கடவுளின் அன்போடு முன்விதிக்கப்படுதலை ஒத்திசைவாக்க முடியுமா?
“ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் என்ன செய்ய விரும்புகிறார் என்பதைத் தீர்மானிக்கும் கடவுளின் நித்திய திட்டம் என்பதாக முன்விதிக்கப்படுதலுக்கு நாங்கள் விளக்கமளிக்கிறோம். ஏனென்றால் ஒரேவிதமாக அவர்கள் அனைவரையும் அவர் படைக்கவில்லை, ஆனால் சிலரை நித்திய வாழ்க்கைக்கும் மற்றவர்களை நித்திய தண்டனைக்கும் முன்குறித்துவிடுகிறார்.”
இவ்விதமாகத்தான் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதி ஜான் கால்வின் கிறிஸ்தவ மத நிறுவனங்கள் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் முன்விதிக்கப்படுதலைப் பற்றிய தன்னுடைய கருத்தை விளக்கியிருக்கிறார். கடவுள் எல்லாம் அறிந்தவராக இருக்கிறார், அவருடைய சிருஷ்டிப்புகளின் செயல்கள் அவருடைய நோக்கங்களைச் சந்தேகிக்கவோ அல்லது மாற்றங்களைச் செய்யும்படியாக அவரைக் கட்டுப்படுத்தவோ முடியாது என்ற எண்ணத்தை இந்தக் கருத்து அடிப்படையாக கொண்டுள்ளது.
ஆனால் கடவுளைப் பற்றி பைபிள் குறிப்பிடுவது உண்மையில் இதுதானா? அதிக முக்கியமாக, இப்படிப்பட்ட ஒரு விளக்கம், கடவுளுடைய பண்புகளோடு, விசேஷமாக அவருடைய முதன்மையான பண்பாகிய அன்போடு இணக்கமாய் இருக்கிறதா?
எதிர்காலத்தை முன்னறிவிக்கும் திறமையுள்ள ஒரு கடவுள்
கடவுளால் எதிர்காலத்தை முன்னறிவிக்க முடிகிறது. அவர் தம்மை “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும் எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்,” என்பதாக வருணிக்கிறார். (ஏசாயா 46:10) மனித வரலாறு முழுவதிலுமாக, கடவுள் தம்முடைய முன்னறிவைப் பயன்படுத்தி சம்பவங்களை அவை நடந்தேறுவதற்கு முன்பே முன்னறிவிக்கமுடியும் என்பதைக் காண்பிப்பதற்கு தீர்க்கதரிசனங்களைப் பதிவுசெய்து வைக்கும்படியாக செய்திருக்கிறார்.
இவ்விதமாக, பாபிலோன் அரசனாகிய பெல்ஷாத்சாரின் நாட்களில், தானியேல் தீர்க்கதரிசி ஒன்றையொன்று தள்ளிவிடும் இரண்டு மூர்க்க மிருகங்களைப்பற்றிய சொப்பனத்தைக் கண்டபோது, யெகோவா பின்வரும் இந்த அர்த்தத்தை அதற்குக் கொடுத்தார்: “நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா.” (தானியேல் 8:20, 21) உலக வல்லரசுகளின் வரிசையை வெளிப்படுத்த கடவுள் தம்முடைய முன்னறிவைப் பயன்படுத்தினார் என்பது தெளிவாக இருக்கிறது. அப்போதிருந்த பாபிலோனிய பேரரசைத் தொடர்ந்து மேதிய பெர்சியா, அதற்குப் பின் கிரீஸ் வரவிருந்தன.
தீர்க்கதரிசனங்கள் தனியொரு நபரைப் பற்றியதாகவும்கூட இருக்கலாம். உதாரணமாக, மீகா தீர்க்கதரிசி மேசியா பெத்லகேமில் பிறப்பார் என்பதாக அறிவித்தார். (மீகா 5:2) மறுபடியுமாக, இந்தச் சந்தர்ப்பத்திலும் கடவுள் தம்முடைய முன்னறிவைப் பயன்படுத்தினார். என்றபோதிலும், இந்தச் சம்பவம் குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக—மேசியாவை அடையாளம் கண்டுகொள்வதற்காக—அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு தனி நபரையும் உட்படுத்தும் முன்விதிக்கப்படுதல் கோட்பாட்டை பொது கருத்தாக்குவதை இந்த உதாரணம் நியாயப்படுத்துவதில்லை.
