யெகோவாவின் அன்புக் கரங்களின் கீழ்
சேவித்தல்லாம்ப்ராஸ் ஸூம்ப்பாஸ் சொன்னபடி
முடிவைத் தீர்மானிக்கும் ஒரு தெரிவை நான் எதிர்ப்பட்டேன்: நான் என் பணக்கார சித்தப்பாவின் ஏராளமான ரியல் எஸ்டேட் சொத்துக்களுக்கு மேலாளராக ஆவதற்கான அவருடைய அளிப்பை ஏற்றுக்கொண்டு அதன் மூலம் என் குடும்பத்தின் பணப்பிரச்சினைகளை தீர்ப்பதா அல்லது யெகோவா தேவனின் முழுநேர கிறிஸ்தவ ஊழியனாக ஆவதா என்பதே. நான் இறுதியில் எடுத்த தீர்மானத்தை என்ன காரணக்கூறுகள் செல்வாக்கு செலுத்தின என்பதை விளக்குகிறேன்.
நான் 1919-ஆம் வருடம் கிரீஸில் வோலாஸ் என்ற பட்டணத்தில் பிறந்தேன். என் தந்தை ஆடவர் உடைகளை விற்பனை செய்தார், நாங்கள் பொருளாதார செழுமையை அனுபவித்தோம். ஆனால் 1920-களின் பிற்பட்ட ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் விளைவாக, என் தந்தை திவாலாகி விட்டதால் தன் வியாபாரத்தை இழந்துவிட்டார். என் தந்தையின் முகத்தில் தோன்றிய நம்பிக்கையற்ற நிலையை நான் பார்த்த போதெல்லாம் விசனப்பட்டேன்.
எங்கள் குடும்பம் கொஞ்ச காலத்துக்கு கடும் வறுமையில் உழன்றது. ரேஷன் கடையில் உணவுப்பொருள் வாங்குவதற்காக வரிசையில் காத்திருப்பதற்கு நான் ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து ஒரு மணிநேரம் முன்னமே வந்துவிடுவேன். வறுமையில் வாழ்ந்து வந்தபோதிலும் நாங்கள் அமைதியான குடும்ப வாழ்க்கையை அனுபவித்தோம். ஒரு மருத்துவராக வேண்டும் என்பது என் கனவாக இருந்தது, ஆனால் என் குடும்பம் தொடர்ந்து உயிர்வாழ உதவுவதற்கென்று பருவ வயதின் மத்திப காலத்தில் நான் என் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்பு இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மானியர்களும் இத்தாலியர்களும் கிரீஸை ஆக்கிரமித்துக்கொண்டனர், அப்போது அங்கே கடும் பஞ்சம் உண்டாயிற்று. நண்பர்களும் பழக்கப்பட்டவர்களும் பட்டினியால் தெருக்களில் செத்துக்கொண்டிருப்பதை நான் அடிக்கடி பார்த்தேன்—என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாத ஒரு கோரமான காட்சியாக அது இருந்தது! கிரீஸில் முக்கிய உணவுப்பொருளாய் இருந்த ரொட்டி ஒரு சமயம் எங்கள் குடும்பத்துக்கு 40 நாட்களுக்கு கிடைக்காமல் போயிற்று. தொடர்ந்து உயிர்வாழ்வதற்காக, நானும் என் அண்ணனும் அருகாமையில் இருந்த கிராமங்களுக்குச் சென்று நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் உருளைக்கிழங்குகளைக் கொண்டுவந்தோம்.
நோய் ஒரு ஆசீர்வாதமாகிறது
ஒருவகையான நுரையீரல் உறையழற்சி நோயால் 1944-ன் ஆரம்பத்தில் நான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தேன். மருத்துவமனையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தபோது, என்னுடைய கஸின் இரண்டு சிறிய புத்தகங்களை என்னிடம் கொண்டுவந்து: “இவற்றை வாசித்து மகிழ்வீர்கள் என்று நான் நிச்சயமாய் இருக்கிறேன்,” என்றார். கடவுள் யார்? மற்றும் பாதுகாப்பு என்ற அந்தச் சிறிய ஆங்கில புத்தகங்கள் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவற்றை வாசித்தப் பிறகு நான் என் உடன் நோயாளிகளோடு அவற்றில் அடங்கியிருந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டேன்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பின்பு, நான் யெகோவாவின் சாட்சிகளுடைய வோலாஸ் சபையோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தேன். ஆனால் நோயின் காரணமாக வெளியே போகமுடியாமல் ஒரு மாதம் என் வீட்டிலேயே அடைபட்டிருந்தேன், ஒவ்வொரு நாளும் ஆறு முதல் எட்டு மணிநேரங்கள் வரை உவாட்ச் டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டிருந்த காவற்கோபுர பத்திரிகையின் பழைய இதழ்களையும் மற்ற பிரசுரங்களையும் வாசித்தேன். அதன் காரணமாக என் ஆவிக்குரிய வளர்ச்சி அதிவிரைவாக இருந்தது.
