்கப்படாவிட்டாலும், அவர்களுடைய பாவங்களுக்காக அவர்கள் பெற தகுதியான தண்டனையை, கண்டனத் தீர்ப்பைப் பெறுவார்கள். அகஸ்டீனின் விளக்கம் தெரிவு செய்யும் சுயாதீனத்துக்கு இடமளிக்காமல், அதிகமான வாக்குவாதங்களுக்கு வழிநடத்தியது.
அகஸ்டீனின் வாரிசுகள்
முன்விதிக்கப்படுதல் மற்றும் தெரிவு செய்யும் சுயாதீனம் சம்பந்தப்பட்ட விவாதம் வரலாற்றின் இடைநிலைக்காலத்தின்போது மீண்டும் மீண்டும் எழும்பினது, விவாதம் சீர்திருத்தத்தின்போது நடவடிக்கை தேவைப்படும் கட்டத்துக்கு வந்தது. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் எதிர்கால தகுதிகளை அல்லது நற்கிரியைகளை முன்னறியாமலே கடவுளுடைய பங்கில் சுயாதீனமான ஒரு தெரிவுதான் தனிப்பட்டவரின் முன்விதிக்கப்படுதல் என்று லூத்தர் கருதினார். கால்வின் இரண்டு விதமான முன்விதிக்கப்படுதல் என்ற தன்னுடைய கருத்தைக்கொண்டு அதிக அறிவுப்பூர்வமான முடிவுக்கு வந்தார்: சிலர் நித்திய இரட்சிப்புக்கும், மற்றவர்கள் நித்திய கண்டனத்தீர்ப்புக்கும் முன்விதிக்கப்படுகிறார்கள். என்றபோதிலும், கால்வினும்கூட கடவுளுடைய தெரிவு தன்னிச்சையானதாக, புத்திக்கு எட்டாததாகவும்கூட இருப்பதாக கருதினார்.
முன்விதிக்கப்படுதலும் அதோடு நெருக்கமாக சம்பந்தப்பட்ட கேள்வியான “கிருபை”—கடவுள் மனிதர்களை இரட்சித்து நீதிமான்களென அறிவிக்கும் அவருடைய செயலுக்குப் பயன்படுத்தப்படும் சொல்—பற்றிய விவாதமும் அத்தனை பெரிய விவாதமாக வளர்ந்து விட்டதால் முன்விதிக்கப்படுதலைப் பற்றி அனுமதிபெறாமல் எதையும் வெளியிடுவதைக் கத்தோலிக்க போப் நீதிமன்றம் 1611-ல் தடைசெய்தது. கத்தோலிக்க சர்ச்சினுள்ளே, 17-ஆம் மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் ஜேன்சன் என்பவரின் கொள்கையைப் பின்பற்றின மக்கள் மத்தியில் அகஸ்டீனின் போதகங்களுக்குப் பலமான ஆதரவு கிடைத்தன. அவர்கள் மிகவும் எளிமையான மற்றும் உயர்ந்த வகையான ஒரு கிறிஸ்தவத்தை பரிந்துரைசெய்தார்கள். உயர்குலத்தோர் மத்தியிலும் இதற்கு ஆதரவு இருந்தது. என்றபோதிலும், இந்த விஷயத்தின்பேரில் வாக்குவாதம் தணியவில்லை. அரசனாகிய லூயிஸ் XIV, ஜேன்சன் என்பவருடைய கொள்கையின் பிறப்பிடமாகிய போர்ட் ராயல் ஆசிரமம் அழிக்கப்பட உத்தரவிட்டார்.
புராட்டஸ்டன்ட் சீர்திருத்த சர்ச்சுகளுக்குள்ளே, விவாதம் முடிந்தபாடில்லை. மற்றவர்களோடுகூட, யாக்கோபஸ் ஆர்மீனஸைப் பின்பற்றியவர்கள் மனிதனுக்கு தன்னுடைய சொந்த இரட்சிப்பில் ஒரு பங்கு உண்டு என்பதாக நம்பினர். டார்டெக்ட் புராட்டஸ்டன்ட் குருமன்றம் (1618-19) கண்டிப்பான கால்வினிய ஆர்த்தடாக்ஸியைக் கைக்கொண்டு தற்காலிகமாக விவாதத்தைத் தீர்த்துவைத்தது. ஜெர்மனியில் லாவன்டியர் டி லா ரஃவாம்—லி மாண் டி ஷான் கால்வன் என்ற புத்தகத்தின்படி முன்விதிக்கப்படுதல் மற்றும் தெரிவு செய்யும் சுயாதீனம் பற்றிய இந்த வாய்ச்சண்டை “முரண்பாடு நீக்குவதற்கு செய்யப்பட்ட முயற்சிகளில் தோல்வி, துர்ப்பிரயோகங்கள், சிறைவாசம் மற்றும் இறையியலர்கள் நாடுகடத்தப்படுவது” ஆகியவை அடங்கிய நீண்ட ஒரு காலப்பகுதியைத் துவக்கி வைத்தது.
முன்விதிக்கப்படுதலா அல்லது தெரிவு செய்யும் சுயாதீனமா?
ஆரம்பத்திலிருந்தே, முற்றிலும் எதிர்மாறான இரண்டு எண்ணங்களான முன்விதிக்கப்படுதலும் தெரிவு செய்யும் சுயாதீனமும் அநேக சூடான விவாதங்களை எழுப்பியிருக்கின்றன. அகஸ்டீன் இந்த முரண்பாட்டை விளக்க இயலாதவராய் இருந்திருக்கிறார். கால்வினும்கூட அதைக் கடவுளுடைய உயர்ந்த விருப்பத்தின் வெளிக்காட்டாகவும் ஆகவே காரணம் காட்ட இயலாததாகவும் கண்டார்.
ஆனால் கடவுளுடைய பண்புகளையும் ஆளுமையையும் வெளிப்படுத்தும் பைபிள் இந்தக் கேள்விகளை அதிக தெளிவாக புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்கிறதா? பின்வரும் கட்டுரை இந்தக் குறிப்புகளை விவரமாக ஆராயும்.
[பக்கம் 4-ன் படங்கள்]
கால்வின்
லூத்தர்
ஜேன்சன்
[படத்திற்கான நன்றி]
Pictures: Bibliothèque Nationale, Paris