மறுபட்சத்தில், கடவுள் விளைவை முன்னறிய தெரிவுசெய்யாத நிலைமைகளைப் பற்றி வேதவசனங்கள் வெளிப்படுத்துகின்றன. சோதோம் கொமோராவை அழிப்பதற்குச் சற்று முன்பு, அவர் பின்வருமாறு அறிவித்தார்: “நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன்.” (ஆதியாகமம் 18:21) அந்தப் பட்டணங்களின் ஒழுக்கச்சீர்கேட்டின் அளவை, காரியங்களை அவர் ஆராய்ந்து பார்ப்பதற்கு முன்னால் முன்னறிந்தில்லை என்பதை இந்த வசனம் தெளிவாக காண்பிக்கிறது.
உண்மைதான், குறிப்பிட்ட சம்பவங்களைக் கடவுள் முன்னரே காணமுடியும், ஆனால் பெரும்பாலான சமயங்களில், அவர் தம்முடைய முன்னறிவைப் பயன்படுத்த தெரிவுசெய்யாதிருக்கிறார். கடவுள் சர்வ வல்லவராக இருப்பதால், அபூரணமான மனிதர்களின் விருப்பத்தின்படி அல்ல, அவர் விரும்புகிறபடி தம்முடைய திறமைகளைப் பயன்படுத்த சுயாதீனமுள்ளவராக இருக்கிறார்.
காரியங்களை நேராக்கக்கூடிய ஒரு கடவுள்
மனிதனைப் படைப்பதற்கு முன்பே பாவத்திற்குள் அவனுடைய வீழ்ச்சியைக் கடவுள் முன்விதித்தார் என்றும் அந்த வீழ்ச்சிக்கு முன்பாகவே ‘தெரிந்துகொள்ளப்பட்டவர்களை’ முன்விதித்துவிட்டார் என்றும் கால்வினைப் போலவே சிலர் சொல்கின்றனர். ஆனால் இது உண்மையாக இருந்ததென்றால், கடவுள் ஆதாமும் ஏவாளும் அதை அடைய முடியாது என்பதை முற்றிலும் அறிந்தவராக அவர்களுக்கு நித்திய வாழ்க்கையின் எதிர்பார்ப்பை அளிப்பது மாய்மாலமாக இருந்திருக்கும் அல்லவா? மேலுமாக, முதல் மனித தம்பதிக்கு ஒரு தெரிவு கொடுக்கப்பட்டது என்பது வேதாகமத்தில் எந்த இடத்திலும் மறுக்கப்பட்டில்லை: தெய்வீக கட்டளைகளைப் பின்பற்றி என்றுமாக வாழ்வது அல்லது அவற்றை நிராகரித்து மரித்துப்போவது.—ஆதியாகமம், அதிகாரம் 2.
ஆனால் ஆதாமும் ஏவாளும் செய்த பாவம் உண்மையில் கடவுளுடைய நோக்கங்களைத் தடைசெய்துவிட்டதா? இல்லை, ஏனென்றால் அவர்கள் பாவம் செய்த உடனேயே, சாத்தானையும் அவனுடைய ஏஜென்ட்களையும் அழிப்பதற்கு தாம் ஒரு ‘வித்தை’ உண்டுபண்ணப்போவதாகவும் மறுபடியுமாக பூமியில் காரியங்களை நேராக்கப்போவதாகவும் கடவுள் அறிவித்தார். ஒருசில பூச்சிகள், ஒரு தோட்டக்காரர் ஏராளமான மகசூலை உற்பத்தி செய்வதைத் தடைசெய்ய முடியாதிருப்பது போலவே, ஆதாம் மற்றும் ஏவாளின் கீழ்ப்படியாமை, பூமியை ஒரு பரதீஸாக்குவதிலிருந்து கடவுளை தடைசெய்ய முடியாது.—ஆதியாகமம், அதிகாரம் 3.