மயிரிழை தப்பித்தல்கள்
மத்திப 1944-களில் ஒருநாள் வோலாஸில் இருந்த ஒரு பூங்கா பெஞ்சில் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஜெர்மன் ஆக்கிரமிப்பு படையை ஆதரித்த துணைப்படை ஒன்று திடீரென்று அவ்விடத்தைச் சுற்றி சூழ்ந்துகொண்டு, அங்கிருந்த எல்லாரையும் கைதுசெய்தது. அங்கிருந்த நாங்கள் சுமார் இரண்டு டஜன் பேர் புகையிலை சேமிப்புக் கிடங்கில் இருந்த ஜெர்மன் காவற்படை தலைமை அலுவலகத்துக்கு தெருக்களின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டோம்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, யாரோ ஒருவர் என் பெயரையும் நான் பூங்காவில் பேசிக்கொண்டிருந்த நபரின் பெயரையும் கூப்பிடுவதை கேட்டேன். நாங்கள் இராணுவ வீரர்களால் அழைத்துச் செல்லப்பட்டதை என் உறவினர்களில் ஒருவர் பார்த்தபோது, நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று அவர் தன்னிடம் சொன்னதாக கிரீஸ் தேசத்து இராணுவ அதிகாரி ஒருவர் எங்களை அழைத்து கூறினார். நாங்கள் வீட்டுக்கு செல்வதற்கு விடுதலை அளிக்கப்பட்டிருக்கிறோம் என்று கிரீஸ் தேசத்து அதிகாரி பின்னர் எங்களிடம் கூறினார், நாங்கள் மறுபடியும் கைதுசெய்யப்பட்டால் அவருடைய அலுவலக கார்டை பயன்படுத்தும்படி எங்களிடம் கொடுத்தார்.
கிரீஸ் தேச இரகசிய எதிர்ப்பு இயக்கத்து போர்வீரர்களால் இரண்டு ஜெர்மன் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோரை ஜெர்மானியர்கள் கொன்றுவிட்டனர் என்று அடுத்த நாள் நாங்கள் கேள்விப்பட்டோம். மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், கிறிஸ்தவ நடுநிலை வகிப்பின் மதிப்பைப் பற்றி நான் அந்தச் சமயம் கற்றுக்கொண்டேன்.
1944-ன் இலையுதிர்க் காலத்தில், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் நான் அடையாளப்படுத்திக் காண்பித்தேன். அதைப் பின்தொடர்ந்து வந்த கோடைகாலத்தில், இழந்த என் ஆரோக்கியத்தை முழுவதுமாக மீண்டும் பெறுவதற்கு மலைகளின் மீதிருந்த ஸ்க்லித்ரோ சபையோடு கூட்டுறவுகொள்வதற்கு சாட்சிகள் எனக்கு ஏற்பாடுகள் செய்தனர். ஜெர்மானிய ஆக்கிரமிப்பின் முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்நாட்டுப் போர் அந்தச் சமயம் கிரீஸில் மிகவும் தீவிரமாய் நடந்துகொண்டிருந்தது. நான் வசித்த கிராமம் கொரில்லா படைகளுக்கு ஒருவகையான இராணுவத்தளமாக இருந்தது. நான் அரசாங்க படைகளுக்காக வேவு பார்க்கிறேன் என்று உள்ளூர் பாதிரியும் வன்மம் வைத்திருந்த மற்றொரு மனிதனும் என்மீது குற்றஞ்சாட்டி, அவர்களாகவே ஏற்படுத்தி வைத்திருந்த கொரில்லா இராணுவ நீதிமன்றம் என்னை விசாரிக்கும்படி செய்தார்கள்.
அந்தப் பிராந்தியத்தில் இருந்த கொரில்லா படைகளின் தலைவர் அந்தப் போலி நீதிமன்ற விசாரணைக்கு வந்திருந்தார். நான் ஏன் அந்தக் கிராமத்தில் வசிக்கிறேன் என்பதையும் ஒரு கிறிஸ்தவனாக உள்நாட்டுப் போரில் நான் முழுவதுமாக நடுநிலை வகிக்கிறேன் என்பதையும் விளக்கிய பிறகு, அந்தத் தலைவர் மற்றவர்களிடம் சொன்னார்: “யாராவது இவருக்கு தீங்கிழைத்தால், நான் அவரை அதற்கு பொறுப்பாளியாக நடத்துவேன்!”
பின்னர் என் சரீர சுகத்தைக் காட்டிலும் என் விசுவாசத்தில் அதிக பலப்பட்டவனாக என் சொந்த பட்டணமாகிய வோலாஸுக்கு திரும்பி வந்தேன்.
ஆவிக்குரிய முன்னேற்றம்
அதற்குப் பிறகு விரைவில் உள்ளூர் சபையில் கணக்கு ஊழியராக நியமிக்கப்பட்டேன். மதம் மாற்றுவதாக குருமாரால் ஏவப்பட்ட குற்றச்சாட்டுகளின் காரணமாக பல கைதுசெய்தல்கள் உட்பட உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட இன்னல்கள் மத்தியிலும் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்குகொண்டது எனக்கும் சபையில் இருந்த மற்றவர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொண்டுவந்தது.
பின்பு 1947-ன் ஆரம்பத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணியின் சந்திப்பு எங்களுக்கு இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் இதுவே அப்படிப்பட்ட முதல் சந்திப்பாக இருந்தது. அந்தச் சமயம் வோலாஸில் செழித்தோங்கிக் கொண்டிருந்த எங்கள் சபை இரண்டாக பிரிக்கப்பட்டது, நான் அந்தச் சபைகளில் ஒன்றுக்கு நடத்தும் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். அந்தச் சமயம் துணைப்படைகளும் தேசிய அமைப்புகளும் ஜனங்கள் மத்தியில் பயத்தை பரப்பிக்கொண்டிருந்தன. அந்தச் சூழ்நிலையை குருமார் சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் கம்யூனிஸ்டுகள் அல்லது இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளர்கள் என்று பொய் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் அவர்கள் அதிகாரிகளை யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதமாக திருப்பினர்.
கைதுசெய்தல்களும் சிறைவாசங்களும்
1947-ல் நான் சுமார் பத்து தடவை கைதுசெய்யப்பட்டு, மூன்று முறை நீதிமன்ற விசாரணைக்குட்பட்டேன். ஒவ்வொரு முறையும் நான் குற்றமற்றவனாக அறிவிக்கப்பட்டு விடுதலையாக்கப்பட்டேன். 1948-ன் இளவேனிற்காலத்தில் மதமாற்றம் செய்ததற்காக நான்கு மாதகால சிறை தண்டனை எனக்கு அளிக்கப்பட்டது. நான் வோலாஸ் சிறையில் அந்தத் தண்டனையை அனுபவித்தேன். இதற்கிடையில் எங்கள் சபையில் இருந்த ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்தது, சகோதரர்களின் இதயங்கள் மகிழ்ச்சியாலும் களிப்பாலும் நிரம்பியிருந்தன.
எங்கள் சபையில் முன்நின்று வழிநடத்திக்கொண்டிருந்த மற்ற ஆறு பேரோடு சேர்ந்து அக்டோபர் 1948-ல் நான் ஒரு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தேன், அப்போது ஐந்து காவலர்கள் வீட்டை உடைத்து உள்ளே வந்து எங்களை துப்பாக்கிமுனையில் கைதுசெய்தனர். கைதுசெய்ததற்கான காரணத்தை விளக்காமல் அவர்கள் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர், நாங்கள் அங்கு அடிக்கப்பட்டோம். முன்னாள் குத்துச்சண்டை வீரனாக இருந்த ஒரு காவலரிடமிருந்து நான் என் முகத்தில் குத்துகள் வாங்கினேன். பின்பு நாங்கள் ஒரு சிறை அறைக்குள் தள்ளப்பட்டோம்.