தாவீது அரசனின் வம்சத்தானாயிருக்கும் ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் ராஜ்ய அரசாங்கம் ஒன்று இருக்கும் எனவும் இந்த ராஜ்யத்தில் மற்றவர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் எனவும் கடவுள் பின்னால் வெளிப்படுத்தினார். இந்த மற்றவர்கள் “உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள்” என்பதாக அழைக்கப்படுகிறார்கள்.—தானியேல் 7:18; 2 சாமுவேல் 7:12; 1 நாளாகமம் 17:11.a
முன்னறிவிப்பது என்பது முன்விதித்தல் அல்ல
மனிதவர்க்கம் எந்தப் போக்கை மேற்கொள்ளும் என்பதை அறிய அவர் தெரிவுசெய்யவில்லை என்ற உண்மை, மனிதனின் நல்ல அல்லது கெட்ட செயல்களின் பின்விளைவுகளைப் பற்றி தீர்க்கதரிசனமுரைப்பதிலிருந்து அவரைத் தடைசெய்யவில்லை. ஓட்டுநரிடம் அவருடைய வாகனம் மோசமான நிலையிலிருப்பதைக் குறித்து எச்சரிக்கும் ஒரு மெக்கானிக்கை, ஒரு விபத்து நேரிடும்போது பொறுப்புள்ளவனாக்கவோ அல்லது அதை முன்விதிப்பதாக குற்றஞ்சாட்டவோ முடியாது. அதேபோலவே, தனிநபரின் செயல்களுடைய வருத்தமான பின்விளைவுகளை முன்விதிப்பதாக கடவுளைக் குற்றஞ்சாட்ட முடியாது.
முதல் மனித தம்பதியின் சந்ததியாருடைய விஷயத்தில் இது உண்மையாக இருந்தது. காயீன் அவனுடைய சகோதரனைக் கொலைசெய்வதற்கு முன்பு, யெகோவா காயீனுக்கு முன்பாக ஒரு தெரிவை வைத்தார். பாவத்தை அவன் ஆண்டுகொள்வானா அல்லது பாவம் அவனை ஆண்டுகொள்ளுமா? காயீன் மோசமான தெரிவை செய்து தன் சகோதரனை கொலைசெய்வான் என்பதாக யெகோவா முன்விதித்ததாக பதிவில் எதுவும் சுட்டிக்காண்பிப்பதில்லை.—ஆதியாகமம் 4:3-7.
பின்னால், உதாரணமாக, புறஜாதிகளிலிருந்து தங்களுக்கு மனைவிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் யெகோவாவை சேவிப்பதிலிருந்து விலகிவிட்டால் என்ன சம்பவிக்கும் என்பதைப் பற்றி மோசேயின் நியாயப்பிரமாணம் இஸ்ரவேலரை எச்சரித்தது. முன்னுரைக்கப்பட்டது நிச்சயமாகவே சம்பவித்தது. தன்னுடைய பிற்பட்ட ஆண்டுகளின்போது அந்நிய ஜாதிகளைச் சேர்ந்த மனைவிமார்களின் செல்வாக்கினால் விக்கிரகாராதனையில் ஈடுபட்ட சாலொமோன் ராஜாவின் உதாரணத்திலிருந்து இதைக் காணமுடியும். (1 இராஜாக்கள் 11:7, 8) ஆம், கடவுள் அவருடைய மக்களை எச்சரித்தார், ஆனால் அவர்களுடைய தனிப்பட்ட செயல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அவர் முன்விதிக்கவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவோடு பரலோகங்களில் ஆளுகைசெய்யும் வாக்குப்பண்ணப்பட்ட வெகுமதியை இழக்க விரும்பாவிட்டால் அவர்கள் சகித்திருக்கும்படியாக ஊக்குவிக்கப்படுகிறார்கள். (2 பேதுரு 1:10; வெளிப்படுத்துதல் 2:5, 10, 16; 3:11) ஒருசில இறையியலர்கள் கடந்த காலங்களில் கேட்டிருப்பது போலவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் அழைப்பு முடிவானதாக இருக்கும்பட்சத்தில் இப்படிப்பட்ட நினைப்பூட்டுதல்கள் ஏன் கொடுக்கப்பட்டன?
முன்விதிக்கப்படுதலும் கடவுளுடைய அன்பும்
மனிதன் “தேவசாயலாக” படைக்கப்பட்டதால் தெரிவுசெய்யும் சுயாதீனம் அளிக்கப்பட்டான். (ஆதியாகமம் 1:27) முன்கூட்டியே ஒவ்வொரு அசைவும் தீர்மானிக்கப்பட்டதாயிருக்கும் இயந்திர மனிதனைப் போலில்லாமல் மனிதர்கள் அன்பினால் தூண்டப்பட்டு கடவுளை கனம் பண்ணி சேவிக்க வேண்டுமென்றால், தெரிவு செய்யும் சுயாதீனம் இன்றியமையாததாகும். புத்திக்கூர்மையுள்ள, சுயாதீனமான படைப்புகள் வெளிப்படுத்தும் அன்பு, அநியாயமான குற்றச்சாட்டுகளைத் தவறென நிரூபிக்க கடவுளுக்கு உதவிசெய்யும். அவர் சொல்கிறார்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.”—நீதிமொழிகள் 27:11.
கடவுளுடைய ஊழியர்கள் முன்விதிக்கப்பட்டிருந்தால்—அல்லது சொல்லப்போனால் செயல்திட்டம் வகுக்கப்பட்டிருந்தால்—படைப்பாளரிடமாக அவர்களுடைய அன்பின் உண்மைத்தன்மை கேள்விக்கிடமானதாக இருக்காதா? மேலுமாக, தனிப்பட்ட தகுதிகளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலே மகிமைக்கும் மகிழ்ச்சிக்கும் விதிக்கப்பட்டவர்களாக ஆட்களை முன்தீர்மானித்து தெரிவுசெய்வது கடவுளுடைய பட்சபாதமின்மைக்கு முரணாக இருக்காதா? மேலுமாக, மற்றவர்கள் நித்திய தண்டனைக்கு விதிக்கப்படுகையில் சிலர் சலுகையுடன் நடத்தப்படுவது, “தேர்ந்தெடுக்கப்பட்ட” அல்லது “தெரிந்துகொள்ளப்பட்ட” நபர்களில் உண்மையான நன்றியுணர்வைத் தூண்டுவது அரிதே.—ஆதியாகமம் 1:27; யோபு 1:8; அப்போஸ்தலர் 10:34, 35.
கடைசியாக, கிறிஸ்து நற்செய்தியை மனிதவர்க்கம் முழுவதுக்கும் பிரசங்கிக்கும்படியாக தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். கடவுள் ஏற்கெனவே இரட்சிக்கப்போகிறவர்களைத் தெரிவுசெய்திருந்தால், சுவிசேஷ வேலையில் கிறிஸ்தவர்கள் காண்பிக்கும் வைராக்கியத்தை இது குறைத்துவிடாதா? பிரசங்க வேலையை அவசியமாகவே அர்த்தமற்றதாக இது ஆக்கிவிடாதா?
கடவுளிடமிருந்து பட்சபாதமற்ற அன்பே மனிதர்களைத் திரும்பவுமாக அவரில் அன்புகூரச்செய்வதற்கு தூண்டக்கூடிய பலமான சக்தியாக இருக்கிறது. அபூரணமான, பாவமுள்ள மனிதவர்க்கத்துக்காக தம்முடைய மகனைப் பலியாக கொடுத்தது கடவுளுடைய அன்பின் மிகப் பெரிய வெளிக்காட்டாகும். தம்முடைய மகனைப் பற்றிய கடவுளின் முன்னறிவு தனிச்சிறப்புவாய்ந்த ஒரு உதாரணமாக இருக்கிறது, ஆனால் இயேசுவைச் சார்ந்திருக்கும், திரும்ப நிலைநாட்டப்படுவதன் சம்பந்தமான வாக்குறுதிகள் நிச்சயமாகவே நிறைவேறும் என்பதை நமக்கு இது உறுதிசெய்கிறது. ஆகவே அந்த மகனில் விசுவாசம் வைத்து கடவுளிடமாக நெருங்கி வருவோமாக. நம்முடைய படைப்பாளரோடு நேர்த்தியான ஒரு உறவுக்குள் வரும்படியான கடவுளுடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் நம்முடைய போற்றுதலை காண்பிப்போமாக. இன்று, தங்களுடைய தெரிவு செய்யும் சுயாதீனத்தைப் பயன்படுத்தி அவருக்குத் தங்கள் அன்பைக் காண்பிக்க விரும்புகிற அனைவருக்கும் இந்த அழைப்பைக் கடவுள் கொடுக்கிறார்.