அதற்குப் பிறகு, பொறுப்பிலிருந்த அதிகாரி தன் அலுவலகத்துக்குள் என்னை அழைத்தார். நான் கதவைத் திறந்தபோது, அவர் என் மீது இங்க் பாட்டிலை வீசி எறிந்தார், அது குறிதவறி சுவரின்மீது விழுந்து உடைந்துபோனது. என்னை பயமுறுத்த முயலுவதற்காக அவர் இதை செய்தார். பின்பு அவர் என்னிடம் ஒரு துண்டு காகிதத்தையும் பேனாவையும் கொடுத்து, “வோலாஸில் இருக்கும் எல்லா யெகோவாவின் சாட்சிகளின் பெயர்களையும் எழுதி, நாளை காலை அந்தப் பட்டியலை என்னிடம் கொண்டு வாருங்கள். அப்படி நீங்கள் கொண்டு வரவில்லையென்றால், உங்களுக்கு என்ன நேரிடும் என்பது உங்களுக்கே தெரியும்!” என்று கட்டளையிட்டார்.
நான் பதில் ஒன்றும் சொல்லவில்லை, நான் சிறை அறைக்கு திரும்பி வந்தபோது, அங்கிருந்த மற்ற சகோதரர்களும் நானும் சேர்ந்து யெகோவாவிடம் ஜெபித்தோம். நான் என் பெயரை மட்டும் காகிதத்தில் எழுதி அழைக்கப்படும் வரை காத்திருந்தேன். ஆனால் அந்த அதிகாரியிடமிருந்து நான் எந்தப் பதிலையும் பெறவில்லை. அந்த இரவின்போது எதிர்க்கும் இராணுவ சேனைகள் வந்தன, அந்த அதிகாரி அவர்களுக்கு விரோதமாக தன் ஆட்களை வழிநடத்தினார். அதைப் பின்தொடர்ந்து ஏற்பட்ட சிறு வாக்குவாதத்தில் அவர் மோசமாக காயமுற்றார், அவருடைய கால்களில் ஒன்று வெட்டியெடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் எங்கள் வழக்கு விசாரணைக்கு வந்தது, சட்டத்துக்கு விரோதமாக கூட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டோம். நாங்கள் ஏழு பேரும் ஐந்து வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டோம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சிறையில் நடந்த பூசைக்கு செல்ல மறுத்ததால், நான் தனி அறையில் அடைக்கப்பட்டேன். மூன்றாவது நாள், சிறை இயக்குநரிடம் பேசுவதற்கு அனுமதி கேட்டேன். “என்னை பேசும்படி அனுமதியுங்கள், தன் விசுவாசத்துக்காக ஐந்து வருடங்கள் சிறையில் செலவழிப்பதற்கு விருப்பமுள்ளவராயிருப்பவரை தண்டிப்பது அறிவற்றதாய் தோன்றுகிறது.” அவர் அதைக் குறித்து கருத்தூன்றிய விதத்தில் சிந்தித்த பிறகு இறுதியில் சொன்னார்: “நாளையிலிருந்து என் அலுவலகத்தில் என் அருகே உட்கார்ந்து வேலை செய்வீர்கள்.”
இறுதியில் நான் சிறையில் மருத்துவருக்கு உதவியாளராக வேலை பெற்றுக்கொண்டேன். அதன் காரணமாக, நான் உடல்நல பராமரிப்பைக் குறித்து ஏராளமான காரியங்களைக் கற்றுக்கொண்டேன், அவை பிற்பட்ட ஆண்டுகளில் எனக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தன. சிறையில் இருக்கையில் பிரசங்கிப்பதற்கு எனக்கு அநேக சந்தர்ப்பங்கள் கிடைத்தன, மூன்று பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள்.
ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு, நான் இறுதியில் 1952-ல் நன்னடத்தையை கவனித்துக்கொள்ளும் அதிகாரியின் மேற்பார்வையின்கீழ் விடுதலையாக்கப்பட்டேன். பின்னர், நடுநிலை வகித்தல் பிரச்சினையின் காரணமாக நான் கொரிந்தில் இருந்த நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டியிருந்தது. (ஏசாயா 2:4) நான் அங்கு இராணுவ சிறையில் சிறிது காலம் வைக்கப்பட்டேன், மற்றொரு சுற்று துர்ப்பிரயோகம் ஆரம்பமானது. சில அதிகாரிகள் தங்கள் அச்சுறுத்தல்களில் புதிய முறைகளை பயன்படுத்தி, “நான் உன் இதயத்தை ஈட்டியைக்கொண்டு துண்டு துண்டாக கூறுபோடுவேன்,” அல்லது “வெறும் ஆறே குண்டுகளால் உடனே செத்து விடுவாய் என்று நினைக்காதே,” என்று கூறினர்.
ஒரு வித்தியாசமான சோதனை
இருப்பினும் விரைவில் நான் வீட்டுக்குத் திரும்பி வந்தேன், உலகப்பிரகாரமான பகுதிநேர வேலை செய்துகொண்டு வோலாஸ் சபையோடு சேர்ந்து மறுபடியும் சேவை செய்ய ஆரம்பித்தேன். ஒருநாள் ஆதன்ஸில் உள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றுக்கொண்டேன், இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றுக்கொண்டு பின்னர் ஒரு வட்டாரக் கண்காணியாக சபைகளை விஜயம் செய்ய ஆரம்பிக்கும்படி அதில் எனக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதே சமயத்தில் பிள்ளைகள் இல்லாமலிருந்த என் சித்தப்பா ரியல் எஸ்டேட் சொத்துக்களை பெருமளவில் வைத்திருந்தார், அவருடைய சொத்துக்களை நிர்வகிக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். என் குடும்பத்தினர் இன்னும் ஏழ்மையில் இருந்தனர், இந்த வேலை அவர்களுடைய பொருளாதார பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்கும்.
அவருடைய அளிப்புக்கு நன்றி சொல்வதற்காக நான் என் சித்தப்பாவைச் சந்திக்கச் சென்றேன், ஆனால் கிறிஸ்தவ ஊழியத்தில் ஒரு விசேஷ நியமிப்பை ஏற்றுக்கொள்வதற்கு நான் தீர்மானித்திருப்பதாக அவரிடம் தெரிவித்தேன். அதைக் கேட்டபோது அவர் எழுந்து நின்று அமைதியாக கணநேரம் என்னைப் பார்த்துவிட்ட பிறகு திடீரென்று அறையை விட்டு சென்றார். அவர் திரும்பி வந்து என் குடும்பத்தை சில மாதங்களுக்கு ஆதரிப்பதற்கு தேவையான பணத்தை தாராளமாக வெகுமதியாய் அளித்தார். அவர் சொன்னார்: “இதை எடுத்துக்கொள், உனக்கு விருப்பமான முறையில் இந்தப் பணத்தை உபயோகித்துக்கொள்.” அந்தக் கணத்தில் எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை இந்நாள் வரையாக என்னால் விவரிக்க முடியாமலேயே இருக்கிறது. ‘நீ சரியான தெரிவை செய்திருக்கிறாய், நான் உன்னோடு இருக்கிறேன்’ என்று யெகோவாவின் குரல் என்னிடம் சொல்வதை நான் கேட்பது போல் அது எனக்கு இருந்தது.
என் குடும்பத்தாரின் ஒப்புதலோடு, நான் ஆதன்ஸுக்கு டிசம்பர் 1953-ல் புறப்பட்டுச் சென்றேன். என் தாய் மட்டும் சாட்சியாக இருந்தபோதிலும், என் குடும்பத்திலிருந்த மற்ற அங்கத்தினர்கள் என் கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆதன்ஸில் இருந்த கிளை அலுவலகத்துக்கு நான் சென்றபோது மற்றொரு ஆச்சரியம் எனக்காகக் காத்திருந்தது. என் சகோதரியிடமிருந்து எனக்கு தந்தி வந்திருந்தது, என் தந்தை பொதுநல ஊதியம் பெற்றுக்கொள்வதற்கு இரண்டு வருடங்களாக போராடியது அந்த நாளில்தானே ஒரு வெற்றிகரமான முடிவுக்கு வந்ததாக அது அறிவித்தது. இதற்கும் மேலே இனி எனக்கு என்ன வேண்டும்? யெகோவாவின் சேவையில் உயர பறந்துசெல்வதற்கு தயாராக என்னிடம் இறக்கைகள் இருந்தது போல் நான் உணர்ந்தேன்!