[அடிக்குறிப்புகள்]
a “உலகம் உண்டானது முதல்” (மத்தேயு 25:34) ஆயத்தம் செய்யப்பட்டுள்ள ராஜ்யத்தைப் பற்றி இயேசு பேசுகிறபோது, முதல் பாவத்துக்குப் பின் ஒரு சமயத்தைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். “உலகம் உண்டானது முதல்” அல்லது ஒரு கிரயத்தின் மூலமாக மீட்கப்படக்கூடிய மனிதவர்க்கத்தின் ஆரம்பம் முதல் என்பது ஆபேலின் காலமாக இருப்பதாக லூக்கா 11:50, 51 குறிப்பிடுகிறது.
[பக்கம் 7-ன் பெட்டி]
ஒரு தொகுதியாக முன்விதிக்கப்படுதல்
“தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்விதித்திருக்கிறார். எவர்களை முன்விதித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” (ரோமர் 8:29, 30, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) இந்த வசனங்களில் பவுல் பயன்படுத்திய ‘முன்விதித்தல்’ என்ற பதத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?
இங்கே பவுலின் நியாயவிவாதம் தனிநபரின் முன்விதிக்கப்படுதலுக்கு ஆதரவாக இறுதியான விவாதமாக இல்லை. நம்முடைய நூற்றாண்டின் ஆரம்பத்தில், டிக்ஷனரி டி தியாலஜி கத்தோலிக் பவுலின் விவாதங்களை (ரோமர் 9-11 அதிகாரங்கள்) இவ்விதமாக விளக்கியது: “அதிகமதிகமாக, நித்திய வாழ்க்கைக்கு முன்விதிக்கப்படும் மெய்யான கருத்து குறிப்பிடப்பட்டில்லை என்பதே கத்தோலிக்க கல்விமான்களின் மத்தியில் நிலவிவரும் கருத்தாகும்.” அதே நோக்கீட்டுப் புத்தகம் எம். லாக்ரேன்ஜ் பின்வருமாறு சொல்வதாக மேற்கோள் காட்டுகிறது: “பவுல் படிப்படியாக விவரிக்கும் விஷயம் அடிப்படையில் முன்விதிக்கப்படுதலையும் கண்டனம் செய்யப்படுதலையும் பற்றியே இல்லை, ஆனால் கிறிஸ்தவத்திற்குப் புறமதத்தினரைப் பரிசுத்தமாக்கப்பட கொடுக்கப்படும் அழைப்பாகவே இருக்கிறது. அதற்கு நேர் எதிராக இருந்த யூதர்களின் விசுவாச குறைவினால் இது இவ்வாறு இருந்தது. . . . அது தொகுதிகளை, புறமதத்தினரை, யூதர்களைப் பற்றியதாய் இருந்ததேயன்றி நேரடியாக குறிப்பிட்ட தனிநபர்களைப் பற்றி அல்ல.”—சாய்வு எழுத்துக்கள் எங்களுடையவை.
அதிக சமீபத்தில், தி ஜெருசலம் பைபிள் இந்த அதிகாரங்களைப்பற்றி (9-11) இந்த முடிவையே அளித்து, இவ்வாறு சொன்னது: “ஆகவே இந்த அதிகாரங்களின் பொருள், மகிமைக்கு அல்லது விசுவாசத்துக்கும்கூட தனி நபர் முன்விதிக்கப்படும் பிரச்சினை அல்ல, ஆனால் மனிதவர்க்கத்தின் இரட்சிப்பில் இஸ்ரவேலின் பங்கைப்பற்றியது, பழைய ஏற்பாட்டிலுள்ள கூற்றுகளால் எழுப்பப்படும் ஒரே பிரச்சினையாகும்.”
ரோமர் 8-ஆம் அதிகாரத்தின் கடைசி வசனங்களின் சூழமைவும் இதுவே ஆகும். இதன் காரணமாக, கிறிஸ்துவோடுகூட ஆளுகைச் செய்வதற்காக மனிதவர்க்கத்திலிருந்து அழைக்கப்படும் ஒரு வகுப்பு, அல்லது தொகுதியையும் அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தகுதிகளையுமே இந்த வசனங்கள் நியாயமாக நமக்கு நினைப்பூட்டக்கூடும். தெரிவுசெய்யப்பட போகிறவர்கள் யார் என்பதை முன்கூட்டியே நியமித்துவிடாமல் இது செய்யப்பட்டது, ஏனென்றால் அது அவருடைய அன்புக்கும் நியாயத்துக்கும் முரணாக இருக்கும்.