எச்சரிக்கையோடிருப்பது
வட்டார வேலை ஆரம்பித்த வருடங்களில் நான் அதிக கவனமுள்ளவனாய் இருக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் யெகோவாவின் சாட்சிகளை மத அதிகாரிகளும் அரசியல் அதிகாரிகளும் மிகவும் கடுமையாக துன்புறுத்திக்கொண்டிருந்தனர். நம் கிறிஸ்தவ சகோதரர்களை சென்று சந்திப்பதற்கு, குறிப்பாக சிறிய பட்டணங்களிலும் கிராமங்களிலும் வசித்து வந்தவர்களை பார்ப்பதற்கு இரவில் வெகு நேரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. கைது செய்யப்படும் அபாயத்தையும் துணிந்து ஏற்றுக்கொண்ட சகோதரர்கள் ஒரு வீட்டில் நான் வருவதற்காக ஒன்றுகூடி பொறுமையோடு காத்திருந்தனர். அந்தச் சந்திப்புகள் எங்கள் அனைவருக்கும் என்னே ஒரு சிறந்த உற்சாக பரிமாற்றமாய் இருந்தன!—ரோமர் 1:11, 12.
கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக நான் சில சமயங்களில் மாறுவேடம் பூண்டேன். ஒருசமயம், ஆவிக்குரிய மேய்ப்பு சந்திப்பு மிகவும் அதிகமாக தேவைப்பட்ட சகோதரக் கூட்டத்தைச் சென்று பார்ப்பதற்காக ஒரு வழியடைப்பை கடந்துசெல்வதற்கு நான் மேய்ப்பனைப் போல் உடுத்திக்கொண்டேன். மற்றொரு சமயம், 1955-ல், காவலருக்கு சந்தேகம் எழும்புவதை தவிர்ப்பதற்கு நானும் மற்றொரு சாட்சியும் பூண்டு விற்பவர்கள் போல் எங்களைக் காட்டிக்கொண்டோம். ஆர்காஸ் ஆரெஸ்ட்டிக்கான் என்ற சிறிய பட்டணத்தில் செயலற்றவர்களாய் ஆகிவிட்டிருந்த சில கிறிஸ்தவ சகோதரர்களோடு தொடர்புகொள்வதே எங்கள் நியமிப்பாய் இருந்தது.
பட்டணத்தில் இருந்த பொது மார்க்கெட்டில் எங்கள் விற்பனைப் பொருட்களை காட்சிக்காக வைத்தோம். இருப்பினும், அந்தப் பிராந்தியத்தில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்த ஒரு இளம் காவலர் சந்தேகப்பட்டு, ஒவ்வொரு முறையும் எங்களைக் கடந்து சென்றபோது புதுமையாக எங்களை முறைத்துப் பார்த்தார். இறுதியில் அவர் என்னிடம் சொன்னார்: “நீங்கள் பார்ப்பதற்கு பூண்டு விற்பவரைப் போல் இல்லை.” அந்தக் கணத்தில் மூன்று இளம் பெண்கள் எங்களை அணுகி பூண்டு வாங்குவதில் அக்கறை காண்பித்தார்கள். என் பொருட்களை சுட்டிக் காண்பித்து, “இந்த இளம் காவலர் இதைப் போன்ற பூண்டைத் தான் சாப்பிடுகிறார், அதனால் எவ்வளவு பலம்வாய்ந்தவராகவும் நேர்த்தியான உருவத்தை உடையவராகவும் இருக்கிறார் என்று பாருங்கள்!” என நான் குரலெழுப்பினேன். அந்தப் பெண்கள் காவலரைப் பார்த்து சிரித்தனர். அவரும் புன்முறுவல் செய்துவிட்டு பின்னர் மறைந்து போனார்.
அவர் அவ்விடத்தை விட்டு சென்றபின்பு, நம் ஆவிக்குரிய சகோதரர்கள் தையற்காரர்களாக வேலை செய்து கொண்டிருந்த கடைக்குச் செல்லும் சந்தர்ப்பத்தை நான் ஆவலுடன் பயன்படுத்திக் கொண்டேன். நான் என் சட்டையிலிருந்து கிழித்து எடுத்திருந்த பொத்தானை தைக்கும்படி அவர்களில் ஒருவரை கேட்டேன். அவர் அதைத் தைத்துக்கொண்டிருக்கையில் நான் ஒருபுறம் சாய்ந்து இரகசியமாக: “நான் உங்களைப் பார்ப்பதற்கு கிளை அலுவலகத்திலிருந்து வந்திருக்கிறேன்” என்று சொன்னேன். முதலில் சகோதரர்கள் பயப்பட்டனர், ஏனென்றால் அவர்கள் பல வருடங்களாக உடன் சாட்சிகளோடு தொடர்புகொள்ளாமல் இருந்தனர். என்னால் முடிந்த அளவு நான் அவர்களை உற்சாகப்படுத்தினேன், அதைப் பற்றி கூடுதலாக பேசுவதற்கு பட்டணத்தில் இருந்த இடுகாட்டில் பின்னர் அவர்களை சந்திப்பதற்கு நான் ஏற்பாடுகள் செய்தேன். சந்தோஷகரமாக, சந்திப்பு உற்சாகமூட்டுவதாய் இருந்தது, அவர்கள் மறுபடியும் கிறிஸ்தவ ஊழியத்தில் வைராக்கியமுள்ளவர்களாய் ஆனார்கள்.
உண்மையுள்ள துணையைப் பெறுதல்
பயண வேலையை ஆரம்பித்து மூன்று வருடங்களுக்குப் பிறகு 1956-ல் நான் நிக்கி என்ற ஒரு இளம் கிறிஸ்தவப் பெண்ணை சந்தித்தேன், அவளுக்கு பிரசங்க வேலையில் மிகுந்த ஆர்வம் இருந்தது, அவள் தன் வாழ்க்கையை முழுநேர ஊழியத்தில் செலவழிப்பதற்கு விருப்பமுள்ளவளாய் இருந்தாள். நாங்கள் காதலித்து 1957 ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டோம். அந்தச் சமயம் கிரீஸில் யெகோவாவின் சாட்சிகளுக்கு இருந்த எதிர்ப்புணர்ச்சியுள்ள நிலைமைகளின் மத்தியில் பயண வேலையின் தேவைகளை நிக்கி பூர்த்தி செய்யமுடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். யெகோவாவின் உதவியோடு அவள் சமாளித்தாள், இவ்வாறு கிரீஸில் பயண ஊழியத்தில் தன் கணவனோடு சென்ற முதல் பெண்ணாக ஆனாள்.
நாங்கள் பயண வேலையை பத்து வருடங்கள் ஒன்றுசேர்ந்து தொடர்ச்சியாக செய்தோம், கிரீஸில் இருந்த பெரும்பாலான சபைகளை சேவித்தோம். அநேக தடவை நாங்கள் மாறுவேடத்தில் கையில் சூட்கேஸை வைத்துக்கொண்டு ஒரு சபையை சென்றடைவதற்கு இரவில் பல மணிநேரங்கள் நடந்தோம். நாங்கள் அடிக்கடி எதிர்ப்பட்ட பெரும் எதிர்ப்பின் மத்தியிலும், சாட்சிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பிரமிக்கத்தக்க வளர்ச்சியை நேரடியாக பார்ப்பதில் கிளர்ச்சியடைந்தோம்.
பெத்தேல் சேவை
ஜனவரி 1967-ல் நிக்கியும் நானும் பெத்தேல் என அழைக்கப்படுகிற யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகத்தில் சேவை செய்வதற்கு அழைக்கப்பட்டோம். அந்த அழைப்பு எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, யெகோவா காரியங்களை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் என்று நம்பிக்கை வைத்து நாங்கள் அதை ஏற்றுக்கொண்டோம். காலம் கடந்து செல்ல செல்ல, தேவராஜ்ய வேலை நடக்கும் இந்த மையத்தில் சேவை செய்வது எவ்வளவு பெரிய சிலாக்கியம் என்பதை நாங்கள் போற்ற ஆரம்பித்தோம்.
நாங்கள் பெத்தேல் சேவை செய்ய ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆனபிறகு, ஒரு இராணுவ உட்பிரிவு ஆட்சியைக் கைப்பற்றியது, யெகோவாவின் சாட்சிகள் தங்கள் வேலையை இரகசியமான முறையில் தொடர வேண்டியிருந்தது. நாங்கள் சிறு தொகுதிகளாக கூடிவர ஆரம்பித்தோம், எங்கள் மாநாடுகளை காட்டுப்பகுதிகளில் நடத்தினோம், ஜாக்கிரதையாக பிரசங்கித்தோம், பைபிள் பிரசுரங்களை இரகசியமாக அச்சடித்து விநியோகித்தோம். இந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளுதல் கடினமாய் இருக்கவில்லை, ஏனென்றால் கடந்த காலங்களில் உபயோகித்துக் கொண்டிருந்த வேலை முறைகளை நாங்கள் வெறுமனே மறுபடியும் புதுப்பித்துக்கொண்டோம். தடைகள் இருந்தபோதிலும், 1967-ல் 11,000-க்கும் குறைவாக இருந்த சாட்சிகளின் எண்ணிக்கை 1974-ல் 17,000-க்கும் மேலாக அதிகரித்தது.
சுமார் 30 வருடங்கள் பெத்தேலில் சேவை செய்தபிறகு, நிக்கியும் நானும் ஆரோக்கிய குறைபாடுகள், வயதாவதினால் வரும் குறைபாடுகள் ஆகியவற்றின் மத்தியிலும் தொடர்ந்து எங்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்கிறோம். பத்து வருடங்களுக்கு மேல் நாங்கள் ஆதன்ஸில் கார்ட்டாலி தெருவில் அமைந்திருந்த கிளை அலுவலக கட்டடங்களில் வாழ்ந்து வந்தோம். 1979-ல் ஒரு புதிய கிளை அலுவலகம் ஆதன்ஸின் புறநகர்ப்பகுதியில் மாரூசி என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால் 1991 முதற்கொண்டு ஆதன்ஸுக்கு வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் எலியோனாவில் பெரும் வசதிகள்கொண்ட புதிய கிளை அலுவலக கட்டடங்களை அனுபவித்து வருகிறோம். நான் இங்கே பெத்தேல் மருத்துவமனையில் சேவை செய்து வருகிறேன், சிறைச்சாலை மருத்துவருக்கு உதவியாளராக அப்போது நான் பெற்றுக்கொண்ட பயிற்சி இப்போது மிகவும் பயனுள்ளதாக நிரூபித்திருக்கிறது.
முழுநேர ஊழியத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக செலவழித்த பிறகு நான் எரேமியாவைப் போல் யெகோவாவின் வாக்குறுதியின் உண்மையை உணருகிறேன்: “அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” (எரேமியா 1:19) ஆம், நானும் நிக்கியும் யெகோவாவிடமிருந்து பாத்திரம் நிரம்பி வழியும் அளவுக்கு ஆசீர்வாதங்களை மகிழ்ந்து அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எப்போதும் யெகோவாவின் மிகுதியான அன்புள்ள அக்கறையின் பேரிலும் தகுதியற்ற தயவின் பேரிலும் களிகூருகிறோம்.
முழுநேர ஊழியத்தில் தொடர்ந்து இருக்கும்படி சொல்வதே யெகோவாவின் அமைப்பில் இருக்கும் இளைஞருக்கு நான் அளிக்கும் உற்சாகமாகும். இந்த விதத்தில் அவர்கள் யெகோவாவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ‘வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவார்’ என்ற வாக்குறுதிக்கு உண்மையுள்ளவராய் அவர் இருப்பாரா என்பதை சோதித்துப் பார்க்கலாம். (மல்கியா 3:10) யெகோவாவை முழுவதுமாக நம்பும் இளைஞர்களாகிய உங்கள் அனைவரையும் அவர் உண்மையிலேயே ஆசீர்வதிப்பார் என்று நான் என் சொந்த அனுபவத்திலிருந்து உங்களுக்கு உறுதியளிக்க முடியும்.
[பக்கம் 26-ன் படம்]
லாம்ப்ராஸ் ஸூம்ப்பாஸும் அவருடைய மனைவி நிக்கியும்